காணாமல் போன குளச்சல் மீனவர்கள் 7 பேரை மீட்டுத் தருக! பிரதமருக்கு வைகோ கடிதம்
Issues: Human Rights, Labour, Law & Order, National, Politics, Poverty, Srilanka
Region: Tamil Nadu
Category: Articles, Letters, Headlines
காணாமல் போன குளச்சல் மீனவர்கள் 7 பேரை
மீட்டுத் தருக!
பிரதமருக்கு வைகோ கடிதம்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 7 மீனவர்களை மீட்டுத் தரக் கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன்சிங், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆகியோருக்கு, இன்று (2.4.2012) எழுதி உள்ள கடிதம்.
கடந்த பிப்ரவரி 12 ஆம் நாள், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் இருந்து, TN/15/MFB/262 என்ற எண் கொண்ட மீன்பிடிப் படகில், ஏழு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.
பிப்ரவரி 23 ஆம் நாள், ரொனால்டு ஷாஜி என்பவருக்குச் சொந்தமான MPDA KL-2-FV 00622-11 என்ற படகில் சென்றவர்கள், மேற்கண்ட 7 மீனவர்களின் படகு, GPS 0 933400 N 07758200 E என்ற பாகையில் கடலில் நின்று கொண்டு இருப்பதைக் கண்டு, விவரம் கேட்டனர்.
தங்களுடைய படகில் உள்ள மின்கருவியில் ஏற்பட்ட கோளாறைச் சரி செய்து கொண்டு இருப்பதாகவும், விரைவில் கரை திரும்புவோம் என்றும் அந்த மீனவர்கள் கூறி உள்ளனர்.
ரொனால்டு ஷாஜியின் படகு, பிப்ரவரி 26 ஆம் நாள் கரைக்குத் திரும்பி விட்டது. ஆனால், மேற்கண்ட ஏழு மீனவர்களின் படகு, கரை திரும்பவில்லை.
இதனால், அதிர்ச்சி அடைந்த மீனவர்களின் குடும்பத்தார், வருவாய்த்துறை அலுவலர்களைத் தொடர்புகொண்டு, மீனவர்களை மீட்டுத் தருமாறு கோரி உள்ளனர்.
காணாமற் போன மீனவர்களுள் ஒருவரான மரிய மிக்கேல் என்பவரது மனைவி, திருமதி சுனாலி, மார்ச் 2 ஆம் நாள், குளச்சல் கடற்கரை காவல் நிலையத்தில், ஏழு மீனவர்களையும் மீட்டுத் தருமாறு புகார் செய்து உள்ளார்.
“தேடுதல் வேட்டையை மேற்கொண்டபோதிலும், மீனவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை” என அதிகாரிகள் கைவிரித்து விட்டனர்.
ஐம்பது நாள்கள் கடந்து விட்டன. இன்றுவரையிலும், படகும் கிடைக்கவில்லை; மீனவர்களும் கரை திரும்பவில்லை.
அந்த மீனவர்களுடைய செல்போன்களைத் தொடர்புகொண்டால், தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகத் தகவல் வருகிறது. எனவே, அவர்கள் இந்தியப் பெருங்கடலில் ஆள் இல்லாத ஏதேனும் ஒரு தீவில் சிக்கி இருக்கக்கூடும்; அல்லது, கடற் கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்டு இருக்கக் கூடும்.
மேற்கண்ட மீனவர்கள்தாம், வருவாய் ஈட்டி, அவர்களது குடும்பங்களைக் காப்பாற்றி வந்து உள்ளனர். தற்போது, அவர்களது குடும்பத்தினர் ஆதரவு இன்றிக் கண்ணீர்க்கடலில் தவிக்கின்றனர்.
எனவே, கடலோரக் காவல் படைப் படகுகள் மூலமாகவோ, ஹெலிகாப்டர்கள் மூலமாகவோ தேடுதல் வேட்டையை மேற்கொண்டு, 7 மீனவர்களையும் மீட்டுத் தருமாறு தங்களை வேண்டுகிறேன்.
மீனவர்களது பெயர், முகவரி வருமாறு:
1. இரா. மரிய மிக்கேல் (34), த/பெ இராயப்பன், 19/17, துறைமுகத் தெரு, குளச்சல்
2. எம். வர்கீஸ் (42), த/பெ முத்தையா பிள்ளை, 19/24, துறைமுகத்தெரு, குளச்சல்
3. ஏ. சகாய கனிஸ்டன், த/பெ அந்தோணி சூசை, 29/24 சி, துறைமுகத் தெரு, குளச்சல்
4. ரை. அந்தோணிராஜ், த/பெ ரைமண்ட், 6/137-ஏ, சைமன் காலனி, கொடிமுனை (அஞ்சல்)
5. ஜான்சன், த/பெ முடியப்பன், 1/305 அன்பியம்-15, காலனி தெரு, மணக்குடி (அஞ்சல்)
6. அந்தோணி ரூபன், த/பெ சகாயராஜ், 1/4, அன்பியம்-32, நவஜீவன் காலனி, மணக்குடி (அஞ்சல்)
7. ஜார்ஜ் ஆண்ட்ரூஸ், த/பெ மிக்கேல்நாதன், 1 /11, அன்பியம்-32, நவஜீவன் காலனி தெரு, மணக்குடி (அஞ்சல்)
நன்றி,
‘தாயகம்’ வைகோ
சென்னை-8 பொதுச் செயலாளர்
02.04.2012 மறுமலர்ச்சி தி.மு.க.

