மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் குடும்பத்தாருடன் வைகோ சந்திப்பு: பாதுகாப்பாக மீட்டுத் தர பிரதமருக்கும், சத்தீஸ்கர் மாநில அரசுக்கும் வேண்டுகோள்!
Issues: Environment, Human Rights, Law & Order, National, Politics
Region: Tamil Nadu, Other States
Category: Articles, Letters, Headlines
மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் குடும்பத்தாருடன்
வைகோ சந்திப்பு:
பாதுகாப்பாக மீட்டுத் தர
பிரதமருக்கும், சத்தீஸ்கர் மாநில அரசுக்கும் வேண்டுகோள்!
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட ஆட்சியர், தமிழகத்தைச் சேர்ந்த திரு அலெக்ஸ் பால் மேனன் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு உள்ளார்.
அவரைப் பாதுகாப்பாக மீட்டுத் தரக் கோரி, பிரதமருக்கும், சத்தீஸ்கர் மாநில முதல் அமைச்சருக்கும் தொலைநகல் மூலம் வைகோ இன்று வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
அதன்பிறகு, வைகோவும் அவரது துணைவியாரும், சென்னை கொளத்தூரில் உள்ள மேனனின் மாமனார் இல்லத்துக்கு, இன்று காலை 11.00 மணிக்குச் சென்றனர்.
அங்கே தங்கி இருந்த மேனின் தந்தை வரதாஸ், மேனனின் துணைவியார் ஆஷா அவர்களின் தந்தை வேணுகோபால் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து, நடந்த சம்பவத்தைப் பற்றிக் கேட்டு அறிந்தனர். விம்மல்களோடும், கண்ணீரோடும் மேனனின் உறவினர்கள் நடந்ததைச் சொன்னார்கள்.
மேனனின் தந்தை வரதாஸ் இருதய சிகிச்சை செய்து கொண்டு குணம் அடைந்து இருப்பது குறித்து, அவரது மூத்த மருமகள், மேனனோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொன்னபோது, மறுமனையில் அவர் பதற்றத்தோடு, ‘அப்பா நலமாக இருக்கின்றாரா?’ என்று கேட்டுக்கொண்டு இருந்தபோதே, தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
அடுத்த சில நிமிடங்களில் அவரது துணைவியார் ஆஷா, அங்கிருந்து தொடர்புகொண்டு, திரு மேனன் கடத்தப்பட்ட தகவலைத் தெரிவித்தார்.
திரு மேனன், மக்கள் நலத்திட்டப் பணிகளுக்காக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியவேளையில், அங்கே வந்த மாவோயிஸ்டுகள் ‘இதில் யார் கலெக்டர்?’ என்று கேட்டபோது, அவர் தாமே முன்வந்து ‘நான்தான்’ என்று சொல்லி இருக்கிறார்.
அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதை அறிந்தும் அஞ்சாமல், சேவை செய்யச் சென்று இருக்கிறார். தன்னலம் அற்ற மக்கள் தொண்டரான திரு அலெக்ஸ் பால் மேனனின் உயிர் விலைமதிப்பு அற்றது. எனவே, அவரைப் பாதுகாப்பாக மீட்டுத் தர வேண்டிய பொறுப்பு, மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காண்டகாருக்குக் கடத்தப்பட்டபோது, இந்திய நாட்டுக்கே ஆபத்தானவர்கள் என்று சிறையில் அடைக்கப்ப்டடு இருந்தவர்களை விடுதலை செய்து, விமானப் பயணிகளை இந்திய அரசு மீட்டது.
பல கட்டங்களில் இப்படிக் கடத்தப்பட்டவர்களை விடுவிக்க, நிபந்தனைகளை அரசு ஏற்றுக்கொண்டு இருக்கின்றது. அதுபோல இப்போதும், மாவோயிஸ்டுகளின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, திரு மேனனைப் பாதுகாப்பாக விடுவிக்க மத்திய அரசும், சத்தீஸ்கர் மாநில அரசும் ஆவன செய்ய வேண்டும் என வைகோ வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
‘தாயகம்’ தலைமைக் கழகம்
சென்னை-8 மறுமலர்ச்சி தி.மு.க.
Dear Dr Manmohan Singh ji,
Vanakkam. It is terribly shocking that Mr. Alex Paul Menon, Collector of Sukma district of Chhattisgarh state was abducted at gunpoint by Maoists on 21st April 2012.
Mr. Menon hails from Tamilnadu and has dedicated himself for the noble service of the country.
The abduction has sent shockwaves throughout the country. The people of Tamilnadu are gravely concerned about the safety of Mr. Alex Paul Menon.
His beloved wife, who is on the familyway, is totally shattered and inconsolable mental agony and grief. His father, a retired teacher, his sister, a siddha doctor and the entire family are in tears.
I do understand that the Union Government and the State Government of Chhattisgarh are taking earnest efforts to rescue Mr. Menon.
With a heavy heart, I would request you to take appropriate steps for the safe return of Mr. Paul Alex Menon to erase the tears of his family.
With regards,
Yours sincerely,
(Vaiko)
To
Hon’ble Dr. Manmohan Singh
Prime Minister,
Government of India,
New Delhi - 110 011
மாண்புமிகு டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,
வணக்கம். சத்தீஸ்கர் மாநிலத்தின், சுக்மா மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு அலெக்ஸ் பால் மேனன், ஏப்ரல் 21 ஆம் நாள், மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட செய்தி அறிந்து, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு மேனன், தன்னலம் அற்ற மக்கள் சேவைக்காகத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்.
அவர் கடத்தப்பட்ட செய்தி, இந்தியா முழுமையும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பி உள்ளது; தமிழக மக்கள், அவரது பாதுகாப்பு குறித்துப் பெரும் கவலை அடைந்து உள்ளனர்.
திரு மேனனின் அன்பு மனைவி கருவுற்று உள்ள நிலையில், ஆற்றுப்படுத்த முடியாத அதிர்ச்சியில், நிலைகுலைந்து உள்ளார். திரு மேனனின் தந்தையும், சகோதரியும், குடும்பத்தினரும் கண்ணீரில் ஆழ்ந்து உள்ளனர்.
இந்திய அரசும், சத்தீஸ்கர் மாநில அரசும், திரு மேனனை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதை அறிவேன். அவர் பாதுகாப்பாகத் திரும்பி வருவதற்கு ஆவன செய்து உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி,
தங்கள் அன்புள்ள,
வைகோ

