முல்லைப்பெரியாறு பிரச்சினையில், தமிழகத்துக்குப் பின்னடைவு! முதல்நாள் முதல்வர் தெரிவித்த கருத்துக்கு மாறாக, மறுநாள் தி.மு.க. பொதுக்குழு தீர்மானம்! மக்களை ஏமாற்றும் முதல்வரின் கண்துடைப்பு வேலை! வைகோ அறிக்கை!

Issues: Economy, Farmers, National, Rural

Region: Dindigul, Madurai - Urban, Madurai - Rural, Ramanathapuram, Sivagangai, Theni, Tamil Nadu

Category: Headlines, Press Releases

Date: 
Tue, 23/02/2010

 முல்லைப்பெரியாறு பிரச்சினையில், தமிழகத்துக்குப் பின்னடைவு!  முதல்நாள் முதல்வர் தெரிவித்த கருத்துக்கு மாறாக, மறுநாள் தி.மு.க. பொதுக்குழு தீர்மானம்!


மக்களை ஏமாற்றும் முதல்வரின் கண்துடைப்பு வேலை!

வைகோ அறிக்கை!

தென்தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான முல்லைப்பெரியாறு பிரச்சினையில், உச்சநீதிமன்றம் முறையாக விசாரித்து, 2006 பிப்ரவரி 27 இல், நீதி வழங்கிய நியாயத் தீர்ப்புக்கு, தானே முட்டுக்கட்டை போட்டு, 2010 பிப்ரவரி 17 ஆம் தேதியன்று, ஐவர் குழுவை அமைத்து அறிவிப்புச் செய்தது, நீதித்துறை வரலாற்றில் இதுவரை நடைபெறாத விசித்திரமான முரண்பாடு ஆகும். 

அதனால்தான், அதிர்ச்சியும், வேதனையும், ஏமாற்றமும் அளிக்கிறது என அறிக்கை தந்தேன்.


பாண்டிய மண்டலத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆக்கும் இந்த முக்கியமான பிரச்சினையில், 1979 ஆம் ஆண்டில் இருந்தே கேரள அரசு, பென்னி குயிக் கட்டிய முல்லைப்பெரியாறு பலவீனமாக உள்ளது என்றும், உடையும் என்றும் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறது. மத்திய அரசின் முன்னிலையில், தமிழக அரசும், கேரள அரசும் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி, முல்லைப்பெரியாறு அணை, முன்னிலும் பன்மடங்கு வலுவாக ஆக்கப்பட்டு உள்ளது.


மராமத்துப் பணிகளுக்காக, தற்காலிகமாக 136 அடியாகக் குறைக்கப்பட்ட நீர்மட்டத்தை, பணிகள் முடிவுற்று வலுப்படுத்தியபின்னர், 1895 இல் இருந்து தமிழகம் அனுபவித்த உரிமையின்படி, வழக்கம்போல 152 அடியாகத் தேக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. அதைத் தடுப்பதற்காக, பேபி அணையைப் பலப்படுத்தும் கடைசிக்கட்டப் பணிகளைச் செய்ய விடாமல், கேரளம் இடையூறு விளைவித்தது.


இந்த நிலையில், வழக்கு உச்சநீதிமன்றத்துக்குச் சென்றது. அணையின் வலுவை ஆய்வு செய்ய, உச்சநீதிமன்ற அறிவுரைப்படி அமைக்கப்பட்ட, மிட்டல் தலைமையிலான நிபுணர் குழுவும், பிரார் தலைமையிலான நிபுணர் குழுவும், முல்லைப்பெரியாறு அணை வலுவாகவே உள்ளது என்று அறிக்கைகள் தந்தன. இருதரப்பு வாதங்களையும் கேட்டு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒய்.கே. சபர்வால், சி.கே. தாக்கர், பி.கே. பாலசுப்பிரமணியன் ஆகிய மூவரும், திட்டவட்டமான தீர்ப்பு அளித்து, நீதியை நிலைநாட்டினர்.


முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது என்றும், கேரள அரசு எழுப்பிய ஆட்சேபணைகள் எதையும் ஏற்க முடியாது என்றும், தண்ணீர் மட்டத்தை முதல்கட்டமாக 142 அடியாக உயர்த்தலாம் என்றும், பேபி அணையை வலுப்படுத்தியபின்னர் 152 அடி வரையிலும் உயர்த்திக் கொள்ளலாம் என்றும், இதற்குக் கேரள அரசு எந்த முட்டுக்கட்டையும் போடக்கூடாது என்றும், அத்தீர்ப்பு கூறியது.


ஆனால், உச்சநீதிமன்றத்தைத் துச்சமாக எண்ணி, அதன் தீர்ப்பைக் காலில் போட்டு மிதித்து விட்டு, கேரள அரசு, சட்டமன்றத்தில் 2006 மார்ச் 18 ஆம் தேதி, ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அதில், முல்லைப்பெரியாறின் நீர்மட்டம் 136 அடிதான் என்றும், முல்லைப்பெரியாறு உள்ளிட்ட, கேரளத்தில் உள்ள 22 அணைகளையும், பராமரிக்கவும், தேவைப்பட்டால், உடைத்துச் செயல் இழக்கச் செய்யவும், கேரள அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்றும், இதில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்றும், அநீதியும், அக்கிரமுமான அந்தச் சட்டத்தை எதிர்த்து, மார்ச் 31 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில், அன்றைய அண்ணா தி.மு.க. அரசு, வழக்குத் தொடுத்தது. அந்த வழக்குதான், தற்போதும் நிலுவையில் உள்ள வழக்கு ஆகும். கேரளம் நிறைவேற்றிய சட்டம் செல்லாது எனச் சொல்லி, கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கும் என்றே எதிர்பார்த்தோம்.


இந்நிலையில், 2006 தேர்தலில், தமிழகத்தில் மைனாரிட்டி தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றது. கேரளத்தில் பொறுப்பு ஏற்ற முதல் அமைச்சர் அச்சுதானந்தன், 2006 ஜூலை 3 ஆம் நாள், இந்தியப் பிரதமரைச் சந்தித்தார். ‘அணை உடையும் என்றும், இலட்சக்கணக்கான கேரள மக்கள் சாக நேரிடும் என்றும், பொய்யான ஆவணங்களைத் தந்ததோடு, முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பைக் கேரளத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.


இதை மறுத்து, தமிழகத்தின் நியாயத்தைப் பிரதமரிடம் நிலைநாட்ட வேண்டிய கடமையை, தமிழக முதல்வர் செய்யவில்லை. மீண்டும், ஆக
ஸ்ட் 30 ஆம் நாள், கேரள முதல்வர், அம்மாநிலத்தின் அனைத்துக்கட்சித் தலைவர்களோடு டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்தித்து, தமிழகத்துக்கு எதிரான கோரிக்கைகளை முன்வைத்தார்.


கேரளத்தின் அநீதியைத் தடுக்க வேண்டிய பிரதமர், அதைச் செய்யாமல், அவர்களது கோரிக்கைகளை, மத்திய நீர்ப்பாசனத்துறை, சட்டத்துறை அமைச்சகங்களுக்குப் பரிசீலிக்க அனுப்பி வைத்தது, இந்திய ஒருமைப்பாட்டுக்கும், தமிழகத்துக்கும் செய்த கேடு ஆகும்.


இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில், மூன்று நீதிபதிகள் அமர்வில் நடைபெற்ற வழக்கில், கேரள அரசு, 33 தடவைகளுக்கு மேல் வாய்தா கேட்டது. மூன்று ஆண்டுகளுக்கு இழுத்தடித்தது. வேதனை என்னவென்றால், ஒருமுறை கூட தமிழக அரசின் வழக்கறிஞர் அதை ஆட்சேபிக்கவில்லை. இருப்பினும், வழக்கு முடிந்து, தீர்ப்பு தரப்படும் என்ற நிலையில், தங்களது அநியாயப் போக்குக்கு அது பாதகமாகவும், நீதியை நிலைநாட்டும் தீர்ப்பாகவும் அமையும் என எண்ணிய கேரள அரசு, நரித்தந்திரத்துடன், மூன்று ஆண்டுகள் விசாரித்த அந்த நீதிமன்றத்தில் விசாரிக்கக்கூடாது என்றும், அரசியல் சட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் வாதாடியது.


இப்பிரச்சினை எழுப்பப்பட்டபோது, முதலில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழக அரசு வழக்கறிஞர், நண்பகல் உணவு இடைவேளைக்குப் பின், பிற்பகலில் எழுத்து மூலமாக, கேரளாவின் கோரிக்கைக்கு ஒப்புதல் கொடுத்தது, மிகப்பெரிய தவறு ஆகும். இதற்கு, முதல் அமைச்சர் கருணாநிதிதான் பொறுப்பாளி ஆவார். தற்போதைய பின்னடைவுக்கும் இதுவே காரணம் ஆகும்.


பின்னர் வழக்கு, அரசியல் சட்ட நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்டபோது, ‘ கேரளம் புதிய அணை கட்டுவதற்கு ஆட்சேபணை உண்டா?’ என நீதிபதிகள் கேட்டபோது, ஆணித்தரமாகவும், கடுமையாகவும் புதிய அணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இருக்க வேண்டிய தமிழக அரசு வழக்கறிஞர், அதற்கு மாறாக, ‘புதிய அணைக்கு ஆட்சேபணை இல்லை என்றும், அதன் கட்டுப்பாட்டு நிர்வாகத்தைத் தமிழகத்துக்குத் தர வேண்டும் என்றும், தமிழக அரசு எழுப்ப வேண்டிய அரணை, அவரே உடைத்து விட்டார்.


கேரளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற, புகழ்மிக்க நீதிபதிகளும், கேரள அரசின் அநீதியான நடவடிக்கைகளை நியாயப்படுத்தி, டெல்லியில் வெளியாகும் ஆங்கில ஏடுகளில் கட்டுரைகள் தீட்டி உள்ளனர்.

பென்னி குயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணை, கேரளாவில் உள்ள அனைத்து அணைகளையும்விட, மிக வலுவாக இருக்கின்ற நிலையில், அதை உச்சநீதிமன்றம் முன்னர் அறிவித்த நிபுணர் குழுக்கள் உறுதிப்படுத்தி உள்ள நிலையில், கேரள அரசின் பொய்யான வாதங்களை ஏற்றுக்கொள்ளும் வகையில், அணையின் வலிவு குறித்து ஆய்வு செய்யவும், புதிய அணை குறித்துக் கருத்து அறியவும், உச்சநீதிமன்றம் ஐவர் குழுவை அறிவித்தது, ஏற்கனவே வழங்கிய நீதியைத் திரும்பப் பறித்துக் கொள்ளும் செயல் ஆகிவிட்டது.

அதனால்தான், கேரளத்தின் முதல்அமைச்சர் அச்சுதானந்தனும், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரனும், ‘தங்களுக்கு வெற்றி என்றும், 2006 இல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இனி செல்லாது என்றும், அதை மறுபரிசீலனை செய்வதற்குத்தான் ஐவர் குழு என்றும், தங்கள் வஞ்சக நோக்கம் நிறைவேறிய குதுhகலத்தோடு கூறி உள்ளனர்.


கேரள அரசு புதிய அணை கட்ட முயல்வதே, 999 ஆண்டுகளுக்கு நமக்கு உரிமை உள்ள முல்லைப்பெரியாறு அணையைச் சேதப்படுத்துவதற்காகத்தான். நம்முடைய அணையில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் அவர்கள் புதிய அணை கட்டினால், நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால்,முல்லைப்பெரியாறு அணைக்கு அருகில் உள்ள பாறைகளை உடைப்பதால், பேபி அணைக்கும், பிரதான அணைக்கும் சேதம் ஏற்படுத்துவதுதான் அவர்கள் நோக்கம்.


புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த மத்திய அரசிடம் கேரள அரசு அனுமதி கேட்டு விண்ணப்பித்தபோது, அப்போது, சுற்றுச்சூழல் அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்த, தி.மு.க. அமைச்சர் ராஜாவும், அடுத்துவந்த டி.ஆர்.பாலுவும், அனுமதி இல்லை என்று ஏன் நிராகரிக்கத் தவறினார்கள்? இது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும்.


இதற்கும் தமிழக முதல்வர்தான் பொறுப்பாளி ஆவார். பின்னர், அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆய்வுக்கு அனுமதி கொடுத்ததால், கண்டனக் குரல் எழுந்தபோது, ‘அப்படி அனுமதி கொடுக்கப்படவில்லை என்று, முதல்வர் தரப்பில் இருந்து மறுக்கப்பட்டது. ஆனால், ‘ஆய்வுக்கு அனுமதி கொடுத்தேன்’ என்றார் ஜெய்ராம் ரமேஷ்.


‘முதல் சுற்றில் எங்களுக்குத்தான் வெற்றி’ என்று, கேரளத்தின் இந்நாள் முதல்வரும், முன்னாள் முதல்வரும் அறிக்கை தந்தனர். மத்திய இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேசைக் கண்டித்து, தமிழக முதல்வர் அக்டோபர் 22 ஆம் நாள் மதுரையில் முழங்குவார்’ என்று அறிவித்த தி.மு.கழகம், இரண்டு நாள்கள் கழித்து, தலைப்பை மாற்றி, ‘கேரள அரசின் புதிய அணைக்கு எதிர்ப்புக் கூட்டம்’ என்று அறிவித்தது. நான்கு நாள்கள் கழித்து, அந்தக் கூட்டத்தையே ரத்து செய்துவிட்டது. தமிழகத்தின் வாழ்வாதார உரிமையைப் பாதுகாக்கும் கடமையில், முழுமையாக முதல் அமைச்சர் தவறி விட்டார்.

தற்போது ஏற்பட்டு உள்ள பின்னடைவுக்கு, கலைஞர் கருணாநிதிதான் முழுப் பொறுப்பாளி ஆவார்.


இப்போதும், உச்சநீதிமன்றம் ஐவர் குழுவை அமைத்தவுடன், பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று, அவரே கேள்வி கேட்டு, பதில் கூறும்போது, ‘இந்நிலையில் உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் முடிவெடுப்பதற்கு வசதியாக, அரசியல் சாசனம் 131 ஆவது பிரிவின்கீழ், ஐந்து பேர் கொண்ட குழுவினை, நீதியரசர் ஆனந்த் அவர்கள் தலைமையிலே அமைத்து உள்ளது.


கேரள அரசுக்குச் சாதகமாக எந்தவிதமான முடிவும் வந்து விடவில்லை. அதற்குள் சில அவசரக்காரர்கள், எதோ தமிழக அரசு ஏமாந்து விட்டது. விட்டுக்கொடுத்து விட்டது என்றெல்லாம் கூறுவது, அரசியல் பிரச்சாரமே தவிர வேறல்ல.’ என்று தெரிவித்தார்.


முதல்நாள் இப்படிக் கருத்துச் சொல்லுகிறார். ஆனால், மறுநாள் தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தில், ‘தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்த நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பினை உதாசீனப்படுத்தும் வகையில், கேரள அரசு நிறைவேற்றிய திருத்தச் சட்டத்திற்கு உடன்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்ற அளவில், தமிழக அரசின் வழக்கையே திசைதிருப்பி, மீண்டும் ஒரு ஆய்வு நடத்துவோம் என ஐவர் குழுவினை தற்போது உச்சநீதிமன்றம் அறிவித்து இருக்கிறது.’ என்று, குறிப்பிட்டு உள்ளது.


இந்த முரண்பாட்டுக்கும், குளறுபடிக்கும் என்ன காரணம்?


முல்லைப்பெரியாறு பிரச்சினையில், தமிழகத்தின் உரிமையைக் காக்கும் வகையில், அண்ணா தி.மு.க. அரசு, உச்சநீதிமன்றத்தில் பெற்றுத் தந்த பாதுகாப்பை, செயல்படுத்தும் நடவடிக்கை எடுக்காமல், கேரள அரசின் இடைவிடாத அநீதியான முயற்சிகளை எதிர்கொள்ளும் கடமையைச் செய்யாமல், ஓரவஞ்சமாக இதில் நடந்துகொண்ட மத்திய அமைச்சரவையிலும், பங்கு எடுத்துக்கொண்டே, தற்போதைய பின்னடைவுக்குக் காரணமாகி விட்டதால், தென்தமிழ்நாட்டு மக்களின் கோபத்துக்கும், பழிக்கும் ஆளாக நேரிடும் என்று எண்ணி, மக்களை ஏமாற்றுவதற்காக, ஐவர் குழுவில், தமிழகம் பங்கு ஏற்காது என்று, ஒரு மாய்மால வேலை செய்து, கண்துடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்.


இந்தப் பிரச்சினையில், உச்சநீதிமன்றத்தின் தற்போதைய அரசியல் சாசன அமர்வு மேற்கொண்டு உள்ள நடவடிக்கை, நீதியின் கண்களும் கட்டப்பட்டு விட்டது என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது. மத்திய அரசின் போக்கு, மற்ற பிரச்சினைகளைப் போலவே, இதிலும், தமிழர்களுக்கு, அநீதி இழைக்கும் ஓர வஞ்சகப் போக்காகவே இருக்கிறது.


புதிய அணை கட்டத் திட்டமிடப்படுகின்ற இடம், முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தைவிடப் பள்ளத்தில் அமைவது ஆகும். எனவே, எவர் முயன்றாலும், புதிய அணையில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் தர முடியாது. புதிய அணைக்கு ஆய்வு என்ற பெயரால், சட்டவிரோதமாக, 56 அடி ஆழத்துக்கு, கடந்த இரண்டு நாள்களாக, குழிகள் அமைத்தும், அப்பகுதி மரங்களையெல்லாம் வெட்டியும், கேரள அரசு, தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு வருகிறது. புதிய அணை கட்டியே தீருவோம் என்று முடிவெடுத்து விட்டார்களாம். உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் உதாசீனம் செய்துவிட்டு, புதிய அணையைக் கட்டும்போது, அருகில் உள்ள பாறைகளை வெடி வைத்துத் தகர்த்து, நமக்கு உரிமையான அணையையும் சேதப்படுத்தத் தயாராகி விட்டது. அணையை உடைப்போம் என்று அங்கு உள்ள மக்கள் அடிக்கடி ஊர்வலம் நடத்தவும் அனுமதிக்கிறது.


இந்நிலையில், கேரள மக்களுக்கு நியாயத்தை உணர்த்துவதற்காகவும், அணையை உடைத்து, தமிழ்நாட்டுக்குப் பெருந்தீங்கு ஏற்பட்டால், அதனால் ஏற்படப்போகும் விபரீதத்தை எச்சரிப்பதற்காகவும், கொங்குச் சீமையில் அமராவதிஅணைக்கு வரும் பாம்பாற்றில் அணை கட்ட முயல்வதைத் தடுக்கவும், குமரி மாவட்டத்தில் நெய்யாற்றில் தண்ணீரை வழங்காமல் நிறுத்திய முடிவை மாற்றவும், நெல்லை மாவட்டத்தில், செண்பகவல்லி தடுப்பு அணையைப் பழுதுபார்க்க அனுமதிக்க வலியுறுத்தவும், விவசாயிகளையும், மக்களையும் திரட்டி, மே 28இல், கேரளத்துக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளையும், எந்தப் பொருள்களும், வாகனங்களும் செல்லாமல் தடுக்கின்ற மறியல் அறப்போரை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும். அதற்குத் தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வைகோ

பொதுச் செயலாளர்,   

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

தாயகம்,   
சென்னை- 8 

23 பிப்ரவரி 2010  

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)