முல்லைப் பெரியாறு பிரச்சினை: மத்திய - மாநில அரசுகளுக்கும், கேரள அரசுக்கும் வைகோ கண்டனம்
Issues: Environment, Human Rights
Region: Tamil Nadu
Category: Articles
முல்லைப் பெரியாறு பிரச்சினை:
மத்திய - மாநில அரசுகளுக்கும், கேரள அரசுக்கும் வைகோ கண்டனம்
தென் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பெரும் துன்பத்துக்கும் துயரத்துக்கும் உள்ளாக்கும் விதமாக முல்லைப் பெரியாறு பிரச்சினை அச்சுறுத்துகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஐந்து மாவட்ட மக்களின் குடிநீருக்கும், விவசாயப் பாசனத்திற்கும் வழியே இல்லாமல் கேடு செய்யும் வகையில் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முடிவு செய்துள்ள கேரள அரசு அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாகச் செய்து வருகிறது. கேரள அரசு திட்டமிடுகின்ற புதிய அணையைக் கட்டினால் ஏற்கனவே உள்ள முல்லைப் பெரியாறு திறந்தவெளிக் கால்வாய் நீர்மட்டத்திற்கு கீழே பள்ளத்தில் அந்த அணை அமையுமாதலால் எதிர்காலத்தில் கேரள அரசே நினைத்தாலும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர முடியாது.
1979-இல் கேரள அரசும், அங்குள்ள பிரபல பத்திரிகையும் செய்த பொய்யான நச்சுப் பிரச்சாரத்தால்தான் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையே ஏற்பட்டது. அணையில் 152 அடி தண்ணீர் தேக்க தமிழகத்துக்கு 999 ஆண்டுகளுக்கு உரிமை உண்டு. தண்ணீர் மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்டதால் உருவான பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு அ.இ.அ.தி.மு.க. அரசு காலத்தில் -- 2006 பிப்ரவரி 27-இல் -- உச்ச நீதிமன்றம் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி 142 அடிக்கு தண்ணீரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும். சில பராமரிப்பு வேலைகளைச் செய்து கொண்டு மேலும் உயர்த்தலாம் என்றும், இதில் கேரள அரசு எந்த முட்டுக்கட்டையும் போடக் கூடாது என்றும் தீர்ப்பளித்தது.
ஆனால், உடனடியாக இதனை எதிர்த்து, கேரள சட்டமன்றத்தைக் கூட்டி முல்லைப் பெரியாறு உள்ளிட்ட கேரளத்தில் உள்ள அணைகளைப் பராமரிக்கவும் மட்டுமின்றி செயல் இழக்கச் செய்யவும், உடைக்கவும் கேரள அரசுக்கு உரிமையும் அதிகாரமும் உண்டு என்றும், இதில் இந்தியாவின் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்றும் கேரள அரசு அக்கிரமமான சட்டத்தை நிறைவேற்றியது. இது மத்திய அரசுக்கும் இந்திய இறையாண்மைக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் பகிரங்கமாக விடப்பட்ட சவால் ஆகும்.
இந்தச் சட்டத்தை எதிர்த்து உடனடியாக அ.இ.அ.தி.மு.க. அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆனால், 2006 தேர்தலில் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, இந்த வழக்கை முறையாகவும், அக்கறையோடும் நடத்தாததாலும், கேரள அரசு 33 வாய்தாக்களைப் பெற்று மூன்று வருடங்கள் வழக்கை இழுத்தடிக்க உடன்பட்டதாலும், பின்னர் உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் தமிழ்நாட்டின் நியாயத்தை ஏற்று தீர்ப்பளிக்கக் கூடும் என்று கருதிய கேரள அரசு, வஞ்சகமாக வழக்கை உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற நியாயமற்ற கோரிக்கைக்குத் தமிழக அரசின் வழக்கறிஞர் எழுத்து மூலம் ஒப்புதல் கொடுத்ததாலும் உச்ச நீதிமன்றம் வருடக்கணக்கில் இரு தரப்பு வாதங்களைக் கேட்டு 2006-இல் வழங்கிய நீதியைத் தானே பறித்துக் கொள்ளும் வகையில் அணையின் வலிமை குறித்தும், புதிய அணையைக் கட்டுவதைக் குறித்தும் ஆய்வு செய்ய ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து அறிவித்தது தமிழகத்துக்கு மிகப் பெரிய பாதகமாகும். அதனால்தான், கேரளாவில், கேரள அரசு இந்த அறிவிப்பை வரவேற்று தாங்கள் வெற்றி பெற்று விட்டாகக் கொண்டாடியது.
புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த 2009-ஆம் ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு அனுமதி கொடுத்தது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும். அப்படி ஆய்வுக்கு அனுமதி கொடுக்கப்பட்ட இடத்தில் கேரள அரசு ஆய்வு செய்தபோது அனுமதி இல்லாத இடத்தில் மரங்கள் வெட்டப்பட்டு, பாதைகள், பாலங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் ஐவர் குழு அறிவித்ததற்குப் பின்னர் அக்குழு புதிய அணை கட்டுவது குறித்து கருத்து கேட்கும் என்ற நிலையிலேயே மீண்டும் புதிதாக அணை கட்டும் இடத்தை ஆய்வு செய்யப் போகிறோம் என்ற கூறி அனுமதி இல்லாத இடத்தில் கேரள அரசு ஆய்வு செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளது. 2009-இல் மத்திய அரசு அனுமதி கொடுத்தது மூன்று மாதங்களுக்கு மட்டும்தான். தற்போது கேரள அரசு ஆய்வு செய்ய முனையும் இடத்தில் -- 1979-லேயே புதிய அணைக்கான ஆய்வு நடத்தப்பட்டு சாத்தியம் இல்லை என்று அப்பொழுதே அறிக்கை தரப்பட்டு விட்ட இடத்தில் -- கேரள அரசு, அதிகாரிகளையும், பொறியாளர்களையும், இராட்சத எந்திரங்களையும் அனுமதிக்கப்படாத பகுதிகளுக்குக் கொண்டு சென்று ஆழ்துளைகள் தோண்டுகின்ற வேலையில் ஈடுபட்டு இருக்கின்றது. முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தமிழகப் பொதுப் பணித்துறை ஊழியர்களைக் கேரளத்தினர் தாக்குவதும், சட்டவிரோதமாக கேரள அதிகாரிகள் அங்கு நுழைந்து செயல்படுவதும் சராசரி சம்பவங்களாகி விட்டன.
உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அறிவித்திருக்கின்ற நிலையில் புதிய அணைக்கான ஆய்வை கேரள அரசு செய்வது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் ஆகும். கேரள அரசினுடைய அராஜகப் போக்கைத் தடுக்க வேண்டிய கடமையை மத்திய அரசு செய்யாமல் அதற்கு உடந்தையாக இருப்பதும், வேடிக்கை பார்ப்பதும், தமிழ்நாட்டுக்குச் செய்யும் துரோகம் ஆகும்.
இந்தப் பிரச்சினையை உடனடியாக உரிய வகையில் மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் தெரிவித்து தமிழகத்தின் உரிமையைக் காக்க வேண்டிய கடமையைத் தி.மு.க. அரசு செய்யாமல் இருப்பது தமிழ்நாட்டின் சாபக்கேடாகும்.
தென் தமிழகத்தின் எதிர்காலத்தையே நாசமாக்கக் கூடிய ஆபத்தைத் தடுக்க மாநில அரசும், மத்திய அரசும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கேரள அரசினுடைய அநீதியான போக்கை எதிர்த்து அடுக்கடுக்கான போராட்டங்களையும் நடத்தி நியாயமான எச்சரிக்கை விடுத்தும் கூட தமிழ்நாட்டைக் கிள்ளுகீரையாக நினைத்து ஆணவத்தோடு தொடர்ந்து தமிழகத்துக்கு எதிராகச் செயல்படும் கேரள அரசுக்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதோடு தமிழக மக்களின் கோபத்துக்கும் பகைக்கும் ஆளாக வேண்டாம் என எச்சரிக்கிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை-8 பொதுச்செயலாளர்
21.08.2010 மறுமலர்ச்சி தி.மு.க.

