உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் துரோகம்! அரிச்சுவடி தெரியாத அரசு வழக்கறிஞரின் மோசடிவாதம்! வைகோ கடும் கண்டனம்!

Issues: Economy, Farmers, Rural

Region: Madurai - Urban, Madurai - Rural, Ramanathapuram, Theni, Tamil Nadu

Category: Headlines, Press Releases

Date: 
Fri, 05/02/2010

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் துரோகம்!
அரிச்சுவடி தெரியாத அரசு வழக்கறிஞரின் மோசடிவாதம்!
வைகோ கடும் கண்டனம்!

தென்தமிழ்நாட்டின் ஐந்து மாவட்ட மக்களின் எதிர்கால வாழ்வையே பாழாக்கும் விபரீதம், கேரள அரசின் அக்கிரமப் போக்கால், நம் தலைமீது கத்தியாகத் தொங்குகிறது. முல்லைப் பெரியாறு ஆற்று நீரில், 999 ஆண்டுகளுக்கு சட்டப்படி தண்ணீர் உரிமையை தமிழ்நாடு பெற்று உள்ளது. ஆயினும், முல்லைப் பெரியாறு அணை உடையும் என்ற பொய்ப்பிரச்சாரத்தை 79 இல் கேரளம் மேற்கொண்டபோது, மத்திய அரசின் தலையீட்டால், மைய அரசின் நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவர் கே.சி.தாமÞ முன்னிலையில், தமிழ்நாடு அரசும், கேரள அரசும், ஒரு உடன்பாட்டைச் செய்து கொண்டன.

முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்வது என்றும், அதுவரை 135 அடி உயரத்துக்குத் தண்ணீரைத் தேக்குவது என்றும், அணையை வலுப்படுத்திய பின்பு, முன்பு இருந்த 152 அடி உயரத்துக்குத் தேக்குவது என்றும் மடிவு செய்யப்பட்டது.


கேரளாவின் இடையறாத முட்டுக்கட்டைகளையும்மீறி, அணையைப் பலப்படுத்தும் பணிகளைத் தமிழக அரசுமேற்கொண்டு, அணை முன்னிலும் பலமடங்கு வலுவாகி விட்டது.


இதற்கு இடையில், பிரச்சனை உச்சநீதிமன்றத்திற்குச் சென்றதால், அணையின் வலிமை குறித்து, நிபுணர்களான மிட்டல், பிரார், ராஜூ ஆகியோர் தலைமையிலான குழுக்கள், தக்க ஆய்வுகளை மேற்கொண்டு, ‘அணை வலுவாக உள்ளது; எந்தச் சேதமும் ஏற்படாது’ எனத் தந்த அறிக்கைகளையும் கருத்தில்கொண்டு இருதரப்பு வாதங்களையும் கேட்டு தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டி, உச்சநீதிமன்றம் 2006 பிப்ரவரி 27 ஆம் தேதி தீர்ப்புத் தந்தது.


தமிழக அரசு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், பேபி அணையை வலுப்படுத்திக்கொண்டு, முதலில் 145 அடிக்கும், பின்னர் 152 அடிக்கும் உயர்த்திக் கொள்ளலாம் என்றும், இந்தப் பணிகளுக்குக் கேரள அரசு எவ்வித முட்டுக்கட்டையும் போடக்கூடாது என்றும் திட்டவட்டமாகத் தீர்ப்பு கூறிவிட்டது.


ஆனால், கேரள அரசு, 2006 மார்ச் 18 இல் கேரள அணைகள் நீர்த்தேக்கங்கள் பராமரிப்பு பாதுகாப்புச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை இயற்றி, அதுவரை கேரள அரசின் பட்டியலில் இடம்பெறாத முல்லைப் பெரியாறை அதில் சேர்த்ததோடு மட்டும் அல்லாமல், கேரளத்தில் உள்ள எந்த அணையையும் செயல் இழக்கச் செய்ய, (அதாவது உடைக்க) கேரள அரசுக்கு உரிமை உண்டு என்றும், இதில் எந்த நீதிமன்றமும் தலையிடக்கூடாது என்றும், மிக அக்கிரமமான ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.


இதனை எதிர்த்து அண்ணா தி.மு.க. அரசு உச்சநீதிமன்றத்தில், வழக்குத் தொடுத்தது, 2006 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மைனாரிட்டி தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றது. அதேவேளையில் கேரளத்தில் ஆட்சிக்குவந்த அச்சுதானந்தன் அரசு, ‘முல்லைப் பெரியாறு அணை உடையும்’ என்று பொய்ப்பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியது. ‘அணையின் பராமரிப்பைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று பிரதமரிடம் கோரிக்கை விடுத்தது.


அதை எதிர்த்து, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய கடமையில் தமிழக முதல் அமைச்சர் தவறினார்.


உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு, வழக்கை இழுத்தடிப்பதற்காகவே 33 தடவைகள் வாய்தா வாங்கியபோதும், தமிழக அரசின் வழக்கறிஞர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே இல்லை.


எப்படியும் தங்களின் நிலைப்பாட்டுக்கு எதிரான, நியாயமான தீர்ப்புத்தான் கிடைக்கும் என எண்ணிய கேரள அரசு, தந்திரமாக, ‘வழக்கை விசாரிக்கக்கூடாது; இதை அரசியல் சட்ட அமர்வு மன்றம்தான் விசாரிக்க வேண்டும்’ என்ற வாதத்தை வைத்தது. தமிழக அரசின் வழக்கறிஞர் ஒப்புக்கு முற்பகலில் ஆட்சேபணை தெரிவித்துவிட்டு, பிற்பகலில் எழுத்துமூலமாக அதற்குச் சம்மதம் தெரிவித்தது மிகப்பெரிய தவறு ஆகும்.


பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையை உடைப்பது ஒன்றே கேரளத்தின் குறிக்கோள் ஆகும். புதிய அணை கட்ட முற்படுவதே, அங்கு உள்ள பாறைகளை உடைப்பதால், முல்லைப் பெரியாறு அணையைச் சேதப்படுத்தி உடைப்பதற்காகத்தான்.


புதிய அணை கட்ட ஆய்வு நடத்த அனுமதி கொடுத்தது, மத்திய அரசு தமிழ்நாட்டுக்குச் செய்த துரோகம் ஆகும். ஆய்வுக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் அணை கட்ட இயலாது என்று, கேரள அரசு அமைத்த ஆய்வுக் குழு கூறிவிட்டதால், அதற்குப் பக்கத்திலேயே புதிய அணை கட்ட கேரள அரசு திட்டமிடுகிறது. மத்திய அரசின் அனுமதி இல்லாமலேயே ஆய்வுசெய்கிறது.


இந்தப் பின்னணியில், தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது, 1979 இல் செய்த உடன்பாட்டின்போது, மத்திய அரசு பங்கு ஏற்றதா? என்று கேட்டதற்கு, தமிழக அரசின் வழக்கறிஞர் பாராசரன், அடிப்படை உண்மைக்கு மாறாக, ‘மத்திய அரசு அந்தப் பேச்சுகளில் பங்கு ஏற்கவில்லை’ என்று கூறி உள்ளார்.


அப்போது மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருந்த தாமÞ செய்த ஏற்பாட்டின் பேரில், அவரது முன்னிலையில்தான் உடன்பாடு செய்யப்பட்டது என்ற அரிச்சுவடி உண்மைகூடத் தமிழக அரசு வழக்கறிஞருக்குத் தெரியாதா?


அதுமட்டும் அல்ல; புதிய அணைக்க தமிழக அரசு ஆட்சேபணை உண்டா? என்று நீதிபதிகள் கேட்டதற்கு, ‘ஆட்சேபணை இல்லை என்றும், ஆனால், அணையின் கட்டுப்பாட்டைத் தமிழகத்திடம் தரவேண்டும்’ என்றும் வழக்கறிஞர் பராசரன் தெரிவித்து உள்ளார்.


அரசு வழக்கறிஞரின் தனிப்பட்ட கருத்து என்பதை எவரும் ஏற்கமாட்டார்கள்.


999 ஆண்டுகளுக்குச் சட்டப்படி உரிமை உள்ள முல்லைப் பெரியாறு உரிமையைச் செயல்படுத்தவே விடாமல் கேடு செய்கிறது கேரள அரசு.


இந்தநிலையில், அவர்கள் கட்டும் புதிய அணையின் நிர்வாகத்தை, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டும் என்று கேட்பது, தமிழக மக்களை ஏமாற்றுகின்ற மோசடி வாதம் ஆகும்.


புதிய அணையைக் கேரளம் கட்டினால், அது நமது முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே பள்ளத்தில் கட்டும் அணையாகவே அமையும். யார்
முயன்றாலும் அங்கே இருந்து தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கொடுக்க முடியாது. பொறியாளர்கள் அனைவருக்கும் இது தெரியும். இந்த உண்மையை, தமிழக வழக்கறிஞர் அறியமாட்டாரா?


கால்பந்து விளையாட்டில், எதிரிக்குச் சாதகமாகப் பந்தை உதைத்து, தங்கள் அணியையே தோற்கச் செய்வது என்பதுபோல, தமிழக அரசின் வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் செயல்படுகிறார். 2006 ஆம் ஆண்டில் இருந்தே முல்லைப்பெரியாறு பிரச்சனையில், தி.மு.க. அரசின் போக்கு, தமிழ்நாட்டுக்குக் கேடாகவே அமைந்து உள்ளது.


உச்சநீதிமன்ற நீதிபதிகள், முல்லைப் பெரியாறு அணையைச் செயல் இழக்கச் செய்தால், (உடைத்தால்), ‘தமிழ்நாட்டுக்குப் பாதகம் வருமா?’ என்று கேட்டதற்கு, கேரள அரசின் வழக்கறிஞர், ‘துளியும் பாதகம் இல்லை’ என்று கூறி உள்ளார். இதற்கும், தமிழக வழக்கறிஞர் மறுப்புத் தெரிவிக்கவில்லை.


ஏற்கனவே, 136 அடியாக நீர்மட்டத்தைக் குறைத்ததால் 78,000 ஏக்கர் பாசன உரிமையை இழந்ததோடு விவசாய விளைச்சல் இழப்பும், மின் உற்பத்தி நட்டமும் ஆக, ஆண்டுக்கு 130 கோடி ரூபாய் மதிப்பில் இதுவரை 3900 கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு நட்டம் ஏற்பட்டு உள்ளது.


தண்ணீர் மட்டத்தைக் குறைத்த கேரளம், இப்போது, அணையை உடைக்க ஏற்பாடு செய்கிறது. ஆம்; முதருக்கே மோசம் வந்துவிட்டது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிந்து, கேரளத்தின் அதிகாரவர்க்கம், கூத்தாடி மகிழ்கிறதாம். வேலியே பயிரை மேயும் இந்த நிலை, தமிழ்நாட்டின் சாபக்கேடு அல்லவா?


தமிழக அரசு வழக்கறிஞர் பராசரனை, உடனடியாக பொறுப்பில் இருந்து நீக்கவேண்டும். இந்தத் துரோகத்துக்கு, முதல் அமைச்சர்தான் பொறுப்பு ஏற்கவேண்டும்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

செய்திகள் ஒளிபரப்பாகும் நேரம்:
காலை 8 மணி; பிற்பகல் 1.30 மணி; முன்னிரவு 8 மணி; இரவு 10 மணி

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)