அண்ணாவின் இயக்கத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தார்; ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார்! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் வைகோ புகழாரம்!

Issues: Human Rights, Law & Order, National, Politics, Poverty

Region: Tamil Nadu

Category: Articles, Headlines

Date: 
Fri, 14/04/2017

 

 

 

 

 

 

அண்ணாவின் இயக்கத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தார்; ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் வைகோ புகழாரம்!

ண்ணாவின் இயக்கத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தார்; ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார்! என்று 30.03.2017 சென்னை காமராசர் அரங்கத்தில் நடைபெற்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:

வெள்ளிப் பனிமூடிய இமயக் கொடுமுடியில் இருந்து அலைகள் துள்ளிக் கும்மாளமிடும் குமரித் திருவடி வரையிலும் பரவியுள்ள தமிழர்கள் மட்டும் அல்ல; இந்த அகிலத்தின் அனைத்துக் கண்டங்களிலும் உள்ள நாடுகளில் வாழுகின்ற பத்துக் கோடித் தமிழர்களின் இதயத்தில் தங்கச் சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கின்ற, காலத்தால் அழியாத புகழைப் பெற்ற பொன்மனச் செம்மல் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழா.

பழநிமலை பேகன், பரம்புமலைப் பாரி, கொல்லிமலை ஓரி, குதிரை மலை அதியமான், முதிரை மலைக் குமணன், பொதிய மலை ஆய், கோடை மலை வேட்டுவன் போல் வாரிக்கொடுத்துச் சிவந்த கரங்களால் வள்ளல்களுக்கு எல்லாம் வள்ளலாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர்., அவர்களின் நூற்றாண்டு விழா.

பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோருடைய நினைவிடங்களுக்குச் சென்று மலர்வளையம் வைத்து விட்டு, அவர் வாழ்ந்த இராமாவரம் தோட்டத்துக்குச் சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, அந்த இல்லத்திற்கு உள்ளே நுழைந்து அவர் வாழ்ந்த இடங்களைப் பார்த்துவிட்டு, அண்ணாசாலையில் இருக்கின்ற புரட்சித்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வருவதால், நான் வாசலில் இருந்து வரவேற்க வேண்டிய பலர் வந்ததற்குப் பிறகு நான் வரவேண்டிய தாமதம் ஏற்பட்டு விட்டது.

தான் உயிரினும் மேலாகப் போற்றிய பேரறிஞர் அண்ணா நிறுவிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் இருவண்ணக் கொடியை, தானே தயாரித்துத் தானே இயக்கி நடித்த நாடோடி மன்னன்திரைப்படத்தில் முகப்பு இலச்சினையாகக் காட்டிய தலைவரின் அந்த வீர காவியத்தில், இடைவேளைக்குப் பின்னர் கழுகு குகை கொண்ட கன்னித் தீவு அரண்மனையில், காணாமல் போன இளவரசி ரத்னாவைத் தேடி வருகின்ற வீராங்கன், அந்தப் பெயரை உச்சரிப்பதற்கான அடையாளத்தை மெய்க்காப்பாளன் கூறியதால் அந்த அடையாளத்தைக் கண்டு கொண்டு அழைக்க, செந்தாமரை மலர் போன்ற புன்முறுவலோடு திரும்பிப் பார்க்கின்ற இளவரசி ரத்னாவாகத் தன் ஒளிமுகத்தைக் காட்டி ரசிகர்களை ஈர்த்தவரும், இன்று இந்த நிகழ்ச்சியிலே திரையிட்டோமே, ‘கண்ணில் வந்து மின்னல் போல் காணுதேஎன்ற அந்தக் கனவுக் காட்சிப் பாடலில் அழகான நடிப்பால் ஈர்த்தவரும்,

மக்கள் திலகத்தின் கலையுலக வாழ்வில் சறுக்கல் ஏற்பட்டுவிடும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் திருடாதேபடம் திருப்பத்தைத் தந்தது எனில், சாண்டோ எம்.எம்.. சின்னப்பாதேவர் எடுத்த தாய் சொல்லை தட்டாதேபடம், எந்த வடிவத்திலும், எந்தத் தோற்றத்திலும், எந்தப் பாத்திரத்திலும் மக்கள் திலகத்தால் ஜொலிக்க முடியும், ஜெயிக்க முடியும் என்று உறுதி செய்ததே அத்தகைய சாதனைப் படங்களிலே அவருக்கு இணையாக நடித்துப் புகழ் பெற்ற மதிப்பிற்குரிய சரோஜாதேவி அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து நம்மை எல்லாம் பெருமைப்படுத்தி இருக்கின்றார்கள்.

எனக்கு அவர் அதிகமாகப் பழக்கம் கிடையாது. இதற்கு முன்பு ஒரே முறை சந்தித்த நிகழ்வுதான். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு நீங்கள் வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டபோது, அவர் சொன்னது ஒன்றுதான்; நினைவாற்றலோடு சொன்னார்:

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களுடைய அஞ்சல் தலை வெளியீட்டு விழாவுக்கு பிரமோத் மகாஜன் அவர்களையும், அகில இந்திய நட்சத்திரங்களையும் அழைத்து வந்து நீங்கள் நடத்திய போது, அந்த நிகழ்ச்சியில் உங்களைச் சந்தித்தேன். அதன் பிறகு இன்று எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவுக்கு அழைக்கின்றீர்கள். கலைஞர்களை மதிக்கின்ற மனிதராகத் தமிழ்நாட்டில் உங்களைத்தான் பார்க்கின்றேன். நீங்கள் அழைக்கின்ற நாள் யுகாதித் திருவிழாவை மூன்று நாட்கள் கொண்டாடுவதற்காக நான் கர்நாடகத்திலே இருக்க வேண்டிய அவசியம் இருந்தாலும், நான் தெய்வமாகக் கருதுகின்ற எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா என்பதால் கட்டாயம் வருகிறேன்

என ஒப்புக்கொண்டு இங்கே வந்து பங்கேற்று இருக்கின்றார்கள். அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பண்பாளர் பழநி பெரியசாமி

மக்கள் திலகம் மிகமிக நேசித்த ஒருவர் மட்டும் அல்ல, அவர் மனம் மகிழ்ந்தால் போதும் என்பதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்காதவராக, நான் படித்த மாநிலக் கல்லூரியில் படித்து, மாணவர் பேரவைத் தலைவராக இருந்து பொருளாதாரத்திலே தங்க மெடல் பெற்று, அன்றைக்கு அமெரிக்காவில் படிக்கச் செல்வதற்கு ரிசர்வ் வங்கி கொண்டு வந்த விதிகளுக்குக் கட்டுப்பட்டுக் கடன் பெற்று, அமெரிக்கப் பல்கலைக் கழகத்திலே சேர்ந்து படித்து அங்கேயே பணியில் சேர்ந்து, அதிக ஊதியம் கிடைத்ததால் வாங்கிய பணத்தைச் சொன்ன தவணைக்கு முன்னதாகவே ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்தவர்;

இப்படிப்பட்ட இந்தியர்களும் வெளிநாட்டுக்கு சென்று பணத்தை அனுப்புகின்றார்கள் என்று சொல்லி, ரிசர்வ் வங்கி அதை நோட்டிஸ் போர்டில் எடுத்துப் போட்டு விளம்பரம் செய்த பெருமைக்கு உரியவர்; தமிழ்நாடு பவுண்டேசன் அமைத்துத் தமிழுக்குத் தொண்டு ஆற்றியவர்;

84 ஆம் ஆண்டு ஈழத்தமிழர் மாநாட்டுக்கு சென்றபோது அவரது இல்லத்திலே தங்க வைத்து உபசரித்து, பால்டிமோரில் இருந்து என்னை வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அரசின் உள் துறை அலுவலகத்திற்கு (State Department) அழைத்துச் சென்று, ஆசியப் பிரிவு அதிகாரிகளை அங்கே நான் சந்திப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அன்புச் சகோதரர்;

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மூன்றாவது முறை முதல்வரானபோது, பொருளாதார மேதையாகத் திகழ்கின்ற பழனி பெரியசாமிதான் தொழில் அமைச்சராக வர வேண்டும் என்று நான்கு மாத காலமாக அந்தத் துறைக்கு வேறு எவரையும் நியமிக்காமல் வைத்து இருந்து, அவரை அழைத்துக் கூறியபோது,

உங்கள் அன்பு ஒன்றே எனக்குப் போதும்; அருகில் இருக்கின்றேன்; அமைச்சராக மாட்டேன்என்று மறுதலித்தவர் என்பதனால் என் மனதிலே மிக உயர்ந்த மதிப்பைப் பெற்றவர்;

அவரைப் பற்றி எத்தனையோ சம்பவங்களைச் சொல்வதற்கு நேரம் இல்லை, இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு ஆலோசனைகள் சொன்ன பழனி பெரியசாமி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்பே வாதிரைப்படத்தை தந்த ஏ.வி.எம். சரவணன் அவர்களை சந்தித்தபோது, ‘எனக்குச் சற்று உடல் நலக்குறைவு இருக்கின்றது. ஒரு நிகழ்ச்சிக்கு வந்தால் மற்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வேண்டுமே என்கிறபோது, அந்தப் படத்தை இயக்கிய ஏ.சி.திருலோகசந்தர் இல்லை; எனவே, .வி.எம். நிறுவனத்தின் சார்பாக நீங்கள் முத்துராமனை அழையுங்கள்; நானும் அவரிடம் சொல்கிறேன் என்று சொன்னார்கள்; அதன்படியே இயக்குநர் எஸ்.பி.எம் அவர்கள் இங்கே வருகை தந்து சிறப்பித்து இருக் கின்றார்கள்.

இசைக்குயில் சுசீலா

வாழ்நாள் நெடுகிலும் சோதனைகளிலும், போராட்டங்களிலுமே உழன்று கொண்டே இருக்கின்ற எனக்கு ஒரேயொரு பொழுது போக்கு பழைய திரைப்படப் பாடல்களைக் கேட்பதுதான். எனக்கு வேறு பொழுதுபோக்கு எதுவும் கிடையாது. என் அறையில் இரவெல்லாம் பாடிக் கொண்டே இருக்கும்; காலையில் எழுந்து தான் அதை நிறுத்துவேன். என்னுடைய பயணங்களிலும் காரில் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். 30, 40 ஆண்டுக்காலப் பழக்கம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் வெறிபிடித்தவனாக இருக்கின்றாய்; ஆனால் கேட்கும் பாடல்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். பாடல்களாகவே இருக்கின்றதே என்று நண்பர்கள் சொல்வார்கள். பலர் விமர்சிப்பார்கள். அந்தப் பாடல்களில் மானமும், வீரமும், அறமும் இருக்கின்றது அதைத் தான் நான் பார்க்கின்றேன் என்று சொல்லுவேன், வீரப்பாடல்களும், சோகப்பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

சுசீலா அவர்களுடைய கானக் குரலில் பாலும் பழமும்படத்தில் ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்; அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்கே.ஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கிய தெய்வத்தின் தெய்வம்படத்தில் பாட்டுப்பாட வாயெடுத்தேன் ஏலேலோ... என்ற பாடலும், ‘நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லைஉள்ளிட்ட பல பாடல்கள் என் மனம் கவர்ந்தவை.

ஜெமினி நிறுவனத்தின் நூறாவது படமான ஒளி விளக்குபடத்தில் இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு, தலைவா உன் காலடியில் நம்பிக்கையின் ஒளி விளக்குஎன்ற அந்த ஒரு பாடல்தான், 1984 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் அவர்கள் நோயுற்று அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் களத்தில் தமிழகத்தின் பட்டி தொட்டி பட்டினக்கரை என அத்தனை இடங்களிலும் கோடிக்கணக்கான முறை ஒலித்தது; கேட்கும்போதே மக்கள் அழுவார்கள்; அவர் நலம்பெற வேண்டும் என்று விரும்பினார்கள்; இறைவனை வேண்டினார்கள்; அப்படிக் கோடானுகோடி இதயங்களை ஈர்த்த அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான, தனக்கு ஓய்வு தேவைப்படும் வேளையில் கூட இந்த எளியவன் அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்து சிறப்பித்து இருக்கின்ற இசைக்குயில் சுசீலா அம்மையார் அவர்களுக்கு நன்றி.

புலமைப்பித்தனின் உணர்வு

1981 ஆம் ஆண்டு, ஒரு நாள் நள்ளிரவில் டெல்லி மீனாபாக்கில் என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. இரவு 12 மணி இருக்கும். ‘நான் புலமைப் பித்தன் பேசுகிறேன்என்றார். நான் அப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் வெறிபிடித்த தொண்டன். அவர் புரட்சித் தலைவரின் நம்பிக்கைக்குரிய ஒரு தலைவர். அன்றைக்கு உயர்ந்த பதவியில் மேலவையிலும் இருக்கின்றார். முதன் முதலாக அவர்களுடைய குரலை அந்த இரவு வேளையில்தான் கேட்கிறேன்.

தம்பி! ஈழத்தில் நிலைமை மோசமாக இருக்கின்றதப்பா, நான் அமைச்சர் ராஜாராமிடம் கேட்டேன். என்ன செய்யலாம்? என்று. அவர் வை.கோபால்சாமியிடம் பேசுங்கள். நிச்சயமாக இந்தப் பிரச்சனைக்கு ஒரு வழி காட்டுவார் என்று சொன்னார் என்றார்.

எனக்குத்தெரிய என் நண்பன் காளிமுத்துவையும் மிஞ்சுகின்ற நினைவாற்றலை அண்ணன் புலமைப்பித்தன் அவர்களிடம் தான் நான் பார்த்தேன். நான் ஒரு இலக்கிய ரசிகன். அவர் பேசப்பேசக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். பாவேந்தர் பாரதிதாசனில் இருந்து, சங்க இலக்கியப் பாடல்களில் இருந்து அவருக்குரிய நினைவு ஆற்றலைக் கண்டு வியந்து போனேன். அப்படிப்பட்ட உணர்வுள்ளவர் இன்று இங்கே பேசுகையில், ‘என் நெஞ்சுக்கு வாஞ்சையான தம்பிகள் இருவர்: ‘ஒரு தம்பி கடலுக்கு அப்பாலே இருந்து இயக்குபவர். இந்தத் தம்பி இங்கே இருப்பவர்என்றார். அந்த வார்த்தைகளை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்.

அண்ணே, நீங்கள் இங்கே பேசும்போது எனக்குக் கஷ்டமாக இருந்தது. அறிஞர் அண்ணா அவர்கள் கலைவாணர் சிலையை திறந்து வைத்ததற்குப் பிறகு தமிழ்நாடுபெயர் சூட்டு விழாவிற்கு வந்ததைச் சொன்னீர்கள். என் மனம் கனத்தது. மூன்று மாதங்களுக்கு முன்பு உங்கள் வீட்டுக்கு வந்து, நானே உங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்; உலகப்புகழ் பெற்ற ஒரு மருத்துவர் இருக்கின்றாரே, மனிதாபிமானத்திற்கு மட்டுமே மதிப்பு அளித்து காசுக்கு மதிப்பு அளிக்காத ஒரு உலகப் புகழ் பெற்ற ஒரு இருதய நிபுணர் தணிகாசலம் அவர்கள், இன்று இந்த விழாவுக்கும் வருகை தந்து சிறப்பித்து இருக்கின்றார்; அத்தகைய நண்பர்களைத்தான் நான் சம்பாதித்து வைத்து இருக்கின்றேன்.

அரசியலில் நான் எதுவும் சம்பாதிக்கவில்லை. I have earned the wealth of Friends. அப்படிப்பட்ட அந்த நல்ல மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு போனேன். எல்லாச் சோதனைகளும் செய்துவிட்டு, ‘கவலையே படவேண்டாம் என்று சொல்லி மாத்திரைகள் தந்து இருக்கின்றார்கள். நீங்கள் இன்னும் 25 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வீர்கள்.

எதற்காக இந்த விழா?

நான் ஒரு பேச்சாளன். ஆனால் இன்றைக்கு ஒரு பயத்தோடுதான் பேசுகிறேன். ஏன் தெரியுமா? உங்களுக்கெல்லாம் ஓய்வு எடுக்க வேண்டிய நேரம். உறங்கச் செல்ல வேண்டிய நேரம். ஆனாலும் இவர் பேசும்போது எழுந்து போய் விட்டால் மரியாதைக் குறைவாக ஆகிவிடுமோ என்று கருதி அமர்ந்து இருக்கின்றீர்கள்; அதனால் நாம் அதிக நேரம் எடுத்துக் கொள்ளக்கூடாதே என்று கருதி, நான் எவ்வளவோ ஆசைகளோடு பேச வந்தாலும் கூட சற்றுத் தயக்கத்தோடுதான் என் பேச்சையே தொடங்குகின்றேன்.

இந்த நிகழ்ச்சி எந்த அரசியல் நோக்கத்தோடும் நடத்தப்படுவது அல்ல. இது எம்.ஜி.ஆர். விழா. எம்.ஜி.ஆரை மட்டுமே முன் நிறுத்துகின்ற விழா. இந்த வளாகத்தில் எந்த இடத்திலும்கூட என் படம் இருக்கக்கூடாது என்று சொன்னேன். இந்தப் பதாகையிலே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற சொல் இருக்கின்றது. என் பெயரைக் கூடப் பொறிக்க வேண்டாம் என்று தான் சொன்னேன். ஆனால் என் தோழர்கள் கவலைப்பட்டார்கள். எதுவுமே கூடாது என்றால், இது நாம் நடத்துகின்ற நிகழ்ச்சி என்பதை எப்படிக் காட்டுவது? என்று கேட்டார்கள்.

எங்கள் இயக்கத்தின் தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் வந்து இருக்கின்றார்கள். தோழர்கள் அனைவரும் ஒரு மாத காலம் ஓடி ஆடி வேலை பார்த்து இருக்கின்றார்கள்.

எப்படி இளையராஜாவுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை என்கிறபோது நாடாளுமன்றத்தில் சீறினேனோ, சிம்பொனி இசை அமைத்ததற்கான விருது பெற்று வந்தபோது தொலைக்காட்சிகள் இருட்டடிப்பு செய்ததை இந்திய நாடாளுமன்றத்தில் நான் கண்டித்துப் பேசினேனோ, தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் திலகத்திற்குக் கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுக்க வில்லையே என்பதற்காக நாடாளுமன்றத்திலே கொந்தளித்தேனோ, அந்த உணர்வோடுதான் இந்த விழாவை நடத்திக் கொண்டு இருக்கின்றோம்.

பெரியாருக்குப் புகழ் சேர்த்த பொன்மனச்செம்மல்

தந்தை பெரியார் அவர்களின் 86 ஆம் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் பேசினார்கள்:

அய்யா அவர்களைப் பாராட்டிப் பேச எனக்கு வயதும் இல்லை, தகுதியும் இல்லை, அனுபவமும் இல்லை. ஆனால், அய்யா அவர்கள் எங்களுக்குத் தந்த கொள்கை இணைப்பு இருக்கின்றதே, அதனால் நிச்சயமாகப் பாராட்டத் தகுதி படைத்தவன். என் வாழ்க்கையில் இரண்டு தலைவர்களைப் பெற்று இருக்கின்றேன். சமுதாய நிலையிலே அறிஞர் அண்ணா அவர்களைத் தலைவராகக் கொண்டுள்ளேன்.

கலைத்துறையிலே என் பணியைச் செவ்வனே நான் செய்வதற்குக் கலைவாணர் அவர்களைத் தலைவராகக் கொண்டு இருக்கின்றேன். இவர்கள் இருவரையும் எனக்குத் தந்தவர் அய்யா அவர்கள்தான். எனவே, அவரைப் பாராட்டுவதை விட எனக்கு மகிழ்ச்சிக்குரிய வேறு செயலோ, நிலையோ இருக்க முடியாது.

1935-36 இல் கலைவாணர் அவர்கள் என்னிடம், நீ பத்திரிகை படிக்க வேண்டும். அதுவும் சாதாரணப் பத்திரிகை படித்தால் போதாது; உன்னை மனிதனாக்கக்கூடிய பத்திரிகை படி என்று சொல்லி, குடி அரசு பத்திரிகையைத்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார்.

நான் பலமுறை அண்ணா அவர்களிடம் பேசியது உண்டு. நான் கவலைப்படும் நேரத்தில் ஒரே ஒரு எச்சரிக்கையை அவர் சொல்வது உண்டு. ‘நீ அய்யா அவர்களைப் பார். அவருடைய துணிவை நீ பெற வேண்டும். என்ன நினைக்கின்றாயோ அதைச் சொல். அதனால் வரும் துன்பங்களை ஏற்றுக் கொள்ள நீ தயாராகி விடு. நீ மனிதனாகி விடுவாய் என்று சொல்வார்கள்.

பெரியார் என்பது ஒரு தனி மனிதரின் பெயர் அல்ல. ஒரு நாட்டின் நூற்றாண்டு வரலாறு. மனித சமுதாயத்தின் மகத்தான தத்துவம். உலகில் தோன்றி மறையும் கோடானுகோடி மனிதர்களுள், மிகச்சிலரே இப்படி வரலாறாக, வாழ்க்கையின் தத்துவமாக வாழ்ந்து மறைகின்றனர் என்று சொன்னார்.

அந்தப் பகுத்தறிவுப் பகலவனுக்கு, வாழ்நாளெல்லாம் நமது நல்வாழ்வுக்காகப் போராடிய அந்தப் அந்த மாவீரனுக்குத் தமிழகம் முழுவதும் நூற்றாண்டு விழா கொண்டாடினார்.

பெரியாரின் நூற்றாண்டு விழாவில் அவர் சொல்கிறார்:

அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் பெரியாருக்கு காணிக்கை என்றார் இந்த அரசு, அண்ணா காணிக்கையாக்கிய அரசு, இன்று நடப்பதும் அண்ணாவின் அரசு. ஆகவே தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழாவைச் சென்னையில் மட்டும் அல்ல தமிழகம் முழுக்க நடத்துவோம். பெரியாரின் தமிழ் எழுத்துகள் சீர்திருத்தத்தை நாங்கள் சட்ட மாக்குவோம்

என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் கூறினார்கள்.அப்படியே செய்து காட்டினார்கள்.

அண்ணாவின் கணிப்பு

அறிஞர் அண்ணா அவர்கள், “எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் நமக்கும் ஏற்பட்ட உறவு சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்டது அல்ல, சிலர் ஊக்குவித்து வந்தது அல்ல, பாச உணர்வுகளின் பிணைப்பாக ஏற்பட்ட உணர்வு. திமுக கழகம் அவரை இழப்பதோ, அவர் திமு கழகத்தைத் துறப்பதோ நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்று எழுதினார்.

எங்கள் வீட்டுப் பிள்ளைதிரைப்படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், அறிஞர் அண்ணா அவர்கள் பேசும்போது, ‘எம்.ஜி.ஆரின் வெற்றிக்குக் காரணமானதை ஆராயச் சிலர் நினைக்கலாம். அது முடியாது. மயில் தோகைக்கு அழகு தருவது நீல வண்ணமா, பச்சை வண்ணமா, மஞ்சள் வண்ணமா, பொன்னிற வண்ணமா என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டால் எப்படி முடியாதோ, அதைப்போலத்தான் எம்.ஜி.ஆர். அவர்களின் வெற்றிக்குக் காரணங்களை ஆராய முடியாது. அவர் எந்தத் துறையிலும் வெற்றிக்கொடி நாட்டுவார். அவர் ஒரு கதை ஆசிரியராக, ஒரு இயக்குனராக, ஒரு இசை அமைப்பாளராக கலைத்துறையில் எந்தத் துறையில் இருந்தாலும் அவர் வெற்றியை நாட்டுவார். ஏன்? அவர் அரசியல் துறைக்கு வந்தாலும் நிகரற்ற வெற்றியை நாட்டுவார்

என்று அறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்கள்.

பொருத்தமாகச் சொன்னார் ராஜாஜி

அந்த எம்.ஜி.ஆர்., அவர்கள் 1972 அக்டோபர் 10 ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது புற்றுநோயில் சிக்கிய என் தந்தையை வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்த்து விட்டுச் சென்னைக்கு வந்தேன். சேப்பாக்கம் கெஸ்ட் ஹவுஸ் வாசலிலே நானும், என் நண்பர் சண்முகசுந்தரமும் காத்துக் கிடக்கின்றோம். நாவலர் வெளியே வருகிறார்: ‘எம்.ஜி.ஆரை நீக்கி விட்டோம்என்கிறார்.

தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது எனக்கு. இவ்வளவு ஒரு பெரிய தலைவனை இழக்க நேரிட்டுவிட்டதே என்று கருதுகின்ற நேரத்தில், மூதறிஞர் ராஜாஜி சொன்னார், துணிச்சலாகச் சொன்னார். ஒரு கட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே பேசிய அவர் சொன்னார்:

எம்.ஜி.ஆரை நீக்கியது திமுகவில் இருந்து அண்ணாவை நீக்கியதுபோல. அர்ஜூனன் போல் நிற்கிறார் எம்.ஜி.ஆர். எல்லோரும் அவருக்கு ஆதரவாக அணிதிரண்டு வாருங்கள்என்று சொன்னார்.

அவர் இப்படிச் சொல்லக் காரணம் என்ன?

எம்.ஜி.ஆர் கட்சிதானே?

அண்ணா காரில் போய்க்கொண்டு இருக்கின்றார். சி.வி.ராஜகோபால் விகடமாகப் பேசிக்கொண்டே வருகிறார். பொழுது விடிந்து விட்டது. தொழுதூருக்குப் பக்கத்தில் கார் நிற்கின்றது. கருப்பு சிவப்புக் கொடி பறக்கின்றது. முன் இருக்கையில் அண்ணா அமர்ந்து இருக்கின்றார். ஓட்டுநரிடம், ‘நீ டீ சாப்பிட்டுவிட்டு எங்களுக்கும் வாங்கிக் கொண்டு வாஎன்று சொல்லி அனுப்புகின்றார்.

பொழுது விடிந்து வேலைக்குச் செல்கின்ற பெண்கள் வருகின்றார்கள். கருப்பு சிவப்புக் கொடியைப் பார்த்துவிட்டுக் காரைச் சுற்றிக்கொள்கிறார்கள். முன் இருக்கையில் உட்கார்ந்து இருக்கின்ற அண்ணாவை அவர்களுக்கு அடையாளம் தெரிய வில்லை. அண்ணாவிடமே அவர்கள் கேட்கின்றார்கள். ‘எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா? எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா?’ என்று அத்தனைப் பெண்களும் ஆர்வத்துடன் கேட்கின்றார்கள்.

இல்லயம்மா, எம்.ஜி.ஆர். வரவில்லைஎன்கிறார். ‘இது எம்.ஜி.ஆர். கட்சிதானே?’ என்று கேட்கிறார்கள். ‘ஆமாம்மாஎன்கிறார் அண்ணா.

சி.வி.ராஜகோபாலுக்குக் கோபம் வந்துவிட்டது. அந்தப் பெண்கள் சென்றவுடன், ‘என்னண்ணா இது? உங்ககிட்டயே வந்து எம்.ஜி.ஆர். இருக்கின்றாரா? இது எம்ஜிஆர் கட்சிதானே என்று கேட்கிறார்களே?’ என்கிறார்.

பைத்தியக்காரா இந்த மக்களிடம் நம்ம கட்சியைக் கொண்டு சேர்க்கிறதே எம்.ஜி.ஆர்.தான்என்று சொல்கிறார் அண்ணா.

மனம் விட்டுச் சொல்கிறேன்

நான் அரசியலுக்கு வந்து 53 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிகழ்ச்சியை எப்படி ஏற்பாடு செய்தேன் தெரியுமா? மூன்று மாதங்களுக்கு முன்பு என் மேலாளர் ருத்ரனை விட்டு இந்த இடத்தை முன்பதிவு செய்தேன். ‘வைகோ பொதுவாழ்வுப் பொன்விழாஎன்று சொல்லித்தான் ஏற்பாடு செய்தேன். ஒரு வாரத்திற்கு முன்புதான் இது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாஎன்று சொன்னேன்.

நான் அரசியல் பொன்விழா கொண்டாடப் போவது கிடையாது. எனக்கென்று எந்த ஒரு விழாவும் நடத்தப்போவது கிடையாது. அதனால் எங்கள் கட்சித் தோழர்கள் வருத்தப்படலாம்.

இந்த அரங்கத்திற்கு உள்ளே நுழைகின்ற இடத்தில் நிலை வாயிலுக்கு மேலே ஒரு படம் இருக்கின்றது. அன்றைய தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராவன்னா கிருஷ்ணசாமி நாயுடு சைக்கிள் ஓட்டுகிறார். பின் இருக்கையிலே காமராசர் பெட்ரோ மாக்ஸ் லைட்டைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கின்றார். அந்த இராவன்னா கிருஷ்ணசாமி நாயுடு அவர்களுடைய கொள்ளுப் பேத்தியைத் தான் கடந்த மாதம் என் தம்பி ரவிச்சந்திரன் மூன்றாவது மகன் மகேந்திர வையாபுரிக்குத் திருமணம் செய்து இருக்கின்றோம்.

நானும் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். கல்கியின் படைப்புகளைப் படித்ததால் ஏற்பட்ட தமிழ் உணர்வால், அண்ணாவின் எழுத்தால், பேச்சால் திராவிட இயக்கத்திற்கு வந்து சேர்ந்தேன். 53 ஆண்டுகள் ஆகின்றன. 5 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறேன். இன்றைக்குக் கடுமையான நிந்தனைகளுக்கும், ஏளனங்களுக்கும், பரிகாசங்களுக்கும் நான் ஆளாக்கப்பட்டு இருக்கின்றேன். ஆனால், பெரியாரின் சுயமரியாதை, அண்ணாவின் தாயக விடுதலை உணர்ச்சி என் நாடி நரம்புகளிலே நீக்கமற நிறைந்து இருக்கின்றது.

நான் மனம் விட்டுச் சொல்கிறேன். கோடானுகோடி மக்கள் இதயங்களில் அண்ணாவின் இயக்கத்தை ஒளிச்சுடராக ஆக்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்பதை யாராலும் மறுக்க முடியாது. நான் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தெரிந்து கொள்ள, வன்னிக்காட்டிலே தலைவர் பிரபாகரன் சொல்லச் சொல்லக் கேட்டு வியந்து போனேன். அதனால்தான் அரசியல் துளி நோக்கம் இல்லாமல் இந்த விழாவை நான் நடத்துகிறேன். இதனால் எனக்கு அரசியலிலே ஏதாவது ஒரு சதவீதம் வாய்ப்புக் கூடிவிடுமோ என்று தப்புக்கணக்கு போடுகின்ற அளவுக்கு நான் அரசியல் அறியாதவன் அல்ல.

ஈழத்தமிழர்கள் நாதியற்றுக் கிடந்தபோது அவர்களுக்கு வாழ்வு அளித்த தலைவர் எம்.ஜி.ஆர் என்ற காரணத்திற்காக நடத்துகின்றேன்.

வழிகாட்டும் கவிதை

2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது நரேந்திர மோடி அவர்களை ஆதரித்தேன். எல்லோரும் விமர்சித்தார்கள். இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொலை செய்த ராஜபக்சேவைப் பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்கிறார் என்றபோது, அவரிடம் போய்ச் சொன்னேன். ‘நாளை மாலையில் சூரியன் மறைவதற்குள், உங்கள் முடிவை நீங்கள் மாற்றிக் கொள்ளா விட்டால் உங்களுக்குக் கருப்புக் கொடி காட்டிப் போராடுவேன்என்று சொன்னேன். யார் வந்தாலும், வராவிட்டாலும் தன்னந் தனியாக ஜந்தர் மந்தரில் போய்ப் போராடுவேன் என்று அறிவித்தேன்.

தாகூர் எழுதிய கவிதை, இந்திரா காந்தி படித்த கவிதை, அதை வங்க மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு இந்திரா காந்தியே மொழிபெயர்த்து இருக்கின்றார். எனக்கு ரொம்பவும் பிடித்த கவிதை அது.

உன் வழி சரி என்று பட்டால்

உன் கொள்கை உனக்குச் சரி என்று பட்டால்

உன்னுடைய எண்ணம் சரி என்று பட்டால்

நியாயம் என்று உன் மனசாட்சி சொன்னால்

இதனால் உனக்கு எதிர்ப்புகள் வருமானால்

இதற்கு யாரும் ஆதரவு தரமாட்டார்கள் என்றாலும் கூட

நீ தனியாகச் செல்

இது தாகூர் எழுதிய பாடல். இந்திரா காந்திக்குப் பிடித்தமான பாடல். அத்தகைய உணர்வோடுதான் இந்த விழாவை நடத்துகின்றேன்.

வருகை தந்த பெருமக்களுக்கு நன்றி

செய்தியாளர்கள், தொலைக்காட்சி ஊடக நண்பர்கள் வந்திருக்கின்றார்கள். தாய்மார்கள், பெரியோர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டு எம்.ஜி.ஆர்., அண்ணாவை நேசித்த மக்கள் இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புகளான அண்ணா திமுகவின் தொண்டர்கள் வந்திருக்கின்றார்கள். உயர்ந்த பதவியிலே இருந்தவர்கள், எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு உரிய காவல்துறை அதிகாரி டிஜிபி அலெக்ஸாண்டர், அமைச்சராக இருந்த அன்வர் ராஜா உள்ளிட்டோர் வந்திருக்கின்றார்கள். உலகப் புகழ்பெற்ற டாக்டர் தணிகாசலத்தைப் பார்க்கிறேன்.

என் வாழ்க்கையில் இதுபோல இன்னொரு நிகழ்ச்சி அமையப் போவது இல்லை. அதனால் பேசுகிறேன். ஆர்.கே.சண்முகம் அவர்கள் வீட்டுக்குச் சென்று சந்தித்தேன். மூன்று மணி நேரம் என்னிடம் பேசிக் கொண்டு இருந்தார். அவர் சிவாஜியின் படங்களுக்குத் துணை இயக்குனராக இருந்தவர். ஆனால் ஆயிரத்தில் ஒருவன்படத்திற்குக் கதை வசனம் எழுதுவதற்கு அவரை அழைத்துக் கொண்டு போகின்றார்கள். அதிலிருந்து அவர் எம்.ஜி.ஆரின் 15 படங்களுக்குக் கதை வசனம் எழுதினார்.

இன்றைக்குப் பார்த்தாலும் நான் கைக்குட்டையால் கண்களை நனைத்துக் கொள்கின்ற பாசமலர் படம்; கே.பி.கொட்டாரக்கரா எழுதிய கதைக்குத் திரைக்கதை வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். சிவாஜியின் 25 படங்களுக்குக் கதை வசனம் எழுதி இருக்கின்றார். அவரை எம்.ஜி.ஆரிடம் அழைத்துக் கொண்டு போனார்கள். வாய்ப்புக் கிடைக்குமோ கிடைக்காதோ என்று கருதினார்கள். ஆனால் எடுத்த எடுப்பிலே அவரை எம்.ஜி.ஆருக்குப் பிடித்துப் போயிற்று. எம்.ஜி.ஆரின் 28 படங்களுக்கு அவர் கதை வசனம் எழுதி இருக்கின்றார். அவருக்கு உடல் நலம் சற்றுக் குறைவாக இருக்கின்ற நிலையிலும், நல்லி சின்னசாமி செட்டியார் அவர்கள் இங்கே அழைத்துக் கொண்டு வந்திருக்கின்றார்கள்.

முதல்வர் எம்.ஜி.ஆரின் அரசுச் செயலர்களாகப் பொறுப்பு வகித்த மூன்று ஐ..ஸ். அதிகாரிகள் வரதராஜன் அவர்கள், பிச்சாண்டி அவர்கள், சம்பத் அவர்கள் வந்திருக்கின்றார்கள். எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்வோடு ஒன்றிப் போன மாணிக்கம், சமையல் கலைஞர் மணி, எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன், எம்.ஜி.ஆரின் பாதுகாப்பு அதிகாரி சங்கரசுப்பு, விசுவாசமான உதவியாளர் மகாலிங்கம் அனைவரையுமே இங்கே அழைத்து வந்து சிறப்புச் செய்து இருக்கின்றோம். எம்.ஜி.ஆரின் அத்துணைப் படங்களுக்கும் ஒப்பனை செய்து அழகுத் திருமகனாகக் காட்டினாரே ஒப்பனைக் கலைஞர் பீதாம்பரம் அன்பு மகனும், வெற்றிப் படங்களின் இயக்குனருமான பி.வாசு அவர்கள் வந்திருக்கின்றார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் ஈழவாளேந்தி பொறியாளர் செந்திலதிபன் இந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். எல்லோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாடோடி மன்னன்

இந்த நிகழ்ச்சிக்காகக் கடந்த 15 நாட்களில், எம்.ஜி.ஆருடைய கலையுலக வாழ்க்கையைப் பற்றிய 40 புத்தகங்களைப் படித்தேன். ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்ற அவரது சுயசரிதை நூலை ஏற்கனவே படித்து இருக்கின்றேன். யாரெல்லாம் அவரைப் பற்றி எழுதி இருக்கின்றார்களோ அதையெல்லாம் தேடிப்பிடித்துப் படித்தேன். மெய்சிலிர்த்துப் போனேன்.

நாடோடி மன்னன்படம். எடுத்த உடனேயே டிஎம்எஸ்சின் கணீரென்ற குரலில் செந்தமிழே வணக்கம்என்கிற பாடல் ஒலிக்கிறது. ‘பாச மலரைப் பார்த்ததைப் போல எத்தனையோ முறை நாடோடி மன்னன்படம் பார்த்து இருக்கிறேன். அதில் ஒவ்வொரு காட்சியும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

இந்தப் படத்தை எப்படித் தயாரித் தார்கள்?

நாடோடி மன்னன் படத்துக்கான கனவு 20 வயதிலேயே எம்.ஜி.ஆரின் மனதில் கருக்கொண்டது. அவர் எழுதுகிறார்: 1937-38 கொல்கத்தாவில் மாயா மச்சீந்திரா படப்பிடிப்புக்குச் சென்று இருந்தேன். அங்கே நண்பர்களோடு If were a King? என்ற ஆங்கிலப்படத்தைப் பார்த்தேன். ரோனால்ட் கால்மன் என்ற பிரபல நடிகர் நடிதத படம். அதில் நான் மன்னனானால்.....என்று அவர் பேசுகிறார். அந்தக் கருத்து என் மனதில் அப்போதே பதிந்தது. அப்படி நானும் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பேன். நான் மன்னனானால்.....

நாடோடி மன்னனைத் தயாரிக்கத் தொடங்கியபோது, எங்கள் விளம்பரத்தில் ஜெண்டாவின் கைதி (Prisoner of Jendah) என்ற ஆங்கிலக் கதையின் தழுவல் என்று வெளியிடப்பட்டது. இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, பரணி பிக்சர்சாரின் விளம்பரமும் வந்தது. அப்போது, பானுமதி அவர்கள் தொடர்பு கொண்டார்கள். ‘நாங்கள் எடுக்கும் கதையையே நீங்களும் எடுக்கப் போகின்றீர்களாமே? நாங்கள் பல மாதங்களாகச் செலவு செய்து எல்லாமே தயாராகி விட்டன நமக்குள் போட்டி வேண்டாம். உங்கள் கதையை மாற்றிக் கொள்ளுங்கள்என்றார்.

நான் சொன்னேன்:

நான் பல ஆண்டுகளாக உருவாக்கி வந்த உருவம் இது. எனது வாழ்வில் ஒரு திருப்பத்தை விரும்பி அதற்காக இந்தக் கதையைத் தேர்ந்து எடுத்தேன். நானே இயக்கப் போகிறேன். ஜெண்டாவின் கைதியில் உள்ள மன்னன் மாற்றப்படும் காட்சியை மட்டும்தான் வைத்துக் கொள்ளப் போகிறேன். மற்றவை எல்லாமே வேறாகத்தானிருக்கும். உங்கள் கதை ஜெண்டாவின் கைதியின் நேர்ப்பதிப்பு. என் கதை வேறு.

அந்தப் படத்தில் அந்த மன்னனின் மனைவியோடு போலியானவன் காதல் உறவாடுகிறான். பின்னர் உண்மைத் தெரிந்து அவள் விலகுகிறபொழுது அவள் அந்த தாம்பத்யத்தில் இருந்து விலக முடியாமல் இருக்கிறாள். இதுதான் பிரிசினர் ஆப் ஜண்டாவினுடைய கதை.

அதுமட்டும் அல்ல. அந்தக் கதையில் அவர்கள் இரண்டு பேரும் உறவினர்கள். நான் தயாரிக்கும் படத்தில் நாடோடி வேறு மன்னன் வேறு. மன்னனைப் போன்ற தோற்றத்தில் இருக்கின்ற நாடோடியைக் கணவன் என்று அரசி கருதுகின்ற இடத்தில், அவளைத் தன் தங்கையாகக் கருதி நாடோடி தூர விலகிச் செல்கிறான். இப்படிக் கதை அமைப்பையே மாற்றி இருக்கின்றேன் நமக்குள் போட்டியே வராது. நீங்களும் எடுங்கள் என்றேன்.

பிறகு அவர் அந்தப் படத் தயாரிப்பைக் கைவிட்டார். அத்துடன் தன்னிடம் இருக்கும் கதையைத் தருவதாகவும், திரு ஏ.கே. வேலன் அவர்கள்தான் கதை வசனம் எழுதி இருப்பதாகவும், அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சொன்ன பெருந்தன்மையை எவ்வளவு தான் போற்றினாலும் போதாது என்று எழுதுகிறார்.

அந்தக் காலத்திலேயே ஏழ்மையைப் பற்றியும், மக்களின் நிலையைப் பற்றியும் சிந்தித்தவன் நான். சிந்தித்தவன் என்பதை விட, அதை அனுபவித்துக் கொண்டு இருந்தவன் என்பதே பொருந்தும். அந்தக் கருத்தில்தான் நாடோடி கதாபாத்திரத்தை உருவாக் கினேன்.

படத்தில் பாடல்களில் மிகுந்த கவனம் செலுத்தினோம். படத்தின் துவக்கத்தில் பாடப்படும் செந்தமிழே வணக்கம்என்ற பாடல் எங்களது நாடக மன்றத்தின் அட்வகேட் அமரன்என்ற நாடகத்தின் துவக்கத்தில் பாடப்படும் பாடல். .மா. முத்துக் கூத்தன் இயற்றியது. பசி வந்தாலும், பறவை போலப் பகிர்ந்தே உண்ணலாம் என்ற கருத்தோடு ஒரு பாடல்.

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்பக் காவியக் கலையே ஓவியமேஎன்ற உவமைக் கவிஞர் சுரதாவின் பாடலில், ‘நீலவானம் இல்லாத ஊரே இல்லை உலகினில் மழை இன்றி ஏதும் இல்லைஎன்ற அவரது கவிநயத்துக்கு ஈடு ஏது?

என் இன்பம் எங்கே?’ என்ற பாடல் தலைவி தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் இடம் ஆகும். கதையோடும், பாத்திரத்தோடும் இணைந்து வெளிவரும் வார்த்தைகளாக அதில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது என்று எம்.ஜி.ஆர். விரிவாக எழுதி இருக்கின்றார்.

நான் ஒரு கலா ரசிகன். நான் தொகுத்து இன்று இங்கே காண்பித்ததில், எனக்குப் பிடித்தமான காட்சிகளைப் பதிவு செய்து இருக்கின்றேன். நாடோடி மன்னன் வெளியான போது மொத்தம் 4 மணி நேரம் ஓடியது. இப்போது மூன்று மணி நேரம் கூட ஓடவில்லை. எராளமான காட்சிகளைக் காணவில்லை. கத்தரித்து விட்டார்கள். வேட்டை மண்டபத்துச் சண்டை அற்புதமான காட்சி. அதில் பாதியை கட் செய்து விட்டார்கள். இங்கே இயக்குநர் வாசு இருக்கின்றார். 4 மணி நேரம் ஓடுகின்ற முழுப்படம் எனக்குக் கிடைக்க எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள்.

என்னுடைய பொழுதுபோக்கு இசையும், படமும்

எழுச்சி நடைப்பயணம், மறுமலர்ச்சி நடைப்பயணம், மதுவிலக்கு நடைப்பயணம் எனத் தமிழகம் முழுவதும் நான் ஒரு ஐயாயிரம் கிலோ மீட்டர்கள் நடந்து இருக்கின்றேன். அப்போதெல்லாம் என் களைப்பைப் போக்குகின்ற பாடல்கள், முன்னே செல்கின்ற வண்டியில் இருந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். அப்படிக் கார் பயணங்களிலும் சேர்த்து, பத்தாயிரம் தடவைகளுக்கும் மேல் நான் கேட்ட பாடல் உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம்?’ என்ற அந்தப் பாட்டைக் கேட்கும்போதே எனக்குச் சோர்வு போய்விடும்.

லட்சுமணதாஸ் அந்தப் பாட்டை எழுதினார். ஸ்.எம்.சுப்பையா நாயுடு அதற்கு இசை அமைத்தார். இதுவரை சங்க இலக்கியத்தில் இல்லாத ஒரு கருத்து அதிலே மையம் கொண்டு இருக்கின்றது.

எம்.ஜி.ஆர்., சொல்லுகிறார்: இந்தப் பாடலை எழுதி முடிப்பதற்குள் எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட உழைப்பு அதிகமாகவே இருந்தது. கொடுத்து மகிழ்வதில் கூட இன்பம் இல்லை என்று சொல்லப் படுகிறது. கொடுப்பவன் வாங்குகிறவன் என்ற பேதமே இந்த நாட்டில் இருக்கக்கூடாது என்ற கருத்தில் அமைக்கப்பட்ட பாடல் அது. ‘பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம் கிட்டுவதே இல்லை என் தோழா?’ என்ற வரியின் கருத்து இன்றைய தினம் அதிகார பீடத்தில் இருப்பவர்களுக்கு ஒரு அறைகூவல் ஆகும் என்று எழுதி இருக்கின்றார்.

இக்கட்டான நேரத்தில்...

எம்.ஜி.ஆர்., தன்னுடன் நடிப்பவர்களைப் பற்றி எப்படியெல்லாம் கவலைப்பட்டார்கள் என்று கருதுகிறீர்கள்?

அன்பே வா படப்பிடிப்பு சிம்லாவில் நடக்கின்றது. இமாச்சலப் பிரதேசத்தில் காணப்படும் அரிய வகை இரண்டு தலை நாகம், சரோஜாதேவிக்கு அருகில் சீறியபடி படமெடுத்து நிற்பதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ‘பாம்பு பாம்புஎன்று கத்தி பதற்றத்தை ஏற்படுத்தாமல், தனக்கே உரிய சமயோசிதத்தோடு சரோஜா தேவியைத் தள்ளி விட்டிருக்கின்றார். அதோடு, ஷூ அணிந்த காலால் அந்த நாகத்தை மிதித்தே கொன்று விட்டார்.

பதற்றமான சூழ்நிலையில் என்னைத் தள்ளி விட வேண்டும் என்று எப்படி உங்களுக்குத் தோன்றியது? என்று சரோஜாதேவி கேட்கிறார். ‘இக்கட்டான நேரத்தில் புத்தியைப் பயன்படுத்துவதில்தான் நம்ம வெற்றியே இருக்குஎன்று சொன்னார்.

தொண்டனைப் போற்றிய தலைவன்

ஒருநாள் அவரது மேசையில் ஒரு கல்யாணப் பத்திரிகை கிடக்கின்றது. எடுத்து வாசிக்கின்றார். அதில், கடைசி வரியில் புரட்சித் தலைவரின் நல்லாசியுடன் திருமணத்திற்கு வருகின்றவர்களை வரவேற்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்தது. இந்த அழைப்பிதழை அனுப்பியவர் யார் என்பதை விசாரித்து வாருங்கள் என்று ஆள் அனுப்புகிறார். அவர்கள் போகிறார்கள்.

பிளாட்பாரத்தில் தகரத்தால் ஆன ஒரு பெட்டி போன்ற கடை அது. குவிந்து கிடக்கின்ற பழைய செருப்புகளுக்கு நடுவில் ஒருவர் உட்கார்ந்து கொண்டு, செருப்புகளைத் தைப்பது, ஷூக்களுக்குப் பாலிஷ் போட்டுக் கொடுப்பது போன்ற வேலைகளைச் செய்து கொண்டு இருந்தார்.

அவர் பெயர் மாரியப்பன். வயது அறுபது இருக்கும். விசாரிக்கச் சென்றவர்கள் கவனித்தார்கள். அந்தச் சிறிய தகரப் பெட்டிக் கடைக்குள் பத்துக்கும் மேற்பட்ட எம்.ஜி.ஆர்., படங்கள் மாட்டப் பட்டு இருந்தன.

இவ்வளவு எம்.ஜி.ஆர். படங்களை வெச்சிருக்கீங்களே, நீங்க எம்.ஜி.ஆர்., ரசிகரா? என்று கேட் கிறார்கள்.

நானெல்லாம் எம்.ஜி.ஆர். ரசிகர் இல்லீங்க. அவருக்காக உயிரக் கொடுக்கணும்னா குடும்பத்தோட கொடுத்திருவோம் எம்.ஜி.ஆர். கட்சி. சின்னம் ரெட்டை இலை. அவ்வளவுதான். எங்க தலைமுறை பூராவும் எம்.ஜி.ஆர். சொல்றதத்தான் கேப்பாங்க. என் பேரனும், பேத்தியும் அவர் போட்ட சத்துணவைச் சாப்பிடறாங்க.

உங்க வீட்டுல கல்யாணம்னு சொல்லிட்டு செருப்பு தெச்சிட்டு இருக்கீங்க? கல்யாண வேலை எதுவும் செய்யலியா?

மண்டபமெல்லாம் வெக்கலீங்க. வீட்டு வாசல்லயே பந்தல் போட்டு சொந்த பந்தம்னு மொத்தம் ஐம்பது பேரோட கல்யாணத்த முடிச்சுடலாம்னு இருக்கேனுங்க.

உங்க ரெண்டு பொண்ணு கல்யாணத்துக்கும் எம்.ஜி.ஆர்., வந்தாரா?

என்னங்க நீங்க? எங்க வீட்டுக் கல்யாணத்துக்கெல்லாம் அவரு வருவாரா? அவருக்கு எத்தனையோ வேலை? ஏதோ அவர் வீட்டுக்குள்ள பத்திரிகை போனாலே போதும்ங்க என்று கூறினார் மாரியப்பன்.

விஷயத்தைச் சேகரித்தவர்கள் அந்தப் பகுதியையும் பார்வை இட்டனர். சுற்றிலுமாக இருந்த குடிசைப் பகுதி சேறும், சகதியுமாய் இருந்தது.

திருமண நாளில், வேறு ஒரு பெரிய விஐபி வீட்டின் திருமண அழைப்பிதழும் இருந்தது. முகூர்த்த நேரம் காலை 7.30 என்றே இருந்தது. ஒரு முக்கியமான கல்யாணத்துக்குப் போகணும். நீங்களும் என்கூட வாங்கன்னு சொல்லி, பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்களையும், சில எம்.எல்.ஏக்களையும் வர வழைத்து இருந்தார் எம்ஜிஆர். அனைவரும், அந்த விஐபி இல்லத் திருமணத்திற்குத்தான் எம்.ஜி.ஆர்., புறப்படுகிறார் என்றே நினைத்திருந்தனர். காரில் ஏறிய எம்.ஜி.ஆரோ அந்த மாரியப்பன் வீட்டுக்குக் காரை விடு என்றார். காவலுக்குச் செல்லும் போலீசுக்கும் தகவல் சொல்லப்பட்டது.

குடிசைகள் மட்டுமே நிரம்பி இருந்து அந்தப் பகுதியில் எம்.ஜி.ஆரின் காரும், அமைச்சர்களின் காரும் வரிசையாகச் சென்றது கண்டு அங்கிருந்த மக்கள் காரைப் பின்தொடர்ந்து ஓடினர். மாரியப்பன் வீட்டருகே காரை நிறுத்தி இறங்கிய எம்.ஜி.ஆர்., வேட்டியை ஒரு கையால் தூக்கிப் பிடித்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தார். பின்தொடர்ந்து வந்த அமைச்சர்கள் முகம் சுழித்தாலும், தலைவர் செல்லும் வழியில் நடந்தனர்.

மாரியப்பனைப் பார்த்து, ‘முகூர்த்த நேரத்துக்குச் சரியா வந்துட்டேனோ?’ என்று கேட்டார்.

என்ன ஏது என்று புரியாமல் நின்று கொண்டு இருந்த மாரியப்பன், ‘இன்னும் தாலி கட்டலீங்கய்யா.. இந்த ஏழை வீட்டுக் கல்யாணத்துக்கு வந்திருக்கீங்களே? என்னால் எதுவுமே பேச முடியலீங்கய்யாஎன்கிறார்.

குடும்பத்தாரின் முகங்களில் ஆனந்தம், புன்சிரிப்பு, குதூகலம் வார்த்தைகளால் சொல்ல முடியாது. மணமக்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபாய் கொடுத்தார். கடைசி வரைக்கும் சண்டை போடாம ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுத்து வாழணும் என்றாராம் அந்தத் தங்கத் தலைவன்.

திரும்பிச் செல்லும்போது, அமைச்சர்களிடம் சொல்கிறார். ‘செல்வந்தர்கள் வீட்டுத் திருமணத்திற்கு நான் போகா விட்டாலும் நல்லாத்தான் நடக்கும். ஆனால் ஏழைத் தொண்டன் தான் இந்தக் கட்சிக்கு உயிர்நாடிஎன்கிறார்.

நள்ளிரவில்... நடுத்தெருவில்....

அடுத்து ஒருமுறை தியாகராயநகர் ஆற்காடு தெருவில் உள்ள அலுவலகத்தில் இருந்து இரவு இரண்டு மணிக்குப் புறப்பட்டு எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் போகிறார். கார் கிண்டி வழியாகச் சென்று கொண்டு இருக்கும் போது, ஒரு குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு ஒருவன் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தான்.

எம்.ஜி.ஆர். அதைப் பார்த்து விட்டார். அவன் குழந்தையைக் கடத்திக் கொண்டு ஓடுகிறான் என்று நினைத்துக் காரை நிறுத்தச் சொன்னார். அவனுக்கு முன்பாகக் காரை நிறுத்தி இறங்கி ஓடுபவனைத் தடுத்து நிறுத்தினார். காவலர்கள் இதை எதிர்பார்க்கவில்லை.

யார் நீ? இந்தக் குழந்தை யாருடையது? எதுக்காக இந்த நேரத்துல தூக்கிட்டுப் போற?’ என்று கேட்டார்.

ஐயா இது என் குழந்தைதாங்க. காய்ச்சல் நெருப்பாக் கொதிக்குதுங்க. விடியற வரைக்கும் தாங்குமான்னு தெரியல. அதான் டாக்டர் கிட்டக் காட்டலாம்னு போய்க் கிட்டு இருக்கேன்என்றான்.

எம்.ஜி.ஆர் குழந்தையைத் தொட்டுப் பார்த்தார். அவன் சொன்னது உண்மைதான். ‘என் வண்டியில ஏறு. டாக்டர்கிட்ட நானே அழைச்சிட்டுப் போறேன்என்றார்.

தலைவா என்று அவன் காலில் விழப்போனான். காவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அத்துடன், ஐயா முதல் அமைச்சர் என்கிற முறையில் உங்களைப் பத்திரமாக வீடு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது எங்க பொறுப்பு என்றார் அதிகாரி.

ஒரு குழந்தை காய்ச்சலால் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கும்போது நான் வீட்டுக்குப் போறதுதான் முக்கியமா? நீங்க யாரும் என்கூட வர வேண்டாம். நான் பார்த்துக்கறேன்என்று சொல்லிவிட்டு, அவனைக் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

எந்த டாக்டர் ?’ என்று கேட்டு அங்கே போனார். டாக்டரை எழுப்பி வைத்தியம் செய்தார். அதன்பிறகு குழந்தையின் தந்தை கையில் 10000 ஐக் கொடுத்து, போலீசார் வண்டியில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டு போய் விட்டு விட்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தார். மகராசன் வாழ்க என்று நன்றியோடு விடை பெற்றார் அந்தத் தந்தை.

ராணி அண்ணா நகர் வீடு திறப்பு விழாவில் இச்சம்பவத்தை உருக்கமாக எம்ஜிஆர் சொன்ன போது, கூடியிருந்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள். சாதாரண மக்கள் மீது எம்ஜிஆர் அவர்கள் பாசம் வைப்பதோடு, எப்போதும் அவர்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டும் இருப்பார் என்பதை அவருக்கு நெருக்கமானவர்கள் நிறையப் பேர் சொல்லி இருக்கின் றார்கள்.

சாந்தாவுக்கு வீடு ம.பொ.சி.க்குக் கார்

உங்களுடைய துறையிலே சிகை அலங்காரம் செய்கிற சாந்தம்மாள் என்பவர் இருந்தார். கதாநாயகிகளுக்கு சிகை அலங்காரம் செய்கிறவர். வயதான காலத்தில் ரொம்ப வறுமை. வீட்டு வாடகை கட்ட முடியவில்லை. கடன்காரர்கள் வந்து தொந்தரவு பண்ணுகிறார்கள். காலை 7 மணிக்கு இராமாவரம் வீட்டு வாசலில் போய் நிற்கிறார். எம்.ஜி.ஆர். வீட்டை விட்டு வெளியே வரும்போது கவனிக்கிறார். ‘ஏன் இந்த அம்மா ஒரு மாதிரி கண்கலங்கி நிக்கிறாங்கன்னு பக்கத்தில் அழைத்து கேட்கிறார். சொல்கிறார்கள்.

அம்மா, குடிசை மாற்று வாரியத்துல இருந்து வீடு தரச் சொல்றேன். உங்க வீட்டு விலாசத்த இங்க கொடுத்திட்டுப் போங்க. வேறு ஏதாவது வேணுமா? இல்லய்யா வேற எதுவும் வேணாம் என்கிறார். அடுத்த சில நாள்களில் சாந்தாவுக்கு 4000 ரூபாய் பணம் வருகிறது. இந்தப் பணம் எம்.ஜி.ஆர்., அவர்கள் இறக்கும் வரை மாதா மாதம் வந்து கொண்டே இருந்தது. சாந்தம்மாவின் வீட்டைப் பொறுத்த வரையில் எம்.ஜி.ஆர் தான் தெய்வம்.

காங்கிரஸ் கட்சியிலே நேர்மையான ஒரு மந்திரி இருந்தாரே கக்கன் அவர்களுடைய துணைவியார் வந்து அவர் வீட்டு வாசலில் நிற்கிறார். ஐயா மாத வாடகை 175 ரூபாய் கொடுக்க முடியல. வீட்டைக் காலி செய்யச் சொல்லிட்டாங்க... அதைக் கேட்டுக் கண்ணீர் வருகிறது எம்.ஜி.ஆர். அவர்களுக்கு. 4000 ரூபாயை அப்படியே தூக்கிக் கொடுக்கிறார். பிறகு அவரது வீடும் அவருக்கு சொந்தமாக்கப்பட்டு, கடைசி வரை அவருக்கு உதவித் தொகையும் சென்றது.

தமிழ்நாடு சட்ட மேலவை கலைக்கப்பட்டது. மேலவைத் தலைவராக இருந்த ம.பொ.சி. அவர்கள் அமைச்சர் ராஜாராமிடம், எனக்கு சர்க்கார் கார் இருந்தது. இப்போது கார் இல்லாததால் சிரமமாக இருக்கிறது என்று சொல்லி இருக்கின்றார். தற்செயலாக ராஜாராம் அவர்கள் இதை எம்.ஜி.ஆரிடம் அவர்களிடம் சொல்லி இருக்கின்றார். ஒரு பதினைந்து நாள்கள் கழித்துக் காலையில் மா.பொ.சி. வீட்டுக்கு முன்னாடி ஒரு கார் வந்து நிற்கிறது. முதலமைச்சர் வீட்டுக்கு உள்ளே வந்துவிட்டார். .பொ.சி.,... அதிர்ச்சி அடைந்தார். ‘அய்யா இந்தாங்க சாவி. இது அரசாங்கக் கார். தமிழ் வளர்ச்சித் துறைக்கு உங்களைத் தலைவராக நியமித்து இருக்கின்றேன். மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஊதியம் கொடுக்கச் சொல்லி இருக்கின்றேன். இது சர்க்கார் கார். நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்என்று சொல்லி விட்டு வருகின்றார்.

ஸ்ரீதரின் கடன் தீர்த்த வள்ளல்

புகழ் பெற்ற இயக்குநர் ஸ்ரீதர் வெற்றிக் காவியங்களைத் தந்தவர். கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை, எனக்குப் பிடித்த சுமைதாங்கி இப்படி எத்தனையோ படங்களைத் தயாரித்து இயக்கி இருக்கின்றார். எம்.ஜி.ஆரை வைத்து அன்று சிந்திய ரத்தம்என்னும் படம் எடுப்பதாக இருந்தது. எடுக்கவில்லை. அவர் மிகக் கடன்பட்டுத் துன்பப்படுகிறார் என்று தெரிந்த நிலையில் தகவல் சொல்லி அனுப்புகிறார் எம்.ஜி.ஆர்.

ஸ்ரீதர் என்னைத் தேடி வர வேண்டாம். அவர் என்கிட்ட ஏதோ உதவிக்கு வந்தார் என்று நினைத்து விடக் கூடாது. பொதுவாக ஒரு வீட்டைச் சொல்லி அந்த வீட்டுக்கு அவரை வரச்சொல்லிச் சந்திக்கின்றார். முதலில் ஒரு ஒப்பந்தம் போட்டோமே அதன்படி உங்களுக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்கிறேன். ‘உரிமைக்குரல்என்று டைட்டில் வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.

ஸ்ரீதர் தயங்கினார். ‘என்ன தயக்கம்?’

ஏற்கனவே கடனில் இருக்கும் என்னால் எப்படித் தங்களை வைத்துச் சொந்தப்படம் தயாரிக்க முடியும்?’

முதலில் நான் சொன்னபடி விளம்பரம் செய்யுங்கள். தயாரிப்புச் செலவுகளைப் பற்றிப் பிறகு சொல்கிறேன்என்றார். எம்.ஜி.ஆர்., சொன்னது போல உரிமைக்குரல் டைட்டிலை, ஸ்ரீதர் விளம்பரம் செய்தார். அவ்வளவு தான். சினிமா வினியோகஸ்தர்கள் ஸ்ரீதர் அலுவலகத்தில் கூடினர். பட வினியோகத்திற்காக அட்வான்சாகப் பணம் கொடுத்தனர். அந்தக் காலத்திலேயே 15 இலட்சம் ரூபாய் சேர்ந்தது. அதை அப்படியே ஒரு பெட்டியில் எடுத்துக் கொண்டு போய் எம்.ஜி.ஆர். முன்னால் வைத்தார்.

இதை எதற்காக என்னிடம் எடுத்து வந்தீர்கள்?’ என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.,

நீங்க சொன்னபடி செஞ்சேன். அதுக்காகக் கெடச்ச பணம்தான் இது?’ என்றார் ஸ்ரீதர்

இந்தப் பணத்தை எடுத்துக் கிட்டுப் போய் படப்பிடிப்பைத் தொடங்குங்க. என் கால்ஷீட் எப்பல்லாம் தேவைன்னு சொல்லுங்கஎன்றார். அதுதான் எம்.ஜி.ஆர்.,

லாபம் யாருக்கு?

எங்கள் வீட்டுப் பிள்ளைபடம் வெற்றி பெறுகின்றது. சென்னை சிட்டி ரைட்ஸ் வாங்கி இருக்கின்றார். படம் வெள்ளி விழா கொண்டாடி பெரும் லாபம் கிடைக்கின்றது. அதிலே ஐந்து லட்சம் ரூபாயை எடுத்து, (அப்போ 5 லட்சம் ரூபாய் என்றால் இப்போ 5 கோடி) கூடுதலாகக் கிடைத்த இந்தப் பணம் படத் தயாரிப்பாளருக்குத்தான் சேர வேண்டும் என்று கடிதம் எழுதி படத் தயாரிப்பாளர் நாகி ரெட்டிக்கு அனுப்பி வைக்கின்றார்.

மறுநாள் நாகி ரெட்டி எம்ஜிஆருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைக்கிறார். ‘நீங்கள் கொடுத்ததை நான் வாங்கிக் கொண்டேன். நான் இப்பொழுது ஐந்து லட்சத்து ஒரு ரூபாய் உங்களுக்கு அனுப்பி இருக்கின்றேன். ஏழைகளைத் தேடிப் பிடித்து உதவி செய்கிற உங்கள் மூலமாக ஏழைகளுக்குப் போய்ச் சேரட்டும்என்று பணத்தைத் திரும்ப அனுப்பி விடுகிறார்.

நேர்மை

எம்.ஜி.ஆருடைய வாழ்க்கையில் எத்தனையோ சோதனைகள் வந்திருக்கின்றன. ஆனால் எந்தக் கட்டத்திலும் நேர்மை தவற மாட்டார். அதற்கு எடுத்துக்காட்டு, நாடோடி மன்னன் படத்தைச் சொன்னேனே... அதில் எனக்குப் பிடித்த ஒரு காட்சி.

அரசியாக நடிக்கின்ற எம்.என்.ராஜம் அவர்கள், நாடோடியைத் தன் கணவன் என்று கருதி நெருங்கி வருகின்ற பொழுது, நாடோடி விலகிச் செல்வார். அதனால் ராஜம் ரொம்ப வேதனைப்படுகின்ற பொழுது நான் உன் கணவனே இல்லைஎன்பார். உடனே ராஜம் கத்தியை எடுத்துக் குத்திக் கொள்ளப் போவார் தற்கொலை செய்து கொள்ள. அப்பொழுது அதைத் தடுத்துவிட்டு நாடோடி சொல்வார், நான் உன் கணவன் அல்ல; நான் உன் கணவன் அல்ல என்று. அந்த வசனம் அவ்வளவு அற்புதமாக இருக்கும்.

வா.. தங்கையே கணவனாக நினைத்துக் கொண்டு இருக்கின்றாயே பார் என்று முதுகிலே விழுந்த சவுக்கடிகளைக் காட்டுவார். ‘நான் இராணுவத்தில் இருந்தேன். படையிலே சேர்ந்தேன். சவுக்கால் எடுத்து அடிக்கச் சொல்வார்கள். அவர்களை தாவி அணைக்க ஏங்கும் என் உள்ளம். பார் சகோதரி பார். உழுவார்கள், விதைப்பார்கள், அறுப்பார்கள், சுமப்பார்கள், உண்ண மட்டும் உணவின்றித் தவிப்பார்கள் என்று பேசுவார். அந்தக் காட்சியில் அவரது நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். கண்ணதாசன் வசனம், ரவீந்தரும் உதவி இருக்கின்றார்.

தாய்க்குப் பின் தாரத்தில்...சிலம்பாட்டத்தில்..

நான் கிராமத்து ஆள். சண்டைக் காட்சிகளை ரசிக்கிறவன். எனக்கும் கொஞ்சம் சிலம்பம் தெரியும். வாத்தியார் சண்டையை எவ்வளவோ பார்த்து இருக்கின்றேன். சாண்டோ சின்னப்பா தேவர் உண்மையாக சண்டைப் பயிற்சியை முடித்தவர். தாய்க்குப் பின் தாரம் படத்தில், இவருக்கும் எம்ஜிஆருக்கும் வயல்காட்டில் சண்டை.

இந்தக் காட்சியை முதல் நாள் காலை 6 மணிக்கு ஆரம்பித்து மறு நாள் காலை 6 மணிக்குத்தான் எடுத்து முடித்தார்கள். இரண்டு பேரும் சிலம்பு தெரிந்தவர்கள். எம்.ஜி.ஆரும் முறையாகச் சிலம்பம் கற்றவர்தான். ஆனால் தானாக ஒரு ஸ்டைல் உருவாக்கிக் கொண்டார்.

அவர் எரால் மீனின் படங்களை விரும்பிப் பார்ப்பார். அவர்தான் எரால் மீனின் அந்தக் காலத்தில் பெரிய கத்திச் சண்டை வீரர். அவருடைய ஸ்டைலுடன் தன்னுடைய சொந்த ஸ்டைலையும் சேர்த்துக் கொண்டார். அந்த லாவகம் யாருக்கும் வர வில்லை.

இரண்டு பேரும் படை வரிசை எடுத்து அடிக்கிறார்கள். அங்கு ஐம்பது பேரை விரட்டிட்டுத் தேவர் இப்படி வருகிறார். இங்க ஐம்பது அடித்து விரட்டிட்டு எம்.ஜி.ஆர். இடுப்பில் துண்டு கட்டிக்கிட்டு வருகிறார்.

எல்லாரையும் அடிச்சு விரட்டியாச்சு என்கிற எண்ணத்தில் இருந்த மாயாண்டி திரும்பிப் பார்க்கின்றார். அங்கே எம்.ஜி.ஆர் நிக்கிற ஸ்டைலே தனி. இருவரும் ஒருத்தரை ஒருத்தர் நேருக்கு நேராகப் பார்க்கின்றார்கள். நெருங்குகிறார்கள். மோதுகிறார்கள்.

பென்ஹர் என்ற ஆங்கிலப் படத்தில் வரும் ரதப் போட்டிக் காட்சியை மட்டும் மாறி மாறி எத்தனையோ முறை போட்டுப் போட்டுப் பார்ப்பேன். அதுபோல இந்தச் சண்டைக் காட்சியையும் எத்தனை முறை பார்த்தேன் என்பதற்குக் கணக்கே இல்லை.

இங்கே பேசியவர்கள் எல்லாம் அவருடைய மனிதாபிமானத்தைப் பற்றி, அவர் அள்ளிக் கொடுத் ததைப் பற்றியெல்லாம் சொல்லி விட்டார்கள்.

தமிழ்த்திரையின் தலைசிறந்த இயக்குநர் எம்.ஜி.ஆர்.தான்

இயக்குனர் வாசு அவர்களே, நான் அனைத்து இயக்குனர்களையும் மதிக்கின்றவன். எல்லா படங்களையும் விரும்பிப் பார்க்கிறவன். ஆனால் தமிழ்த்துறை உலகில் எம்.ஜி.ஆருக்கு இணையான இயக்குனர் யாரும் கிடையாது என்பது என்னுடைய கருத்து, அவருடைய நாடோடி மன்னன் ஆகட்டும், உலகம் சுற்றும் வாலிபன் ஆகட்டும், அடிமைப் பெண் ஆகட்டும், அவருக்கு நிகர் அவரேதான். கேமரா கோணம் எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அவரே பார்ப்பார்.

எம்.ஜி.ஆரின் நாள்குறிப்பு தரும் செய்திகள்

இராமாவரம் தோட்டத்திற்கு என்னை விஜயன் அழைத்துக் கொண்டு போனார். எம்.ஜி.ஆர். எழுதிய நாட்குறிப்புகளை எல்லாம் எடுத்துக் காண்பித்தார். சிலவற்றை வாசித்துப் பார்த்தேன்.

1945 நானும் பி.ஸ்.வீரப்பாவும் இந்த இடத்தில் கொஞ்ச நேரம் சந்தித்தோம் என்று எழுதி இருக்கின்றார். மணிமணியான எழுத்தில் எழுதி இருக்கின்றார். சங்கீதத்தைப் பற்றி 25 பக்கம் எழுதி இருக்கின்றார். ஒரு டைரியில் பார்த்தேன். கர்நாடக இசையில் இருந்து, தமிழ் இசை வரையிலும் அவர் எழுதி இருந்ததைப் பார்த்து, அவருக்கு இவ்வளவு இசை ஞானம் இருந்ததா? இவ்வளவு நாளா எனக்கு தெரியவில்லையே என்று வியந்தேன்.

.பி.நாகராஜன் எடுத்த நவரத்தினம் படத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார். மக்கள் திலகமும் அவரும் ஒருவரையொருவர் அன்பாக நேசித்தார்கள். அதை அவரே சொல்லி இருக்கின்றார். அந்தப் படப்பிடிப்பில் உட்கார்ந்து இருக்கிறார். அடுத்த அரங்கில் நடித்துக்கொண்டு இருந்த என்.டி.ராமாராவ் அவரைப் பார்க்க வருகிறார். அண்ணே அண்ணே என்றுதான் அழைப்பார் எம்.ஜி.ஆர். அவர்களை. அவர் தெலுங்கு ராஜ்யம்என்ற பெயரில் புதிய கட்சி தொடங்குவதாகச் சொன்னபோது, ‘தெலுங்கு தேசம்என்று பெயர் சூட்டுங்கள் என்று யோசனை சொன்னதும் எம்.ஜி.ஆர்.தான்.

அவரைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ‘என்ன மூக்கு ஒருமாதிரி சிவந்திருக்கு?’ என்று கேட்கிறார். ‘அது ஒன்னுமில்லண்ணே...போன வாரம் ஒரு சண்டைக்காட்சி. ஷெட்டி என்கிற ஒருவர் பம்பாயில் இருந்து வந்திருக்கிறார். சண்டைக் காட்சியில் சும்மா ஒத்திகைக்கு அடிக்க வேண்டியவன் நிஜமாவே குத்திவிட்டான் மூக்கிலே. மூக்கு உடைந்துவிட்டது. இரத்தம் கொட்டி விட்டது. ஆனால் ஒரு மன்னிப்புக்கூட அவன் கேட்க வில்லை. இதெல்லாம் சினிமாவில் சகஜம்தான் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். நம்ம சவுத் இந்தியன்னா பம்பாய்க் காரனுக்கு அவ்வளவு எளக்காரமாகப் போய்விட்டது அண்ணே. இன்றைக்கு அவனுக்கு உங்களோட சண்டைக்காட்சி இருக்கு....கொஞ்சம் சாக்கிரதையா இருங்கஎன்று, எம்.ஜி.ஆர்., அவர்களிடம் சொல்லிவிட்டுப் போகிறார்.

எம்ஜிஆர் கற்பித்த பாடம்

அதைக் கேட்டுக் கொஞ்சம் நேரம் அப்படியே யோசிக்கிறார் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பை இரத்து செய்துவிட்டு மூன்று நாட்கள் கழித்து படப்பிடிப்பை வைத்துக் கொள்வோம் என்று சொல்லி விட்டார். அந்த ஷெட்டி ஒரு நாளைக்கு எத்தனை பவுண்டு வெயிட் எடுக்கிறான் என்று கேட்டார். ‘350 பவுண்டுஎன்று சொல்லியிருக்கிறார்கள். இவர் 375 பவுண்டு வெயிட்டை தூக்கி தூக்கிப் பயிற்சி எடுக்கிறார். படப் பிடிப்புக்கு வந்தாச்சு.

ஒரு ரவுண்டுகூட வரவில்லை. எம்.ஜி.ஆர். விட்ட குத்தில் அவன் மூக்கெல்லாம் உடைந்து இரத்தம் கொட்டுகிறது. அப்போது எம்.ஜி.ஆர்., ‘சினிமாவில் இதெல்லாம் சகஜம்பாஎன்று சொல்கிறார்.

அவனுக்கு அப்பத்தான் புரியுது. என்டிஆரிடம் சொன்னது நினைவுக்கு வருகின்றது.

ஆனால் எம்.ஜி.ஆர்., உடனே அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வைத்தியம் செய்து, பத்தாயிரம் பணத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தார். அவருடைய தன்மையைப் பாருங்கள். அந்த அளவுக்கு உடல் வலிமை.

அவருக்கு உடல்நலம் குறைந்து விட்டது என்று சொன்னார்கள். அந்த நிலையில், தண்டையார்பேட்டை கூட்டத்தில் ஒரு மூட்டையைக் கொண்டு வந்து வைக்கின்றார்கள். அந்த மூட்டையை அப்படியே தூக்கிப் போட்டார். அப்போது நான் மாவோவைத்தான் நினைத்தேன். மாவோ 6000 மைல்கள் நடந்தவர். அவர் 76 ஆம் ஆண்டு நான் மிசாவில் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டைச் சிறையில் இருக்கும்போது இறந்தார்.

அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, மா சே துங் கவலைக்கிடம் இனி அவர் நடமாட முடியாது என்று அமெரிக்க பத்திரிகைகள் எழுதிக் கொண்டு இருந்தன.

அப்பொழுது அவர் மஞ்சள் நதிக்கு வருகின்றார். அவர் நீண்ட பயணம் போகும்போது மஞ்சள் நதியை நீந்திக் கடந்திருக்கிறார். அங்கே வருகிறார். சீனச் செய்தியாளர்கள், மக்கள் எல்லாம் அங்கே கூடி இருக்கின்றார்கள். அவர்களுக்கு முன்பாக, மஞ்சள் நதியில் குதித்த மாவோ, ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு நீந்திக் கடந்தார். அதுபோல எம்.ஜி.ஆர்., செய்து காட்டினார்.

நான் அவருடன் பழகியது இல்லை. 1971 சட்டமன்றத் தேர்தலில் விடியற்காலையில் ராசபாளையம் வரை வந்தவர், சங்கரன்கோவில் பிரச்சாரத்தை இரத்து செய்து விட்டு மதுரைக்குச் சென்று விட்டார். நான், ஆலடி அருணா, கதிரவன், வாசுதேவநல்லூர் வெள்ளத்துரைப் பாண்டியன் எல்லாம் மதுரை பாண்டியன் ஓட்டலில் அவரைச் சந்தித்து, எப்படியாவது அழைத்து வர வேண்டும் என்பதற்காக அவர் தங்கி இருந்து ஓட்டலுக்குச் சென்றோம். அவரது அறைக்கு உள்ளே நுழைகிறோம். அவர் படுத்து இருக்கின்றார். தொப்பியெல்லாம் கிடையாது.

எம்.ஜி.ஆர்:

என் நினைவுகள்!

இன்றைக்கு உங்கள் ஊருக்கு வந்தால், 3, 4 ஜில்லா டூர் அவுட்டாயிடும். நான் வர முடியாதுஎன்கிறார். ....

அப்பொழுது நான் அவரிடம், ‘அண்ணே நீங்கள் வராமல் போனால் மக்கள் கல்லைக் கொண்டு எறிவார்கள். அவங்க உங்க பேச்சைக் கேட்க வரலேண்ணே... உங்கள் முகத்தைப் பார்த்தால் போதும்னு வர்றாங்கண்ணே... ஒரு ஐந்து நிமிடம் வந்துவிட்டுப் போங்கள்என்று சொன்னேன்.

அப்படியே என்னை உற்றுப் பார்த்தார். ‘சரி வருகிறேன். வேட்டி ஜிப்பா எல்லாம் எடுத்து வைத்து இருக்கிறேன். கண்டிப்பாக வந்து விடுவேன்என்று சொன்னார். பிற்பகல் 3 மணிக்கே மதுரையில் இருந்து புறப்பட்டுச் சங்கரன்கோவிலுக்கு வந்தார்.

அதற்குப்பிறகு அவருடன் பழகுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடையாது. நாடாளுமன்ற நூலகத்தில் ஒருமுறை அமர்ந்து இருந்தேன். திடீரென அங்கே உள்ளே நுழைந்தார். மோகனரங்கம் அழைத்துக் கொண்டு வந்தார். என்னைப் பார்த்து, ‘இவர்தான் வை.கோபால்சாமிஎன்றவுடன் நான் எழுந்து நின்றேன். நான் கொஞ்சம் வெட்கப்படுவேன். அவ்வளவு பெரிய தலைவர் முதல் அமைச்சர். நான் அவர்கிட்டே போயிருக்கணும். ஆனால், அவர் இரண்டு அடி வந்து என்னோடு கை கொடுத்தார். இன்றைக்கும் அதை நான் நினைத்துக் கொள்கின்றேன்.

நான் திமுகவில் உயிராக இருந்த காலத்தில் 85 இல் ஜெயவர்த்தனா டெல்லிக்கு வந்தார். செய்தியாளர்களைச் சந்திக்கிறார். பிரதமர் ராஜிவ்காந்தி பக்கத்தில் நிற்கிறார். இலங்கைப் போருக்கு எம்.ஜி.ஆர்.தான் எல்லாத்துக்கும் காரணமா? என்ன காரணம் என்று கேட்கிறார்கள்.

Chief Minister of Tamilnadu Mr. M.G.Ramachandran is the root cause for all the Troubles. தமிழ்நாடு முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர்.,தான் காரணம். அவர்தான் தூண்டி விடுகிறார் என்று சொல்கிறார்.

மறுநாள் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்தது. ராஜீவ் காந்தி உட்கார்ந்து இருக்கிறார். நான் எழுந்து கேட்டேன். ‘வெளி நாட்டில் இருந்து வருகின்ற அதிபர்கள், போடுகின்ற விருந்தைச் சாப்பிட்டு விட்டு மரியாதையாகப் போக வேண்டும். நேற்றைக்கு இலங்கையில் இருந்து வந்த அதிபர், எங்கள் தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆரை இழிவுபடுத்தித் தாக்கிப் பேசியபோது, நீங்கள் பக்கத்தில் சிரித்துக் கொண்டு நின்றீர்களே, இது இந்தியாவுக்கு அல்லவா அவமானம்? என்று கேட்டேன்.

ராஜீவ் காந்தியால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.

உடனே காங்கிரஸ்காரர்கள் எல்லாம் எழுந்து, ‘என்ன கோபால்சாமிக்கு எம்.ஜி.ஆர். மீது திடீர் காதல் வந்துவிட்டது?’ என்று கூறிக் கிண்டல் செய்தார்கள். எம்.ஜி.ஆர். எனது முதல் அமைச்சர் அவரை இலங்கை அதிபர், ஈழத்தமிழர்களை அழிக்கும் கொடியவன் குற்றம் சாட்டுவதை சகிக்க மாட்டேன். எங்களுக்குள் இருக்கும் அரசியல் மோதலை தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தீர்த்துக் கொள்வோம் என்றேன். அப்போது அவையில் இருந்த அண்ணா திமுக எம்.பி.க்கள் யாரும் எழுந்து பேசவில்லை. அவர்கள் என்னிடம், ‘அண்ணே நாங்க கூட்டணியில் இருக்கின்றோம். ஒன்னும் சொல்ல முடியல. நீங்க நல்லாக் கொடுத்தீங்க அவங்களுக்குஎன்று சொன்னார்கள்.

ஒருமுறை, ‘கோபால்சாமி நல்லாப் போராடுகிறார். அவரு நம்ம பக்கம் வருவதற்கு ஏதாவது வழி இருக்கா என்று ஒரு பைல் ஓப்பன் பண்ணி பாருங்களேன்என்று முதல்வர் எம்.ஜி.ஆர்., அவர்கள் சொன்னதாக என்னிடம் சொன்னவர், 30 முக்கியமான காவல்துறை அதிகாரிகள் இன்றைக்கும் இருக்கின்றார். ‘அப்படி நாங்கள் ஒரு கோப்பைத் தயார் செய்தோம். ஒரு மாதம் கழித்து முதல்வரிடம் சென்று, ஐயா கோபால்சாமிகிட்ட எந்த பலவீனமும் இல்லை. அவருக்குப் பண ஆசையும் இல்லை. பதவி ஆசையும் இல்லை. கலைஞர் மீது ஒரு பக்தியோடு, வெறியோடு இருக்கின்றார். நம்மோடு வரமாட்டார்என்று சொன்னோம் என்றார்.

இராமாயணம் யுத்த காண்டத்தில் இந்திரஜித்தும் இலக்குவனும் ஒருவருக் கொருவர் போரிடும் போது இரண்டு பேரும் ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்கின்றார்கள். இரண்டு பேருமே வீரர்கள், ஒருவரை ஒருவர் அழிக்கத் துடிப்பவர்கள். அவன் வீரத்தை இவன் பாராட்டுகிறான். இவன் வீரத்தை அவன் பாராட்டுகிறான். அதுபோல் நான் சில இலட்சியங்களில் உறுதியாக இருப்பதை அறிந்து எம்.ஜி.ஆர். அவர்கள் என்னைப் பாராட்டி இருக்கின்றார்.

இதை எல்லாம் பேசுவதால், இப்போது இருக்கின்ற அரசியல் குழப்பத்தில் ஏதாவது மீன் பிடித்து விடலாம் என்று நினைக்கின்றாரா வைகோ? என்று சிலர் எழுதுவார்கள் நாளைக்கு. வார ஏடுகளில் நிறைய அதிகம் எதிர்பார்க் கலாம். சூடி சூநஎநச சூநஎநச சூநஎநச.

ஒரே காரணத்திற்காக. நான் நெஞ்சில் பூஜிக்கும் தலைவன் பிரபாகரன் வன்னிக்காட்டில் என்னிடம் சொன்னதும், சென்னையில் கிட்டு என்னிடம் சொன்னதும்தான்.

சென்னை திருவான்மியூரில் கிட்டு இருந்த வீட்டுக்குப் போலிஸ் காவல் போட்டு இருந்தார்கள். நான் அந்த வீட்டுக்குள் செல்ல முயன்றேன். காவல்துறை என்னைத் தடுத்துக் கைது செய்தது. நள்ளிரவு 1 மணிக்கு விடுதலை செய்தது. மீண்டும் கிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன். மீண்டும் காவல்துறை கைது செய்து சைதாப்பேட்டை கோர்ட்டில் என்னை ஆஜர்படுத்தினார்கள். பிற்பகல் 3 மணிக்கு சென்ட்ரல் ஜெயிலில் கொண்டு போய் அடைத்தார்கள். நான் நிம்மதியாகக் கொஞ்ச நாள் அங்கே இருக்கலாம் என்று நினைத்தேன். 5 மணிக்கு என்னை விடுவித்தார்கள்.

எப்படி?’ என்று விசாரித்தேன் அதிகாரிகளிடம். ‘கோபால்சாமியைக் கைது செய்து வைத்து இருக்கின்றோம் என்று அமெரிக்காவில் உள்ள முதல் அமைச்சரிடம் சொன்னோம். ‘உடனே அவரை விடுதலை செய்யுங்கள்; கிட்டுவை யார் வேண்டு மானாலும் பார்க்கலாம் என்று ஆர்டர் போடுங்கள்என்று சொன்னார் என்றார்கள்.

கிட்டு அவர்களைச் சந்தித்தேன். ‘எம்.ஜி.ஆக்கு உடல் நலம் குன்றி விட்டது; கலைஞர்தான் அடுத்து முதல் அமைச்சராக வரப் போகின்றார். நீங்கள் எம்.ஜி.ஆரை மட்டுமே பாராட்டிக் கொண்டே இருக்கின்றீர்களே? கொஞ்சம் எங்கள் தலைவர் பக்கமும் வரலாமே?’ என்று கேட்டேன்.

கிட்டு சொன்னார்: ‘அண்ணே வயிறு இருக்கேண்ணே? எங்கள் பையன்களுக்கு மூன்று வேளை சாப்பாட்டுக்கு 5 ரூபாய் கொடுக்கின்றோம். எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். என்ன வேண்டும்? என்று கேட்டார். சொன்னோம். இங்க பாருங்கண்ணே 50 லட்சம். இதோ இந்தப் பெரிய ஜிப்பு பேக்கில் இருக்கு பாருங்கண்ணே. மேலும் 5 கோடி தருகிறேன் என்று சொன்னாருண்ணே. கலைஞரைக் கொடுக்கச் சொல்லுங்கண்ணே. நாங்களும் அந்தப் பக்கம் பேசுகிறோம்என்றார்.

நான் ஒன்றும் சொல்லவில்லை. ‘கிட்டு என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் தெரியாமல் கேட்டு விட்டேன்என்று சொன்னேன்.

இவை எல்லாம் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

ஆயுதங்கள் புலிகளுக்குப் போய் சேரவில்லை. ஆயுதங்கள் அவர்களுக்கு போவதற்கு வழி என்ன? பில் கிளிண்டன் ரோமன் கத்தோலிக்க ரத்தம் இருக்கு.... அந்த அயர்லாந்து ரத்தம்தான் கென்னடிக்கும், பில் கிளிண்டன் ஆயுதங்களை அயர்லாந்து விடுதலைப்படைக்கு ரகசியமாக அனுப்பி வைத்தார் என்று தெரியும்.

அப்படி எம்.ஜி.ஆர். அனுப்பி வைத்தார்.

தலைவர் பிரபாகரன் என்னிடம் கூறினார். எம்.ஜி.ஆரை நாங்கள் சந்தித்தபோது இவர் என்ன கொடுக்கப் போகிறார்? என்ன ஒரு இரண்டு லட்சம் கொடுப்பாரா? அல்லது ஐந்து லட்சம் கொடுப்பாரா? என்று நினைத்தோம்.

அவர் சாப்பிடச் சொன்னார். சாப்பிட்டோம். நிறைய வகையாகப் பரிமாறினார்கள். ‘என்ன வேண்டும்?’ என்று கேட்டார். ‘நாங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்துறோம். அதற்கு பணம் வேண்டும்.’

எவ்வளவு வேண்டும்? ஒரு 2 கோடி தேவைப்படும்.

இன்றைக்கு 50 லட்சம் இருக்கு. கொடுத்துவிடுகிறேன். இரண்டு நாள்களுக்குள் மீதிப்பணம் வந்து விடும்என்று கூறினார்.

இது பிரபாகரன் என்னிடம் சொன்னது. “எனக்கு மயக்கமே வந்து விட்டது என்றார்.

இந்திரா காந்தி அம்மையார் மறைவுக்குப் பிறகு, ராஜீவ்காந்தி பிரதமர் ஆகிறார். எம்.ஜி.ஆர். டெல்லியில் தமிழ்நாடு அரசு இல்லத்தில் இருக்கின்றார். பால சிங்கமும், பிரபாகரனும் அவரைப் பார்க்க வருகின்றார்கள். அவர்கள் முகத்தைப் பார்த்தவுடன் என்ன வாட்டமா இருக்கின்றீர்களே?’ என்று கேட்டார்.

இந்திய அரசு இதுவரை உதவிக் கொண்டு இருந்தார்கள். இனிமேல் உதவுவதற்கு வழி இல்லை. நிதியெல்லாம் கொடுக்க முடியாது என்று கூறுகிறார்கள்.

நீங்கள் எவ்வளவு எதிர்பார்த் தீர்கள்?’

இயக்கத்தை நடத்த வேண்டும். 30 ஆயிரம் போர்வீரர்களுக்கு உரிய சாப்பாடு, துணிமணி, யுத்த களத்திற்கு தேவையான ஆயுதங்கள் இதெல்லாம் தேவைப் படும். 4 கோடி வரை எதிர்பார்த்தோம்என்றோம்.

இன்றைக்கு இரவு விமானத்தில் சென்னைக்குச் செல்கிறேன். நீங்களும் அங்கே வந்து சந்தியுங்கள்என்றார். சந்தித்தோம். ‘தமிழர் புனர்வாழ்வுக் கழகம்என்ற பெயருக்கு 4 கோடி ரூபாய் கொடுத்தார். அத்துடன் போரில் காயம்பட்டு வருபவர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்காக மதுரையில் தனியாக ஒரு மருத்துவ மனையை அமைத்து, அங்கே ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து எல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்தார். மருத்துவர்களிடம் அவரே பேசுவார். குண்டுக் காயத்தோடு வந்தவர் இன்றைக்கு எப்படி இருக்கிறார்? என்று கேட்பார் என்று சொன்னார்.

யார் தமிழன்?

இன்றைக்கு ஒன்றரை லட்சம் தமிழர்கள், ஈவு இரக்கம் இல்லாமல் நாதியற்றுக் கொல்லப்பட்டு விட்டார்கள். 18 கல் தொலைவிலே இங்கே இருக்கின்ற 7 1/2 கோடி பேரால் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் அந்த மனிதனை மலையாளி மலையாளி என்று தூற்றினார்களே...... அவர் செய்தார்.

யாரைய்யா தமிழன்? எம்.ஜி.ஆரை விட வேற யாரு தமிழன்?

ஜி.யு. போப் தமிழன், கால்டுவெல் தமிழன், பெஸ்கி தமிழன், அர்ஜெண்டினாவிலே பிறந்த சேகுவேரா, கியூபாவிலே போய்ப் போராடினார். இந்த மண்ணையும், மக்களையும் நேசித்த எம்.ஜி.ஆர். அவர்கள், தமிழக மக்களுக்குச் செய்தது மட்டும் அல்ல, ஏழை எளிய மக்களின் கண்ணீரைத் துடைத்தது மட்டும் அல்ல, ஈழத்தில் ஒரு இன மக்கள் அழிவில் இருந்து மீட்பதற்கு அவர்கள் தாயகம் வெற்றி பெற்று வர வேண்டும் என்பதற்காகவும் உதவினார்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் போட்டார்கள். அப்போது நான் பிரபாகரன் அவர்களிடம் 33 நிமிடங்கள் பேசினேன். எல்லாவற்றையும் எழுதி வைத்து இருக்கின்றேன். இப்போது நான் ஒன்றும் சொல்லப் போவது இல்லை.

வன்னிக்காட்டில் சந்தித்தபோது பிரபாகரனிடம் கேட்டேன். இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானபோது எம்.ஜி.ஆரைப் பார்த்தீர்களே, என்ன நடந்தது? என்று கேட்டேன். தொலைபேசியில் அவரிடம் பேசினேன்: உங்களைச் சந்திக்க அனுமதிக்க முடியாது என்று சொல்கிறார்கள். பார்க்காமல் போக மாட்டேன் என்று கூறினேன். அதன்பிறகு என்னை அவரிடம் அழைத்துச் சென்றார்கள். என்னைக் கட்டிப் பிடித்து அழுதார் எம்.ஜி.ஆர். ‘இந்த ஒப்பந்தத்திற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லைஎன்று எம்.ஜி.ஆர். சொன்னதாக பிரபாகரன் என்னிடம் சொன்னார்.

அதன் பிறகு 2 ஆம் தேதி சென்னைக் கடற்கரையில் ஒப்பந்த விளக்கக் கூட்டம் ஏற்பாடாகிறது. எம்.ஜி.ஆர். அமெரிக்காவுக்குப் புறப்படுகிறார். உடைமைகள் எல்லாம் விமான நிலையத்திற்குப் போய்விட்டன; நீங்கள் பிரதமருடன் கடற்கரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டுத்தான் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்று கூறினர். அங்கே அமெரிக்காவில் எம்ஜிஆரின் மருத்துவ சிகிச்சைக்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகின்றதே? அதை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். அதனால் வேறு வழி இல்லாமல் கடற்கரைக்கு வந்தார்.

அந்த மேடையில் அவரைப் பாருங்கள். அவ்வளவு மனம் உடைந்து இருப்பார். அந்த உடன் பாட்டில் விருப்பமே கிடையாது.

கடைசிக்கால வேதனைகள்

நான் மிகுந்த வேதனையோடு சொல்கிறேன். கடைசி நாட்களில் அவர் சித்திரவதைப்பட்டார். அண்ணா உடல் நலிவினால் அணு அணுவாக சித்திரவதைப்பட்டார். காந்தியும், லிங்கனும் கொடுத்து வைத்தவர்கள். நொடிப்பொழுதில் குண்டு துளைத்து மடிந்தனர். காமராசர் மனம் உடைந்து மறைந்தார். பெரியார் மூத்திரச் சட்டியை தூக்கிக் கொண்டு கடைசி வரை போராடினார். கடைசிக் காலங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உள்ளம் சுக்கல் சுக்கலாக உடைந்தது எனக்குத் தெரியும்.

அவர் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி, நேரு சிலை திறப்பு விழா. பிரதமர் ராஜீவ் காந்தி வருகிறார். அவர் பேசும்போது, ‘தமிழ்நாடு முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர்.,’ என்று சொல்லவே இல்லை. ‘மிஸ்டர் இராமச்சந்திரன்என்றுதான் சொன்னார். வீடியோ இருக்கின்றது. போட்டுப் பாருங்கள். அது மட்டும் அல்ல. அந்த மேடையிலேயே அவர் எம்.ஜி.ஆரிடம் சொன்னார். ‘Mr. MGR You are so sick. Handover the responsibility to some other person, or make somebody as deputy Chief Minister you take rest’ என்று சொன்னார். ‘நீங்கள் மிகவும் உடல்நலக் குறைவாக இருக்கின்றீர்கள். வேறு யாரிடமாவது பொறுப்புகளை ஒப்படையுங்கள் அல்லது ஒரு துணை முதல்வரை நியமித்துவிட்டு நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்என்று சொன்னார்.

இது எழுத்தில் இருக்கின்றது. வாழவே பிடிக்கவில்லை என்று எம்.ஜி.ஆரே எழுதி வைத்து இருக்கின்றார். பகைவர்களைப் பற்றி நான் கவலைப்பட்டது இல்லை; எதிரிகளைப் பற்றியும் கவலைப்பட்டது இல்லை. ஆனால் என்னால் உயர்த்தப்பட்டவர்கள், என்னால் வாழ்வு பெற்றவர்கள், என்னால் அங்கீகரிக்கப் பட்டவர்களே என்னை அழிப்பதற்குச் சதி வேலைகளில் ஈடுபடு கின்றார்கள் என்பது என் மனதை உடைத்து விட்டதுஎன்று எழுதி இருக்கின்றார். ‘நான் இறந்தால் என்னை எங்கே புதைப்பார்கள்?’ என்று கேட்டு இருக்கின்றார்.

அண்ணாவின் இதயக்கனி

சிறு வயதில் காரைக்குடியில் ஒரு பொதுக்கூட்டத்தில் மகாத்மா காந்தியைப் பார்க்கிறார். அப்போது குவெட்டாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக எல்லோரும் அவரிடம் நிதி கொடுக்கின்றார்கள். அப்போது எம்.ஜி.ஆரிடம் நாடகத்தில் நடித்ததற்காகக் கிடைத்த இரண்டு அணாதான் கையில் இருக்கின்றது. அதைக் கொண்டு போய்க் காந்தியாரிடம் கொடுத்து அவர் காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்குகிறார். (கைதட்டல்).

கள்ளுக்கடை எதிர்ப்புப் போராட்டம். அதில் கலந்து கொண்ட 12 வயதுச் சிறுவனான எம்.ஜி.ஆரையும் காவலர்கள் பிடித்துக் கொண்டு போகின்றார்கள். எம்.ஜி.ஆரைத் தேடிப் பல காவல் நிலையங்களுக்குப் போகிறார் சக்கரபாணி. யானைக் கவுனி காவல் நிலையத்தில் எம்.ஜி.ஆர்., உட்கார்ந்து இருக்கின்றார். அவரையும், அவருடன் இருந்த வேறு இரண்டு சிறுவர்களையும் பார்த்து, ‘நீங்கள் எல்லாம் போராடி நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கப் போகின்றீர்களா?’ என்று கேட்டு அடித்து விரட்டியது காவல்துறை. இதை அவர் எழுதி இருக்கின்றார்.

அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் அண்ணாவின் மீது பற்றுக் கொண்டு தி.மு. கழகத்தில் சேர்ந்தார். அப்போது தான் அண்ணா சொன்னார்: ‘எல்லோரும் எதிர்பார்த்த அந்தக் கனி என் மடியில் வந்து விழுந்தது; அதை என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்என்று. (கைதட்டல்)

விருகம்பாக்கம் மாநாட்டில் அண்ணா பேசியதை நான் தரையில் உட்கார்ந்து கேட்டேன். ‘நண்பர் எம்.ஜி.ஆர்., அவர்கள் நிதி தருவதாகச் சொன்னார்கள். நிதி வேண்டாம். உங்கள் முகத்தைக் காட்டுங்கள். தொகுதிக்கு முப்பதாயிரம் ஓட்டுகள் கூடுதலாகக் கிடைக்கும்என்று சொன்னார்.

குண்டு பாய்ந்து கழுத்தில் கட்டுப் போட்டுக் கொண்டு எம்ஜிஆர் இருந்த தோற்றத்தைத்தான் சுவரொட்டியாக அச்சிட்டுத் தமிழ்நாடு முழுவதும் ஒட்டினார்கள். அது தான் 67 தேர்தலில் தி.மு..வுக்கு அவ்வளவு பெரிய வெற்றியைத் தேடிக்கொடுத்தது. (பலத்த கைதட்டல்).

திராவிட இயக்கத்தை வளர்த்தவர்... பாதுகாத்தவர் எம்.ஜி.ஆர்

அவர் திராவிட இயக்கத்தின் கொள்கைகளைத் தன் படங்களில் பேசினார். பாடல்களில் பரப்பி னார். நாடோடி மன்னன் படத்தில் நான்கு திராவிட மொழிகளிலும் ஒரு பாடலை வைத்தார். அவரது படங்களில் உதய சூரியன் சின்னம் வரும். அண்ணா என்ற பெயர் வரும். அண்ணா மறைந்தபிறகு அவரது உருவம் மறைந்து விடாமல், அவரது உருவத்தைக் கொடியில் போட்டுப் பாதுகாத்தவர் எம்.ஜி.ஆர்., என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அதனால் தான் நான் பேசுகிறேன். திராவிட இயக்கத்திற்கு அழிவு வரும் என்கிறார்களே அதனால் பேசுகிறேன். அண்ணா என்ற எழுத்தையும் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தார். சோதனையான காலத்தில் திராவிட இயக்கத்தைப் பாதுகாத்தார்.

இன்றைக்குத் திரைப்படங்களில் எத்தனையோ வன்முறைக் காட்சிகள் வருகின்றன. அரிவாளால் துண்டு துண்டாக வெட்டுகின்ற காட்சிகள், கத்தியால் குத்திக் கொல்லுகின்ற காட்சிகள் வருகின்றன. ஆனால், எம்ஜிஆர் நடித்த எந்தப் படத்திலாவது ரத்தம் கொட்டுகின்ற காட்சிகள் உண்டா? குரூரமான காட்சிகள் உண்டா? வன்முறை உணர்வை ஏற்படுத்துகின்ற காட்சிகள் உண்டா?

எம்.ஜி.ஆரின் சண்டைக்காட்சிகள் போர்த்திறனையும் வீரத்தையும் ஊட்டின. வக்கரித்துப் போன ஆத்திர உணர்ச்சியை ஏற்படுத்தவில்லை. அவரது படங்கள் கருத்து களைச் சொன்னது, கொள்கையைப் பேசியது. பிள்ளைகள் திருந்தி வாழ வேண்டும் என்றார். கலையை, தன் வாழ்வைச் சமூக முன்னேற்றத்திற்காகவே ஒப்படைத்துக் கொண்டு பாடு பட்டார்.

அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர்., அவர்களைப் பற்றித் தம்பி பிரபாகரன் அவர்கள் என்னிடம் சொன்ன போது, இவ்வளவு செய்து இருக்கின்றாரே... அவர் இன்னும் பத்து ஆண்டுகள் இருந்திருந்தால் இந்தப் படுகொலைகள் நடை பெற்று இருக்காதே... தமிழ் ஈழம் மலர்ந்து இருக்குமே... என்பதை எண்ணிப் பார்த்தேன். (கைதட்டல்) உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழர்கள் அவரைத் தெய்வமாகப் போற்றுகின்றார்கள். கோடானுகோடித் தாய்மார்கள் உள்ளங்களில் இன்றைக்கும் அவர் வாழ்கின்றார்.

அண்ணா இன்று உயிரோடு இருந்தால் எம்.ஜி.ஆரைப் பற்றி என்ன சொல்வாரோ, அண்ணா இமயம், நான் ஒரு கூழாங்கல், நான் அவரது தொண்டன் என்ற முறையில் எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொல்லுகிறேன்.

அவருடைய நூற்றாண்டு விழாவை நடத்துவதற்கு இந்த அரங்கத்தைத் தந்தவர்களுக்கு நன்றி. நெடுநேரம் அமர்ந்து இந்த எளியவன் உரையைச் செவிமடுத்ததற்கு நன்றி. எம்.ஜி.ஆர். புகழ் என்றைக்கும் நிலைத்து இருக்கும்.

இன்றைக்கு இந்த நூற்றாண்டுத் தொடக்கவிழாவை நடத்தியது போல், நிறைவு விழாவையும் கட்சி சார்பு அற்ற முறையில் நானே நடத்துவேன். வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.

எம்.ஜி.ஆர். புகழ் வாழ்க!

இவ்வாறு பொதுச்செயலாளர் வைகோ உரை ஆற்றினார்.

சங்கொலி, 14.04.2017

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)