முத்தரப்புக் கூட்டத்தைக் கூட்டி கரும்பு விலை ஒரு டன்னுக்கு ரூ. 3000/- நிர்ணயம் செய்ய வேண்டும்! வைகோ கோரிக்கை

Issues: Environment, Farmers, Human Rights, Poverty

Region: Tamil Nadu

Category: Articles, Vaiko Answers, Announcements

Date: 
Tue, 13/12/2011

 

 

 

முத்தரப்புக் கூட்டத்தைக் கூட்டி கரும்பு விலை
ஒரு டன்னுக்கு ரூ. 3000/- நிர்ணயம் செய்ய வேண்டும்!
வைகோ கோரிக்கை

மிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவைப் பருவம் தொடங்கி இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. ஆனால், தமிழக அரசு இதுவரை கரும்பு விலை நிர்ணயம் செய்யாததால் கரும்பு விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 3 பொதுத்துறைச் சர்க்கரை ஆலைகள், 18 கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகள் மற்றும் 21 தனியார் சர்க்கரை ஆலைகள் என மொத்தம் 42 சர்க்கரை ஆலைகள் இயங்குகின்றன. சுமார் 40 இலட்சம் விவசாயிகள் இந்தச் சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு விளைவித்து வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சர்க்கரை ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி செப்டம்பரில் முடியும். மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையாக ஒரு டன் கரும்புக்கு ரூ. 1,950/- வழங்கப்பட்டு வருகிறது. இதன்மேல் மாநில அரசு பரிந்துரை விலையை நிர்ணயம் செய்வதற்கு மாநில அரசு, சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகள் ஆகியோரைக் கொண்ட முத்தரப்புக் கூட்டத்தை அரசு ஏற்பாடு செய்து கரும்புக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால், தமிழக அரசு இதுவரை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

சர்க்கரை ஆலைகள் இலாபம் ஈட்ட விவசாயிகள் தங்கள் வியர்வையைக் கொட்டி உற்பத்தி செய்யும் கரும்புக்குக் கட்டுப்படியான விலை கிடைப்பது இல்லை. கரும்பு விவசாயிகள் கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் விளைவித்த கரும்பைத் தீ வைத்துக் கொளுத்துகிற அளவுக்கு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஆனால், சர்க்கரை ஆலைகள் பல வழிகளில் இலாபம் ஈட்டுகின்றன. கரும்புக் கழிவு கூட டன்னுக்கு ரூ. 3,600/- க்கு ஆலைகளால் விற்பனை செய்யப்படுகிறது. சர்க்கரை ஆலைகள் தயாரிக்கும் மின்சாரம் கூட தமிழக அரசால் விலை வைத்து வாங்கப்படுகிறது. அதுபோலவே, மத்திய, மாநில அரசுகளுக்குக் கரும்பு ஆலைகள் 14 விழுக்காடு வரித் தொகையையும் செலுத்துகின்றன.

ஆனால், இவற்றுக்கெல்லாம் ஆதாரமாகக் கரும்பை விளைவிக்கும் விவசாயிகள் உரிய விலையின்றித் தவிக்கின்றனர்.

அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கரும்பு, டன்னுக்கு ரூ. 2,500/- வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்ததை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.

உடனடியாக முத்தரப்புக் கூட்டத்தைக் கூட்டி உர விலை உயர்வு, இடுபொருள்கள் விலையேற்றம் ஆகியவற்றைச் சமாளிக்க முடியாமல் திணறும் கரும்பு விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகக் கூடிய வகையில் கரும்பு, டன்னுக்கு ரூ. 3,000/- விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

‘தாயகம்’                                       வைகோ
சென்னை - 8                                 பொதுச் செயலாளர்,
13.12.2011                                       மறுமலர்ச்சி தி.மு.க

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)