கருத்து உரிமையைக் காக்க, தமிழ் ஈழத்தை அமைக்கச் சூளுரைப்போம்! வைகோ

Issues: Human Rights, International, Law & Order, National, Srilanka

Region: Chennai - North, Tamil Nadu

Category: Headlines, Speeches

Date: 
Thu, 26/08/2010

கருத்து உரிமையைக் காக்க, தமிழ் ஈழத்தை அமைக்கச் சூளுரைப்போம்!

சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில், 6.8.2010 அன்று கருத்து உரிமைக் களத்தின் சார்பில், மாபெரும் மக்கள் எழுச்சிப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கருத்து உரிமை பறிக்கப்படுவதையும், சிங்கள இனவெறி அரசு நிகழ்த்திய போர்க் குற்றங்களை மறைக்கும் போக்கையும் கண்டித்து நிகழ்த்தப்பெற்ற இக்கூட்டத்தில், ஆர்.நல்லகண்ணு, புலவர் புலமைப் பித்தன் பழ.கருப்பையா, தமிழருவி மணியன், தமிழ்முழக்கம் சாகுல் அமீது, கொளத்தூர் மணி, டாக்டர் கிருஷ்ணசாமி, தோழர் தியாகு, பெ.மணியரசன், பேராசிரியை சரஸ்வதி, வழக்கறிஞர் அஜிதா ஆகியோர் உரையாற்றினர். கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரை...


அறத்தினால் வீழ்ந்து விட்டாய்
மறத்தினால் வீழ்ந்து விட்டாய்
வீரத்தால் வீழ்ந்து விட்டாய்
உண்மையால் வீழ்ந்து விட்டாய்
மானத்தால் வீழ்ந்து விட்டாய்
சுருளலை வெள்ளம் போலத்
தொகையிலாப் படைகள் கொண்டே
மருளுறு பகைவர் வேந்தர் வலிமையால் புகுந்த வேளை
உருளுக தலைகள், மானம் ஓங்குக என்றே நின்றாய்!


என, வீழ்ந்த பெல்ஜியத்துக்கு, மகாகவி கவிஞன் பாரதி, தன் ஆவேச உணர்ச்சியைப் புலப்படுத்தியது போல, இந்திய அரசு செய்த துரோகத்தால், அணு ஆயுத வல்லரசுகளாகத் திகழ்கின்ற ஆறு சக்தி வாய்ந்த நாடுகளின் ஆயுத பலத்தால், நான்காவது ஈழப்போரில், தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் தோற்று இருப்பினும், மீண்டும் ஒரு போர் எழும்; அதற்குத் தாய்த் தமிழகம் தோள் கொடுக்கும் காலமும் வரும் என்ற உணர்வுகள் சிந்தையில் நிறைந்து இருக்கின்ற என்னுடைய அருமைச் சகோதரன், காற்றுக்கு என்ன வேலி? தமிழனின் உணர்ச்சிக்கு என்ன தடை? என்று, உணர்வாளர்கள் உள்ளத்தில் முத்திரை பதித்து இருக்கின்ற புகழேந்தி தங்கராஜ் அவர்கள், அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு, கருத்துக் களம் அமைத்து, ஜனநாயகம் காக்கக் குரல் கொடுக்கின்ற இந்த மேடையை அமைத்து இருக்கின்றார்.


இலட்சியங்களை நேசிக்கின்ற கொள்கையாளர்கள் இங்கே உரை ஆற்றி இருக்கிறார்கள். மாவீரர் தினத்தை, மக்கள் மனதில் பதிய வைப்பதற்காக, நானும், எனது ஆருயிர் அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களும் உரை ஆற்றிய அந்தக் கூட்டத்தில், மணி பத்தைக் கடந்து விட்டது; பேச்சை நிறுத்து என்று காவல்துறை அதிகாரி, என் ஒலிபெருக்கிக்கு முன்னால் வந்து குரல் கொடுத்தார். இதுபோலத் திரண்டு இருந்த கூட்டம், வாலிபச் சிங்கங்கள், வரிப்புலி இளைஞர்கள், ஆத்திரத்தோடு அந்தக் காவல்துறை அதிகாரியைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களைக் கட்டுப்படுத்தி அமர வைத்து, எய்தவன் இருக்கக் கணையை நோவானேன்? எஜமானன் கட்டளை-இந்தக் காவல்துறை அதிகாரி நம்மிடம் வந்து சிக்கிக் கொண்டார், அவரை அனுப்பி வையுங்கள் என்று அனுப்பி வைத்தோம்.


ஆகையால், அப்படி ஒரு சிக்கலுக்கு இங்கே காவல்துறை அதிகாரிகள் இங்கே முன்வர மாட்டார்கள். (பலத்த கை தட்டல்) மிரட்டுவதாகக் கருத வேண் டாம்.

மிரட்டிப் பழக்கம் இல்லை எனக்கு. வழக்குப் போடுவதாக இருந்தால், என் மீது போடுங்கள். ஒலி,ஒளி அமைப் பாளருக்கு அதுதான் வாழ்க்கை; அவரைத் துன்புறுத்தாதீர்கள். அதிக நேரம் பேசியதற்காகத்தானே அடக்கு முறைச் சட்டத்தை, என்னுடைய அருமைச் சகோதரன் சீமான் மீது ஏவி இருக்கிறீர்கள்.

சென்னை மாநகரக் காவல்துறைக்குத் தற்காலிகமாகத் தலைமை ஏற்று இருக்கின்ற அதிகாரிக்குச் சொல்லுகிறேன். இந்த உரையைப் பல பேர் செவிமடுத்துக் கொண்டு இருப் பார்கள். அலைபேசியில் மட்டும் அல்ல, வேறு பல கருவிகளின் வழியாகவும் கேட்டுக் கொண்டு இருப்பார்கள். ஏனென்றால், அவர்களுக்கு இந்த மேடையில் அமர்ந்து இருப்பவர் களுடைய உணர்வுகள் தெரியும். இதில் என்ன வழக்குப் போடலாம்? யார் மீது வழக்குப் போடலாம்? என்று ஆராய்ந்து கொண்டு இருப்பார்கள்.


ஒற்றர் படை ஏற்கனவே இங்கே வேகமாக இயங்கிக் கொண்டு இருக்கிறது. ஒளி நாடாக்களில் பதிவு செய்து கொண்டு இருக்கிறார்கள். அதிலும் காவல் துறையினரே பதிவு செய்து கொண்டு இருக்கிறார்கள். காவல்துறை அதிகாரி களுக்குச் சொல்லுகிறேன். இந்தக் கூட்டத்தால் எவருக்கும் தொல்லை இல்லை.

பசியோடும், உறக்கத்தை உதறி விட வேண்டும் என்ற எண்ணத்தோடும், உணர்ச்சியுள்ள தமிழர் கூட்டம் இங்கே திரண்டு இருக்கிறது. தாணா தெருவில் நடைபெறுகின்ற இந்தக் கூட்டம், நடுநிசி வரையில் நடைபெறுவதால், எவருக்கும் தொல்லை இல்லை.


இன்னும் சொல்லப் போனால், இல்லங்களில் இருக்கின்ற தாய்மார்களும், சகோதரிகளும்கூட, ஈழத்தமிழ் மக்களுக்காக அவர்களது நெஞ்சில் வடிகின்ற குருதியை, எடுத்துச் சொல்லுகின்ற செய்திகள் தாக்குகின்றபோது, அவர்களது உள்ளங்கள் உடைவதை, நானிலத்தில் தமிழ்ச் சாதி நாதியற்றுப் போய் விட்டதா என்ற கவலையோடு அவர்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.


அண்ணா சாலையில் தி.மு.க.வுக்கு மட்டும் அனுமதியா?


சென்னை மாநகரத்தின் ராஜ பாட்டையாம் அண்ணா சாலையில், பரபரப்பான பகல் நேரத்தில் செல்வோருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும்.

மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியது இருக்கும்; அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியது இருக்கும். போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சென்னை மாநகரத்தின் நட்ட நடு வீதியில், அண்ணா சாலையில், நேற்று முன்தினம், முதல் அமைச்சருடைய அருமை மைந்தன், இளவரசுப் பட்டம் கட்டப்பட்டு இருக்கின்ற துணை முதல் அமைச்சர் அறிவித்தார் என்பதற்காக, எந்த அடிப்படையில் பல மணி நேரம் போக்குவரத்தை நிறுத்தி வைத்து, நெடுஞ்சாலையில் மேடை அமைப்பதற்கு அனுமதி கொடுத்தீர்கள்?


எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல் அமைச்சர் நீதிமன்றத்தில் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் வாய்தா கேட்கிறார் என்று சொல்லி, ஒரு ஆர்ப்பாட் டத்தை நடத்துவதற்கு, எந்த அடிப்படையில் அனுமதி கொடுத்தீர்கள்? தமிழர் நலங் காக்கும் ஆர்ப்பாட்டமா? முல்லைப் பெரியாறு உரிமை காக்க ஆர்ப்பாட்டமா? ஈழத்தமிழர்களைக் காப்பதற்கான ஆர்ப்பாட்டமா? சிங்களத் தூதரகத்தை அகற்று என்பதற்கான ஆர்ப்பாட்டமா? எந்த அடிப்படையில் நீங்கள் அனுமதி கொடுத்தீர்கள்?


பகலில், பல லட்சக்கணக்கான மக்கள் பரபரப்பாக இயங்குகின்ற சாலையில், போக்கு வரத்தை நிறுத்தி வைத்து, ஆளுங்கட்சியின் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கொடுத்த காவல்துறை, தாணா தெரு மேடைப்பக்கம் வரவே வராது. (பலத்த கைதட்டல்)


ஜனநாயகத்தின் கரு அறுக்கும் கருணாநிதி


இங்கே மணியரசன் குறிப்பிட்டார். பேசுவதற்கு உரிமை கிடையாது, சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு அனுமதி கிடையாது. எங்கள் நெஞ்சில் நேசிக்கின்ற பிரபாகரன் படத்தைத் துhக்கிச் செல்வதற்கு அனுமதி கிடையாது. செல்பேசிகளின் வழியாக, குறுஞ் செய்திகளை அனுப்புவதற்குக் கூட அனுமதி கிடையாது. முள்ளிவாய்க்கால் துன்பம் குறித்து, ஈழத்தமிழர்களின் அவலம் குறித்து, ராஜபக்சே கூட்டத்தின் கோரத் திருவிளை யாடல்கள் குறித்து, குறுஞ்செய்தி அனுப்பிய 26 தோழர்களைக் கைது செய்து, முதல் அமைச்சர் குடும்பத்துக்காக நடத்திய தம்பட்ட மாநாட்டைப் பற்றி விமர்சித்ததற்காக, காவல் நிலையத்தில் அவர்களைக் கடுமையாக அடித்து உதைத்து, கோவை மத்திய சிறையில் அடைத்தார்கள். இப்படிப் பல வழிகளில் அடக்குமுறைகளைக் கையாண்டு, தமிழகத்தில் ஜனநாயகத்தைக் கரு அறுக்கின்ற வேலையில் காவல்துறையை முதல் அமைச்சர் ஏவி விட்டு இருக்கின்றார்.


முதல் அமைச்சர் அவர்களே, மென்மெலும் தவறுகளைச் செய்து, பழிக்கு ஆளாகி விட்டீர்களே, நீங்கள் சரித்திரத்தில் தூக்கி எறியப்படுவீர்கள். பெற்ற பெயர், புகழ் அனைத்தையும் நீங்களே பாழாக்கிக் கொண்டீர்கள். இது அரசியல் கட்சி மேடை அல்ல.


எவ்வளவு பெரிய வீழ்ச்சி?


விநாச காலே விபரீத புத்தி என்று மும்பை நகரிலே ஜெயப்பிரகாஷ் நாராயண் பேசினார். கூடி இருந்த மக்கள் கடலே ஆரவாரித்தது. அதே பேச்சை தில்லி ராம்லீலா மைதானத்தில், 1975 ஆம் ஆண்டு, ஜூன் 25 ஆம் நாள் அவர் முழங்கியபோது, டெல்லி நகரமே குலுங்கியது. அந்த இரவிலேயே உள்நாட்டு நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார் அம்மையார் இந்திரா. அவர் செய்த மிகப்பெரிய தவறாக அது அமைந்தது. அறிவிப்பை முதலில் வெளியிட்டு விட்டு, அதற்குப் பிறகுதான் அமைச்சரவைக்குத் தெரிவித்தார்.


அன்று இரவு, இந்தியத் தலைநகரில், பத்திரிகை அலுவலகங்களுக்கு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. பொழுது விடிவதற்கு உள்ளாகவே, ஜெயப் பிரகாஷ் நாராயண் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டு, சிறைக் கொட்டடியில் பூட்டப்பட்டார்கள்.


அப்போது செல்போன்கள் கிடையாது. 26 ஆம்தேதி தகவல் வருகிறது. அன்றைக்கே நீங்கள் அறிவித்தீர்கள். நாளை காலை 11 மணிக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூடும் என்று. 27 ஆம் தேதி, செயற்குழு கூடியது. சர்வாதி காரத்துக்கான கால்கோள் விழாவை இந்திரா காந்தி அம்மையார் நிலைநாட்டி விட்டார் என்று நீங்கள் ஒரு தீர்மானத்தை வடித்தீர்கள். இதே நாவால் நான் உங்களைப் பாராட்டி நாடு முழுவதும் உரை ஆற்றினேன். இந்திய அரசியலின் மேக்னா கார்ட்டா அந்தத் தீர்மானம் என்று நான் பாராட்டி இருக்கிறேன். அந்தக் கட்சியின் தலைவரா நீங்கள்?


யாரைச் சிறையில் அடைத்தால் என்ன, நாங்கள் எதிர்ப்போம் என்று, இந்திரா காந்தி அம்மையாரை ஹிட்லராகச் சித்தரித்து, முரசொலியில் கருத்துப் படம் வெளியிட்டீர்களே, அந்தக் கலைஞரா நீங்கள்?


சுதந்திரத்தின் காற்றை இங்கேதான் சுவாசிக்கிறேன் என்று நம்பூதிரிபாடு இங்கே வந்து பேசிவிட்டுப் போகிற அளவுக்குப் பெருமை பெற்ற கலைஞரா நீங்கள்?


எவ்வளவு பெரிய வீழ்ச்சி? இனத்துரோகி, ஜனநாயகத்தைப் படுகொலை செய்கின்ற ஒரு பாசிச வெறி பிடித்த முதல் அமைச்சர் என்ற இந்தப் பழிகளையெல்லாம், வரலாற்றில் நீங்கள் எதைக் கொண்டும் துடைத்து விட முடியாது, கலைஞர் அவர்களே. (பலத்த கைதட்டல்)


சர்வாதிகாரிகளுக்கு நேர்ந்த கதி


1976 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற் றக் கழக ஆட்சி கலைக்கப்பட்டபோது, தமிழகத்திலேயே முதலில் கைது செய்யப்பட்டவன் நான். ஓராண்டுக் காலம் சிறையில் இருந்து தி.மு.க.வில் கடைசியாக விடுதலை செய்யப்பட்ட வனும் நான்தான். அடக்குமுறையை எதிர்த்துக் கொட்டடிக்கு உள்ளே அடை பட்டுக் கிடப்பது ஒன்றும் எங்களுக்குத் துன்பம் இல்லை. செங்கோல் ஏந்த வேண்டிய கைகளில், நீங்கள் எதேச் சதிகாரச் சவுக்கை ஏந்தி இருக்கிறீர்கள்.


நினைவூட்டுகிறேன். உலகின் பல நாடுகளில் உரிமைக்குப் போராடிய வர்களே, அந்த உரிமைகளை அழிக்க முனைந்தபோது, அவமானப் புதை குழிக்கு உள்ளே போயிருக்கிறார்கள். அப்படித்தான், இந்தோனேஷியாவின் சுகர்ணோ, மக்கள் மனங்களில் மகுடம் தரித்து அமர்ந்து இருந்தான். அவனே குப்பைத் தொட்டியில் துhக்கி எறியப்பட்டான். பிலிப்பைன்சின் மார்க்கோசுக்கும் அதே கதிதான். வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.


உள்ளாட்சித் தேர்தலில் கொலை வெறியாட்டம்


2006 ஆம் ஆண்டு, கலைஞர் கருணாநிதி முதல் அமைச்சராகப் பொறுப்பு ஏற்ற பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், ஆளும் கட்சி குண்டர்கள் காவல் துறையின் துணையோடு, சென்னை மாநகரில் பட்டப்பகலில் கொடுவாள்களோடு நகர் வலம் வந்து, மக்களைத் தாக்கி விரட்டி அடித்தார்கள். இரத்தக்களறி நடத்தினார்கள். வாக்கு அளிக்கவே அனுமதி இல்லை. ஜனநாயகத்தின் கரு அறுக்கப்பட்டது.


அதைக் கண்டித்து, மியூசிக் அகடமியில் ஒரு பொதுக்கூட்டம் நடத்துவதற்கு, அண்ணன் செழியன் முயன்றார். அவர் அரசியல் கட்சியில் இல்லை. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராகவன் உள்ளிட்ட பெருமக்கள் பேசுவதற்கு ஏற்பாடு ஆயிற்று. காவல்துறை அதிகாரிகள் முதல் நாள் மியூசிக் அகடமி அரங்கத்துக்குச் சென்று, நிர்வாகிகளை மிரட்டி, அனுமதி இல்லை என்று அறிவிக்க வைத்தார்கள். அன்றே, கருத்து உரிமையைக் குழிதோண்டிப் புதைக்கத் தீர்மானித்து விட்டார் கலைஞர் கருணாநிதி.


வழக்கறிஞர்களின் கைகால்களை முறித்த கருணாநிதி


ஈழத்தமிழர்களின் படுகொலையால் நெஞ்சிலே எரிந்த நெருப்பு தன் உடம் பிலே எரியட்டும் என்று நெருப்பையே தாகத்துக்காகக் குடித்தானே அந்த வீரத்தியாகி முத்துக்குமார். அவனுடைய சடலம் கொளத்தூரில் கிடந்தது. கண்ணீரும் கம்பலையுமாகத் தமிழ் மக்கள் கதறினார்கள். மாணவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லட்டும் என்று முத்துக்குமார் வேண்டுகோள் விடுத்து இருந்தான். சட்டம் பயின்ற வழக்கறிஞர்கள் களத்துக்கு வந்தார்கள். காவல்துறையை ஏவி, 70 வழக்கறிஞர்களின் கைகால் களை முறித்தீர்கள். கபாலங்களை நொறுக்கினீர்கள். ஈழத்தமிழர்களுக்காக அவர்கள் போராடுகிறார்கள் என்பதற்காக அடித்து நொறுக்கினீர்கள். அந்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் கிடையாது.


அதே வளாகத்தில், நீங்கள் விழா நடத்த வந்தபோது, தங்கள் எதிர்ப்பு உணர்வைக் காட்டுவதற்காகக் கருப்புக் கொடியோடு வந்த வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டார் கள். மீண்டும் பல பேருடைய கை கால்கள் முறிக்கப்பட்டன. இந்திய, தமிழகத் தலைமை நீதிபதிகளுக்கு முன்னால் இந்தத் தாக்குதல் நடந்தது. எந்த நடவடிக்கையும் இல்லை. நிகழ்ச் சியைப் படம் பிடித்த ஒளிப்பதிவாளர்கள் தாக்கப்பட்டார்கள், கேமராக்கள் உடைத்து எறியப்பட்டன.

செய்தியாளர் களைத் தாக்கினார்கள். அவர்கள் மீதே வழக்குப் போடப்பட்டது. ஏடுகளில் செய்தி வர முடியாமல் செய்யப்பட்டது. செய்தியாளர்கள் தாக்கப்படுகின்ற செய்தியைக்கூட, செய்தி ஏடுகளில் வெளி யிட முடியவில்லை தமிழ்நாட்டிலே.


செய்தியாளர்களுக்கும் அடி உதை


வெறும் 65 கோடி ரூபாய்தான் போபர்ஸ் ஊழல். அந்த ஆட்சியையே தூக்கி எறிந்தது, இந்திய மக்கள் ஜனநாயகம். இப்பொழுது ஒரு லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு. இதுபற்றி அமைச்சரிடம் கேள்வி எழுப்ப, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் முயன்றார்கள். அங்கேயே தாக்கப்பட்டார்கள். அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் அல்ல, செய்தியாளர்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள். அதிலே ஒரு பெண் செய்தியாளரும் தாக்கப்பட்டார். இந்தச் செய்தி கூட தமிழகத்து ஏடுகளில் வரவில்லை. செய்தியாளர்கள் பாவம். அவர்கள் எழுதுகிறார்கள். ஆனால், அச்சில் ஏறுவது இல்லை.

முதுகு எலும்பை அடமானம் வைத்து விட்ட முதலாளிகள் அதை அச்சில் ஏற்றுவது இல்லை.


இப்படி ஜனநாயகத்துக்குப் பேராபத்து சூழ்ந்து இருக்கிறது தமிழகத்தில். பாசிசக் கயிறை வீசுகிறவர்களைத் தூக்கி எறியும் மக்கள் சக்தி. கருத்துகளை ஒடுக்கி விட முடியாது, சிறையைக் காட்டி மிரட்டி விட முடியாது.


சொரணை கெட்டுப் போய் விட்டதா?


இந்த மேடையில், ஈழத்தமிழர்களின் துயரங்களைக் குறித்துப் பேசினார்கள். அலைகடல் மீது நம்முடைய மீனவர்கள் தாக்கப்படுகின்ற கொடுமையைப் பற்றிப் பேசினார்கள். நம்முடைய கடலில், பன்னாட்டுக் கடல் பரப்பில், நம்முடைய மீனவர்களை அடித்துக் கொல்கிறான். ஈழத்தில் நம் சகோதரர்களைப் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்ததோடு அவன் நிற்கவில்லை. நமது இளம்பெண்களின் கற்பைச் சூறையாடியது மட்டும் அல்ல, இறந்துவிட்ட சீருடை அணிந்த நம் புலிப் படைத் தங்கையரின் சீருடைகளைக் களைந்து, மிருகங்கள் கூடச் செய்யாத வன்கொடுமையைச் செய்தான். எட்டுத் தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கிச் சுட்டுக் கொன்றான். நாம் ஏழு கோடிப் பேர் இங்கே இருக்கிறோம். வீரமும், மானமும் நிறைந்த இனம் என்று வரலாறு போற்றுகின்ற இனம், இன்றைக்குச் சோற்றால் அடித்த பிண்டங்களாகி விட்டதா? சொரணை கெட்டுப் போய்விட்டதா?


ஏழு கோடிப் பேர் இங்கே இருக்கிறோம் என்பது தெரிந்தும், நமது கடல் எல்லைக்கு உள்ளேயே வந்து, நம்முடைய மீனவனைச் சுடுகிறானே? அம்மணமாக்கிக் கடலில் தூக்கி வீசுகிறானே? படகுகளை உடைத்து நொறுக்கி, வலைகளை அறுத்து எறிகிறானே? ஒருநாள் இருநாள் அல்லவே? என்ன செய்யப் போகிறோம் நாம்? எல்லாம் செய்து விட்டு, இங்கே வந்து விருந்து சாப்பிட்டு, ஊர் சுற்றிப் பார்க்கிறான். ஒரு மலையாளிக்கு இந்தத் துன்பம் என்றால், இப்படி நடக்குமா? ஆந்திரத்தில், மராட்டியத்தில், சீக்கியர்கள் உலவுகின்ற பஞ்சாப்பில், வங்கத்தில் இப்படி ஒரு துன்பம் என்றால், இப்படி நடக்குமா? நடக்க விடுவார்களா?


சீமான் பேசியதில் என்ன தவறு?


அந்த ஆத்திரத்தில், அந்தக் கொலை காரக் கூட்டம் இங்கே உலவுவதா? நாங்கள் கணக்கு எடுத்து வைத்து இருக்கிறோம் என்று சீமான் பேசினார். இதில் என்ன தவறு? (பலத்த கை தட்டல்)


எரிமலை வெடிக்கும்; பூகம்பம் வெடிக்கும் என்று கலைஞர் கருணாநிதி பேசவில்லையா? அப்படி நேர்ந்தால், எத்தனை பேர் சாவார்கள்? நியாயமாக எழுகின்ற கோப உணர்ச்சிக்குப் பாதுகாப்புச் சட்டமா? சிறையில் பூட்டுவதா? தேசம் என்பது என்ன? பாதுகாப்பு என்பது என்ன?


பிரிட்டிஷ்காரன் வருவதற்கு முன்பு இந்தியா என்ற ஒரு நாடே கிடையாது. துப்பாக்கிகளும், லத்திக் கம்புகளும் உருவாக்கிக் கொடுத்ததுதான் இந்தியா என்கின்ற நாடு. நாங்கள் தனிநாடு கேட்டவர்கள். நான் அழுத்தமான திராவிட இயக்கத்துக்காரன். கலைஞர் கருணாநிதியின் கலப்படக் கூட்டத்தைச் சேர்ந்தவன் அல்ல. (பலத்த கைதட்டல்)


இன்றைக்கு நாங்கள் ஒருமைப்பாட்டை ஏற்றுக் கொண்டு இருக்கின்ற இயக்கம் தான். ஆனால், ஒரு நாடு என்கிறபோது, மக்கள்தானே நாடு? பாதுகாப்பு என்றால், அந்த மக்களைத்தானே பாதுகாக்க வேண்டும்? ஒரு குடிமகனின் உயிருக்கு ஆபத்து இழைத்த நாட்டோடு, தூதரக உறவுகளைத் துண்டித்துக் கொள்ளுகின்ற மான உணர்ச்சி கொண்ட நாடுகள் உலகில் இருக்கின்றன. இங்கிலாந்து அப்படிச் செய்தது. ஆனால், இது ஒரு மானங்கெட்ட அரசு, மன்மோகன் அரசு. (பலத்த கைதட்டல்)


குற்றவாளி மன்மோகன் சிங்தான்


இந்தியா என்கின்ற இந்த நாட்டின் குடி மக்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்ற தமிழக மக்களுக்கு, அவர்களுடைய உயிர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வில்லை. நீ கொடுத்த ஆயுத பலத்தால் தான் அவன் அங்குள்ள தமிழர்களைக் கொன்று குவித்தான். இப்போது இங்கே வந்து சுடுகிறான். இதற்கு நீதான் பொறுப்பு. மக்களைப் பாதுகாக்கா விட்டால் நாட்டைப் பாதுகாக்கவில்லை என்றுதான் பொருள். அப்படியானால், பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ளே போக வேண்டியவர் மன்மோகன் சிங் அல்லவா? (பலத்த கைதட்டல்)


சிறைக்கு உள்ளே அடைத்து விட்டால், கருத்து உரிமையை ஒடுக்கி விட முடியுமா?


நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர் கள் என்று கொளத்தூர் மணியைச் சிறையில் பூட்டினீர்கள். என் ஆருயிர்த் தம்பி நாஞ்சில் சம்பத்தைப் பூட்டினீர் களே, தேசப் பாதுகாப்புச் சட்டத்திலே சிறையில் அடைத்தீர்கள். அவர் பிணை விடுதலைபெற்ற நாளன்று இரவிலேயே, மாவட்ட ஆட்சியரிடம் தேசப் பாதுகாப்புச் சட்டத்துக்கான உத்தரவைப் பெற்று, கோவைச் சிறையில் அடைத்தீர்கள். நான் உயர்நீதிமன்றத்தில் என் தம்பி சம்பத்துக்காக வாதாடினேன். பாதுகாப்புச் சட்டத்தை உடைத்து எறிந்தோம்.


ஈழத்தில் எங்கள் மக்களைக் கொல்லுவதற்கு, இந்திய இராணுவத்தின் ஆயுதங்களைக் கொச்சி துறைமுகத்தின் வழியாக எடுத்துச் செல்வதற்கு, தமிழகம் வழியாகச் செல்லுகிறான் என்பதை அறிந்து, பெரியார் திராவிடர் கழகமும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் கோவை நகரின் எல்லையில் ராணுவ வண்டியை மறித்தோம். உன் இயந்திரத் துப்பாக்கிகளுக்கு எங்கள் தோழர்கள் அஞ்சவில்லை. அவர்கள் மீதும் பாதுகாப்புச் சட்டத்தை ஏவினார் கலைஞர் கருணாநிதி. கோவை மத்தியச் சிறையில் கொண்டு போய் அடைத்தார்.


ஜனாதிபதி கொடுத்த சவுக்கடி


ஆனால், பாதுகாப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று சிறையில் இருந்து, இந்தியக் குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை எழுப்பினார்கள். விண்ணப்பத்தை அனுப்பி வைத்தார்கள். தமிழர்களைக் காவு கொடுக்கின்ற கங்காணி வேலை செய்துகொண்டு இருக்கின்ற ஸ்ரீமான் சிதம்பரத்தின் உள்துறை இலாகாவில் இருந்தே கருத்துகளைப் பெற்று, குடியரசுத் தலைவர் பெயரில் ஆணை வந்தது. கலைஞர் கருணாநிதி அரசால் நான்கு பேர் மீது போடப்பட்ட பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. செவிட்டில் அடிப்பதைப் போல இந்த அடி விழுந்ததற்குப் பிறகும், உங்களுக்குப் புத்தி வரவில்லையா? வெட்கங்கெட்டவர்களே, இதற்குப் பிறகுமா நீங்கள் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்துகிறீர்கள்? (பலத்த கைதட்டல்)


போடு வழக்கு


சீமான் பேசியதில் தவறு இல்லை. அதையே நானும் வழிமொழிகிறேன். போடு என் மீது பாதுகாப்புச் சட்டத்தை (பலத்த ஆரவாரம்).


ஏற்கனவே என் மீது எத்தனையோ வழக்குகளைப் போட்டு விட்டீர்கள். தேசத்துரோகக் குற்றச்சாட்டைத் தொடுத்து இருக்கிறீர்கள். அந்தப் பேச்சை நான் மறுக்கவில்லை. மூன்று நாள்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் என்னிடம் கேட்டபோதும் நான் மறுக்கவில்லை. அந்தக் கூட்டத்தில் என்னோடு பேசியவர் மு. கண்ணப்பன். தனித்தமிழ்நாடு உதயமாக வேண்டும் என்று அவர் முழங்கினார். அதை நியாயப்படுத்தி நான் பேசினேன். இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டோம். எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வீர. இளவரசன் மரணத்தின் மடியில் மருத்துவமனையில் இருந்தார். நான் துடித்துக்கொண்டு இருந்தேன். அப்போதும் பிணை கேட்கவில்லை. நான் எதிர்பார்க்கவில்லை.


ஆனால், நீதிமன்றம்,உங்கள் காவல் நீட்டிக்கப்படவில்லை, இப்படியே நீங்கள் போகலாம், அழைக்கும்போது வந்தால் போதும் என்று அனுப்பினார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர்தான் அறிந்து கொண்டேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையோடு, சிறைக் கொட்டடியில் இருந்தே ஒரு பேரம் நடந்து இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். அது அவரது விருப்பம். அவரை நான் விமர்சிக்க விரும்பவில்லை. என்னோடு இருந்து விலகிய யாரையும் நான் விமர்சித்தது இல்லை. ஆனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது, அவர் மீது வழக்கு இல்லை. என் மீது மட்டும் வழக்கு. அவர் மீது வழக்குப் போட வேண்டும் என்பது என் வாதம் அல்ல. ஒரு கண்ணிலே வெண்ணெய், ஒரு கண்ணிலே சுண்ணாம்பு. இதுதான் கலைஞர் கருணாநிதியின் கருப்புக் கண்ணாடி.


உரிமைப் போராட்டத்தை நசுக்க முடியாது


நான் பேசினேன். எங்கள் மக்களைப் படுகொலை செய்து விட்டார்கள்; எங்கள் தொப்புள் கொடி உறவுகள் போர்க்களத்தில் நிற்கிறார்கள்; ஐந்தாறு வல்லரசுகளின் ஆயுத பலத்தோடு அவன் தாக்குகிறான்; அவர்களைக் காக்க வேண்டும்; ஏ.... இந்திய அரசே, நீ சிங்களவனுக்கு ஆயுதம் கொடுக்கிறாய், தமிழர்களை அழிக்க முயற்சிக்கிறாய். இதே நிலைமை நீடிக்குமானால், எங்கள் தொப்புள் கொடி உறவுகளைக் காப்பதற்கு, எங்கள் தமிழகத்து வாலிபர்கள் கடல் கடந்து செல்வார்கள்; ஆயுதம் ஏந்துவார்கள். தமிழ்நாட்டில் என்று சொல்லவில்லை. அங்கே சென்று ஆயுதம் ஏந்திப் போராடுவார்கள். அப்படி ஒரு கட்டம் வருகிறபோது, நானும் செல்வேன் என்று பேசினேன்.


இதில் என்ன தவறு? இன்றைக்குக் கூட ஒரு நாளேடு அதை விமர்சித்து இருக்கிறது. அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. அது அவர்கள் உரிமை. அருமைத் தோழர் தா. பாண்டியனை விமர்சிப்பதாகச் சொல்லி, என்னை விமர்சித்து இருக்கிறார்கள்.


நான் கேட்கிறேன். என்ன தவறு? உலகம் முழுவதும் சேகுவேராவைப் போற்றுகிறார்கள். அவன் பிறந்தது அர்ஜெண்டைனாவில். கியூபாவில் இருக்கின்ற ஃபிடல் கேஸ்ட்ரோ அவனுக்குத் தொப்புள் கொடி உறவா? டாக்டருக்குப் படித்தவன், ஆஸ்துமா நோயைச் சுமந்து கொண்டு நின்றவன், இன விடுதலைப் போராட்டங்கள் நடைபெறுகின்ற நாடுகளுக்கெல்லாம் செல்லத் துடித்தவன், கியூபா நாட்டுக்குச் சென்று, அவனும் துப்பாக்கி ஏந்திப் போராடினானே? மனித குலத்தில் எங்கெல்லாம் அடக்குமுறை நடக்கிறதோ அதை உடைப்பேன் என்று சொன்ன அவனை உலகம் முழுவதும் பாராட்டுகிறதே? அதே உணர்வு, இங்கேயும் வரும். அத்தகைய உணர்ச்சி பெறுகின்ற இளைஞர்கள் கண்டிப்பாகப் போவார்கள். அதைத்தானே பேசினோம்? அதற்கெல்லாம் அடக்குமுறையை ஏவி மிரட்டாதீர்கள். உங்கள் மிரட்டல் எடுபடாது.


அடக்குமுறையைப் பயன்படுத்தி உரிமைகளை நசுக்கியதாக வரலாறு கிடையாது. நம்முடைய உள்துறை அமைச்சர் சிதம்பரம், சில நாள்களுக்கு முன்னர் கோபாலபுரத்துக்கு வந்து இவரைச் சந்தித்தார். வெளியில் வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேட்கிறார்கள். தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்றார்கள் என்று.

அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே? ஒரேயொரு சம்பவம்தான் நடைபெற்று இருக்கிறது என்கிறார். செய்தி ஏடுகளில் வந்து இருக்கிறது.


சிதம்பரம் அவர்களே, நீங்கள் சொன்ன அதே காலகட்டத்தில் மட்டும், ஏழு முறை தாக்குதல் நடைபெற்று இருக்கிறது. மக்களை முட்டாள்களாக ஆக்கலாம் என்று கருதுகிறீர்களா?


இராஜபக்சேயைப் பாதுகாக்கத் துடிப்பது ஏன்?


இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக நிறுத்தும்போது, அவனைப் பாதுகாக்க இந்திய அரசு துடிக்கிறதே ஏன்? இவர்கள்தான் திட்டம் வகுத்துக் கொடுத்தவர்கள். சோனியா காந்தியின் உத்தரவின் பேரில் மன்மோகன் சிங் நடத்திக் காட்டினார்.

ஆயுதங்கள் கொடுத்தோம் என்று அவரே எனக்கு எழுதிய கடிதத்தில் ஒப்புக் கொண்டு இருக்கிறார்.


நான்கு நாள் விருந்தாளியாக அவனை அழைத்துக் கொண்டு வந்தார்கள். ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்த வேளையில், அவனை இங்கே அழைத்துக் கொண்டு வந்தது. திருப்பதி கோவிலில் அவனுக்குப் பரிவட்டம் கட்டி, பூரண கும்ப வரவேற்புக் கொடுத்து, அவனோடு சேர்ந்து 80 பேர்களை கோயிலுக்கு உள்ளே அழைத்துச் சென்று, அவர்கள் வழிபாடு நடத்துவதற்காக, எட்டு மணி நேரம் பக்தர்களைக் காக்க வைத்து உபசரித்து அனுப்பியது.


தமிழகத்தின் தலைவாயிலில் மிதித்து விட்டு வந்து விட்டேன் என்று அவன் கொக்கரித்தான். மீண்டும் நான்கு நாள்கள் எதற்கு அழைத்து வந்தார்கள். ஐரோப்பிய ஒன்றியம் முடிவு எடுத்தது. வரிச்சலுகை, வணிகச் சலுகைகள் கிடையாது இலங்கைக்கு. எனவே, சிங்கள அரசுக்கு உதவுவதற்காக இவர்கள் அவனை இங்கே அழைத்துக் கொண்டு வந்தார்கள். ஏனெனில், திட்டம் வகுத்துக் கொடுத்ததே இவர்கள்தானே? இந்திய அரசுதானே போர்த்திட்டங்களை வகுத்துக் கொடுத்தது? சோனியா காந்தியின் உத்தரவின் பேரிலே, மன்மோகன்சிங் அதைத்தானே நடத்திக் காட்டினார். ஆகையினால், உலகத்தின் பார்வையில் மண்ணைத் துhவுவதற்காக, அவனை இங்கே அழைத்துக் கொண்டு வந்து, ஒப்பந்தங்கள் போட்டார்கள்.


போரைநடத்தியது இந்தியா


சென்னை மாநகரில் ஒரு தலித் சகோதரன், திருநாவுக்கரசன் என்ற இளைஞனைச் சுட்டுக் கொன்ற கொலைகாரன் டக்ளஸ் தேவானந்தாவை அழைத்துக் கொண்டு வந்து விருந்து வைத்தார்கள். பிரதம மந்திரி அவனோடும் கைகுலுக்கினார். இதெல்லாம் எதற்காக? ஏனென்றால், போரை நடத்தியவர்களே இவர்கள்தான். பிரதம மந்திரியே ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஆயுதம் கொடுத்தோம், ரடார் கொடுத்தோம். இலங்கையின் ஒற்றுமையை, ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காகக் கொடுத்தோம் என்கிறார்.


இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே, இந்தியாவின் உதவியோடு விடுதலைப்புலிகளைத் தோற்கடித்தோம் என்கிறான். இந்தியா, எங்களுக்கு ராணுவ ரீதியாக எல்லா உதவிகளையும் செய்தது என்று பசில் ராஜபக்சே சொல்லுகிறான். அவனது அண்ணன் ராஜபக்சேவுக்கு அவன்தான் ஆலோசகன். இன்னொரு சகோதரன் கொட்டபய ராஜபக்சே சொல்லுகிறான், இந்தியா உதவி இருக்காவிட்டால், நாங்கள் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து இருக்க முடியாது என்கிறான்.


விடுதலைப்புலிகளைத் தாக்குவதற்குத் தானே உதவினோம் என்ற கவைக்கு உதவாத வாதத்தைச் சிலர் எழுப்புகிறார்கள். செஞ்சோலையில் கொல்லப்பட்ட 61 பெண் குழந்தைகள், ஆயுதம் ஏந்திய புலிகளா? சின்னஞ்சிறு பச்சைக் குழந்தைகள், ஆயுதம் ஏந்திய புலிகளா? கர்ப்பிணித் தாய்மார்கள், அவர்கள் ஆயுதம் ஏந்திய புலிகளா? அந்த யுத்தத்தில் ஒருதரப்புக்கு ஆதரவாக நீ ஆயுதம் கொடுத்து, ஆயிரம் கோடி பணம் கொடுத்து, பல நாடுகளில் இருந்து அவர்கள் ஆயுதங்களை வாங்கிக் குவித்து, விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு எல்லா ஏற்பாட்டையும் நீ செய்து கொடுத்தாய்.


விடுதலைப்புலிகளுக்குத் தோல்வி ஏற்படுவதற்குக் காரணம் இந்தியா என்று அவனே சொல்லுகிறான். விடுதலைப்புலிகளுக்கு வந்த கப்பல்கள் அனைத்தையும், இந்தியக் கடற்படை நேரடியாகத் தலையிட்டு உதவியதன்பேரில், அந்தக் கப்பல்களை நாங்கள் கடலில் மூழ்கடிக்க முடிந்தது என்று சொல்பவன் யார்? இலங்கைக் கடற்படைத் தளபதி கரன்னகோடா தேதிவாரியாகச் சொல்லுகிறான்.


2007 ஆம் ஆண்டு,செப்டம்பர் 10 ஆம் தேதி இரவிலும், 11 ஆம் தேதி காலையிலும், விடுதலைப்புலிகளுக்கு வந்த நான்கு கப்பல்களை, நாங்கள் கடலில் மூழ்கடித்தோம். அதன்பிறகு, அக்டோபர் 7 ஆம் தேதி, விடுதலைப்புலிகளுக்கு வந்த கப்பல்களை நாங்கள் தாக்கச் சென்றோம். அவை வேகமாகக் கடலுக்குள் சீறிச் சென்றன. ஆஸ்திரேலியக் கடல் எல்லையில் போய், அக்டோபர் 7 ஆம் தேதி, மீதம் உள்ள நான்கு கப்பல்களையும் நாங்கள் மூழ்கடித்தோம். மொத்தம் 14 கப்பல்களை, விடுதலைப்புலிகளுக்கு வந்த கப்பல்களை, இந்தியக் கடற்படை நேரடியாகத் தலையிட்டு மூழ்கடிக்கக் காரணமாக இருந்தது. எங்களிடம் பலம் வாய்ந்த நவீன கடற்படை கிடையாது. இந்தியக் கடற்படையின் உதவியால்தான் நாங்கள் புலிகளின் கப்பல்களை மூழ்கடித்த முடிந்தது என்றும் கரன்னகோடா சொல்கிறான்.


போர்க்குற்றவாளி இந்தியா


2007 ஆம் ஆண்டு, இந்தியக் கடற்படை, இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில், பாக் நீரிணையில், மூன்று சக்தி வாய்ந்த ஏவுகணைகளைப் பயன்படுத்துகின்ற சக்தி வாய்ந்த பீரங்கிப் படகுகளைத் திடீரென்று கொண்டு வந்து நிறுத்தியது. இப்படிப்பட்ட கருவிகளைக் கொடுத்து, அந்தப் போரில் இந்தியா நேரடியாக ஈடுபட்டது. அதனால்தான், சரஸ்வதி கேட்டார்: ராஜபக்சே மட்டும் போர்க்குற்றவாளி அல்ல. மன்மோகன் சிங் அரசும் போர்க்குற்றவாளி.
என்னுடைய அருமைச் சகோதரர்களே, மூன்று பேர் கொண்ட குழுவை ராஜபக்சே நியமித்தார், இந்தப் போரை நடத்துவதற்கு. இந்தியாவிடம் உதவிகள் பெறுவதற்கு. இரண்டு பேர், இந்தக் கொலைகாரப் பாவியின் சகோதரர்கள். ஒருவன் பசில் ராஜபக்சே. அவன் ஆலோசகர். இன்னொருவன், கொட்டபய ராஜபக்சே, அவன் இராணுவச் செயலாளர்.


அதே நேரத்தில், மன்மோகன் சிங்கிடம் கேட்டான் ராஜபக்சே. இவர், மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தார். ஒருவர், தேசப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன். இன்னொருவர், வெளிவிவகாரச் செயலாளர் சிவசங்கர மேனன். இன்னொருவன், இராணுவ அமைச்சகத்தின் செயலாளர் விஜயசிங்.


துரோகத்துக்குத் துணைபோன கருணாநிதி


இந்தக் குழுவினர் 12 முறை சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். ராஜபக்சே அறிவித்த மூன்று பேர் குழுவினர், 2007, 2008 இல் ஐந்து முறை டில்லிக்கு வந்து இருக்கிறார்கள். இந்திய அரசு அறிவித்த குழு, நான்கு முறை இலங்கைக்குப் போய் வந்து இருக்கிறது. ரகசியமாகச் சென்று வந்தது. கடைசியில், 2008 செப்டெம்பர் மாதம் செய்தி வெளிவந்து, செய்தியாளர்கள் குவிந்தபோதுதான், இவர்கள் போய் வருவது தெரிய வந்தது. ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த யுத்தத்தை நடத்தியதே இந்திய அரசுதான். லட்சக்கணக்கான தமிழர்கள் சாவுக்குக் காரணமான அரசு. ராஜபக்சே மட்டும் போர்க்குற்றவாளி அல்ல.

மன்மோகன் சிங் அரசும் போர்க்குற்றவாளிதான். யுத்தத்தை நடத்தியவர்களே இவர்கள்தான். இது கலைஞர் கருணாநிதிக்குத் தெரியும். இத்தனை படுகொலைகளுக்கும் அவர் உடந்தையாக இருந்தார்.


நான் 16 முறை மன்மோகன் சிங்கைச் சந்தித்து வாதாடி இருக்கிறேன். எங்கள் தமிழர்கள் சிந்துகின்ற ஒவ்வொரு சொட்டு இரத்தத்துக்கும் நீங்கள்தான் பொறுப்பாளி. கூண்டில் நிறுத்த வேண்டிய காலம் வரும் என்று அவரிடமே எழுதிக் கொடுத்து இருக்கிறேன். தாணா தெருவில் தம்பட்டப் பேச்சு அல்ல.

புத்தகமாகவும் வெளியிட்டு இருக்கிறேன். எங்கள் வருங்காலத் தலைமுறையினர் ஒருபோதும் உங்களை மன்னிக்க மாட்டார்கள்.


கலைஞர் கருணாநிதியிடம் இந்தியா டுடே செய்தியாளர் கேட்டார்: நீங்கள் நினைத்தால் தடுத்து நிறுத்தி இருக்கலாமே? என்று. அதற்கு கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா? நான் தடுக்க முயன்றால் என் ஆட்சியைக் கவிழ்த்து இருப்பார்கள் என்று. அப்படியானால், உங்களுக்குத் தெரியும்; சோனியா காந்தியின் திட்டம் உங்களுக்குத் தெரியும். மன்மோகன் சிங் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது உங்களுக்குத் தெரியும். நன்றாகத் தெரியும். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படட்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள். உங்கள் நெஞ்சுக்குள்ளும் அந்த வஞ்சகம் இருந்தது. பிரபாகரன் மீது உங்களுக்கும் வஞ்சகம் இருந்தது.


இவர்கள் எல்லாம் சேர்ந்து இப்போது ஒரு தூதரை அனுப்பப் போகிறார்களாம். சிதம்பரம் இவரைப் பார்த்துப் பேசுவாராம். என்ன தூதர்? ஏ.... இந்திய அரசே, நீ ஒவ்வொரு முறையும் தூதர்களை அனுப்பி வைத்தது தமிழர்களைக் கொல்லுவதற்காக. சிவசங்கர மேனனை அனுப்பினாய், எம்.கே. நாராயணனை அனுப்பினாய், விஜய நம்பியாரை அனுப்பினாய். இந்தத் துரோகங்களுக்கெல்லாம் முடி சூட்டுவதைப் போல, பிரணாப் முகர்ஜியை அனுப்பினாய். இந்திய அரசின் பிரதிநிதிகள், ராஜபக்சேவுக்கு உதவி செய்வதற்காகச் சென்றார்கள். கொழும்புக்குப் போய், அவன் போட்ட சாப்பாட்டை வயிறு புடைக்கத் தின்று விட்டு வந்தார்கள். எங்களுக்குத் துரோகம் செய்தார்கள்.


ஐ.நா. குழுவை அனுமதிக்க மறுப்பது ஏன்?


மூன்று பேர் கொண்ட குழுவை பான் கி மூன் அறிவித்து இருக்கிறார். அதுவும் காலம் கடந்ததுதான். போர் நடைபெற்றபோது ஆற்ற வேண்டிய கடமையை ஐ.நா. மன்றம் செய்யவில்லைதான். முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு அங்கே வந்த பான் கி மூன், விமானத்தில் பறந்த தமிழர் பகுதிகளைச் சுற்றிப் பார்த்தாரே தவிர, கீழே இறங்கி தமிழர்களைச் சந்திக்கவில்லை. உடன் இந்திய புரோக்கர் விஜய் நம்பியாரும் போய் இருந்தார். ஆனாலும் கூட, டப்ளின் தீர்ப்பு ஆயம் அறிவித்ததற்குப் பிறகு, காலம் கடந்தாவது ஒரு குழுவை அறிவித்து இருக்கிறார்.


மார்[]கி டேரஸ்மென் என்கின்ற இந்தோனேஷிய நாட்டின் முன்னாள் அட்டர்னி ஜெனரல்; தெற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சுகா, தலைசிறந்த வழக்கறிஞர்; அமெரிக்காவில் மனித உரிமைகளுக்காகப் போராடுகின்ற வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்னர் இந்த மூன்று பேரை பான் கி மூன் அறிவித்து இருக்கிறார்.


அவர்கள் உள்ளே வரக்கூடாது என்று ராஜபக்சேயின் அமைச்சர் கலவரம் செய்தான். விபச்சாரத்துக்குக் கூட்டிக் கொடுக்கின்ற புரோக்கர் பான் கி மூன் என்று போர்டு எழுதி வைத்துக் கொண்டு, அதற்குக் கீழே உட்கார்ந்து உண்ணாநிலை மேற்கொண்டான். ஏகாதிபத்திய அமெரிக்க அரசுகூட இதைக் கண்டித்தது. குழு நியமித்ததை, ஹிலாரி கிளிண்டன் வரவேற்றார். போர்க்குற்றங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரட்டும் என்றார்.


இந்திய அரசே, நீ வரவேற்கப் போவதில்லை. ஏனெனில், நீ கூட்டுக் குற்றவாளி. நீ என்ன தூதரை அனுப்புவது?


எதற்காக இந்தியப் பிரதிநிதி?


அங்கே மீள் குடியேற்ற வேலைகள் நடக்கின்றன. ராஜபக்சே சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று ஒரு அறிக்கை கொடுப்பதற்கு, கருணாநிதியும், மன்மோகன்சிங்கும், சோனியா காந்தியும் சேர்ந்து, ராஜபக்சேயைப் பாதுகாப்பதற்காக, உலகத்தின் கண்களில் மண்ணைத் துhவுவதற்காக ஒரு பிரதிநிதியை அனுப்பப் போகிறீர்களா?


எங்கள் தமிழர்களின் வீடுகளையெல்லாம் தகர்த்துத் தரைமட்டமாக்கி விட்டான். அங்கே சிங்களவன் குடியேறிக் கொண்டு இருக்கிறான். தமிழர் தாயகத்தில் சிங்களவன் பல்லாயிரக்கணக்கில் குடியேறுகிறான். திலீபன் நினைவகத்தை உடைத்து விட்டான். எல்லாளன் நடுகல்லை உடைத்து விட்டான், மாவீரர் துயிலகங்களை உடைத்து விட்டான். மீள் குடியேற்றம் என்று அனுப்பப்பட்ட தமிழர்களுக்கு, அவர்கள் சொந்த வீடுகளில் வாழுகின்ற நிலைமை இல்லை.

அவர்கள் மீண்டும் அடக்குமுறை முகாம்களுக்குத்தான் கொண்டு செல்லப்படுகிறார்கள்.


மனித உரிமை மீறல்களை அறிவதற்கே ஐ. நா. மன்றம் வரக்கூடாது என்கிறானே? உலக நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளே வர அனுமதி மறுக்கிறானே?

இதற்கு முன்பு, மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் லுhயிஸ் ஹார்பர் அம்மையார் சென்றபோதும் அனுமதிக்கவில்லையே? உண்மை பேசிய லசந்த விக்கிரமசிங்கேயை வீட்டுக்கு உள்ளே புகுந்து சுட்டுக் கொன்று விட்டான். அவன் சிங்களவன், ஒரு பத்திரிகையாளன்.


தப்பிக்க முடியாது


அப்படியானால் அடுத்த கட்டம் என்ன? அதைத்தான் இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். பிரச்சினை இதோடு முடிந்து விடாது ராஜபக்சே. 1979 க்கு முன்னர் கெமர் ரூஜ் லட்சக்கணக்கானவர் களைக் கொன்று குவித்தது கம்போடியாவிலே போல்பாட் ஆட்சியிலே. அந்தக் கட்டத்தில் சிறைக் கொடுமைகளை நிகழ்த்திய கெயிங் குவெக் ஈவ் (டச்) என்கிற கொடியவன், 2010 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் நாள், ஐ.நா. மன்றம் அமைத்து இருந்த தீர்ப்பு ஆயம், 35 ஆண்டுகள் அவனுக்குத் தண்டனை வழங்கி இருக்கிறது. அவன் 20 ஆண்டுகள் ஒளிந்து மறைந்து இருந்தான். 99 ஆம் ஆண்டுதான் அவனை ஒரு பிரிட்டிஷ் செய்தியாளன் கண்டுபிடித்துக் கொடுத்தான். அதற்குப் பிறகு அவன் கூண்டில் அடைக்கப்பட்டான். பத்து ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றது. இப்போது தீர்ப்பு வந்து விட்டது.


சூடான் நாட்டு அதிபர் உமர் அல் பசீரைத் தண்டித்து விட்டது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம். செர்பிய நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருந்தானே ஸ்லோபோடன் மிலோசெவிக், அவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டான். தண்டனை அனுபவிக்கும் முன்னே இறந்து விட்டான். இவையெல்லாம் நம் கண் முன்னே நடந்து முடிந்த நிகழ்வுகள். அதேபோலத்தான், ராஜபக்சேயும் கூண்டில் நிறுத்தப்படுவான்.

அவனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். (பலத்த கைதட்டல்) இது எங்கள் கோரிக்கை. எங்கள் மக்களைக் கொன்றவனுக்குத் துhக்குத் தண்டனை விதிக்க வேண்டும். அது மட்டும் அல்ல, இந்தப் போர்க் குற்றத்தில் உடந்தையாக இருந்தவர்களுக்கும் தண்டனை விதிக்க வேண்டும்.


இங்கே வழக்கறிஞர்கள் வந்து இருக்கிறார்கள். அரிவாளை எடுத்து வெட்டுகிறவன் மீது மட்டும்தான் காவல்துறை வழக்குப் போடுகிறது? இல்லை. அரிவாளைத் தீட்டிக் கொடுப்பவன் மீது வழக்குப் பாயும். அப்படியானால், ஆயுதங்களைக் கொடுத்து எங்கள் மக்களைக் கொன்ற பாவத்தை, இந்திய அரசுதானே செய்தது? அத்தனைக்கும் கலைஞர் கருணாநிதி உடந்தையாக, துரோகியாக இருந்தாரே?


பிரபாகரனைக் கொல்லச் சொன்னது யார்?


திராவிட இயக்கக் குடும்பத்துப் பிள்ளை, பெரியார் இயக்கத்துப் பிள்ளை, அற்புதம்-குயில்தாசன் இணையரின் பிள்ளை பேரரறிவாளன், வாழ்க்கையின் வசந்தங்களை அனுபவிக்க வேண்டிய 19 வயதில் இருந்து, இருபது ஆண்டுகளாக மரணக் கொட்டடியில் இருக்கிறான். அவன் ஏதும் அறியாதவன், எந்தத் தவறும் புரியாதவன். பேட்டரி செல் வாங்கிக் கொடுத்தான் என்பது அவன் மீது குற்றச்சாட்டு. தீர்ப்பு அளித்த நீதிபதிகளுள் ஒருவரே, அந்தக் குற்றச்சாட்டை ஏற்கவில்லை. உதிர்ந்து போய் விட்டதே அவன் வாலிப வாழ்க்கை?


கடைசியாக அவனைச் சந்தித்த தாய் அற்புதம் அம்மையார் என்னைப் பார்த்துச் சொன்னார்: அறிவைப் பார்த்தேங்க. அம்மா என்னைச் சீக்கிரம் துhக்கில் போடச் சொல்லுங்கள். எனக்கு இங்கே மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்கிறான்.இதுவரை இப்படி விரக்தியாகப் பேசாத பிள்ளை, இப்போது இப்படிப் பேசுகிறான் என்றார். ஒரு கொள்கைக் குடும்பம் அது. இதைப் பேசினாலே தப்பா?


ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. பிரபாகரனைச் சுட்டுக் கொல் என்று தீட்சித் சொல்லவில்லையா? கேட்டதற்கு, இது என்னுடைய உத்தரவு இல்லை, டெல்லியின் உத்தரவு என்று சொல்லவில்லையா? அதைப் பதிவு செய்து இருக்கிறவன் வைகோ அல்லவே, இலங்கையில் இந்தியத் தளபதியாக இருந்த ஹர்கிரத் சிங்.அவர் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார். அவர் எழுதிய புத்தகமும் தடை செய்யப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நீங்களும் கொன்றீர்களே?


இழவு வீட்டில் கொண்டாட்டம்


ராஜபக்சேயைப் போர்க்குற்றவாளியாக நிறுத்த வேண்டும். இந்த உணர்வு தமிழகம் எங்கும் பரவ வேண்டும். தமிழகத்தில் உணர்ச்சி அழிந்து விட்டதாக ஒருபோதும் கருதத் தேவை இல்லை. இங்குதான் முத்துக்குமார் நெருப்பை ஏந்தினான், பதினேழு பேர் தங்கள் இன்னுயிரைத் தந்தார்கள். அன்றைக்கும் காவல்துறையை ஏவி விட்டு, பெண்டாட்டியோடு சண்டை, குடும்பச் சண்டை, ஸ்டவ் வெடித்து மரணம் என்று அறிக்கை விட வைத்தார் முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதி. அதனால்தான், யாரும் சொல்லத் துணியாதபோது, முத்துக்குமார் நெஞ்சத் துணிவோடு சொன்னான். அவன் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் அல்ல. மருத்துவமனையில் போய் ஒளிந்து கொண்டார் கலைஞர் கருணாநிதி என்று சொன்னான். முத்துக்குமாருடைய சடலம் கொளத்தூரில் கிடந்தபோது, இவருடைய மகன் பிறந்த நாளைக் கொண்டாடி, தெருவுக்குத்தெரு கிடா வெட்டி பிரியாணி விருந்து வைத்தார்கள். அதே 30 ஆம் தேதி. இவர் பட்டு வேட்டி பட்டுச் சட்டை போட்டுக்கொண்டு, மகனுக்கு வாயில் கேக் ஊட்டிக் கொண்டாடினார். இவையெல்லாம் சரித்திரத்திலே மறக்க முடியாது.


நம்முடைய கடமை என்ன?


ராஜபக்சேயைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கருத்து உலக நாடுகளிலே ஓங்கி வளர்ந்து வருகிறது. தமிழகத்திலும் எல்லா இடங்களிலும் அது பரவட்டும். அடக்குமுறைகளின் மூலமாக எங்களை மிரட்ட முடியாது. கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்க முடியாது. தமிழக மீனவர்களின் உயிரை, வாழ்வாதாரங் களைப் பாதுகாக்கத் தவறிய மத்திய அரசை, மாநில அரசை நாங்கள் கண்டிக்கிறோம். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, இந்தப் பாசிச ஆட்சியின் கொடுமைகளை எதிர்ப்பதற்கு, ஜன நாயக சக்திகள் ஆர்த்து எழ வேண்டும். உலகம் முழுவதும் ஆர்த்து எழுகின்ற தமிழர்களுக்குச் சொல்லுவோம். நம்முடைய கடமை முடிந்து விடவில்லை.


நம்முடைய வாழ்நாளில் எதைக் காண விரும்புகிறோம். தமிழனுக்கு என்று ஒரு நாடு அமைய வேண்டும். அது தமிழ் ஈழ தேசமாக மலரட்டும். நாகசாஹியில் அணுகுண்டு வீசினார்கள். சாம்பல் மேடாக ஆனது. ஆனால், உயிர்த்து எழுந்தது. உலகில் முதல் இடத்தில் நிற்கிறது. அதைப்போல, அழிவின் பிடியில் இருந்து மீண்டும் எழும் தமிழ் ஈழம். சிந்திய ரத்தம் வீண் போகாது. மாவீரர் திலகம் பிரபாகரன் என்ற பெயர் உணர்ச்சியை ஊட்டும். மந்திர சக்தியாக நாடி நரம்புகளிலே மின்சாரத்தைப் பாய்ச்சிக் கொண்டே இருக்கும்.


முத்துக்குமாரைப் பற்றி எரித்த நெருப்பின் மீது ஆணை!


ஈழத்துக்காகச் சிந்திய ரத்தத்தின் மீது ஆணை!


உலகெங்கும் வாழுகின்ற நம் தொப்புள் கொடி உறவுகளைக் காக்கவும், அவர்கள் கட்டி எழுப்ப முனைகின்ற தமிழ் ஈழத்தை அமைக்கவும், கொலைகாரன் ராஜபக்சேயைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவும் சூளுரை மேற்கொள்வோம்.


அடக்குமுறை பாசிச அரசாங்கத்தை எதிர்த்துக் கருத்துப் பிரச்சாரத்தைத் தீவிரமாக்குவோம். கருத்து உரிமையை யாரும் அடக்க முடியாது. அதுவே இந்த மேடை தரும் செய்தி!


பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

 

 

கருத்து உரிமையைக் காக்க, தமிழ் ஈழத்தை அமைக்கச் சூளுரைப்போம்!


சென்னையில் 6.8.2010 அன்று கருத்துரிமைக் களம் நடத்திய மக்கள் எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இலங்கை அரசு திட்டமிட்டு நடத்திய தமிழ் இனப் படுகொலையை சர்வதேச ஊடகங்கள் அம்பலப்படுத்தியதை அடுத்து, போர்க்குற்றவாளிகளான சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிரான குரல் உலகெங்கும் ஒலிக்கிறது. இதுதொடர்பாக விசாரணைக் குழு ஒன்றை அமைத்ததற்காக ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்த மாபெரும் மக்கள் மன்றம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.


ஐ.நா. குழுவையே ஏற்க மறுக்கிறது இலங்கை. அந்தக் குழுவுக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுக்கிறது. இலங்கைக்குள் நுழையக்கூட அனுமதிக்க மாட்டோம் என்கிறது. இது ஒட்டுமொத்த உலகத்துக்கும் இலங்கை விடுக்கின்ற சவால். ஐ.நா.வுக்குக்கூட கட்டுப்பட மறுக்கும் ராஜபக்சே அரசின் இந்த பாசிச மனோபாவத்தையும் அதிகார அராஜகத்தையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.


ஐ.நா. பாதுகாப்பு சபை நாற்காலிக்கு உறுப்பினராக்குவதற்கு முயற்சிக்கட்டும். இந்தியா இன்னொருபுறம், ஐ.நா.வை இலங்கை சிறுமைப்படுத்துவதைக் கண்டு கொள்ளாமல் மெளனம் சாதிக்கிறது. இந்த முரண், இந்தியாவின் கள்ளத்தனத்துக்கு இன்னொரு சான்று. தமிழ் இனப் படுகொலைக்குத் துணைபோன இந்தியா, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குக் குறைந்தபட்ச நியாயம் கிடைப்பதைத் தடுக்கவும் துணை போகிறதோ என்கிற அச்சம் எழுகிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட வேண்டும். கடிதம், தந்தி என்று காலம் கடத்தாமல், நேரடி நடவடிக்கையில் இறங்க வேண்டும். ஐ.நா. விசாரணைக் குழுவை இலங்கை ஏற்றே ஆக வேண்டிய அளவுக்கு ராஜதந்திர நெருக்கடி கொடுக்கும்படி, இந்திய அரசை உண்மையாக வற்புறுத்த வேண்டும். அதன்மூலம் இலங்கையின் இனவெறி அராஜகத்தை அம்பலப்படுத்த உதவ வேண்டும் என்று இந்த மக்கள் மன்றத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.


2. இலங்கையின் வடகிழக்கில், தமிழர் தாயகப் பகுதிகளில் என்ன நடந்தது... என்ன நடக்கிறது என்பது மர்மமாகவே இருக்கிறது. ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டு, உண்மைச் செய்திகள் மறைக்கப்படுகின்றன. தனது போர்க்குற்றங்கள் அம்பலமாகிவிடக் கூடாது என்பதற்காக, பத்திரிகையாளர்கள்கூட பார்வையிட முடியாத இருண்ட பகுதியாகத் தமிழர் பகுதிகளை ஆக்கிவிட்டது இலங்கை. ராஜபக்சே அரசின் இந்த அப்பட்டமான ஜனநாயக அத்துமீறலையும், இதைக்கூட கண்டிக்க மனமில்லாமல் மெளனம் சாதிக்கும் தமிழக மற்றும் இந்திய அரசுகளையும் இந்த மக்கள் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் எப்படிப் பிணமாக்கப் பட்டார்கள் என்பதையும், முள்வேலி முகாமுக்குள் எப்படி நடைப்பிணமாக்கப்படுகிறார் கள் என்பதையும், தாய்த்தமிழகம் மட்டுமின்றி சர்வதேசமும் அறிந்தாக வேண்டும். தமிழர் பகுதிகளில் என்ன நடந்தது.... என்ன நடக்கிறது என்பதை நேரில் கண்டறிவதற்காக, பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சேவை அமைப்புகள் மற்றும் மனித உரிமைப் போராளிகள் அடங்கிய, குறைந்தது 50 பேர் கொண்ட குழு ஒன்றை இலங்கைக்கு உடனடியாக அனுப்பி வைக்க முன்வரவேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.


3. சுனாமி, சூறாவளி போன்ற இயற்கைச் சீற்றங்களைக் கண்டு அஞ்சாமல் அன்றாடம் கடலில் இறங்கி உழைத்துப் பிழைப்பவர்கள் எங்கள் மீனவச் சகோதரர்கள். அவர்களைக் குறிவைத்து இலங்கைக் கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. மீனவச் சகோதரர்கள் தாக்கப்படும் போதெல்லாம், அவர்கள் எல்லைத் தாண்டிப் போய் விட்டதாக ஒரு பொய்யான குற்றச்சாட்டை இலங்கை முன்மொழிவதும், பொறுப்பே இல்லாமல் இங்குள்ள அரசுகள் அதை வழிமொழிவதும் வாடிக்கையாகி விட்டது. இந்த மீனவர் விரோதப் போக்கை இந்த மக்கள் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.


பல நிகழ்வுகளில், இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டது இலங்கைதான் என்பதை மீனவச் சகோதரர்கள் அளிக்கும் தகவல்களில் இருந்து அறியமுடிகிறது. இலங்கைக் கடற்படையின் இந்த அத்துமீறல்களின்போது, இந்தியக் கடல்படை எதிர்த்தாக்குதல் நடத்தி எங்கள் மீனவர்களைக் காத்திருக்க வேண்டும். இந்தியக் கடற்படை அந்த அளவுக்கு வலுவானதாக இல்லை என்றால், எல்லை தாண்டி வந்து இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இலங்கை மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையாவது எடுத்து இருக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் எங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு இரண்டகம் செய்யும் இந்திய, தமிழக அரசுகளைக் கண்டிக்கிறோம்.


எங்கள் மீனவச் சகோதரர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்துக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது. இந்தப் பொறுப்பைத் தட்டிக்கழிப்பது நாட்டு நலனுக்கு ஏற்றதல்ல என்பதை இந்த மக்கள் மன்றம் கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது.


4. ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழர்களை விரட்டி விரட்டிக் கொன்று குவித்து இலங்கை என்கிற புத்ததேசத்தை ரத்த தேசமாக்கியவர்கள் ரத்தவெறி பிடித்த இராசபக்சே சகோதரர்கள். சர்வதேச அரங்கில், அவர்களது போர்க்குற்றங்கள் அம்பலமாகி வருகின்றன. அப்பாவித்தமிழர்கள் கொல்லப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றத் தவறிய மத்திய மாநில அரசுகள் போர்க்குற்றச்சாட்டின் பிடியில் இருந்து ராஜபக்சேவைக் காப்பாற்ற எந்தவிதத்திலும் முயலக்கூடாது என்று இந்த மக்கள் மன்றம் எச்சரிக்கிறது.


சிறப்புத் தூதரை அனுப்புகிறோம் என்றெல்லாம் நாடகம் நடத்திக் கொண்டு இருக்காமல், தமிழ் இனத்தை நசுக்க அராஜகவழிமுறைகளைக் கடைபிடித்த ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளி என்று ஊரறிய அறிவிக்க வேண்டியதுதான் தனது முக்கியக் கடமை என்பதைத் தமிழக அரசு உணரவேண்டும்.


5. தமிழ் இனப்படுகொலைக்குத் துணைபோகும் விதத்தில், இலங்கை அரசுக்குப் போர்க் கருவிகளை வாரிவழங்கிய இந்திய அரசு, இப்போது போர்க்குற்றவாளியான இலங்கைக்கு நிவாரண உதவி என்ற பெயரில் எங்கள் வரிப்பணத்தை வாரி வழங்குவது அதிகார அராஜகத்தின் உச்சம். இதை இந்த மக்கள் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.


ஆட்டுப்பட்டியில் அடைக்கப்பட்டு இருக்கும் அப்பாவி ஆடுகளுக்கு ஓநாய்கள் மூலம் உதவ முயல்வது எந்தவிதத்திலும் அறிவுடைமை அல்ல. எனவே, எங்கள் வரிப் பணத்தில் போர்க்குற்றவாளி இலங்கைக்கு ஒரே ஒரு நயாபைசாகூட நிவாரண உதவி என்ற பெயரில் வழங்கப்படக் கூடாது என்று வலியுறுத்துகிறோம்.


ஏற்கனவே இலங்கைக்கு வழங்கி உள்ள நிவாரண உதவிகள் எந்தெந்த விதத்தில் செலவழிக்கப்பட்டு உள்ளது என்கிற முழுவிவரத்தையும் இலங்கையிடம் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அந்தத் தகவல்கள் உண்மையானவைதானா என்பதை ஐயத்துக்கிடமின்றி உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும், எங்கள் வரிப்பணம் தொடர்பான இந்த விவரங்களை ஒரு வெள்ளை அறிக்கைமூலம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை இந்த மக்கள் மன்றம் கேட்டுக் கொள்கிறது.


6. இலங்கைப் பிரச்சனையிலும் பொதுவான மற்றப் பிரச்சனைகளிலும் அரசின் தவறான செயல்பாடுகளையும் கொள்கைகளையும் விமர்சிப்போர் மீது அடக்குமுறைச் சட்டங்கள் ஏவப்படுவதை இந்த மக்கள் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடி நிலையை மறைமுகமாக அமல்படுத்த முயல வேண்டாம் என்று ஆட்சியாளர்களை இந்த மன்றம் எச்சரிக்கிறது.


இந்திய அரசியல் சாசனம் எங்களுக்குக் கொடுத்துள்ள கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை போன்றவற்றைப் பறிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை.

‘இருக்கிற சட்டங்கள் போதாது என்றால் புதிய சட்டங்களைக் கொண்டுவந்து நடவடிக்கை எடுப்போம்’ என்று பூச்சாண்டி காட்டுவது, அரசியல் சாசனத்தையே அவமதிக்கும் செயல். இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்க்க எந்த நிலையிலும் தயங்கமாட்டோம் என்று உறுதியேற்கிறோம்.


இலங்கையில் நடந்த தமிழ் இனப் படுகொலையை ‘வெளிநாட்டுப் பிரச்சனை’ என்று சொல்வதும், அதைப் பற்றிப் பேசவே கூடாது என்று மிரட்டுவதும் ஆட்சியில் இருப்பவர்கள் மீதான சந்தேகங்கள் மேலும் மேலும் வலுவடையவே உதவும். இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகளை மறைக்கவே கருத்துரிமை பறிக்கப்படுகிறதோ என்ற ஐயமும் எழலாம். இதைத் தமிழக முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.


கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் கைது செய்யப்பட்டவர்களை எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்யக் கோருகிறோம்.

அரசுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பவர்கள் மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், இதுபோன்ற தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இல்லையேல், ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்க்க கட்சி எல்லைகளைக் கடந்து தமிழகம் ஒன்றுபடும் என்று எச்சரிக்கிறோம்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)