கிறிஸ்துமஸ் வாழ்த்து! வைகோ

Issues: International, National

Region: Tamil Nadu

Category: Event, Headlines

Date: 
Thu, 24/12/2009
Date: 
Fri, 25/12/2009

கிறிஸ்துமஸ் வாழ்த்து!

வைகோ

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை மன்பதைக்கு உணர்த்தி மனித குமாரனாய் மண்ணில் அவதரித்த புனித குமாரன் இயேசு பிறந்த பொன்னாள் இந்நாள். எளியோரின் நம்பிக்கை -- வலியோரின் வழித்துணை -- அண்ணல் இயேசு பிறந்த நன்னாளில் மகிழ்ச்சியுடன் விழா நிகழ்ச்சிகளில் வையம் திளைத்திருக்கிறது.

"உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை" என்று உறுதியளிக்கும் இயேசுவின் பொன்மொழிகள் நெஞ்சில் அலைமோத சோதனைகளை வென்று சாதனை படைக்கும் உறுதி பிறக்கிறது. "வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்," என்ற அமுத மொழிகள் அல்லல்படும் நல்லோர் இதயங்களை வருடிக் கொடுக்கின்றது.

ஏளனம் செய்தனர்; அவதூறு கூறினர்; பழி சுமத்தினர்; மரண தண்டனை என்ற பெயரால் கொடுஞ்சிலுவையில் அறைந்து ஆனந்தம் கொண்டனர் ஆளவந்தார். அரண்மனை, ஆடம்பரம், சுகபோகம், அதிகார போதை அத்தனையும் பெற்ற வக்கிரப் புத்தியால் அக்கிரமம் புரிந்தவர்கள் ஆட்சியை இழந்து மாட்சிகள் இழந்து சரித்திரத்தின் சவக்குழியில் சமாதி ஆயினர். ஆனால், மண்ணில் தலைசாய்க்க இடமின்றி மரித்த மனிதகுமாரன் சுமந்த சிலுவைகூட புனிதச் சின்னமாக இன்றும் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

இருளிலும் துயரிலும் வாடுவோருக்கு நம்பிக்கையூட்டி வழிநடத்தும் இயேசு பெருமானின் மொழிகள் அன்றும் இன்றும் என்றும் மனித குலத்திற்கு மகத்துவம் சேர்ப்பன.

மனித நேயம் மண்ணில் செழிக்கவும், சமய நல்லிணக்கம் தழைக்கவும், சமூக ஒற்றுமை நிலைக்கவும் பாடுபடச் சூளுரைத்து உலக மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)