விடியலுக்குப் பெயர்தான் பிரபாகரன்! வைகோ .

Issues: Human Rights, Srilanka

Region: Tamil Nadu

Category: Headlines, Speeches

Date: 
Tue, 08/12/2009

விடியலுக்குப் பெயர்தான் பிரபாகரன்!

தென்சென்னை மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், 27.11.2009 அன்று சென்னை - தியாகராய நகரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவீரர்களைப் போற்றி நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், கழகப் பொரு ளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளும் முன்னணியினரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து....

இப்புவியில் கண்டங்கள் பலவற்றிலும், நாடுகள் பலவற்றிலும் ‘அந்தக் குரல் ஒலிக்காதா?’ என்று கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்கள் எந்தக் குரல் கேட்க ஏங்கிக் கிடக்கின்றனவோ, எந்த உரையை இன்று நம் செவிப்பறையில் பெற மாட்டோமா என்று கோடானுகோடித் தமிழர்கள் தவிக்கின்றார்களோ, அந்தக் குரலுக்கு உரிய தலைவன், எந்தப் பெயரை உச்சரித்தால் தன்மான உணர்ச்சி உள்ள வாலிபக் கூட்டத்தின் நாடி நரம்புகளில் மின்சாரம் பாயுமோ, எந்தப் பெயரை உச்சரிக்கின்ற வேளையிலேயே தமிழனுக்குத் தரணியிலே ஒரு அடையாளம் கிடைத்தது என்ற பெருமிதம் ஏற்படுமோ, அந்த மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களுடைய பிரகடனத்தை நினைவுபடுத்துகின்ற நாள்தான் இந்த மாவீரர் நாள் ஆகும்.

இந்த மேடையில் அமைக்கப்பட்ட சின்னத்திரையில், நம் இருதயத்தை வாள்கொண்டு பிளக்கின்ற காட்சிகளைக் கண்ணுற்றீர்கள். ஈழவிடுதலைப் போர்க்களக் காட்சிகளைக் கண்டீர்கள். வரலாற்றின் வைகறைக் காலத்தில் இருந்து, சுதந்திர இறையாண்மை உள்ள தமிழ் ஈழ அரசு அமைத்து, கொடி உயர்த்தி, கொற்றம் அமைத்து வாழ்ந்தவர்கள் தமிழ் ஈழ மக்கள். இன்று, அவர்களது தாயக மண்ணிலேயே வதைக்கப்பட்ட கொடுமைகள், நமது சின்னஞ்சிறு பிஞ்சுகள் சின்னாபின்னமாக்கப் பட்ட துயரம் நம் அருமைச் சகோதரிகள் நாசமாக்கப்பட்ட கொடூரம், மண்ணின் மானம் காப்பதற்காகத் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் எதிரிகளின் ஆயிரம் மடங்கு ஆயுதபலத்தை எதிர்த்துக் களத்தில் நின்று போராடிய சமர்க்களக் காட்சிகள், இந்த உலகில் மானத்தோடு மனித குலத்தில் வாழ்வதற்கு ஆடை அணிகின்ற கலையைக் கற்றுத்தந்த தமிழனை, பட்டுத் துணிகளை ரோமாபுரிக்கு அனுப்பி வைத்த பெருமைக்கு உரிய இனத்தில் பிறந்த தமிழனை, கண்களைக் கட்டி கைகளுக்கு விலங்கிட்டு, ஆடைகளைக் களைந்து அம்மணமாக்கி, இழுத்துக் கொண்டு வந்து காலால் எட்டி மிதித்து சிங்களக் கொடியவன் துப்பாக்கியால் சுட்டு, இரத்தம் பீறிட அந்த வீரச்சகோதரர்கள் அநாதைப் பிணங்களாகச் சுருண்டு விழுகின்ற அந்தக் கொடூரத்தையும்,
யுத்த களத்திலே எதிரிகளின் கொடூரமான ஆயுதபலத்தால் வீழ்த்தப்பட்ட நமது வீராங்கனைகளை நமது தங்கைகளை குலக்கொடிகளை ஆடைகளை அப்புறப் படுத்தி, ஹிட்லரின் நாஜிகள்கூட செய்யாத, மிருகங்கள் செய்யத் துணியாத வன்புணர்ச்சி நடத்திய அந்தக் கொடூரக் காட்சி உள்ளிட்ட காட்சிகளைக் காணச் சகிக்கவில்லையே நம் நெஞ்சம்; இரத்தம் கொதிக்கிறதே. இருதயம் இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறதே. ஆனால், இந்த இருள் நிரந்தரமாக நீடிக்காது. ஒரு வெளிச்சம் வந்துதான் தீரும். அந்த விடியலுக்குப் பெயர்தான் பிரபாகரன். அந்த விடியல் உதிக்கும்.

வா மகனே! எழுந்து வா மகனே!
களமாட எழுந்து வா மகனே!

என்ற நம் உதிரத்து அணுக்களில் எல்லாம் வீரத்தைப் பாய்ச்சியதே அந்தப் பாடல் உள்ளிட்ட ஒளிப்படங்களைக் கண்டீர்கள். காவல்துறையினர் மூளை யைக் கசக்கிக் கொள்ளவேண்டாம். ‘விழ விழ எழுவோம்’ என்று, ‘மறுமலர்ச்சிப் பாசறை’ பெயரில் வெளியாகி இருக்கின்ற ஒளிப்படக் குறுவட்டுகளை நீங்களும் பெறுங்கள்.

உங்கள் இல்லங்களுக்கு எடுத்துச்சென்று, உங்கள் குடும்பத்தினரோடு பாருங்கள்; அவர்கள் கண்ணீர் விட்டுக் கதறாமல் இருக்க முடியாது.

‘ஈழத்தில் நடப்பது என்ன?’ என்று குரலை எழுப்பிய, அண்ணாமலை மன்றத்தில் பேசிய பேச்சுக்காக, இந்திய அரசு ஆயுதங்களைக் கொடுத்து, ரேடார்களைக் கொடுத்து, ஆயிரம் கோடி பணத்தைக் கொடுத்து, வல்லரசு நாடுகளில் ஆயுதங்களைப் பெற்று எங்கள் இனத்தை அழிப்பதற்குக் கொடுஞ்செயல் புரியுமானால், எங்கள் தமிழ் ஈழ உரிமையின் குரல்வளையை அறுக்குமானால், எங்கள் மக்களைக் கொன்று குவிக்குமானால், நீ அரசாங்கத்தின் சார்பில் ஆயுதம் கொடுத்து சிங்களவனுக்குத் துணையாக ஈழத் தமிழ் மக்களை அழிப்பாயானால், இது தொடருமேயானால் நிலைமைகள் மாறும்; காலம் மாறும்; இந்த மண்ணில் இருக்கின்ற ஆயிரமாயிரம் வீர வாலிபர்கள் ஈழத்துக்குச் செல்வார்கள். அப்படி ஒரு நாள்வரும்.

சிங்களக் கொடியோரை வீழ்த்தி, தமிழ் ஈழச் சகோதர, சகோதரிகளுக்குத் தோள் கொடுத்து, களமாடு கின்ற கட்டத்துக்கு வருவார்கள். அர்ஜெண்டைனாவில் பிறந்த சேகுவேரா, கியூபாவுக்குச் செல்ல உலகம் உறுதி அளித்தது என்றால், இந்தத் தாயக மண்ணில் பிறந்த தமிழர்கள் ஏன் போகக்கூடாது? என்று நான் அண்ணாமலை மன்றத்தில் கேட்டேன்.

இங்கே ஆயுதம் திரட்டி, ஆயுதப் பயிற்சி நடத்துவதாக நான் சொல்லவில்லை. பேசியதை மறுக்கின்ற வழக்கம் வைகோவுக்கு என்றைக்கும் இல்லை.
விளைவுகளைப் பற்றி கவலைப்பட்டதும் இல்லை. பதவிக்காக, பிழைப்பு நடத்த அரசியலுக்கு நான் வரவில்லை. அண்ணாவின் எண்ணங்களுக்காக, அவர்தம் கொள்கைக்கு என் வாழ்க்கையை ஒப்படைத்தவன் நான். நான் பிறந்த பொன்னாடு, புண்ணிய பூமி இந்தத் தமிழ்நாடு. கரிகாலன் வாழ்ந்த நாடு, இளங்கோவன் வாழ்ந்த நாடு, வள்ளுவரைத் தந்த நாடு, ராஜராஜனை, ராஜேந்திரனைத்தந்த நாடு, வீரர்கள் உலவிய நாடு. இந்த மண்ணில் பிறந்தேன். ஈழத்தில் தங்கள் தாயக மண்ணைக் காப்பதற்காக அவர்கள் நடத்துகின்ற உரிமைப் போருக்கு தோள்கொடுக்க நாங்கள் சித்தமாக இருக்கிறோம் என்று சொன்னேன்.

இங்கே ஆயுதப் போராட்டம் நடத்துவதாகவோ இங்கே ஆயுதம் ஏந்துவதாகவோ நான் பேசவில்லை. அங்கு நடக்கின்ற போருக்கு நீ ஆயுதம் கொடுத்துக் கொண்டு இருந்தால் நாங்கள் செல்வோம். அப்படி ஒரு வாய்ப்பு வருமானால் இந்த வைகோவே அதற்குப் போவான் என்று நான் பேசினேன். அதைத் திரும்பவும் இங்கே பதிவுசெய்கிறேன்.

அன்று அதே மேடையில் என்னோடு உரையாற்றிய மரியாதைக்குரிய திருவாளர் மு.கண்ணப்பன் அவர்கள், ஆளுகிற கட்சியில் அடைக்கலமாகிவிட்டதால், அவரை வழக்கில் இருந்து விடுவித்தீர்கள். அவர் பேசியது சரியென்று அன்றும் சொன்னேன். நீதிமன்ற வாயிலிலும் சொன்னேன். இன்றும் சொல்கிறேன். இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் எனில், இன்று இங்கே சில காட்சிகள் திரையிடப்பட்டது அல்லவா, அதற்கான முழுப்பொறுப்பையும் வைகோ ஏற்றுக் கொள்கிறான். இந்த இயக்கத்தில் எந்தத் துன்பம் வந்தாலும் எனக்கு வரட்டும் என்று கருதுகிறவன் நான். எனவே, நான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். இந்தக் காட்சிகள், தமிழர்கள் இல்லங்களுக்கு எல்லாம் செல்ல வேண்டும்.

இன்றைக்குச் சரியாக 27 ஆண்டுகளுக்கு முன்னால், 1982 ஆம் ஆண்டு அண்ணன் மாவீரன் நெடுமாறன் குறிப்பிட்டாரே, நான்மாடக்கூடலில் தெற்குச்சீமையின் தலை நகரத்தில். அலைகடல் தாண்டி மரண காயத்தோடு வந்துவிழுந்த சங்கர் என்கிற சத்தியராஜ், தமிழ் ஈழ விடுதலைப் போராளி, புலிப்படை வீரன். தாயைத் தேடாமல் தந்தையைத் தேடாமல் அந்த உயிர் சிறிதுசிறிதாக உடல்கூட்டில் இருந்து விலகிக்கொண்டு இருந்த நேரத்திலும் அந்த உதடுகள் உச்சரித்துக் கொண்டு இருந்த பெயர், ‘தம்பி... தம்பி... தமிழ் ஈழம்... தமிழ் ஈழம்...’ என்று அவன் ஆவி அடங்கியதே, அது பிரபாகரனின் இருதயத்தை ஆழமாகப் பாதித்ததால், சரியாக இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அடவிகளில், அரண்யங்களில், வல்லரசு நாட்டின் இலட்சக்கணக்கான படையை எதிர்த்துக் கானகத்தில் பாசறையை அமைத்துக் கொண்டு போர்க்களம் நடத்திய அந்தக் காலகட்டத்தில், 1989 ஆம் ஆண்டு இதே நாள் நவம்பர் 27 ஆம் தேதி நாளை, ‘மாவீரர் நாளாக’ பிரகடனம் செய்கிறேன் என்று அறிவித்தார் பிரபாகரன்.

அன்று அந்த உரையில் சொன்னார்: ‘இதுவரை களத்தில் 1307 புலிகளை நாங்கள் இழந்து இருக்கிறோம்; இது 1989 ஆம் ஆண்டு பிரபாகரன் சொன்னது. கடந்த ஆண்டு, இதேநாள் எக்செல் அரங்கத்தில் இலண்டன் மாநகரில் தேம்ஸ் நதிக்கரையில் 60,000 பேர் திரண்டு இருந்த அந்தக் கடலனைய மக்கள் கூட்டத்தில் நான் உரையாற்றுகிற போது சொன்னேன் ‘இதுவரை விடுதலைப் புலிகள் அமைப்பில் 22,355 பேர் களத்தில் மடிந்து இருக்கிறார்கள். களமாடி வீழ்ந்து இருக்கிறார்கள்.
அவர்களுக்காகவே இந்தத் தீபங்களை ஏற்று கிறோம். அவர்களை நினைத்தே இந்தக் கார்த்திகைப் பூக்களைத் தூவுகிறோம். அவர்கள் மடியவில்லை. அவர்கள் மரணிக்கவில்லை. உடலால் சாய்ந்தார் கள். ஆனால், மரணத்தை வென்று வாழ்கிறார்கள். எந்த இலட்சியத்துக்காகத் தங்கள் உயிர்களைத் தந்தார்களோ, இரத்தம் சிந்தினார்களோ, அந்த இலட்சியத்துக்காக அடுத்தடுத்து வருகின்ற களங்களுக்கு நாம் நம்மை அர்ப்பணிப்போம் என்று உறுதி எடுக்கின்ற நாள்தான் இந்த நாள் ஆகும். வாழ்க்கையின் வசந்தங்கள் எதையுமே நாடவில்லையே இந்த மாவீரர்கள். சுகம் தேடவில்லையே. பசி, தாகத்தை அவர்கள் ஒரு பொழுதும் பொருட் படுத்தவில்லையே, இப்படிப்பட்ட வீரத்தை, தியாகத்தை, ஈகத்தை எவருமே ஆற்றியது இல்லையே?

அந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற நேரத்தில், எந்தக் காலத்தையும் விட இந்த ஆண்டில் தமிழ் இனத்துக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை என்ன என்பதை அண்ணன் நெடுமாறன் அவர்கள் இங்கே திட்டவட்டமாகச் சொல்லி விட்டார். நான் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டேன். தமிழர்களின் நெடிய வரலாற்றில் இதுபோன்ற அழிவும் இழிவும் என்றும் ஏற்பட்டது இல்லை என்று. அண்ணா சொன்னார், வடக்கே வந்த தைமூரின் படையோ, செங்கிஸ்கான் சைன்யமோ இங்கே எட்டிப் பார்த்தது இல்லை. சமுத்திர குப்தரின் சேனைகள் இங்கே நடமாடியது இல்லை. இந்தத் தென்திசையை எவனும் திரும்பிப் பார்த்தது இல்லை’ என்று அன்றைக்குச் சொன்னார்.

இந்த இனத்தை இன்னொரு இனத்துக்காரன் இப்படிக் குற்றுயிரும் குலை உயிருமாக வதைக்கின்ற அளவுக்கு, பல நாடுகளின் ஆயுதபலத்தைப் பெற்று அழித்த கொடுமை இதுவரை நடக்கவில்லை. நாம் வாழும் காலத்திலேதான் நடந்து விட்டது. இந்த இனத்தின் உரிமைக் குரலை அழிப்பதற்காகச் சிங்களவன் கொட்டமடிக்கிறான். என் தமிழ் மக்களே, கொஞ்சம் எண்ணுங்கள். தொலைவில் இருந்து உரை கேட்கின்ற நடுநிலையாளர்களே, உங்கள் இதயத்தில் ஈர உணர்ச்சியோடு எண்ணுங்கள்.

எத்தனைப் பிஞ்சுகள் கொல்லப்பட்டார்கள்? எத்தனைப் பெண்கள் நாசமாக்கப்பட்டார்கள்? கர்ப்பிணித் தாய்மாரின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெட்டி எடுத்துப் போட்டது உலகில் எங்காவது நடந்தது உண்டா? ஏ, தமிழா! உன் தாய்க்கு, உன் தங்கைக்கு, உன் அக்காவுக்கு நடந்த கொடுமை உலகில் எந்த இனத்துக்காவது நடந்தது உண்டா? இந்தக் கொடுமை செய்த கொலைகாரப் பாவி, இத்தனை மக்களைக் கொன்றவன், இத்தனை பிணங்களின்மீது கோரநர்த்தனம் ஆடியவன், தமிழர்களின் இரத்த ஆற்றிலே நீச்சலடித்த கொடியவன், அவனுக்கா திருவேங்கடத்தில் ஏழுமலையான் கோவில் வாசலில் பூரண கும்ப வரவேற்பு?

நான் பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவன்தான். ஆனால், இந்த நாட்டில் இருக்கிற ஆலயங்களின் மூலவிக்கிரகங்களுக்கு ஒருசிறு பழுதும் ஏற்படக்கூடாது என்று நாடாளுமன்றத்தில் போராடியவன். ஏழுமலையான் கோவில் வாசலில் அவனுக்கு ராஜ வரவேற்பு கொடுத்தார்களே, இந்திய அரசு கொடுத்ததே. நான் திருப்பதி கோவில் நிர்வாகத்தைக் குறை சொல்லவில்லை. திட்டமிட்டு அழைத்துக் கொண்டுவந்து, இந்த வரவேற்புக்கு ஏற்பாடு செய்தது, தமிழ் இனத்துக்கு மன்னிக்க முடியாத துரோகம் செய்தது மன்மோகன்சிங் அரசு. இந்திய அரசு.

அவன் கொழும்புக்குச் சென்று கொட்டமடிக்கிறான். 7 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். அங்கே கொந்தளிப்பு நேர்ந்துவிட்டது, ஏன் பலர் தீக்குளித்தே செத்துப் போனார்கள் என்றீர்களே, இன்று அவர்கள் உச்சந்தலையில் நின்று, நான் பூரணகும்ப வரவேற்புப்பெற்று கொட்டமடித்துவிட்டு வந்து இருக்கிறேன் என்று கொக்கரிக்கிறான். திருப்பதி கோவில் வாசலில் வரவேற்பா? இத்தனைத் தமிழர்களைக் கொன்றதற்கு? ஏ, இந்திய அரசே! நீ வெந்தபுண்ணிலே சூட்டுக்கோலை நுழைத்து இருக்கிறாய், நாங்கள் உணர்ச்சியற்ற சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று நினைத்துக்கொண்டு இந்தக் கொடுமையைச் செய்து இருக்கிறாய்.

இதே அக்கிரமத்தை, இந்த நாட்டில், இந்திய பூபாகத்தில் இருக்கின்ற இன்னொரு மாநிலத்துக் காரனுக்கு நீ செய்யத் துணிவாயா? செய்கின்ற தைரியம் உண்டா?
இதோ பக்கத்தில் இருக்கிறது கேரளா, அந்த மலையாளிகள் இனத்தைச் சேர்ந்த பல்லாயிரவர்களைக் கொன்று குவித்துவிட்டு, அப்படிப்பட்ட படுகொலை களைச் செய்த அக்கிரமக்காரனை நீ ஐயப்பன் கோவில் வாசலுக்கு அழைத்து வந்து விடுவாயா? அதற்குப்பிறகு நீ அரசாங்கத்தை நடத்திக் கொண்டு இருப்பாயா? வங்காளிகளின் சொந்தக்காரனைக் கொன்றுவிட்டு, நீ கல்கத்தா காளிகோவில் வாசலில் பட்டு பீதாம்பரத்தோடு வரவேற்பாயா?

ஏன் இந்திய நாட்டுப் பிரதமரைக் கேட்கிறேன். சீக்கிய இனத்துக்காரர்களைக் கொன்று குவித்துவிட்டு அப்படிப்பட்ட கொடுமைக்குள்ளானவனை நீ அமிர்தசரஸ் பொற்கோவில் வாசல்வரை கொண்டுவர முடியுமா? இங்கே சொரணை கெட்டவன் வாழ்கிறான் என்று நினைத்தாயா? நீ திருப்பதி கோவில் வாசலில் கொண்டுவந்து அவனோடு எண்பது பேர் கொட்டமடித்துவிட்டுப் போனார்கள். ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் செல்கின்ற பிரதான வாயில் வழியாக அழைத்துக்கொண்டுபோய் ஆறு மணிநேரம் காண்பீத்தீர்களே? அவன் என்ன ஏழுமலையான் பக்தனா? திருமாலின் பக்தனா? நான் கேட்கிறேன்.

எத்தனை கோவில்களை இடித்த கொடியவன் அவன். எத்தனைக் கோவில்களில் வைக்கப்பட்டு இருந்த தேர்களுக்குத் தீ வைக்கச் சொன்னவன் அவன். தேர் செய்ய வந்த தச்சர்களை, துண்டு துண்டாக வெட்டிப்போட ஏவிவிட்ட சிங்களக் கொடியோரின் கூட்டத்தைச் சேர்ந்தவன் அவன். இப்படிப்பட்ட அக்கிரமத்தையும் நடத்திவிட்டு, போரில் பின்னடைவு, போரில் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள், முள்ளி வாய்க்காலோடு முடிந்துவிட்டது என்று கொக்கரித்துக் கொண்டு இருக்கின்ற சிங்களக் கொடியவன் ராஜபக்சே, மனித உரிமைகளை அழித்துவிட்டான் என்று அகிலத்து நாடுகளில் சில மனசாட்சியோடு குரல் கொடுத்தன. ஐ.நா.மன்றத்தில் குரல் கொடுத்தன.

அதை எதிர்த்தது யார்? இந்திய அரசு. தமிழர்கள் கொல்லப்பட்டனர், பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டனர், போராளிகள் மட்டுமல்ல, இலட்சக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இப்படி மனித உரிமைகள் நாசமாக்கப்பட்டதற்கு விசாரணை வேண்டும், விவாதிக்க வேண்டும் என்ற குரல் எழுந்தபோது, விவாதிப்பதற்குக்கூட அனுமதி மறுப்பதற்கு முதல் ஆளாக நின்றுகுரல் கொடுத்தாயே! ஏ, இந்திய அரசே! நாங்கள் இங்கே ஏழுகோடி பேர் குடிமக்களாக இருக்கிறோம்.

நீ ஐக்கிய நாடுகள் மன்றத்தில், பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் நியூசிலாந்துக்கும் எதிராக சிங்களவனுக்கு ஆதரவாக வாக்களித்தாய்.
ஐரோப்பிய மண்டலம் முடிவெடுத்தது சிங்களவர்கள் தயாரிக்கின்ற ஆயத்த ஆடைகளுக்கு வரிச்சலுகை கிடையாது; சிங்களவனுக்கு பொருளாதார முற்றுகை போடுவதற்கு திட்டமிட்டுவிட்டோம். ஏனெனில், இலங்கையில் மனித உரிமைகள் அழிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு வந்ததற்காகவே, ராஜபக்சேவும் மன்மோகன் சிங்கும் திட்டமிட்டு, பத்துப் பேரை இங்கிருந்து அனுப்புவது என்றும், அவர்கள் முள்வேலி முகாம்களில் பார்வை யிடுவது என்றும், அந்த அறிக்கையை அகிலத்துக்குத் தருவது என்றும், ஸ்ரீலங்கா இந்திய அரசுகள் வகுத்த கூட்டுச் சதிக்கு உடந்தையாகப்போனவர்தான் தமிழ் நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி என்று நான் குற்றம் சாட்டுகிறேன். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முள்வேலி முகாம்களைப் பார்வையிட்டு, உலகத் தரத்துக்கு ஏற்ப முகாம்களில் வசதிகள் உள்ளன; இங்கே எந்த அக்கிரமும் நடக்கவில்லை என்று அறிக்கை தருகிறார்கள்.

இங்கிலாந்து நாட்டில், பிரித்தானியத்தில் நாங்கள் குடிமக்களாக இல்லை. நாங்கள் ஏழுகோடிபேர் இங்கேதான் இருக்கிறோம். ஆனால், இங்கிலாந்து அரசின் பிரதம அமைச்சர் கார்டன் பிரெளன் நேற்றைக்குச் சொல்லி விட்டார். ‘தமிழர்களைக் கொன்றுகுவித்த கொலைபாதகம் செய்த சிங்களவர்கள் கொட்டமடிக்கும் கொழும்பில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது’ என்று நேற்றைக்கு கார்டன் பிரெளன் சொல்லி இருக்கிறாரே? விடுதலைப்புலிகளைத் தடை செய்திருக்கிற இங்கிலாந்தின் பிரதமர் கொழும்பில் காமன்வெல்த் நடத்தக் கூடாது என்று சொல்கிறார். காமன்வெல்த் என்ற அமைப்பினுடைய நாயகனே இங்கிலாந்து நாடுதான். அதனுடைய ஆட்சிப் பீடத்துக்குள் இருந்த நாடுகள்தான் காமன்வெல்த் நாடுகள் ஆயின. அந்தக் காமன்வெல்த் நாடுகளின் அடுத்த இடத்தில் முக்கிய அங்கம் வகித்து வருவது இந்திய நாடு. இவ்வளவு அக்கிரமங்களையும் கொடுமைகளையும் செய்து, தமிழ் ஈழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அழிப்பதற்காகவே கடந்த ஆறாண்டுக் காலத்தில் ஆயுதங்களையும், ரேடார்களையும் அள்ளி வழங்கி விடுதலைப் புலிகளுக்குப் போர்க்களத்தில் பின்னடைவு ஏற்பட்டதற்கு முழுக்கக் காரணம் இந்திய அரசுதான்.

அண்ணன் நெடுமாறன் வரிசைப்படுத்தினாரே! சிங்களப் படைகளைச் சின்னாபின்னம் செய்து, பின்னங்கால் பிடறியில் அடிபட ஓட வைத்து, அக்னி அலைகளில், ஓயாத அலைகளில், பரந்தனிலே, மாங்குளத்திலே, கிளிநொச்சியிலே, யானை இறவிலே உலகம் திகைக்கின்ற பெரிய வெற்றிகளைப் பெற்ற விடுதலைப் புலிகளை, இனி யுத்தக் களத்திலே அழிக்கமுடியாது, வெளிநாடுகளின் ஆயுத பலம் வேண்டும் என்று அவன் எண்ணிய நேரத்தில், தேடிச்சென்று கையெழுத்திடாத ஒப்பந்தத்தைப் போட்டு ஆயுதம் கொடுத்தாய், ரேடார் கொடுத்தாய். பலாலி விமானதளத்தைப் பழுது பார்த்துக் கொடுத்தாய். அங்கிருந்து சீறிப்பாய்ந்த விமானங்கள் தான் எங்களது பச்சிளம் குழந்தைகளைக் கொன்று விட்டுப் போயின, செஞ்சோலையில்.

அதற்குப்பிறகு, இலங்கையோடு அந்நாட்டுக் கடற்படையோடு தகவல் பரிமாற்ற ஒப்பந்தம்போட்டாய். விடுதலைப்புலிகளுக்கு வந்த கப்பல்களை நடுக்கடலில் மூழ்கடித்தாய். இத்தனை துரோகங்களும் செய்து முழுக்க முழுக்க யுத்தத்தை நடத்திய இந்திய அரசின் துரோகத்தை மன்னிக்க முடியாது. இதை மறக்கடிக்கலாம், பிரச்சனையைத் திசைதிருப்பலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். முத்துக்குமாரின் உடம்பைப் பற்றி எரித்த நெருப்பின்மீது சத்தியம் வைத்துச் சொல்வோம். இந்த இனத்தை அழிப்பதற்கு துரோகம் இழைத்தவர்களுக்கு மன்னிப்பு கிடையாது. பதினாறுபேர் தீக்குளித்து மடிந்தார்கள். அதற்குப் பிறகு, ஈவு இரக்கமற்ற முறையில், மனசாட்சியற்ற ஒரு மனிதர், யாரைக் குற்றம் சாட்டுகிறார்?

நெஞ்சம் கொதிக்கிறது. என் வாயால் அந்த வார்த்தைகளை உச்சரிப்பதற்கு மனம் இல்லை. உலகத்தில் தமிழனுக்கு மதிப்பைத் தேடிக்கொடுத்தானே தமிழ்த்தாயின் தவமைந்தன் பிரபாகரன், அவரைக் குற்றம் சாட்டுகிறார். ‘மாவீரன் மாத்தையா’ என்றார். பிரபாகரனைப் படுகொலை செய்ய இந்திய உளவு நிறுவனத்தோடு சேர்ந்து திட்டமிட்ட துரோகியா மாவீரன்? இனம் இனத்தோடுதானே சேரும். துரோகி தானே துரோகியை வர்ணிக்கமுடியும்.

கருணாவின் படை அணிகள் மோதின என்றார். நீங்களா காக்கை வன்னியனைப் பற்றி எழுதுவது? என்றைக்கோ எழுதியது. காக்கை வன்னியன் இன்றைக்கு யார்? உலகம் கேட்கிறது. கருணா இன்றைக்கு யார்? உலகம் கேட்கிறது.

மதிப்புக்குரிய முதலமைச்சர் அவர்களே, தனிப்பட்ட முறையில் உங்களை விமர்சிக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் அல்ல. அப்படித்தான் அரசியல் நடத்த வேண்டும் என்ற எண்ணமும் அல்ல.

ஆனால், கேள்வி கேட்பார் இல்லை என்று நினைத்துக்கொண்டு, துரோகங்களுக்கு எல்லாம் உடந்தையாக இருந்துவிட்டு இன்றைக்குப் பிரச்சினையைத் திசை திருப்பப் பார்க்கிறீர்கள். மாத்தையா வையும் கருணாவையும் நீங்கள் மாவீரர்களாக சித்தரித்ததை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

14 பேர் தீக்குளித்தபோது ஒருவருக் காவது நீங்கள் இரங்கல் தெரிவித்தது உண்டா? இதோ அமரேசனின் பிள்ளைகள் இந்தக் கூட்டத்துக்கு வந்து இருக்கிறார்கள்.
முத்துக்குமாரின் குடும்பத்தினர் இந்தக் கூட்டத்துக்கு வந்து இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல. அமரேசன் தீக்குளித்தபோது மனநிலை சரியில்லாததால் தீக்குளித்தார் என்று காவல்துறை அதிகாரிகளைவிட்டு அறிக்கைவிட வைத்தவர் யார்? பள்ளப்பட்டி ரவி கடைசி நிமிடத்தில் அவன் உயிர் பிரிகின்றவரை ஈழம் ஈழம் என்று சொல்லித்தானே மதுரை மருத்துவமனையில் செத்துப்போனான்.

வீட்டில் ஸ்டவ் வெடித்து அதன் காரணமாக தீக்காயம் ஏற்பட்டது என்று அடிஷனல் டி.ஜி.பி.யைவிட்டு அறிக்கை விட வைத்தவர் யார்? அந்த பள்ளப்பட்டி ரவியின் மனைவி அந்த ஏழைப் பெண் குடிசையில் இருக்கின்ற பெண் அழுதுகொண்டு சொன்னாள், எங்கள் வீட்டில் விறகுவைத்துத்தான் அடுப்பு மூட்டுகிறோம். நாங்கள் ஏழைகள். எங்கள் வீட்டில் ஸ்டவ்வே கிடையாது என்று. பத்திரிகை யாளர்களை அழைத்துச் சொன்னேன், காவல்துறை அதிகாரிகளை அழைத்துச் சொன்னேன்.
மிரட்டிப் பார்த்தார்களே, ‘ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்ததாக யாராவது அறிக்கை விட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று அறிக்கை விட வைத்தவர் கருணாநிதிதானே?

அமரேசன் மனநோயால் தீக்குளித்தார் என்று சொல்ல வைத்தது கருணாநிதி தானே? திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த இருவர் தீக்குளித் தார்களே சிவப்பிரகாசம், கோகுல ரத்தினம். அவர்களுக்காவது, ஒரு வார்த்தை இரங்கல் தெரிவித்தது உண்டா நீங்கள்?

இன்றைக்கு என்ன மெளனத்தில் அழுகை? யாரை ஏமாற்றுகிறீர்கள்? பதினான்கு பேர் தீக்குளித்து இறந்தபோது ஒருவரி எழுதுவதற்கு மனம் இல்லாத நீங்கள், இன்றைக்கு மெளனத்தின் வலியை யார் அறிவார்? என்று எழுதுகிறீர்களே?

யாரும் அறிய முடியாது, நீங்கள் மெளனமாக குதூகலித்ததை. பிரபாகரன் படைக்குப் பின்னடைவு என்பதில் நீங்கள் உள்ளுக்குள் குதூகலித்துக் கொண்டாடியதை யார் அறிய முடியும்? ‘தன்னெஞ்சறிவது பொய்யற்க’ என்றான் வள்ளுவன். உங்களுக்காகவே எழுதிவிட்டுப் போனான்.

நிராயுதபாணிகளைத் தாக்கக்கூடாது என்பதுதான் தமிழர்களின் போர் மரபு. ஆனால், நீங்கள் நிராயுதபாணிகளைத் தான் தாக்குகிறீர்கள். உங்கள் கைக்குள் கட்டுப்பட்டுக் கிடக்கிறது பத்திரிகை உலகம். நான் பத்திரிகையாளர்களைக் குறைசொல்லவில்லை. பத்திரிகை முதலாளிகளை ஆசிரியர்களைக் குறை சொல்லவில்லை. அவர்களது மனதிலும் வேதனை இருக்கிறது.

ஆனால், கட்டுப்பட்டுக் கிடக்கிறது. இந்தத் தமிழ்நாட்டில் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டு இருக்கின்ற மிகப்பெரிய ஆபத்தாக, பத்திரிகைகள் முடக்கப் படுகின்றன. கருத்துகளைச் சொல்ல முடியாத நிலைமை உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவருடைய அறிக்கையை எட்டுக்காலம் போட்டீர்கள் அல்லவா? பிரபாகரன்மீது பழி சுமத்தித்தானே அந்த அறிக்கை? முழுவதும் படித்துப் பாருங்கள். அவரின் அறிக்கையின் நோக்கம் என்ன? இந்த அழிவுக்குக் காரணம் பிரபாகரன் என்பதுதான், அந்த அறிக்கையின் நோக்கம்.

கருப்பட்டிக்குள் விஷத்தை வைப்பதைப்போல மந்திரிப் பதவிகளை தமிழ்நாட்டுக்கு வாரி வழங்கிவிட்டு, எலும்புத்துண்டுகளைப் போட்டுவிட்டு, படைகளை அனுப்பி ஈழத்தமிழர்களைக் கொன்றதே இந்திய அரசு.

அதேபோலத்தானே இவர் வண்ணத் தமிழில் வசனம் எழுதிவிட்டு, கடைசியில் இவ்வளவுக்கும் காரணம் பிரபாகரன் என்று குற்றம் சாட்டி அதை எட்டுக்காலம் எல்லா பத்திரிகைகளும் போட வைத்தார். அதை மறுத்து வெளியிட்ட அறிக்கை அண்ணன் நெடுமாறன் அறிக்கை தினமணி வெளியிட்டது. அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் வெளியிட்ட அறிக்கை தினமணி வெளியிட்டது. எளியவன் அறிக்கை தினமணி வெளியிட்டது.

நான் கேட்கிறேன், உங்கள் அறிக்கையை முழுப் பக்கம் போட்டுவிட்டு, எங்கள் அறிக்கையை முழுமையாகப் போடவில்லை. நான் என் கட்சிக்கு விளம்பரம்கேட்டு அறிக்கையைப் போடவில்லை. ஆனால், அறிக்கையைப் பத்திரிகைகளில் போடவிடாமல் செய்து விட்டு நீங்கள் முரசொலியில் ஒரு கேள்வி பதில் எழுதினீர்கள். முதலமைச்சர் அவர்களே அந்தக் கேள்வி பதிலின் தொடக்கமே என்ன எழுதியிருக்கிறீர்கள்? அவருக்கு மனச்சாட்சி இல்லையென்று கள்ளத் தோணி வைகோ சொல்லி இருக்கிறாரே, இதுதான் உங்கள்கேள்வி.

ஏன் நீங்கள் அந்தத் தலைப்பைப் போட்டீர்கள்? என் அறிக்கையில் அந்த ஒரு பகுதி மட்டும்தான் தினமணியில் வந்தது. மீதமுள்ள பகுதிகள் வரவில்லை. நீங்கள் இதை எடுத்து வைத்துக்கொண்டு ‘கள்ளத்தோணி வைகோ’ என்றீர்கள். சிங்களவன் நமது தமிழனை கள்ளத் தோணி என்கிறான் என்று அண்ணா சொன்னார். என்னைக் கடுமையாக விமர்சித்த நண்பர்கள் பலர் வேறு அரசியல் இயக்கங்களில் இருப்பவர்கள் என்னைச் சொல்லி இருக்கிறார்கள். அதற்காக நான் வருத்தப்பட்டது இல்லை.

ஆனால், அண்ணா உருவாக்கிய இயக்கத்தைக் கபளீகரம் செய்து கொண்டு, குடும்பத்துக்காகக் கட்சி ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிற நீங்கள், என்னைக் கள்ளத்தோணி என்கிறீர்கள். சபாஷ்! நீங்கள் சிங்களவர்கள் கூட்டத்தில் சேர்ந்து விட்டதற்கு இதைவிட ஒரு ஒப்புதல் வாக்குமூலம் வேறு எதுவும் இருக்க முடியாது. (பலத்த கைதட்டல்)

அதில் கடைசியில் என்ன எழுதி இருக்கிறீர்கள்? சீ, நீ ஒரு மனுஷனா? நீ ஒரு ஜென்மமா? என்று முடித்து இருக்கிறார். சீ நீயெல்லாம் மனிதன் தானா? என்று உங்கள் வக்கரித்த புத்தியை எழுத்தில் வடித்துள்ளீர்கள்.

நான் மனிதர்கள் கண்பார்வையில் மட்டும்தான் மனிதராகத் தெரிவேன். (பலத்த கை தட்டல்) மனிதனுக்கு மட்டும்தான் வைகோ மனிதனாகத் தெரிவான்.
நீங்கள் என்ன கேட்டு இருக்கிறீர்கள்? குற்றச்சாட்டு என்ன? அனைத்திந்திய அண்ணா தி.மு. கழக ஆட்சியில் 2002 ஆம் ஆண்டில் தமிழகத்தின் சட்ட மன்றத்தில் பிரபாகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அதை மென்மையாகக் கண்டிப்பதுபோலக் கண்டித்துவிட்டு, இன்றைக்கு போயஸ் தோட்டத்தில் போய் அடைக்கலமாகி விட்டாய் என்று நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். நான் இந்த மன்றத்தின் வாயிலாகக் கேட்கிறேன்.

முதலமைச்சர் அவர்களே, 2002 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரபாகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப் பட்டதை இன்றைக்குச் சுட்டிக்காட்டி என்மீது பாய்ந்து விழுகிறீர்களே, நான் கேட்கிறேன். உங்களைப் போன்ற ஆட்சி, அதிகாரம், ரதகஜதுரகபதாதிகள் எதுவும் இல்லாத, இந்தத் தமிழ் மண்ணுக்கு உழைக்கின்ற ஒரு எளிய தொண்டனாகக் கேட்கிறேன்.

அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, சட்டமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வெளிநடப்பு செய்ததே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளிநடப்பு செய்ததே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுதலைப்புலிகளை பல கட்டங்களில் இன்றுவரை ஏற்றுக் கொள்ளாத மார்க்சிஸ்ட் கட்சி அன்றைக்கு வெளிநடப்பு செய்ததே, நீங்கள் ஏன் வெளிநடப்பு செய்யவில்லை? திராவிட முன்னேற்றக் கழகம் ஏன் வெளிநடப்பு செய்யவில்லை? அந்தத் தீர்மானம், நீங்களும் சேர்ந்து நிறைவேற்றிய தீர்மானம் என்று குற்றம் சாட்டுகிறேன்.

அன்றைக்கு வெளியேறினீர்களா? சட்டமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்தீர்களா? பிறகு ஏன் அதைப் பற்றிப் பேசுகிறீர்கள்?

இவ்வளவும் செய்துவிட்டு இத்தனை கொடுமைகள் செய்வதற்கு நீங்கள் உடந்தையாக இருந்து விட்டு இன்றைக்கு எங்களைக் கூண்டில் நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றீர்களே? அண்ணன் கேட்டாரே, தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைப்பற்றி தடை செய்யப்பட்ட இயக்கத்தைப்பற்றிப் பேசக் கூடாது. தடை செய்து இருக்கின்ற நாடுகளில் பிரபாகரன் படம் வைக்கப்படுகிறது. தடை செய்து இருக்கின்ற நாடுகளில் விடுதலைப் புலிகளின் கூட்டங்களுக்கு அனுமதி இருக்கின்றது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேடையில் இருந்து நான் தெரிவிக்க விரும்புகிறேன். போர் முனையில் விடுதலைப்புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட என்ன காரணம்? உலகம் தடை செய்த ஆயுதங்களை ஏவினான். அதனால்தான், அனந்தபுரத்தில் நம் நெஞ்சம் நடுங்க வைக்கின்ற யுத்தக் களத்திலே வீராதி வீரன் விதுஷா கொல்லப்பட்டார். வீரர்களின் போற்றுதலுக்கு உரிய துர்கா கொல்லப்பட்டாள். தீபன் கொல்லப் பட்டான். கடாபி கொல்லப்பட்டான். யாரும் நெருங்க முடியாத மாவீரர்களை உலகம் தடைசெய்த ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொன்றார்கள்.

சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னணியில் பேசலாம் என்று அழைத்துவிட்டு நடேசனை பூலித் தேவனை - சந்தோசை - கொடூரமான முறையில் சுட்டுக் கொன்றார்கள். தங்கள் தாயக மண்ணின் உரிமைக்காகப் போராடி எத்தனை மாவீரர்கள் மடிந்து போனார்கள். அவர்களுக்கு நாம் வீரவணக்கம் செலுத்துகிறோம். அந்த வீரர்கள் ஒரு இலட்சியத்துக்காக இறந்தார்கள். ஒரு உன்னதமான நோக்கத்துக்காக உயிர்களைத் தந்தார்கள். அவர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் இயக்குகிறார்கள். போரை முன் எடுத்துச் செல்வதற்கு இயக்குகிறார்கள்.

ஈழப் பிரச்சனைக்கு எது தீர்வு? நான் கேட்கிறேன். அன்றைக்கு வட்டக் கோட்டையில் தந்தை செல்வா தலைமையில் தமிழர் அமைப்புகள் பண்ணாகத்தில் நிறைவேற்றிய தீர்மானம். அதுதான் தீர்வு. சுதந்திர இறையாண்மை உள்ள தமிழ் ஈழ தேச அரசு, அதுதான் தீர்வு. வேறு தீர்வே கிடையாது. அந்தத் தீர்வுக்காகத்தானே இத்தனை பேர் மடிந்தார்கள்.

சிதறிக்கிடந்த யூதர்களுக்காக ஒரு நாட்டை அமைக்க முடிந்தது என்றால் நம்மால் ஏன் முடியாது? பத்துக் கோடி பேர் இருக்கிறோம். இங்கு ஏழு கோடிப் பேர் இருக்கிறோம். உணர்ச்சி செத்துப் போய் விடவில்லை. தமிழர்கள் உள்ளத்தில் நீறுபூத்த நெருப்பாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது முத்துக்குமார் வைத்த நெருப்பு. அவன்தானே சொன்னான், மிகக்கெட்டிக் காரத்தனமாக இவர் போய் மருத்துவ மனையில் போய் பதுங்கிக் கொண்டார் என்று வைகோ சொல்லவில்லை. உயிரைத்தந்த முத்துக்குமார் அன்றைக்குச் சொன்னான்.

ஆகவே, இவ்வளவு சோதனைகளுக்குப் பிறகு, ஈழத்துத் தமிழ் மக்கள் இவ்வளவு பேர் மடிந்ததற்குப்பிறகு அவர்களுக்கு ஒரு விடியலை ஏற்படுத்த வேண்டிய கடமை தமிழ் மக்களுக்கு உண்டு. அவர்களது தியாகம் ஒருபோதும் வீண் போகாது. 28 பேரை வைத்துக் கொண்டு, 1987 ஆம் ஆண்டு வன்னிக் காட்டுக்கு உள்ளே சென்ற பிரபாகரனால் இலட்சம் பேர்கொண்ட படையை எதிர்த்து கானகத்தில் பாசறை அமைக்க முடிந்தது என்றுசொன்னால், அவர்களால் இயலும். அடுத்த கட்டம் என்ன என்பதையும், யுத்த களங்களையும் வரலாறுதான் தீர்மானிக்கும்.

ஸ்பார்ட்டா வீரர்களைப்பற்றிப் பாராட்டினாரே. அதைவிடச் சிறந்தவர்கள். ஒவ்வொரு வீரனும் தன் உடம்பில் இருக்கின்ற கடைசிச் சொட்டு இரத்தம் சிந்துகின்றவரை அந்த மண்ணுக்காகவே மடிந்தவர்கள். பெற்றதாயும் தகப்பனும் பிள்ளைகளை வாரிக் கொடுத்தனர் போர்க்களத்துக்கு. திரும்பி வரமாட்டான் என்று தெரிந்தே அனுப்பி வைத்தனர். திரும்பமாட்டோம் வீட்டுக்கு என்று எண்ணித்தான் சென்றார்கள்.

வாழ்க்கைச் சுகங்களைத் தேடாத அந்த மாவீரர்கள் மரணத்துக்கு அழைப்பிதழ் கொடுத்து கழுத்தில் நச்சுக்குப்பிகளைக் கட்டிக்கொண்ட அந்த வீரர்கள் மண்ணின் விடுதலைக்காகப் போராடி மடிந்தவர்கள். வாழ்க்கையில் எந்த உல்லாசத்தையும் நாடாதவர்கள் அல்லவா? அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்றோம். அவர்கள் மண்ணில் புதைக்கப்பட்டனர். அந்த மண்ணின் ஆன்மாவோடு கலந்துவிட்டனர். நெருப்பு நதியாக வந்து கொண்டு இருக்கின்றனர். இந்த நெருப்பு நம் நெஞ்சில் எரியட்டும்; அணையாத விடுதலைத் தீயாக எழட்டும் என்றார் அண்ணன் நெடுமாறன்.

‘தணலாக எழுக’ என்றார் ஞானசம்பந்தர். அதைப்போல, வீரத் தணலாய் எழுக! நெஞ்சில் எழுக! உலகெங்கும் உள்ள தமிழ் உணர்வாளர்களே, குழப்பவாதி களுக்கு இடம் கொடுக்காதீர்கள். குதர்க்கம் பேசுபவர்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். ஒரே இலக்குதான் தமிழ் ஈழம். அதைத் திசை காட்டும் கருவியின் பெயர்தான் பிரபாகரன்.

என் அன்புச் சகோதரர்களே, மாவீரர்கள் மடிந்து விடவில்லை. அவர்கள் கல்லறைகளுக்குள் போய்விட்டார்கள் என்று கருதாதீர்கள். அவர்கள்தாம் உயிர்ச் சக்தி.
தமிழ் ஈழ விடுதலைப்போரின் ஆன்மாவில் அவர்கள் நுழைந்துவிட்டார்கள். அதற்கு அழிவில்லை. இந்தப் போரை இயக்குகின்ற சக்தியே மாவீரர்களின் தியாகம்தான். அவர்கள் சிந்திய இரத்தம்தான். அவர்கள் தந்த உயிர்கள்தான். இந்தப் போரை நடத்துகின்ற சக்தியே மாவீரர்கள்தான்.

எங்கள் வாழ்நாளில் தமிழ் ஈழ விடுதலை மலரும் என்று நம்பிக்கையோடு அதை முன்னெடுத்துச் செல்கின்றவராக பிரபாகரன் வருவார். எங்கு? எப்பொழுது? எந்தக் காலத்தில்? அது உரியநேரத்தில் தெரிய வரும். அடுத்தக் களம் வெற்றிக்களமாக அமைகின்ற கட்டத்துக்கு அவர் முன்னெடுத்துச் செல்ல வருவார். இந்த உணர்ச்சி நம்மை இயக்கட்டும்.

அருமைத் தோழர்களே! கட்சியை மறந்துவிடுங்கள். வைகோ பேசுவது மறுமலர்ச்சி தி.மு.கவின் மேடை என்பதை மறந்துவிடுங்கள். இந்த மண்ணில் பிறந்த வீரவாலிபர்களே! நம் வாழ்நாளில் நம் சொந்தச் சகோதரர்கள் அழிக்கப்பட்டார்களே, அந்த மண்ணில் அவர்கள் சுதந்திரம் உள்ள மக்களாக, மானம் உள்ள மக்களாக உரிமை உள்ள மக்களாக வாழ்வதற்கு கொலைகாரச் சிங்களக் கூட்டத்தின் கொட்டத்தை ஒடுக்குவதற்கு மாவீரர்கள் பெயரால் உறுதிஎடுப்போம். மாவீரர்களின் தியாகத்தால் சூளுரை மேற்கொள்வோம்.

மலரப் போகின்ற தமிழ் ஈழத்தை உருவாக்க, ஒவ்வொருவரும் அவரவர் களுக்கு முடிந்தமட்டில் கருத்துகளைப் பரப்புவோம். பொய்ப் பிரச்சாரத்தை முறியடிப்போம். மான உணர்ச்சியை வளர்த்து எடுப்போம். தமிழ் ஈழத் தாயக விடுதலைக் களத்துக்கு, நாம் வாழ்ந்த காலத்தில் நமது பங்கைத் தந்தோம் என்ற மனநிறைவையாவது நாம் பெறுவோம்.

மாவீரர்கள் கல்லறைகளின் கதவுகள் திறந்துகொண்டன. அவர்களின் ஆவிகள் யுத்தகளத்துக்கு வருகின்றன. தீட்டிய வாளுடன் புகழ்மலர்களுடன் வரு கின்றன. தமிழ் ஈழ இளைஞனே! தமிழ் இன இளைஞனே, உருக்கிய வாளுடன் வா! தமிழ் ஈழ வேட்கையுடன் வா! ஆக்கிரமிப்பாளனே வெளியேறு! சிங்களக் கொடியவனே! வெளியேறு! எங்கள் தமிழ் ஈழ மண்ணைவிட்டு வெளியேறு!

மலரட்டும் தமிழ் ஈழம்! மலரட்டும் தமிழ் ஈழம்! மலரும் தமிழ் ஈழம். நிச்சயமாக மலரும். தியாக பூமியில் ஆழ்ந்த மண்ணுக்கு அடியிலே உறங்கிக் கொண்டு இருக்கின்ற மாவீரர்களே, நீங்கள் எங்கள் ஊனில் உதிரத்தில் உணர்ச்சியில் கலந்து இயக்கிக் கொண்டு இருக்கிறீர்கள் வணக்கம் செலுத்துகின்றோம். போரை முன்னெடுத்துச் செல்கின்ற பிரபாகரனுக்கு நாங்கள் தோள் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம்.

பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

செய்திகள் ஒளிபரப்பாகும் நேரம்:
காலை 8 மணி; பிற்பகல் 1.30 மணி; முன்னிரவு 8 மணி; இரவு 10 மணி

Events Calendar

«  
  »
S M T W T F S
 
 
 
 
1
 
2
 
3
 
4
 
5
 
6
 
7
 
8
 
9
 
10
 
11
 
12
 
13
 
14
 
15
 
16
 
17
 
18
 
19
 
20
 
21
 
22
 
23
 
24
 
25
 
26
 
27
 
28
 
29
 
30
 
31
 
 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)