மத்திய தொல்லியல் துறையின் தொல்லையில் இருந்து, மக்களைப் பாதுகாத்திடுவீர்! கர்நாடக மாநிலத்தைப் போலச் சட்டம் இயற்றுவீர்! வைகோ வேண்டுகோள்!

Issues: Environment, Human Rights, Law & Order, National, Politics, Poverty

Region: Tamil Nadu

Category: Articles, Headlines

Date: 
Mon, 06/08/2012

 

 

 

 

 

மத்திய தொல்லியல் துறையின் தொல்லையில் இருந்து,
மக்களைப் பாதுகாத்திடுவீர்!
கர்நாடக மாநிலத்தைப் போலச் சட்டம் இயற்றுவீர்!
வைகோ வேண்டுகோள்!

நாட்டின் ஒருமைப்பாட்டுக்குச் சுவாசக் காற்றாக விளங்கும் மதச்சார்பு இன்மை என்ற கொள்கைக்கு வேட்டு வைக்கும் மத்திய தொல்லியல் துறையின் நடவடிக்கைகள், மக்களின் உணர்வுகளை மதிக்கின்ற வகையில் இல்லை.

பல்லவர்களின் கலைநகராம் மாமல்லபுரத்து மக்கள், மத்திய தொல்லியல் துறையின் கடுமையான சட்டங்களால் வாழ்வு உரிமையையும், வழிபாட்டு உரிமையையும் இழந்து நிற்கின்றனர். எனவே, தொடர் போராட்டங்கள் நடத்திக் கொண்டு வருகின்றனர். கடந்த 31.07.2012 அன்று, மாமல்லபுரத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, 144 தடை உத்தரவு போடுகின்ற அளவுக்கு, மக்களின் கோபம் போராட்ட வடிவம் பெற்றுள்ளது.

இந்நிலையில் மக்களின் குறைகளை அறிந்துகொள்ள, சென்னை வந்த மத்திய தொல்லியல் துறை அமைச்சர், பாதிப்புக்கு உள்ளான மக்களைச் சந்திக்காமலும், தொல்லியல் துறை கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமலும், நடன நிகழ்ச்சியைக் கண்டு இரசித்துவிட்டு டெல்லி சென்று விட்டார். இவர்கள்தாம், நீரோ மன்னனின் வாரிசுகளாகத் திகழ்கிறார்கள்.

‘மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயிலை ஏன் கையகப்படுத்துகிறீர்கள்?’ என்று அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘அதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது’ என்று கூறி உள்ளார்.

அப்படி என்றால், கோயிலைக் கையகப்படுத்த, 20.5.2012 அன்று நாளிதழ்களில் விளம்பரம் செய்தது, மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளின் தன்னிச்சையான எதேச்சதிகார நடவடிக்கையா?

மக்களின் கருத்தை அறியாமல், மாநில அரசின் ஒப்புதல் பெறாமல், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்குத் தெரிவிக்காமல், ஸ்தலசயனப் பெருமாள் கோயிலைக் கையகப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை, மத்திய தொல்லியல் துறை உடனடியாக கைவிட வேண்டும். இல்லை என்றால், ஏற்படும் விளைவுகளுக்கு மத்திய தொல்லியல் துறையே பொறுப்பு ஏற்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சுமார் 450 இடங்களை மத்திய தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்து உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் சற்று ஏறக்குறையாக 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உள்ளே சென்றுவிடும். குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 156 இடங்களை தேர்வு செய்து உள்ளனர். இதில் காஞ்சிபுரம், மாமல்லபுரம், உத்திரமேரூர், திருப்போரூர், பல்லவபுரம், திருநீர்மலை, சதுரங்கபட்டினம், தாம்பரம், திரிசூலம், திருவிடந்தை, திருமுக்கூடல், மணிமங்கலம், பம்மல், செம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை போன்ற பெரிய மற்றும் சிறிய நகரங்கள் மத்திய தொல்லியல் துறையால் குறிவைக்கப்பட்டு உள்ளது.

இப்படியே போனால், சிறிது காலத்தில் காஞ்சிபுரம் மாவட்டமே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்கு உள்ளே சென்றுவிடும். வரும் முன் காத்திட தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த ஜூலை மாதம், மேற்குத் தொடர்ச்சி மலையை தொல்லியல் துறை கையகப்படுத்த எடுத்த நடவடிக்கையை எதிர்த்து, கர்நாடக மாநில அரசு சட்டமன்றத்தைக் கூட்டி, கையகப்படுத்தக் கூடாது என்று எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அதுபோல, தமிழக அரசும் மத்திய தொல்லியல் துறைக்குக் கடிவாளம் போட வேண்டும்.

நமது பாரம்பரிய அடையாளங்களைக் காப்பதில் நமக்கு அக்கறை இல்லாதது போன்றும், இவர்கள் அதற்காகவே அவாதரம் எடுத்தவர்களைப் போன்றும் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

மத்திய தொல்லியல் துறை உருவாக்கப்படுவதற்கு முன்பு, கண்ணை இமை காப்பது போன்று பாதுகாத்து வந்தவர்கள் அந்ததந்தப் பகுதி மக்களே.

கடந்த காலங்களில் நமது பண்பாட்டு அடையாளங்களான விலைமதிப்பு அற்ற கோவில் சிலைகளை, அரசு வெளிநாட்டில் காட்சிப்படுத்தி கட்டணம் வசூல் செய்ய இருந்த நடவடிக்கைகளைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் கண்டனக் குரல் எழுப்பி உள்ளேன்.

இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களை, இந்தியா முழுமைக்கும் பொதுவாக அமைவது இல்லை. பல மாநில மக்களுக்கு, சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைச் சட்டமாக மாறிவிடுகின்றது. இந்நிலையில், உலக பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ) உலகம் முழுமைக்கும் ஒரே சட்டம் கொண்டு வருவதற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பரிசீலனை செய்ய, இந்தியா அறிவுறுத்திட வேண்டும்.

அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா கண்டங்களில் போதுமான நிலப்பரப்பு உள்ளது. மக்கள் தொகை குறைவு. இந்திய துணைக்கண்டத்தில், மக்கள் தொகை அதிகம். அதற்கு ஏற்றபடி நிலப்பரப்பு இல்லை. இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் சட்டம் இயற்றப்படுவதை பரிசீலனை செய்திட வேண்டும்.

மத்திய தொல்லியல் துறை வழிபாட்டு இடங்களுக்கும், கலைச்சிற்பங்களுக்கும், கல்லறைகளுக்கும், ஒரே சட்டம், ஒரே அளவுகோல் என்று ஒரு தெளிவு இல்லாமல், டெல்லி பட்டணத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்துகொண்டு, சட்டம் இயற்றுவதைத் தவிர்த்து, மக்களின் உணர்வுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் ஊறு விளைவிக்காமல், சம்மந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதல் பெறாமல் சட்டம் இயற்றக்கூடாது. மக்களுக்காகத்தான் சட்டம். சட்டத்துக்காக மக்களைத் துன்புறுத்தக் கூடாது.

மக்களின் குறைகளைக் கேட்டுக் களைவதற்காக மத்திய தொல்லியல் துறையால் அமைக்கப்பட்டு உள்ள ஐவர் குழு, காலம் தாழ்த்தும் கண் துடைப்புக் குழுவாக இல்லாமல், உண்மையாக மக்களின் குறைகளைக் களைகின்ற குழுவாக இருக்க வேண்டும் எனில், இக்குழுவில் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் விதமாக அமைக்கப்பட வேண்டும்.

தமிழக அரசு மத்திய தொல்லியல் துறையின் தவறான கட்டுப்பாட்டால், புதிய வீடு கட்டவும், புதிய மின் இணைப்பு கொடுப்பதை இரண்டு ஆண்டு காலமாக ஆட்சேபணை செய்து நிறுத்தி வைத்து இருப்பதைத் தளர்த்தி, புதிய வீடு கட்டவும், புதிய மின் இணைப்பு வழங்கவும், பன்னெடுங்காலமாக கிராம நத்தத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கிடவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மத்திய தொல்லியல் துறையின் தொல்லைக்கு உள்ளான ஏனைய பகுதி மக்களும், மத்திய தொல்லியல் துறையின் நடவடிக்கைகளால் வாழ்வு உரிமை பறிக்கப்பட்டு, வீடுகள் இடிக்கப்பட்டு, உள்நாட்டு அகதிகளாக மாறுவதற்கு முன்பு கிளர்ந்து எழுந்து போராட வேண்டும். பேராபத்து வருமுன் காத்திடுங்கள்.

மத்திய தொல்லியல் துறையின் தொல்லைகளை எதிர்த்து, மல்லையின் காவலர்களாகப் போராடி வருகின்ற மாமல்லபுரம் மக்கள் வாழ்வுரிமை மீட்புக்குழுவினர் முன்னெடுக்கும் போராட்டம் வெற்றி பெற, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் உறுதுணையாக நிற்கும்.

‘தாயகம்’                            வைகோ
சென்னை - 8                       பொதுச் செயலாளர்,
06.08.2012                            மறுமலர்ச்சி தி.மு.க.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)