நிலம் பதமாக இருக்கின்றது; கல் சூடாகி விட்டது; மாற்றத்திற்கு மக்கள் ஆயத்தமாகி விட்டார்கள்! ஆட்சி அமைப்போம் மாமண்டூர் தேர்தல் சிறப்பு மாநாட்டில் வைகோ

Issues: Human Rights, Politics

Region: Thiruvannamalai

Category: Articles, Headlines, Speeches

Date: 
Mon, 18/04/2016

 

 

 

நிலம் பதமாக இருக்கின்றது; கல் சூடாகி விட்டது;

மாற்றத்திற்கு மக்கள் ஆயத்தமாகி விட்டார்கள்!

ஆட்சி அமைப்போம்

மாமண்டூர் தேர்தல் சிறப்பு மாநாட்டில் வைகோ

நிலம் பாதகமாகிவிட்டது; கல் சூடாகிவிட்டது; மாற்றத்திற்கு மக்கள் ஆயத்தமாகிவிட்டார்! ஆட்சி அமைப்போம்! என்று 10.04.2016 அன்று மாமண்டூரில் நடைபெற்ற தேர்தல் சிறப்பு மாநாட்டில் ஒருங்கிணைப்பாளர் வைகோ எழுச்சி உரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:

வங்கக் கடலில் தாவி எழுகின்ற, ஊழல் மேடுகளைத் தகர்த்துக் கரைத்து, தமிழகத்தை ஊழல் மயமாக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதலபாதாளத்தில் வீசி எறிந்து, தேசிய முற்போக்கு திராவிட கழகம் - மக்கள் நலக் கூட்டணி - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்த மாற்று அரசியல் வெற்றிக் கூட்டணியை ஆட்சிப் பீடத்திலே அமர வைக்க மாமண்டூரில் தண்டு இறங்கியிருக்கின்ற, வீர சபதம் பூண்டு அமர்ந்து இருக்கின்ற இந்த மக்கள் சமுத்திரத்திற்கு முன்னால் உரையாற்ற இருக்கின்ற, 2016 மே திங்களில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்க இருக்கின்ற தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், எனது ஆரூயிர்ச் சகோதரர் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களே,

தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் மதிப்புமிக்க தலைவரும், என் நினைவைவிட்டு எந்நாளும் அகலாத, போற்றுதலுக்குரிய ஐயா ஜி.கே.மூப்பனார் அவர்களின் அருமைத் திருமகனுமாகிய எனது ஆருயிர்ச் சகோதரர் ஜி.கே.வாசன் அவர்களே,

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆருயிர்த் தோழர் வழக்கறிஞர் ஜி.இராமகிருஷ்ணன் அவர்களே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆருயிர்த் தோழர் இரா.முத்தரசன் அவர்களே,

வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாத அந்த வேளையில், வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை; இம்முறை ஒரு தர்மயுத்தத்தில் நாம் ஈடுபட்டாக வேண்டும்; நாம் இல்லாவிட்டால் வேறு யார்? என்ற எண்ணத்தைப் பதிய வைத்ததோடு மட்டும் அல்ல, எட்டு மாத காலம் நான்கு கட்சியின் தோழர்களும், தலைவர்களும் கண்ணுக்கு இமையாக, நகமும் சதையுமாக, வெள்ளம் பாய்ந்தபொழுது நிவாரணப் பணிகளை மேற்கொண்டதில், அருவெறுப்புக் கொள்ளாமல் மலக்கழிவுகளைக் கூட கரங்களிலே அள்ளுவதில், தெருத் தெருவாகச் சென்று மக்கள் துயரத்தைப் போக்குவதில், நான்கு கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை ஒருங்கிணைத்து திருச்சியில் நடத்துவதில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஐந்து கட்டச் சுற்றுப்பயணம் சென்று கோடிக்கணக்கான மக்களைச் சந்திப்பது என்று மக்கள் நலக் கூட்டணி போலத் தமிழக வரலாற்றில் எந்நாளும் ஒரு கூட்டணி ஏற்பட்டது இல்லை என்பதை நிருபித்துக் காட்டுவதற்கு அடித்தளம் அமைத்த தூண்களில் ஒருவரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் எனது ஆருயிர்த் தம்பி, தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று பல கட்டங்களில் எனக்கு நிருபித்து இருக்கின்ற ஆருயிர்த் தம்பி தொல்.திருமாவளவன் அவர்களே,

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மகளிர் அணிச் செயலாளர் என்னுடைய அன்புத் தங்கை திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களே, வரவேற்புரை ஆற்றிய தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர் அன்பிற்கினிய சகோதரர் சுதீஷ் அவர்களே, நன்றியுரை ஆற்ற இருக்கிற கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆருயிர் இளவல் மல்லை சத்யா அவர்களே, மேடையிலே அமர்ந்து இருக்கின்ற கூட்டணிக் கட்சிகளின் மதிப்புமிக்க மாவட்டச் செயலாளர்களே, இயக்க முன்னோடிகளே, அன்புடைய தாய்மார்களே, அருமைப் பெரியவர்களே,

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்தது சிறுத்தையே வெளியில் வா

தோழர்கள் ஜி.இராமகிருஷ்ணனும், டி.கே.ரங்கராஜனும் ஒன்பது மாதங்களுக்கு முன்பு, அண்ணா நகரில் என் இல்லத்திற்கு வந்து, தமிழகத்தைப் பாழ்படுத்திக் கொண்டு இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுகள் மீண்டும் அமையாத வண்ணம் நாம் ஒரு வியூகம் வகுப்போம் என்றார்கள்.

இந்த நிகழ்ச்சியைத் தமிழகத்தின் பட்டிதொட்டி பட்டணம் வரை எங்கும் தங்கள் இல்லங்களில் அமர்ந்தவாறு தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன்னால் இருந்து செவியால் கேட்டும் கண்களால் பார்த்துக் கொண்டும் இருக்கின்ற எனது வணக்கத்திற்குரிய தமிழ்ப் பெருமக்களே,

ஜனநாயகத்தின் விழிகளாக செவிகளாக நான் எந்நாளும் கருதுகின்ற செய்தியாளர்களே, தொலைக்காட்சிகளின் ஒளிப்பதிவாளர்களே, ஜனநாயகத்தின் இறதி எஜமானர்களாகிய வாக்காளப் பெருமக்களே, நடுநிலையாளர்களே, ஆர்வத்தோடு எங்கள் மாநாட்டுக் கருத்துகளைச் செவிமடுக்க வந்திருக்கின்ற இலட்சோப இலட்சம் அரசு ஊழியர்களே,

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்க்கும்
ஆற்றல் அதுவே படை

என்ற வள்ளுவன் வாய்மொழிக்கு இலக்கணமாக, பாயும் ஈட்டிக்கும் இமைகொட்டாது மார்பு காட்டுகிற கூட்டம் எங்கே? அது தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சிகளின் வெற்றிக் கூட்டணியின் வீறுகொண்ட தொண்டர்கள்; பிரச்சாரம் நிறைவு பெறுகின்ற வரையில் இந்த ஆறுகட்சிகளின் தலைவர்களும், தமிழகத்தின் நாலாத் திசைகளிலும் பட்டிதொட்டி பட்டணம் அனைத்து இடங்களுக்கும் சென்று எதிரிகளின் வியூகத்தைத் தூள்தூளாக்கித் தகர்ப்பது என்று முடிவு எடுத்துக்கொண்டு இருக்கின்ற தொண்டர்படை தம்பிமார்களே, என் சிரம் தாழ்ந்த வணக்கம்.

வரலாறு மீண்டும் திரும்புகிறது. 1967 சென்னை விருகம்பாக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு டிசம்பர் 28, 29, 30, 31 நான்கு நாட்கள். 28 இல் ஊர்வலம். மூன்று நாள் மாநாடு. நான்காம் நாள் நிறைவு மாநாடு ஜனவரி 1 ஆம் தேதி. அந்த மாநாட்டில் இதேபோன்ற காட்சியைக் கண்டேன். அன்று நான் சென்னை சட்டக்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன். ஒரே ஒரு வித்தியாசம். அன்று நான் தரையில் அமர்ந்து இருந்தேன். இன்று மேடையில் நிற்கிறேன். அந்த மாநாடு பேரறிஞர் அண்ணா அவர்களை ஜார்ஜ் கோட்டையின் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தது; இந்த மாநாடு கேப்டன் விஜயகாந்த் அவர்களை ஜார்ஜ் கோட்டையினுடைய முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்கப் போகிறது. (பலத்த கைதட்டல்)

இந்த மாநாடு நடைபெறுகின்ற இடத்திற்குப் பெயர் மாமண்டூர். மா -என்றால் யானை, லட்சுமி, சரஸ்வதி, அழகு, செல்வம் என்று பொருள்படும். அழகு, செல்வம், வீரம் அனைத்தும் மண்டிக் கிடந்ததால், பல்லவ நாட்டு பெரும் சைனியங்கள் இங்கே பல களங்களில் மண்டிக் கிடந்ததால் இந்த நகரத்திற்கு மாமண்டூர் என்று பெயராயிற்று.

இந்த நாள் ஏப்ரல் 10 ஆம் சிறப்புக்குரிய நாள். ஏற்றத் தாழ்வுகள் அற்ற, மேடு பள்ளங்கள் அற்ற, சிகரங்களும் பள்ளத்தாக்குகளும் இல்லாத பூமியை, சமதர்ம பூமியாக அமைக்க சோவியத் நாட்டில் சட்டக் கல்லூரி மாணவனாக உலவிய ஒரு இளைஞன், தன்னுடைய அண்ணன் அலக்சாண்டர், ஜார் சக்கரவர்த்தியினால் சதிக்குற்றம் சாட்டித் தூக்கில் இடப்பட்டுக் கொல்லப்பட்ட கொடுமையை எண்ணி நெஞ்சம் கொதித்து, மார்க்சிய சிந்தனைகளுக்கு தன் உள்ளத்தைப் பறிகொடுத்து புரட்சி பூபாளத்துக்குத் தன்னைத் தயாராக்கிக் கொண்டானே, விளாடிவாஸ்டாக் வீதிகளில் வெண்கலச் சிலை வடிவில் எழுந்தானே அந்த மாமேதை லெனின் பிறந்தநாள் இந்த ஏப்ரல் 10 நாள்.

இன்றைக்குத் தமிழகம், அனைத்துத் தளங்களிலும் பாழ்பட்டு சொல்லொணாக் கொடுமைகளுக்கும் நரக வேதனைக்கும் ஆளாகி இருக்கின்றது.

புதிய விடியல்

இந்த நிலையில், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முப்பதுகளில் நடைபெற்ற நிகழ்வுகள் என் நினைவுக்கு வருகின்றன. அப்போது ஒரு நாட்டில் இதோ போன்ற ஒரு நிலைமை. விளைநிலங்கள் தரிசு நிலங்கள் ஆயின. தோட்டம் துறவுகள் பாழாகின. வறுமை வாட்டி வதைத்தது. வேலை இல்லாத் திண்டாட்டம் மக்களைப் பட்டினிக் கொடுமைக்கு உள்ளாக்கியது. பஞ்சம் பிழைப்பதற்கு வேறு எங்கும் செல்ல வழி இல்லை. பசியால் மெலிந்தனர். பட்டினியால் நலிந்தனர். எண்ணற்றோர் எலும்பும் தோலுமாக மடிந்தனர். அவர்களில் பலர் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட கறுப்பின நீக்ரோக்கள். அவர்கள் மிருகங்களைவிட மோசமாக நடத்தப்பட்டனர். அவர்கள் மட்டும் மடியவில்லை. பிரபுகளாக உலவி வந்த வெள்ளையர்களும் வேலை இல்லாத் திண்டாட்டத்தால் வறுமையின் கொடுமையால் வாழ வழியின்றி, குழந்தைகளுக்கு பாலுக்கும் உணவுக்கும் வழியின்றி மடிந்தார்கள்.

‘டாலர் நாடு’ என்று பிற்காலத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட அமெரிக்க பூமியில், இனி இந்த பூமியல் வாழ முடியுமா? என்ற கவலை எழுந்ததால்தான் அதை கிரேட் டிப்ரசன் (Great Depression) என்று சொன்னார்கள்.

ஜனவரி 26 இல் யானைமலை அடிவாரத்தில் திரண்ட மக்கள் கடலை விடப் பத்து மடங்கு விஞ்சி விட்டது இந்த மாமண்டூர் மாநாடு! இந்த மாநாட்டு மேடையின் முகப்பு, மே திங்களில் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அரச பீடத்திலே அமரப்போகின்ற ஜார்ஜ் கோட்டையின் தலைமைச் செயலகத்தை நினைñட்டுவதாக அமைந்து இருக்கின்றது.

எங்கும் ஒளி வெள்ளம்; எல்லோர் முகத்திலும் கலகலப்பும் மகிழ்ச்சியும் தெரிகின்றது. எவர் முகத்திலும் வாட்டம் இல்லை. கோடிக்கணக்கானவர்கள் இந்தப் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். நம்முடைய மேடையின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஒவ்வொருவர் முகத்திலும் என்ன எண்ணம் இருக்கிறது என்பதைக் கவனிக்கின்றார்கள். சில கட்சிகளின் கூட்ட மேடையில் அமர்ந்து இருப்பவர்களின் முகங்களில் சோர்வு இருந்தது. அதையும் மக்கள் பார்க்கின்றார்கள்.

நம்மிடம் குவிக்கப்பட்ட கோடிப் பணம் இல்லை. ஆனால் அதைவிட ஆயிரம் மடங்கு பலம் வாய்ந்த தொண்டர்களின் கூட்டம் இருக்கின்றது. இங்கே, நம்முடைய தொண்டர்களுக்காக மட்டும் நான் பேசவில்லை. இன்னும் முடிவு எடுக்க இயலாமல், ‘அண்ணா திமுக வேண்டாம், நாசப்படுத்திய திமுகழத்தை மீண்டும் அனுமதிக்க வேண்டாம்; மக்கள் நலக் கூட்டணி நான்கு கட்சிகளின் ஒருங்கிணைப்பு வெற்றி பெறுமா? என்று எண்ணியவர்கள், கடந்த மார்ச் 23 ஆம் தேதி எங்கள் அறிவிப்பு வந்த காலத்தில், நாங்கள் கேப்டனோடு கரம் கோர்த்தபோது நம்பிக்கை 70 சதவிகிதம் வளர்ந்தது; சகோதரர் வாசனும் நம்மோடு கரம் கோர்த்த பிறகு அது நிறைவு பெற்று இருக்கின்றது.

இத்தனைக்குப் பிறகும் நமக்கு 20 சதவிகிதம் வாக்கு என்று பெரியமனதோடு சிலர் சொல்கிறார்கள். நான் அவர்களைக் குறை சொல்லவில்லை. இந்தக் கணக்குகள் அத்தனையும் தூக்கி எறியும் வண்ணம் மக்கள் தீர்ப்பு தருவார்கள்.

மூன்று நாட்களாகத் திமுகழகத்தினர் தெருத் தெருவாக என் கொடும்பாவி கொளுத்தினார்கள். என்னைப் பாடை கட்டி தூக்கிக்கொண்டு போனார்கள். என்றாவது ஒரு நாள் நான் பாடையில்தானே போகப்போகிறேன். அதை முன்கூட்டிச் செய்கிறார்கள். பாடை கட்டிப் போட்டதற்குப் பிறகு செருப்பால் அடித்தார்கள். என் முகத்தைக் காயப்படுத்தினார்கள். காலால் மிதித்தார்கள். நெருப்பு வைத்துக் கொளுத்தினார்கள். மூன்றுநாள்களாக இது நடந்தது.

என் கழகக் கண்மணிகள் நெஞ்சக் கொதிப்போடு, எங்கள் கைகளைக் கட்டிப்போட்டுவிட்டீர்களே என்று குமுறினார்கள். அவர்கள் நம்மை ஆத்திரமூட்டப் பார்க்கின்றார்கள். நாம் அதற்கு இடம் தரத் தேவை இல்லை. எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

நல்ல வேளையாக, இப்போது என் தாயார் உயிரோடு இல்லை என்பதை எண்ணி நான் நிம்மதி அடைந்தேன். நான் தேர்தல்களில் தோற்ற காலங்களில்கூட அவர் கவலைப்பட்டது இல்லை. தோற்ற நேரங்களில் எல்லாம் என்னைத் தொலைபேசில் அழைத்து, மகனே கவலைப்படாதே! ஊரெல்லாம் ஓவலையாக இருந்தது. உனக்குத் திருஷ்டி கழிந்தது என்று நினைத்துக்கொள் என்று சொல்வார்கள். நான் சிறைக்குச் சென்றால் மகிழ்ச்சி அடைவார்கள். ஏன் தெரியுமா? நாற்பது ஆண்டுகளாக, இரவு பகலாகக் காரில் சுற்றிக்கொண்டே இருக்கின்றேன். இதுவரையிலும் ஒரு கோடியே பத்து இலட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமாகப் பயணித்து இருக்கின்றேன். ஓட்டுநர் மணி அடுத்து ஓட்டுநர் துரை, தற்போது பொன்னாங்கன். பெரும்பாலும் இரவு நேரங்களில் என் படுக்கை, காரின் முன் இருக்கைதான்.

நான் தூங்கும் நேரத்திலும் அவர்கள் காரை ஓட்டிக் கொண்டே இருப்பார்கள். இரவெல்லாம் இனிமையான பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதுதான் எனக்கு ஒரே ஒரு பொழுதுபோக்கு. நான் இப்படிப் போகிறபோது ஏதேனும் விபத்து நேர்ந்துவிடக் கூடுமே என்று என் தாயார் அச்சப்படுவார்கள், கவலைப் படுவார்கள். நான் சிறைக்குச் சென்றால், சரி அங்கே பத்திரமாக இருப்பான் என்றுதான் என் தாயார் மகிழ்ச்சி அடைவார்கள்.

1976 ஆம் வருடம் மிசா கைதியாக பாளையங்கோட்டைச் சிறையில் இருந்த என்னை சேலம் சிறைக்கு மாற்றினார்கள். வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் எனக்கு நேர்காணல். இரத்த உறவுகள் மட்டும்தான் பார்க்க முடியும். என் தாய் மாரியம்மாள் என்னைப் பார்க்கச் சேலம் சிறைக்கு வந்தார். அவரை அழைத்து வந்த என் தூரத்து உறவினருக்கு அனுமதி இல்லை. ‘உங்கள் தாய் வந்திருக்கிறார்’ என்று சிறைக் கண்காணிப்பாளர் சொல்லி அனுப்பினார். திருச்சி சிறையில் இருந்து சேலத்திற்கு மாற்றப்பட்டு இருந்த அண்ணன் கோ.சி.மணி எனக்கு அடுத்த அறையில் இருந்தார். அம்மாவைப் பார்த்துவிட்டு வா என்றார். நான் பார்க்கப் போனேன். என் எதிரில் பத்தடி தூரத்தில் ஒரு பெஞ்ச். அதில் என் தாய் அமர்ந்து இருந்தார். எதிரே நான் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து இருந்தேன். எனது இடது பக்கத்தில் சிறைக் கண்காணிப்பாளரும், ஜெயிலரும் அமர்ந்து இருந்தார்கள். பின்னால் கனத்த திரை தொங்கிக்கொண்டு இருந்தது.

“ஏம்மா இவ்வளவு தூரம் வந்தீர்கள்? என்று நான் கேட்டேன். இது மிகவும் மோசமான சிறை. உன்னைச் சித்ரவதை செய்வார்கள் என்று சொன்னார்கள். அதைக்கேட்டுக் கொஞ்சம் கவலையாக இருந்தது. அதனால் பார்க்க வந்தேன்’ என்றார்.

‘ஊரில் என்ன பேசிக்கொள்கிறார்கள்?’ என்று கேட்டேன்.

நம் தோட்டத்திற்கு வேலைக்கு வரும் பெண்கள் எல்லாம், ‘நம்ம முததலாளி எழுதிக்கொடுத்தா விட்ருவாங்களாம்லன்னு சொல்றாங்கப்பா’ என்றார். அப்பொழுது பல பேர் மன்னிப்புக் கடிதம் அல்லது தி.மு.க.வில் இருந்து விலகல் கடிதம் எழுதிக் கொடுத்துச் சிறையை விட்டு வெளியே வந்துகொண்டு இருந்த நேரம். என்னிடம் அப்படி எழுதி வாங்குவதற்கும் பலத்த முயற்சிகள் நடந்தன.

‘அதற்கு நீங்கள் என்னம்மா சொன்னீர்கள்?’ என்றேன்.

‘என் மகன் கொள்ளை அடித்தானா? கொலை செய்தானா? எதுக்கு எழுதிக் கொடுக்கணும்? அந்த இராட்சசி எத்தனை வருசத்துக்கு உள்ளே வைத்து விடுவாள் என்று சொன்னேன்’ என்றார்கள். அவர் சொல்லும்போது என் கண்களில் கண்ணீர் திரண்டது. அந்த வீரத்தாயின் வயிற்றில் பத்து மாதம் இருந்து பிறந்தேனே என்று எண்ணிப் பெருமையாக இருந்தது.

அறைக்குத் திரும்பினேன். சேலம் சிறையில் 22 கம்யூனிஸ்ட் தோழர்களைச் சுட்டுக் கொன்ற இடத்தில்தான் எங்களை அடைத்து வைத்து இருந்தார்கள். அண்ணன் கோ.சி. மணி வாசலிலேயே உட்கார்ந்து இருந்தார். அம்மா என்ன சொன்னாங்க? என்று கேட்டார். நான் சொன்னதைக் கேட்டு அழுது விட்டார்.

ஆறு மணிக்கு எங்களுக்கு லாக்கப். தனி அறை. விளக்குகள் வெளியில் மட்டும்தான். அறையைப் பூட்டி விட்டார்கள். ஆறே முக்காலுக்கு ஜெயிலர் ஆழ்வார் நாகைய்யா வந்தார். நான் அருகில் சென்றவுடன் இரண்டு கைகளைப் பிடித்துக்கொண்டார். அவர் தந்தை பெரியார் தலைமையில் திருமணம் செய்துகொண்ட திராவிடர் கழகத் தோழர் என்பது அப்போதுதான் எனக்குத் தெரியும்.

‘உங்கள் தாயார் உங்களிடம் சொன்ன பதில், திரைக்குப் பின்னால் இருந்த மத்திய - மாநில அரசுகளின் உளவுத்துறை அதிகாரிகள் காதில் விழுந்தது. நீங்கள் வந்த பின்பு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இவ்வளவு உறுதியான தாய்மார்கள் இருக்கின்றபோது அந்தக் கட்சியை என்ன செய்ய முடியும்?’ என்று அவர்கள் சொன்னார்கள் என்றார்.

இதை நான் இங்கே சுயவிளம்பரத்திற்காகப் பேசவில்லை. என் தாய் மிகவும் மன உறுதி வாய்ந்தவர். அவர் காலில் விழுந்து வணங்கிவிட்டுத்தான் எங்கேயும் செல்வேன். இப்பொழுதும் இதயத்தில் இருந்து என் தாய் என்னை இயக்கிக்கொண்டு இருக்கிறார். என்னை இழிவுபடுத்துவதை அவர் தாங்கிக் கொள்ள மாட்டார். அதிர்ச்சியில் செத்துப்போயிருப்பார். நல்ல வேளை டாஸ்மாக்கை எதிர்த்துப் போராடி, அதனால் உடல் நலிந்து 60 ஆம் நாள் இறந்து விட்டார். இந்தத் தலைவர்கள் எல்லாம் எளியவன் இல்லத்துக்கு வந்து என் கண்ணீரைத் துடைத்தார்கள். ஆகவே எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை, ஆத்திரம் இல்லை.

இங்கே நமது தொண்டர்கள் ஆரவாரம் செய்வது மகிழ்ச்சிதான். போராட வேண்டிய இடத்திலே போராட வேண்டும். பணப்பட்டுவாடாவுக்கு வந்தால் பறிமுதல் செய்யுங்கள்; காவல்துறையை நம்பாதீர்கள். அவர்கள் பணப்பட்டுவாடாவுக்குத்தான் உதவி செய்வார்கள். ராஜேஷ் லக்கானி கையாலாகாத மனிதர். அவர் நேர்மையானவர்தான். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. சாலைகளில் செல்லும் வாகனத்தை வேண்டுமென்றால் தடுக்கலாம்.

நேற்று கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமையில்,திராவிட இயக்கத்திற்குப் பூபாளமாக இருந்த இசை முரசு நாகூர் அனிபா வைப் பற்றி என் தம்பி செ.திவான் எழுதிய நூல் வெளியீட்டு விழா முடிந்து என் தம்பி கழக குமார் வீட்டுக்குச் செல்லும் வழியில் சத்யம் திரையரங்கம் அருகில் காவல்துறையினர் மறிக்கின்றார்கள். ஒரு அதிகாரி வந்து கொடியைக் கழற்று என்கிறார். என் தம்பி கழட்ட மாட்டேன் என்கிறார். கொடியைக் கழட்டாவிட்டால் கைது செய்வேன் என்கிறார். காரைச் சோதனை செய்து கொள்ளுங்கள். கட்சிக் கொடியைக் கழற்ற மாட்டேன். என் உயிரைப் போன்றது அந்தக் கொடி என்கிறான். கைது செய்வோம் என்கிறார்கள். சரி என்கிறார். கைது செய்துகொண்டு போய் ஸ்பென்சர் பிளாசா எதிரில் உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள் அங்கே இருந்து தம்பி கழககுமார் என்னிடம் தகவல் சொன்னார்.

‘இப்பொழுதே புறப்பட்டு வருகிறேன் காவல்நிலையத்திற்கு’ என்றேன். அப்போது என்னோடு இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

‘விஜயகாந்த் அவர்கள் கரம் கோர்த்ததும், வாசன் அவர்கள் வந்து சேர்ந்ததும் நல்ல அபிப்பிராயம் உருவாகிக் கொண்டு இருக்கின்றது. கோவில்பட்டியில் விவசாயிகளுக்காக நீங்கள் மூன்றரை மணி நேரம் இரயில்வே தடத்தில் வெய்யிலில் அமர்ந்து போராடினீர்கள். அந்தப் போராட்டத்தின் போது காவல்துறை அதகாரி உங்களை அப்புறப்படுத்த முயன்றபோது, உங்களுக்கும் அதிகாரிக்கும் வாக்குவாதம் வந்தது. வைகோ காவல்துறையோடு மோதுகிறார் என்று என்று வலைதளங்களில் டுவிட்டரில் விமர்சனம் செய்தார்கள். சில தொலைக்காட்சிகள் உங்களைக் காவல்துறையோடு மோதுகின்ற நபராக சித்தரிக்கின்றன. இப்போது நீங்கள் சென்றால், இதையும் அப்படித்தான் போடுவார்கள்’ என்றார்கள்.

நான் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படப் போவது இல்லை என்று நண்பர்களிடம் சொன்னேன். என் தொண்டனை காவல்நிலையத்தில் வைத்து இருக்கின்றார்கள். அவனை அடித்தாலும் அடிப்பார்கள். அதுமட்டும் அல்ல, கட்சிக் கொடியைக் கழற்றச் சொல்வதற்கு டி.ஜி.பி.க்கும் அதிகாரம் கிடையாது. அரசாங்கத்திற்கும் அதிகாரம் இல்லை. நீதிபதிக்கும் அதிகாரம் இல்லை என்று சொன்னேன். அடுத்துத் திருமாவை அலைபேசியில் தொடர்புகொண்டேன். அப்பொழுதுதான் அவர் வேளச்சேரி அலுவலகத்திற்குள் சென்று இருந்தார். உடனே புறப்பட்டு வருகிறேன் என்றார். என்னுடன் முப்பது ஆண்டுகளாக இருக்கின்ற மறுகால்குறிச்சித் தம்பிகளோடு நானும், வேளச்சேரி மணிமாறனும் சென்றோம். கழக குமார் காவல்நிலையத்தில் இருந்தார்.

‘உன்னைக் கைது செய்கிறேன் என்று கூறிய நீதிதிபதியைக் கொஞ்சம் காட்டு’ என்றேன். அவர் சுவரைப்பார்த்தவாறு நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார். நான் பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்தேன். அவர் என்னைக் கவனிக்கவில்லை. ‘ஐயா’ என்றேன். கருப்புத் துண்டைப் பார்த்தவுடன் எழுந்து நின்றார்.

‘நீங்கள் எந்த நீதிமன்றத்தில் நீதிபதி?’ நீங்கள் ஒரு வட்ட ஆட்சியர். நான் வட்ட ஆட்சியரை மதிக்கின்றேன். ஆனால், கட்சிக் கொடியை கழட்டச் சொல்வதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது? பூத் அருகில் கொடியைக் கொண்டு வரக்கூடாது அவ்வளவுதான். அ.தி.மு.க, திமுக, காங்கிரஸ், தேமுதிக கம்யூனிஸ்ட், பிஜேபி, தமிழ்மாநிலக் காங்கிரஸ் கட்சி, மக்கள் நலக் கூட்டணித் தொண்டர்கள் அனைவருக்கும் சேர்த்துத் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் நான் சொல்கிறேன்.கொடிகளைக் கழற்றாதீர்கள். இது நம்முடைய உரிமை என்று கூறினேன். நாளைக்கு வேஷ்டியில் கட்சிக்கொடி கலர் இருக்கிறது, வேஷ்டியைக் கழற்று என்பார்கள் என்றேன்.

காவல்துறை ஆணையாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தொடர்புகொண்டு தயவு செய்து நீங்கள் அங்கு செல்ல வேண்டாம் விட்டு விடுகிறோம் என்று தெரிவித்தார்கள். நீங்கள் நினைத்தால் பிடிப்பீர்கள், நினைத்தால் விடுவீர்களா? காரில் கொடி கட்டுவது என்ன மாபெரும் குற்றமா?

நான் ஏன் காவல்நிலையத்திற்குச் சென்றேன் தெரியுமா? தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தொண்டர்களுக்கும் நம் கொடியைக் கழற்ற காவல்துறைக்கு உரிமை இல்லை என்பதைத் தெரிவிக்க வேண்டும். ஜெயலலிதாவுடன் ஆயிரம் கார்கள் செல்கின்றன கொடியைக் கழற்றுவீர்களா? நம்மைக் கழற்றி விடுவார்கள் என்று பயந்து கொண்டு நிற்பார்கள். அண்ணன் கலைஞரின் அருமைத் திருமகன் செல்கிறபோது ஐநூறு, ஆயிரம் வண்டிகளில் செல்கிறார்களே, பிடிப்பீர்களா?

சிறுதாவூர் பங்களாவில் பெரும் பணத்தைக் எடுத்துச் சென்று வைத்து இருக்கின்றார்கள். தம்பி மல்லை சத்யாதான் மின்னல் வேகத்தில் நமக்கு உடன் தகவல் தந்தார். அதைச் சொன்னதற்காக என் மீது வழக்குப் போட்டு இருக்கின்றீர்கள். நிரூபிக்கவில்லை என்றால், என்னை மூன்று ஆண்டுகள் சிறைக்கு அனுப்பலாம். நான் கவலைப்படவில்லை. ராஜேஷ் லக்கானி அவர்களே, நீங்கள் சோதித்தீர்களா? நீங்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறை அதிகாரி ஆகியோரிடம் அறிக்கை கேட்டீர்கள். அவர்கள் ஜெயலலிதாவின் எடுபிடிகள். காவல்துறை சிறுதாவூர் பங்களாவில் இருக்கின்ற பணத்தைப் பாதுகாக்கச் சென்றது. அந்தப் பணத்தை 108 வாகனங்களிலும், மாவட்ட காவல்துறை அதிகாரி வாகனங்களிலும் கொண்டுவந்து பட்டுவாடா செய்வார்கள்.

அதிமுக, திமுக, பாமக ஆகிய கட்சிகள் பணத்தைக் கொண்டுபோய்ச் சேர்த்து வைத்து விட்டார்கள். நமது ஆறு கட்சித் தோழர்களும் கண்காணிப்புப் படை அமைத்துக்கொண்டு, நேரம் அமைத்து தெருவில் சுற்றி வந்துகொண்டே இருக்க வேண்டும். பணம் கொண்டு போனால் மறித்துப் பிடுங்குங்கள். வழக்குப் பதிந்தால் நானே வந்து வாதாடுகிறேன். நமது சகாயம் போன்று காவல்துறையிலும் சில நல்ல அதிகாரிகள் இருக்கின்றார்கள். நீங்கள் எங்களுக்குத் தகவல் கூறுங்கள். இந்த முறை பணத்தைக் கொடுக்க விட மாட்டோம். ஆறு கட்சித் தலைவர்களும் புறப்படுகின்றோம். தமிழகத்தின் நாலாத் திசைகளுக்கும் செல்கின்றோம். 11 ஆம் தேதி கேப்டன் புறப்படுகிறார். 16 ஆம் தேதி அடியேன் புறப்படுகிறேன். திருமா அடுத்துப் புறப்படுகிறார்.

நான் முன்னர் கூறிய இடத்திற்கு வருகின்றேன். ஒரு நாடு வறுமையின் பிடியில் சிக்கி இருந்ததாகச் சொன்னேன், அதுதான் அமெரிக்கா. 1930 களில் அங்கே மிகப்பெரிய வீழ்ச்சியும், தாழ்ச்சியும் ஏற்பட்டது. விவசாயம் அழிந்தது. வேலை இல்லாத் திண்டாட்டம், வறுமை, இதில் இருந்து நாட்டை மீட்பதற்கு ஒருவன் வந்தான். அவன் பெயர் ஃபிராங்ளின் டி ரூஸ்வெல்ட். அவன் அறிமுகப்படுத்தியதுதான் ‘புதிய மாற்றம்; புதிய திட்டம்; புதிய விடியல்’ (‘நியூ டீல்’) . அதனால்தான் அந்த நாடு தப்பிப் பிழைத்தது. இன்றைக்குத தரணியில் முதல் இடம் வகிக்கின்றது.

முப்பதுகளில் அமெரிக்க நாட்டில் இருந்ததைவிட மிகக் கடுமையான துன்பத்தில் இருக்கிறது தமிழகம்.

விளை நிலங்கள் தரிசு நிலங்கள் ஆகிவிட்டன. வேளாண் பெருநிலங்கள் பாதி கட்டடங்கள் ஆகிவிட்டன. நம்முடைய நதிகளிலே தண்ணீர் வருவதைத் தடுக்கிறது அண்டை மாநிலங்கள். மத்திய அரசு வஞ்சகம் செய்கிறது. வேலிக்கருவேல மரங்கள் எங்கும் சூழ்ந்து கிடக்கிறது. விவசாயி கஷ்டப்பட்டு விளைவிக்கின்ற கரும்பு, பருத்திக்கு விலை இல்லை. கரும்பு விவசாயிகளுக்குத் தனியார் சர்க்கரை ஆலைகள் 1100 கோடி ரூபாய் தரவில்லை. விவசாயிகள் கடனில் நாளும் சாகிறார்கள். அதனால் வேதனை அடைகின்ற விவசாயி, பொழுது விடிவதற்கு முன்பு, ஆதவனின் செம்பொன் கிரணங்கள் வான வீதியில் பாய்வதற்கு முன்பு, புள்ளினங்கள் ஆலோலம் பாடும் வைகைறை நேரத்தில் கையில் பாலிடால் பாட்டிலோடு தன் நிலத்துக்குப் போகிறான். அந்த நிலம் அவனுக்குத் தாய் போன்றது. கீழே விழுந்து நிலத்தைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டுப் பாலிடாலை எடுத்துக் குடிக்கின்றான். அங்கேயே விழுந்து சாகிறான்.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 2000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகெண்டு இறந்திருக்கிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று விவசாயிகள் ஜப்திக் கொடுமை மிரட்டலால் தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார்கள். ஒருபக்கம் விவசாயிகள் அழிவு, மறுபக்கம் மதுக்கடையால் நலிவு. இளம்பிள்ளைகளும் கெட்டுப்போகும் துயரம். வேலையில்லாத் திண்டாட்டத்தால் படித்த இளைஞர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இல்லை. பஞ்சமா பாதகங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. முப்பதுகளில் அமெரிக்க நாட்டில் கூட ஊழல்லை. அதைவிடக் கொடிய ஊழல் அழிவு தமிழ்நாட்டில்.

இப்பொழுது நமக்குத் தேவை ஒரு புதிய விடியல், புதிய மாற்றம்.

அன்று அவர்கள் சொன்னார்கள், Relief Recovery என்று சொன்னார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வருவோம்; புதிய மாற்றத்தைக் கொடுப்போம்!

விவசாயப் பெருமக்களே உங்களைப் பாழ்படுத்திய இரண்டு ஊழல் திமிங்கலக் கட்சிகளை ஆட்சி பீடத்திற்கு நெருங்க விட மாட்டோம். இரண்டு பேரும் கூண்டில் நிறுத்தப்பட்டு இருக்கின்றார்கள். திமுக தலைமை. திமுக தொண்டர்கள் அல்ல. அண்ணா திமுக தலைமை. அண்ணா திமுக தொண்டர்கள் அல்ல. ஒரு பக்கம் சொத்துக் குவிப்பு வழக்கு; தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. ஜெயலலிதா பரப்பன அக்ஹரகார சிறைக்குச் சென்றதுபோல் மீண்டும் சிறைப் பிரவேசம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் ஏற்படலாம். பேராபத்து அவர்களுக்கு இருக்கின்றது.

அதே போல திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு கத்திபோல் தொங்குகிறது. இதில் பலிகடா ஆக்கப்பட்டவர் கனிமொழி. பெரும் பணத்தைப் பெற்றுக்கொண்டவர் மு.க.ஸ்டாலின்.

சாதிக் பால்வா நான்குமுறை பங்களாவில் ஸ்டாலினைச் சந்தித்ததற்கு ஆதாரமும் சாட்சியும் வைத்து இருக்கின்றேன். ஆயிரக்கணக்கான கோடி பணம் அட்டைப் பெட்டிகளில் வந்தது. எந்த இடத்தில் பரிமாறப்பட்டது என்பதற்கான ஆதாரங்களையும் நான் வைத்து இருக்கிறேன். வழக்குத் தொடுத்து இருக்கின்றீர்கள் அல்லவா! நீதிமன்றத்திற்கு வாருங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

பெரம்பலூர் இஸ்லாமியப் பிள்ளை நல்லபடியாக வாழ்க்கை நடத்திக்கொண்டு இருந்த சாதிக் பாட்சாவுக்கு ஆசை வார்த்தை காட்டப்பட்டு, ஒரு நிறுவனத்தில் பொதுமேலாளர் ஆக்கப்பட்டார். 2ஜி பிரச்சினையில் சிக்கிச் சித்ரவதைக்கு உள்ளானபோது சி.பி.ஐ.யிடம் சொன்னான், ஸ்டாலினை சாகித் பால்வா ஸ்டாலினைச் சந்தித்தார் என்று. அந்த ரிப்போர்ட் என்னிடம் இருக்கிறது.

அதிலிருந்து நான்காவது நாள் மந்திரி ராஜாவின் மைத்துனரும், ஜாபர் சேட்டும் சாதிக்பாட்சா அலுவலகத்திற்குக் காலை 9 மணிக்கு வந்தார்கள். அங்கு சாதிக் பாட்சா இருந்தார். கதவு பூட்டி இருந்தது. 2.30 மணிக்கு வெளியில் இருந்தவனை உள்ளே அழைத்தார்கள். அவன் உள்ளே சென்றவுடன் கழுத்தை நெறித்ததாகச் சொல்கிறார்கள். அதன்பிறகு ஜாபர் சேட் ஆட்களால் சாதிக் பாட்சாவின் உடல் வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டு, சாதிக் பாட்சா வீட்டுக்குக் கொண்டுபோய்த் தூக்கில் தொங்கவிடப்பட்டது. அந்தக் குடும்பத்தினர் பயமுறுத்தப்பட்டார்கள். பல கோடிகள் கொடுக்கிறோம்; வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என்று அச்சுறுத்தப்பட்டார்கள். இருபது சதவீதம்தான் சொல்லி இருக்கின்றேன். விரைவில் இந்த மர்மங்கள் முழுமையாக விலகும். சாட்சியங்கள் வெளிவரும்.

சாதிக் பாட்சா கொலைக்கு யார் காரணம்? அந்த இசுலாமியச் சகோதரனைக் கொன்றது யார்? சி.பி.ஐ. ஏன் முறையாக விசாரிக்கவில்லை? இப்படி ஒரு கூட்டம் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறது. ஆக இரண்டும் ஊழல் குற்றச்சாட்டுகள்.

நாங்கள் ஆட்சிக்கு வருவோம்; லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றுவோம். ஊழல் சொத்துகளைப் பறிமுதல் செய்து பகிரங்கமாக ஏலம் போடுவோம். திமுக மந்திரிகள்; மாவட்டச் செயலாளர், அண்ணா திமுக மந்திரிகள்; மாவட்டச் செயலாளர்கள் எவரும் தப்ப முடியாது.

நாங்கள் நேர்மையானவர்கள். எங்களைப் பற்றிக்கூடச் சிலர் புழுதிவாரித் தூற்றுகிறார்கள். தங்கை பிரேமலதா பேசுகிறபோது எனக்குக் கவலையாக இருந்தது. நீங்கள் எதற்காக சகோதரி வருத்தப்படுகிறீர்கள்? ஜெயலலிதாவிடம் இருந்து 1500 கோடி நான் பெற்று, உங்களுக்குக் கொடுத்ததாக இன்றைக்கு மாலையில்கூட ஒருவர் சொன்னார். என் மருமகன் 450 கோடிக்கு டெக்ஸ்டைல் மில் மொத்தமாக வாங்கி விட்டார் என்றும் சொன்னார்கள். பதினாறரை கோடி வங்கியில் கடன் வாங்கி, முறைப்படி ஏலத்தில் எடுத்து இருக்கின்றார். அந்தக் குடும்பம் நூறு ஆண்டுகளாகப் பருத்தித் தொழில் செய்கிறார்கள். மில் வைத்து இருக்கின்றார்கள். கங்காதரன் மில்ஸ் ஏலத்திற்கு சென்றுவிட்டது. இவர்கள் அதை வாங்கினார்கள். இதை இன்றைக்குத் தொலைக்காட்சியில் சொல்லி இருக்கின்றார்கள். இப்படிக் கடந்த 40 ஆண்டுகளாக என் முதுகில் பாயும் ஈட்டிகள் அதிகம்.

நான் விடுதலைப் புலிகளையும், பிரபாகரனையும் நெஞ்சில் போற்றுவதால் என் வீட்டுக்கு தங்கம் பாளம் பாளமாக வந்தது என்று ஒரு பத்திரிகை அட்டைப் படம் போட்டது. விடுதலைப் புலிகளை என் வீட்டில் வைத்து என் தம்பியும், என் தாயும், நானும் பாதுகாத்தோம். புலிகளிடம் இருந்து பணம் வாங்குவது ஈனப் பிழைப்பு என்று நினைப்பவன் நான். இதுவரைக்கும் ஈழத்தமிழர்கள் நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு செல்லும்பொழுதுகூட நான் என் பணத்தில்தான் டிக்கெட் எடுத்துச் சென்று இருக்கின்றேன்.

எங்கள் தாத்தா கோபால்சாமி மூன்றடுக்கு மாளிகை கட்டி இருக்கிறார் எங்கள் கிராமத்தில். நல்லவேளை 1923 என்று வருடத்தை அதன் முகப்பில் எழுதி இருக்கிறார். இல்லை என்றால், வைகோ இவ்வளவு பெரிய வீடுகட்டிவிட்டார் என்று டுவிட்டரில் போட்டுக்கொண்டு இருப்பார்கள். எதிர்காலத்தில் நம் பேரன் ஒருவன் அரசியலுக்கு வருவான். அவனைப் பாடாய்ப் படுத்துவார்கள் அதனால் வருடத்தை முகப்பில் போட்டுவிடுவோம் என்று கருதிப் போட்டிருக்கிறார் போலும். (சிரிப்பு)

ஐயா மூப்பனார் அவர்கள் பலமுறை எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார். திமுக-வில் நான் தீப்பொறியாக இருப்பேன். ஐயா மூப்பனார் அனைவரையும் நாடாளுமன்றத்தின் சென்ட்ரல் ஹாலில் உட்கார வைத்துகொண்டு, என்னைப் பார்த்து, “இது ஒரு கறுப்பு ஆடு காங்கிரஸ் கூடாரத்தைவிட்டு தப்பி ஓடி விட்டது” என்பார். அவர் என் மீது மிகவும் பாசமாக இருப்பார்.

என் தாயை, என் தாரத்தை நான் நெஞ்சில் வைத்து இருக்கின்றேன். என் குடும்பத்தைப் பற்றிப் பத்து நாட்களுக்கு முன்பு திமுகவினர் மேடையில் பேசினார்கள். நான் திருமணமான நாள்முதல் இன்றுவரையிலும் என் துணைவியாரை நீ என்றுகூட அழைத்தது இல்லை. எங்கள் குடும்பத்தை எந்த அரசியல் நிகழ்விற்கும் கொண்டு வரவில்லை. கட்சி மாநாடு என்றால், முன்னால் வந்து பார்வையாளராக உட்கார்ந்து இருப்பார்கள். இந்த மாநாட்டைப் பார்க்க எங்கள் அம்மா இல்லை என்ற கவலைதான். எங்கள் மாநாடுகள் அனைத்துக்கும் வருவார்கள். நடக்க முடியாதபோதும்கூடச் சக்கர நாற்காலியில் கொண்டு வந்து உட்கார வைத்தார்கள்.

ஈரோட்டில் கணேசமூர்த்தி மாநாடு நடத்தினார். பஞ்சாப் முதலமைச்சர் பாதல், காஷ்மீர் முதல்வர் பஃரூக் அப்துல்லா, ஈழத்தமிழர்களுக்கு உதவிய ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோர் வந்திருந்தார்கள். வைகோவின் தாயார் மாரியம்மாள் மாநாட்டு வந்திருக்கிறார்கள் என்று சொன்னவுடன், மூவரும் பேரிகாடைத் தாண்டிச் சென்று எங்கள் தாயாரின் காலைத் தொட்டு வணங்கினார்கள். காஷ்மீர் சிங்கம் சேக் அப்துல்லா மகன் பஃரூக் அப்துல்லா, எங்கள் தாயார் பட்டிக்காட்டில் ஒரு கிராமத்தில் பிறந்த தாய். அவர்கள் இந்த மாநாட்டைப் பார்த்து இருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள்.

நான் போக வேண்டிய தூரம் அதிகம். நான் வேகமாகச் சென்றுகொண்டு இருக்கின்றோம். குறித்த நேரத்திற்குள் அந்த இலக்கை அடைய வேண்டும். அப்பொழுது ஒரு நாய் என்னைப் பார்த்து ஊளையிடுகிறது. உடனே நான் காரை நிறுத்திவிட்டு, உனக்கு என்ன திமிர் இருந்தால் என்னைப் பார்த்து ஊளையிடுவாய்? ஒரு கல்லை எடுத்து விரட்டவா முடியும்? நம்முடைய பயணத்தில் இந்த ஊளைச் சத்தங்களை எல்லாம் உதாசீனப்படுத்துங்கள்.

தோழர்களே, நாங்கள் ஆட்சிக்கு வருவோம் ஊழல் சொத்துகளைப் பறிமுதல் செய்வோம்.

நாங்கள் ஆட்சிக்கு வருவோம் வேலையில்லாத் திண்டாட்டத்திற்குத் தீர்வு காண்போம்.

ஐ.டி.ஐ, டிப்ளமோ, இளங்கலை, முதுகலை, என்று ஒவ்வொரு வகையில் படித்தவர்களும் வேலை கிடைக்கும்வரை உதவித்தொகை வழங்குவோம்.

பிள்ளைகள் படிப்பதற்கு வங்கிகளில் பெற்றோர்கள் கடன் பெற்று இருக்கின்றார்கள். மாணவர்களின் கல்விக் கடனை அரசே ஏற்றுக் கொள்ளும்.

தமிழ் நாட்டில் தொழில் தொடங்குவோர் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வருவோம் Single Window System கொண்டு வருவோம். தற்போது தொழில் முனைவோர் தொழில் தொடங்குவதற்குப் பெருந்தொகை கமிசன் கொடுக்க வேண்டியது இருக்கிறது. நாங்கள் முப்பது நாட்களுக்குள் லைசென்ஸ் கொடுப்போம். கமிசன் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. வெளிமாநிலங்களுக்குச் செல்கிற தொழிலதிபர்களை இங்கே அழைத்து வருவோம். இலட்சக்கணக்கான இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

நாங்கள் ஆட்சிக்கு வருவோம். ஊக வணிகத்துக்கு இடம் கொடுக்க மாட்டோம். உலக வர்தத்க ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விடுபடுகிறதா? இல்லையா? என்று கேட்போம். பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் நெசவாளர்களின் துயரத்தைப் போக்குவோம்.

நாங்கள் ஆட்சிக்கு வருவோம். தடையில்லா மின்சாரம் வழங்குவோம். மும்முனை மின்சாரம் வழங்குவோம். விவசாய பம்புசெட்டுக்கான மின் இணைப்புக்கு விண்ணப்பித்த ஒரு வாரத்தில் இணைப்பு வழங்குவோம்.

அண்ணன் கலைஞர் அவர்கள் சிறிது நேரத்திற்கு முன்பு, மதுவிலக்கு என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். அண்ணன் கலைஞர் அவர்களே, மூதறிஞர் ராஜாஜி மன்றாடியதற்குப் பின்னரும் 1971 ஆகஸ்டு 30 மதுவை கொண்டுவர நீங்கள் கையெழுத்திட்டீர்கள். 1996 ஆம் ஆண்டு தேர்தலில் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி முழு மதுவிலக்கு என்று முரசொலியில் எழுதினீர்கள். அதற்குப் பிறகு பத்து ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறீர்களே மதுவை ஒழித்தீர்களா? இல்லை.

முழு மதுவிலக்கை வலியுறுத்தி ஐந்தாயிரம் கிலோ மீட்டர் தெருத் தெருவாக நடந்து இருக்கிறேன். கட்சிக்கு எங்கும் ஓட்டுக்கேட்கவில்லை; ஆதரவு கேட்கவில்லை. பல்லாயிரக் கணக்கான ஏழைத் தாய்மார்கள் குடும்பம் அழிகிறது. கணவன் குடித்துவிட்டு அடிக்கிறான். நேற்று முன்தினம் தக்கலைக்குப் பக்கத்தில், கிறித்தவக் குடும்பத்தைச் சேர்ந்த பீட்டர் ஜான் குடித்துவிட்டுக் குடும்பத்தினரைத் துன்புறுத்தினான். அவரது மனைவி அமலோற்பம் ஏங்க இந்த மாதிரி செய்கிறீர்கள்? என்று வருத்தப்பட்டபோது, தான் செய்தது தவறு என்று கருதி தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து விட்டார். கணவன் இறந்துவிட்டான் என்று அந்த ஏழை அபலைப் பெண் மண் எண்ணெயை ஊற்றி நெருப்பு வைத்துக்கொண்டு இறந்துவிட்டாள். இதுபோல ஒன்றல்ல, இரண்டல்ல. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அழிந்து கொண்டு இருக்கின்றன.

இப்படிப்பட்ட அழிவும் துயரமும் ஏற்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய சூழலில், ஊரை ஏமாற்றக் கலைஞர் மதுவிலக்கு என்று சொல்கிறார். சசிப்பெருமாள் இறக்கும்வரை நடக்கும்வரை மதுவிலக்கு என்று சொன்னீர்களா? கிடையாது. அதன்பிறகு ஏற்பட்ட மக்கள் எழுச்சியைப் பார்த்து மெல்ல இப்போதுதான் பேசுகிறார்.

மதுபானக் கூட்டணி: உலக மகா பிராடுகள்
ஜெயலலிதா, படிப்படியாக மதுவிலக்கை கொண்டுவருவோம் என்று அறிவிக்கிறார். மதுவிலக்குப் பிரச்சினையில் அதிமுகவும் - திமுகவும் கூட்டுக் கொள்ளையர்கள். ஜெயலலிதாவின் நிழல் சகோதரி சசிகலா கூட்டத்துக்கு வேண்டிய மிடாஸ் மதுபான உற்பத்தி நிறுவனம், திமுகவின் தலைமை குடும்பத்துக்கு வேண்டியவர்கள் நடத்துகிற எஸ்.என்.ஜெ. எலைட் மதுபான நிறுவனங்கள். ஐந்தாண்டு அண்ணா திமுக ஜெயலலிதா ஆட்சியில் திமுகவுக்கு வேண்டப்பட்ட எஸ்.என்.ஜெ.டிடஸ்லரிஸ் மதுபான நிறுவனத்திடம் இருந்து மட்டும் ஆண்டுக்கு 31 சதவிகிதம் 5800 கோடி கொள்முதல் செய்து இருக்கிறது. ஐந்தாண்டுகளில் 24,800 கோடிக்கு கொள்முதல் செய்து இருக்கின்றது.

திமுக ஆட்சிக்கு வந்தால் அண்ணா திமுக மதுபான நிறுவனத்தினரிடம் மதுவை வாங்குகிறது. அண்ணா திமுக ஆட்சிக்கு வந்தால் திமுக மதுபான நிறுவனத்தினரிடம் மதுவை வாங்குகிறார்கள். இந்த உலகமாக பிராடு வேலையை கருணாநிதி, ஜெயலலிதா கூட்டத்தைத் தவிர வேறு எவரும் செய்ய முடியாது.

அப்துல் கலாம் மறைவுக்கு மறுநாள் மார்த்தாண்டம் உண்ணாமலைக்கடையில் சசிபெருமாள் மறைந்தார். நான் ஓடோடிச் சென்றேன். அவர் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அதைப் பார்த்து நான் படுகொலை என்றேன். ஜெயலலிதா அரசாங்கம் இவரைக் கொன்றுவிட்டது என்றேன். ஏழு நாள் கழித்து அந்தச் சடலத்தை தூக்கிக்கொண்டு வந்தோம். பந்த் அறிக்கை விட்டேன். பந்த் நடந்தது. திமுக விக்கிரமராஜாவைப் பயன்படுத்திப் பந்தை தடுக்க முயன்றது. அண்ணன் வெள்ளையன் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார். பந்த் வெற்றிகரமாக நடத்திக் காட்டப்பட்டது. சசிபெருமாளுக்காக மகன் பந்த் அறிவித்து இருக்கிறான் என்று எனது 99 வயது தாய் எங்கள் ஊர் பெண்களைத் திரட்டிக் கொண்டு நாற்காலியில் சென்று டாஸ்மாக் கடை முன்பு உண்ணாவிரதம் இருந்தார்.

முன்பு பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலைக்காக உண்ணாவிரதம் இருந்ததால் உடல் நலம் கெட்டுச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வைத்து காப்பாற்றி அழைத்துச் சென்றேன். அதனால் ஊருக்கு ஓடினேன். மறுநாள் 500 காவலர்களைப் போட்டு கடையைத் திறந்தார்கள். தம்பி வேளச்சேரி மணிமாறன், நிஜாம், என் தம்பி இரவிச்சந்திரன், தொண்டர்படை தம்பிமார்கள் பாஸ்கர சேதுபதி, முத்தையா என்று நாங்கள் திரளாகக் கூடி நின்று விட்டோம். கலிங்கப்பட்டியிலேயே மதுக்கடையை மூட முடியவில்லை இவர் என்னய்யா வீராப்பு பேசுகிறார்? என்பார்கள். கடையை நெருங்கிச் சென்றபோது எங்களை அடித்தார்கள். என் மேல் விழுந்த அடிகளை என் தம்பிகள் தாங்கிக் கொண்டார்கள். என் தம்பி இரவிச்சந்திரனுக்கு பலமான அடி. நிஜாம் கை முறிந்தது. எங்கள் ஆட்கள் லத்திக் கம்பைப் பிடுங்கினார்கள். 500 காவல்துறையினரும் 300 அடிக்கு அந்தப் பக்கம் ஓடிவிட்டார்கள்.

என் தோழர்கள் டாஸ்மாக் கடையை உடைத்தார்கள். காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை எங்கள் மீது அடித்தார்கள். இந்து பத்திரிகை படம் எடுத்துப் போட்டது. நான் வேன் மீது ஏறி நின்றபோது என் மீதே கண்ணீர்ப் புகை குண்டுக் வீசினார்கள். வேளச்சேரி மணிமாறன் நாற்காலியை வைத்து தடுத்தார். நாற்காலி தூள் தூளாகிவிட்டது. அடுத்து வானத்தை நோக்கிச் சுட்டார்கள். நேராகச் சுடுவதற்கும் தயாராகிவிட்டார்கள். தாராளமாகச் சுடு என்று வேன் மீதே நின்றேன். அண்ணன் உயிருக்கு ஆபத்து என்று கேள்விப்பட்டு திருமாவளவன் ஓடிவந்தார். அப்பொழுது தம்பி உடையான் படைக்கும் அஞ்சான்; பகைக்கும் அஞ்சான் என்று சொன்னேன்.

ஜெயலலிதாவின் உத்தரவின் பெயரில் என்னைச் சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பித்தார்களா? எதற்கு என்னைப் பார்த்துச் சுடவேண்டும்? கூட்டச் சண்டையில் செத்துப்போனான் என்று சொல்லுவதற்காகவா?

இவ்வளவும் செய்துவிட்டு என் மீதும், என் தம்பி மீதும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக 307 வழக்குப் பதிந்து இருக்கிறார்கள். இத்தனைக்குப் பிறகும் ஜெயலலிதாவுக்கு நாங்கள் சாதகமாக இருக்கிறோம் என்று சிலபேர் சொல்கிறார்களே, அவர்களைக் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் இருந்து வெளியே விடாமல் பூட்டி வையுங்கள். இளங்கோவனாக இருந்தால் என்ன? யாராக இருந்தால் என்ன? நாங்கள் நேருக்கு நேராக மோதிக்கொண்டு இருக்கின்றோம்.

சசிபெருமாள் மரணத்திற்குப் பிறகு போராட்டம் நடத்தியதா தி.மு.க.? ஆந்திராவில் 20 தமிழர்கள் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்களே அதைக் கண்டித்துத் திமுக போராட்டம் நடத்தியதா? ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தாரா?

இவ்வளவும் சொல்கிறீர்களே, இத்தனை ஆண்டுகளாக அவர்களோடு ஏன் கூட்டு வைத்தீர்கள் என்று தொலைக்காட்சிகளில் மேதாவிகளின் விவாதம்.

உலகத்தையே பார்க்காமல், மக்களையே சந்திக்காமல், விவசாயிகள் தொழிலாளர்களை நேரடியாகச் சந்திக்காமல், தொலைக்காட்சி அரங்கங்களில் உட்கார்ந்துகொண்டு திமுகவோடும், அதிமுகவோடும் நீங்கள் ஏன் கூட்டணி வைத்தீர்கள்? திரும்பவும் ஏன் கூட்டணி வைக்கவில்லை? என்று எங்களையும், கம்யூனிஸ்டுகளையும், திருமாவளவனையும் கேட்கிறார்கள். இப்படிக் கேட்பதற்கு உங்களுக்கு எவ்வளவு கமிசன் என்று நாங்கள் திரும்பக் கேட்டால் கோபம் வராதா? நாங்கள் கேட்க மாட்டோம்.

வினைவலியும் தன் வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் என்றான் வள்ளுவன். கொக்கொக்கக் கூம்பும் பருவத்து மற்றுஅதன் குத்தொக்க சீர்த்த இடத்து என்றான் வள்ளுவன். காலம் அறிந்து இடம் அறிந்து போராடி வெற்றி பெறு என்று சொல்கிறான்.

அப்படி நாங்கள் வெற்றி பெறுவோம்.

நாங்கள் ஆட்சிக்கு வருவோம். மதுபானக் கடைகள் ஒன்றும் இருக்காது. உற்பத்தி நிலையங்கள் ஒன்றும் இருக்காது. பீகாரில் நிதிஷ்குமார் செய்ததை நாங்கள் செய்வோம்.

சுற்றுச் சூழலைக் காப்போம். மீத்தேன் எரிவாயு, ஷேல் எரிவாயுவைத் தடுப்போம். வேலிக் கருவேல மரங்களை மொத்தமாக அகற்றுவோம்.

நாங்கள் ஆட்சிக்கு வருவோம். அனைத்து விவசாயக் கடன்கள், கூட்டுறவு, தேசிய வங்கிக் கடன்கள், நிதி நிறுவனக் கடன்களை தள்ளுபடி செய்வோம்.

நாங்கள் ஆட்சிக்கு வருவோம். கரும்பு உற்பத்தியாளர்களின் கவலையைப் போக்குவோம். இரண்டாண்டு காலை அரவை 1200 கோடி பாக்கி இருக்கிறது. நாங்கள் கொடுப்போம்.

மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த சகோதரர்களே, நாங்கள் ஆட்சிக்கு வருவோம். ஒரு மீனவனைக்கூட இலங்கைக் கடற்படை நெருங்க முடியாது. மத்திய அரசு தடுக்காவிட்டால், மத்திய அரசின் குடுமியைப் பிடித்து ஆட்டுவோம். தமிழகத்தில் இலட்சக்கணக்கான இளைஞர்களைத் திரட்டுவோம்.

ஈழத்துத் தமிழர்களைப் படுகொலை செய்த அரசை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவோம். இந்த இனக்கொலைக்குத் துணைபோன காங்கிரஸ், தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சியைக் கூண்டில் நிறுத்தச் சொல்வோம். சர்வதேச பொது விசாரணை நடத்தச் செய்வோம். லெனின் சுயநிர்யண உரிமையின் அடிப்படையில் தனி ஈழத்துக்காக பொது வாக்குகெடுப்புக்குக் குரல் கொடுப்போம்.

அணுஉலையை அனுமதிக்க மாட்டோம். கூடங்குளம் அணுஉலையை முதன் முதலில் எதிர்த்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் வை.கோபால்சாமி என்ற வைகோ. இடிந்தகரை போராட்டத்திற்குப் பக்கத்தில் நின்றோம். அணுஉலைகளை அமைக்க விடமாட்டோம். அமைத்ததை அகற்ற ஏற்பாடு செய்வோம்.

நியூட்ரினோவை விரட்டி அடிப்போம். இந்த (வைகோ) ஒருமனிதன் முயற்சியால் 2400 கோடி திட்டம் ஒரு வருடமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. அதற்காக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இரண்டரை மணி நேரம் வாதாடினேன்.

காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்ட விடமாட்டோம் கர்நாடகத்துக்காரனை. மீத்தேன் ஷேல் எரிவாயு அடித்து விரட்டப்படும்.

தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்று பர்மா, சிங்கப்பூர் பகுதிகளில் நாற்பதாயிரம் தமிழர்கள் வங்கத்துச் சிங்கம் நேதாஜி சுபாஸ்சந்திர போசுக்காக உயிர் கொடுத்தார்கள். 1945 ஆகஸ்டு 15 தைபேயில் நடந்த விமான விபத்து நடக்கவில்லை. அவர் சாகவில்லை. அதற்குப் பிறகும் உயிரோடு இருந்தார் என்று சொன்ன ஒரே மாமனிதர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இன்றைக்கு உண்மை வெளியே வந்துவிட்டது. இந்த உண்மையை மறைத்தது நேரு அரசு. சைபீரியச் சிறையில் நேதாஜி சித்தரவதை செய்யப்பட்டாரா? இந்தப் பாவத்தைச் செய்தவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

ஈழத்து அகதிகளுக்கு இங்கு வாழ்வில்லை. இதோ திருப்பரங்குன்றத்துக்குப் பக்கத்தில் உச்சம்பட்டியில் ரவீந்திரன் என்கின்ற ஈழ அகதியிடம் உன் மகன் எங்கே? என்று அதிகாரி கேட்கிறார். வேலைக்குச் சென்றிருக்கிறார் என்று கூறி இருக்கிறார் அவர். மகன் முகாமில் இல்லை என்று எழுதி அனுப்புவேன் என்று கூறுகிறார் அதிகாரி.

ஐயா அப்படிச் செய்யாதீர்கள். உதவித் தொகை கிடைக்காமல் போய்விடும். மேலாதிகாரிகளிடம் சென்று நாங்கள் உதவித்தொகை வாங்க முடியாமல் போய்விடும் என்கிறார் ரவீந்திரன்.

என்னடா உங்களுக்கு நாய்ப் பொழைப்பு? இங்கு வந்து ஏண்டா எங்கள் உயிரை வாங்குகிறீர்கள்? என்றவுடன், ஐயா மரியாதையாகப் பேசுங்கள் ஐயா என்கிறார் ரவீந்திரன். என்னடா பிச்சைக்காரப் பையன்களா, இலங்கையில் இருந்து வந்த உங்களுக்கு என்னடா மரியாதை? என்கிறார் அதிகாரி.

அப்படியென்றால் நாங்கள் சாகவேண்டுமா? என்றவுடன், இந்த மின்சார கம்பத்தில் ஏறிச் சாவு என்று அதிகாரி துரைப்பாண்டி சொன்னவுடன், ரவீந்திரன் வேகவேமாக மின்சாரக் கம்பத்தில் ஏறி வயரைப் பிடித்து அங்கேயே இறந்துவிட்டார்.

ஜெயலிதா, மோடி ஆட்சியில் ராஜபக்சேவின் கேம்ப் போன்று நடந்திருக்கிறது இந்தச் சம்பவம்.

கும்மிடிப்பூண்டியில் ஒரு அகதியை, டில்லி பாபு என்கின்ற சிப்காட் போலிஸ் இன்ஸ்ட்பெக்டர் இழுத்துக் கொண்டுவந்து இரண்டு கால்களையும் முறித்துப் போட்டுவிட்டார். டில்லி பாபு போன்ற அதிகாரிகளுக்குச் சொல்கிறேன், மே 19 ஆம் தேதிக்குப் பிறகு உங்கள் கணக்கு தீர்க்கப்படும். உலகத்தில் அனைத்து நாடுகளும் ஈழத்தமிழர்களுக்கு வாழ்வு கொடுக்கிறது. என் தாயகத்தில் இல்லையா? எங்கள் தொப்புள் கொடி உறவுகள் இங்கே வரக்கூடாதா? எல்லாக் கொடுமைகளுக்கும் முடிவு கட்டுவோம்.

காலம் அறிதல்

நிலம் ஈரமாக இருக்கும்போதுதான் விதைக்க முடியும். நிலம் பதமாக இருக்கும்போது விதைக்கலாம் என்பது விவசாயிக்குத்தான் தெரியும். தாய்மார்களே, தோசைக் கல் சூடாக இருந்தால்தான் மாவை ஊற்ற வேண்டும். வெறும் மாவு ஊற்றினால் தோசை வராது. கல் சூடாகி விட்டதா என்று பார்த்துச் சிறிது எண்ணெயைத் தடவி, ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி, அதை நீவி விட்டு, பக்குவமாகக் கரண்டியை விட்டு திருப்பிப் போட்டு எடுத்தால் அருமையான தோசை. (கைதட்டல்).

அதுபோல மாற்றத்திற்கு மக்கள் மனம் அதற்குத் தகுதியாக இருந்தால்தான் முடியும். இன்று அந்த நிலைமைக்கு தமிழக மக்கள் வந்திருக்கிறார்கள். நிலம் ஈரமாக இருக்கிறது. கல் சூடாக இருக்கிறது.

இதே மாமண்டூரில் படை திரண்டது. வாதாபி சக்கரவர்த்தி புலிகேசி காஞ்சி மீது படையெடுத்து வந்த மகேந்திரவர்மன் காலத்தில் சிற்பிகளை வெட்டிக் கொன்றான். ஊரெல்லாம் தீ வைத்துக் கொளுத்தினான். மணிமங்கலம் போரில் காயப்பட்டார் மகேந்திர வர்மன். வீரமாமல்லர் ஆத்திரத்தோடு தளபதி பரஞ்சோதியோடு போனார். மகனே ஆத்திரப்படாதே என்று மகேந்திரவர்மன் கூறினார். காலத்திற்குக் காத்திரு. பக்கத்து நாடுகளைக் கூட்டணி சேர்த்துக்கொள். தக்க ஆயுத பலத்தோடு நால்வகைச் சேனைகளைத் திரட்டிக்கொண்டு போ என்றார்.

திருக்கழுக்குன்றத்தில் இருந்து மாமண்டூர் வரை படைகள் குவிக்கப்பட்டன. ஏகாம்பரநாதர் கோவிலில், வரதராஜ பெருமாள் கோவிலில் பூசை செய்துவிட்டு வெற்றி வேல்! வீரவேல்! என்று முழங்கியவாறு மாமன்னர் நரசிம்ம பல்லவன், பரஞ்சோதியோடு, இலங்கை மன்னன் மாளவர்மன் துணையோடு சாளுக்கிய நாட்டை நோக்கிப் படையெடுத்துச் சென்றான். நர்மதைக்கு தெற்கே வர முடியாதபடிக்குக் ஹர்ஷவர்த்தனரை விரட்டியடித்த சாளுக்கியப் பேரரசன் இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்து, வாதாபி நகரத்துக்கு தீ வைத்துச் சாம்பலாக்கி, அங்கே பல்லவர்களின் வெற்றிக் கொடிக் கம்பத்தை ஊன்றிவிட்டு வந்தார்கள்.

அதைப்போலத்தான் நாங்கள் காலம் வரும்வரை காத்திருந்தோம்; இப்போது ஆறு கட்சிகளும் கரம் கோர்த்து இருக்கின்றோம். அன்றைக்குப் பல்லவ சைனியம் வென்றதைப்போல எங்கள் சைனியங்களும் வெற்றி பெறும். ஆட்சி அமைக்கும்!

நன்றி, வணக்கம்.

ஒருங்கிணைப்பாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

-சங்கொலி, 22.04.2016

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)