மத்திய இரயில்வே பட்ஜெட் : வரவேற்கத்தக்கவை இருப்பினும் தமிழகத்தைப் பொறுத்தவரை ஏமாற்றம் அளிக்கிறது! வைகோ அறிக்கை
Issues: Economy, National, Rural, Transport
Region: Tamil Nadu
Category: Headlines, Press Releases
மத்திய இரயில்வே பட்ஜெட் : வரவேற்கத்தக்கவை இருப்பினும் தமிழகத்தைப் பொறுத்தவரை ஏமாற்றம் அளிக்கிறது!
வைகோ அறிக்கை
இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட்டில், பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணம் உயர்த்தப்படாதது, ரயில்வேதுறை தனியார்மயமாகாது என்ற அறிவிப்பு, ரயில்வே வாரியத் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்திட அனுமதி, புற்றுநோயாளிகளுக்கு இலவசப் பயணம், தமிழ்நாட்டில் பத்து இடங்களில் ரயில்வே மருத்துவமனைகள், ரயில்வே பணியாளர்களுக்கு வீடுகள் மற்றும் சமூகநலத் திட்டங்கள், தமிழகத்திற்கு புதிய விரைவு ரயில் மற்றும் சுற்றுலா ரயில் சேவைகள் ஆகியவை பாராட்டுக்குரிய அறிவிப்புகள் ஆகும்.
ஆனால், ரயில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு, தமிழ்நாட்டின் நீண்டநாள் கோரிக்கையான விழுப்புரம் - திருச்சி - திண்டுக்கல் 272 கி.மீ. தூரம் இரட்டை அகல ரயில் பாதை அமைத்தல், செங்கற்பட்டு - விழுப்புரம் 103 கி.மீ. மீட்டர் கேஜ் பாதையை இரண்டாவது அகல ரயில்பாதையாக மாற்றுதல் ஆகியவை குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.
சென்னையில் இருந்து கோல்கட்டா, மும்பை நகரங்களுக்கு தனி சரக்கு ரயில் போக்குவரத்துப் பாதையும், சென்னை - கோவை தனி சரக்கு ரயில் பாதையும் அமைக்கப்பட வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் சென்னை - பெங்களூர் தனி சரக்கு ரயில் போக்குவரத்துப் பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.
அகலப்பாதை மாற்றம் குறித்த திட்டங்கள் பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பவை முன்பே அறிவிக்கப்பட்டவைதான். தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள அகலப்பாதை திட்டங்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக - குறைந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் காலதாமதம் ஆகின்றன. இதற்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு பற்றி எதிர்பார்ப்பு பொய்த்து இருக்கிறது. அதேபோன்று தென்மாவட்ட மக்கள் பயன்பெறத்தக்க கூடுதல் ரயில் சேவை பற்றிய அறிவிப்பு ஏதும் இல்லை.
மாநில அரசின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் திட்டங்களில் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆக்கப்பூர்வ திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் விரையம் செய்துவரும் தமிழக அரசின் அலட்சியத்தால் ரயில்வே திட்டங்களும் முடங்கிக்கிடக்கின்றன. ஏற்கனவே, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இறுதி செய்யப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆய்வு செய்யப்படும் என்ற அறிவிப்பினால் மேலும் காலதாமதம் ஏற்படும்.
சென்னையில் இருந்து கோவைக்கு பகல்நேரத்தில் தூரந்தோ ரயில்சேவை, நீடாமங்கலம் - மன்னார்குடி புதிய ரயில்தடம், சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு ரயில்கள், பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை நவீனமயம் போன்ற வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை ரயில்வே பட்ஜெட் ஏமாற்றத்தை அளிக்கிறது.