பிரதமருடன் வைகோ சந்திப்பு: மூன்று கோரிக்கைகள்!

Issues: Economy, Human Rights

Region: Tamil Nadu, Other States

Category: Articles, Headlines, Photo Gallery

Date: 
Thu, 15/12/2016

 

 

 

 

 

பிரதமருடன் வைகோ சந்திப்பு: மூன்று கோரிக்கைகள்!

றுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்களை  நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுலகத்தில் இன்று (15.12.2016) காலை 11.25 க்கு சந்தித்தார். 11.45 மணி வரை சந்திப்பு நீடித்தது.

அப்போது வைகோ, பிரதமரிடம் மூன்று முக்கியப் பிரச்சினைகளை எடுத்து உரைத்தார்.

1. வர்தா புயல் சேதம்

சென்னை மாநகரையும், தமிழகத்தின் வட மாவட்டங்களையும் தாக்கிய வர்தா புயல் பேரழிவை ஏற்படுத்தி இருக்கின்றது. 10,000 கோடி ரூபாய்க் மேல் உடைமைகள் சேதம் அடைந்துள்ளன. நிவாரணப் பணிகளுக்காக, தேசியப் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து முதல் கட்டமாக ரூ 1000 கோடி வழங்கக் கோரி தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தங்களுக்குக் கோரிக்கை வைத்துள்ளார். புயல் சேதங்களைப் பார்வையிட நீங்கள் மத்தியக் குழுவை அனுப்ப இருப்பதாக அறிந்தேன் என்றார் வைகோ.

அதற்குப் பிரதமர், ‘இயற்கைப் பேரிடர் ஏற்பட்டு மக்களுக்குத் துன்பம் நேருகின்றபோதெல்லாம்மக்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு நான் என்றைக்கும்  தயாராக இருக்கின்றேன்என்றார்.

தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், வார்தா புயலை எதிர்கொள்கின்ற வகையில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டதால் பெருத்த உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. பொதுநலத் தொண்டர்களும், மாணவர்களும், அரசு அதிகாரிகளும் இணைந்து பணியாற்றினார்கள். 15000 மின் கம்பங்கள் விழுந்து விட்டன. எனவே, நீங்கள் அதிகமான நிதியைத் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார்.

அதற்குப் பிரதமர், ‘நிச்சயம் செய்கிறேன்என்று உறுதி அளித்தார்.

 

2. ஜல்லிக்கட்டு

அடுத்து, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக இருக்கின்ற ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டு இருப்பது மிகவும் அக்கிரமமான நடவடிக்கை ஆகும்.

ஸ்பெயின் நாட்டில் நடக்கின்ற மாடுபிடிச் சண்டையை, கேடலோனியா மாநில அரசு தடை செய்தது. ஆனால், ஸ்பெயின் நாட்டு உச்சநீதிமன்றம், இது பாரம்பரியமான விளையாட்டு என்று கூறி, அந்தத் தடையை ரத்து செய்தது.

ஸ்பெயினில் நாட்டில் இந்த விளையாட்டில் மாடுகள் ஈட்டியால் குத்திக் கொல்லப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக் காளைகளைக் குழந்தை போல வளர்க்கின்றார்கள். எங்கள் வீட்டுத் தொழுவத்திலேயே அப்படிப்பட்ட காளைகளை வளர்த்தோம். மாடுகளை விவசாயிகள் வணங்கி வழிபடுகின்றார்கள். ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகளுக்குச் சிறு துன்பம் கூட நேர்வது இல்லை. ஆனால்  போட்டியில் பங்கேற்கின்ற இளைஞர்களுக்குக் காயங்கள் ஏற்படுகின்றன. உலகத்திலேயே இதுபோன்ற விளையாட்டு வேறு எங்கும் கிடையாது. நீங்கள் ஒருமுறை வந்து ஜல்லிக்கட்டைப் பார்த்தால் பிரமித்துப் போவீர்கள்.

காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகளின் பட்டியலில் உள்ள சிங்கம், புலி, கரடி, ஓநாய், யானை போன்ற விலங்குகள் காட்டுக்குள் இருப்பவை. ஆனால் வீட்டு விலங்கான காளைகளையும் அந்தப் பட்டியலில் சேர்த்து இருப்பது அநீதியாகும்.

ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்றால், காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகளின் பட்டியலில் இருந்து காளை மாடுகளை அகற்ற வேண்டும். அதை நீங்கள் செய்தால்தான் ஜல்லிக்கட்டை நடத்த முடியும்என்று கோரி வைகோ கொடுத்த கோரிக்கை மனுவில், பிரதமர் ஒரு தாளை ஒட்டி அதில் குறிப்பு எழுதினார்.

3. இலங்கை அரசின் அநீதியான சட்டத்தைத் தடுத்திடுக

 

கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுகின்றார்கள். படகுகள் உடைக்கப்படுகின்றன. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிங்கள அரசுக்கு முழுமையாக உதவியதால், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இப்பொழுது, தமிழக மீனவர்கள் தலையில் இடி விழப் போகின்றது.

தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் பரப்பிலும், பன்னாட்டுக் கடல் பரப்பிலும் மீன் பிடித்தாலும், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, சிங்களக் கடற்படையினர் அவர்களைக் கைது செய்து கொண்டு போய் இலங்கைச் சிறையில் அடைக்கின்றார்கள்; படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டு போகின்றார்கள்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, இலங்கை அரசு ஒரு புதிய சட்டத்தை, 2017 ஜனவரி மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற இருக்கின்றது. அதன்படி, தமிழக மீனவர்கள் மீது ஏழு இலட்சம் முதல் ஏழு கோடி ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்க இலங்கை அரசு முடிவு செய்து இருப்பது, உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காத கொடுமை ஆகும்.

எனவே, நீங்கள் தூதரக உறவுகள் மூலமாக இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தத்தைக் கொடுத்து, இந்தச் சட்டம் நிறைவேற விடாமல் தடுக்க வேண்டும். இதற்காக, நாளை இராமேஸ்வரத்தில் என் தலைமையில், ஆயிரக்கணக்கான மீனவர்களோடு சேர்ந்து போராட்டம் நடத்த இருக்கின்றேன். இலங்கை அரசைக் கண்டித்தும், இலங்கை அரசின் நடவடிக்கைகளை இந்திய அரசு தடுக்க வலியுறுத்தியும், இந்தப் போராட்டத்தை நடத்துகின்றோம் என்று வைகோ கூறினார். 

இதுகுறித்து, என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்று வெளியுறவுத்துறையோடு நான் ஆலோசிக்கிறேன்என்று பிரதமர் கூறினார்.

நீங்கள் பதவி ஏற்ற நாளில் நான் கருப்புக் கொடி காட்டினேன். ஆனால், ஊழலையும், கருப்புப் பணத்தையும் ஒழிப்பதற்காக, 500, 1000 ரூபாய் செல்லாது என்று நீங்கள் அறிவித்தபோது முதல் ஆளாக வரவேற்று அறிக்கை கொடுத்தேன் என்று வைகோ சொன்னபோது, ‘ஆம்; நீங்கள் எடுத்த நிலைப்பாட்டை நான் அறிவேன்என்றார் பிரதமர்.

நீங்கள் நல்லது செய்தால் பாராட்டுவேன்; தவறு என்றால் கண்டிப்பேன் என்று வைகோ கூறியபோது,

அவர்தான் வைகோ என்பது எனக்குத் தெரியும்என்றார் பிரதமர்.

 

தாயகம்’                                           தலைமை நிலையம்
சென்னை - 8                                    மறுமலர்ச்சி தி.மு.க.,

 

Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)