விவசாயப் பெருமக்களே! துயரங்கள் நீடிக்காது! நம்பிக்கையுடன் இருங்கள்! விளைநிலங்களை விற்காதீர்கள்! கொங்கு மண்டல விவசாயிகள் மாநாட்டில் வைகோ வேண்டுகோள்.
Issues: Farmers, Rural
Region: Coimbatore - Rural
Category: Headlines, Speeches
விவசாயப் பெருமக்களே! துயரங்கள் நீடிக்காது!
நம்பிக்கையுடன் இருங்கள்!
விளைநிலங்களை விற்காதீர்கள்!
கொங்கு மண்டல விவசாயிகள் மாநாட்டில் வைகோ வேண்டுகோள்.
மறுமலர்ச்சி தி.மு.க. விவசாய அணி சார்பில் கொங்கு மண்டல விவசாயிகள் கோரிக்கைப் பேரணியும், மாநாடும் பொள்ளாச்சியில் 7.12.09 அன்று நடைபெற்றது. மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டங்கள் நிறைந்த வீரவரலாற்றுப் பயணத்தில், பொள்ளாச்சி மாநாடு சரித்திரப் புகழ் படைக்கின்ற மைல்கல்லாகக் காட்சி அளிக்கின்றது. கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு அப்பாலும் கட்டுக்கு அடங்காமல் திரண்டு இருக்கின்ற விவசாயிகள் கூட்டம். மேடைக்கு எதிரிலும், இடது பக்கத்தில் மட்டும் அல்லாமல், இந்த மேடைக்குப் பின் புறத்திலும் மக்கள் வெள்ளமாகச் சங்கமித்து இருக்கின்ற கூட்டத்தைக் கண்டு நான் திகைத்துப் போய் இருக்கின்றேன்.
கோவை மாவட்ட விவசாயிகள் மாநாடு. இன்று மாலையில் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை, இடி முழக்கக் குரலிலே நமது கண்மணிகள் பொள்ளாச்சி தெருக்களிலே முழங்கிவர, சாலையின் இருமருங்கிலும், இந்தப் பொள்ளாச்சி நகரத்துப் பெருமக்கள், தாய்மார்கள், பெரியவர்கள், ஆடவர், பெண்டிர், வாலிபர், வயது முதிர்ந்தோர், அருகிலே இருக்கக் கூடிய கிராமங்களிலே இருந்து இந்தப் பொள்ளாச்சி நகரத்துக்கு வந்த பெருமக்கள் என எல்லோரும் எங்களைக் கனிந்த முகத்தோடு, பாச உணர்வோடு அன்பு மலர் தூவி வரவேற்றதும், பேரணிக்கு வாழ்த்துக் கூறியதும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக அரசியலில் அலட்சியப்படுத்த முடியாத இமயமலையாக எழுந்து நிற்கின்ற மாபெரும் சக்தி என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறது.
ஏறத்தாழ ஐந்து மணி நேரத்துக்கு மேலாக நீங்கள் அமர்ந்து இருக்கிறீர்கள். பனி கொட்டுகிறது, குளிர் வாட்டுகிறது. பசி ஒரு பக்கம் வயிற்றைப் பிசைகிறது. ஆயினும், நான் தொடக்கத்தில் கூறியதைப்போல, குகைக்கு உள்ளே இருந்து சோம்பல் முறித்துக் கொண்டு புறப்படுகிற சிங்கத்தைப் போன்றவர்கள் இந்தக் கொங்கு மண்டலத்திலே இருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கண்மணிகள் என்பதை நீங்கள் மீண்டும் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.
இது கழகத்தின் கோட்டை தான். எதிரிகள் நெருங்க முடியாத எஃகுக் கோட்டை தான். எவர் போனால் என்ன? நாங்கள் இருக்கிறோம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரத்தமும், சதையுமாக இருக்கக்கூடிய இலட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறோம் என்று இந்த மாநாட்டில் பங்கு ஏற்று இருக்கின்றீர்கள்.
உழவர்களின் துயர் துடைப்பதற்காக, விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்பதற்கான மாநாட்டை, தேவையான நேரத்தில், வெற்றிகரமாக நடத்தி இருக்கிறோம்.
நான் இந்தக் கொங்குச் சீமைக்கு என்றைக்குமே நன்றிக் கடன்பட்டு இருக்கிறேன். பல்லடத்திலே நாம் நடத்திய விவசாயிகள் மாநாட்டில் பேசுகிறபோது சொன்னேன், ‘கொங்கு’ என்ற இனிய தமிழ் சொல்லுக்கு ஏராளமான பொருள் இருக்கின்றது. ‘கொங்கு’ என்றால் மேடு என்ற பொருள்படும். பள்ளத்தில் கிடக்கின்ற விவசாயியை, மேட்டிலே கொண்டுவந்து நிறுத்துவதற்காகத்தான் இந்தக் கொங்கு மண்டல விவசாயிகள் மாநாட்டை அன்றைக்குப் பல்லடத்திலே நடத்தியதைப் போலவே, இன்றைக்கு இந்தக் கொங்குச் சீமையின் திருநகரமாகிய பொள்ளாச்சி நகரத்திலே நாம் நடத்துகிறோம்.
இந்த கொங்குச் சீமை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அரண் அமைத்துக் கொடுத்து இருக்கின்றது. அதனால்தான், நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிட்ட நான்கு தொகுதிகளில், மூன்று இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், இந்தக் கொங்கு மண்டலத்தின் ஒரு கேந்திரமான ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் என் ஆருயிர்ச் சகோதரன் தியாக வேங்கை கணேசமூர்த்தியை வெற்றி பெற வைத்து இருப்பதும் இந்தக் கொங்கு நாட்டு மக்கள்தான்.
அந்த நன்றி உணர்வோடுதான் இன்றைக்குப் பொள்ளாச்சியிலே நடைபெறுகின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் விவசாயிகள் மகாநாட்டிலே நாம் பங்கு எடுத்துக் கொண்டு இருக்கிறோம். இது காசு கொடுத்து வாகனங்களிலே அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல. தாங்களாகத் திரண்டு, கைக்காசு செலவழித்து, கடன் வாங்கிச் செலவழித்து வந்து இருக்கின்ற கூட்டம். தியாகப் பிழம்பாகக் காட்சி அளிக்கின்றார்கள் என் கண்மணிகள்.
கோவை விமான நிலையத்தில் என்னைக் கண்டமாத்திரத்திலே மாவட்டச் செயலாளர்கள் ஆர்.டி. மாரியப்பன் அவர்களும் மோகன்குமார் அவர்களும் கோபித்துக் கொண்டார்கள். கடுமையான காய்ச்சல் அனலாகக் தகிக்கின்றது. இந்த நிலையிலும் கூட நீங்கள் ஏன் சுற்றுப் பயணத்தை ரத்து செய்யவில்லை? என்று கேட்டார்கள்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை ஆதரித்து, திருச்செந்தூரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய பொதுக் கூட்டம், அதன் பின்னர் முல்லைப் பெரியாறு போராட்ட ஆயத்தப் பிரச்சாரப் பயணம். 40 க்கு மேற்பட்ட கிராமங்களில் பேசிவிட்டு, அந்த இரவிலேயே புறப்பட்டு மறுநாள் வந்தவாசியிலே அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரப் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு இங்கே வந்து இருக்கின்றீர்கள். உடல் நலம் பாதிக்கப்படுவதைப் பற்றி எங்கள் உள்ளத்தில் ஏற்படுகின்ற வேதனையை நீங்கள் பொருட்படுத்துவது இல்லையா? என்று கேட்டார்கள்.
நான் சொன்னேன். ‘பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை என்றால் ஏதாவது ஒரு பொய்க் காரணத்தை எழுதிக் கொடுப்பதைப் போல, நிகழ்ச்சிகளை ரத்து செய்வதற்கு, அரசியல்வாதிகள் சுலபமாகக் கண்டுபிடித்து இருக்கின்ற உபாயம்தான், உடல் நலம் சரி இல்லை என்று விமர்சிக்கின்ற அளவுக்கு, நாட்டில் நிலைமைகள் ஏற்பட்டு இருப்பதால், உண்மையிலேயே உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தாலும்கூட நிகழ்ச்சியை நான் ரத்து செய்ய முடியாதவனாக இருக்கிறேன். அதன் பிறகு விளக்கங்களை தந்துகொண்டு இருக்க முடியாது என்று கூறித்தான் தொடர்ந்து நிகழ்ச்சிகளிலே நான் கலந்து கொண்டு வருகிறேன்.
அதனுடைய பாதிப்புத்தான் இந்த நிகழ்ச்சியிலும் எனக்கு ஏற்பட்டாலும்கூட, எத்தனையோ இழப்புகளைத் தாங்கிக்கொண்டு நீங்கள் இந்த இயக்கத்தை நடத்துகிறீர்களே?
இந்த இயக்கத்தின் தோழர்களுக்கு ஏற்பட்டு இருக்கின்ற இழப்புகளை, துயரங்களை நான் எண்ணிப்பார்க்கிறேன். எந்தப் பயனையும் எதிர்பாராமல் கட்சிக்காக உழைக்கிறார்கள். உழவன்தான் அப்படி உழைப்பான். விளைந்தாலும் விளையாவிட்டாலும், மண்ணைத் தாயாகப் போற்றுவான். விளையவில்லையே என்று வேதனைப்பட்டு நிலத்தைப் பார்க்காமல் இருக்கமாட்டான்.நிலத்துக்குச் சென்று போராடுவான். விடாமுயற்சிக்கு அடையாளம் உழவனைவிட, விவசாயியை விட இந்த உலகத்தில் எவருமே கிடையாது. அப்படிப்பட்டவர்கள்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்கள்.
தமிழ்நாட்டின் நலன்களை முன்னிறுத்தி இந்த மாநாட்டில், விவசாயிகளின் பிரச்சனைகளை அக்கு வேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து, அடுத்துச் செய்யவேண்டியது என்ன என்ற வகையிலே ஆக்க பூர்வமான தீர்மானங்களை, அரசாங்கம் செயல்படுத்த வேண்டிய தீர்மானங்களை வகுக்கக் கூடிய ஆற்றலும், திறமையும் கொண்டு இருக்கக்கூடிய இந்த இயக்கத்தை, இந்த நாட்டு மக்கள் எந்த இடத்தில் வைத்தாலும் நாங்கள் பணியாற்றுவோம்.
நேற்றைக்கு பொள்ளாச்சி நகரத்துக்கு உள்ளே நானும், பொன்னுசாமி, ஆர்.டி.எம், மோகன்குமார் நுழைகின்ற போது, நம்முடைய தோழர்கள், இளைஞர்கள், நூற்றுக்கணக்கிலே திரண்டு, அதிர வைக்கும் முழக்கத்தோடு எங்களை வரவேற்ற நேரத்தில் கையில் கொடியோடு காட்சி அளித்த குகன் மில் செந்தில்தான் என் நெஞ்சில் ஆழப்பதிந்தார்.
என் மனதுக்குள் எவ்வளவு வேதனை?
இந்த நகரத்தின் பொறுப்பாளர் செந்தில் பாரம்பரியமான பண்பாடுள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். பார்ப்பதற்குக் களையான முகம், யாரையும் கவர்ந்து இழுக்கக்கூடிய ஒரு வசீகர சக்தி. அவருக்கு ஒரே மகன், அவரது ஒரே பிள்ளை, ஒரே புதல்வன்.
எவ்வளவு பெரிய துன்பத்திற்கும், துயரத்துக்கும் செந்தில் ஆளானார்? அவருடைய ஆசை மகன், ஒரே மகன், நல்ல ஆணழகன் தோற்றம், படிப்பிலே படுசுட்டி, கெட்டிக்காரன், கூடைப்பந்தாட்ட விளையாட்டிலே பல்கலைக்கழக வீரன், மாநில அளவிலே விளையாட்டிலே வீரன், அகில இந்திய அளவிலே இந்தியக் குழுவிலே தேர்வு பெறக்கூடிய அளவுக்குத் திறமை பெற்று இருந்தவன். ஒழுக்கம் நிறைந்தவன். ஒரு வாலிபன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வளர்ந்தவன்.“ஹரிஹரசுதன்” எங்கள் செந்திலின் பிள்ளை.
எவ்வளவு ஆசையாக, நண்பனின் திருமணத்துக்காக, நண்பர்களோடு பெங்களூருக்குச் சென்றான். விபத்திலே மடிந்தான். இடி விழுந்ததே செந்திலின் தலையில்? செந்திலின் துணைவியார் தலையில்? அந்தக் குடும்பமே நொறுங்கிப் போய் விட்டதே? அந்தக் கண்ணீர் வெள்ளத்தில் இருந்து அவர் மீள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அந்தத் துயரங்களையும் தாங்கிக்கொண்டு, இந்த நகரத்திலே ஓடியாடி ஒரு தொண்டனைப் போல கொடிபிடித்துக்கொண்டு சாலையில் வந்ததைப் பார்த்தபோது, எவனடா எங்கள் இயக்கத்தை அசைக்க முடியும்? இப்படிப்பட்ட லட்சக்கணக்கான செந்தில்கள் எங்கள் இயக்கத்தில் இருக்கிறார்கள்.
நேற்று இரவு வருகிறேன். தொண்டர் படைத் தம்பி அன்பு ஓடி வருகிறான். அதிர்ச்சி தருகின்ற செய்தியை டாக்டர் அருள் எனக்குச் சொல்லுகிறார். அண்ணா, நம்முடைய அன்பழகனுடைய உடன் பிறந்த அண்ணன் மகன், நேற்றைய தினம் விபத்திலே இறந்து போனார் என்று சொன்னபோது, எனக்குத் தாங்க முடியவில்லை.
அப்பொழுது அன்பு சொன்னான்: கார் விபத்தில் உடம்பில் எந்த இடத்திலும் காயம் இல்லை. வயிற்றுப் பக்கத்தில் வலி தாங்க முடியவில்லை என்று சொன்னான். ஆÞபத்திரிக்குப் போய் சரி பண்ணிவிடலாம் என்று சொல்லிக்கொண்டே வந்தேன். தூங்கி விட்டான் என்று நாங்கள் நினைத்தோம், கே.எம்.சி மருத்துவமனை வாசலுக்குக் கொண்டு போனோம். டாக்டர் வந்து கையைப் பிடித்துப் பார்த்தார். உயிர் பிரிந்து 20 நிமிடங்கள் ஆகிவிட்டது என்று சொன்னார்.
அந்தத் துன்பத்தையும் தாங்கிக்கொண்டு, அன்பு தொண்டர் அணிச் சீருடை அணிந்துகொண்டு இயக்கத்துக்குப் பணியாற்ற வந்து இருக்கிறானே, அந்த உணர்ச்சியைத்தான் நான் பார்க்கிறேன்.
வாழ்வாதாரங்கள் அனைத்தும் பறிபோய், எதிர்காலம் இருண்டு விடுமோ என்கின்ற ஆபத்துக்குள்ளே இன்றைக்குத் தமிழ் நாடு சிக்கி இருக்கின்றது. இதில் பெரும் துன்பத்துக்கு உள்ளாகி இருப்பவன் விவசாயிதான். எந்நாளும் ஏற்படாத துன்பம்.
மத்திய அமைச்சர் பதவிகளை கோபாலபுரத்தாரிடம் தூக்கிக் கொடுத்துவிட்டு, மறு பக்கத்திலே இனத்தை அழிப்பதற்கும், தமிழ்நாட்டின் உரிமைகளை அழிப்பதற்கும் மைய அரசு ஏற்பாடு செய்துவிட்டது.
தென்னை விவசாயிகளுடைய நலனைக் காப்பாற்ற வேண்டும் என்று நியாயமான கோரிக்கையை வைத்து இருக்கிறீர்கள். கொப்பரைக் கொள்முதல் நிலையங் களில் கிலோ 44.50 காசு என்று கொள்முதல் செய்வதிலே, தென்னை விவசாயிக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. அது வணிகர்களுக்கோ, அதிகாரிகளுக்கோதான் போய்ச் சேருகிறது.
எனவே, தென்னை விவசாயிகளுக்கு, கிலோவுக்கு 15 ரூபாய்க்கு குறையாமல் மானியமாகத் தாருங்கள் என்ற தீர்மானம் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களைச் சந்தித்தோம். கேரளத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் எங்களோடு வந்து இருந்தார்கள். இறக்குமதி செய்யப்படுகிற பாமாயில் போன்ற எண்ணெய்க்கு அதிக வரி விதிக்க வேண்டும். நூறு சதவீதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் அடல்பிஹாரி வாஜ்பாய்.
அதைப் போலவே விவசாயத் துறை அமைச்சராக இருந்த, இன்றைய பீகாரின் முதல் அமைச்சர் நிதிஷ்குமாரைச் சந்தித்து நாங்கள் கோரிக்கை வைத்தபோது, ‘உங்கள் கோரிக்கையின் நியாயத்தை, பிரதமர் ஏற்கனவே எங்களிடம் சொல்லி விட்டார்’ என்றார். வாஜ்பாய் அவர்களைப் பற்றி டாக்டர் கிருஷ்ணன் இங்கே குறிப்பிட்டார். எத்தனை காரியங்களைச் செய்து கொடுத்தார்கள், எத்தனை தேவைகளை நிறைவேற்றினார்கள்?
இங்கே நம்முடைய ராமகிருஷ்ணன், கள் இறக்கும் இயக்கத்துக்காகப் போர்க்குரல் எழுப்பினார். நல்லசாமி அவர்கள், இங்கே இருக்கிறார்கள்.
நான் அவர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். நதிகள் இணைப்பைப் பற்றி குழப்பமான செய்திகள் பத்திரிகையிலே வந்துகொண்டு இருக்கின்றன. கங்கை - காவிரி இணைப்பு கைவிடப்பட்டு விட்டதாகவும், ஏதோ நேற்று வரை ஏற்றுக்கொண்டு இன்றைக்கு கைவிடப்பட்டது போலவும், இதைப் பற்றித் தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலர் பல கருத்துகளைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
நான் இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கங்கை - காவிரியை இணைக்கலாம் என்ற கருத்தைச் சொன்ன கே.எல்.ராவ், ஒரு தலை சிறந்த பொறியாளர். அவர் மத்தியில் அமைச்சராக இருந்தபோது இந்தக் கருத்தைச் சொன்னார். நேரு காலத்தில் முன் வைக்கப்பட்டது. பின்னர் அது சாத்தியம் அற்றது, விந்திய சாத்புரா மலைகளைக் கடந்து தண்ணீரைக் கொண்டு போவதற்கு அதிக மின்விசை தேவைப்படும். ஏராளமான பொருட் செலவாகும். எனவே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என்று, அறுபதுகளிலேயே இந்த முடிவுக்கு வந்து விட்டார்கள்.
இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் இமாலய நதிகள் ஆணையம், தீபகற்ப நதிகள் ஆணையம் என்று இரண்டு ஆணையங்கள் அமைக்கப்பட்டன. இமாலய நதிகளையும், தீபகற்ப நதிகளையும் தனித்தனியாக இணைப்பது என்றும், அதன் மூலமாக நதிகள் இணைப்புக்கு வழி காண்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த அடிப்படையில்தான், நான் 2000ஆம் ஆண்டிலே நதிகள் இணைப்புக்கான மசோதாவை நாடாளு மன்றத்தில் கொண்டுவந்து, அந்த மசோதா எடுத்துக் கொள்ளப்பட்டு முழுமையாக மூன்று நாள்கள், நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.
அந்த வாதத்திலேதான், முதலில் தென்னக நதிகள் இணைக்கப்படட்டும், மகாநதி கோதாவரியுடன் இணையட்டும், கோதாவரி நதி கிருஷ்ணாவுடன் இணையட்டும், கிருஷ்ணா காவிரியுடன் இணையட்டும், காவிரி வைகை தாமிரபரணியுடன் இணையட்டும் என்ற அடிப்படையில் வாதத்தை வைத்தேன்.
இந்திய நாடாளுமன்றத்திலே இருக்கக் கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் அந்த வாதத்திலே பங்கு ஏற்றன. ஒரேஒரு கட்சியைத் தவிர. திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பி.எச்.பாண்டியன் ஆதரித்துப் பேசினார்.
அந்த வாதத்தின்போது, கேரளத்துக்கும் நமக்கும் இருக்கக்கூடிய பிரச்சனைகளை நான் எடுத்து வைத்தேன். முல்லைப் பெரியாறு பிரச்சனையை, பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தையொட்டி ஆனைமலை ஆறு நல்லாறு, இடமலையாறு பிரச்சனைகளை எடுத்து வைத்தோம். இந்த வாதம் கிட்டத்தட்ட மூன்று மாத காலம், ஒரு வெள்ளிக்கிழமை தாண்டி இன்னொரு வெள்ளிக்கிழமையாக தனிநபர் மசோதாவாக இந்திய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
சுதந்திர இந்தியாவில் இந்திய நாடாளுமன்ற மக்களவையில், நதிகள் இணைப்புக்காக வாதம் நடத்தப்பட்ட மசோதா என்பது, இந்த எளியவன் வைகோ கொண்டுவந்த மசோதாவைத் தவிர எதுவும் கிடையாது. இதை நான் தற்பெருமையாகவோ, அகந்தையாகவோ சொல்லவில்லை. நான் ஒரு விவசாயக் குடும்பத்திலே பிறந்தவன். விவசாயிகளின் கண்ணீரை உணர்ந்தவன், ஒரு கிராமத்துக்காரன், பட்டிக்காட்டுக்காரன், என் பக்கத்து வீடுகளிலே என்னைச் சுற்றி இருக்கின்ற மக்கள் படுகிற கண்ணீரை, அவதியை உணர்ந்தவன். இன்றைக்கு, விவசாயிகளின் வாழ்வு நொறுங்கி அப்படியே சிதிலம் அடைந்து கிடக்கின்றது. நதிகளை இணைத்தால், வாழ்வாதாரம் கொடுக்க முடியும் என்ற அடிப்படையிலே இந்த மசோதாவைக் கொண்டு வந்தோம்.
அதன்பிறகு, 2004 அன்றைக்கு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் குறைந்தபட்ச செயல் திட்டத்தை அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைத்தது. இன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும், அதைப்போலவே அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களும் சேர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்தை வடித்தபோது, முதல் வேலையாக நான் மன்மோகன் சிங் அவர்கள் வீட்டுக்குப் போனேன்.
நதிகள் இணைப்பை, செயல் திட்டத்திலே சேருங்கள். தென்னக நதிகள் இணைப்புக்கு முன்னுரிமை கொடுப்போம் என்ற எங்கள் கோரிக்கையை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றேன். ‘பிரணாப் முகர்ஜியைப் பார்த்துப் பேசுங்கள்’ என்றார். நான் அவரையும் வீட்டில் போய்ப் பார்த்தேன். குறைந்த பட்ச செயல் திட்டம் வடிக்கப்பட்டபோது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்த அந்த வாசகங்கள்தான் அதிலே பதிவு செய்யப்பட்டன.
இன்றைக்கும் நான் சவால் விட்டுச் சொல்லுவேன். நாங்கள் பெரிய கட்சி அல்ல. எங்களிடத்தில் 19 எம்.பி.க்கள் இல்லை. நாட்டின் அதிகாரத்தைத் தீர்மானிக்கக்கூடிய இடத்திலும் நாங்கள் இல்லை. ஆனால், 100 கோடி மக்களின் எதிர்காலத்தை வரையறுத்த குறைந்த பட்ச செயல் திட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.க கொடுத்த மசோதா - கொடுத்த தீர்மானம்தான் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அந்த அடிப்படையில்தான் பல்லடம் மாநாட்டுக்கு முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களை அழைத்துக் கொண்டு வந்தோம். நதிகள் இணைப்பு என்ற கருத்துக்குப் பலத்த ஆதரவு கொடுத்துப் பேசினார். இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டைத் தீர்மானிப்பது இந்தப் பிரச்சனை’ என்று சொன்னார்.
அடுத்து வேடசந்தூரிலே மாநாடு. என் இனிய நண்பன் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி வந்தார். ‘நதிகள் இணைப்புக்கான கருத்தை அரசியல் அரங்கத்தில் எடுத்து வைத்த கட்சி மறுமலர்ச்சி திமுக; முன்னெடுத்து வைத்தவன் எனது நண்பன் வைகோ’ என்று அந்த மாநாட்டிலே பேசினார்.
ஆக, விவசாயிகளுடைய துயர் துடைக்க வேண்டும் என்ற கடமை உணர்வோடுதான் நாங்கள் போராடினோம். அந்த அடிப்படையிலேதான் தென்னை விவசாயிகளுக்காக இங்கே குரல் கொடுக்கின்றோம்.
வேடசந்தூர் மாநாடு முடிந்தவுடன், இந்தக் கொங்கு மண்டலத்தின் நீராதார பிரச்சனைகள் உள்ளிட்ட தமிழகப் பிரச்சனைகளைப் பற்றி வாதிப்பதற்காக, எடுத்துச் சொல்லுவதற்காக, நாங்கள் திருவனந்த புரத்துக்குச் சென்றோம். அன்றைய முதல் அமைச்சர் உம்மன் சாண்டி அவர்களைச் சந்தித்தோம். அவர் நீர் பாசன அமைச்சரையும், நீர்பாசனத் துறை பொறியாளரையும், தலைமைச் செயலாளரையும் உடன் வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரம் எங்களிடம் வாதித்தார். ஒவ்வொரு பிரச்சனையாக எடுத்து வைத்தோம். இடைமலை ஆற்றிலே வேலை முடிந்துவிட்டது. நீங்கள் அணை கட்டி முடித்து விட்டீர்கள். ஆனால், ஒரு நூறு அடி தூரத்துக்குக் கட்டவில்லை என்று சொல்லிக்கொண்டு, நீங்கள் எதற்காக ஆனைமலையாறு நல்லாறு திட்டத்துக்கு நீங்கள் ஒப்புதல் கொடுக்க மறுக்கிறீர்கள்? இது நியாயம்தானா? என்று கேட்டோம்.
‘நான் விசாரிக்கிறேன்’ என்று சொன்னார். முல்லைப் பெரியாறு, நெய்யாற்றுப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசினோம். வெளியே வருகிறபோது அங்கே இருந்த பத்திரிக்கை நண்பர்கள் எங்களைச் சந்தித்தார்கள். அப்போது ஒரு நண்பர் சொன்னார்.
‘நீங்கள் என்ன கோரிக்கை வைத்தாலும் சரி. அது நியாயமானதாக இருந்தாலும்கூட, இங்கே அச்சுதானந்தன் என்கிற ஒருவர் இருக்கிறார். மார்க்சிஸ்ட் கட்சியிலே அவருக்குப் பயந்து யாரும் தமிழ் நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் கொடுக்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள்’ என்றார். அப்பொழுது முதலமைச்சர் அல்ல அச்சுதானந்தன். ஆனாலும், அவருக்குப் பயந்துகொண்டு எந்தக் கட்சியும் எந்தத் தலைவர்களும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கொடுப்பதை ஏற்கவே மாட்டார்கள் என்றார்.
அதனுடைய விளைவு என்ன? கன்னியாகுமரி மாவட்டத்திலே நெய்ஆற்றுக்கு வரவேண்டிய நியாயமான தண்ணீர் மறுக்கப்பட்டுவிட்டது. அதனால், குமரி மாவட்ட விவசாயிகள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதைப் போலத்தான் முல்லைப் பெரியாறிலே ஒரு பெரும் ஆபத்து நம் தலைக்கு மேலே கத்தி போலத் தொங்கிக்கொண்டு இருக்கின்றது. முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரளம் திட்டமிட்டு இருக்கின்றது. அந்த நோக்கத்திலேதான் புதிய அணை கட்டத் திட்டமிட்டு இருக்கின்றார்கள்.
‘புதிய அணை, புதிய ஒப்பந்தம்’ என்கிறார்கள். அப்படிப்பட்ட புதிய அணையை, நூறு மீட்டர் தூரத்திலே கட்டுகிறபோது, ஒரு லட்சத்து இருபதாயிரம் டன் பாறைகளை அவர்கள் உடைக்கப் போகிறார்கள். 1250 கிலோ கரி மருந்தைப் பயன்படுத்தப் போகிறார்கள். எல்லா ஏற்பாடும் செய்து விட்டார்கள். அப்படி அவர்கள் உடைக்கின்றபோது, பேபி அணை உடையும். பிரதான அணைக்கு ஆபத்து ஏற்படும். அதிலே ஒரு சிறு கீறல் ஏற்பட்டுவிட்டாலும், அணை உடைந்துவிட்டது என்று சொல்லி அணையை அவனே உடைப்பான். யார் தடுப்பது?
தமிழ்நாட்டு இன்ஜினியர்கள் அங்கே போக முடியாது. நம்முடைய போலீசு அங்கே போக முடியாது. 95 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு செலுத்தி இருக்கிறது. இன்று வரை மின்சாரம் கொடுக்கவில்லை. ஜெனரேட்டர் இயக்குவதற்கு அனுமதிப்பது இல்லை. எப்பொழுதோ ஒரு யானை கேரளா மின்துறை மின்சாரத்தை எடுத்து வருகின்ற பாதையிலே அடிபட்டு விட்டதாம். இதைக் காரணம் காட்டி, நமக்கு மின்சாரத்தைத் தர மறுக்கிறார்கள். இருண்டு கிடக்கிறது நம்முடைய அலுவலகம். ஆனால், புதிய அணை கட்டுவதற்கு அவர்கள் அலுவலகத்தைத் திறந்து விட்டார்கள்.
எப்படி கர்நாடகம் அணைகட்டிய போது மத்திய அரசு தடுக்கத் தவறியதோ, காவிரியிலே நாம் வஞ்சிக்கப்பட்டோமோ, அதேபோன்ற ஆபத்து இப்பொழுது இங்கேயும் இருக்கிறது.
மத்திய அரசைப் பற்றி அச்சுதானந்தன் கூட்டம் கவலைப்படப் போவது இல்லை. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மத்திய சர்க்கார் கண்ணுக்கு முன்னால் கிழித்துக் குப்பைத் தொட்டியிலே வீசிய அச்சுதானந்தன் அரசு, அந்தத் தீர்ப்பு வந்த இரண்டு வார காலத்துக்கு உள்ளாக கேரள சட்டமன்றத்தைக் கூட்டி, ‘கேரள நதிகளின் பராமரிப்பு, பாதுகாப்பு திருத்தச் சட்டம்’ என்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து, அந்தச் சட்டத்தில் அதுவரை இடம்பெறாத அணைக்கட்டுகளின் பட்டியலிலே முல்லைப் பெரியாறு அணையை முதலாவதாகப் போட்டு, தண்ணீர் தேங்கும் அதன் மொத்த உயரம் 136 அடிதான் என்று அதிலே குறிப்பிட்டு, இந்த அணையை உடைப்பதற்கும் அதிகாரம் உண்டு என்று சட்டத்தைக் கொண்டு வந்து இருக்கிறான்.
இந்திய அரசே! இதை விடக் கொடுமை யான சட்டம், இந்திய ஒருமைப்பாட்டை உடைக்கின்ற ஒரு தீங்கான செயல் இன்னொன்று இருக்க முடியுமா? நீ கண்டு கொள்ளவில்லையே?
அதைவிட என்ன கொடுமை, முதலமைச் சராக வந்தவுடன் முதல் வேலையாக டெல்லிக்குச் சென்று பிரதமர் மன் மோகன் சிங்கைச் சந்தித்தார் அச்சு தானந்தன். அணை உடைந்து இலட்சக் கணக்கான மக்கள் செத்துப்போவார்கள் என்ற பொய்ச் செய்தியை ஆவணமாகக் கொடுத்தார்.
‘அணையை எங்களிடம் ஒப்படையுங்கள்’ என்று கேட்டார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பைக் காலில் போட்டு மிதித்தது கேரள அரசு என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், நாட்டின் ஒருமைப் பாட்டைப்பற்றிக் கவலைப்படாமல் இந்தியப் பிரதமர் இதைப்பற்றிப் பரிசீலிக்கிறேன்’ என்றார்.
நான் பொள்ளாச்சி கூட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் அவர்களைக் கேட்கின்றேன், நீங்கள் ஏன் டெல்லிக்குச் செல்லவில்லை?
உங்கள் பிள்ளைகளுக்குப் பதவி வாங்குவதற்கு, உங்களுக்கு வேண்டிய இலாகாக்கள் உங்கள் கட்சிக்காரர்களுக்கு வாங்குவதற்கு, உங்கள் குடும்பத்தினரை கொலு மண்டபத்தில் உட்கார வைத்து அழகு பார்ப்பதற்கு, அதிகாரத்தைச் சுவைப் பதற்கு, இரண்டு வாரம் தில்லியில் முகாமிட முடிந்தது. நினைத்த மாத்திரத் தில் செல்ல முடிந்தது, பிளாக்மெயில் செய்ய முடிந்தது.
ஆனால், எங்கள் தென்தமிழ் நாடே அழிந்து போகின்ற ஆபத்துக்கு அச்சாரம் போடுகின்றாரே அச்சுதானந்தன். அதைத் தடுப்பதற்கு நீங்கள் ஏன் போகவில்லை?
நமக்குக் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதுதான் கேரளாவின் நோக்கம். 130 அடிக்குத் தண்ணீரை நிறுத்துங்கள். என்று சொல்லுவதற்காக, தண்ணீர் கசிவு என்கிறான். ஒரு பேராபத்து தென் தமிழ்நாட்டைச் சூழ்ந்து கொண்டு இருக்கின்ற நேரத்தில், அதைத் தடுப்பதற்காகத்தான் ஒரு போராட்டம் என்றோம்.
கேரள மருத்துவமனைகளின் கழிவுகளை இங்கே வந்து கொட்டுகிறானே, தமிழ்நாடு என்ன குப்பைக் கிடங்கா? குப்பைக் கிடங்கா பொள்ளாச்சி?
அவன் ஊரிலே இந்த மருத்துவக் கழிவுகளைக் கொட்ட விடமாட்டான். இங்கேயிருந்து மணலைச் சுரண்டி எடுத்துக்கொண்டு போகிறான். அங்கு ஒரு கூடை மணலை அள்ள அரசியல் கட்சிகளோ, அதிகாரிகளோ, அங்கு உள்ள மக்களோ அனுமதிக்க மாட்டார்கள்.
அங்கு ஆற்றுப் படுகைகள் ஏராளம் உள்ளன. வற்றாத ஆறுகள் ஓடுகின்றன. அங்கு எவ்வள வோ மணல் எடுக்கலாம். ஆனால், எடுக்க விட மாட்டான். நம்முடைய இயற்கைச் செல்வத்தைச் சுரண்டி இங்கிருந்து மணலைக் கொள்ளை யடித்துக் கொண்டு போகிறார்கள். ஆனால், கழிவுகளை இங்கே நம் தலையிலே கொண்டுவந்து கொட்டுகிறார்கள்.
அணையை உடைக்காதே; எங்கள் தமிழகத்திலே இருந்துதான் அரிசியும், பருப்பும் நீ சாப்பிடுகின்ற ஆடு, மாடு அனைத்தும் உங்களுக்கு வருகிறது. நீ அணையை உடைத்தால், அது வராது. அதைத் தடுத்து நிறுத்துவோம்’ என்று எச்சரிக்கை செய்வதற்குத்தான், டிசம்பர் 29 ஆம் தேதி ஒரு அடையாளமாக நாங்கள் ஒரு சாலையிலே மறிக்கிறோம். பாலக்காட்டிலே மறிக்கவில்லை, செங் கோட்டையிலே மறிக்கவில்லை, பாற சாலையிலே மறிக்கவில்லை; அடை யாளத்துக்காக ஒரேயொரு இடத்தில், கம்பத்தில் மட்டும் மறிக்கிறோம் - ஒரு எச்சரிக்கை செய்ய.
அதன் பிறகும் உன்னுடைய போக்கு மாறாவிட்டால், எல்லோரும் ஒன்று திரளுவோம். எல்லாச் சாலைகளையும் நிறுத்துவோம்.
வன்முறையில்லாத போராட்டம். போராட்டம் வருகின்ற போது சில துயரங்களும், கஷ்டங்களும் வரத்தான் செய்யும். ஆனால், எதிர்கால நலனைப் பாதுகாப்ப தற்காகத் தான் இந்தக் கடமையிலே மறுமலர்ச்சி தி.மு.க ஈடுபடுகிறது.
தமிழக அரசே, பன்னாட்டுப் பகாசுரக் கம்பனிகளுக்கு அள்ளி வழங்கினாயே மின்சாரத்தை, பத்து ஆண்டுகளானாலும் புதிய மின் இணைப்பு பெற முடிகிறதா விவசாயிக்கு? பணம் செலுத்தினாலும் அவனுக்கு மின் இணைப்பு உண்டா? போதாக்குறைக்கு நாங்கள் மீட்டரும் பொருத்தப் போகிறோம் என்று சொல்லி மிரட்டிப் பார்க்கிறார்கள். ஆகவேதான், விண்ணப்பித்தவர்களுக்கு மின் இணைப்பு கொடு என்று நாங்கள் கேட்கிறோம்.
இங்கே சொன்னாரே ஈஸ்வரன், நெல்லும் கரும்பும் நமது சொத்து. உலகில் எங்கும் நெல் முளையாத காலத்திலே தமிழகத் திலே விளைந்தது. 3000, 4000 ஆண்டு களுக்கு முன்னாலே விளைந்தது.
அதைப் போலத்தான் கரும்பும். நான் கூட ஒருமுறை குறிப்பிட்டேன். கிரேக்கத்தில் இருந்து வந்த அலெக்சாண்டர் சொன்னான்: ‘இந்துகுஷ் மலையைக் கடந்து செல்வோம். இமயமலையைக் கடந்து செல்வோம். அங்கே பல நதிகள் பாய்ந்தோடுகிற தேசம் இருக்கிறது. அந்தத் தேசத்தின் தென் கோடிக்குச் செல்லுவோம். அங்கே ஒரு அழகிய தேசம் இருக்கிறது. அங்கே ஒரு அற்புதமான செடி இருக்கிறது. அந்தச் செடியை நீங்கள் கசக்குவீர்களானால், தேனாமிர்தமாக ஒரு திரவத்தைப் பருகலாம்’ என்றான்.
அதுதான் கரும்பு என்று அவனுக்குத் தெரியாது. அப்படிக் கரும்பு விளைகிற பகுதிகளுக்கு உங்களை அழைத்துச் செல்வேன் என்று சேனை வீரர்களுக்கு அலெக்சாண்டர் சொன்னதாகப் படித்து இருக்கிறேன். அப்படிப்பட்ட கரும்பு விளைந்த இடம் இந்தத் தமிழகம்.இங்கே, கரும்பு ஆலைகளின் புகை மண்டிக் கிடந்ததைப் பற்றிப் பட்டினப்பாலை உருத்திரங்கண்ணனார் 2000 ஆண்டுகளுக்கு முன்னாலே பாடி இருக்கிறார்.
அந்தக் கரும்பு விவசாயிகளின் தலைவிதி என்னாயிற்று? என்று எங்களுடைய கணேசமூர்த்தி அவர்கள் கேட்டார்கள்.
வெட்டுக்கூலியும், வாடகையும் நீயே கொடு. பிழிதிறன் 8.5 க்கு 2500 ரூபாய் கொடு என்று திட்டவட்டமாக, தெளிவாக தீர்மானம் நிறைவேற்றிக் கேட்கிறோம்.
இதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், மத்திய அரசாங்கம் நிறைவேற்றுகின்ற சட்டங்கள், இருக்கின்ற உரிமைகளையும் அழிக்கின்ற வகையிலே இருக்கின்றது என்று கணேசமூர்த்தி வேதனைப்பட்டார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவரை தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறக்க அனுமதிக்கவில்லை. பணம் அள்ளி வரும் ஏராளமாக. அரசாங்க கஜானாவை நிரப்பும். திட்டமிடும் செயல்களுக்குத் தேவையான பணம் கிடைக்கும். நிதி ஆதாரம் பெருகும் என்று அண்ணா அவர்களிடத்திலே பொருளாதார மேதைகள் சிலர் சொல்லிப் பார்த்தார்கள்.
அறிஞர் அண்ணா ஏற்கவில்லை. ‘ஒரு தலை முறை அழிந்துவிடும். ஆகவே, நான் மதுவிலக்கை ரத்து செய்ய மாட்டேன்’ என்று அண்ணா சொன்னார். இலைமறை, காய் மறைவாக எங்கோ ஒளிந்து மறைந்து சிலர் மது அருந்திக் கொண்டு இருந்தார்கள். ஆனால், கலைஞர் கருணாநிதி மதுக்கடைகளைத் திறந்து விட்டார். இன்றைக்கு ஒரு இனமே அழிந்துவிட்டது, ஒரு தலைமுறையே அழிந்துவிட்டது.
இங்கே குறிப்பிட்டார் அல்லவா நல்லசாமி அவர்கள், இன்றைக்கு ஒரு கலாச்சாரம், அழிக்கும் கலாச்சாரம், தமிழர் பண்பாட்டை நாசமாக்கும் கலாச்சாரம். மேல்நாட்டு மது வகைகளைக் கைகளிலே புட்டிகளைத் தூக்கிகொண்டு அலைவதும், பள்ளி மாணவர்கள், மேல் நிலைப் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் நான் வேதனையோடு சொல்லுகிறேன். பெண்பால் இனத்தைச் சேர்ந்தவர்களும் கூடக் குடிப்பதும், கும்மாளம் அடிப்பதும், டிஸ்கோதே என்ற வகையிலே தமிழர்களின் கலாச்சாரத்தைப் பாழாக்குவதும் எல்லாம் மேல் நாட்டு வகைகள். இந்தக் கொடுமைக்கு அச்சாரம் போட்டவரே முதலமைச்சராக இன்றைக்கு இருக்கின்ற கலைஞர் கருணாநிதிதான். அவரால் ஏற்பட்டு இருக்கிற அழிவுகளிலே இதுவும் ஒன்று.
மதுக்கடைகளை மூடு, டாஸ்மாக்கை மூடு, விஸ்கி, பிராந்தி, ரம், ஜின் எதுவும் கூடாது என்று சொல். ஏற்றுக்கொள்கிறோம். 12,000 கோடி ரூபாய் உன்னுடைய கஜானாவுக்கு வருகிறதென்று சொல்லி, ஒரு தலைமுறையே பாழாகிறபோது, மேல்நாட்டு மதுவகைகளைப்போலத் தீங்கு செய்யக்கூடிய தன்மையில்லாத தென்னையிலே கிடைக்கின்ற “கள்” தென்னையின் திரவம், ராஜ திரவமே கவிஞர்களின் தாய்ப்பாலே என்று சொல்லக்கூடிய வகையிலே பனைமரங்களில் கிடைக்கக்கூடிய திரவம், இந்தப் பனை மரக்கள்ளும் தென்னைமரக்கள்ளும் உடலுக்கு வலுவைக் கொடுக்கும், தெம்பைக் கொடுக்கும் என்று நம்முடைய நல்லசாமி அவர்கள் சொன்னார்கள். அதை நான் நூற்றுக்கு நூறு வரவேற்கிறேன், ஏற்றுக் கொள்கிறேன்.
நீ மதுக்கடைகளை மூடு. மூடவில்லை என்றால், கள் இறக்குவதற்கு அனுமதி கொடு. நொறுங்கி அழிந்து கொண்டு இருக்கின்ற லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் பிழைத்துக்கொள்ளும். இது ஒரு நியாயமான கோரிக்கை.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ஜனவரியிலே போராட்டம் என்கிறார்கள். நான் பொள்ளாச்சி கூட்ட மேடையிலே நின்று அறிவிக்கிறேன். உங்கள் போராட்டத்துக்கு மறுமலர்ச்சி திமுக முழுக்க முழுக்க ஆதரவு கொடுக்கும். உங்கள் போராட்டக் களத்துக்கு எங்கள் தோழர்களும் வருவார்கள்.
இன்றைக்குக் கிராமங்களிலே இருக்கின்ற விவசாயக் குடும்பங்களில் எந்த வீட்டிலும் நிம்மதி கிடையாது. பலபேர் ஊரை விட்டே போய்க்கொண்டு இருக்கிறார்கள். நிலங்களை விற்றுவிட்டு, நகரத்தை நோக்கிப் போய், நரக வாழ்க்கையிலே உழல்கிறார்கள். விவசாயப் பெருமக்களே, நான் உங்கள் சகோதரனாகச் சொல்லுகிறேன். நம்பிக்கை இழக்காதீர் கள். காலம் இப்படியே இருக்காது. துயரம் இப்படியே நீடிக்காது, நிலங்களை விற்காதீர்கள், கிராமங்களை விட்டுப் போய் விடாதீர்கள்.
20,30 ஆண்டுகளுக்கு முன்னால், நம் விவசாயக் குடும்பங்களில் தைப் பொங்கல் நெருங்கினால், வீட்டுக்குவீடு வெள்ளை அடித்து வர்ணம் பூசி, வீட்டுத் தொழுவத்தில் இருக்கின்ற காளை மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி என்ன மகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ்ந்தார்கள்? இன்றைக்குக் கிராமப்புறங்களிலே தைப்பொங்கலே வந்தாலும் கூட, வீடுகளிலே வெள்ளை யடிக்கக் காசு கிடையாது.
சில வீடுகள் நல்ல வெள்ளையடித்து பளிச்சென்று காட்சி அளித்தால், இந்த வீட்டிலே யாராவது இன்ஜீனியராக வெளிநாட்டிலே வேலை பார்க்கிறாரா? இல்லை சென்னையில் வேலை பார்க்கிறாரா? என்று கேட்கிற நிலைமை தான். அப்படி யாராவது இரண்டு பிள்ளைகளாவது வெளியில் போய் வேலை பார்த்து நன்றாகச் சம்பாதித்தால் தான் சிறப்பாக வீட்டைப் பராமரிக்க முடியும்.
ஒரு பெரும் உணவுப் பஞ்சம் நம்மைச் சுற்றி வளைக்கக் காத்துக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் வரப் போகிறது. இந்தியாவிலும் வரும். நம்முடைய பொருளாளர் டாக்டர் மாசிலாமணி அவர்கள், ஒரு அழகான புள்ளி விபரத்தைச் சொன்னார்கள். பொருளாதார உற்பத்தியைக் கணக்குப் போட்டால், அதிலே விவசாயத்தின் பங்கு என்ன? விவசாயத்துறைக்கு ஒதுக்கப்பட்டு உள்ள முதலீடு என்ன? என்று சிதம்பரத்தைப் பார்த்துக் கேட்டார்கள். 3.5சதவீதமாக இருந்தது 1.2 சதவீதமாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது.
விளைநிலங்களை, இன்றைக்கு லட்ச ரூபாய்க்குக் கேட்கலாம். ஐந்து, பத்து ஆண்டுகளில், ஒரு கோடி ரூபாய்க்கும் கேட்பார்கள். விளை நிலமே கிடையாது. பகாசூரக் கம்பனிகள் சூறையாடிக் கொண்டு இருக்கின்றன. ஏன், சிப்காட் போன்ற அரசு நிறுவனங்களே விளை நிலங்களைக் கபளீகரம் செய்துகொண்டு, ஒரு புரோக்கர் வேலை செய்து தனியார் கம்பனிகளுக்கு விற்கின்ற அயோக்கியத் தனத்தைச் செய்துகொண்டு இருக்கின்றன.
ஆக, எல்லா முனைகளிலும் விளை நிலங்களைச் சூறையாடுகிறார்கள். ஒரு ஏக்கர் என்பது 44ஆயிரம் சதுர அடி. 44ஆயிரம் சதுர அடியிலே 5 அடி ஆழத்திலே மண் கணக்குப் போட்டால் இரண்டு லட்சத்து இருபதாயிரம் கன அடி மண் ஒரு ஏக்கர் நிலத்தில் இருக்கிறது. 2200 டிராக்டர் மண் அதிலே இருக்கு. எனவே, ஒரு ஏக்கரை நீ சாதாரணமாக நினைக்காதே. நிலம் எந்தப்பகுதியாக இருந்தாலும் சரி, அதற்கு ஒரு வாழ்வு வரத்தான் செய்யும். அதைத் தேடி வருவார்கள். விவசாயிகளே நிலங்களை விற்க வேண்டாம்.
நம்மைப் பாதுகாப்பதற்கான வழி, நமக்குத் தண்ணீர் வேண்டும். நிலத்தடி நீர் ஏற்கனவே வறண்டுவிட்டது. காவிரியில் வஞ்சிக்கப்பட்டுவிட்டோம். கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகுதான் இந்தக் கேடுகள் சூழ்ந்தன. கச்சத் தீவை இழந்தோம், காவிரி உரிமையை இழந்தோம், பாலாற்று உரிமையை இழந்தோம், இதோ முல்லைப் பெரியாறு தலைக்கு மேலே கத்தியாகத் தொங்கிக்கொண்டு இருக்கிறது. இத்தனைக் கேடுகளும் தீங்குகளும் நம்மைச் சுற்றி வளைத்துக் கொண்டு இருக்கும் நேரத்திலேதான், நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வழி தேடுகிறோம்.
போதாக்குறைக்கு அறிவியலின் பெயரால், விஞ்ஞானத்தின் பெயரால், அமெரிக்க நாட்டின் கொள்ளைக் கம்பெனிகள், மரபு அணுப் பருத்தி என்று சொல்லி மராட்டியத்தில் கொண்டு வந்து திணித்தான். அதிகமான பருத்தி விளையும் என்று ஏமாற்றினான். நம்பி விவசாயிகள் இதைப் பயிரிட்டார்கள். நஞ்சு வளர்ந்தது. பருத்தி விதைக்கு உள்ளே நஞ்சு. செடியிலே நஞ்சு, இலையிலே நஞ்சு, காயிலே நஞ்சு, விளையும் பருத்தியிலே நஞ்சு, பக்கத்துத் தோட்டமெல்லாம் பரவியது.
அந்த இலை தழைகளைக் கடித்த ஆடு, மாடுகள் அப்படியே சுருண்டு விழுந்து செத்துப்போயின. இதுதான் மரபு அணுப் பருத்தி. எத்தனை விவசாயிகள் தற் கொலை செய்து கொண்டு செத்தார் கள் மராட்டியத்தில்? அந்தக் கொடுமை போதாதா? இன்றைக்கு மரபணு கத்தரிக் காயை கொண்டு வருகிறாயா? மான் சென்டோ கம்பனிக்கு, இங்கே இருக் கின்ற மஹிகோ கம்பனி ஒரு ஏஜென்ட். இவர்கள் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்கள்.
மரபணுக் கத்தரிக்காய் மற்றக் கத்தரிக்காய் எல்லாவற்றையும் அழித்துவிடும். பக்கத்து நிலத்தையும் அழித்துவிடும். நஞ்சைக் கொண்டு வந்து திணிக்காதே, அதிக விளைச்சல் கிடைக்கும் என்று விவசாயியை ஏமாற்றாதே. தம்பி ஈஸ்வரன் அழகாகச் சொன்னார். நீ தானே பூச்சி மருந்து கொடுத்தாய். நீதானே இரசாயன உரம் கொடுத்தாய். நீதானே விவசாயம் செய்யச் சொன்னாய். நீதானே இவ்வளவு அழிவும் செய்தாய். இன்றைக்கு இந்தப் பூச்சி மருந்தால்தான் கெட்டுப்போய் விட்டது என்றால் வேளாண்மை ஆராய்ச்சி என்ற பெயரில் நீங்கள்தானே விவசாயிகள் தலையிலே இந்தக் கல்லைப் போட்டீர்கள்?
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அதில் அழகாகச் சொல்லி இருக்கிறார். நாம் இந்த மரபணு கத்தரிக்காயை அனுமதிக்கக் கூடாது. அதை மீறி எங்காவது பயிரிட்டால்,செடியைப் பிடுங்கி எறியுங்கள். காலால் நசுக்கி எறியுங்கள். படமெடுக்கிற பாம்பைப் பார்த்தால் தலையில் நசுக்கி நஞ்சுப் பல்லை உடைத்தால்தால் அது மற்றவர்களைக் கடிக்காது. அதைப் போலத்தான் மரபணுக் கத்தரிக்காயை நசுக்க வேண்டிய கடமை விவசாயி களுக்கு உண்டு.
தமிழகத்தில், கூட்டுறவுத் துறையே இந்த ஆட்சியிலே நாசமாகிவிட்டது. கூட்டுறவு நாணயச்சங்கங்களும் சரி, வேளாண்மை வங்கிகளும் சரி, மத்திய கூட்டுறவு வங்கிகளும் சரி கடனைத் தள்ளுபடி செய்ததாகச் சொன்னாரே, அந்தக் கூட்டுறவு நாணயச் சங்கங்களுக்கும் கூட்டுறவு வங்கிகளுக்கும் பணம் கொடுத்தார்களா, புதிய கடன் கொடுக்க வழியே கிடையாது.
மாநில சுயஆட்சி முழக்கமிடுகின்ற கருணாநிதி அவர்களே! உங்கள் ஆட்சியிலேதான் வைத்திய நாதன் கமிஷனுடைய அறிக்கை ஏற்றுக் கொண்டு ரிசர்வ் பாங்கோடு நீங்கள் கையெழுத்துப் போட்டீட்கள். அண்ணா திமுக ஆட்சியில் இதை ஏற்கவில்லை.
2005ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி, டெல்லியிலே நடைபெற்ற முதல் அமைச்சர்கள் கூட்டத்தில், அண்ணா திமுக அரசின் சார்பாக அன்றைக்கு, அதிலே கலந்துகொண்ட அருமை நண்பர் பொன்னையன், திட்டவட்டமாக அண்ணா திமுக அரசின் கருத்தைப் பதிவு செய்தார்.
வைத்தியநாதன் கமிஷன் கருத்தை ஏற்க முடியாது. கூட்டுறவு என்பது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இதைப் பொதுப் பட்டியலுக்கு மாற்றக்கூடாது. இது மாநில அதிகார எல்லைக்குள் இருக்க வேண்டும். இதை நாங்கள் ஏற்க முடியாது’ என்று சொன்னார்.
ஆனால், நீங்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தபிறகு, கடந்த ஆண்டு, நீங்கள் ரிசர்வ் வங்கியோடு போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்புக்கொண்டு விட்டீர்கள். ஆகவே, கூட்டுறவுத் துறையை அழித்து விட்டீர்கள்.
இப்படி எல்லா முனைகளிலும் விவசாயிகளுக்கு ஆபத்தும் துன்பமும் நெருக்குதலும் இருக்கக்கூடிய வேளையிலே, அந்த உழவர் பெருங்குடி மக்களின் நலன்களைக் காப்பாற்றப் போர் முரசு கொட்டுகிற இயக்கம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
தொடர்ந்து நாம் போராடுவோம். விவசாயிகளுக்காகப் போராடுவோம். நாளைய பொழுது நல்ல பொழுதாக விடியும் விவசாயிகளுக்கு என்ற நம்பிக்கையோடு உழவர் பெருங்குடி மக்களுடைய துயர் துடைப்பதற்காகத் தொடர்ந்து நம்முடைய பணிகளைச் செய்வோம்.
இந்த மகத்தான மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய கொங்கு மண்டல மறுமலர்ச்சி திமுக கழகத்தின் நிர்வாகிகளுக்கு என் உளமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்து, வாட்டுகிற பனியைக் கூடப் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கிலே வந்து கலந்துகொண்ட உழவர் பெருங்குடி மக்களுக்கு என்னுடைய நன்றியை அவர்கள் காலடியிலே காணிக்கை ஆக்குகிறேன். வெல்க உழவர் பெரு மக்கள்! ஓங்கட்டும் அவர்களது நலம்!
பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.