மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி கலந்தாய்வுக் கூட்டம் தாயகம், சென்னை - 04.08.2017

Issues: Human Rights, Politics

Region: Tamil Nadu

Category: Articles, Headlines

Date: 
Fri, 04/08/2017

 

 

 

 


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக
இளைஞர் அணி கலந்தாய்வுக் கூட்டம்
தாயகம், சென்னை - 04.08.2017

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் / துணை அமைப்பாளர்கள் கூட்டம் 04.08.2017 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தலைமைக் கழகம் தாயகத்தில், மாநில இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈசுவரன் அவர்கள் தலைமையில் தொடங்கியது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1

ஏரி, குளம், கால்வாய்களை முழுமையாக சீரமைக்கும் திட்டத்தை அறிவித்திடுக!

1. தமிழ்நாடு தொடர்ந்து வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. நமக்கு உரிமைப்படி தர வேண்டிய தண்ணீருக்காக அண்டை மாநிலங்களுடன் போராடும் அதே வேளையில், தமிழகத்தின் பாரம்பரிய நீர் நிலைகளான ஏரி, குளம், குட்டை, கால்வாய்களைப் பாதுகாப்பது மிகவும் அவசியமானதாகும்.

தமிழகத்தில் 39,202 ஏரி, குளங்கள் உள்ளன. இதன் மொத்தக் கொள்ளளவு 347 டி.எம்.சி. ஆகும். இது தமிழகத்தின் அனைத்து அணைகளின் கொள்ளளவைவிட அதிகம். ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக இந்த நீர்நிலைகள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் 46,531 ஏரி, குளங்களை 5 ஆண்டுகளுக்குள் புதுப்பிக்க, சீரமைக்க 20,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிசன் காகதேயாஎன்ற திட்டத்தைக் கொண்டு வந்து தற்போது பெரும்பாலான நீர் நிலைகளை மேம்படுத்தியுள்ளனர்.

தமிழகத்திலும் இதைப்போல 39,202 ஏரிகளையும், வரத்துக் கால்வாய்களையும், மதகுகளையும் ஐந்தாண்டு காலத்திற்குள் சீரமைக்கும் முழுமையான திட்டத்தை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2

நதிநீர் இணைப்பை வலியுறுத்தி பரப்புரை

தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள நதிநீர் இணைப்புத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய -மாநில அரசுகளை வலியுறுத்தி பரப்புரை மேற்கொள்வது என்றும்,

முதல் கட்டமாக பாண்டியாறு-புன்னம்புழா, ஆனைமலையாறு-நல்லாறு இணைப்புத் திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி பாண்டியாறு முதல் ஈரோடு வரை பிரச்சாரப் பயணம் மேற்கொள்வது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 3

நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்திடுக!

தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகளிலும் இரசாயனம் மற்றும் மாசடைந்த கழிவுநீர் கலப்பதைத் தடுக்க ஒருங்கிணைந்த திட்டத்தை காலநிர்ணயம் செய்து, அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4

கோட்டை நோக்கிப் பேரணி!

தமிழகத்தின் இயற்கை சூழலும், குடிநீரும், விவசாயமும் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்து உள்ளது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மலைப்பகுதிகள் அழிக்கப்பட்டு வருவதை தமிழக அரசு பொருட்டாகவே எடுத்துக்கொள்வது இல்லை. இந்த மலையை பாதுகாத்தால் மட்டுமே தமிழகத்தின் எதிர்கால வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முடியும். மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்த மத்திய அரசின், ஸ்தூரி ரங்கன் கமிட்டிஅறிக்கையைப் பற்றி தமிழக அரசு எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை. அதன் சாராம்சங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களைப் பற்றியும் எந்த ஆய்வும் செய்யவில்லை.

மத்திய அரசின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்கூட, தமிழக அரசு தனது எல்லைக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக்கு தனித் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தமிழகத்தின் அனைத்து மண்டலங்களிலும் நதிநீர் பாதுகாப்பு பரப்புரையை முடித்த பின்பு இறுதியாக, மேற்குறிப்பிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி மறுமலர்ச்சி தி.மு.க. இளைஞர் அணி சார்பாக கோட்டை நோக்கிப் பேரணி நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 5

போதைப் பொருட்களைத் தடுக்க வலியுறுத்தி சென்னையில் பரப்புரை!

மதுவின் போதையில் சிக்கியுள்ள தமிழக இளைஞர்கள் தற்போது சில மாதங்களாக கஞ்சா, அபின், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களுக்கும் அடிமையாகும் நிலை உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்தப் போதைப் பொருட்கள் எளிதாக கல்லூரிகளில் விற்பனை செய்யப்படுகிறது.

குட்கா வியாபாரிகளிடம் இலஞ்சம் பெற்றவர் என்ற சந்தேகத்திற்குரியவரையே காவல்துறைத் தலைவராக நியமனம் செய்தது, போதை வியாபாரிகளுக்கு மேலும் ஊக்கத்தைக் கொடுத்துள்ளது.

இந்த போதைப் பொருட்களுக்கு அடிமையாகிவிட்டால், இளைஞர் சமுதாயத்தை மீட்டெடுக்க இயலாமல் போய்விடும்.

போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்கவும், இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இளைஞர் அணி சார்பில் தலைநகர் சென்னையில் பரப்புரை நடத்தப்படும் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 6

தஞ்சை மாநாட்டில் பத்தாயிரம் பேர் சீருடையில் கலந்துகொள்வது!

தஞ்சையில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா 109ஆவது பிறந்த நாள் விழா மாநாட்டில் இளைஞர் அணி சார்பில் பத்தாயிரம் பேர் சீருடையுடன் கலந்துகொள்வது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 7

சங்கொலி சந்தா சேர்ப்புப் பணியில் தீவிரமாக ஈடுபடுதல்

இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் தீவிரமாகச் செயல்பட்டு கழகத்தின் கருவூலமான சங்கொலி சந்தா சேகரித்து, தஞ்சை மாநாட்டில்  ஆயிரம் சந்தாக்களை கழகப் பொதுச்செயலாளர் அவர்களிடம் ஒப்படைப்பது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 8

மாவட்ட அளவிலான இளைஞர் அணி கூட்டங்கள்

இளைஞர் அணியை வலுப்படுத்த வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டக் கழகச் செயலாளர்களின் வழிகாட்டுதலுடன், அந்தந்த மாவட்ட அமைப்பாளர்கள் ஒன்றிய, நகர, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தை நடத்தி, கூட்டத்தில் கலந்துகொண்ட அமைப்பாளர்களின் பட்டியலை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 9

டெங்குக் காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்பை தடுத்திடுக!

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலினால் இளம் பிள்ளைகள் தொடர்ந்து உயிரிழப்பது மிகவும் வேதனை தருகிறது. தமிழக அரசு, மூடி மறைக்கும் செயலில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, தீவிர முயற்சி எடுத்து டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 10

தமிழகத்தின் உரிமைகளை அடமானம் வைக்கும் தமிழக அரசு!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று எதிர்த்த அனைத்துத் திட்டங்களையும், மத்திய அரசின் மறைமுக நிர்பந்தத்தால் தற்போது தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் திட்டம், நீட் எதிர்ப்பு , ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு, கேஸ் சிலிண்டர் மானியம் ரத்து ஆகிய பல பிரச்சினைகளில் உண்மைகளை மறைத்து தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்று மோசடி உத்தரவாதம் தந்து, தமிழக அரசே இத்திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு தருவது தமிழகத்தைப் படுகுழியில் தள்ளிவடும்.

தமிழக மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் மத்திய அரசின் வருமான வரித்துறை சோதனைக்கும், நிர்பந்தத்திற்கும் பயந்துகொண்டு தமிழகத்தின் உரிமைகளை அடமானம் வைப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தாயகம்,
சென்னை
04.08.2017

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)