தலையாய கடமை! வைகோ கடிதம் .

Issues: Economy, Farmers, National, Rural

Region: Tamil Nadu

Category: Letters

Date: 
Sat, 03/04/2010

தலையாய
கடமை!

இமைப்பொழுதும் நீங்காது என் இதயத்துடிப்போடும் இரத்தச் சுழற்சியோடும் கலந்துவிட்ட கண்ணின்மணிகளே!

உங்கள் மனங்களுக்கு மகிழ்ச்சி தரும் நிலைமையைச் சொல்கிறேன்.


மறுமலர்ச்சிக் கொடிப்பயணம், நாம் எதிர்பார்த்ததைவிடப் பலமடங்கு வெற்றிகரமாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கில், குறிப்பாகத் தாய்மார்களும், இளைஞர்களும் அன்புடன் வரவேற்கும் காட்சி, மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது.


எழில்மிகு பீடங்கள்; அதில் பளிச்சிடும் கல்வெட்டு!


நம் கொடிவண்ணத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கும் கம்பங்கள்; அதில் உயர்த்திடும் பதாகை!


வழிநெடுகிலும் தோரணங்கள்! எப்பக்கம் நோக்கினும், நெஞ்சைச் சிலிர்க்க வைக்கும், மணிவாசகங்களைத் தாங்கிய வண்ணத் தட்டிகள்!


ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒன்றையொன்று விஞ்சிடும் வகையில்!


இதில் நமக்கு ஊக்கந் தரும் நிலை யாதெனில், அங்கே திரண்டிடும் மக்கள் கூட்டம்;


கனிவான பார்வையுடன் பரிவு காட்டும் தாய்மார்கள்.


அந்த விழிகளில் அலட்சியம் இல்லை. வெறுப்பு என்பது, கடுகு அளவும் இல்லை. மொத்தத்தில், தமிழக மக்கள் கவனம், நம் பக்கம் திரும்பி இருக்கிறது.


தாய்மார்கள் சொல்வார்கள், ‘கல் சூடாக இருக்கிறபோதுதான், தோசைக்கு மாவை ஊற்ற வேண்டும்’ என்று. ஈர நிலத்தில்தான், உழவன் விதைப்பான். அதுபோல, மக்கள் மனங்களை, நாம் ஈர்த்திடும் சூழலைக் கருதித்தான், என் உடலை வருத்திக் கொண்டு, இடைவிடாது பயணிக்கிறேன்.


கால வெள்ளத்தோடு நீந்துகிறோம்; வெற்றிக் கரைகளில் கால் ஊன்றி நிமிர்வோம்!


தமிழகத்தின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கக் கடமை ஆற்றும் நாம், தமிழ்த் திருநாட்டைப் பாழாக்க, சூழ முற்படும் கேடுகளைத் தடுக்கவே களம் அமைக்கிறோம்!
அந்த நாள்தான், மே 28.


தென் தமிழ்நாட்டின் உரிமை நலனை நாசம் செய்யத் துடிக்கிறது, கேரளத்தின் அச்சுதானந்தன் கூட்டம். 999 ஆண்டுகளுக்கு, முல்லைப் பெரியாறு தண்ணீர் உரிமையை, அடியோடு அழிக்க முயல்கிறது, மலையாள பூமியின் துரைத்தனம்.


நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், வழங்கிய நியாயத் தீர்ப்பை, உச்சநீதிமன்றமே அநீதியாகப் பறித்துக்கொண்ட அவலம், துணைக்கண்ட வரலாற்றில், இதுவரை இல்லை.


உச்சநீதிமன்றம், 2007 பிப்ரவரியில் தந்த தீர்ப்பைக் காலால் மிதித்துப் புதைகுழியில் தள்ள முற்பட்டு, அக்கிரமமாக ஒரு சட்டத்தையும் நிறைவேற்றியது கேரள அரசு. கேரள மாநிலத்தில், முல்லைப் பெரியாறு உள்ளிட்ட எந்த அணையையும், உடைப்பதற்கும், செயல் இழக்கச் செய்வதற்கும், தங்களுக்கு அதிகாரம் உண்டு என்றும், இந்தியாவில் உள்ள எந்த நீதிமன்றமும் இதில் தலையிட முடியாது என்றும், கேரளச் சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டம், உச்சநீதிமன்றத்தை மட்டும் அல்ல, இந்திய மைய அரசின் இறையாண்மைக்கே விடப்பட்ட அறைகூவல் ஆகும்.


மத்தியில் ஆளும் மன்மோகன் சிங் அரசு, இந்தக் கொடும் விபரீதத்தைக் கண்டுகொள்ளாதது மட்டும் அல்ல, ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் அராஜகத்துக்குக் கைலாகும் கொடுத்தது.


பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை, மேலும் வலுப்படுத்தப்பட்டு, பூகம்பம் வெடித்தாலும், பழுதுபடாத உறுதியுடன் திகழ்கிறது. அந்த அணையை உடைப்பதற்கு, எந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்று, தற்போது கேரள அரசு, தீவிர ஆய்வினை மேற்கொண்டு உள்ளது. ‘அணையை உடைப்போம்’ என்றும், ‘அது எங்கள் உரிமை’ என்றும், மூர்க்கத்தனமாக முண்டா தட்டுகிறார், கேரள அமைச்சர் பிரேமச்சந்திரன்.


அணை உடைப்பு ஒத்திகை ஊர்வலங்கள், காவல்துறையின் துணையோடு நடந்தவண்ணம் உள்ளன.


முல்லைப் பெரியாறு அணை உடைந்தால், தென் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்கள், பாலைவனமாகப் பாழாவதை, யாராலும் தடுக்க முடியாது. 2,17,000 ஏக்கர் பாசனத்தை இழப்போம். மதுரை மாநகர் உள்ளிட்ட, 65 இலட்சம் மக்கள் குடிநீரை இழப்பர். கேரளம், புதிய அணை கட்டுமானால், அவர்களே நினைத்தாலும் நமக்குத் தண்ணீர் கொடுக்க முடியாது என்பதை, ஆதாரங்களோடு ஏற்கனவே நான் விளக்கி இருக்கிறேன்.


கேரள அரசு நிறைவேற்றிய அக்கிரமமான சட்டத்தை எதிர்த்து, தமிழகம் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், மூன்று ஆண்டுகள் வரையிலும், வழக்கை நடத்தவிடாமல் வாய்தா கேட்டு இழுத்தடித்த கேரளத் தரப்பினர், மீண்டும் நீதி நிலைநாட்டப்படும் நிலைமையைத் தடுக்க, அரசியல் சட்ட அமர்வுக்கு வழக்கை மாற்றக் கோரியதே, வஞ்சகமான சூழ்ச்சி ஆகும்.


இதற்கு, மிகப்பெரிய உயர்ந்த பீடத்தின் மறைமுக ஆதரவும் துணை செய்ய, நம் தலையில் கல்லைப் போட்டது உச்சநீதிமன்றம். ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுவதை எதிர்க்க வேண்டிய கடமையில் தவறியது தமிழக அரசு. ஏன், எழுத்து மூலம் இசைவையும் கொடுத்த பழியையும் தேடிக்கொண்டது.


எல்லா முனைகளிலும் தாக்கப்படும்போது, நம்மை, நமது சந்ததிகளைப் பாதுகாக்க, என்ன வழி?


உச்சநீதிமன்றத்தில் நீதி இல்லை. மத்திய அரசோ ஓர வஞ்சகம். அணையை உடைக்கவே திட்டமிட்டுக் கொக்கரிக்கிறது கேரள அரசு. கேரள மக்கள், உண்மையை உணரவில்லை. பென்னி குயிக் அணை உடையாது என்பதும், வாதத்துக்காகக் கூறுவதானால், அப்படியே உடைந்தாலும், பள்ளத்தை நோக்கித் தண்ணீர் பாயுமே தவிர, மேட்டில் இருக்கும் கேரள மக்களுக்கு எந்த ஊறு நேராது என்பதையும், அவர்கள் அறியவில்லை. அவர்களுக்கு நிலைமையை உணர்த்த வேண்டும் அல்லவா?


அரிசி, காய்கறி, பருப்பு, பால், கால்நடைகள் அனைத்தையும் கேரளத்துக்குத் தருவது தமிழகம் மட்டுமே. அவர்களைப் பட்டினி போடுவது நமது நோக்கம் அல்ல. தொடர்ந்து, அட்டியின்றி நாம் தருவோம்.


ஆனால், தென்தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், கொங்குச் சீமையிலும், நிரந்தரக் கேட்டுக்குக் கேரளம் ஏற்பாடு செய்யுமானால், பின் விளைவுகள் விபரீதமாகும். எந்தப் பொருளும் கேரளத்துக்குள் நுழைய முடியாத பொருளாதார முற்றுகை தானாகவே வெடிக்கும்.


அப்படி ஒரு நிலைமை, இருதரப்புக்கும் நல்லது அல்ல என, எச்சரிப்பதற்குத்தான், மே 28, ஒரு நாள் கேரளம் செல்லும் அனைத்துச் சாலைகளிலும், மறியல் அறப்போராட்டம் என அறிவித்து உள்ளோம்.


நாஞ்சில் மண்ணில், நெய்யாறு இடதுகரைச் சானலில் வந்து கொண்டு இருந்த தண்ணீரைக் கேரளம் நிறுத்திவிட்டதால், குமரி மாவட்டத்தின் எல்லையோர மக்கள், பெரும் அவதிக்கு ஆளாகி விட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் சிவகிரி மலைப்பகுதியில், செண்பகவல்லி தடுப்பு அணையில் இருந்து, 150 ஆண்டுகளுக்கும் மேலாக, கன்னிகா மதகு எனும் செண்பகவல்லி பிரிவு கால்வாயின் வழியாக, நாம் தண்ணீர் பெற்று வந்தோம்.


பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்காலத்தில், அக்கால்வாய்க் கரையில் முப்பது மீட்டர் அளவுக்கு ஏற்பட்ட உடைப்பைப் பழுதுபார்க்க, கேரள அரசு அனுமதிக்கவே இல்லை.

பேச்சுவார்த்தை நடத்தி, பழுதுபார்க்க தமிழக அரசு, 85 இல், மக்கள் திலகம் ஆட்சியில் கேரளத்துக்குச் செலுத்திய பணத்தையும், 2006 இல், அச்சுதானந்தன் அரசு, திருப்பி அனுப்பி விட்டது. வாசுதேவநல்லுhர், சிவகிரி, சங்கரன்கோவில் வட்டத்துக்கு உட்பட்ட, 28,000 ஏக்கர் பாசனத்தைப் பறிகொடுத்தோம்.


கேரள அரசு தொடர்ந்து வரும் கேடுகளுக்கு மேலும் ஒரு தொடராக, கொங்குச் சீமையில், அமராவதிக்கு வரும் பாம்பாற்றுத் தண்ணீரைத் தடுக்க, அங்கும் ஒரு அணை கட்ட, கேரளம் திட்டமிட்டு விட்டது. 78,000 ஏக்கர் பாசனத்தை, கரூர், மடத்துக்குளம், தாராபுரம் பகுதி இழப்பதோடு, குடிதண்ணீருக்கும் வழியின்றிப் போகும்.


சூழும் விபரீதத்தை அணை போட்டுத் தடுப்பதற்கே அறப்போர் தொடுக்கிறோம்!


ஏற்கனவே, 2009 டிசம்பர் 29 அன்று, கம்பத்தில் மறியல் அறப்போர் நடத்தினோம். ஐந்து மாவட்ட முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர், கண்ணியத்துக்குரிய கே.எம். அப்பாÞ அவர்களும், விவசாயப் பெருமக்களும், கழகக் கண்மணிகளும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு பங்கு ஏற்றனர்.


பாம்பாற்றுக்குக் குறுக்கே கேரளம் அணை கட்ட முயல்வதை எதிர்த்து, பிப்ரவரி 15 ஆம் தேதி, உடுமலைப்பேட்டையில் நாம் நடத்திய உண்ணாநிலை அறப்போராட்டத்தில்,
எவரும் எதிர்பாராத அளவுக்கு மக்கள் திரண்டனர். தமிழ்நாடு கள் இயக்கம் உள்ளிட்ட பல அமைப்பினர் வாழ்த்து உரைத்தனர். கழகம் நடத்த இருக்கின்ற முற்றுகை அறப்போரில், தாங்களும் பங்கு ஏற்பதாகக் கூறினர். மார்ச் 4 ஆம் நாள் அன்று, அண்ணன் பழ. நெடுமாறன் அவர்கள், முல்லைப்பெரியாறு பிரச்சினைக்காகக் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில், நாம் மே 28 இல் மேற்கொள்ள இருக்கும் மறியல் அறப்போரை ஆதரித்துப் பங்கு ஏற்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.


நமது இயக்க வரலாற்றில் நாம் நடத்த இருக்கும் இந்த முக்கியமான, தமிழக வாழ்வு உரிமைப் பாதுகாப்புப் போராட்டத்துக்கு, விவசாயிகள், பொதுமக்கள் ஆதரவைப் பலமாகத் திரட்ட வேண்டியது தலையாய கடமை ஆகி விட்டது. எனவேதான், இடைவிடாது நான் மேற்கொண்டு உள்ள மறுமலர்ச்சிக் கொடிப் பயணத்தில், மே 28 போராட்டத்துக்கு மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறேன்.


நெல்லை மாவட்டத்தில், ஏற்கனவே ஐந்து நாள்கள் நான் மேற்கொண்ட கொடிப்பயணத்தில், போராட்டத்துக்கு மக்களிடம் நல்ல ஆதரவு இருப்பதைக் கண்டேன். குமரி மாவட்ட நிகழ்ச்சிகளிலும் அதை உணர்ந்தேன். நெய்யாறு இடது கரைச் சானல் பாசனப் பகுதிகளில், விவசாயிகள், பொதுமக்கள் ஆதரவை மே 28 மறியலுக்காகத் திரட்டிட, மே 14 ஆம் நாள், காலை முதல் இரவு வரை, ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்யத் திட்டம் வகுக்கப்பட்டு விட்டது.


தேனி, மதுரை, மதுரை மாநகர் மாவட்டங்களில் இடைவிடாத பிரச்சாரத்தையும், உண்ணாநிலை அறப்போரையும், பொதுக்கூட்டங்களையும் ஏற்கனவே மேற்கொண்டு, போராட்ட ஆயத்தப் பணிகளை முடுக்கி விட்டு உள்ளேன். ஏப்ரல் 1,2,3,4 நாள்களில், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப் போகும் மறுமலர்ச்சிக் கொடிப்பயணம், மறியல் போர் விளக்கப் பிரச்சாரமாகவும், ஆதரவு திரட்டும் பயணமாகவும் அமையும்.


ஏப்ரல் 8,9,10 தேதிகளில், திண்டுக்கல் மாவட்டக் கொடிப்பயணம் ஏற்பாடு ஆகி உள்ளது. போராட்ட ஆயத்தப் பொதுக்கூட்டம் ஒன்றை, ஏப்ரல் 24 இல், கழகத்தின் சார்பில் கரூர் நகரில் நடத்திட உள்ளோம்.


அண்ணன் பழ. நெடுமாறன் நடத்திய கூட்டத்தில், முல்லைப்பெரியாறு போராட்ட விளக்கக் கூட்டங்களை, மே 2 ஆம் நாள் மதுரையிலும், 3 ஆம் நாள் திண்டுக்கல்லிலும், 4 ஆம் நாள் பரமக்குடியிலும், 5 ஆம் நாள் மேலூரிலும் நடத்திடத் திட்டமிட்டு உள்ளோம்.


கழகத்தின் 17 ஆவது ஆண்டுத் தொடக்க விழாவில், மே 6 ஆம் நாள் திருப்பூரில் நான் பங்கு ஏற்று விட்டு, மே, 7,8,9,10 நான்கு நாள்களும் கொங்கு மண்டலத்தில், மே 28 ஆம் தேதி மறியலுக்கான பிரச்சாரமாகவும், கொடிப்பயணமாகவும் நடத்திட ஏற்பாடு ஆகி உள்ளது.


மே 19,20,21 மூன்று நாள்களும், விருதுநகர் மாவட்டத்தில் நான் மேற்கொள்ள இருக்கின்ற கொடிப் பயணம், போராட்டத்துக்கு ஆதரவு திரட்டும் பிரச்சாரமாகவும் அமையும்.


தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், விவசாயிகள், பொதுமக்கள் நலனுக்காகவும் நாம் நடத்தப் போகும் மறியல் அறப்போரில், கழகக் கண்மணிகள் பங்கு ஏற்பதை ஒரு உன்னதமான பணியாகவும், தலையாய கடமையாகவும் கருத வேண்டுகிறேன்.


கடந்த மார்ச் 16 ஆம் நாள் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.


மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் போராட்ட வெற்றிக்காக வேண்டிய பணிகளைச் செய்வது என்றும், அறப்போரில் கலந்து கொள்வோர் பட்டியல் தயாரிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


எனவே, ஒவ்வொரு ஒன்றிய, நகரங்களிலும் பட்டியல் தயாரித்து, செயலாளர்கள் மாவட்டக் கழகத்தில் தந்திட வேண்டுகிறேன். மாநகரங்களில் உள்ள பகுதிச் செயலாளர்கள் அதுபோலவே செயல்பட வேண்டுகிறேன். மாவட்டச் செயலாளர்கள் அப்பட்டியல்களைத் தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைப்பார்கள்.


கேரளம் செல்லும் 12 சாலைகளிலும், மே 28 ஆம் நாள் அன்று எந்த வாகனங்களும் செல்லாமல், அறவழியில் தடுத்து மறிக்கும் இப்போராட்டம், தமிழக அரசுக்கு எதிரானது அல்ல! தீங்கு செய்ய முனையும் கேரள அரசுக்கு எச்சரிக்கை செய்யவும், நடுநிலை தவறி ஓரவஞ்சமாகச் செயல்படும் மத்திய அரசுக்குக் கண்டன எதிர்ப்பைக் காட்டவும், அறப்போர் நடத்துகிறோம்.


குமரி மாவட்டத்தில் கேரளம் செல்லும் சாலையில் களியக்காவிளையில் நாம் நடத்தப்போகும் மறியலில், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்கள் பங்கு ஏற்கும்.
நெல்லை மாவட்டத்தில், கேரளம் செல்லும் சாலையில் செங்கோட்டையில் நடைபெறும் மறியலில், நெல்லை, நெல்லை மாநகர், விருதுநகர் மாவட்டங்கள் பங்கு ஏற்கும்.


தேனி மாவட்டத்தில், கேரளம் செல்லும் சாலைகளில் போடி மெட்டு பகுதியிலும், கம்பம் மெட்டு பகுதியிலும், லோயர் கேம்ப் குமுளி ரோடு பகுதியிலும் நடைபெறும் மறியலில், தேனி, மதுரை, மதுரை மாநகர், திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்கள் பங்கு ஏற்கும்.


கோவை மாவட்டத்தில் கேரளம் செல்லும் ஏழு சாலைகளில் மறியல் அறப்போர் நடைபெறும்.


1. உடுமலை வட்டம் ஒன்பது ஆறு செக் போஸ்ட் 2. பொள்ளச்சி வட்டம் கோபாலபுரம் செக் போஸ்ட் 3. பொள்ளாச்சி வட்டம் வளந்தராயபுரம் செக் போஸ்ட் 4. பொள்ளாச்சி வட்டம் நடுப்புணி செக் போஸ்ட் 5. கோவை தெற்கு வட்டம் வேலன்தாவளம் செக் போஸ்ட் 6. கோவை தெற்கு - கந்தேகவுண்டன் சாவடி 7. கோவை வடக்கு தாலுகா - ஆனைகட்டி செக் போஸ்ட் ஆகிய இச்சாலைகளில் நடைபெறும் மறியலில், கோவை, கோவை மாநகர், ஈரோடு, நீலகிரி, கரூர், உள்ளிட்ட இதர மாவட்டங்கள் அனைத்தும் பங்கு ஏற்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.


கழக முன்னணியினரும், தோழர்களும், விவசாயிகளும், போராட்டத்தை ஆதரிக்கும் இதர அமைப்புகளைச் சார்ந்தவர்களும் பங்கு ஏற்கும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளும் முன்னணியினர் பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும்.


இதற்கு இடையில், தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாக வாட்டி வதைக்கிறது மின்சார வெட்டு. தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேடே இந்த நிலைமைக்கு முழுக் காரணம் ஆகும்.


மின்வெட்டு அறிவிக்கப்பட்டு உள்ள நேரத்தை விடப் பல மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டு, விவசாயிகளும், அனைத்துத் தரப்பினரும் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

தேர்வுக்கு ஆயத்தமாகும் மாணவர்களையும் மின்வெட்டு கடுமையாகப் பாதித்து உள்ளது. வணிகர்கள், தொழிற்சாலைகள், மருத்துவ மனைகளும் நட்டத்துக்கும், அவதிக்கும் ஆளாகும் நிலைமை.


எனவே, இந்த மின்வெட்டுக்குக் காரணமான தமிழக அரசைக் கண்டித்து, ஏப்ரல் 7 ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணி அளவில், மாவட்டத் தலைநகரங்களில் நாம் நடத்த இருக்கின்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், தோழர்கள் பெருமளவில் பங்கு ஏற்க வேண்டுகிறேன்!


நமது பயணமும், அறப்போரும் தமிழர் நலன் காக்கவே என்பதால், மக்கள் மன்றத்தில் நமது நம்பகத்தன்மையும், மதிப்பும் நாளும் வளர்கிறது என்பதை எண்ணி, அறப்போரை வெற்றி பெறச் செய்ய ஆவன புரிந்திட அன்போடு வேண்டுகிறேன். அதுவே, இவ்வேளையில் நம் தலையாய கடமை!

எழுச்சிச் சங்கொலிக்கும்
உங்கள் பணிகள் வளரட்டும்!

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)