Genocide of Eelam Tamils : Hearts Bleed வைகோ தயாரித்து உள்ள ஆங்கிலக் குறுவட்டு, டெல்லியில் வெளியீடு!
Issues: Environment, Human Rights, Srilanka
Region: Tamil Nadu, Other States
Category: Articles, Event, Headlines, Press Releases, Speeches, Video
Genocide of Eelam Tamils : Hearts Bleed
வைகோ தயாரித்து உள்ள ஆங்கிலக் குறுவட்டு,
டெல்லியில் வெளியீடு!
இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களை இனப் படுகொலை செய்த சிங்கள இராஜபக்சே அரசின் கொடூர முகத்தை,இந்திய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும், உலக நாடுகளின் கவனத்திற்கும் கொண்டு வரும் வகையில், Genocide of Eelam Tamils : hearts Bleed என்ற ஆங்கிலக் குறுந்தகடை, வைகோ தயாரித்து உள்ளார்.
ஆகஸ்ட் 3 ஆம் நாள் புதன்கிழமை இரவு 7 மணி அளவில், நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி அவர்களது இல்ல வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், இந்தக் குறுந்தட்டு வெளியிடப்பட்டது; திரைகள் அமைத்து ஒளிபரப்பப்பட்டது.
தலைநகர் தில்லியின் நுhற்றுக்கும் மேற்பட்ட செய்தியாளர்கள், தொலைக்காட்சி ஊடகங்களின் பிரதிநிதிகள் வருகை தந்து இருந்தனர். ஒரு மணி நேரம் முழுமையாக அமர்ந்து இருந்து, ஈழத்தமிழர் படுகொலைக் காணொளி காட்சிகளைப் பார்த்தனர். லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டு உள்ள காணொளிக் காட்சிகளும் இதில் இடம் பெற்று உள்ளன.
‘இந்தக் குறுந்தட்டு, ஈழத்தமிழர்களின் துன்ப வரலாறைப் படம்பிடித்துக் காட்டுகிறது; இதயத்தைப் பிளக்கின்ற சோகத்தை இந்தக் குறுந்தட்டு வெளிப்படுத்துகின்றது; இதனைத் தொகுத்து, ஆங்கிலத்தில் உரை ஆக்கம் செய்து, குறுந்தட்டு நெடுகிலும் தன்னுடைய குரலில் வைகோ பதிவு செய்து இருக்கின்ற விதம், பார்க்கின்றவர்களின் உள்ளத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது’ என அனைவரும் கருத்துத் தெரிவித்தனர்.
இந்த நிகழ்சியில், அ.கணேசமூர்த்தி எம்.பி., ம.தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் தேவதாஸ் ஆகியோர் பங்கு ஏற்றனர்.
இன்று, 4.8.2011 வியாழக்கிழமை, வைகோவும், நாடாளுமன்ற உறுப்பினர் கணேமூர்த்தியும், பாரதீய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி, முன்னாள் வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்கா, ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளடாலா, லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செளத்ரி ஆகியோரை நேரில் சந்தித்து, இந்தக் குறுந்தட்டை வழங்கினர்.
இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தக் குறுந்தட்டு வழங்கப்படுகின்றது.
டெல்லியில் உள்ள அனைத்து நாடுகளின் துhதரகங்களுக்கும் இந்தக் குறுந்தட்டு, ஈழத்தமிழர்களைக் காக்க முன்வருமாறு வேண்டுகோள் கடிதத்துடன் அனுப்பப்படுகிறது.
உலக நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் அமைப்புகளுக்கும் அனுப்பப்படுகிறது.
ஈழத்தமிழர் இனக்கொலை; இதயத்தில் இரத்தம், ஐ.நா. மூவர் குழு அறிக்கை விளக்கம் என ஏற்கனவே வைகோ தமிழில் வெளியிட்ட குறுந்தட்டுகள், இலட்சக்கணக்கில் தமிழகத்தில் மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டு உள்ளது. அந்தக் குறுந்தகடுகளை ஆங்கிலத்தில் தயாரித்துக் கொடுத்தால், உலக நாடுகளில் பரப்புரை செய்திட ஏதுவாக இருக்கும் என்று, புலம் பெயர்ந்த தமிழர்கள் வைகோவிடம் கேட்டுக் கொண்டு வந்தனர். அதன்படி, வைகோ இந்தக் குறுந்தட்டை ஆங்கிலத்தில் தயாரித்து உள்ளார்.
சரியாக ஒரு மணி நேரம் ஓடக்கூடிய இந்தக் குறுந்தட்டு, டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்களது இல்லத்திலும், சென்னையில் ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்திலும் கிடைக்கும்.
தாயகம் தலைமைக் கழகம்
சென்னை - 8 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
04.08.2011

