முதல் அமைச்சருக்குத் தெரியாமலேயே வெளியிடப்பட்ட அரசு ஆணை! முதல் அமைச்சரின் கையில் அரசு நிர்வாகம் இல்லை என்பது, கவலை அளிக்கிறது! வைகோ அறிக்கை!
Issues: Environment, Rural
Region: Madurai - Rural, Tamil Nadu
Category: Headlines, Press Releases
யானைமலை: முதல் அமைச்சருக்குத் தெரியாமலேயே வெளியிடப்பட்ட அரசு ஆணை! முதல் அமைச்சரின் கையில் அரசு நிர்வாகம் இல்லை என்பது, கவலை அளிக்கிறது!
வைகோ அறிக்கை!
மிகவும் பழமையானதும், ஏறத்தாழ ஐந்து கிலோ மீட்டர் நீளம் கொண்டதும், கால்களை மடக்கி இடையிலே துதிக்கையை வைத்து, யானை அமர்ந்து இருப்பதைப் போன்ற தோற்றம் தரும் இயற்கைச் சிற்பமாகவும் அமைந்து உள்ள யானைமலையை உடைத்து நொறுக்கி, சிற்பக்கலை நகரம் அமைக்க முற்படும் தமிழக அரசின் முயற்சியைக் கண்டிக்கவும், இத்தகைய திட்டத்தைத் தமிழக அரசு நிரந்தரமாகக் கைவிட வலியுறுத்தியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், மார்ச் 4 ஆம் நாள், வியாழக்கிழமை பிற்பகல் மூன்று மணி அளவில் ஒத்தக்கடையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்தோம்.
ஆனால், ‘யானைமலையைக் குடையும் எண்ணமே அரசுக்கு இல்லை என்றும்; அரசின் சார்பில் அவ்வாறு எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை என்றும், தெளிவான ஒரு அறிக்கையைத் தமிழக அமைச்சர் தந்து விட்டதாகவும், அதற்குப் பிறகும் சில கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டு உள்ளார்கள்’ என்று, தமிழக முதல் அமைச்சர் விமர்சித்து இருக்கிறார்.
ஆனால், யானைமலை குறித்து, தமிழக அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை அரசுச் செயலாளர், 2009 டிசம்பர் 30 ஆம் நாளிட்ட, அரசு ஆணை. (நிலை) எண். 227 ன்படி, ஒன்றினை, தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அதில், ‘மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ஒற்றைப்பாறையினைக் குடைந்து, சிற்ப நகரம் உருவாக்க ஆய்வுக் குழுவினை அமைத்து அந்த அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
யானைமலை என்று அழைக்கப்படும் ஒற்றைக்கல்லில், குகைகள் மற்றும் தூண்கள் குடையலாம் என்றும், இம்மலையில் ஒரு சிற்பக் கலை நகரத்தை உருவாக்கலாம் என்றும், பெருந்தச்சர் அவையம்’ அனுப்பி உள்ள கருத்துருவுக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர், தொல்லியல் துறை முதன்மைச் செயலர் மற்றும் கலை பண்பாட்டுத் துறை ஆணையர் ஆகியோரின் கருத்துகளும் பெறப்பட்டு, அரசு கவனமுடன் பரிசீலனை செய்ததன்பேரில், மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் உள்ள ஒற்றைப்பாறையினைக் குடைந்து, ஒரே கல்லில் பெரிய நகரத்தை உருவாக்குவது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு, ஒரு ஆய்வுக்குழுவினை ஏற்படுத்தி உள்ளதாக, அரசு ஆணை தெரிவிக்கிறது.
அந்தக் குழுவில், தமிழக அரசின் உயர் பதவிகளில் இருப்போர் இடம் பெற்று உள்ளனர். குழுவின் தலைவராக, தொல்லியல் துறையின் முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
குழுவின் செயலராக, கலை பண்பாட்டுத்துறை ஆணையரும், குழு உறுப்பினர்களாக சுற்றுலாத் துறை இயக்குநர், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர், சுரங்கத்துறை ஆணையர், மாமல்லபுரம் அரசு கட்டட சிற்பக் கலைக்கல்லூரி முதல்வர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், கணபதி ஸ்தபதி ஆகியோருடன் வழக்கறிஞர் ஒருவரும் நியமிக்கப்பட்டு உள்ளார். இக்குழு, முதல்நிலைக் குழுவுக்கான தகுதியைப் பெற்று உள்ளது எனவும் அந்த அரசு ஆணை தெரிவிக்கிறது.
யானைமலையை உடைக்கவும், குடையவும், சிதைக்கவும் திட்டமிட்டுத்தான் இந்தக் குழு அமைக்கப்பட்டது.
அப்படி ஒரு எண்ணமே இல்லை என்று முதல் அமைச்சர் இப்போது கூறுகிறார். அப்படியானால், முதல் அமைச்சருக்குத் தெரியாமல், பகுத்தறிவுமிக்க அவர் அறியாமலேயே, இந்த அரசு ஆணை வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது. நிர்வாகம் முதல் அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்றால், தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பெரிய ஆபத்து என்பது கவலை அளிக்கிறது.
பெருந்தச்சர் அவையத்தின் நிறுவனர் இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறுகையில், யானைமலையைக் குடையும் திட்டம் குறித்து, மத்திய அமைச்சராக உள்ள முதல் அமைச்சருடைய மகனிடம் தாம் கூறியதாகவும், அதனை அடுத்துத்தான், அரசு ஆணை வெளியிடப்பட்டதாகவும் கூறி உள்ளார்.
இந்தத் திட்டத்தைக் கேள்விப்பட்டு, மதுரை மாவட்ட மக்கள், குறிப்பாக யானைமலை வட்டாரத்து மக்கள், அதிர்ச்சிக்கும், ஆத்திரத்துக்கும் ஆளாகினர். கொந்தளிப்பு ஏற்பட்டது. பொதுநலனுக்குப் போராடும் மகபூப் பாட்சா அவர்கள், மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளையில், இத்திட்டத்தை எதிர்த்து வழக்கும் தொடர்ந்தார். உயர்நீதிமன்றம், யானைமலையில், எதையும் உடைக்கக் கூடாது என்று தடை விதித்து உள்ளது.
சைவ, வைணவ, சமண சமயங்களின் திருத்தலமாக யானைமலை திகழ்வதால், இத்திட்டத்துக்கு மிகப்பெரும் எதிர்ப்பு உருவாகியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்துவதற்கு, காவல்துறை அனுமதி மறுத்தது. இதற்கு மக்கள் எதிர்ப்புக் காட்டும் வகையில், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர். தங்கள் சொந்த வீடுகளில் கூட, கருப்புக் கொடி கட்டக்கூடாது என காவல்துறை மிரட்டியது. யானைமலையின் அடிவாரத்தில் வசிக்கின்ற மக்களை, அங்கிருந்து வெளியேற்றுவோம் என்ற மிரட்டலும் தொடர்ந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களும், அப்பகுதி வாழ் மகளிரும், யானைமலை மீதே ஏறி, போராட்டம் நடத்தினர். இந்தத் திட்டத்துக்கு வக்காலத்து வாங்கி மலையை உடைக்க முற்படும் தரப்பினர், இம்மலையை உடைத்தால் கிடைக்கும் கிரானைட் கற்களால், பத்தாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்றும், சிற்ப நகரம் அமைத்ததுபோக, மீதம் உள்ள பணமும் கிடைக்கும் என்றும் கூறியது, ஏடுகளில் வெளியாகி இருக்கிறது. மலையை உடைத்து, சிவப்புக் கிரானைட் கற்களைக் கபளீகரம் செய்யத் திட்டம் போட்டு விட்டார்கள் என்பது, அதிகாரிகள் பலருக்கும் நன்றாகவே தெரியும்.
நாங்கள் இன்னும் யானைமலையை உடைக்கவில்லையே? அதற்குள் ஏன் கூப்பாடு? என்கிறார் முதல் அமைச்சர். கொலை செய்வது மட்டும் குற்றம் அல்ல; கொலை செய்யத் திட்டமிட்டாலே, முயற்சித்தாலே குற்றம்தான். அதுபோல, யானைமலையை உடைப்பதற்கு, தமிழகத்தின் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைத்ததும் குற்றமே!
யானைமலையில் கை வைத்தால், மக்கள் போராட்டம் எரிமலையாக வெடிக்கும் என்பதை உணர்ந்து கொண்டதால், முதல் அமைச்சர், ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கத்தைத் தருகிறார்.
யானைமலையை உடைப்பதற்கு ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட முதல் நிலைக் குழு கலைக்கப்பட்டது என்றும், முன்னைய அரசு ஆணை ரத்துச் செய்யப்பட்டது என்றும், தமிழக அரசு, திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும். அதுவரை யானைமலை பாதுகாப்புப் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும்.

