மக்கள் விரோத தொல்பொருள் ஆய்வுச் சட்டத்தைத் திரும்பப் பெறுக! வைகோ அறிக்கை!
Issues: Economy, National
Region: Tamil Nadu
Category: Articles
மக்கள் விரோத தொல்பொருள் ஆய்வுச் சட்டத்தைத்
திரும்பப் பெறுக!
வைகோ அறிக்கை!
ஒரு நாட்டின் வரலாறை, புதைபொருள் அகழ்வுகள், ஆலயங்கள், கல்வெட்டுகள், நினைவு இடங்கள், செப்பு ஏடுகள், நாணயங்கள், கலைச் சிற்பங்கள், இலக்கியக் குறிப்புகள், பயணியர் குறிப்புகள், நாடோடிப் பாடல்கள், செவிவழிச் செய்திகள் இன்னும் பிற ஆவணங்களால் அறியலாம். அந்த வகையில், ஏராளமான சான்று ஆவணங்களுடன், இந்திய நாட்டின் தொன்மைப் பழமைகளில் முதன்மையாக, கலைப் பண்பாட்டின் தாயகமாகத் தமிழகம் திகழ்ந்து வருகிறது.
தமிழ்நாட்டின் வரலாறை கால வகையில் எட்டாகப் பிரித்துப் பார்க்கலாம். அவை முறையே தொல் பழங்காலம், சங்ககாலம், இருண்ட காலம், பல்லவர் காலம், இடைக்காலம், நாயக்கர் காலம், ஆங்கிலேயர் காலம், நிகழ்காலம் ஆகும். வட வேங்கிடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தை ஆண்ட மன்னர்களால் கட்டப்பட்டு, 63 நாயன்மார்களாலும், 12 ஆழ்வார்களாலும், இன்றும் பல வேதாந்திகளாலும் பாடல் பெற்ற மிகப் பழையான நகரங்கள் காஞ்சிபுரம், மாமல்லபுரம், திருவண்ணாமலை, செஞ்சி, தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், மதுரை, கன்னியாகுமரி, இராமேÞவரம், உத்திரமேரூர், திருப்போரூர் என்று பல வகையில் சிறப்புக்குரியதாக உள்ளது.
இவற்றுள் மிகப் பழமையான நகரமாக ஐ.நா. பொதுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு நகரங்கள் மாமல்லபுரமும், தஞ்சையும் ஆகும். ஏனையவற்றையும் பிற்காலத்தில் பாதுகாக்கப்பட்ட கலைப் பொக்கிஷமாக ஐ.நா. பொது மன்றம் அங்கீகாரம் அளித்து உள்ளது.
6-ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டபோது, சிற்ப, கட்டிடக் கலைக்குச் சான்றாக விண்ணை முட்ட எழுந்த கோவில் கோபுரங்கள், சித்திரக்காரப்புலி மகேந்திர வர்மன் தந்த மத்தவிலாசம் ஆகியவை, இவற்றுக்கு அடிநாதமாக விளங்கியது.
வெட்டுதலி, கட்டுதலி, குடைதலி’ என்ற மூன்று வித சிற்பக் கலைக்கு, காலங்கள் தோறும் கலங்கரை விளக்கமாக நின்று சாட்சி சொல்கிறது பல்லவர்களின் துறைமுகப் பட்டினமான கடல்மல்லை என்னும் மாமல்லபுரம். குட ஓலைக்குச் சான்றாக விளங்குகிறது உத்திரமேரூர் கல்வெட்டு.
வலிமையான கப்பற்படை மூலமாக, கடல் கடந்து பல நாடுகளில் வெற்றிக் கொடி நாட்டிய மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட, தமிழர்களின் கட்டிடக் கலையின் உன்னத எடுத்துக்காட்டாக விளங்கிடும் தஞ்சை பெரிய கோவில்; சோழ மண்டலத்தின் இரண்டாம் தலைநகராக, இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம்;
டெல்லி பாதுஷாவுக்குத் திறை செலுத்த மறுத்து, மண்ணின் மானத்தைப் பெரிதெனப் போற்றி போர்க்களத்தில் போராடி உயிர் துறந்த இராஜா தேசிங்கின் செஞ்சிக் கோட்டை;
பாண்டிய மண்டலத்தின் தலைநகராக விளங்கிய கடம்பவனம் என்னும் மதுரையில், சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த தவபூமியில், மன்னர் திருமலை நாயக்கரின் கைவண்ணத்தில் உருவான மதுரை மீனாட்சி அம்மன் கோவில்;
இராமேÞவரம், கன்னியாகுமரி உள்ளிட்ட சைவ நெறி கமழும் ஆலயங்கள், ஏனைய சிறப்பிடங்கள், திராவிட நாகரிகத்தின் சான்றுகளாக, செம்மாந்து உயர்ந்து, தமிழரின் சிறப்புகளைப் பாருக்குப் பறை சாற்றுகிறது.
பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்க தொல்பொருள் ஆய்வுத் துறை உருவாக்கப்பட்டு, தனிச் சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளன. ஆனால், இந்த அமைப்பு உருவாவதற்கு முன்பு, நமது பண்பாட்டுப் பெட்டகங்களை, கண்ணை இமை காப்பது போன்று இரத்தம் சிந்தியும், உயிர்த் தியாகம் செய்தும் அப்பகுதியில் வாழ்ந்தவர்கள்தான் பாதுகாத்து வந்து உள்ளனர்.
அப்படிப் பாதுகாத்த மக்களை, அவர்களது வாழ்விடங்களில் இருந்து அகற்றி, உள்நாட்டு அகதிகளாக மாற்றுகின்ற வகையில், மத்தியில் ஆளும் காங்கிரÞ-தி.மு.க. கூட்டணி அரசு புதிதாக ஒரு தொல்பொருள் ஆய்வுச் சட்டத்தைக்(2010)கொண்டு வந்து உள்ளது. இச்சட்டம் குறித்து, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் மற்றும் ஆங்கிலத்திலும் அனைத்து நாளிதழ்களிலும் முழுப்பக்க அளவில் விளம்பரப்படுத்தி உள்ளது.
2010-ஆம் ஆண்டு சட்டத்தின்மூலம், சொந்த மண்ணைச் சொர்க்கமாகக் கருதி வாழ்ந்த மக்களை, அவர்களுடைய வசிப்பிடங்களில் இருந்து விரட்டி அடித்து, நாடோடிகளாக ஆக்கி விட்டு, அவ்விடத்தில் எருக்கன் செடி, கள்ளிச் செடி, அலரிச் செடியை விளைய வைத்து, வவ்வால், ஆந்தை, நரி, பாம்பு உலவிடும் அரவங்காடாக மாற்றி செயற்கை நகரமாக உருவாக்க முயற்சிப்பதாக உள்ளது.
- 1. புதிய சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னத்தில் இருந்து 1000 அடி வரை எந்த கட்டுமானமும் கட்ட அனுமதி இல்லை. மீறுவோருக்கு ஒரு இலட்சம் அபராதத் தொகையுடன் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை.
- 2. குடும்பத்தினர் எண்ணிக்கை பெருகி இட நெருக்கடி ஏற்படும் நிலையில் தங்களின் மூதாதையர்கள் வாழ்ந்த வீட்டை விரிவாக்கம் செய்யவோ, கூடுதல் அறையோ, தாழ்வாரமோ, கழிப்பு அறையோ கட்டினால் கூட இச்சட்டத்தின்படி வீட்டின் உரிமையாளரும், அப்பகுதியில் பணியாற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் தண்டிக்கப்படுவார்கள்.
- 3. ஏற்கனவே வாழ்ந்து வரும் வீடுகள் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அனுமதி பெறாமல் கட்டப்பட்டு இருப்பின், அவற்றை இடிப்பதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இப்பகுதிகளில் புதிதாக மின் இணைப்புகள் இனி வழங்கப்பட மாட்டாது.
- 4. விருந்தினர் போற்றும் திட்டத்தை அறிவித்து உள்ளனர். ஆனால், வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் வசதிகளுக்காக புதிய தங்கும் விடுதிகள், உணவு வளாகங்கள், பொழுதுபோக்கு விளையாட்டு இடங்கள் கட்ட முடியாது.
நீதிமன்றத்தின் மூலமாக நிவாரணம் தேட முடியாமல், மேல் முறையீடு மறுக்கப்படுகிறது. சர்வாதிகார நாடுகளில்தான் இத்தகைய சட்டங்கள் இயற்றப்படுகின்றன.
வட இந்தியாவின் புராதனச் சின்னங்கள், நினைவு இடங்கள் பெரும்பாலும் கல்லறைகளாக இருக்கின்றன. ஆனால், தமிழகத்தின் வரலாற்றுச் சின்னங்கள் அனைத்தும் ஆறு கால பூஜைகள், குறைந்தபட்சம் மூன்று கால பூஜைகள் நடைபெறும் கோவில்கள் ஆகும். இவ்வாலயங்களைச் சுற்றி தேர் ஓடும் இராஜ வீதிகளும், வணிக அங்காடிகளும், பூங்காக்களும், மக்களின் வாழ்விடமாக இருந்து வருகின்றன.
நினைவு இடங்களுக்கும், ஆலயங்களுக்கும் உள்ள வேறுபாட்டை அறியாமல், மத்தியில் ஆளும் காங்கிரÞ-தி.மு.க. கூட்டணி அரசு இரண்டுக்கும் ஒரே சட்டமாகக் கொண்டு வந்து உள்ளது.
அப்பகுதிகளில் வாழும் மக்களின் கருத்து அறியப்படவில்லை. இச்சட்டத்தைப் பற்றிய முழுமையான விவாதம் இன்றியே, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்து உள்ளனர்.
வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்திட வேண்டும் என்பதில் மற்றுக் கருத்து இல்லை. அதை வலியுறுத்தி பலமுறை நான் நாடாளுமன்றத்தில் வாதிட்டு இருக்கிறேன். தொல்பொருள் ஆய்வுத் துறையினர், பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களுக்குச் சுற்றுச்சுவர் எழுப்பி வேலி அமைத்துக் கொண்டு உள்ளனர்.
ஆனால், அதற்கும் மேலாக இப்போது கொண்டு வரப்பட்டு உள்ள இந்தப் புதிய சட்டம், சுதந்திர இந்தியாவில் வாழ்வதற்கு வழங்கப்பட்டு உள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் அமைந்து உள்ளது.
2010ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை எதிர்த்து, மீனவ மக்கள் கிளர்ந்து எழுந்து போராடியதைப் போல, தொல்பொருள் ஆய்வுத்துறை கொண்டு வந்து உள்ள சட்டத்தையும் முழு பலத்துடன் எதிர்த்து மக்கள் போராட வேண்டும். மக்களுக்குப் பயன்தராத இச்சட்டத்தை, ஆளும் காங்கிரÞ-தி.மு.க. கூட்டணி அரசு திரும்பப் பெற வேண்டும் என வலிறுத்துகிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்
23.08.2010 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

