திருச்சி மாநாட்டுக்கு அழைக்கிறேன்! வைகோ .
Issues: Politics
Region: Trichy - Urban, Tamil Nadu
Category: Letters, Headlines
திருச்சி மாநாட்டுக்கு அழைக்கிறேன்! வைகோ .
இன்னும் ஐந்து வாரகாலம்தான் இருக்கிறது... திருச்சி மாநகர்தனில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை, திருச்சி மண்டல மாநாடாக நாம் எழுச்சிக் காவியம் தீட்டுவதற்கு, இடையில் இருக்கும் நாட்கள் அதிகம் இல்லை.
திராவிட இயக்க வரலாற்றில், அறிஞர் அண்ணா அவர்களின் நெஞ்சம் கவர்ந்த இத் திருநகரத்தில்தான், கழகம் தேர்தலில் போட்டியிடும் தீர்ப்பைத் தந்தனர், அண்ணாவின் தம்பிகள்.
ஈரோட்டுப் பகலவனுக்கும் களங்கள் அமைக்க உந்துதல் தந்த இம்மலைக் கோட்டைப் பட்டணத்தில்தான், பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர், நம் இயக்கம் அடித்தளம் கண்டது.
கரூரும், பெரம்பலூரும் உள்ளடக்கியதாக இருந்த அந்நாள் திருச்சி மாவட்டத்தைக் கருத்தில் கொண்டால், அண்ணாவின் இயக்கத்தில் நச்சுமரமாக எழுந்த வாரிசு அரசியலை எதிர்த்து நாம் தொடங்கிய அறப்போருக்குக் களப்பலியாக நெருப்பிலே தன் ஆவியைத் தீய்த்த தண்டபாணியும், உதயனும், வீரப்பனும் இந்த மண்டலத்தில்தான் பிறந்து வாழ்ந்தனர் என்பதும் மறக்கவும் கூடுமோ?
இயக்கம் உதித்த நாள் முதல் அடுக்கடுக்காய் நம்மை மோதிய அல்லல்கள் எத்தனை? இன்னல்கள் எத்தனை? துயரங்கள் எத்தனை? பணபலத்தாலும், அதிகாரச் செருக்காலும், ஊடக ஆக்கிரமிப்பாலும் நம்மை நிர்மூலம் செய்திட கெடுமதியாளர் போட்ட திட்டங்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாகி விட்டன.
மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியின் கொடுமுடியில் பெருமிதம் கொள்ளவில்லை, எனினும் நாம் வீழ்ந்துவிடவில்லை. ஈரோட்டுத் தியாக வேங்கை கணேசமூர்த்தி நம் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார் என்பது மனக்காயத்திற்கு மருந்தாயிற்று.
அரிமா நோக்கு என்னும் வகையில் நாம் பயணித்த பாதையை ஆராய்வோமானால், நாம் சாதித்தவை மகத்தானவை. இதே திருச்சியில் தான், 93 டிசம்பர் 26 இல் நம் பொதுக்குழு கூடியது. என்னைப் பொதுச் செயலாளர் ஆக்கியது.
தலைநகர் சென்னையில், 1994 ஏப்ரல் 16 இல் தமிழகம் கண்டிராத எழுச்சிப் பேரணி. பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி, இலட்சக்கணக் கானோர் அணிவகுக்க, மறுநாள் வைகறையையும் கடந்து பொழுது புலரும் வேளையில் நிறைவுற்றது.
அதே, 1994 இல் முக்கடல்கள் சங்கமிக்கும் குமரிமுனையில் தொடங்கி 19 மாவட்டங்களைக் கடந்து 52 நாட்கள் நாம் மேற்கொண்டோம், 1600 கிலோ மீட்டர் எழுச்சி நடைப்பயணம் இயக்கத்திற்கு பொன்னேடு ஆகியது. காவிரி தீரத்தில் இதே திருச்சி மாநகரில்தான் 1995 ஜூன் 30, ஜூலை 1, 2 ஆகிய நாட்களில் நம் மாநில மாநாட்டை நடத்தினோம். உலகுவாழ் தமிழர்கள் அனைவர் சிந்தையிலும் தேன்பாயச் செய்த தனித்தமிழ் ஈழப் பிரகடனம் செய்தோம்.
பின்னர் 1996 இல் மதுரை மூதூரில் தேர்தல் சிறப்பு மாநாடு. அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை, பார்போற்றும் வகையில் 1998 செப்டம்பர் 15 இல் தலைநகரில் மறுமலர்ச்சிப் பேரணி நடத்தி, அண்ணன் கண்ணுறங்கும் கடற்கரையில் மக்கள் கடலாக விழா எடுத்தோம். இந்தியாவின் தலைமை அமைச்சர் மாண்புமிகு அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள் அதில் பங்கேற்றதோடு, ‘அண்ணாவின் கனவான சேதுக் கால்வாய்த் திட்டத்தை நனவாக்குவோம்’ என அறிவிக்கவும் செய்தார்.
அந்த விழாவில், மாநில உரிமைக்கு முரசு கொட்டும் அகாலிதளமும், தேசிய மாநாட்டுக் கட்சியும் கலந்து கொண்டன. அன்றைய காஷ்மீரத்து முதல்வர் பரூக் அப்துல்லாவும், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலும் அண்ணா விழாவுக்குப் பெருமை சேர்த்தனர்.
1999 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் கொள்கைக்குக் கூர்தீட்டும் மாநில சுயாட்சி மாநாடு. மத்திய அரசின் அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் அம்மாநாட்டில் முழங்கினர்.
அதனை அடுத்து 2000 ஆம் ஆண்டு ஈரோட்டில் தமிழக எழுச்சி மாநாடு. பேருந்து நிலையத்தில் ஊர்திகள் வந்துசெல்வதுபோல் மாநில முதல்வர் களும், அகில இந்தியத் தலைவர்களும் மாநாட்டில் பங்கேற்க வந்து திரும்பிய வான் ஊர்திகள், மாநாட்டுப் பந்தலுக்குமேல் பறந்த காட்சியைத் தமிழகம் முதன்முறையாகக் கண்டது. தன்மானம் காத்திடும் உணர்ச்சியோடு, கோவையில் துரித வேகத்தில் 2001 இல் தேர்தல் சிறப்பு மாநாட்டைச் சிதம்பரம் பூங்காவில் நடத்தினோம்.
அதன்பின்னர், 19 மாத காலம் ஈழத்தமிழருக்காய் சிறைவாசம். 2004 இல் சீருடை அணிந்த தொண்டர் படையினர் 3000 பேரோடு மேற்கொண்ட 1200 கிலோ மீட்டர் மறுமலர்ச்சி நடைப்பயணம் நம் சாதனைக் காவியமாயிற்று.
2006 ஆம் ஆண்டு, தலைமை நிர்வாகப் பணிகளில் இருந்த இருவர் பதவிக்கும், பணத்திற்கும் பலியாகி, துரோகம் செய்தபோது அடிபட்ட வேங்கையென கழகம் எழுந்தது. வசதிகளற்ற நிலையில், பொருளாதாரச் சிரமங்கள் வருத்தியபோதும், கொட்டப்படும் இலட்சங்களை, நம் பொதுக்குழு உறுப்பினர்கள் கால்தூசு என உதறி, கழகத்தைக் காத்தனர். அரும்பாடுபட்டு உருவாக்கிய நம் தாயகத்தைத் தருக்கர் கூட்டம் கைப்பற்றவிடாது பாதுகாத்தோம்.
2007 ஆம் ஆண்டு கோவையிலும், விழுப்புரத்திலும் நாம் நடத்திய மாநாடுகள் மாற்றாரை மருள வைத்தன. 2007 செப்டம்பர் 15இல், அண்ணனின் பிறந்த நாளைச் சென்னையில் தீவுத்திடல் மாநாடாக்கி வெற்றி கண்டோம். கடந்த வருடம் அறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு தொடங்கிடும் விழாவை, மாநகர் மதுரையில் மண்டல மாநாடாக நடத்தி பல இலட்சம் பேர் பங்கேற்கச் செய்தோம்.
அறிஞர் அண்ணா அவர்கள் எப்படி அனைவரையும் அரவணைத்து உடன் பிறந்தோராகக் குடும்பப் பாசத்துடன் இயக்கத்தை நடத்திச் சென்றாரோ, அதே வழியில் நாமும் பயணிக்கிறோம்.
அதிகார அரசியலில் வெற்றிகளும், பதவிகளும் பெறாவிடினும் கொள்கை அரசியலில் நாம் குன்றென நிமிர்ந்து நிற்கின்றோம். அதனால்தான் தேர்தல் களத்தில் தோல்விகள் வளைத்தபோதும் நீங்கள் துவண்டு விடவில்லை. அயர்வுக்கு ஆளாகவில்லை. சோர்வுக்கு ஆட்பட வில்லை. அந்த உணர்ச்சியைத்தான், ஜூன், ஜூலை மாதங்களில் இப்போது அனைத்து மாவட்டங்களில் நேரில் கண்டேன். நம்பிக்கை மங்காத உணர்ச்சியையும், உறுதியையும் உங்கள் வீரத் திருவிழிகளில் கண்டு ஊக்கம் பெற்றேன், உவகை கொண்டேன்.
கழகத்தின் அமைப்பை வலுப்படுத்த வேண்டும். கட்டுமானப் பணிகளை முனைப் படுத்த வேண்டும். கழகம் மேலும் வளர புது இரத்தம் தேவை. இளம் பிராயத்தினரைப் புதிதாக இயக்கத்தில் சேர்த்தாக வேண்டும். உறுப்பினர் சேர்ப்பதற்கு உரிய படிவங்களை நிர்வாகிகளும், தோழர்களும், ஆர்வமாகப் பெற்றுச் சென்றனர். அதன் மூலம் இயக்கத்திற்குக் கணிசமான நிதியைத் தந்தனர்.
கழகத்தில் எந்தச் சலனமும் இல்லை. எந்தச் சக்தியாலும் இனிச் சேதாரத்தை ஏற்படுத்த முடியாது.
நம் நெஞ்சில் மறையாத தத்துவக் கவிஞரின் குடும்பத்தினருக்கு நம் பொருளாதாரச் சக்தியைமீறி, இல்லங்கள் கட்டித்தந்த பணியை, ‘இன்றைய அரசியலில் ஓர் ஆச்சர்யமான சம்பவம்’ என்று ‘குமுதம்’ ஏடு பாராட்டியது.
இதே காலகட்டத்தில் நம் உள்ளத்தில் ஏற்பட்டுள்ள இரணம் ஆற்ற முடியாதது. தமிழ் ஈழத்தில் நடைபெற்ற பேரழிவும், மரண பயங்கரமும், நம் இருதயங்களில் இரத்தத்தைக் கொட்டச் செய்தது. நினைப்பதற்கே நெஞ்சு நடுங்குகிறது.
ஈழத் தமிழரைக் கொன்று குவித்த ஈவு இரக்கமற்ற சிங்கள அரசின் கோரதாண்டவத்துக்கு முழுக்கவும் துணை செய்த இந்திய அரசின் துரோகம், தமிழக மக்களால் என்றைக்கும் மன்னிக்க முடியாதது. இந்தக் குற்றச்சாட்டை ஆதாரங்களாக நாம் தொகுத்து வெளியிட்ட ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்ற நூல், தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இந்திய அரசு செய்த துரோகத்தை அம்பலப்படுத்தும் முக்கிய ஆவணமாக ஆகி விட்டது.
செப்டம்பர் 15 இல் நடைபெறும் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுக்கு, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆருயிர்ச் சகோதரர் அ.மலர்மன்னன் தலைமை ஏற்கிறார். திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் ஆருயிர்ச் சகோதரர் மண்ணச்ச நல்லூர் ஆர்.நடராசன் மாநாட்டைத் திறந்து வைக்கிறார்.
என் ஆருயிர்ச் சகோதரர்களான புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் டாக்டர் க.சந்திரசேகரன் வரவேற்பு உரை ஆற்றிட, பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் கு.சின்னப்பா கழகக் கொடிதனை உயர்த்திட, அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் டி.என்.ஷேக்முகமது அறிஞர் அண்ணா சுடர் ஏற்றிவைக்க, தீர்மானக்குழுச் செயலாளர் மு.தமிழ்மாறன் அறிஞர் அண்ணா ஓவியக் கண்காட்சியைத் திறந்து வைக்க, தஞ்சை மாவட்டப் பொறுப்புக்குழுத் தலைவர் கோ.உதயகுமார் திராவிட இயக்கத் தலைவர்கள் படத்தையும், அமைப்புச் செயலாளர் சி.கண்ணையன் தந்தை பெரியார் திரு உருவப் படத்தையும், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் புலவர் க.முருகேசன் அறிஞர் அண்ணா திரு உருவப் படத்தையும், நாகை மாவட்டச் செயலாளர் மா.மகாலிங்கம் மொழிப்போர் தியாகிகள் படத்தையும், திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளர் எம்.ஏ.முப்பால் ஈழத்தமிழர்களுக்காக உயிர் நீத்த தியாகிகளின்படத்தையும் திறந்து வைத்திட, கரூர் மாவட்டப் பொறுப்புக்குழுத் தலைவர் பரணி கே.மணி அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மலரை வெளியிட, மாநில மகளிர் அணித் துணைச் செயலாளர் கிரிஜா சுப்பிரமணியம் அதனைப் பெற்றுக் கொள்ள,சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் வீரபாண்டியன் அன்பில் தர்மலிங்கம் திரு உருவப் படத்தைத் திறந்துவைக்க, மாநில மாணவர் அணிச் செயலாளர் த.கங்கை செல்வன் தீக்குளித்த மறுமலர்ச்சி தி.மு.க. தியாகிகள் படங்களைத் திறந்திட, திருச்சி மாநகர் மாவட்டத் துணைச் செயலாளர் வெல்லமண்டி சோமு நன்றி தெரிவிக்கவும் எழிலும் எழுச்சியுமாக நம் மாநாடு நடைபெற இருக்கிறது.
அறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு மலர் வடிவமைக்கும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இப்பணியில், மலர் வெளியீட்டுக் குழுவினர் நமது பாசமிகு அன்புச் சகோதரர்களான மு.செந்திலதிபன், ஆ.வந்தியத் தேவன், பெல் இராசமாணிக்கம், ராஜன் இளமுருகு ஆகியோர் முனைப்பாக ஈடுபட்டு உள்ளனர். அறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா ஓவியக் கண்காட்சியை சிறப்பாகஅமைப்பதற்கான பணிகளை தம்பி மின்னல் முகமது அலி தன் சகாக்களுடன் மேற்கொண்டு வருகிறார்.
மாநாட்டில் நானும், ஆருயிர்ச் சகோதரர்களான பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன், கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத், அரசியல் ஆலோசனைக் குழுச் செயலாளர் திருப்பூர் சு.துரைசாமி, ஆட்சி மன்றக் குழுச் செயலாளர் அ.கணேசமூர்த்தி எம்.பி., அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் மு.செந்திலதிபன், இளைஞர் அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம் ஆகியோரும் கழக முன்னணியினரும் உரை ஆற்றுகிறோம்.
மாநாட்டுக்கான வேலைகளை திருச்சியிலும் அம்மண்டலத்திலும் நம் நிர்வாகிகள் படுவேகமாகச் செய்து கொண்டு இருக்கிறார்கள். மாநாடு பற்றிய அறிவிப்பு மக்களுக்குப் போய்ச் சேரும் வகையில் தமிழகத்தில் பல இடங்களில் நம் தோழர்கள் வண்ண எழுத்துக்களில் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர்.
இதுவரையில் அந்தப் பணியில் ஈடுபடாத தோழர்கள், இனியாவது தாமதம் செய்யாமல் அந்த வேலையைச் செய்ய வேண்டுகிறேன். உங்களின் பொருளாதாரக் கஷ்டங்களை நான் நன்கு உணர்ந்தவன். எனினும், உரிமையோடு உங்களை வேண்டுகிறேன்.
மாநாட்டுக்கு உங்கள் பகுதிகளிலும் ஊர்களில் இருந்தும் தோழர்களையும், தமிழ் உணர்வாளர் களையும் அழைத்து வாருங்கள். அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யுங்கள்.
ஆடி 18ஆம் பெருக்கில் 60களுக்கு முன்பு காவிரி பொங்கிப் பிரவகித்ததுபோல் மக்கள் வெள்ளம் திருச்சியை முற்றுகை இடட்டும். நம் இயக்கத்தின் மூலபலம் கண்டு தமிழகம் திகைக்கட்டும்.
செப்டம்பருக்குப் பின்னர் ஆறு மாத காலத்திற்கான அடுத்த கட்ட வேலைத் திட்டத்தை மாநாட்டில் அறிவிப்போம். உங்கள் மனத்தை மகிழ்விக்கும் அறிவிப்புகளும் மாநாட்டில் இடம் பெறும்.
மாவட்டச் செயலாளர்கள் தங்களின் மாவட்டங்களில் கழக அமைப்புகளை ஊக்குவித்து முழுமூச்சாக அப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் அவர்களுடைய பணிக்கு உதவுகின்ற வகையில் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப் பட்டு உள்ள தோழர்கள் கடமை உணர்வோடு செயலாற்றி வருகிறார்கள் என்பதும் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.
அந்த உவகை உணர்ச்சியோடும் ஒளிமயமான எதிர்காலம் குறித்த நம்பிக்கையோடும் அழைக்கிறேன், திருச்சி மாநாட்டுக்கு வாருங்கள்.

