செங்கல்பட்டு முகாமில் ஈழத் தமிழர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்! வைகோ கண்டனம்
Issues: Human Rights, Srilanka
Region: Tamil Nadu
Category: Headlines
செங்கல்பட்டு முகாமில் ஈழத் தமிழர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்!
வைகோ கண்டனம்
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல்வேறு வழக்குகளின்பேரில் 33 ஈழத் தமிழர்கள் சிறையில் உள்ளனர். தங்களைப் பொய் வழக்குகளிலிருந்து விடுவிடுக்கக் கோரி, ஒத்துழையாமை இயக்கம்போல் அறவழியில் உண்ணாநிலை அறப்போரைக் கடந்த இரண்டு நாள்களாக நடத்துகின்றனர். இதேபோன்று பலமுறை அறவழிப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்த உண்ணாநிலை அறப்போரைக் கைவிடவில்லை என்ற காரணத்தால் நேற்று நள்ளிரவு காவல்துறையினர் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பத்மராஜா, கிருஷ்ணநீதன், முகமது ரிஸ்வான், கிரிதாஸ், அமலன், ஜெயமோகன், அருள், முத்து (எ) கங்காதரன், பரமேஸ்வரன், சேகர், பகீரதன், செல்வகுமார், ரமணன், பிரதீபன், பாரதிதாசன் ஆகியோர் மிகக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் மீது 148, 324, 294 (b), 332, 506/2, 307 பிரிவுகளில் வழக்குகள் புனையப்பட்டு, செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கடுமையான காயத்தின் காரணமாக புழல் மத்திய சிறையில் அவர்களை அனுமதிக்காததால் வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். உலக மனிதாபிமானி பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுநாளன்று ஈவிரக்கமற்ற இந்தத் தாக்குதலை தமிழ்நாடு அரசு காவல்துறை செய்துள்ளது.
மனிதாபிமானமற்ற முறையில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் நடத்தப்படும் ஈழத் தமிழர்களைப் பொய் வழக்குகளிலிருந்தும் சிறையிலிருந்தும் விடுதலை செய்ய வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு எதிராக இரக்கமற்று செயல்படும் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கிறேன்.