சுதந்திரம் பறிபோகிறது...? தினமணி தலையங்கம்

Issues: Economy, Environment, Farmers, National, Rural, Science and Technology

Region: Tamil Nadu

Category: Headlines

Date: 
Mon, 01/03/2010

மத்திய அரசு ஏன், எதற்காக இப்படியெல்லாம் நடந்துகொள்கிறது? அப்படி என்னதான் நமது இந்திய அரசுக்கு நிர்பந்தம்? யாருடைய வற்புறுத்தலின் பேரில், யாருடைய நன்மையைக் கருதி இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து வருகிறது?- இதுபோன்ற கேள்விகளை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் எழுப்பியே தீரவேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த சில நாள்களாக நமது அரசின் சில செயல்பாடுகள் மக்களாட்சித் தத்துவத்துக்கும், தனிமனித சுதந்திரத்துக்கும் எதிரானதாக அமைந்திருப்பதை நம்மில் பலர் உணராமல் இருக்கிறோம். அதுமட்டுமல்ல, மிகவும் ரகசியமாக சில உடன்பாடுகள் கையெழுத்திடப்பட இருக்கின்றன. இந்தியாவின் வருங்காலத்தையே பாதிக்கும்  இந்த உடன்பாடுகளுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் தரப்பட்டிருப்பது நம்மிடமிருந்து மூடிமறைக்கப்பட்டிருக்கிறது.

விலைவாசி உயர்வு, நிதிநிலை அறிக்கைகள், இடைத்தேர்தல்கள் என்று அன்றாட அரசியல் நிகழ்வுகளை மட்டுமே மையப்படுத்திச் செயல்படும் நமது எதிர்க்கட்சிகளும் சரி, அவ்வப்போதைய பரபரப்புகளை விலைபேசி, தங்களது வாடிக்கையாளர்களையும் வாசகர்களையும் தேசத்தை எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்னைகளைப் பற்றிச்  சிந்திக்கவே அனுமதிக்காமல் செயல்படும் ஊடகங்களும் சரி, மத்திய அரசின் முடிவுகளால் கேள்விக்குறியாகப்போகும் இந்திய விவசாயிகளின் வருங்காலத்தைப் பற்றிய கவலையே இல்லாமல் இருப்பது அதைவிட அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த வாரம்  அமெரிக்காவுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை வெளியில் தெரியாதவண்ணம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அடுத்த மாதம் கையொப்பமிடப்பட இருக்கும் விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி விவசாய விரிவாக்கத்தில் தனியார்மயத்தைப் புகுத்துவதும் இந்திய வேளாண்மையில் அமெரிக்க விவசாயப் பன்னாட்டு நிறுவனங்கள் பங்குபெறுவதும் அனுமதிக்கப்பட இருக்கிறது.

அமெரிக்காவில் விவசாயம் என்பது வியாபாரம். இந்தியாவிலோ விவசாயம் என்பது வாழ்வாதாரம். இந்திய விவசாயி வியாபாரநோக்கில் தனது வயலில் உழுது பயிரிட்டு சாகுபடி செய்வதில்லை. தனது வயிற்றுப்பிழைப்புக்காக, வாழ்வாதாரமாக விவசாயத்தில் ஈடுபடுகிறார். இவரது விவசாயம்  லாபநோக்கில் நடத்தப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி இந்த விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள்  மொத்தமாக வாங்கி லாபகரமாக விவசாயம் செய்ய வழிவகுப்பதுதான்  இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாகிவிட்ட நிலங்களில் பயிரிடுவதை யார் தடுக்க முடியும்? இந்திய-அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் கர்க்கில், மான்சாண்டோ போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்க வழிகோலப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளில் இவர்கள் உறுப்பினர்களானால் நேரடியாகவே அரசின் மீது தங்களது செல்வாக்கைச் செலுத்துவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

இத்துடன் முடிந்துவிட்டது என்று நினைத்துவிடாதீர்கள். ஒரு சர்வாதிகார ஆட்சியில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு ராட்சத சட்டத்தையும் இந்தப் பன்னாட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் நமது ஆட்சியாளர்களின் உதவியுடன் நம்மீது திணிக்க இருக்கிறார்கள். உயிரி தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டம் ஒன்றை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில்  மத்திய அரசு நிறைவேற்ற இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நம்மை விடுங்கள். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர் கவலைப்படுகிறார்கள்?

முறையான சாட்சியம் அல்லது விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில் அல்லாமல் மரபணு மாற்ற விதைகள் போன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பற்றித் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது இந்தச் சட்டம் பாயும். இந்தச் சட்டமுன்வரைவின் 13(63) -வது பிரிவின்படி, புதிய அறிமுகங்களுக்கு எதிராகத் தக்க ஆதாரம் இல்லாமல் பிரசாரம் செய்பவர்கள் குறைந்தது 6 மாதம் முதல் ஓராண்டு சிறைத்தண்டனை பெறுவதுடன், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவார்கள்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித்தொழில்நுட்பவியல் துறையினரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்ட முன்வரைவின் 27(1) பிரிவின்படி, மரபணு மாற்றப்பட்ட பொருள்களின் ஆராய்ச்சி, அனுமதி போன்ற விஷயங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பார்வைக்கு உள்படுத்தப்படுவது மறுக்கப்படுகிறது. மேலும், மரபணு தொடர்பாக எந்தவொரு மாநிலத்தின் முடிவையும் நிராகரிக்கும் உரிமை உயிரித் தொழில்நுட்பவியல் துறையால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்கு இருக்கும் என்கிறது இந்தச் சட்ட முன்வரைவு.

இப்போதல்லவா தெரிகிறது ஏன் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விஷயத்தில் பின்வாங்கினார் என்பதும், தாற்காலிகமாகக் கைவிடப்பட்டது என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தார் என்பதும். இப்போதல்லவா தெரிகிறது, பிரதமர் மன்மோகன் சிங் ஏன் மரபணு மாற்றப்பட்ட பொருள்கள் மீதான முடிவு தாற்காலிகமானதுதான் என்று அறிவித்தார் என்பது.

இந்த ஆட்சியும் அரசும் யாருக்காக நடைபெறுகிறது? இவர்கள் இந்தியாவை என்னதான் செய்யக் கருதுகிறார்கள்? தனிமனித உரிமைக்கு, எதிர்ப்புக் குரல் எழுப்புவதற்கு இந்தியக் குடிமகனுக்கு உரிமை மறுக்கப்படும் அளவுக்கு நமது ஆட்சியாளர்களின் மரபணு மாற்றப்பட்ட அவலநிலையைக் கண்டு நமது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒருவருக்குக்கூட எதிர்ப்புக் குரல் எழுப்பத் துணிவில்லையா, இல்லை இவர்களும் விலைபேசப்பட்டு விட்டனரா?

 பாரதியின் பாஞ்சாலி சபதம்தான் நினைவுக்கு வருகிறது. ""கோயில்பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல்போலும்... வாயில் காத்து நிற்போர் வீட்டை வைத்து இழத்தல்போலும்...''

சீச்சீ... சிறியர் செய்கை!

 

நன்றி தினமணி

 

இத்தலையங்கத்திற்கு எங்கள் இணையத்தின் சார்பில் பதில்  ............................

 

இவ்விடயத்தில் மதிமுக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறது .  தொடர்ந்து விவசாயிகளுக்காகவும் தனி மனித உரிமைகளுக்காகவும்    போராடுவார்கள்.

 

மரபு அணு மாற்று விதைகள்: சொந்தக் கருத்துகளைத் திணித்து, மக்கள் கருத்துகளைப் புறக்கணிப்பதா? வைகோ கண்டனம் (21.01.2010)

மரபு அணு மாற்று உணவுப் பயிர்களை இந்தியாவில் அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பதைப் பற்றி மக்களின் கருத்தைக் கேட்பதற்காக, மத்திய அரசு கருத்துக் கேட்பு நிகழ்வுகளை இந்தியாவில் ஏழு இடங்களில் நடத்துகிறது.


ஆனால், தமிழக விவசாய அமைச்சர், மக்களிடம் கருத்துகளைக் கேட்காமல், மரபு அணு மாற்றுப் பயிர்களை அனுமதிப்பதற்கு ஆதரவாகப் பேசுகிறார். ஒரு கருத்துத் திணிப்பைத் தமிழக அரசு நடத்துகிறது. தமிழக அரசும், தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகமும், மரபு அணு மாற்று விதைகள் விரைவாகப் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்று, மான்சான்டோ கம்பெனியின் ஏஜெண்ட் போல தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.


இதுகுறித்து மத்திய அரசு தமிழகத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாத நிலையில், அப்படி ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் வற்புறுத்தாதது ஏன்?


மரபு அணு மாற்று விதை கூடாது என்ற ஆராய்ச்சியாளர்களின் நிலைப்பாட்டை, தமிழக விவசாயிகளைப் பாதுகாக்கும் கருத்தைப் பதிவு செய்யக்கூடாது என்று முதல் அமைச்சர் கருதுவது தான் இதற்குக் காரணம் ஆகும். இதைப்பற்றி எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை.


தமிழக மக்களின் கருத்தே தேவையில்லை என்று நினைக்கிறாரா?


முல்லைப் பெரியாறு பிரச்சினையில் எதுவும் பேசாத முதல் அமைச்சர், இதிலும் மெளனமாகவே இருக்கிறார்.


இந்தியாவில் முதல் மரபு அணு திணிப்பு உணவுப் பயிராகத் திணிக்கப்பட உள்ள BT கத்திரிக்காயை உண்பதால், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை முழுமையாக ஆராயாமல், சில குறைந்த கால ஆய்வுகளின் அடிப்படையில் BT கத்திரிகாயை அனுமதிப்பது தவறு.


மரபு அணு மாற்று பருத்தி விதைகளைப் பயன்படுத்தியதால் மராட்டிய, மாநிலத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஆடு, மாடுகள் செத்துப்போயின. பருத்திப் பயிர்த் தொழிலுக்கே பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மரபு அணு மாற்று கத்திரிக்காயை விளைவித்தால், அது குணப்படுத்த இயலாத உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும் என்பதை, இத்துறையின் விற்பன்னர்களும் ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்து உள்ளனர்.


எனவே, இந்த மிக முக்கியமான பிரச்சனை குறித்து, தமிழக மக்களின் கருத்துகளைப் பதிவுசெய்கின்ற வகையில், தமிழகத்திலும் கருத்துக் கேட்புக் கூட்டத்தை மத்திய அரசு நடத்த வேண்டும். அந்தக் கூட்டத்தில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அவர்களும் கலந்து கொள்ள வேண்டும்.


அத்தகைய கூட்டத்தை மத்திய அரசு நடத்தவில்லை என்றால், தமிழக அரசே அனைத்து மாவட்டங்களிலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி, தமிழக மக்களின் எண்ணங்களை மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.


மிகவும் முக்கியமான இப்பிரச்சினையில் மத்திய - மாநில அரசுகள் ஏன் இத்தனை அவசரப்படுகின்றன? என்பது புரியாத புதிராக இருக்கிறது.


அனைத்து மக்களின் கருத்துகளையும் அறிந்த பின்புதான் முடிவெடுக்க வேண்டும். தமிழக அரசும் தன்னுடைய உரிமையை மத்திய அரசிடம் விட்டுக் கொடுக்கக் கூடாது. மக்கள் உணர்வுகளின் அடிப்படையில்தான் எந்த முடிவையும் மேற்கொள்ள வேண்டும்

 

 

மரபு அணு மாற்றுக் கத்திரி: மத்திய அமைச்சருடன் மறுமலர்ச்சி தி.மு.கவினர் நேருக்கு நேர் வாதம்! (10.02.2010)

மரபணு மாற்றுக் கத்திரியை இந்தியாவில் அனுமதிப்பதா? வேண்டாமா? என்பது பற்றிய கருத்துக் கேட்புக் கூட்டம் பெங்களூரில் 6.2.2010 அன்று நடைபெற்றது. அதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சி.கிருஷ்ணன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் வே.ஈசுவரன், மறுமலர்ச்சி கண்ணன், கன்னிமுத்து, கந்தசாமி ஆகியோரும் கலந்துகொண்டனர். எதிர்ப்புக் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்ற அரங்கின் நுழைவுவாயிலில், மறுமலர்ச்சி தி.மு.க. சார்பாக பி.டி.கத்திரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரிய பேனர் வைக்கப்பட்டது. அதைப் பார்த்ததும், பி.டி.கத்திரிக்கு ஆதரவாக கம்பெனிக்காரர்கள் கூட்டிக் கொண்டு வந்த கூலிப்பட்டாளம் கூச்சல் எழுப்பினர். ஆனால், ம.தி.மு.க.வினர் அதே இடத்தில் அமைதியாக நின்று கொண்டு இருந்தனர். சிறிதுநேரத்தில் எதிர்ப்பாளர்கள் கலைந்து சென்றுவிட்டனர்.

மத்திய அமைச்சர் மாண்புமிகு ஜெயராம் ரமேஷ் அவர்கள் சுமார் 10 மணிக்கு அரங்கத்துக்கு உள்ளே வந்து அமர்ந்தார். அவரிடம் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் கடிதத்தை டாக்டர் சி.கிருஷ்ணன் அவர்கள் கொடுத்தார்.

அதை வாங்கியதுமே, ‘நான் அரங்கத்துக்கு உள்ளே நுழையும்போதே வைகோ அவர்களின் படத்துடன் பேனர் இருப்பதை பார்த்தேன். உங்கள் கடிதத்தை கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன்’ என்று கூறினார். பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் நலம் விசாரித்தார்.

இந்தக் கருத்து அரங்கில், தமிழ்நாட்டில் இருந்து சென்று எதிர்ப்புக் கடிதம் கொடுத்த ஒரே அரசியல் இயக்கம் மறுமலர்ச்சி தி.மு.க.தான்.


டாக்டர் சி.கிருஷ்ணன் அவர்கள், ‘மரபு அணு மாற்று உணவுப் பொருட்கள் மனிதனை எவ்வகையில் எல்லாம் பாதிக்கும் என்பதை சரியாக ஆராயாமல் அதனை அனுமதிப்பது மிகப்பெரிய தீங்கு’ என்று நமது கருத்தை பதிவு செய்தார்.

சென்ட்ரல் கல்லூரி வளாகத்தில், ஜனன ஜோதி அரங்கத்தில் கூட்டம் நடைபெற்றது. ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், மாணவர்கள் பல்வேறு சமுதாய அமைப்பை சார்ந்தவர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் என சுமார் 700 பேர் வந்து இருந்தனர். சுமார் மூன்றரை மணி நேரம் கருத்துக் கேட்பு நிகழ்வு நடைபெற்றது. விவசாய ஆராய்ச்சியாளர்கள் பலரும் பி.டி.கத்திரிக்கு எதிர்ப்பு தெரிவித்தது மிகவும் வியப்பாக இருந்தது.

கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது முன்னாள் பிரதமர் தேவேகெளடா அவர்களும் அரங்கத்துக்கு வந்து, முடியும்வரை அமர்ந்து இருந்தார். சுமார் 2 மணி அளவில், அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அவர்கள், ‘கருத்துக் கேட்பு முடிந்துவிட்டது என்றும் என்னால் முடிந்தவரை கருத்துக்களைக் கேட்டுவிட்டேன். இருக்கின்ற விபரங்களை வைத்து எனது அமைச்சர் அவை முடிவு எடுக்கும்’ என்று கூறிவிட்டு முடிவுரையைத் தொடங்கினார்.

உடனே மறுமலர்ச்சி தி.மு.க. மாநிலப் பொறியாளர் அணித் துணை அமைப்பாளர் வே.ஈஸ்வரன் அவர்கள் குறுக்கிட்டு, “நீங்கள் தமிழகத்தைப் புறக்கணிக்கிறீர்கள். தமிழகத்திலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது” என்று ஆணித்தரமாகக் கூறினார்.

அமைச்சர் திடுக்கிட்டு பின்பு சுதாரித்துக்கொண்டு, 7 இடங்களில் என்னென்ன காரணத்துக்காக நடத்தப்பட்டது என்பதை விளக்கினார்.


அமைச்சர் விளக்கம் கொடுத்து முடிந்தவுடன், அதைமறித்து மீண்டும் ஈசுவரன் அவர்கள் “இந்தியாவிலேயே தமிழகத்தில் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம் தான் (TNAU) 4 வகை பி.டி. கத்திரியை தயாரித்து (மான்சாண்டோவின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி) வைத்து இருக்கிறது. அதற்கான ஆராய்ச்சியும், களப்பரிசோதனையும் கோவையில்தான் நடைபெறுகிறது. ஆனால், அதற்கு மட்டும் தமிழகத்தைத் தேர்ந்து எடுத்து இருக்கிறீர்கள். தமிழக மக்களின் கருத்தை மட்டும் கேட்காமல் எப்படி முடிவு எடுக்கிறீர்கள்?” என்று வாதிட்டார்.

தொடர்ந்து அமைச்சரை பேசவிடாமல் குறுக்கீடு செய்வதாகக்கூறி, அவரை அரங்கத்தை விட்டு காவலர்கள் வெளியேற்றி விட்டனர். பின்பு டாக்டர் சி.கிருஷ்ணன் அவர்களும் மற்ற அனைவரும் அரங்கத்தில் இருந்து வெளியேறினர்.

மரபு அணு மாற்று கத்திரி வெளிவருவதை தடுக்கும் முயற்சியில் மறுமலர்ச்சி தி.மு.க. தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது. எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டிய இடத்தில் கடுமையாகவும் முழுமையாகவும் பதிவுசெய்தனர்.
 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)