சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம் -2 நினைவூட்டும் இரத்த்த் துளிகள்

Issues: Human Rights, National, Politics, Srilanka

Region: Tamil Nadu

Category: Articles, Letters

Date: 
Mon, 24/04/2017

 

 

 


சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம் -2

 

நினைவூட்டும் இரத்த்த் துளிகள்

 

இமைப்பொழுதும் நீங்காது

என் இதயத் துடிப்போடும்
இரத்தச் சுழற்சியோடும்
கலந்து விட்ட கண்ணின் மணிகளே!

 

 

 

17.04.2017 அன்று காலை 10.30 மணி அளவில் புழல் மத்தியச் சிறையில் இருந்து எழும்பூர் அல்லிக்குளம் நீதி மன்றத்திற்குக் காவலர்கள் வாகனத்தில் அழைத்து வரப்பட்டேன். சிறை வாயிலில் காத்திருந்த கழகக் கண்மணிகள் விண் முட்டும் வாழ்த்தொலிகள் எழுப்பினர். இரு சக்கர வாகனங்களில் கழகக் கொடிகள் காற்றில் படபடக்கப் பக்கவாட்டில்  வந்தனர்.

நீதிமன்ற வளாகத்தில் கணக்கற்ற கண்மணிகளின் கூட்டம். கழக அவைத் தலைவர் ஆருயிர் அண்ணன் திருப்பூர் துரைசாமி அவர்களும், ஆருயிர்ச் சகோதரர்களான பொருளாளர் கணேசமூர்த்தி, துணைப் பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன், அ.க.மணி ஆட்சி மன்றக்குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் தேவதாசு, அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் நன்மாறன், வழக்கறிஞர் சின்னப்பா, கொள்கை விளக்க அணிச் செயலாளர் வழக்கறிஞர் அழகு சுந்தரம், இளைஞர் அணிச் செயலாளர் பொறியாளர் ஈஸ்வரன், தொண்டர் அணிச் செயலாளர் பாஸ்கர சேதுபதி, மாவட்டச் செயலாளர்கள் என்.சுப்பிரமணி, சு.ஜீவன், சைதை ப.சுப்பிரமணி, கே.கழககுமார், க.ஜெயசங்கர், ஆரணி டி.இராஜா, கோ.உதயகுமார், பி.என்.உதயகுமார், டி.டி.சி.சேரன், வ.கண்ணதாசன், டி.சி.இராஜேந்திரன், ஆ.தங்கராஜி, ஆர்.எஸ்.இரமேஷ், மா.வை.மகேந்திரன், ஆர்.இ.பார்த்திபன், கே.ஏ.எம்.குணா, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் டாக்டர் சி.கிருஷ்ணன், பெல் இராஜமாணிக்கம், அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர் மைக்கேல்ராஜ், சட்டதிட்ட திருத்தக்குழுச் செயலாளர் வழக்கறிஞர் இரா.அருணாசலம், தீர்மானக்குழுச் செயலாளர்கள் ஆவடி இரா.அந்திரிதாஸ், கவிஞர் மணிவேந்தன், மகளிர் அணிச் சகோதரிகள், மாவட்டக் கழகங்களின் நிர்வாகிகள், பகுதிக் கழக, ஒன்றியக் கழக, நகரக் கழக, வட்டக் கழகச் செயலாளர்கள், எண்ணற்றோர் அன்பு முகம் காட்டி வரவேற்றனர். அனைவர் மீதும் என் கண்கள் பரிவுடன் சுழன்றன. இம்மடலில் பெயர்கள் விடுபட்டு இருந்தால் பொறுத் தருள்க.

நீதிமன்றத்தில்...

நீதிமன்ற அறைக்குள் ஆர்வத்துடன் நமது தோழர்கள் கூட்டமாக வந்ததால் நீதிபதி என்னை அழைத்து அதனைக் குறிப்பிட்டவுடன், எனது ஒரு சொல்லில் அனைவரும் வெளியேறினர். அதுதானே நம் இயக்கத்தின் தனித்துவமான கண்ணியம்!

வழக்கு செசன்சு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு, ஏப்ரல் 27 ஆம் நாள் அங்கு நான் ஆஜராக வேண்டும் என நீதிபதி கூறினார். நீதிமன்ற வளாகத்தில் நடந்து வெளியே வரும்போது வாழ்த்து முழக்கம் எழுப்ப வேண்டாம் என்று கூறியதைத் தோழர்கள் ஏற்று அமைதி காத்தனர். உங்களில் பலரை நேரில் கண்டதில் என் மனம் மிகவும் மகிழ்ந்தது.

ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவரோ, அடுத்த கட்டத் தலைவர்களோ சிறை சென்றால் ஆர்ப்பாட்டம், மறியல், கல் வீச்சு, காவல்துறை மீது கடும் அர்ச்சனை போன்ற காட்சிகள்தான் தமிழகம் இதுவரை கண்டவை. இந்த வழக்கில் பிணை விடுதலைவேண்டாம் என்று கூறிவிட்டு நானாகவே சிறை ஏகினேன். அதனால் எந்த ஆர்ப்பாட்டமும் எங்கும் தோழர்கள் நடத்தக்கூடாது என்று திட்ட வட்டமாகத் தெரிவித்தேன்.

நமது கழக அவைத்தலைவர் அவர்களும் அதனையே வலியுறுத்தி அறிக்கை தந்தார்கள். நீங்களும் அதனையே கடைப் பிடித்தீர்கள்.

வைகோ கைதால் எந்தக் கொந்தளிப்பும் ஏற்படவில்லையே? நெருப்பு இருந்தால் தானே உலையில் அரிசி வேகும்?” என்று ஒரு வார ஏடு விமர்சனம் செய்துள்ளது.

தமிழகத்தின் பொதுவாழ்வு மட்டும் அல்ல, சில ஏடுகளின் பத்திரிகா தர்மம்பாதாளத்தில் புதைந்து விட்டது என்பது தான் இன்றைய நிதர்சனம். இதெல்லாம் எனக்குப் பழகிப் போய்விட்டது. பாராட்டி எழுதினால்தான் ஆச்சரியப்படுவேன்.

சீமைக்கருவேலச் சீரழிவு

ஏப்ரல் 3 ஆம் நாள் சிறை வாயிலுக்குள் நுழையும் முன்பு செய்தியாளர்களிடம், “கழகத் தோழர்கள் சீமைக் கருவேலம் எனும் வேலிக்காத்தானை அகற்றும் பணியில் ஈடுபடுவார்கள்என்று கூறினேன். தமிழகம் முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் நமது தோழர்கள் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் வேலையில் திட்டமிட்டு ஈடுபட்டு வருவதைப் படங்களுடன் சிறைச்சாலை முகவரிக்கு எனக்கு அனுப்பி வருகின்றார்கள்.

1960 களில் தவறான தகவலின் பேரில் இந்த நச்சு மரங்களின் விதைகள் தமிழ்நாடு முழுவதும் தூவப்பட்டன. சிறிது காலம் விறகாகப் பயன்பட்டு, ஏழைகளுக்கு வருவாய் தந்தது. ஆனால், நிலைமை இன்று முற்றிலும் மாறிவிட்டது. இதனை விறகாக்கி வருவாய் காணும் நிலைமையும் இல்லை.

இந்த சீமைக் கருவேல மரங்கள் 100 அடி ஆழம் வரை வேர் பாய்ந்து நிலத்தடி நீரை அடியோடு உறிஞ்சிக் கொள்கின்றன. அதனால்தான் எந்த வறட்சியிலும் பசுமையாய் நிற்கின்றன. சுற்றுச் சூழல் ஈரப்பதத்தையும் முற்றிலும் உறிஞ்சிக்கொள்கின்றது. இதன் நிழலில் நிற்கும் ஆடு, மாடுகள் சினை பிடிப்பது இல்லை. நாம் அதன் அருகில் நின்றால் நமது உடலின் ஈரப்பதத்தையும் உறிஞ்சும். கரிக்காற்றை வெளியிட்டு, உயிர்க் காற்றை உறிஞ்சிக் கொள்கின்றது. இதன் அபாயம் குறித்து தினத்தந்தி நாளேடு தலையங்கம் தீட்டியது. இம்மரங்களின் கேடுகள் குறித்து நிறைய ஆய்வு செய்த பின்னர்தான் நான் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தேன்.

சாராயப் பாட்டிலின் சோகப் புலம்பல்

நல்லவேளை. தமிழ்நாட்டின் நிலத்தடி நீரைக் காக்கவும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் விவசாயத்தைப் பாதுகாக்கவும் வரப்பிரசாதமாகஉயர்நீதிமன்ற நீதியரசர்கள் மாண்புமிகு செல்வம் அவர்களும், மாண்புமிகு பொன்.கலையரசன் அவர்களும் தீர்க்கமான ஆணை பிறப்பித்தனர். அவர்களே களம் இறங்கினர். பல உயர்நீதிமன்ற நீதிபதிகள் அவர்களுடன் கரம் கோர்த்தனர். இல்லையேல் என் மீது கொண்ட வன்மத்தால், காரணம் இல்லாத வெறுப்பால் சீமைக் கருவேல ஆதரவுக் கட்டுரைகள், அறிக்கைகள் இந்நேரம் அல்லோலகல்லோலப் படுத்தியிருக்கும்.இருந்தாலும் வாரம் இருமுறை ஏடு ஒன்று சீமைக் கருவேல மரம் நாதியற்றுப் புலம்பி அழுவதாக இரண்டு பக்கக் கட்டுரையும் எழுதிவிட்டது.

ஒரு சாராயப் பாட்டிலின் சோகப் புலம்பல்என்று எழுதுவதுதானே?

தமிழகத்தின் எதிர்காலம் அச்சம் ஊட்டு கிறது என்பதற்கான காரணங்களைக் கடந்த மடலிலேயே எழுதி இருந்தேன். அண்டை மாநிலங்கள் நீதிவழி நடக்கும் என்றோ, நமது நதிநீர் உரிமையை மைய அரசு பாதுகாக்கும் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை. இஸ்ரேல் போன்ற நாடுகளிடம் இருந்து நாம் சில படிப்பினைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். பெரும் யுத்த காலங்களில் மக்கள் எப்படித் தங்கள் நாட்டைக் காப்பாற்றினார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

நிலத்தடி நீரைக் காக்க வேண்டும்; அதற்குச் சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்ற வேண்டும். அதற்குப் பிறகும் முளைத்தால், அப்போது முளையிலேயே இரண்டு விரல்களால் கிள்ளி எறிந்துவிடலாம். இந்த விழிப்புணர்வை மக்களிடம் குறிப்பாக கல்லூரி, பள்ளி மாணவர்களிடம் நாம் ஏற்படுத்த வேண்டும். ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள், நீரோடைகளைத் தூர் வார வேண்டும். குடி மராமத்துத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும். கண்மாய், குளங்கள், பாசன பட்டாதாரர்கள் குளத்து மண்ணை எடுத்து வண்டலாக தங்கள் நிலங்களில் பயன் படுத்திக்கொள்ள எந்தத் தடையும் இருக்கக்கூடாது.

தண்ணீரைச் சுமக்கும் மடியாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் திகழ்ந்த ஆற்று மணல் படுகைகள் இரண்டு கழகத்தவர்களாலும் சுரண்டப்பட்டு, கோடி கோடியாகக் கொள்ளையடித்துத் தமிழ் நாட்டுக்கு மன்னிக்க முடியாத, ஈடு கட்ட முடியாத பெரும் தீங்கு  இழைத்து விட்டனர். இன்றளவும் திருந்திய பாடில்லை. நினைத்தாலே நெஞ்சம் கொதிக்கின்றது.

நேர்மையான அரசியல் என்பது, முறையாகப் பயிர் செய்யும் விவசாயம் போன்றது.

ஊழல் அரசியல் என்பது, சீமைக் கருவேல மரங்கள் போன்றது.

ஊழல்எனும் பிசாசு தமிழ்நாட்டையே கபளீகரம் செய்கிறது. இதற்கு விமோ சனமே இல்லையா? என்ற ஆதங்கம் நியாயமாக எழுகிறது அல்லவா?

நான் கடந்த சில ஆண்டுகளாகக் கிராமத்து விவசாயிகளிடம் சொல்கிறேன். நாம் நெல் பயிர் நட்டாலும், பருத்திச் செடி வளர்த்தாலும், மிளகாய்த் தோட்டம் பராமரித்தாலும், வாழை போட்டாலும், எந்தப் பயிர் விளைவித்தாலும் பூச்சி கடித்துப் பாழாகிறது. நீர் இன்றிக் கருகி விடுகின்றது. பெரும் காற்று பேய்மழையால் வாழைத் தோட்டங்கள் நாசமாகின்றன. நாம் என்ன பாடு பட்டாலும் எதிர்பார்க்கின்ற மாதிரி பயிர்கள் வளர்வது இல்லை. இந்தச் சீமைக் கருவேல மரங்களைப் பாருங்க, உரம் வைக்க வேண்டாம், தண்ணீர் பாய்ச்ச வேண்டாம், எந்த நிலையிலும் இப்படி செழித்து வளர்ந்து நிற்கின்றன. இதுதான் நம்மைப் போன்ற விவசாயிகளின் நிலைமைஎன்று சொல்வேன்.

அப்படித்தான், “நேர்மையான அரசியல் என்பது முறையாகப் பயிர் செய்யும் விவசாயம் போன்றது. ஊழல் அரசியல் என்பது சீமைக் கருவேல மரங்கள் போன்றது.இதனை அடிக்கடி சொல்வேன்.

இப்போது, “சீமைக் கருவேல மரங்களை வேருடன் பிடுங்கி, அடியோடு ஒழிக்க ஒரு அறப்போரில் ஈடுபடுகிறோம்அல்லவா! இந்தப் பணியில் பொதுமக்கள், நடுநிலையாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் அனைவரும் நம்முடன் காரம் கோர்ப்பர்; வெற்றி பெறத்தான் போகிறோம்.

இதே போன்ற நிலைமை அரசியல் களத்திலும் ஏற்படும்.

ஊழலின் உச்சகட்டத்திற்குத் தமிழகம் சென்று விட்டது. இதில் அதிமுக - திமுக என்ற வேறுபாடு கிடையாது. அறம் வளர்த்து நெறி வளர்த்த தமிழ் மக்கள், வாக்காளர்கள் மனநிலையும் தற்போது கெட்டு இருக்கின்றது. கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்வதில் என்ன தவறு? கொள்ளையடித்த பணத்தைத் தானே கொடுக்கின்றார்கள்? கொடுக்கின்ற பணத்தைப் பொறுத்துக் கட்சிக்கு இத்தனை ஓட்டுஎன்று குடும்பத்திலேயே பிரித்துப் போட்டு விடலாம் என்ற மனோபாவம் சர்வசாதாரணமாகக் காணப்படுகின்றது. நான் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்த காலத்தில் இப்படி ஒரு நிலைமையைக் கற்பனைகூடச் செய்தது இல்லை.

அண்ணா மறைவும் அரசியல் கேடுகளும்

அனைத்துக் கட்சிகளிலும் நேர்மையான தலைவர்களே இருந்தார்கள். பேரறிஞர் அண்ணா மறைந்து, 1970க்குப் பின்னர் தான் தமிழக அரசியல் சீர்கெடத் தொடங்கிற்று. மலர்க் கிரீடங்கள், தங்கச் சங்கிலிகள், கட் அவுட்கள், போலி விளம்பரங்கள், ஊழல், சொந்தக் குடும்பத்தையே கொலுபீட மாக்குதல் கமிஷன்’, லஞ்சம், அரசுப் பணிகள், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை அனைத்திலும் அரசு ஒதுக்கும் கோடானு கோடி பணத்தில் இத்தனை சதவீதம் என்று கொள்ளை.

இப்படிக் குவியும் பணத்தைக் கொண்டு வாக்காளர்களின் வாக்குச் சீட்டுக்கு ரேட், மதுபான உற்பத்தித் தொழிற் சாலைகள்; அதில் கிடைக்கும் கோடானு கோடிப் பணம், நியமனங்களுக்கான கல்வித்துறைக் கொள்ளை - துணை வேந்தர்கள் பதவி ஏலம்என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

A Point of no Return - இனி திருத்தவே முடியாத நிலைதானோ? என்ற கவலையும் எழுகின்றது.

இல்லை; எந்தக் கேட்டுக்கும் ஒரு முடிவு உண்டு. வளரும் இளைய சமுதாயம், மாணவ சமுதாயம் புரையோடிப் போன ஊழலை ஒழிக்கும் ஆவேசத்துடன் எழுவார்கள் ஒருநாள். இளைய உள்ளங்கள் ஒரு கந்தகக் கிடங்கு. ஒரு தீப்பொறி விழுந்தால் போதும் எரிமலை யாய் வெடிக்கும். அது எப்போது என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது.

அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முழுத் தகுதியுடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் களத்தில் கம்பீரமாகப் பணியாற்றும்.

“If not We, then who? நாம் இல்லா விட்டால் வேறு யார்? நாம்தான். முழுத் தகுதி உள்ளவர்கள் நாம்தான்.

பஞ்சணையும் பாறாங்கல்லும் ஒன்றுதான்

இந்தச் சிறை வாசத்தை நான் பயனுள்ள தாக்கிக் கொள்கிறேன். ஆழ்ந்து தனிமையில் சிந்திக்கின்றேன்.

நெருப்பு வெயில்தான். குளிர்சாதன வசதியை மனம் தேடவே இல்லையே?

பஞ்சணை மெத்தையிலும் தூங்குவேன்; பாறாங்கல்லிலும் படுத்து உறங்குவேன். சுவையாக விரும்பி உண்பேன்; எந்தச் சுவையும் இல்லாத உணவையும் அருவெறுக்காமல் விழுங்குவேன். இதனை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

மத்தியப் பிரதேசத்தில் சாஞ்சி - பட்சி சோலையில் மூன்று நாள் கட்டாந்தரையில் கொளுத்தும் வெயிலிலும், இரவிலும் படுத்துக் கிடக்கவில்லையா?

நான் இதுவரை மேற்கொண்ட 5,000 கி.மீ. நடைப்பயணங்களில் வெயிலிலும் நடந்தேன்; கொட்டும் மழையிலும் நடந்தேன்; ரோட்டோரத்தில் துண்டை விரித்துப் படுத்தேன். எனக்குள்ள ஒரு நல்ல இயல்பு இதுதான். அதனை எண்ணிப் பெருமிதம் கொள்கின்றேன்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் நிறைவுப் பிரச்சாரக் கூட்டம். பாளைத் தொகுதி வேட்பாளர் கே.எம்.ஏ. நிஜாமை ஆதரித்து ஜவகர் மைதானத்தில் பேசத் தொடங்கியவுடன் வானமே பிளப்பதைப் போல் மின்னல்கள் பாய்ந்தன; இடியோசை செவிகளை நடுங்கச் செய்தன. ‘50’ நிமிடம் மேற்கூரை அமைக்காத மேடையில் நான் பேசினேனே? மின்சாரம் பாய்ந்து விடும் என்று வேட்பாளரே பயந்து நிறுத்தச் சொன்னாரே?

அவ்வளவு ஏன்? பூவிருந்தவல்லியில் நாம் நடத்திய பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்தநாள் விழா மாநாட்டு மேடையில் மழை கொட்டிற்று; மின்னல்கள் பாய்ந்தன. இடியோசை ஒரு புறம். மின் விளக்குக் கம்பங்கள் வளைந்து ஆடின. நான் பேச்சை நிறுத்தவே இல்லையே? சீறி வந்த இயந்திரத் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இடையில் வன்னிக்காட்டில் புலிகளுடன் சென்றவன் தானே! எனவே, என்னைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.

மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகரச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் 2,000 கடிதங்கள் புழல் மத்தியச் சிறையில் இருந்து அனுப்பி இருக்கின்றேன்.

அரசியல் களத்தில் நடப்பது எல்லாம் நன்மைக்கே!

பாசமலர்திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும், வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே.இப்பாடல் வரிகள் நம் இயக்கப் பயணத்தில் பலிக்கத்தான் போகின்றன. அதனை உருவாக்க வேண்டிய பொறுப்பு கிளைக் கழகம் முதல் நிர்வாகிகள் கைகளில்தான் உள்ளது. அதற்கு உரிய சூழ்நிலையை எப்படி ஏற்படுத்துவது என்பது குறித்துத்தான் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றேன்.

ஏப்ரல் 8 ஆம் நாளிட்ட ஆங்கில இந்துஏட்டில் சுகாசினி ஹைதர் எழுதிய வங்க தேசம் 1971’ என்ற கட்டுரை என் மனதில் துக்கமும் கோபமும் கலந்த உணர்வுகளை எழுப்பியது. அவற்றை இம்மடலில் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

சில தினங்களுக்கு முன்னால் வங்கதேச அதிபர் திருமதி ஷேக் ஹசீனா அவர்கள் இந்தியாவுக்கு வந்த செய்திகளை அறிவீர்கள்.

1947-இல் இந்தியத் துணைக்கண்டம் இரு நாடுகளாகப் பிரிந்தன. காயிதே ஆஜம் முகம்மது அலி ஜின்னா பாகிஸ்தான்நாட்டை அமைத்துக் கொள்ளப் பிரிட்டனும் இசைந்தது. இதை நினைக்கும் போது வழக்கறிஞர் வீரபாண்டியன் ஒரு கட்டுரையில் எழுதிய கருத்து சரியாகப் பட்டது. இலங்கைத் தீவின் விடுதலைக்காக ஈழத் தமிழர் தலைவர்களும் கடுமையாகப் போராடி னார்கள். ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் தங்களுக்கென்று தனியான தமிழர் நாடுஇருந்ததை எண்ணி இலங்கைத் தீவில் ஈழத் தமிழர் தாயகத்தைத் தனி நாடாகப் பெறத் தவறி விட்டார்கள். சிங்களர்கள் கைகளில் பிரித்தானிய அரசு அதிகாரத்தை ஒப்படைத்தபோது சம உரிமையுள்ள மக்களாக வாழ்வோம் என நம்பி ஏமாந்தனர்; நான்காம்தரக் குடிமக்கள் ஆக்கப்பட்டார்கள்.

சரி. மீண்டும் பாகிஸ்தானுக்கு வருகிறேன். மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் மக்கள் மீது அதிகாரம் செலுத்தி வருகையில் வங்க மொழி இரண்டாம் தர மொழியாக்கப்பட்டது. கிழக்கு பாகிஸ்தான் மக்கள் உரிமைகள் இழந்தனர்.

பல்கலைக்கழகத்தில் விடுதலை கீதம்

பாகிஸ்தான் பெரும்பாலும் இராணுவ சர்வாதிகார ஆட்சி நாடாகவே திகழ்ந்து வந்தது. மேற்குப் பாகிஸ்தானின் அசுரப் பிடியில் இருந்து மீள வேண்டும்; வங்க மொழியே ஆட்சி மொழியாக வேண்டும்; மாநில சுயாட்சி வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி, பின்னர் வங்கதேச விடுதலைதான் எங்கள் தாகம்என வங்க மக்கள் முதலில் அறவழியில் போராடினர். மேற்கு பாகிஸ்தான் காவல்துறையும், இராணுவமும் கொடுமையான அடக்கு முறையை ஏவின. அதிபர் இராணுவத் தளபதி யாஹ்யாகான் மூர்க்கத் தனமான தாக்குதலைத் தொடங்கினார்.

தங்கள் உரிமைகளைக் காக்க வங்க தேச வாலிபர்கள் முக்தி வாகினிஎன்ற அமைப்பின் மூலம் ஆயுதப் புரட்சிக்கும் ஆயத்தமானார்கள். இலட்சக் கணக்கான அகதிகள் மேற்கு வங்கத்திலும், வடகிழக்கு எல்லைப்புற மாகாணங்களுக்கும் வந்தனர். இந்தக் கால கட்டத்தில் விடுதலைக்கனல் டாக்கா பல்கலைக் கழகத்தில் எழுந்தது. மாணவர்கள் விடுதலை கீதம் இசைத்தனர்.

1971 மார்ச் 25 - டாக்கா பல்கலைக் கழக வளாகத்தினுள் இராணுவம் அதிரடியாக நுழைந்தது. பேராசிரியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கண்ணில் தென்பட்ட மாணவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகினர். ஒவ்வொரு வகுப்பு அறையும் மாணவர்களின் பிண அறையாயிற்று. விடுதிகளுக்குள் இராணுவச் சிப்பாய்களின் துப்பாக்கிகள் வெடித்தன. எங்கும் இரத்த வெள்ளம். மாணவர் சமூகம் அஞ்சிப் பதுங்கி ஓடவில்லை.

மூன்றாம் நாள் ஆயிரக்கணக்கான மாணவர்கள் குவிந்தனர். மதுவின் கேண்டீன்என்ற மையத்தைச் சூழ்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்களே! வங்க தேசத்தில் இருந்து வெளியேறுங்கள். பாகிஸ்தான் பிசாசுகளே! எங்கள் தேசத்தை விட்டு ஓடுங்கள்,” என்ற முழக்கம் கட்டிடங்களில் மோதி எதிரொலித்தது.

மண்ணை நனைத்த மதுசூதன் இரத்தம்

மதுசூதன் டே என்பவர் அப் பல்கலைக் கழகத்தில் சிற்றுண்டி விடுதி - கேண்டீன் - நடத்தி வந்தார். அந்தக் கேண்டீன் தான் வங்கதேச விடுதலையின் தொட்டில் ஆயிற்று. அங்குதான் பாகிஸ்தான் எதிர்ப்பாளர்கள் தினமும் கூடுவார்கள். தேநீர் அருந்திக் கொண்டே கலந்துரையாடுவார்கள். வங்கதேசத் தந்தையான ஷேக் முஜிபூர் ரகுமான் மாணவராக இருந்த காலத்திலிருந்தே இங்குதான் வந்து உரையாடுவார். அவர் சிற்றுண்டிக்குச் செலுத்த வேண்டிய கடன் பாக்கிப் பணம் கூட மதுவின் கணக்கு நோட்டில் இருந்ததாம்.

இராணுவத் துருப்புக்கள் மதுசூதனையும் அவரது மனைவியையும் மகனையும் விளையாட்டு மைதானத்துக்கு இழுத்துக் கொண்டு வந்தனர். முதலில் மதுவின் மகனையும் மனைவியையும் சுட்டுக் கொன்றார்கள். பின் மதுசூதனையும் மாணவர்களையும் குண்டுகளுக்குப் பலியாக்கினார்கள். இரத்தத் துளிகள் மண்ணை நனைத்தன.

இந்தக் கோரப் படுகொலைகளால் மாணவர் சமுதாயம் அஞ்சிப் பதுங்கவில்லை. பாகிஸ்தான் எதிர்ப்பு - விடுதலைக் கிளர்ச்சி தீவிரமாகியது. மசூசூதன் இந்து மதம்தான். ஆனால், வங்க விடுதலைக்காகத் தன் ஆவியைத் தந்தார்.

நாங்கள் முஜிபூர் ரகுமானின் விடுதலைப் படைஎன வீர முழக்கம் செய்தான் லிபி அக்தர் எனும் 19 வயது மாணவன்.

முஜிபூர் ரகுமான்மேற்கு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தூக்குமரம் அவருக்காகக் காத்து இருந்தது. இரண்டு இலட்சம் பெண்கள் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமை களுக்கு உள்ளாக்கப்பட்டனர். 1971 மார்ச் முதல் 1971 டிசம்பர் வரை இலட்சக் கணக்கானோர் படுகொலை செய்யப் பட்டனர்.

வங்கதேசம் மலர்ந்தது

பாகிஸ்தானில் நடப்பது உள்நாட்டுப் பிரச்சினை அல்ல; பன்னாட்டுப் பிரச்சினை; மனித உரிமைப் பிரச்சினை; பொது மக்கள் கொல்லப்படுகின்றார்கள். இந்தியா வேடிக்கை பார்க்கக் கூடாது,” என நாடாளுமன்ற மேலவையில் கர்ஜித்தார் மேற்கு வங்கம் தந்த கம்யூனிஸ்டுத் தலைவர் பூபேஷ் குப்தா. பிரதமர் இந்திரா காந்தி அதனையே மிக அழுத்தமாக முழங்கினார் நடப்பது உள்நாட்டுப் பிரச்சினைஅல்ல என்றார். ஜெனரல் மானெக்ஷா தலைமையில் இந்திய இராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழைந்தது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் மூண்டது . இது ஆயிரம் ஆண்டுப் போராக நடக்கும்என ஆவேசக் குரல் கொடுத்தார் பாகிஸ்தானின் ஜூல் பிகர் அலி பூட்டோ. 90,000 பாகிஸ்தான் படையினர் ஜெனரல் நியாஜி தலைமையில் சரண் அடைந்தனர். அவர்கள் மனித நேயத்துடன் நடத்தப்பட்டனர்.

முஜிபூர் ரகுமான் விடுதலை செய்யப் பட்டார்.  உலக வரைபடத்தில் வங்க தேசம்என்ற புதிய நாடு மலர்ந்தது. வங்கத் தந்தைஷேக் முஜிபூர் ரகுமான் அதிபர் ஆனார். ஆனால், நான்கு ஆண்டுகளில் இராணுவத்தின் ஒரு பிரிவினர் நடத்திய கோரமான படுகொலைக்கு முஜிபூர் ரகுமானும் அவர் குடும்பத்தினரும் பலியானார்கள். உலகத்தின் மனசாட்சி குலுங்கியது.

முஜிபுர் ரகுமான் படுகொலை; மன்னிப்பு கிடையாது; மரண தண்டனைதான்.

இப்படுகொலை நடந்த தேதி என்ன தெரியுமா? இந்தியாவின் விடுதலைத் திருநாள். ஆம்; ஆகஸ்டு 15, 1975. டாக்கா நகரில் மூன்று வீடுகளில் வசித்த முஜிபூர் ரகுமானின் குடும்பத்தினர் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இராணுவத்தின் இயந்திரத் துப்பாக்கி ரவைகள் சல்லடைக் கண்களாகத் துளைத்தன தேசத் தந்தையின் குடும்பத் தினர் உடல்களை.

முஜிபூர் ரகுமானின் மகள் - இன்றைய அதிபர் ஷேக் ஹசீனா வெளிநாட்டில் இருந்ததால் உயிர் தப்பினார். முஜிபூர் ரகுமானின் கடைசி மகன், ஹசீனாவின் தம்பி - பத்து வயது நிரம்பிய ரஸ்ஸல் சுட்டுப் பொசுக்கப் பட்டான். இராணுவ மிருகங்கள் அப்பச்சை மதலையையும் பலியாக்கின. இக்கொடிய படுகொலை செய்த மாபாவிகள் வங்க தேசம் அமைத்துள்ள பன்னாட்டு நீதிமன்றத்தின் கூண்டில் நிறுத்தப்பட்டு விசாரணை நடந்தது; மரண தண்டனை விதிக்கப்பட்டது; கொலைகாரர்கள் தப்ப முடியவில்லை.

2015-இல் குற்ற இயல் தீர்ப்பாயத்தில் என் தந்தை வங்கதேசத்தில் சட்ட சபை சபாநாயகராக இருந்தவர். விடுதலைப் போரின்போது மாணவராக இருந்தார். அவரை மன்னித்து விட்டு விடுங்கள்,” என்ற வாதத்தை தீர்ப்பு ஆயம் ஏற்கவில்லை. தனது 172 பக்கத் தீர்ப்பில், “பாகிஸ்தான் தேசியக் கட்சியின் அமைச்சராகவும், ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த சலாவுதீன் குவாதிர் சௌத்ரி மீது 41 சாட்சிகள் குற்றங்களைக் கூறியுள்ளனர். 200 இந்துக்கள் படுகொலைக்குக் காரணமானவர்எனக் குற்றம் நிரூபிக்கப்பட்டது எனக் கூறி மரண தண்டனையை உறுதி செய்தது. 2015-இல் அவர் தூக்கில் இடப்பட்டார்.

பாகிஸ்தான் அரசு தான் நடத்திய இனப் படுகொலையைக் கடைசி வரை மறுத்தது. 2002-ஆம் ஆண்டு டாக்காவுக்குச் சென்ற பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷ்ரப் சில மீறுதல்கள் நடந்து விட்டன. பழையனவற்றை மறப் போம்என்றார். ஆனால் வங்க தேசம் ஏற்கவில்லை.

“1975-இல் அதிபர் முஜிபூர் ரகுமானின் பத்து வயதுப் பாலகன் ரஸ்ஸல் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டான். இருபது முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் குற்ற வாளிகள் கூண்டில் நிறுத்தப்பட்டு முக்கியமானவர்கள் தூக்குக்கயிற்றில் தொங்க விடப்பட்டனர்.

ஸ்ஸல் சிந்திய இரத்தத் துளிகளை அவர்கள் மறக்கவும் இல்லை; கொடியோரை மன்னிக்கவும் இல்லை.

மனிதகுல மனசாட்சியின் முன் நாம் எழுப்பும் கேள்வியும் அதுதான்.

எப்போது கணக்குத் தீர்ப்போம்?

எட்டுத் தமிழ் இளைஞர்களைச் சிங்கள இராணுவம் கைகளைப் பின்புறமாகக் கட்டி, கண்களைக் கட்டி, நிர்வாண நிலையில் இழுத்து வந்து கால்களால் மிதித்து மண்டியிட்டு அமர வைத்து உச்சந்தலையில் சுட்டு, கபாலம் சிதற இரத்தம் பீறிட்டு அடிக்க உடல்கள் துடிக்கத் துடிக்கக் கொன்ற சிங்களப் பாவிகளுக்குத் தண்டனை தரும் நாள் என்று வரும்?

ஈழத்தமிழ் மகள், யாழிசைக்கும் வல்லபி இசைப்பிரியாவை 16 சிங்கள இராணுவ மிருகங்கள் குதறி நாசப் படுத்தி (வார்த்தைகளால் விவரிக்க இயல வில்லை என்று சேனல் 4 - ஒலிப்பதி வாளர் கூறினார்.) கற்பழித்து சின்னா பின்னமாக்கிக் கொன்று நிர்வாண உடலை மண்ணில் வீசிய கொடூரத்தைச் செய்த அரக்கர்களுக்குத் தண்டனை தரும் நாள் என்று வரும்?

ஒன்றரை இலட்சம் தமிழர்கள் - ஆயுதம் ஏந்தாத அப்பாவிகளை - வயதில் முதிர்ந்தோரை - தாய்மார்களை - சின்னஞ்சிறு பிள்ளைகளை - கர்ப்பிணிப் பெண்களை - மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோரை -- குண்டு வீசியும், செல் அடித்தும் கொன்று குவித்தார்களே, இந்த இனப் படுகொலைக்குக் கணக்குத் தீர்க்கும் நாள் என்று வரும்?

நமது தேசியத் தலைவரின் தலைமகன் சார்லஸ் அந்தோணி, போர் முனையில் முன்னின்று மார்பில் குண்டுகள் பாய்ந்து மடிந்தாரே!

தலைவரின் தந்தையார் வேலுப்பிள்ளை, இராணுவ முகாமில் வதைபட்டு மடிந்தாரே!

அவரது அருமை அன்னையார் மரண வாசலில் நின்றபோது சிகிச்சை பெறத் தமிழகம் வந்த அந்த அன்புத் தாயை, தமிழ்நாட்டில் கால்படக் கூடாது என்று திருப்பி அனுப்பச் செய்த அன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் துரோகத்தை இன உணர்வுள்ளோர் மறந்திடக் கூடாது என்றுதான் நான் சிறைக்கு வந்தேன்.

அந்த வீரத்தாய் யாழ் மருத்துவமனை யிலேயே மடிந்தார்.

மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம்

தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வன் 9 வயது பாலகன் பாலச்சந்திரனின் விழிகளை மனக் கண்ணில் கொண்டு வாருங்கள் ஒரு கணம். இதயம் துடிப்பைச் சில வினாடிகள் நிறுத்திக் கொள்ளும். தீர்க்கமான விழிகள். வீரமும் ஒளியும் நிறைந்த பார்வை. அக்கண்கள் ஆயிரம் வீரக் கதைகளைச் சொல்லுமே! அப்பிள்ளையின் கண் முன்னாலேயே அவனின் மெய்க்காவலர்களான ஐந்து விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர். அந்தப் பிள்ளையின் நெஞ்சம் தன் உயிரைப் பற்றி அஞ்சி இருக்காது. பிரபாகரனின் இரத்தம் அல்லவா? அந்த ஐவருக்காகத் துடிதுடித்து நடுங்கி இருக்கும். பின்னர் அந்த வீரப் பிள்ளையின் மார்பில் ஐந்து தோட்டாக்கள் பாய்ந்தன; இரத்தத் துளிகள் அம்மண்ணில் சிதறின.

அந்தக் குருதித் துளிகளை மறக்க மாட்டோம். இக்கோரமான இனப் படுகொலை செய்த சிங்களக் கொடியோரை அதற்கு முழுமுதற் காரணமான அன்றைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசை, அதில் பங்கேற்ற தி.மு.க.வை, தமிழ் நாட்டில் கோலோச்சிய கலைஞர் கருணாநிதியை ஒருக்காலும் மன்னிக்க மாட்டோம்.

ஈழத் தமிழ் இனப் படுகொலைக் குற்றவாளிகளைச் சர்வதேசக் குற்றக் கூண்டில் நிறுத்தும் காலம் வரவேண்டும்; வரச் செய்ய வேண்டும். அவ்வீரர்கள் சிந்திய இரத்தத் துளிகள் மீது ஆணை. சுதந்திரத் தமிழ் ஈழம் அமைக்கப் பொது வாக்கெடுப்பு நடத்தச் சூளுரைப்போம்.

(நேர்காணலில் நான் சொல்லச் சொல்ல செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கோ.நன்மாறன் இம்மடலை எழுதிக் கொண்டார்.)

எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!

பாசமுடன்,

வைகோ

சங்கொலி, 28.04.2017

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)