முல்லைப் பெரியாறு சிக்கலில் மக்களை ஏமாற்றாதீர்கள்! உங்கள் துரோகத்தால் தென்தமிழ்நாடு பாழாகும்!! மதுரை ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி மீது வைகோ குற்றச்சாட்டு

Issues: Economy, Farmers, Rural

Region: Dindigul, Madurai - Urban, Madurai - Rural, Ramanathapuram, Sivagangai, Theni, Tamil Nadu

Category: Headlines, Speeches

Date: 
Fri, 12/02/2010

முல்லைப் பெரியாறு சிக்கலில் மக்களை ஏமாற்றாதீர்கள்! உங்கள் துரோகத்தால் தென்தமிழ்நாடு பாழாகும்!! மதுரை ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி மீது வைகோ குற்றச்சாட்டு

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு தீங்கு இழைக்கும் மத்திய அரசையும், கேரள அரசையும் கண்டித்து, 9.02.2010 அன்று மதுரை தல்லாகுளத்தில் நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தில் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...


முக்கியமான ஒரு காலகட்டத்தில் மதுரை மாநகரில், இந்த அறப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. நீங்கள் பசியைப் பொருட்படுத்த மாட்டீர்கள், வெயிலைப் பொருட்படுத்த மாட்டீர்கள், மழையைப் பொருட்படுத்த மாட்டீர்கள் என்பதை, நவம்பர் 14ஆம் தேதி மாநகர் மதுரையில் முல்லைப்பெரியாறு உரிமைக்காக நடத்திய உண்ணாவிரத அறப்போராட்டத்தின் போது, இம்மதுரை மக்கள் பார்த்தார்கள். காலை முதல் அந்திப் பொழுதும் கடந்து, முன்னிரவு வருகின்ற நேரம் வரையும் பல்லாயிரக்கணக்கிலே பசி தாகத்தைப் பொருட்படுத்தாமல் நீங்கள் அதிலே கலந்து கொண்டீர்கள்.

வெயில் அடித்த வேளையிலும் நீங்கள் கலைந்து செல்லவில்லை, பிற்பகல் பெருமழை பெய்தபோதும் அந்த மழையிலும் தொப்பலாக நனைந்து கொண்டு, நீங்கள் அந்த அறப் போராட்டத்தில் கலந்து கொண்டதை அனைவருமே அறிவார்கள். ஒரு சோதனையான நேரத்திலே, இந்தப் போராட்டக் களத்திலே நாம் அனைவரும் கூடி இருக்கிறோம். நம்முடைய துணைப் பொதுச் செயலாளர்கள் சார்பாக, அனைவரின் சார்பாகப் பேசுவதற்காக நின்றுகொண்டு இருக்கிறேன். தன்னலம் அறியாத தியாக தீபங்கள்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கண்மணிகள். நாட்டு நலனுக்காக, தமிழக நலனுக்காக, தமிழர் உரிமைக்காகப் போராடக்கூடியவர்கள். இன்றைக்கு இந்த மதுரையிலே ஒரு படாடோபமான ஆடம்பரத் தம்பட்டம் அடிக்கின்ற விழாவை, இந்த மதுரை நகரத்தின் கட்டடங்களை எல்லாம் மூடி மறைத்து, மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரங்கள் கூட கண்ணுக்குத் தெரியாத வகையிலே ஒரு ஆடம்பர விளம்பர, வெளிச்ச விழா இங்கே நடத்தப்பட்டது. நான் அதைப் பற்றி எல்லாம் பேசி என்னுடைய நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.


ஆனால் இந்தப் போராட்டம், கட்சிக்காக நடத்தப் படுகின்ற போராட்டம் அல்ல, கட்சிக்கு ஆள் திரட்டவோ, கட்சிக்கு ஆதரவு சேர்க்கவோ நாங்கள் நடத்துகின்ற போராட்டம் அல்ல. நம்முடைய வருங்கால வாழ்வு, அழிந்து போகக்கூடாது என்ற கவலையிலே நாங்கள் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். ஆபத்து வந்ததற்குப் பிறகு அழுது புலம்பிப் பயன் இல்லை, முல்லைப் பெரியாறு அணையை கேரளம் உடைத்து விட்டால் அதற்குப் பிறகு, எல்லைமீறிப் போய்விடும் நிலைமை. யாரும் யாரையும் தடுக்க முடியாது, காவல் துறை கட்டுப்படுத்த முடியாது. கலவரம் வரும், விபரீதங்கள் விளையும். எந்தக் கேரள மக்களை நாம் நேசிக்கிறோமோ, அவர்களுக்கு எல்லாப் பொருட்களையும் தருகிறோம் என்று சொல்லுகிறோமோ, அதே கேரள மக்கள் வேதனைப்படுகின்ற நிலைமை ஏற்படும். அதை யாரும் தடுக்க முடியாது.


குடிப்பதற்கே மதுரையிலே தண்ணீர் இல்லாமல் போனால், விவசாயம் செய்வதற்கே தண்ணீர் இல்லாமல் போனால், நம் வாழ்வையே அழிப்பதற்கு கேரள அரசு தான் ஏற்பாடு செய்துவிட்டது என்று நினைக்கிறபோது, அந்த அப்பாவி மக்கள் மீதும் கோபம் ஏற்படும். கேரளாவில் உள்ள மக்கள் மீது ஒரு போராட்டம் வருகின்ற போது அந்தப் போராட்டம் ஒரு விபரீத கட்டத்தை அடைகின்ற போது யாரும் தடுக்கமுடியாது. ‘செளரி செளரா’விலே நடக்கவில்லையா? அண்ணல் காந்தி அவர்கள் அந்தப் போராட்ட வடிவத்தைத் தந்தாரா? ஏன் ‘செளரி செளரா’ போராட்டம் வந்தது? அன்றைக்கு காவல் துறையினர் சுட்டு எரிக்கப்பட்டு, காவல் நிலையம் சூறையாடப்பட்டடது. அன்றைக்கு அறவழியில் சத்தியாகிரகம் நடத்தியவர்கள் கூட இதைத் தடுக்க முடியாது என்று சொன்னார்கள். அது போல ஒரு நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது. அதனால் கேரள மக்களுக்கும் துன்பம், நமக்கும் துன்பம். அதற்குப் பிறகு போராட்டங்கள் நடந்து, விபரீதங்கள் விளைந்து நமக்கு என்ன வரப் போகிறது? அழிவு அழிவுதானே? நமக்குத் தண்ணீர் வருமா பிறகு? ஒருகாலும் ஒரு சொட்டுத் தண்ணீர் கிடைக்காது. இந்தப் போராட்ட உணர்வோடுதான் போராடுகிறோம்.


இந்த மேடையிலே இயக்கத்தின் உயிர்த்துடிப்பாக இருக்கக்கூடிய முன்னோடிகள் எல்லோருமே இருக்கி றோம். என்னுடைய ஆரூயிர்ச் சகோதரன், கழகத்தின் துணைப் பொது செயலாளர் மல்லை சத்யா இல்லத்தில் நேற்றைக்கு ஒரு துக்கம், நடக்கக்கூடாத துயரம். காலையிலே கவிஞர் கோமகன் கோட்டை சாமியின் மகள் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு, நேற்றைய தினம் 8ஆம் தேதி, கடந்த ஆண்டு ஈழத் தமிழர்களுக் காகத் தீக்குளித்து மடிந்தாரே அமரேசன், அவரது நினைவாக ‘மூலக்கொத்தளம்’ சுடுகாட்டுக்குச் சென்று, கல்லறை பீடத்துக்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியை நடத்திவிட்டு, நான் மதுரைக்குப் புறப்பட்டுக் கொண்டு இருக்கின்ற நேரத்திலே அந்தச் செய்தி வந்தது.


சத்யாவின் உடன் பிறந்த சகோதரி மகள், வாழவேண்டிய இளம் வயதிலே இறந்து போனார். துயரமான ஒரு மரணம். கீழ்பாக்கம் மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஏற்பாடு செய்த அறப்போராட்டத்துக்குப் போய்விட்டார் மல்லை சத்யா. காலை 9,10 மணிக்கு அவருக்குச் செய்தி வருகிறது, ஒரு பெரிய துயரமான மரணம், ஒரு இளம் பெண், இரண்டு குழந்தைகளுக்குத் தாய் இறந்த செய்தி வந்த பிறகு, மருத்துவமனைக்குப் போய் சடலத்தைப் பார்க்காமல், ஆவடியிலே போய் அறப்போராட்டத்திலே கலந்து கொண்டு விட்டு, நான் வந்ததற்குப் பிறகுதான் மருத்துவமனை வளாகத்துக்கு என் சகோதரன் சத்யா அங்கு வந்தார்.


இதயத்துக்கு உள்ளே இருக்கின்ற கண்ணீரையும், வேதனையையும் அடக்கிக் கொண்டு வந்தார். நேற்று பிற்பகல் 7மணிக்கு அடக்கம் நடந்தது. குடும்பத்தின் தலைவனாக இருந்து அந்தக் குடும்பத்தைப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டிய ஒரு பொறுப்பிலே இருக்கிறவர், இன்று காலையிலே பார்க்கிறேன் மதுரைப் போராட்டத்துக்கு வந்தேன் என்று வந்து நிற்கிறார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, எதற்கு வந்தீர்கள்? என்று கேட்டேன். இதுதான் இயக்கம், இதுதான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். தன்னலம் இல்லாத இயக்கம். நாங்கள் இந்த மண்ணின் உரிமைக்காகப் போராடுவோம். நாங்கள் பிறந்த பொன்னாடு தமிழ் நாடு. இது என் புண்ணிய பூமி, இந்த மண்ணின் தமிழ் மக்கள் உரிமைக்காக நாங்கள் உயிரையும் துச்சமாக மதித்துப் போராடுவோம், பாடுபடுவோம்.


நம்முடைய கே.எம்.அப்பாஸ் அவர்கள் நீண்ட நேரம் உரையாற்றுவார் என்று கருதித்தான் இயக்க நிர்வாகிகள் யாரும் பேசவில்லை. ஆனால், அவர்களுக்கும் சேர்த்து நான் பேசிக்கொள்ளட்டும் என்று கருதி, அவர்கள் பேச்சை முடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டார்கள்.


இப்பொழுது சொல்லுகின்ற கருத்துகளை, துண்டுப் பிரசுரமே வெளியிட்டு இருக்கிறோம். தொலைவிலே இருந்து கட்சி எல்லைக்கு அப்பாற்பட்டு இந்தத் தமிழக உரிமையைக் காப்பாற்றவேண்டும் என்று நினைக்கக் கூடிய நண்பர்களுக்காகத்தான் நான் பேசுகிறேன்.


பத்திரிகையாளர்களே, உங்களுக்காக நான் பேசுகிறேன். ஏனெனில் இந்த முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேடுசெய்தது, கேரளாவின் ஒரு பத்திரிகைதான். இன்றைக்கும் கேடு செய்வதும் கேரளாவினுடைய அந்த ‘மலையாள மனோரமா’ பத்திரிகைதான். எனவே மக்களிடம் உண்மையை எடுத்துச் செல்லுகின்ற கடமையும், பொறுப்பும் பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும் இருக்கின்றது.


இப்பொழுது என்ன முக்கியமாக நமக்கு ஏற்பட்டு இருக்ககூடிய ஆபத்து? நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை. நம்முடைய கழுத்தை அறுக்கும் வேலையிலே கேரளம் ஈடுபட்டு இருக்கிறது. இதைத் தடுக்க, மதுரையிலே உண்ணாவிரதம், தேனியிலே கூட்டம், கண்டன ஆர்ப்பாட்டம், கம்பத்திலே மறியல் போராட்டம் என்று மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்த ஊர் ஊராகச் சென்று, கிராமம் கிராமமாகச் சென்று, ஒவ்வொரு கிராமத்திலேயும் திரண்ட பல்லாயிரக் கணக்கான மக்களிடத்திலே இந்த முல்லைப் பெரியாறிலே ஏற்பட்டு இருக்கும் இந்த ஆபத்தை எடுத்துச் சொல்லி, “வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்” என்ற வள்ளுவன் வாய்மொழியை நினைவுபடுத்தி, ஆபத்தைத் தடுக்கா விட்டால் எமது சந்ததிகள் எம்மை மன்னிக்காது என்று சொல்லி, மக்களைத் திரட்டிய அந்தப் பிரச்சாரப் பயணத்தில் நான் திமுக அரசை விமர்சிக்கவில்லை, கலைஞர் கருணாநிதி அவர்களை விமர்சிக்கவில்லை, விமர்சிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தும் நான் விமர்சிக்கவில்லை. என் நோக்கம் அது அல்ல.


திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆளும் அரசை எதிர்க்கிறான். ஆகவே முல்லைப் பெரியாறு பிரச்சனையைப் பேசுகிறான் என்று, அவர்கள் மனதில் ஒரு தவறான எண்ணம் ஏற்பட்டுவிட்டால், சொல்லும் கருத்து மனதில் பதியாது. அதனால், கலைஞர் கருணாநிதி அவர்களைப் பற்றி நான் விமர்சிக்கவில்லை, எனக்கு அது அவசியம் இல்லை.


இப்பொழுது என்னவென்றால், முதலுக்கே மோசம் வந்து விட்டது, ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதரைக் கடித்து என்ற பழமொழி எப்படி ஆகி விட்டது என்று சொன்னால், வேலி பயிரை மேய்கின்றது இங்கே. அவர்கள் கழுத்தறுத்து விடுவார்கள் என்று நினைப்பதற்கு முன்பு, இங்கே தலையிலே கல்லைப் போடுகின்ற வேலையை முதல் அமைச்சர் தலைமையிலே இருக்கக்கூடிய அரசு செய்கிறது.


முல்லைப் பெரியாறு பிரச்சனை - உச்ச நீதிமன்றத்திலே நடக்கிறது வழக்கு. அந்த வழக்கைத் தொடுத்தது அண்ணா திமுக அரசு. ஏனெனில் கேரளம் ஒரு அவசரச் சட்டத்தை, 2006 ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி ஒரு அக்கிரமமான சட்டத்தைக் கொண்டுவந்தவுடன் 31ஆம் தேதி அண்ணா திமுக அரசு உச்ச நீதிமன்றத்திலே வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கு தான் இப்பொழுது நடக்கிறது.


மூன்று ஆண்டுகளாக வழக்கு இழுத்தடிக்கப்பட்டு, 33 வாய்தா கேரள வக்கீல் கேட்டபோது, தமிழ்நாடு வழக்கறிஞர் வழக்கை ஒத்தி வைக்கக்கூடாது, உடனே விசாரிக்கவேண்டும் என்று கேட்கவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்து முடியப் போகின்ற நேரத்திலே, வழக்கினுடைய முடிவு உச்சநீதிமன்றம் ஒரு நியாயமான தீர்ப்பைத்தான் கொடுக்கும். ஏற்கனவே கொடுத்த தீர்ப்பைப் போல தான் இதுவும் ஒரு நியாயமான தீர்ப்பாக அமையும். அது தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்டும் தீர்ப்பாக அமையும். நாம் போட்ட சதித் திட்டமெல்லாம் தோற்றுப் போகும் என்று கருதிய கேரள அரசு, மிகவும் தந்திரமாக, சூழ்ச்சியாக இந்தக் கோர்ட்டில் விசாரிக்கக்கூடாது; ஐந்து நீதிபதிகள் உட்காருகின்ற அரசியல் சட்ட அமர்வில்தான் விசாரிக்க வேண்டும் என்று, கேரள வழக்கறிஞர் கேட்கிறார் நீதிமன்றத்திலே. தமிழக வழக்கறிஞர் பராசரன் எதிர்க்கிறார். இது காலையிலே நடக்கிறது. நண்பகல் உணவுக்குப் பிறகு அரசியல் சட்ட அமர்வு விசாரிக்கட்டும் என்று தமிழக வழக்கறிஞர் எழுதிக் கொடுக்கிறார்.


என்னுடைய குற்றச்சாட்டு, நண்பகல் உணவு இடைவேளையில் தமிழக முதலமைச்சரிடம் யோசனை கேட்டார். பின்னர் கலைஞர் கருணாநிதி சொன்னதன் விளைவாகத்தான் அவர் எழுதிக் கொடுத்து இருக்கிறார் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். இல்லை, நான் சொல்லவில்லை, அவராக எழுதிக்கொடுத்துவிட்டார் என்றால், இது மக்கள் நீதிமன்றம், இந்த மக்கள் நீதிமன்றத்தில் பிரஜைகளில் ஒருவராக வைகோ இந்தக் கேள்வியை வைக்கிறேன்.


நீங்கள் சொல்லாமல் பராசரன் எழுதிக் கொடுத்தாரா? அப்படியென்றால் அவர் கேரளாவுக்குக் கையாளாக மாறி விட்டாரா? இல்லை, இரண்டில் ஒன்று இருக்க வேண்டும். நீங்கள் சொல்லாமல் பராசரன் எழுதிக் கொடுத்தார் என்றால், அடுத்த நிமிடமே அவரைத் தூக்கி இருக்க வேண்டுமே?


எனவே, நீங்கள் சொல்லித்தான் அவர் எழுதிக் கொடுத்திருக்கிறார் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது, நன்றாகக் கவனிக்க வேண்டும். படித்தவர்கள் நிறையபேர் வந்து இருக்கிறீர்கள், புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஆட்சேபணை உண்டா? இது ஐந்து நீதிபதிகள் பெஞ்சிலே கேட்கிறார்கள்?


தமிழ்நாட்டு அரசு வழக்கறிஞர் சொல்லுகிறார். இதை நான் சொல்லவில்லை, கேரளப் பத்திரிகைகள் சொல்லுகிறது. நம்முடைய அப்பாÞ அவர்கள், கேரளாவிலே வெளியாகின்ற இந்த மாசம் 3 ஆம் தேதி வெளிவந்த மலையாளப் பத்திரிகைகள் எல்லாம் கொண்டு வந்து விட்டார். எனக்கு மலையாளம் வாசிக்கத் தெரியாது. அவர் ஓரளவு வாசிப்பார். அதை எடுத்து வந்து மொழிபெயர்த்து இங்கே கொடுத்து விட்டார்.


‘தமிழக அரசின் தடுமாற்றம், புதிய அணை கட்டுவதற்கு தமிழ் நாட்டு அரசு ஒப்புதல்.’


இது கேரளாவில் இருக்கக்கூடிய பத்திரி கைகள் வெளியிட்டது மட்டுமல்ல, கேரளாவிலே திருவனந்தபுரத்திலே வெளியாகின்ற இந்து பத்திரிகை வெளியிடுகின்ற செய்தி. எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தப் பத்திரிகை மீதும் கோபம் கிடையாது. இந்து பத்திரிகை நிர்வாகிகள் என்னைக் கோபித்துக் கொள்ளக் கூடாது, நீங்கள் கோபித்துக் கொள்ளமாட்டீர்கள். உங்களுக்கும் தமிழ்நாட்டு உணர்வு இருக்கும்.


ஆனால், திருவனந்தபுரத்தில் இருந்து வரக்கூடிய அந்த ‘இந்து’ பத்திரிகை இன்றைக்கு கேரளாவில் இருந்து ஒரு செய்தி கொடுத்து இருக்கிறார்கள். படித்தவர்களுக்காகச் சொல்லுகிறேன். அந்தச் செய்தியில், புதிய அணை கட்டு வதற்காக ஆய்வு நடத்த திருவனந்த புரத்திலே இருக்கக்கூடிய ‘லால்பகதூர் சாஸ்திரி’ பெயரிலே இருக்கக்கூடிய அறிவியல் தொழிநுட்ப மையம் “லால்பகதூர் சாஸ்திரி சென்டர் பார் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி” அதிலே இருக்கக்கூடிய நிபுணர்கள், புதிய அணை கட்டுவதற்காக ஆய்வு நடத்த அவர்கள் அந்த இடத்துக்குப் போய் விட்டார்கள், பாறைகளைத் துளைக்கின்ற கருவிகள் வாகனங்களில் கொண்டுபோய் இறக்கி வைக்கப்பட்டுள்ளன என்று திருவனந்த புரத்தில் செய்திகள் வெளியாகி உள்ளன.


மதுரையில் இருக்கின்ற ஒரு செய்தியாளருக்கு, வைகையில் தண்ணீர் வரவேண்டும் என்பதில் என்ன உணர்வு இருக்கிறதோ, அதேபோல, கேரளாவில் இருந்து செய்தி கொடுக்கின்ற செய்தியாளர் அனில், ‘இந்த இடத்தில் 1977 ஆம் ஆண்டிலேயே புதிய அணை கட்டுவதற்குத் தமிழக அரசும், கேரள அரசும் தேர்வு செய்த இடம் என்று ஒரு வரி எழுதி இருக்கிறார்.


ஏனய்யா விஷத்தைக் கக்குகிறீர்கள்? எதற்காகக் குடிக்கின்ற தண்ணீரில் விஷத்தைக் கலக்கிறீர்கள்? முல்லைப் பெரியாறு பிரச்சினையே, 1979 ஆம் ஆண்டு மலையாள மனோரமா இதழில் கட்டுரை எழுதியதற்குப் பின்னர்தானே? புதிய அணை கட்டுவதற்குத் தமிழக அரசு ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், இவர்கள் இப்படிச் செய்தியைக் கொடுக்கிறார்கள். புதிய அணை கட்டக் கேரளமும், தமிழகமும் அன்றைக்கே ஒப்புக்கொண்டதைப் போல ஒரு செய்தியை, திருவனந்தபுரம் செய்தியாளர் புதிதாக உருவாக்குகிறார்.


இன்றைக்கு அதே இந்து ஏடு, மூன்றாம் தேதி, உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கைப் பற்றிச் சொல்லும்போது, நீதிபதி கேட்கிறார்.  Justice Loadha asked , what is your objection for the construction of a new dam?  புதிய அணை கட்டுவதற்கு உங்களுக்கு என்ன ஆட்சேபணை? என்று கேட்கிறார்.


தமிழ்நாடு வழக்கறிஞர் பராசரன் சொல்லுகிறார். இது சங்கொலியில் வந்தது அல்ல, ஜனசக்தியில் வந்தது அல்ல. அண்ணன் நெடுமாறனின் தென்செய்தியில் வந்தது அல்ல. இது, இந்து ஆங்கில நாளேட்டில் வந்தது.

If they give full control of the Dam to Tamilnadu,then we may not go for any objection. The sate is ready to provide the power to Kerala generated in the New Dam, if Kerala is open to the idea of Tamilnadu controlling it. However this is my personal view . Build the new Dam; Give the control to us.   அணை கட்ட எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. அணையின் கட்டுப்பாட்டு நிர்வாகத்தை, எங்களிடம் தந்து விட வேண்டும். இதை, கேரள மாநிலத்தில் வந்த செய்தித்தாள்கள் வெளியிட்டு உள்ளன. மதுரை பதிப்பு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டிலும் இந்தச் செய்தியை அவர்கள் தருகிறார்கள்.


எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. நாங்கள் மின்சாரம் கொடுக்கிறோம். இதில், அவரது சொந்தக் கருத்து என்ன இருக்கிறது? அரசாங்க வழக்கறிஞர், உங்கள் வீட்டு விஷயத்தையா பேசப் போயிருக்கிறீர்கள்? எப்படி உங்கள் தனிப்பட்ட கருத்தைச் சொல்லலாம்? இதைத்தான் கேரளத்தில் கொண்டாடுகிறார்கள்.


புதிய அணை கட்டுவதற்கு எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று தமிழக அரசு வழக்கறிஞர் எப்படிச் சொல்லலாம்? கேப்பையிலே நெய் வடிகிறது என்றால், கேட்பவனுக்குப் புத்தி எங்கே போயிற்று? என்று நமது கிராமங்களில் சொல்லுவார்கள்.


யாரை முட்டாளாக்கப் பார்க்கிறீர்கள்? 999 ஆண்டுகளுக்குச் சட்டப்படி நமக்கு உரிமை உள்ள முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதற்கு அவர்கள் திட்டம் போடுகிறார்கள். அது மட்டும் அல்ல, முல்லைப்பெரியாறு அணையின் கட்டுப்பாட்டு நிர்வாகத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லி, கேரள முதல் அமைச்சர் அச்சுதானந்தன், 2006 ஜூலை 3 ஆம் தேதி, பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்துக் கேட்டார். மீண்டும் அக்டோபர் 30 ஆம் தேதி போய்க் கேட்டார். ஒரு கட்டத்தில் அணையை உடைப்போம் என்றே சொன்னார்கள். படித்தவர்கள் கவனிக்க வேண்டும். ஏற்கனவே உள்ள அணையின் நிர்வாகத் தையே எங்களிடம் தர வேண்டும் என்று கேட்டார்கள். அவர்களிடம், இவர்கள் புதிய அணையின் நிர்வாகத்தைக் கேட்கிறார்கள்.


அது மட்டும் அல்ல, அணையை உடைப்பதற்கும் கேரள அரசுக்கு அதிகாரம் உண்டு என்றுதான் அவர்கள் சட்டம் இயற்றி இருக்கிறார்கள். அண்ணா தி.மு.க. ஆட்சியில், உச்சநீதிமன்றத்தில் நமக்கு நியாயமான தீர்ப்பு கிடைத்தது. உடனடியாக, கேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் எல்லோருமே, இந்தப் பிரச்சி னையில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து, கேரளச் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்தில்தான், முல்லைப்பெரியாறு உள்ளிட்ட 22 அணைகளைப் பராமரிக்கவும், கேரள மக்கள் நலனைப் பாதுகாக்கத் தேவைப்பட்டால் உடைக்கவும், கேரள அரசுக்கு அதிகாரம் உண்டு. இதில், எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது.’ என்று சொல்லி இருக்கிறார்கள். மற்ற அணைகளைப் பற்றி நமக்குப் பிரச்சினை இல்லை. முல்லைப்பெரியாறு அணையைத்தான் அதில் முதலாவதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.


உடைக்கவும் அதிகாரம் உண்டு என்றால் என்ன ஒருமைப்பாடு? To Decommission  அதாவது செயல் இழக்கச் செய்வது என்று வார்த்தையைக் கொஞ்சம் நாகரிகமாகப் போட்டு இருக்கிறார்கள்.


இதைத்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்கிறார்கள். ஏற்கனவே உள்ள அணையை, செயல் இழக்கச் செய்தால், தமிழ்நாட்டுக்கு ஏதேனும் இழப்பு ஏற்படுமா?


If the existing Dam is decommissioned , whether it will affect the interests of Tamilnadu?


உடனே, கேரள அரசின் சார்பாக வாதாடுகின்ற வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே சொல்கிறார். Zero  effect . ஒன்றும் இல்லை, பூஜ்யம்தான். தமிழ்நாட்டுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது.


என்னுடைய அன்புக்குரிய தென் தமிழகத்து மக்களே, இந்த முல்லைப் பெரியாறு தண்ணீர் இல்லாமல் போனால், மதுரையில் குடிக்கத் தண்ணீர் கிடைக்காது. வைகையிலே ஏதோ தண்ணீர் வருகிறதே என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். முல்லைப்பெரியாறு தண்ணீரைத்தான் நீங்கள் குடிக்கிறீர்கள். அது கிடைக்காது. 2 இலட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் பாசனம் அடியோடு பாழாகிப் போய்விடும்.


ஆனால், தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று கேரள அரசு வழக்குரைஞர் சொன்னபோது, தமிழக அரசின் வழக்கறிஞர் அதை ஆட்சேபித்து எதுவும் சொல்லவில்லை. இதைக் கண்டித்துத் தான் நான் அறிக்கை விட்டேன். 152 அடி தண்ணீர் தேக்கப்பட்ட நிலையில் இருந்து, 136 அடியாகக் குறைத்ததால், தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே 78,000 ஏக்கர் பாசனம் பாதிப்பு ஏற்பட்டு விட்டது.


மின்சார உற்பத்தியில் 55 கோடி ஆண்டுக்கு நட்டம். விவசாய விளைச்சலில் ஆண்டுக்கு 75 கோடி நட்டம். இப்படி கடந்த 30 ஆண்டுகளில், 3,900 கோடி ரூபாய் தமிழகத்துக்கு நட்டம் ஏற்பட்டு விட்டது. நேரடியாகவே சொல்லுகிறேன். இப்பொழுது கள்ளந்திரியில் இருந்து வருகின்ற தண்ணீர் இனிமேல் உங்களுக் குக் கிடையாது. அக்டோபர் 23 ஆம் தேதியில் இருந்து நான்கு மாதங்களுக்குத் தண்ணீர் விடுவோம் என்று சொன்னார்கள். இப்போது தண்ணீர் வரவில்லை. கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு இது தெரியும். மதுரையில் இப்பொழுதே குடிக்கத் தண்ணீர் இல்லை.


நம்முடைய மாநகராட்சி மன்ற உறுப் பினர் சகோதரி மகே
ஸ்வரி, காலையில் என்னிடம் கொடுத்த கோரிக்கையில், பெரிய விளம்பரம் போட்டு விழா நடத்தி, மதுரையில் நாள்தோறும் தண்ணீர் கொடுக்கப் போவதாகச் சொன்னார்கள். ஆனால், இப்போது வைகையிலும் தண்ணீர் இல்லை, மாநகரத்துக்கு உள்ளேயும் தண்ணீர் இல்லை. ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர். அதுவும்கூட ஒழுங்காகக் கிடைக்கவில்லை என்கிறார். இதை ஏன், பராசரன் சொல்லவில்லை?


இதைக் கண்டித்துத்தான், நான் அறிக்கை விட்டேன். பராசரன் பெரிய வக்கீல் என்று எனக்குத் தெரியாதா? அவர் நல்ல வக்கீல்தான். வழக்கு விவரங்களை அவரிடம் ஒழுங்காகச் சொன்னால், அதை அவர் நன்றாகவே வாதிடுவார். அவருடைய திறமையை ஒன்றும் நான் குறைத்துச் சொல்லவில்லை. அவருக்குப் பேசத் தெரியாது என்று நான் சொன்னேனா? இதற்கு இடையில் மற்றொரு பூசாரி ஒரு அறிக்கை விட்டு இருக்கிறார். வைகோ அவர்கள், பராசரனைப் பற்றி இப்படியெல்லாம் சொல்லி இருக்கக்கூடாது என்கிறார்.


பராசரன் மேல் எனக்கென்ன வெறுப்பு? எனக்கும் அவருக்கும் என்ன வாய்க்கால் வரப்புத் தகராறா? தமிழ்நாட்டின் உரிமையைக் காக்கப் பேச வேண்டிய இடத்தில், கல்லைத் தூக்கித் தலையில் போடுவதுபோல, புதிய அணையைக் கட்டிக் கொள் என்று சொல்கிறீர்களே என்று அதைக் கண்டித்து நான் அறிக்கை விட்டேன்.


அவர்கள் கட்டுகின்ற புதிய அணையின் நிர்வாகத்தை நம்மிடம் தர வேண்டும் என்று கேட்டால், அதை யாராவது ஏற்றுக் கொள்வார்களா? ஏன் பராசரன் இப்படிச் சொன்னார்? இப்போதும், அவர் கேரளாவின் கையாளாக மாறிவிட்டார் என்று நான் சொல்லவில்லை. இதைப்பற்றிக் கலைஞர் கருணாநிதி பராசரனுடன் பேசும்போது, அணை கட்டினால் கட்டிக் கொள்ளட்டும் என்று சொல்லி இருக்கிறார். இவருடைய உள்ளக்கிடக்கையைத் தெரிந்து கொண்டதால்தான், அவர் அப்படிச் சொல்லி இருக்கிறார். அதனால்தான், எனது அறிக்கையில், முதல் அமைச்சர்தான் இதற்குப் பொறுப்பு என்று சொல்லி இருந்தேன். அந்த ஒரு வரியை மட்டும், எல்லாச் செய்தித்தாள்களும் வெளியிடாமல் கத்தரித்து விட்டார்கள்.


இந்தப் போராட்டம் கூட, தந்தி அலுவலகத்துக்கு எதிரே கலைஞர் கருணாநிதியை எதிர்த்துப் போராட்டம் என்று நாங்கள் சொல்லவில்லையே? மத்திய அரசை எதிர்த்துத்தான் போராட்டம் என்றுதானே அறிவித்து இருக்கிறோம்?


2 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் உரிமையை நிலைநாட்டத் தவறிய பராசரன், எனது அறிக்கைக்குப் பின்னர் 5 ஆம் தேதி பேசுகிறார். அப்போது, முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து வந்தால், தமிழ்நாட்டுக்கு நட்டம், இழப்பு என்று பேசி இருக்கிறார்.


அதை வைத்துக்கொண்டு, முதல் அமைச்சர் சொல்லுகிறார். பராசன் அவர்கள் தமிழ்நாட்டுக்காகத்தான் வாதாடி இருக்கிறார். ஆனால், இங்கே சில பேர், கேரள அமைச்சர்களோடு தொடர்பு கொண்டு, கேரள அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு, தமிழ்நாடு அரசுக்கு எதிராக எப்படி அறிக்கை விடுவது என்று கேட்டுக் கொண்டு அறிக்கை விடுகிறார்கள் என்று எழுதி இருக்கிறார்.


இந்த வரியை எழுதாமல் போட்டு இருந்தால்கூட, ஓ நமது வழக்கறிஞர் சரியாகத்தான் பேசி இருக்கிறார். வைகோதான் தப்பாகச் சொல்லுகிறான் என்று கருதி இருப்பார்கள். இவர் கடைசியாக இரண்டு வரியைப் போட்டவுடன், என்னய்யா இது அநியாயமா இருக்கு? உயிரே போனாலும் தமிழ் நாட்டுக்கு விரோதமாக வைகோ செயல் படுவாரா? எதிரிகள்கூட ஒத்துக் கொள்ள மாட்டார்களே? என்று சொல்லுகிறார்கள். கலைஞர் கருணாநிதி அக்கிரமமாக, அபாண்டமாகப் பழி சுமத்துகிறார் என்பது அவரது இந்த இரண்டு வரிகளில் தெரிந்து விட்டது. காட்டிக் கொடுப்பது உங்கள் வழக்கம். துரோகம் செய்வது உங்கள் வழக்கம். ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் செய்தீர்கள். இப்போது தமிழ்நாட்டுக்கும் மன்னிக்க முடியாத துரோகம் செய்கிறீர்கள். ஆதாரங்களோடு சொல்லுகிறேன்.


உச்சநீதிமன்றத்தில் பராசரன் 3.45 மணிக்குச் சொல்லி இருக்கிறார். புதிய அணை கட்டப்பட்டால், கேரள அரசு நினைத்தாலும், அச்சுதானந்தன் அரசு துhக்கி எறியப்பட்டு நாளை வேறொரு அரசு வந்தாலும், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கொடுக்கலாம் என்ற எண்ணம் கேரள மக்களிடம் ஏற்பட்டு, நமக்குப் பெரிய பாதகம் வந்துவிடும் என்று கேரள மக்கள் ஒருசேர எழுந்து நிர்பந்தம் கொடுத்தாலும், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட நமக்குக் கொடுக்க முடியாது.


ஏனென்றால், அவர்கள் கட்டப் போகின்ற புதிய அணை பள்ளத்திலே கட்டுகிறார்கள். தற்போது, கடல் மட்டத்தில் இருந்து, 2889 அடி உயரத்தில் முல்லைப் பெரியாறு நீர்மட்டம் உள்ளது. ஆனால், இப்பொழுது அவர்கள் கட்டத் திட்டமிட்டு இருக்கின்ற இடம், இதைவிட 200 அடிக்குக் கீழேதான். அங்கிருந்து நமக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூடக் கொடுக்க முடியாது.


புதிய அணைகட்டுவதற்காகப் பக்கவாட்டுப் பாறைகளை உடைக்கும் போது, நமது பேபி அணைக்குப் பாதிப்பு ஏற்படும். முல்லைப்பெரியாறு அணையிலும் கீறல் விழும். நீர் கசியும். எனவே, இந்த அணையை உடைத்து விடுவோம் என்று சொல்லி, முழுதாக உடைத்து நொறுக்கி விடுவார்கள். இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


பராசரன் உச்சநீதிமன்றத்தில் கருத்தைச் சொன்னவுடன், 4.10 மணிக்கு, உப்புத் துறை என்ற இடத்தில் இருந்து ஒரு மலையாளி பேசுகிறார். அப்பாசுக்கும் மலையாளம் புரியும். இந்தப் பிரச்சினைக்காக அவர் போராடுகிறார் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவேதான், ‘புதிய அணையின் அடிக்கல் நாட்டுவதற்கு வைகோவும் நீங்களும் வரவேண் டும். உங்களுக்கும் வைகோவுக்கும் தங்க மாலை போடுவோம்’ என்று கேலி பேசி இருக்கிறான். என்ன கிண்டல்?


அப்பாசுக்கு ஒன்றும் புரியவில்லை. நம்மள் ஜெயிச்சு என்கிறானே, என்ன விஷயம் என்று விசாரித்து இருக்கிறார். அதுதான், தமிழ்நாடு அரசுதான் அணையைக் கட்டச் சொல்லி விட்டதே? அவன் பேசி முடித்த பத்து நிமிடத்தில், கோட்டயத்தில் இருந்து ஒரு போன். அவனும் கேலி பேசுகிறான். அணை கட்டுவதைப் பார்க்க வாருங்கள் என்கிறான். அவர்கள் இப்படிக் கேலி பேசுகிறார்கள், இங்கே முதல் அமைச்சர் இப்படி அறிக்கை விடுகிறார்.


நான் முதல் அமைச்சரைக் கேட்கிறேன். அறிஞர் அண்ணா போராட்டம் நடத்தியபோது, காமராசர் அதைப்பற்றி நேருவிடம் சொல்லி, தமிழ்நாட்டுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தார். தெற்கு தேய்கிறது; எனவே திராவிட இயக்கத்தார் தனி நாடு கேட்கிறார்கள் என்று சொல்லி, தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்கள், தொழிற்சாலைகள் வருவதற்கு வாதத்தை முன்வைத்தார். அதுபோல, எங்கள் பெயரை நீங்கள் சொல்ல வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.


தென்தமிழ்நாடு கொந்தளிக்கும் எரிமலையாகச் சீறும் என்று நிலைமையை எடுத்துக்காட்டி, அணையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் முதல் அமைச்சருக்கு அல்லவா உண்டு? நீங்கள் இப்படியா பழி சொல்லுவது? இயற்கைக்கு, அறத்துக்குப் பொறுக்குமா? நாங்கள் போய் கேரள அமைச்சர்களிடம் கேட்டுக் கொண்டா செயல்படுகிறோம்? கிராமத்துக்காரர்களைப் போல நான் சாபம் போட்டால், நாளை அதைத்தான் பெரிதாகப் போடுவார்கள். எனவே, இத்தோடு விட்டுவிடுகிறேன்.


புதிய அணை கட்ட ஆய்வுக்கு அனுமதி கொடுத்தது மத்திய அரசு செய்த துரோகம். அவர்கள் அனுமதி கேட்ட போது, அந்தத்துறைக்குப் பொறுப்பு வகித்தவர்கள், தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு,
ஸ்பெக்ட்ரம் ராஜா. அனுமதி கிடையாது என்று அவர்கள் ஏன் மறுக்க வில்லை? பாதுகாப்புத் துறை அமைச்சர் காங்கிரசைச் சேர்ந்த ஏ.கே.அந்தோணி, கேரளத்தைச் சேர்ந்தவர். நேர்மையானவர் என்று பெயர் பெற்றவர். ஆனால், தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கடற்படையினரைக் கொண்டுவந்து, ஆய்வு நடத்த இறக்கி விட்டார். கேரள அமைச்சர் அப்படிச் செய்யும் போது, தி.மு.க. அமைச்சர்கள் ஏன் மறுக்கவில்லை?


ஜெய்ராம் ரமேஷ் ஆய்வுக்கு அனுமதி கொடுத்தது பச்சைத் துரோகம். அப்படி அனுமதி கொடுத்தாலே, புதிய அணை கட்டுவதற்கு வழி ஏற்படுத்திக்கொடுப்பதாகத் தானே பொருள்? அவர்கள் கேட்ட இடத்திலே பாறைகள் சரியாக இல்லை என்று சொல்லி, இப்போது புதிதாக இன்னொரு இடத்திலே ஆய்வு நடத்துகிறார்கள். பத்து கிலோமீட்டருக்குப் புதிய சாலை அமைக்கப் போகிறார்கள். பாறைகளை உடைக்கப் போகிறார்கள். அதன்பிறகு, நமது அணை உடைந்து விடும்.


ஜெய்ராம் ரமேஷ் அனுமதி கொடுத்தபோது, கலைஞர் கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா? நான் மத்திய அமைச்சர் ராஜாவை அனுப்பிவிட்டேன். அவர் ஜெய்ராம் ரமேசைச் சந்தித்து விட்டார். புதிய அணை கட்ட ஆய்வுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்று சொல்லி விட்டார்’ என்று சொன்னார். அது எல்லாச் செய்தித் தாள்களிலும் எட்டுக்கால தலைப்புச் செய்தியாக வந்தது. தொலைக்காட்சிகளிலும் உடனடிச் செய்தியாகக் காட்டப்பட்டது.


ஆனால், மறுநாள், ஜெய்ராம் ரமேஷ், நான் ஆய்வுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறேன்’ என்று சொல்லி விட்டார். உடனே, கேரளாவின் முன்னாள் முதல் அமைச்சர் உம்மண் சாண்டி, ‘முதல் சுற்றில் நாம் வெற்றி பெற்று விட்டோம்’ என்று அறிக்கை விட்டார். மறுநாள் அச்சுதானந்தன், ‘நாம் வெற்றி பெற்று விட்டோம்’ என்றார்.


ஆனால், தி.மு.க.தரப்பில் ஆய்வுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்று பொய்சொல்லி மக்களை ஏமாற்றினார்கள். ஜெய்ராம் ரமேஷ் அனுமதி கொடுத்து விட்டேன் என்று சொன்னதற்குப் பிறகு வேறு வழி இன்றி, ‘மத்திய அமைச்சரைக் கண்டித்து, உடனே மதுரையில் கண்டனக் கூட்டம்; நானே முழங்குவேன்; தென்னாட்டுக்கு அதிபதியான என் மகன் தலைமையில் கண்டனக் கூட்டம்’ என்றார். நவம்பர் 1 ஆம் தேதி கூட்டம். விளம்பரம் செய்து விட்டார்கள்.


அதற்கு இடையில், தி.மு.க. அமைச்சர் ராஜாவின் அலுவலகத்தில் இரண்டு நாள்கள், சி.பி.ஐ. ரெய்டு செய்துவிட்டார்கள். அது அத்துடன் நிற்காது, வேறு சில இடங்களுக்கும் பாயும் என்று ஒரு தகவல் வந்தது. உடனே, பயில்வான் பல்டியடித்து விட்டார். மத்திய இணை அமைச்சரைக் கண்டித்துப் பொதுக்கூட்டம் என்று முரசொலியில் வந்த அறிவிப்பு மாற்றப்பட்டு, புதிய அணை கட்ட முயலும் கேரளாவைக் கண்டித்து மதுரையில் பொதுக்கூட்டம் என்று 24 ஆம் தேதி முரசொலியில் அறிவிப்பு வந்து விட்டது. மேலும் நான்கு நாள்கள் போனது. டெல்லியில் இருந்து என்ன நெருக்கடி வந்தது என்று தெரியவில்லை. கூட்டம் இரத்தாகி விட்டது. அதற்கு என்ன விளக்கம் தெரியுமா? உச்சநீதி மன்றத்தில் வழக்கு இருக்கிறதாம். அதுபற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியாதா அண்ணன் அவர்களே? இப்போது என்ன திடீர் ஞானோதயம்?


இப்போது அவரது வழக்கறிஞர், புதிய அணை கட்டுவதற்கே ஆட்சேபணை இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறார். ஏன் இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்கிறீர்கள்? இது பச்சைத்துரோகம் இல்லையா? இதேபோல கேரளாவில் ஒரு அரசு செயல்பட முடியுமா?


முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து ஒன்றும் இல்லை. அதற்கு இணையாக வலுவான அணை, இந்தியாவிலேயே கிடையாது. ஒட்டுமொத்தக் கேரள மாநிலமே, பூகம்பத்தில் மூன்றாவது டிகிரியில் வைத்து இருக்கிறார்கள். ரிக்டரில் 5 புள்ளி வரலாம். 7.5 ரிக்டர் பூகம்பம் வந்து, கேரளாவின் அத்தனை அணைகளும் இடிந்து விழுந்தாலும், பென்னி குயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணை இடியாது. 79 க்குப் பிறகு செய்யப்பட்ட பணிகளால், அந்த அணையை முன்னிலும் பன்மடங்கு வலுப்படுத்தி விட்டார்கள். 12,000 டன் எடையை, அந்த அணைக்கு மேலே கூட்டி இருக்கிறார்கள்.

அந்த எடையில்தான் இந்த அணை நிற்கிறது. இது கிராவிட்டி அணை ஆகும். எடைதான் அணைக்குப் பாதுகாப்பு. காங்கிரீட் தொப்பி போடப்பட்டு இருக்கிறது. கீழ்மட்ட அகலம் முன்பு 146 அடி. இப்போது மேலும் 56 அடி. மொத்தம் 200 அடி அகலம். இந்த அகலத்துக்கு உலகத்திலேயே வேறு அணை கிடையாது.


250 லிட்டர் தண்ணீர் கசிவதற்கு அனுமதி உண்டு. ஆனால், 48 லிட்டர்தான் கசிகிறது. இதையெல்லாம் நமது வழக்கறிஞருக்கு விளக்கி, என்ன நிலையை மேற் கொள்வது என்று சொல்லிக் கொடுத்து இருக்க வேண்டாமா? ஏன் செய்யவில்லை? மக்களை ஏமாற்ற லாம் என்று நினைக்காதீர்கள். ஊர் ஊராகப் போய்ச் சொல்லுவோம். நான் உங்களை முதலில் குற்றம் சாட்டவில்லையே? உங்கள் துரோகத்தால், தென் தமிழ்நாடே பாழாகி விடுமே?


நாம் எடுத்த நிலைப்பாட்டை, இவர்களே கெடுத்து விட்டார்கள். சேம் சைடு கோல் அடித்து விட்டார்கள். இப்படித்தான், 1994 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் ஒரு சம்பவம் நடந்தது. அமெரிக்காவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் கொலம்பியா ஆடியது. அந்த அணியில் உலகப் புகழ் பெற்ற ஆட்டக்காரன் எஸ்கோபார். அமெரிக்க வீரன் அடித்த பந்தைத் தடுக்க முயன்றபோது, இவன் கால்பட்டு எதிர்பாராமல் பந்து திசைதிரும்பி, கொலம்பியா கோல் கம்பத்துக்கு உள்ளே புகுந்து விட்டது. அந்த ஆட்டத்தில் கொலம்பியா தோற்று விட்டது. நாட்டுக்குத் திரும்பியது கொலம்பியா அணி. பத்து நாள்கள் கழித்து, ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தான். அங்கே வந்த வெறியன் ஒருவன், எஸ்கோபாரை நேருக்கு நேராகத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டான். சேம் சைடு கோல் போட்டதற்காக சுட்டுக் கொன்று விட்டான்.


இதை நான் சொன்னால், இதற்காக என் மீது ஒரு வழக்குப் போடலாம் என்று கருதாதீர்கள். சரி அணை கட்டிக் கொள்ளட்டும் என்று நீங்கள் சொன்னதால்தான், பராசரன் அப்படிச் சொல்லி இருக்கிறார். இது மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்? எங்கு போய் முறையிடுவது? மக்களிடம்தான் முறையிடுகிறோம்.


உச்சநீதிமன்றத்தில் இப்படித் தமிழக அரசு மோசம் செய்து விட்டதே? இந்தப் பிரச்சினை தீர வேறு வழியே இல்லையா? இருக்கிறது. அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்று ஒரு பழமொழி உண்டு. அதற்காக, வேல்கம்பைத் துhக்கச் சொல்லவில்லை. உனக்கு அரிசி வராது, பால் வராது, ஆடு மாடு வராது. கள்ளத்தனமாக மணலையும் கொண்டு போக முடியாது. இந்த எண்ணத்தைக் கேரள மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அவர்கள் நம் சகோதரர்கள்தான். அவர்களுக்கு நாம் எல்லாம் தருவோம். ஆனால், நீங்கள் எங்கள் வாழ்வை அழிக்க நினைக்காதீர்கள். முல்லைப் பெரியாறை உடைக்காதீர்கள்.


கேரள முதல் அமைச்சருடைய இணையதளத்திலேயே அணை உடைவது போல ஒரு போலி கிராபிக்ஸ் காட்சிகளைக் காட்டி,மக்களை பயமுறுத்துகிறார்கள். இது என்ன நியாயம்? யார் தடுப்பது? ஐந்து லட்சம் சி.டி.க்களை வழங்கி இருக்கிறார்கள். அணை உடையும், ஐந்து லட்சம் பேர் செத்துப்போவார்கள் என்று பயமுறுத்தி இருக்கிறார்கள். அணை உடையாது. பொய்ச் செய்திகளை நம்பி எங்களுக்குக் கேடு செய்யாதீர்கள்.


ஏற்கனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாற்றில் நீங்கள் தண்ணீர் கொடுக்கவில்லை. 2004 ஆம் ஆண்டில் இருந்து கொடுக்கவில்லை. 30,000 ஏக்கர் பாசனம் பாழாகி விட்டது. இப்போது, பாம்பாற்றில் அணை கட்டப் போகிறோம் என்கிறார்கள். கொங்குச் சீமைக்கு வேட்டு வைக்கப் போகிறார்கள். கொங்குச் சீமையும் சிலிர்த்து எழுந்து விட்டது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கோவை, இதுதான் கேரளாவுக்குச் செல்லும் பாதைகள். எல்லோரையும் நீ கோபப்படுத்தி விட்டாய். இந்த மாவட்டங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகிறது.


எனவே, கன்னியாகுமரியில் மறிப்போம்; செங்கோட்டை பிரா
னூர் பார்டரில் மறிப்போம்; கம்பம் பள்ளத்தாக்கில் கூடலூரில் மறிப்போம்; போடி மெட்டில் மறிப்போம்; அதைப்போல, பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி சாலைகளில் மறிப்போம். அதற்காக மக்களைத் திரட்டுவோம். எதற்கும் கவலைப்படாமல், 13 சாலை களையும் அடைக்கின்ற கட்டத்துக்கு வருவோம். அதற்கு ஆயத்தம் செய்வோம். அதற்காக, வருகின்ற 15 ஆம் தேதி என் தலைமையில் உடுமலைப்பேட்டையில் உண்ணா நிலை அறப்போர்.


கம்பத்தில் நடந்த மறியலுக்கு, கட்சி சார்பு அற்ற முறையில் கிராமங்களில் இருந்தெல்லாம் மக்கள் திரண்டு வந்தார்கள். இந்தப் போராட்டக் களத்துக்குப் பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள், தோழர்கள் வந்து இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும், உரிமைக்குப் போராடும் அப்பாஸ் அவர்களுக்கும், வாழ்த்திய தோழமைக் கட்சியினருக்கும் நன்றி.


சிறப்பான ஏற்பாடுகளைச் செய்த மதுரை மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.கழக முன்னணித் தோழர்களுக்கும் குறிப்பாக, மாநகர் மாவட்டச் செயலாளர் தியாகவேங்கை புதூர் பூமிநாதன் அவர்களுக்கும், சின்னசெல்லம் அவர்களுக்கும், வீர.தமிழ்செல்வன் அவர்களுக்கும், அழகுசுந்தரம் அவர்களுக்கும், பாஸ்கரசேதுபதி உள்ளிட்ட முன்னோடிகளுக்கும் - மாநகரமெங்கும் நம் போராட்ட அறிவிப்பை சிறப்பாக சக்திக்குமீறி செலவு செய்து விளம்பரப்படுத்திய என்னுயிர்த் தோழர்களுக்கும் என் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

செய்திகள் ஒளிபரப்பாகும் நேரம்:
காலை 8 மணி; பிற்பகல் 1.30 மணி; முன்னிரவு 8 மணி; இரவு 10 மணி

Events Calendar

«  
  »
S M T W T F S
 
 
 
 
1
 
2
 
3
 
4
 
5
 
6
 
7
 
8
 
9
 
10
 
11
 
12
 
13
 
14
 
15
 
16
 
17
 
18
 
19
 
20
 
21
 
22
 
23
 
24
 
25
 
26
 
27
 
28
 
29
 
30
 
31
 
 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)