உண்மையை ஒப்புக்கொண்ட கருணாநிதி; கேரளத்தார் கேலி! வைகோ அறிக்கை

Issues: Economy, Farmers, Rural

Region: Madurai - Urban, Madurai - Rural, Ramanathapuram, Theni, Tamil Nadu

Category: Headlines, Press Releases

Date: 
Sat, 06/02/2010

உண்மையை ஒப்புக்கொண்ட கருணாநிதி; கேரளத்தார் கேலி!
வைகோ அறிக்கை

முல்லைப்பெரியாறு பிரச்சினை மீதான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் பராசரன் அவர்கள் முன்வைத்த விவாதங்கள், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதாக அமையாமல், கேரள அரசின் நோக்கத்துக்குப் பயன்படும் விதமாக இருந்ததால்தான், அவரைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டேன்.


‘கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு, தமிழக அரசுக்கு ஆட்சேபணை ஏதும் உண்டா?’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டபோது, ‘தமிழக அரசின் வழக்கறிஞர் ‘ஆட்சேபணை இல்லை’ என்றும், புதிய அணையின் கட்டுப்பாட்டு நிர்வாகத்தைத் தமிழகத்துக்குத் தர வேண்டும்’ என்றும் கூறியதாக, தமிழ் நாளேடுகளிலும், ஆங்கில நாளேடுகளிலும் செய்திகள் வெளியாகி உள்ளன.


‘புதிய அணைக்குத் தமிழகம் ஒப்புதல்’ என, கேரள ஏடுகளில் செய்தி வெளியாகி உள்ளது.


‘சட்டப்படி 999 ஆண்டுகளுக்கு நமக்கு உரிமை உள்ள, பென்னி குக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையின் நிர்வாகத்தையே தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று, மத்திய அரசை நிர்பந்தித்த கேரளம், தற்போது அணையைப் பராமரிக்கும் பணிகளுக்கும் முட்டுக்கட்டை போட்டதுடன், தமிழகம் பணம் செலுத்தியபின்னும், மின்சாரம் கூட வழங்காமல், நமது அணையை உடைப்பதற்கும் அதிகாரம் உண்டு என்று அக்கிரமமான ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது.


நமது அணையை உடைப்பதற்காகவே, புதிய அணை கட்ட முற்பட்டு இருக்கும் கேரளத்திடம், புதிய அணை நிர்வாகத்தைத் தமிழகத்துக்குத் தரச் சொல்லிக் கேட்டது, மிகப்பெரிய தவறான வாதம் ஆகும். புதிய அணைக்குத் தமிழக அரசு ஆட்சேபணை இல்லை, எதிர்ப்பு இல்லை என்ற கருத்தைத்தான், ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்து, முதல் அமைச்சர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்கூட, இந்த உண்மையை மறைக்க முடியவில்லை.


முல்லைப்பெரியாறுஅணை உடைந்தால் பாதிப்பு உண்டா? என்று நீதிபதிகள் கேட்டதற்கு, கேரள அரசின் வழக்கறிஞர், ‘பாதிப்பு என்பது பூஜ்யம்தான்’ என்று கூறியவுடன், அதனை மறுத்து, ‘நீர்மட்டம் குறைக்கப்பட்டதால் இதுவரை தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டு உள்ள பாதிப்பையும், அணையை உடைத்தால், தென்தமிழ்நாட்டுக்கு ஏற்படக்கூடிய கடுமையான இழப்பையும், தமிழக அரசு வழக்கறிஞர் எடுத்துக்கூறத் தவறி விட்டார் என்று நான் கூறி இருந்தேன்.


‘புதிய அணைக்குத் தமிழக அரசு ஆட்சேபணை இல்லை’ என்று கேரளத்தின் அதிகாரவர்க்கம் கூத்தாடியது என்பதால்தான், கேரளத்தைச் சேர்ந்தவர்கள், பெயரைச் சொல்லாமல், முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் அப்பா
ஸ் அவர்களிடம் கைத்தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘புதிய அணையைத் தமிழகம் வரவேற்று விட்டது; அணை கட்டும் கால்கோள் விழாவுக்கு, வைகோவும் நீங்களும் வாருங்கள்’ என்று கைத்தொலைபேசியில் கேலியும், கிண்டலும் செய்து உள்ளனர்.


79 ஆம் ஆண்டு உடன்பாடு செய்தபோது, ‘மத்திய அரசு பங்கு ஏற்றதா? என்று நீதிபதிகள் கேட்டபோது, ‘தமிழ்நாடு, கேரளா அரசுகளுக்கு இடையில்தான் உடன்பாடு; அதில் மத்திய அரசு இடம் பெறவில்லை’ என்று வழக்கறிஞர் பராசரன் கூறியதாகத்தான் ஏடுகளில் செய்தி வெளியாகி உள்ளது. அப்படி அவர் கூறி இருக்காவிடில், ‘தமிழக அரசு ஏன் அதை மறுக்கவில்லை?


என்னுடைய அறிக்கைக்குப் பின்னர் விழித்துக்கொண்டு, நேற்று நடைபெற்ற விவாதத்தில், ‘தற்போதைய அணையை உடைக்கக்கூடாது’ என்று பராசரன் முன்வைத்த கருத்துகளைத்தான் முதல்வர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார். வழக்கறிஞர் பராசரன் அவர்களின் திறமை பற்றியோ, அனுபவம் பற்றியோ குறைத்து மதிப்பிட்டு நான் விமர்சிக்கவில்லை. நம்முடைய வாழ்வாதாரப் பிரச்சினயில் நம் உரிமையை நிலைநாட்டும் கடமையில் தவறினார் என்பதால் குற்றம் சாட்டினேன்.


மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கைக் கேரள அரசு தொடர்ந்து வாய்தா வாங்கியபோதெல்லாம் அதை எதிர்த்து, வழக்கை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு வாதாடவில்லை.

கடைசியாக, தங்கள் நோக்கம் நிறைவேறாது என்று எண்ணி, அரசியல் சட்ட அமர்வுக்கு வழக்கை மாற்றச் சொல்லி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியபோது, முற்பகலில் அதை வாய்மொழியாக ஆட்சேபித்த வழக்கறிஞர் பராசரன், நண்பகல் உணவு இடைவேளைக்குப் பின், எழுத்து மூலமாக இசைவு அளிப்பதற்கு, யார் காரணம்?


தமிழக முதல்வரின் கருத்தைக் கேட்டுத்தான், வழக்கறிஞர் அதற்கு உடன்பட்டு உள்ளார்.


அன்றைய அண்ணா தி.மு.க. அரசு தொடுத்து இருந்த வழக்கில், 2006 பிப்ரவரி 27 இல் உச்சநீதிமன்றம் நியாயமான தீர்ப்பு வழங்கியதற்குப்பின்னர், அதைக் காலில் போட்டு மிதித்துவிட்டு கேரளச் சட்டமன்றம் ஒரு சட்டத்தை இயற்றியதால், உடனடியாக அ.தி.மு.க. அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்குதான், இப்போது நடக்கிறது.


2006 இல் கேரளத்தில் ஆட்சிக்கு வந்த முதல் அமைச்சர் அச்சுதானந்தன், ஜூன் 3, ஆகÞட் 30 ஆகிய நாள்களில் டெல்லி சென்று, பிரதமரைச் சந்தித்து, ‘முல்லைப்பெரியாறு அணை உடையும் என்றும்; அணை நிர்வாகத்தைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்றும் வற்புறுத்தியபோது, அந்த மூன்று மாத காலமும், தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, நம் உரிமையைக் காக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. 2006 நவம்பரில் வெள்ளம் வந்தபோதும், 136 அடிக்கு மேல் நீர் மட்டத்தை உயர்த்தத் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.


முல்லைப்பெரியாறு பிரச்சினையில், தமிழகத்தின் உரிமையை முதல்வர் கருணாநிதி காக்கத் தவறியபோதும், மறுமலர்ச்சி தி.மு.க., கம்பத்தில் மறியல் நடத்தியபோதும், அதற்குப்பிறகு தேனியில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போதும், மத்திய அரசைக் கண்டித்துத்தான், போராட்டம் நடத்தினோம். முல்லைப்பெரியாறு விழிப்பு உணர்வுப் பிரச்சாரத்தை, இடைவிடாமல் எண்ணற்ற ஊர்களில் நான் மேற்கொண்டபோதும், தமிழக அரசை விமர்சிக்கவில்லை.


இதில், குறுகிய அரசியல் நோக்கம் எனக்கு எள் அளவும் கிடையாது. கேரள மக்களுடன், நேசமும், நல்ல உறவும் கொள்ளவே விரும்புகிறோம் என்பதையும், அம்மாநில மக்களிடம் பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுகின்ற தீங்கான போக்கை எதிர்த்தும், தென் தமிழ்நாட்டின் வருங்காலம், அடியோடு நாசமாகிவிடக் கூடாதே என்ற கவலையோடும், அறவழியில் போராடி வருகிறோம் என்பதையும், தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.


இதனால், என் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில்தான், ‘உங்களிடம் ஒரு வைகோ இருந்தால், எங்களுக்கு நூறு வைகோக்கள் இருக்கிறார்கள்’ என்று பேசினார் கேரள முதல்வர் அச்சுதானந்தன்.


உண்மை இவ்வாறு இருக்க, என் மீது களங்கம் சுமத்தும் நோக்கத்தில், தமிழக முதல்வர் கருணாநிதி, என் பெயரைக் குறிப்பிடாமல், கேரள அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் சென்று, தமிழக அரசுக்கு எதிராக எப்படிச் செய்தி வெளியிடுவது என்று கேட்டு அறிந்து, கேரளாவுக்கு ஆதரவாகத் துணைபோகிறார்கள் என்று, புழுதிவாரித் தூற்றி இருக்கிறார்.


இது வழக்கமாக அவர் சுமத்தும் பழி. பொய்ப்பழி சுமத்துவது அவருக்குக் கைவந்த கலை என்பது, உலகத் தமிழர்கள் அறிந்த உண்மை!


உச்சநீதிமன்றத்தில் பராசரன், தமிழக உரிமைக்கு உறுதியாக வாதாடாமல், விட்டுக்கொடுத்துப் பேசி உள்ளார். முதல் அமைச்சரின் மனநிலையை, கருத்தை அறிந்ததால்தான், அவ்விதம் செயல்பட்டு இருக்கிறார். பராசரன் மீது பழிகூறுவது அல்ல என் நோக்கம். அவர் இப்படிப் பேசியதற்கு, முதல் அமைச்சர்தான் பொறுப்பு ஆவார்.


கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த அனுமதி கேட்டு, மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகத்துக்குக் கோரிக்கை அனுப்பியது. அந்தத்துறைக்கு அப்போது அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்த தி.மு.க. அமைச்சர்கள் டி.ஆர். பாலு,  
ஆ. இராசா இருவருமே, ‘ஆய்வுக்கு அனுமதி இல்லை’ என்று ஏன் மறுக்கவில்லை?


தமிழ்நாட்டுக்கு ஏற்படும் கேடுகளைப் பற்றிக் கவலைப்படாமல், தனது அமைச்சர்களைக் கடமை ஆற்ற விடாமல் செய்ததும் கருணாநிதிதான்.


பின்னர், மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஆய்வுக்கு அனுமதி கொடுத்தார். அதேவேளையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து, தி.மு.க. அமைச்சரின் அலுவகத்தில், சி.பி.ஐ. இரண்டு நாள்கள் முழுமையாகச் சோதனை நடத்தி, ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றதால் ஆவேசம் அடைந்த கருணாநிதி, ‘முல்லைப்பெரியாறு ஆய்வுக்கு அனுமதி கொடுத்த மத்திய அரசைக் கண்டித்து, தி.மு.க. சார்பில் கண்டனக் கூட்டம்’ என்றும்; தானே அதில் முழங்குவேன்’ என்றும் அறிவித்தார். ஒன்றிரண்டு நாள்களுக்கு உள்ளாகவே, கவைக்கு உதவாத காரணத்தைச் சொல்லி, அந்தக் கூட்டத்தையும் ரத்து செய்து விட்டார்.


இவையெல்லாம், தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகமே அன்றி, வேறு என்ன?

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

செய்திகள் ஒளிபரப்பாகும் நேரம்:
காலை 8 மணி; பிற்பகல் 1.30 மணி; முன்னிரவு 8 மணி; இரவு 10 மணி

Events Calendar

S M T W T F S
 
 
 
1
 
2
 
3
 
4
 
5
 
6
 
7
 
8
 
9
 
10
 
11
 
12
 
13
 
14
 
15
 
16
 
17
 
18
 
19
 
20
 
21
 
22
 
23
 
24
 
25
 
26
 
27
 
28
 
29
 
30
 
 
 
 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)