தமிழகத்தை வஞ்சிக்கும் கேரள அரசைக் கண்டித்து மே - 28 மறுமலர்ச்சி தி.மு.க. முற்றுகைப் போராட்டம்! கேரளத்துக்குச் செல்லும் பாதைகளை மறிப்போம்! உடுமலை உண்ணாநிலை அறப்போரில் வைகோ முழக்கம்!
Issues: Economy, Farmers, National, Rural
Region: Coimbatore - Rural, Tamil Nadu
Category: Headlines, Speeches
தமிழகத்தை வஞ்சிக்கும் கேரள அரசைக் கண்டித்து மே - 28 மறுமலர்ச்சி தி.மு.க. முற்றுகைப் போராட்டம்! கேரளத்துக்குச் செல்லும் பாதைகளை மறிப்போம்! உடுமலை உண்ணாநிலை அறப்போரில் வைகோ முழக்கம்!
பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசைக் கண்டித்து, பிப்ரவரி 15 அன்று உடுமலைப் பேட்டையில் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் உண்ணாநிலை அறப்போரில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...
தமிழகத்தின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் தொடுத்து இருக்கிற போராட்டம். உடுமலைப் பேட்டை நகரம் இப்படியொரு உண்ணாநிலை அறப்போராட்டத்தை 25 ஆண்டுகளில் சந்தித்தது இல்லை என்று, இப்பகுதி மக்களுடைய உரிமைக்காவே போராடிக்கொண்டுஇருக்கின்ற சகோதரர் உடுமலை ரவி அவர்கள், பூரித்து புளகாங்கிதமுற்று என்னிடத்திலே மேடையிலே வந்து சொன்னார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் அருமைச் சகோதரி புரட்சித்தலைவி அவர்களின் பிரதிநிதியாக தேர்தல் பிரிவுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் வாழ்த்துச் சொன்னார்கள். மிக்க நன்றி. பெருந்திரளான கூட்டம். அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, காலை 9 மணிக்கு இந்த அறப்போர் களத்துக்கு வந்த கழகத்தின் கண்மணிகள், பல்லாயிரக்கணக்கிலே, கட்டுப்பாட்டோடு துளித் தண்ணீரும் கூடப்பருகாமல், அமர்ந்து இருக்கின்றார்கள். வைராக்கியம் நிறைந்த தொண்டர்கள்தாம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சொத்து, இந்த இயக்கத்தின் அரண், இந்த இயக்கத்தின் மூல பலம். எனவேதான, அராஜகத்தை எதிர்த்து, அநீதியை எதிர்த்துப் போராடக்கூடிய உணர்வோடு இங்கே நாம் வந்து இருக்கிறோம்.
இனிப்பும் கசப்பும், வெற்றியும் தோல்வியும், இருளும் ஒளியும், முள்ளும் மலரும் இணையெனக் கலந்து இருப்பதுதான் வாழ்க்கை. அதைத்தான் கடந்து போய்க்கொண்டு இருக்கின்றோம். 9 மணிக்கே பந்தல் நிரம்புகின்றதே என்று நாங்கள் உள்ளத்தில் களிப்பு அடைந்த நேரத்தில்தான், மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார் தயங்கித்தயங்கி வந்தார்.
அவர் சொன்ன தகவலைக் கேட்டு, தலையில் இடி விழுந்ததைப் போலத் திடுக்கிட்டு, அதிர்ச்சி அடைந்தேன். தாங்கிக் கொள்ள முடியவில்லை, எத்தனை இழப்புக்களைத் தான் தாங்குவோம்?
வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, கடமையைச் செய்வது எங்கள் வழக்கமாகப் போய்விட்டது. கண்ணீரில்தான் இந்த இயக்கம் பிறந்தது, தியாக நெருப்பில்தான் இந்தக் கட்சி உதயமாயிற்று.
கடந்த ஆண்டு, ஈழத்தமிழ் இனத்தைக் காப்பதற்காக, இந்திய அரசின் ராணுவத் தாக்குதல், ராணுவ உதவிகள் நிறுத்தப் படவேண்டும் என்பதற்காக, எங்கள் தொப்பூழ் கொடி உறவுகளைக் கொன்று குவிப்பதற்கு இந்தியா படை அனுப்புவதா? ஆயுதம் வழங்குவதா? இந்தக் கொடுமை நீடிப்பதா? என்று தமிழர்கள் உள்ளம் கொந்தளித்துக்கொண்டு இருந்த நேரத்தில், இதே கோவை மாவட்டத்தின் சாலைகள் வழியாக இந்திய ராணுவத்தின் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் செல்லுகின்றன, கொங்குச்சீமை வழியாகச் செல்லுகின்றன என்ற செய்தி வந்தபோது, அதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக ராணுவ வாகனத்தை மறித்து, ராணுவ வாகனங்களை மறிக்கின்றபோது ஏற்படுகின்ற ஆபத்துக்களைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம்; உயிரே போனாலும் அதைப்பற்றி எங்களுக்குக் கிஞ்சிற்றும் பயம் இல்லை என்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் நெஞ்சுறுதி கொண்ட என் கண்மணிகள் அந்த வாகனங்களைத் தடுத்தார்கள், மறித்தார்கள். பெரியார் திராவிடர் கழகத் தோழர்களும் அந்தக் களத்திலே வந்து நின்றார்கள்.
அப்படிக் களத்துக்குச் சென்று, இந்த உயிர், தமிழ் இனம் காக்கச் செல்லட்டும் என்று சென்ற அந்த வீரன், அதனால் கைது செய்யப்பட்டு, பாதுகாப்புக் கைதியாக, தேசப் பாதுகாப்பு சட்டத்திலே கைதுசெய்யப்பட்டு, கோவை மத்திய சிறையிலே அடைபட்டுக் கிடந்தான் கோவை வேலுச்சாமி. அதைத் தாங்க முடியாமல், வேதனையிலே அந்தக்குடும்பம் தவித்தபோது, முதலிபாளையத்தில் அந்தக் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லுவதற்காக நாங்கள் சென்றோம்.
எத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தால் என்ன? நாங்கள் கவலைப்படவில்லை, ஒரு கொள்கைக்காகத் தானே சிறையில் இருக்கிறார்’ என்று அந்தக் குடும்பத்தினர் அவ்வளவு உறுதியாக இருந்தார்கள். அந்தத் தியாகத்தைப் போற்றி மகிழ்ந்ததை நான் எண்ணிப்பார்க்கிறேன். நிறைமாத கர்ப்பிணி வேலு சாமியின் மனைவி, அந்தக் கட்டத்தில் தான் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடந்தான்.
அதே கொட்டடியிலே, என் ஆருயிர் இளவல் சம்பத் அடைபட்டுக் கிடந்தார் பாதுகாப்புக் கைதியாக. எங்கள் தோழர்கள், இயக்கக் கண்மணிகள் மூவர் அடைபட்டதால், நீதிமன்றத்தில் போராடினோம், அந்த வீரன் விடுதலைப்பெற்று வந்ததற்குப் பிறகு சென்னை மாநகரத்திலே, வரவேற்று வாழ்த்திப் பாராட்டினோம். திருச்சியிலே நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிலே அவருக்குப் பாராட்டுத் தெரிவித்தோம்.
இன்று இந்த அறப்போர்க் களத்துக்கு வர வேண்டியவ வேலுச்சாமி மடிந்து விட்டான். இதோ சாம்பலாகிக் கொண்டு இருக்கிறான். இந்த இயக்கத்தின் கண்மணி ஒவ்வொருவரும், இந்த இயக்கத்திலே இருக்கக்கூடிய ஒவ்வொரு சகோதரனும், இந்த இயக்கத்தின் விலை மதிக்க முடியாத கருவூலம்.
துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல், தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல், ஏளனம் ஏகடியத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அண்ணாவின் இலட்சியம் காக்க அன்னைத் தமிழகத்தைக் காக்க, தரணிவாழ் தமிழரைக் காக்க, எங்களோடு தோள்கொடுத்துப் பயணிக்கக்கூடிய சகோதரர்கள் இவர்கள். அவர்களின் ஒரு உயிர் இழப்பென்றாலும் அந்தக் குடும்பம் தாங்க முடியாத வேதனைக்கு ஆளாகின்றபோது, நாங்கள் தவிக்கிறோம், துடிக்கிறோம். பாச மலர்களாலே கட்டப்பட்ட பாசறைதான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
வேலுச்சாமியின் பிரிவை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனாலும், கடமை ஆற்ற வேண்டுமே? களத்திலே தோழர்கள் செத்து விழுகிறபோதும், மடிகின்ற போதும் அவனது ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தொடர்ந்து போராட வேண்டுமே? அப்படிப் பட்ட இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பதனால், வேலுச்சாமியின் உயிர் அற்ற சடலத்துக்கு நான் மாலை வைக்க போக முடியவில்லை, அண்ணன் சூலூர் பொன்னுச்சாமி அவர்களையும், என்னுடைய ஆருயிர்த் தம்பி மல்லை சத்யா அவர்களையும் சென்று வாருங்கள் என்று அனுப்பி வைத்தேன்.
அந்தக் குடும்பத்தின் கண்ணீரைத் துடைக்க எங்களுக்குச் சக்தி இல்லை. ஆனால், எங்கள் இதயத்தில் இருந்து இரத்தக்கண்ணீர் வடிகிறது. ஒரு கொள்கைக்காகவே வாழ்ந்த ஒரு இளைஞனை இழந்து விட்டோம். “கொள்கைக்காக நான் மடிவேன்” என்றானே, ஒருவேளை முடிவு அவனுக்குத் தெரிந்து இருக்கும். நான் மடிவேன், அதற்குப் பிறகு, எனக்காக இரு சொட்டுக்கண்ணீரை இந்த இயக்கம் சிந்தும், அது போதும் என்று போய் விட்டான். வேதனையில் துடிக்கின்றோம் நாங்கள்.
எங்கள் இயக்கத்தின் கொள்கை வைரமாகத் திகழ்ந்த மேட்டுப்பாளையம் மாதையன் மறைவுற்று, நேற்றைய தினம் டி.டி.ஆர் ஏற்பாடு செய்த அந்த புகழ் அஞ்சலி நிகழ்ச்சியிலே நானும் சம்பத்தும் ஆர்.டி.எம் அவர்களும், நம்முடைய ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் அவர்களும், பொன்னுச்சாமி அவர்களும் கலந்து கொண்டு திரும்பிய பின்னர், நேற்று இரவெல்லாம் தூங்காமல் இந்தப் போராட்டத்துக்கு உரிய ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு, இவ்வளவு வெற்றிகரமாக அமைந்து விட்டது, தொண்டர்கள் கடுமையாக உழைக்கின்றார்கள் என்று, மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டு இருக்கிற பொழுதுதானே, இடி போல இந்தத் தகவலும் வருகிறது. எல்லாம் நொடிப்பொழுதில் நடந்து விடுகிறது எதுவும்.
மாவட்டச் செயலாளர் ஆர்.டி.எம், சின்னஞ்சிறு பிராயத்தில் திராவிட இயக்கத்தின் வீரனாக, மாணவனாக உலவி, மதியழகன் பேச்சைக் கேட்டு, நாவலர் பேச்சைக் கேட்டு, அண்ணாவின் பேச்சைக் கேட்டு, திராவிட இயக்கத்தின் தலைவர்களின் பேச்சைக் கேட்டு, சின்ன வயதிலே திராவிடர் இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு, உடுமலை நாராயணன் இயக்கம் நடத்திய இந்தக் கொங்குச் சீமையில், கோவை ஆரோக்கியசாமியின் உயிர்த் தியாகத்தால் ஓங்கி வளர்ந்த பெருமை பெற்ற இந்த கொங்கு மண்டலத்தில், 16 ஆண்டுகளாக எங்களோடு இருந்து, போராடிக் கொண்டு இருக்கக்கூடிய, தன்னலம் அற்ற, தனக்கு என்ன கிடைக்கும் கட்சியில் இருந்து என்று எந்நாளும் எதிர்பார்க்காத ஒரு கொள்கையாளன், ஒரு இலட்சியவாதி, இந்தப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இரவு பகலாகப் பாடுபட்ட ஆர்.டி.மாரியப்பன் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் இன்றைக்குக் காலையிலே இருந்து?
இந்த மேடையும், இந்த மேடைக்கு முன்னால் விரிக்கப்பட்டு இருக்கின்ற சிவப்புக் கம்பள விரிப்பும், பார்ப்பதற்கு ஒரே தோற்றத்தில் இருப்பதால், ஏதோ கவனத்தில் பேசிக்கொண்டே, அவர் ஒரு காலை எடுத்து மறுபுறம் வைக்கப்போனபோது, அப்படியே சுருண்டு விழுந்தார். அந்த ஒரு நிமிடம், தடுக்க முடியாது. கண்ணுக்கு முன்னால் அவர் விழுவது தெரிகிறது, பிறகு எழுந்து உட்கார்ந்தார், எனக்கு ஒன்றும் இல்லை, நான் நன்றாக இருக்கிறேன்’ என்று சொல்லி விட்டார்.
ஆனால், காலிலே வீக்கம் ஏற்பட்டு விட்டது. அதற்குப் பின்னர், வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி டாக்டர் வரதராஜன் அழைத்துச்சென்று, மருத்துவமனையிலே அவருக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது, கால் பாதத்துக்குக் கீழே எலும்பில் ஒரு சிறிய கீறல் விழுந்து இருக்கிறது, இலேசான முறிவு ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னதற்குப் பின்னரும்கூட, நான் மேடைக்கு வருவேன் என்று இந்த மேடைக்கு வந்து, நான் நின்றுகொண்டே உரையாற்றுவேன் என்று, தன் நெஞ்சில் தணலாக இருக்கின்ற கருத்துக் களையெல்லாம் அவர் இங்கே முழங்கிவிட்டு அமர்ந்து இருக்கிறார்.
இந்தப் பகுதியில் அமராவதி நதிக்கரையிலே வாழ்கின்ற விவசாயப் பெருமக்கள் மட்டும் அல்ல, உடுமலையிலே வசிக்கக்கூடிய மக்களை, இந்த அமராவதி தண்ணீரை நம்பி வாழக்கூடிய விவசாயிகளை, தாராபுரத்தில் இருப்பவர்களை, கரூரில் இருப்பவர்களை 24 தடுப்பு அணைகள், 25 பாசனக்கால்வாய் என்று அமைக்கப் பட்டு, காலங்காலமாகத் தண்ணீரைப் பயன்படுத்திக் கொண்டு வந்த உழவர் பெருங்குடிமக்களை வாழவைத்த தண்ணீர் உரிமையை இழக்கப் போகிறோம், ஏற்கனவே நிறைய இழப்புக்கு ஆளாகி இருக்கிறோம்.
ஆர்.டி.எம் அவர்களும், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சண்முகவேலும் விளக்கமாகவே எடுத்துச் சொன்னார்கள். இப்பொழுது வந்து இருக்கின்ற ஆபத்து, கேரள மாநில எல்லைக்கு உள்ளே இருக்கக்கூடிய மறையூரில். அது தமிழர் பகுதி. அந்தப் பெயர்கள் அனைத்தும் தமிழ்ப் பெயர்கள்தான். சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் காலத்தில் அந்தப் பகுதி முழுவதும் தமிழ்ப் பகுதிகள்தான். காந்தளுர்ச் சாலை என்று, ராஜராஜசோழன் மெய்கீர்த்தியினுடைய பாடல் முதல் வரியிலே வரக்கூடிய காந்தளுர்தான் அந்தக் காந்தளுர்.
அந்த மறையூருக்குப் பக்ககத்தில், நாச்சிமுத்து ஓடை என்கின்ற பகுதியில், தூவானம் அருவிக்குப் பக்கத்தில், 100 ஏக்கர் பரப்பளவில், 230கோடி ரூபாய் செலவில், கேரள அரசு பாம்பாறுக்குக் குறுக்கே ஒரு அணை கட்டுவதற்கு திட்டமிட்டு, இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜனவரி திங்களில் அச்சுதானந்தன் அமைச்சரவையிலே முடிவெடுக்கப்பட்டு, அந்த எடுக்கப்பட்ட முடிவை நிறைவேற்றுவதற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கும், உரிய அமைச்சகங்களுக்கும் அனுமதி கேட்டு எழுதி இருக்கிறார்கள்.
இந்தச் செய்தி வந்தபோதே, ஆர்.டி.எம் எனக்குத் தகவல் தந்தார். ஒரு கண்டன அறிகை கொடுத்தேன். அடுத்த ஆபத்து வருகிறது, தடுப்பதற்கு முன்வர வேண்டும் தமிழக அரசு. மத்திய அரசே நீ அனுமதி கொடுக்காதே, கேரள அரசுக்கு கடிவாளம் பூட்டு, அநீதி இழைக்க அனுமதிக்காதே’ என்று நாங்கள் குரல் கொடுத்தோம்.
எதற்காக அணை கட்டப் போகிறான்? அவன் 40 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக அணை கட்டப் போகிறோம் என்கிறான்.
இங்கே காலையிலே பேசிய ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் அவர்கள் சொன்னார்கள், கேரள மக்களுக்கும் செய்தி கொண்டு செல்கிறவர்களுக்கும் சொல்லு கிறோம், கேரள மக்களை நாங்கள் விரோதிகளாகக் கருதவில்லை, கேரள மக்களுக்குத் துன்பம் விளைவிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் எங்களுக்கு நிரந்தரக் கேடு விளைவிக்க முற்படாதே.
அச்சுதானந்தன் அரசாங்கமே, அநீதி விளைவிக்காதே, அக்கிரமங்கள் செய்யாதே, விபரீதத்தை விலைக்கு வாங்காதே, கேடு செய்யாதே.
“பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தானே விளையும்”
என்று எங்களுக்கு வள்ளுவர் சொல்லித்தந்து இருக்கின்றார். எங்களுக்கு நீ கேடு செய்தால், அதனுடைய பின் விளைவுகள் மோசமாக இருக்கும், அப்படியொரு நிலைமை ஏற்பட்டுவிட அனுமதித்து விடக்கூடாது நாம். அதற்குப் பிறகு யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது என்று, முல்லைப் பெரியாறு பிரச்சனையில் நாம் இதைத்தான் சொன்னோம்.
உனக்கு மின்சாரம் வேண்டும் என்கிறாய். ஏற்கனவே, 70,000 ஏக்கர் பாசனத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்கவில்லை.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அமராவதி ஆற்றுத் தண்ணீரை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தன்பொருநை என்பது எங்கள் தாமிரபரணி என்று இலக்கியம் சொல்லுகிறது. ஆன்பொருநை நதி என்பதுதான் இந்த அமராவதி,
அந்த அமராவதிக்கரை, கரிகாலன் உலவிய கரை, சோழ வேந்தர்கள் உலவிய கரை. கொங்கு வேளாளர் சமுதாய மக்கள் உயிராகப் போற்றி வருகின்ற பகுதி இது.
அமராவதி அணைக்கட்டுத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியர் மூதறிஞர் ராஜாஜி, அணைக்கட்டைத் திறந்து வைத்தவர், தியாகச்சுடர் பெருந்தலைவர் காமராஜர், டி.டி.கிருஷ்ணமாச்சாரியாரை அழைத்துக் கொண்டுவந்து அந்த விழா நடத்தினார்.
58 இறுதிக்கட்டத்திலே இந்த அணை அமைக்கப்பட்டது. இந்த அணை அமைக்கப்பட்டதற்கு முன்பு எவ்வளவு ஏக்கர் பாசனம் இந்த அமராவதி தண்ணீரின் மூலமாக தமிழகம் பயன்பட்டது என்ற கேள்வியை உடுமலை சட்டமன்ற உறுப்பினர் சண்முகவேலு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழே கேட்டதற்கு, இன்றைய தமிழக அரசாங்கத்திற்கு நீர் வள ஆதாரங்களினுடைய அமைப்பினுடைய ஆலோசகராக இருக்கின்றாரே, தலைசிறந்த பொறியாளர் மோகனகிருஷ்ணன் அளித்து இருக்கின்ற பதிலிலே உள்ள செய்தியைத்தான் சொல்லுகிறேன்.
மோகனகிருஷ்ணனே சொல்லுகிறார், 48,500 ஏக்கர் இந்தத் தண்ணீரால் பாசனம் பெற்றது. 12.66டி.எம்.சி. தண்ணீர்அதற்குத் தேவை என்கிறார். அப்படியானால், 58இலே அணை கட்டப்பட்டதற்குப் பிறகு, எவ்வளவு ஏக்கர் பாசனம் பெறுகிறது? அந்தக் கேள்விக்கு அவர் பதில் சொல்லுகிறார்.
21,500ஏக்கர், அரசாங்கம் தந்து இருக்கின்ற தகவல்களின் அடிப்படையிலே, இன்றைய அரசின் ஆலோசகர் தந்த புள்ளி விவரத்தைத்தான் சொல்லுகிறேன். 48,500, 21,500 சேர்ந்து, மொத்தம் 70,000 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இந்த அணை கட்டுவதற்கு முன்பு 12.66 டி.எம்.சி தண்ணீர் தேவைப்பட்டது. அணைகட்டியதற்குப் பிறகு இதனால் பயன்படுகின்ற இந்த நிலங்கள் பயன்படுத்துகின்ற தண்ணீரின் அளவு 4.97டி.எம்.சி தண்ணீர். ஆகவே, 17.63 டி.எம்.சி தண்ணீர் தேவை.
இது அரசாங்கம் கொடுத்து இருக்கின்ற குறிப்பு. அப்படியானால், குடிதண்ணீருக்கு எவ்வளவு தேவை? மடத்துக்குளம் வட்டாரத்துக்கு, தாராபுரம் வட்டாரத்துக்கு உங்களுக்குக் குடிக்கத் தண்ணீர், கரூருக்கு குடிக்கத் தண்ணீர் எவ்வளவு? எறத்தாழ .5 டி.எம்.சி தண்ணீர். அதாவது அரை டி.எம்.சி தண்ணீர்.
தொழிற்சாலைகளுக்கு, சர்க்கரை ஆலைகளுக்குத் தேவையான தண்ணீர் எவ்வளவு? அதுவும் .5 ஒரு அரை டி.எம்.சி தண்ணீர். ஆக மொத்தத்தில்,18.66 டி.எம்.சி தண்ணீர் இந்தப் பகுதிக்குத் தேவை. இது மோகன கிருஷ்ணன் கொடுத்து இருக்கின்ற அறிக்கை.
அதில் அவர், குடிதண்ணீருக்கும் தொழிலுக்கும் எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை பொதுப்பணி துறை ஆய்வாளர், பொறியாளர் மூலமாகத் தெரிந்து கொள்ளுங்கள் என்று தகவல் அனுப்பி உள்ளார்.
இந்தச் செய்தியின் அடிப்படையில்தான் கேட்கிறோம். 18டி.எம்.சி தண்ணீர் வேண்டும். என்று கேட்டதற்கு, அலட்சியமாகப் பதில் சொன்னார் அமைச்சர் துரைமுருகன். சட்டமன்றத்தில் மிக அலட்சியமாக, எகத்தாளமாகச் சொன்னார், ‘எந்தப் பாதிப்பும் கிடையாது’ என்று சொன்னார். ஏற்கெனவே பாம்பாற்றுக்கு குறுக்கே கேரளா அணை கட்டுவதற்கு முன்பாகவே இப்பொழுது தண்ணீர் கிடையாது.
இங்கே 48, 49 குடிநீர் திட்டங்கள், இந்த அமராவதி தண்ணீரை அடிப்படையாகக் கொண்டுஇயங்குகின்றது. இந்தக் குடிநீர் திட்டங்களுக்குத் தண்ணீர் இல்லாமல், இன்றைக்குத் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவருகின்ற வேலை நடந்துகொண்டு இருக்கிறது. இனி பாம்பாற்றுக்குக் குறுக்கே அவன் அணை கட்டி தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்வான். ஒட்டுமொத்தமாக சொட்டுத் தண்ணீர் வராது, உங்களுக்குக் கிடைக்காது.
மின்உற்பத்திக்காக மட்டுமா அணை கட்டுகிறார்கள்? பெப்சி, கோக் போன்ற குளிர் பானங்களைத் தயாரிக்கக்கூடிய கம்பனிகளுக்குத் தண்ணீர் கொடுப்பதற்காக இந்த முயற்சியிலே கேரள அரசு ஈடுபட்டு இருப்பதாகவும் செய்தி வந்து இருக்கிறது. அவர்கள் மாநிலத்துக்கு உள்ளே அவர்கள் அணை கட்டினால், நாம் என்ன செய்ய முடியும்? என்று இந்தக் கேள்வியை யாரும் எழுப்பலாம். அவர்கள் மாநிலத்துக்கு உள்ளே அவர்கள் அணை கட்டிக்கொண்டால் நாம் என்ன செய்ய முடியும்?
நம் மாநிலத்துக்கு உள்ளே நாம் சுவர் வைத்து எந்தப் பாதையிலும் எந்தப் பொருளும் போகக்கூடாது என்று தடுத்து விட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? (பலத்த கைதட்டல், பெரும் ஆரவாரம்)
எங்கள் மாநிலத்துக்குள்ளே நாங்கள் ஒரு அணையைக் கட்டுகிறோம்; மனிதர்கள் சுவராக நின்று ஒன்றும் வரக்கூடாது என்று தடுத்து விடுகிறோம். நீ வாழ முடியுமா?
கேரள மக்களைப் பட்டினி போடுவது எங்கள் நோக்கம் அல்ல, அவர்களைத் துன்புறுத்துவது எங்களுடைய நோக்கம் அல்ல. இதற்கு என்ன வழி?
உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவன் குப்பைத் தொட்டியில் போடுவான். மத்திய அரசு செய்கின்ற வஞ்சகத்தை தடுக்காது, அந்த வஞ்சகத்துக்குத் துணை போகும். கேடு கெட்ட கலைஞர் கருணாநிதி அரசு, இந்த இனத்துக்கு, தமிழ் சமுதாயத்துக்குத் துரோகம் செய்யும். அப்படியானால் எங்கள் விவசாயிகளுக்கு என்ன வழி? கட்சிகளைக் கடந்து சிந்தியுங்கள்.
எந்தப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு. நாங்கள் அணை கட்டுவோமானால் அதைத் தடுக்க நீ யார்? என்று அவன் முடிவெடுக்கக்கூடாது என்பதற்காகத்தான், நாங்கள் சாலைகளை மறிப்போம் என்கிறோம்.
உனக்கு அரிசி, பருப்பு, காய்கறி எல்லாம் தந்து கொண்டு இருக்கிறோம், நீ சாப்பிடுவதற்குத் தேவையான பொருட் கள் ஆடு, மாடு எல்லாம் போகிறது, இந்த ஆற்றுப்படு கைகளைச் சுரண்டி ஆளும்கட்சி அடிக்கின்ற கொள்ளை யின் காரணமாக, மணலும்கூட உனக்கு வந்து சேருகின்றது. படித்த சிந்தனையாளர்கள், பொறியாளர்கள், நடு நிலையாளர்கள் இங்கே வந்து இருப்பார்கள், நான் கேட்கிறேன்.
அண்ணல் மகாத்மா காந்தி அகிம்சையைப் போதித்த நாட்டில், கத்தியின்றி, இரத்தமின்றி, யுத்தம் நடத்தி வெற்றி பெற்றோம் என்று பல்லாண்டு பாடுகின்ற நாட்டில், மகாத்மாவின் படத்தைத்தான் என் அறையிலே மாட்டி வைத்து இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சொல்லுகின்ற அளவுக்கு உலகம் போற்றுகின்ற உத்தமர் காந்தி பிறந்த நாட்டில், நீ ஏன் அணுகுண்டு தயாரிக்கிறாய்?
நீ ஏன் நைட்ரஜன் குண்டு தயாரித்து வைத்து இருக்கிறாய்? வாதத்திற்காகத்தான் சொல்லுகிறேன். அகிம்சையைப் போதித்த நாட்டில் அணு ஆயுதங்களைத் தயாரித்து வைத்து இருக்கிறாய், எதற்காக?
பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்து இருக்கிறது. நான்கு போர்க்களங்களிலே சந்தித்து விட்டோம். அங்கு ஜனநாயகம் இல்லை, அக்கிரமான முறையிலே போர் தொடுக்கிறார்கள், எல்லை தாண்டி வருகிறார்கள், ஆயுதம் ஏந்துகிறார்கள், மோதல் நடக்கிறது, அந்த மோதலில், கடைசிக் கட்டத்தில் நடைபெற்ற போர்தான் கார்கில் யுத்தம். சர்வாதிகாரியின் கையிலே இராணுவம், ராணுவத்தின் கையிலே ஆயுதங்கள். தவறான முறையிலே யுத்தத்தை நடத்த முயற்சித்து அணுகுண்டை வீசிவிட்டால் டில்லி என்னாவது? மும்பை என்னாவது? சென்னை என்னாவது? இந்தியா என்னாவது, என்று நினைத்துத்தானே நீங்கள் அணுகுண்டு வைத்து இருக்கிறீர்கள்?
அன்றைக்குத் தலைமை அமைச்சராக இருந்த வாஜ்பாய் நாடாளுமன்றத்திலே இதைச் சொன்னார். நாம் போருக்குப் போகப் போவது இல்லை. ஒருபோதும் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம், எவர் மீதும் பயன்படுத்த மாட்டோம், ஆனால் எதற்காக அணு ஆயுதங்களைக் கொண்டு இருக்கிறோம் என்றால், எதிரி நம்மீது வீசி விடக்கூடாது என்று, அவனை எச்சரித்துத் தடுப்பதற்குத்தான் நாம் அணு ஆயுதம் வைத்து இருக்கிறோம். நாம் டெல்லியில் வீசினால், கராச்சியில் அடிப்பான், இஸ்லாமாபாத்தில் அடிப்பான் என்ற பயம் இருந்தால் அவன் வீச மாட்டான். இதைத் தான் சொன்னார் பிரதமர். இந்த அரசும் அதைத்தான் சொல்ல முடியும். உலகநாடுகள் ஒவ்வொன்றும் இதைத்தான் சொல்லுகிறது.
எதற்காக அமெரிக்கா அணு ஆயுதம் வைத்து இருக்கிறான்? எதற்கு இஸ்ரேல் இன்றைக்கு அணு ஆயுதம் வைத்து இருக்கிறது? எதற்குச் சீனா அணுஆயுதம் வைத்திருக்கிறது? ஒவ்வொருவரும் என்ன சொல்லுகிறான்? எங்கள் மீது யாரும் அணுஆயுதம் வீசக்கூடாது. ஆகையினால் நாங்கள் தடுப்பு நடவடிக்கையாக வைத்து இருக்கிறோம் என்கிறார்கள்.
இதே வாதத்தைத்தான் நாம் முன் வைக்கிறோம். கேரளாவுக்குப் பொருட்கள் போகக் கூடாது என்று சொல்லுவது எதற்கு? பாதையை அடைப்போம், மறிப்போம் என்று சொல்லுவது எதற்கு? உச்ச நீதிமன்றத்திலே நீதி கிடைக்கவில்லை, கிடைத்த நீதியைக் காப்பாற்ற முடியவில்லை, காப்பாற்றும் கடமையையும் இந்த அரசு கேட்கவில்லை, கேரள அரசு அதை மதிக்கவில்லை, காலில் போட்டு மிதித்துவிட்டு கேடு செய்ய முனைகிறது.
நம்முடைய நியாயமான சட்டபூர்வமான உரிமைகளுக்கு உலை வைக்க முயல்கின்றது. அப்படி முனைகிறபோது எமக்கு என்ன வழி? நாம் வன்முறையில் இறங்கவில்லை, இங்கு வாழும் கேரள சகோதரர்கள்மீது தாக்குதல் நடத்த நான் விரும்பவில்லை, கேரள சகோதரர்கள் வைத்து இருக்கின்ற கடைகளை தாக்கவேண்டும் என்று நான் விரும்பவில்லை, மறுமலர்ச்சி தி.மு.க.வைப் பொறுத்தமட்டிலே, எங்கள் அணுகுமுறை ஒருபோதும் அந்தக் கருத்தை நாங்கள் முன்வைக்க மாட்டோம்.
கேரள மக்கள் யோசிக்க வேண்டும். எங்களுக்கு ஆயிரம் வருடத்துக்கு உறுதி அளிக்கின்ற முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதற்கு முயற்சித்து ஒரு புதிய அணை கட்டத் திட்டம் போடுகிறீர்கள். உச்சநீதிமன்றத்திலே வழக்கு நடக்கிறது. மூன்று வருடம் கழித்துச் சொல்லுகிறான், இனி இந்தக் நீதிமன்றம் விசாரிக்ககூடாது, சுப்ரீம்கோட்டிலேயே, அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்கிறான். இது காலம் கடத்துகின்ற வேலை. அதற்கு இடையில் அணையை உடைத்து விடலாம் என்பதுதான் திட்டம்.
தமிழக அரசு வழக்கறிஞர் பராசரன் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாரா? தெரிவித்தார், காலையில் தெரிவித்தார். பிற்பகலிலே போய், அரசியல் சட்ட அமர்வு விசாரித்துக் கொள்ளலாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டார், நண்பகல் உணவு இடைவேளையிலே, கருணா நிதி கொடுத்த யோசனையின் காரண மாக பராசரன் எழுதிக் கொடுத்து விட்டார் என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.
ஆகவே, ஓரு பேராபத்து உருவாகி விட்டது தென்தமிழ் நாட்டுக்கு. நாங்கள் தெற்குச் சீமையிலே கரிசல் காட்டிலே வாழ்ந்தவர்கள். உங்களைத்தான் பார்த்து, கொங்கு மண்டல விவசாயி, அவர்களாவது நல்லா இருக்கின்றார் களே, தென்னை வைத்து, வாழை வைத்து, கரும்பு வைத்து செழிப்பாக நல்ல வசதியாக இருக்கின்றார்கள் என்று நினைத்தோம். இப்போது, உங்களுடைய வாழ்வும் அழிந்து போகுமோ என்று நாங்கள் கவலைப்படுகிறோம்.
நொறுங்கிக் கிடக்கிறான் விவசாயி. இன்றைக்குத் தமிழகத்திலே முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, துன்பத்தின் பிடியிலே சுக்கு நூறாகித் தவித்துக் கொண்டு இருப்பவர்கள் யார் என்றால், அது விவசாயிகள்தான். ஆகவேதான், நேற்று முன்தினம் அண்ணா தி.மு.க பொதுச் செயலாளர் புரட்சித் தலைவி அவர்கள், கரும்பு விவசாயிகளுடைய நலனுக்காக கரும்புக்கு விலை உயர்த் துங்கள் என்று கேட்டு நடத்திய போராட் டத்திலே பல்லாயிரக் கணக்காணவர்கள் கலந்து கொண்டார்கள்.
இங்கே அமாராவதியிலே பாம்பாற்றுக்குக் குறுக்கே அணை கட்டுவதற்கு திட்டம் தீட்டி விட்டார்கள். பிரச்சனைக்கு என்ன தீர்வு? தீர்வு இருக்கின்றது. உனக்கு மின்சாரம்தானே வேண்டும்? ஏற்கனவே நெய்வேலியிலே இருந்து 210 மெகா வாட் மின்சாரம் நாங்கள் தருகிறோம்.
இப்பொழுது அமைக்கப்பட்டு இருக்கின்ற கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்தும், மத்திய தொகுப்புக்கு தரப்படுகிற மின்சாரத்திலே ஒரு பகுதி கேரளாவுக்குத் தரத் திட்டமிட்டு இருக்கிறார்கள். அதைப்போல பரிவர்த்தனை செய்து கொள். நான் அரசாங்கத்திலே இல்லை, இதைச் சொல்லக்கூடிய அதிகாரத்தில் நான் இல்லை, காலம் மாறும் நிலைமைகள் மாறும் நல்ல சூழல்கள் உருவாகும். துரோகிகளுக்கு இடம் இல்லாமல் போகும், தமிழகத்துக்குத் துரோகம் செய்கின்றவர்களைத் தமிழக மக்கள் தூக்கி எறிகின்ற காலமும் வரும்.
உனக்கு என்ன மின்சாரம் வேண்டும்? என்ன பொருள் வேண்டும்? தமிழகத்திலே வாங்கிக்கொள், ஆனால் எங்கள் வாழ்வை அழிக்க நினைக்காதே, நீயும் வாழலாம், நாங்களும் வாழலாம்.
கேரளாவில் இருந்து 2000 டி.எம்.சி தண்ணீர் அரபிக் கடலிலே கலந்து வீணாகின்றதே, அந்தத் தண்ணீரை நாங்கள் கேட்கின்றோம். இடுக்கி மாவட்டத்திலே மட்டும் 92 டி.எம்.சி தண்ணீர் கடலிலே வீணாகிறது. நாங்கள் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்கிறோம். வாழ் வதற்குத் தண்ணீர், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த உழவர் பெருங்குடி மக்களின் உரிமைக்காகத் தண்ணீர் கேட்கின்றோம். அது எங்களுக்கு இல்லை என்றால், உங்களுடைய தயவு எங்களுக்கு என்ன வேண்டி இருக்கு?
உனக்கு நதிகள் இருக்கின்றது, ஆறுகள் இருக்கின்றது, தண்ணீர் இருக்கின்றது. 2000 டி.எம்.சி தண்ணீர் கடலில் போகிறது. ஆனால், விளைநிலம் இருக்கிறதா? உனக்கு விளைநிலம் கிடையாது, நீ நினைத்தாலும் விவசாயம் செய்ய முடியாது.
எங்களுக்குத் தண்ணீர் தரமாட்டோம் என்று சொன்னால், எதிர்காலத்தில் என்னைப்போல ஒலி பெருக்கியில் பேச மாட்டான், அவன் வேறு வழியிலே பேசுவான். அவன் பேசத்தெரிந்தவன்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவன் ஆயுதம் ஏந்தியவன் மறந்து விடாதே. இந்தப் பகுதி மக்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டு விட்டால் பிறகு யாரும் தாங்கமுடியாது. ஏனென்றால் இந்தக் கருமலைக் காடுகளில்தான் தீரன் சின்னமலை உலவினான் என்பதை மறந்துவிடாதே, சின்னமலையின் வாரிசுகள் தான் இங்கே இருக்கிறார்கள். துப்பாக்கிக்கும் பீரங்கிக்கும் அஞ்சாதக் கூட்டம். (பலத்த கைதட்டல்)
கொங்குமண்டலம் சிலிர்த்து எழுகின்றபோது, பாண்டிய மண்டலம் ஏற்கனவே கோபத்தில் இருக்கிறது. நாஞ்சில் நாடு ஏற்கனவே தயாராகின்றது, நெய்யாற்றில் கொடுத்த தண்ணீரை நிறுத்தி விட்டாய் ஐந்துவருடமாக, நெய்யாற்றில் தண்ணீர் கொடுப்போம் என்று, தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் கேரள முதலமைச்சர் அச்சுதானந்தமும் கலந்துகொண்ட கூட்டத்தில் ஒரு ஒப்பந்தத்திலே சொன்னார்கள்.
நெய்யாற்றில் தண்ணீர் விடப்படும், அப்பொழுது நிறுத்தி வைத்து இருந்தார்கள். உடனே நம்முடைய பொறியாளர் கள் நெய்யாற்றில் தண்ணீர் வருமா என்று கேட்டார்கள். கேரள அமைச்சர் பிரேமச்சந்திரன் சொன்னார் அப்படி யெல்லாம் நாங்கள் உறுதிமொழி கொடுக்கவில்லை என்று, ஐந்து வருடமாகத் தண்ணீர் கிடையாது.
நாஞ்சில் சம்பத் பிறந்த மணலிக்கரை ஊர் உள்ளிட்ட அந்தப் பகுதியிலே நாஞ்சில் நாட்டிலே 30,000 ஏக்கருக்குத் தண்ணீர் கிடையாது. ஏற்கனவே எல்லைப் போராட்டத்திலே துப்பாக்கிகளைச் சந்தித்தவர்கள் நம்முடைய குமரி மாவட்ட வீரர்கள்.
அந்த நாஞ்சில் மண்ணுக்கு, கன்னியகுமரி மாவட்டத்துக்கும் கேடு செய்துவிட்டாய். தென்பாண்டி மண்டலத்தின் எதிர்காலத்தை அழிக்கக்கூடிய அளவுக்கு முல்லைப்பெரியாறு அணையை அழிப்பதற்கு திட்டமிட்டு விட்டாய், இங்கே கொங்குச் சீமை கரூர் மக்களுக்கு, தாராபுரம் உடுமலை வட்டார மக்களுக்கு, விவசாயிகளுக்கு குடிக்கத் தண்ணீர் இல்லை, விவசாயம் செய்யத் தண்ணீர் இல்லை என்றால், இந்தப் பகுதியிலே பிறகு தொழில் இருக்குமா? வணிகம் நடத்தமுடியுமா? கடைகள் சிறப்பாக இருக்க முடியுமா?
நம்முடைய செந்திலதிபன் மிக அழகாகச் சொன்னார். காவேரிப் பிரச்சனையிலே துரோகம், முல்லைப் பெரியாற்றிலே துரோகம், பாலாற்றிலே துரோகம், இன்றைக்கு பாம்பாற்றிலே துரோகம் இத்தனை துரோகத்தின் மறுபெயர் கருணாநிதி என்று சொன்னார்.
உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இன்றைக்குப் பல்லாயிரக்கணக்கானவர்கள் உடுமலையிலே திரண்டு இருக்கிறீர்கள். அமராவதி நதிக்கரையிலே அமராவதி தண்ணீரை எதிர்பார்த்து வாழக்கூடிய விவசாயிகளையும், குடிதண்ணீரை எதிர்பார்த்து வாழக்கூடிய இந்த வட்டாரத்து மக்களையும் பாதுகாப்பதற்காக இந்தப் போராட்டம் நடத்துகின்றோம். ஒரு விழிப்புணர்வுக்கான போராட்டம். இந்தச் செய்திகள் அங்கே போக வேண்டும்.
இந்தச் செய்திகள் அங்கே போகவேண்டும், தப்புச் செய்யாதே, அணை கட்டாதே என்று தடுப்பதற்கு எனவே எச்சரிக்கை செய்கின்றோம்.
மத்திய சர்க்காருக்குச் சொல்லுகிறேன். செஞ்சேனைகளின் கட்டுப்பாட்டுக்கு உள்ளே சோவியத் மண்டலம் இருந்தது. செஞ்சேனை அமெரிக்க ராணுவத்துக்கு நிகரான பலம் பொருந்திய ராணுவம். அந்தக் கட்டுப்பாட்டிலே இருந்தது. ஆனால் ரஷ்யா என்கின்ற அந்த ஒரு மாநிலம் பிற மாநிலங்களை வஞ்சிக்கின்றது. உக்ரைன் வஞ்சிக்கப்படுகிறது, பைலோரஷ்யா வஞ்சிக்கப்படுகிறது என பிரச்சினைகள் ஏற்பட்டபோது, சோவியத் ஒன்றியம் உடைந்து 15 நாடுகளாக, துண்டுதுண்டாகச் சிதறிப் போனது.
இதே நிலைமை இந்தியாவில் ஏற்பட்டு விடக்கூடாது. ஏற்கனவே, ஈழத்தமிழர்களுக்குச் செய்த துரோகம் மன்னிக்க முடியாதது. எங்கள் தொப்புள்கொடி உறவுகளை, இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க இந்திய அரசு ஆயுதம் கொடுத்தது. கலைஞர் கருணாநிதி அதற்கு உடந்தையாக இருந்தார்.
எனவே, கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு, உலகத் தமிழ் செம்மொழிமாநாடு நடத்த எந்த அருகதையும் இல்லை என்று என்னுடைய தோழர்கள் இந்த மேடையிலே பேசினார்கள்.
தமிழகத்தின் நதி ஆதாரங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டால், வருங்காலச் சந்ததிகள் நம்மை மன்னிக்காது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வந்த நம்முடைய நீர் ஆதாரங்களை இழந்துவிடக்கூடாது. அந்த ஆபத்து நம்மைச் சூழ்ந்திருக்கிறது. அதைத் தடுப்பதற்காகத்தான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் இந்த அறப்போராட்டத்தை நடத்தினோம்.
அடுத்த கட்டம், கேரள அரசே பாம்பாற்றின் குறுக்கே அணைகட்ட நினைக்காதே, உன் திட்டத்தைக் கைவிடு.
இல்லையேல், உன்னுடைய மாநிலத்துக்கு வருகின்ற எல்லாப் பாதைகளையும் நாங்கள் அடைப்போம். கன்னியாகுமரி மாவட்டம் தயாராகிவிடும். பார சாலையிலே மறிப்போம்,
களியக்காவிளையிலே மறிப்போம், எந்த வாகனமும் செல்லக்கூடாது என்போம். திருநெல்வேலிச் சீமையிலே, செங்கோட்டையிலே மறிப்போம்; கம்பத்திலே மறிப்போம், கூடலூரிலே மறிப்போம்.
கம்பம் பள்ளத்தாக்கிலே மறிப்போம். கொங்குமண்டலம் பொங்கி எழும். பாலக்காட்டுக்குப் போகிற பாதையை மறிப்போம்.பொள்ளாச்சியில் இருந்து போகிற பாதையை மறிப்போம். கேரளத்திற்குச் செல்லுகின்ற அத்தனைப் பாதைகளையும் நாங்கள் மறிப்போம். அதற்கு முன்னதாக, மக்களை ஆயத்தப்படுத்துகின்ற வேலையிலே ஈடுபடுவோம்.
முல்லைப் பெரியாறிலே கம்பத்திலே மறிப்பதற்கு முன்பு நூற்றுக்கணக்கான ஊர்களுக்கு தெருத்தெருவாக நான் போனேன். கட்சிக்கு ஆள் சேர்ப்பதற்கு அல்ல, அரசியல் பேச அல்ல அன்னைத் தமிழகத்தின் உரிமைகாக்க, தென் பாண்டி மண்டலத்தின் உரிமைகாக்க, பல்லாயிரக் கணக்கிலே திரண்டு வந்தார்கள். (பலத்த கை தட்டல்)
அதே போல இந்த போராட்டத்துக்கும் ஆயத்த வேலையிலே ஈடுபடவேண்டும். ஒரு பக்கத்திலே சம்பத் சுற்றி வருவார். நான் ஊர்ஊராக வருவேன், இந்த கொங்கு மண்டலத்திலே வருவேன், கரூர் மாவட்டத்திலே வருவேன். ஈரோடு மாவட்டத்தில், கோவை மாவட்டத்தில் இந்தப் பகுதிகள் ஒவ்வொரு ஊருக்கும் செல்வோம். மக்களைத் திரட்டுவோம். வருகிற ஆபத்தைத் தடுப்பதற்கு அறப்போருக்கு வாருங்கள், மறியல் போருக்கு வாருங்கள் என்று மக்களைத் திரட்டுவேன், குமரி மாவட்டம் செல்வேன். நெல்லை மாவட்டம் செல்வேன். தெற்குச் சீமையிலே சுற்றிவருவேன்.
மக்களைத் திரட்டுவேன், திரட்டுவோம். திரட்டிக்கொண்டுபோய் நிறுத்துவோம். மறிப்போம்.
ஒரு அடையாள வேலை மறியல். எதற்கு? எச்சரிகை செய்ய. இது நிரந்தர முத்திரையாக எதிர்காலத்திலே மாறிவிடாமல் இருப்பதற்காக ஒரு நாள் முற்றுகை.
அனைத்துத் தரப்பினர்களுடைய ஆதரவையும் இந்தப் போராட்டத்திற்குக் கேட்போம். விவசாய சங்கங்கள், தமிழர் நலன் உரிமையைக் காக்கின்ற போராட்ட அமைப்புகள் அனைவருடைய ஆதரவையும் திரட்டுவோம். விவசாயிகள் ஆதரவைத் திரட்டுவோம். பொதுமக்கள் ஆதரவைத் திரட்டுவோம். மே 28ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் கேரளத்திற்குச் செல்லுகின்ற அத்தனைப் பாதைகளையும் மறிக்கின்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்துவோம். தமிழர்களே அணிதிரள்வீர்!
கழகப் பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

