மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 18ஆம் பொதுக்குழு தீர்மானம்.பொதுக்குழு புகைப்படங்கள்

Issues: Human Rights, National, Politics, Srilanka

Region: Tamil Nadu

Category: Headlines, Announcements

Date: 
Thu, 09/04/2009

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

18ஆம் பொதுக்குழு

தீர்மானம்

தீர்மானம் எண் 1

இலங்கைத் தீவில் ஈழத்தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு, சிங்கள இனவாத கொலைகார அரசின் அதிபர் மகிந்த ராஜபக்ஷே, தன் முப்படைகளையும் ஏவி, மிருகத்தனமான தமிழ் இனப்படுகொலை யுத்தத்தை முழுவீச்சில் நடத்துவதற்கு, ஆயுதங்கள், ரடார்களை வழங்கியும், பிறநாடுகளில் இலங்கை அரசு ஆயுதம் வாங்குவதற்கு பெரும் அளவு நிதி அளித்தும், இந்திய-இலங்கைக் கடற்படைத் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்தும், தமிழ் மக்களைக் கொன்று குவிக்கக் குண்டுவீச்சும் நடத்தும் சிங்கள விமானப்படை இயங்குவதற்கு ஏற்றவகையில், பலாலி விமானதளத்தை இந்திய அரசு தன்னுடைய செலவில் புதுப்பித்துக் கொடுத்தும், சிங்கள இராணுவத் தாக்குதல்களுக்கு உதவிட இந்திய நிபுணர்களையே அனுப்பி வைத்தும், சிங்களப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சிகள் கொடுத்தும், ஒட்டுமொத்தத்தில் தமிழர் இன அழிப்பு யுத்தத்தை ஊக்குவித்தும் செயல்பட்டு உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தமிழர்கள் என்றைக்கும் மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்தது.

இந்தத் துரோகத்தைச் செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குத் தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சியும், அக்கூட்டணி அரசில் இடம் பெற்று உள்ள தி.மு.கழகமும், ஈழத்தமிழர் படுகொலைக்கும், ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும், அவர்கள் சிந்திய இரத்தத்துக்கும் பொறுப்பாளிகள் ஆவார்கள்.

இலங்கையில் போர்நிறுத்தம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழகச் சட்டமன்றத்தின் ஒருமனதான தீர்மானத்தை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது.

ஆறு மாதங்களாகத் தமிழகத்தில் எத்தனையோ போராட்டங்களை நடத்தியும், இன்று வரையிலும் இந்திய அரசு, ‘போரை நிறுத்துங்கள்’ என்று இலங்கை அரசுக்குச் சொல்லவே இல்லை.

போர்நிறுத்தம் செய்யுமாறு, ஐ.நா. மன்றம் கூறியது. விடுதலைப்புலிகளைத் தடை செய்துள்ள அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகள் வற்புறுத்தின.

ஐரோப்பிய ஒன்றியம், போர்நிறுத்தம் கேட்டுத் தீர்மானம் நிறைவேற்றியது.

தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, நார்வே, ஜப்பான், ஜெர்மனி நாடுகள், போர்நிறுத்தத்துக்குக் கோரிக்கைகளை விடுத்தன.

ஆனால், இந்திய அரசின் துரோகத்தால், இலங்கை அரசு, போர்நிறுத்தத்துக்கு முன்வரவில்லை.

தற்போது, மூன்றரை இலட்சம் தமிழர்கள் முல்லைத்தீவில், மரண பயங்கரத்தில் சிக்கி உள்ளனர். நினைத்தாலே நெஞ்சம் நடுங்கும் பேரழிவு, ஈழத்தமிழ் மக்களை முற்றுகை இட்டு உள்ளது. ஈழத்தமிழர்களைக் காக்க, தாய்த்தமிழகம் கொதித்து எழுந்தது.. முத்துக்குமார் உள்ளிட்ட 12 தமிழர்கள் தமிழ்நாட்டில் தீக்குளித்து மடிந்தனர்.

இந்திய அரசு இதுவரை செய்த துரோகத்துக்கு வன்மையான கண்டனத்தை இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

உடனடியாக இலங்கை அரசு தமிழர்கள் மீதான இராணுவத் தாக்குதலை நிறுத்தி, போர்நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்று, இந்திய அரசு முழுமையான அரசியல் அழுத்தத்தைத் தந்து வற்புறுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

இதைச் செய்யத் தவறினால், இன்றைய இந்திய அரசு, தமிழர்களுக்குச் செய்து உள்ள மன்னிக்க முடியாத துரோகத்துக்கு, வரலாறு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் என்று, இப்பொதுக்குழு எச்சரிக்கின்றது.

முன் மொழிதல் : மல்லை
சி.இ.சத்யா

வழி மொழிதல் :
அ.மலர்மன்னன்

தீர்மானம் எண் 2

‘இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு, சுதந்திர இறையாண்மையுள்ள தனித்தமிழ் ஈழ தேசம் மலர்வது ஒன்றுதான் நிரந்தரத் தீர்வு ஆகும்’ என்று, 1995 ஆம் ஆண்டு, ஜூலை 1 ஆம் தேதி, திருச்சியில் நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேறியது.

அந்தத் தீர்மானத்தையே இப்பொதுக்குழு மீண்டும் வலியுறுத்துவதோடு, தனித்தமிழ் ஈழம் மலர, தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று தீர்மானிக்கிறது.

முன் மொழிதல் : திருப்பூர்
சு.துரைசாமி

வழி மொழிதல் : டாக்டர்
க.சந்திரசேகரன்

தீர்மானம் எண் 3

இலங்கைத் தீவில், ஈழத்தமிழ் மக்களின் உரிமை வாழ்வுக்காக, மகத்தான தியாகங்களைச் செய்து யுத்தகளத்தில் போராடி வருவதோடு, ஈழத் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்று இருக்கின்ற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை, இந்திய அரசு நீக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

முன் மொழிதல் : புலவர்
சே.செவந்தியப்பன்

வழி மொழிதல் : வேளச்சேரி
பி.மணிமாறன்

தீர்மானம் எண் 4

தமிழகத்தில், மைனாரிட்டி தி.மு.க. அரசு, மக்கள் விரோத அரசாகவே செயல்பட்டு வருவதால், அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.

சிங்களக் கடற்படை, இதுவரை 900 முறை தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு, 500 க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொன்று விட்டது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து உள்ளனர். தமிழக மீனவர்களைக் கடத்திச்சென்று, துன்புறுத்துவது தொடர்கதையாகி விட்டது. வலைகளை அறுத்து, படகுகளை உடைத்து, மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து வருகிறது. கச்சத்தீவு ஒப்பந்தப்படி, தமிழக மீனவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தரவில்லை. இந்தியக் கடற்படை தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை. தமிழக மீனவர்களைப் பாதுகாக்க, தமிழக அரசு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, மின்வெட்டால் தமிழகத்தை இருளில் மூழ்கடித்து விட்டது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு, சிறுதொழில்கள் நசிந்து விட்டன. பல்லாயிரக்கணக்கான நெசவாளர்களும், தொழிலாளர்களும் வேலை இழந்து உள்ளனர். உரத்தட்டுப்பாட்டாலும், விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். விலைவாசி ஏற்றத்தால், ஏழை, எளிய நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கை சிதைந்து விட்டது.

ஆளுங்கட்சி பினாமிகளால் ஆற்றுமணல் கொள்ளை போகிறது. அனைத்து மட்டங்களிலும் லஞ்ச, ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.

எதிர்க்கட்சியினர் மீது வன்முறைத் தாக்குதல்களும், பொய்வழக்குப் பதிவதும் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. ‘இம்’ என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்’ என்கிற அளவுக்கு, பேச்சு உரிமையைப் பறித்து விட்டது.

இந்திய வரலாறு காணாத அளவில்,சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உள்ளேயே காவல்துறையினரை ஏவி, நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டது. நீதித்துறைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு என தமிழகத்தின் உரிமைப் பிரச்சனைகளில் மைனாரிட்டி தி.மு.க. அரசு கடமையைச் செய்யவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழகத்தின் நலன்களைப் பாதுகாக்கவில்லை.

தமிழகத்தின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் கடமையைச் செய்யாமல் தமிழ்நாட்டை வஞ்சித்ததோடு, ஈழத் தமிழ் மக்களுக்கு மன்னிக்க இயலாத துரோகத்தையும் இழைத்த காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியை நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவை உள்ளிட்ட நாற்பது தொகுதிகளிலும் படுதோல்வி அடையச் செய்யவும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான கூட்டணியை, நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்வதற்கு அரும்பணி ஆற்றுவது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

முன் மொழிதல் :
ஆர்.டி.மாரியப்பன்

வழி மொழிதல் : மணச்சநல்லூர்
ஆர்.நடராசன்

தீர்மானம் எண் 5

தமிழ்நாட்டில் ஜனநாயகப் படுகொலைகளைச் செய்து வருகின்ற மைனாரிட்டி பாசிச தி.மு.க. அரசு, ஈழத் தமிழர்களைக் காக்க உரிமைக் குரல் எழுப்பிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் திரு.நாஞ்சில் சம்பத் அவர்களை ‘தேசப் பாதுகாப்புச் சட்ட’த்தில் கைது செய்து சிறையில் அடைத்த கொடுமைக்கும், இதே அடக்குமுறைச் சட்டத்திற்கு ஆளாகி இருக்கின்ற பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் திரு. சீமான் ஆகியோரின் கைதுக்கும் பலத்த கண்டனத்தை இப்பொதுக்குழு தெரிவிக்கிறது.

முன் மொழிதல் : கலைப்புலி
எஸ்.தாணு

வழி மொழிதல் : பாலவாக்கம்
க.சோமு

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.கழகம்

‘தாயகம்’
சென்னை - 8.
09-04-2009

Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)