'ஓய்வுக்குப் போற அய்யாவே... எங்களுக்கும் ஓய்வு கொடுங்க..!' முதல்வருக்கு கோவணாண்டி உருக்கமான கடிதம்! - பசுமை விகடன்

Issues: Economy, Farmers, Rural

Region: Tamil Nadu

Category: Articles

Date: 
Sun, 07/02/2010

'ஓய்வுக்குப் போற அய்யாவே... எங்களுக்கும் ஓய்வு கொடுங்க..!'
முதல்வருக்கு கோவணாண்டி உருக்கமான கடிதம்!

தமிழுக்குச் செம்மொழி மாநாடு நடத்தும் வாழும் வள்ளுவர், தமிழர்களின் தலைமகன், டாக்டர். கலைஞர், தமிழக முதல்வர், முத்தமிழ்க் காவலர், மு. கருணாநிதிக்கு, பஞ்ச பராரி கோவணாண்டி வணக்கம் சொல்லிக்கிறேன்.
 
'எப்பவும் எகனை, மொகனையாதானே பேசுவ... இப்ப இப்படி ஒரேயடியா பம்முறே'னு கேக்குறீங்களா.?


என்ன பண்றதுங்கய்யா... விவசாயியா பொறந்து தொலைச்சுட்டோமே. நாங்களும் வாழணுமில்லையா. இவ்வளவு நாளும் கழுதையா கத்திப் பாத்தும், காது கொடுத்து கேட்க நாதியில்ல.

'கட்டுப்படியான விலையில்ல'னு கத்தினோம் கண்டுக்கல... 'குளத்துல கும்மியடிக்கிற திட்டம் போட்டதால வெள்ளாமை வேலைக்கு ஆளில்ல'னு சொன்னோம் காதுல போட்டுக்கல.


எல்லாரும் அம்மணமா போற ஊருல, நாங்க மட்டும் ஆடையோடு போயி என்னத்த செய்யப் போறோம். அதனால கோவணாண்டிகள்ல்லாம் நல்லா யோசிச்சு தீர்க்கமா ஒரு முடிவுக்கு வந்திருக்கோம். அதாவது, உங்ககிட்ட இந்தத் தடவை சண்டை போட வரலீங்க. சகாயம் செஞ்சு கொடுங்கனுதான் கேக்க வந்திருக்கேன். இதை மட்டும் செஞ்சு கொடுத்துட்டீங்கனா... நீங்க விருப்பப்பட்டு ஓய்வுக்குப் போறதுக்கு முன்னயே... நாங்களும் ஓய்வெடுக்கப் போயிடுவோம்.
 
மனசொடிஞ்சு போய் சொல்றேங்கய்யா, வெவசாயம் செய்ய நாங்க தயாராயிருந்தாலும், கூடமாட வேலை செய்ய ஆளுக இல்லீங்க. பாதி பயபுள்ளைக படிக்குறப்பவே குடிக்கப் பழகி, பதராப் போயிடுதுங்க. ஊருக்குள்ள இருந்த பொடுசு, பொட்டுக எல்லாத்தையும் வண்டியை வச்சு வாரிகிட்டு போயிடுறாங்க கடைக்காரங்களும், மில்லுக்காரங்களும். மிச்சமீதியிருக்குற புள்ளைகளும் பெத்தவங்களை விட்டுட்டு பட்டணத்தைப் பாக்க பறந்துடுச்சுங்க. வேற வழியத்து என்னைய மாதிரி கிடக்கற ஒரு சிலர்தான் 'வெள்ளாமை பண்றோம்' பேர்வழினு விழி பிதுங்கி நிக்கிறோம்.
 
'ஏல்ல்லேய்....இது வேலை உறுதித் திட்டமா..? இல்லை விவசாயத்தின் இறுதி திட்டமால்லே'னு சாலமன் பாப்பையா தலைமையில பட்டிமன்றம் வெச்சுதாங்க முடிவு பண்ணணும். அந்தளவுக்கு மோசமா போயிக்கிட்டு இருக்குதுங்க ஒங்க திட்டமெல்லாம். ஒரு பக்கம்,
 
'மக்களுக்கு வேலை கொடுக்கிறேன் பேர்வழி'னு திட்டம் போட்டு வேலை கொடுக்கறீங்க. இன்னொருப் பக்கம், 'விவசாய வேலைக்கு ஆள் இல்லையா... இயந்திரத்தைப் பயன்படுத்துங்க'னு அறிவுரை சொல்றீங்க. இது எகனைக்கு மொகனையா தெரியலீங்களா அய்யா.


அட, ச்சே... பழக்க தோஷத்துல ஒங்களோட மல்லுக்கட்ட ஆரம்பிச்சுட்டேன். அதை விட்டுத் தள்ளுங்க. எங்களுக்கு ஒரு சகாயம் செஞ்சு கொடுங்க... அதுபோதும். அதாவது... இலவசமா அடுப்பு, கேஸ், டி.வி, அரிசி, பருப்பு, பலசரக்குனு பலதும் கொடுக்கறீங்க.


இத்தனையும் செஞ்ச நீங்க, சட்டுபுட்டுனு ஓய்வெடுக்கப்போறேன்னு வேற சொல்லிட்டீங்க. ஒங்களோட ஓய்வு காலம், ஒளிமயமா இருக்கணும்னா... போற போக்குல எங்களுக்கும் ஓய்வு கொடுத்துட்டீங்கனா.. கோடி புண்ணியமா போகும்!


'சரி... இந்தா புடிச்சுக்கோ'னு எங்களுக்கும் அரிசி, பருப்பை அள்ளிக் கொடுத்துடாதீங்க. எங்களுக்கெல்லாம் ஆக்கித் திங்கற அளவுக்கு இப்ப சத்து இல்லீங்க. அதோட ஒங்க டி.வி., பேரன் டி.வி., பகையாளி டி.வி., பங்காளிங்க டி.வி.னு எல்லாத்தையும் பார்த்து முடிக்கவே நேரம் போதலீங்க. அதனால மொத்த நிலத்தையும் நீங்களே பட்டா பண்ணிக்கோங்க. எங்களுக்கு மட்டும்... காலையில ஆறு மணிக்கு ஆப்பமும் காப்பியும், மத்தியானம் ரெண்டு மணிக்கு, கோழி பிரியாணியும் தால்ச்சாவும், சாயந்திரம் 8 மணிக்கு சப்பாத்தியும் குருமாவும்னு வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்கறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க.


'ஏம்ப்பா கோவணாண்டி இதெல்லாம் சாத்தியமா?னு எதிர்க்கட்சி மாதிரி கேள்வி கேட்டுப்புடாதீங்க. கொறைஞ்சது 150 நாள் தண்ணி பாய்ச்சி, பண்டுதம் பாத்து, வேலையாளுக கையைக் காலை புடிச்சு களையெடுத்து, கதிரறுத்து, பதரு பாத்து, பக்குவம் பாத்து அரைச்சா பாதிக்கு பாதி கிடைக்குற அரிசியையே... கிலோ ஒரு ரூபாய்க்கு கொடுக்க முடிஞ்ச உங்களுக்கு, இதெல்லாம் சும்மா ஜுஜூபிதான்.


பின்னே... நாங்களும் எத்தன நாளைக்குத்தான் நாயாட்டம், பேயாட்டம் அலையுறது. கடைசி வரைக்கும் வெயிலுக்கு நீர் மோரும்... கூழுக்கு வெங்காயமும்தானே நாங்க கண்டது. உங்க காலத்துலயாவது எங்களுக்கு விடிவு பிறக்கட்டுமே...


அதனால, மத்திய அரசோட 'குளத்துல கும்மியடிக்குற திட்ட'த்தைத் தூக்கிச் சாப்பிடுற மாதிரி, 'வீடு தேடி சோறு, ஓய்வு கால பரிசு'னு புதுத் திட்டத்தை அறிவிச்சிட்டீங்கனா... காலுமேல காலு போட்டுக்கிட்டு, கஷ்டம் இல்லாம காலத்தை ஓட்டிடுவோம்.


நீங்க மட்டும் இந்த 'உடனடி உணவு வழங்கும்' திட்டத்தைத் தொடங்கிப் பாருங்க... ஓட்டு வங்கி, உலக வங்கி கணக்கா பெருகலீனா... என்னக் கேளுங்க. இதை செஞ்சுட்டீங்கனா.. உங்களுக்கு மட்டுமல்ல... உங்க பேரன் இன்பநிதியோட கொள்ளுப்பேரன் காலத்துக்கு அப்புறமும்... ஒங்க பரம்பரைக்கே நன்றி உள்ளவங்களா இருப்போம். இது, எண்ணூறு வருஷத்துக்கு முன்ன காணாம போயி, 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் மூலமா வெளியில வந்திருக்கற தஞ்சாவூரை ஆண்ட ராஜராஜன் பரம்பரை மேல சத்தியம்!

இப்படிக்கு
கோவணாண்டி

 

நன்றி  பசுமை விகடன்

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

செய்திகள் ஒளிபரப்பாகும் நேரம்:
காலை 8 மணி; பிற்பகல் 1.30 மணி; முன்னிரவு 8 மணி; இரவு 10 மணி

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)