மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர்கள் கலந்துரையாடல் கூட்டம்!

Issues: Environment, Human Rights, Law & Order, Rural

Region: Chennai - North, Chennai - South, Tamil Nadu

Category: Articles, Headlines, Speeches

Date: 
Fri, 17/02/2012

 

 

 

 

 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக
வழக்கறிஞர்கள் கலந்துரையாடல் கூட்டம்!

றுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் கலந்துரையாடல் கூட்டம் இன்று (17.02.2012 வெள்ளிக்கிழமை) மாலை 7.00 மணி அளவில் சட்டத்துறைச் செயலாளர் ஜி.தேவதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சட்டதிட்டத் திருத்தக்குழுச் செயலாளர் வழக்கறிஞர் இரா. அருணாசலம் முன்னிலை வகித்தார். கழகச் செய்தித் தொடர்பாளர் கோ. நன்மாறன் வரவேற்புரை ஆற்றினார். வழக்கறிஞர் எம்.டி.அருணன் நன்றியுரை ஆற்றினார். கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் வழக்கறிஞர்கள் ஆர். பிரியகுமார், சைதை ப. சுப்பிரமணி, எம்.எம். கோபி, இரா. இராமகிருஷ்ணன் அ.குமணராஜா, ந. மலைசரவணன், அரசு கணேசன், எம். சிதம்பரம், பம்மல் சு. வேல்முருகன், ஏ.எஸ். செளத்ரி, வெ. பாண்டியன், திருமதி பி.வி. ஜெயகுமாரி விசு உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

 

 

தீர்மானம் எண். 1
 

சென்னை மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட புதிய பகுதிகளை
சென்னை உயர் நீதிமன்ற நில அதிகார வரம்பில் கொண்டு வருக!

சென்னை உயர் நீதிமன்றம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1862-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. உரிமைப் பட்டயம் (Letters Paten) படி சென்னை உயர் நீதிமன்றத்தின் நில அதிகார வரம்பு (Territorial Jurisdiction) சென்னை நகர எல்லைக்குள் அடங்கும். பண அதிகார வரம்பு (Pecuniary Jurisdiction) சென்னை உயர் நீதிமன்றத்திற்கு முதலில் ரூபாய் ஒரு இலட்சத்திற்கு மேல் என்பது ரூபாய் பத்து இலட்சத்திற்கு மேல் என்றாகி தற்போது ரூபாய் 25 இலட்சத்திற்கு மேல் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

ரூபாய் 25 இலட்சத்திற்கு மேல் மதிப்புள்ள வழக்குகள் சென்னை, உயர் நீதிமன்றத்தின் சாதாரண முதலேற்பு அதிகார வரம்புக்குள் மட்டுமே வரும்.

சென்னை உயர் நிதிமன்றத்தில் ரூபாய் 25 இலட்சம் மதிப்புள்ள வழக்கிற்கு துண்டு முறையில் (Slab System) நீதிமன்றக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு கட்டப்படுகின்றது. அதன் அடிப்படையில்  ரூபாய் 25 இலட்சம் மதிப்புள்ள வழக்குக்கு ரூபாய் 28,525/- செலுத்தினால் போதுமானது.

சென்னை மாநகராட்சியின் நில அதிகார வரம்பில் சென்னையை ஒட்டி இருக்கும் தற்போதைய திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகள் இணைக்கப்பட்டு 155 வட்டங்களிலிருந்து 200 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புதிதாகச் சேர்க்கப்பட்ட பகுதியிலிருந்து ரூபாய் 25 இலட்சம் மதிப்புள்ள வழக்கைத் தொடர வேண்டும் என்றால் செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதி மன்றத்திலோ அல்லது திருவள்ளூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்திலோதான் தற்போதைய நிலையில் தாக்கல் செய்ய வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் தவிர்த்து வேறு நீதிமன்றங்களில் முதலேற்பு வழக்கு தாக்கல் செய்தால் நீதிமன்றக் கட்டணமாக வழக்கின் மதிப்பில் ஏழரை (7-1/2) விழுக்காடு செலுத்த வேண்டும். தற்போது சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புதிய பகுதிகளில் எழும் வழக்குகளின் மதிப்பு ரூபாய் 25 இலட்சம் என்றால் நீதிமன்றக் கட்டணமாக ரூபாய் 1,87,500/- செலுத்த வேண்டும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் ரூபாய் 1,87,500/- என்பதும் பிற பகுதிகளில் அதுவே ரூபாய் 28,525/- என்பதும் நியாயமற்றது.

எனவே, புதிதாக சென்னை மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்டுள்ள திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளைச் சென்னை உயர் நீதிமன்றத்தின் நில அதிகார வரம்புக்குள் (Territorial Jurisdiction) கொண்டு வரப்பட வேண்டும். அதற்காக 1927 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற (அதிகார வரம்பு வரையறை) சட்டத்தில் [Madras High Court (Jurisdictional Limits) Act,  1927] உரிய திருத்தத்தைத் தமிழ்நாடு அரசு வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

 

தீர்மானம் எண். 2

திருவொற்றியூர், அம்பத்தூர், ஆலந்தூர் நீதிமன்றங்களை
அந்தந்த ஊர்களிலேயே செயல்பட அனுமதித்திடுக!

சென்னை மாநகராட்சியுடன் இணைந்துள்ள புதிய பகுதிகளில், திருவொற்றியூர், அம்பத்தூர், ஆலந்தூர் ஆகிய இடங்களில் மாவட்ட உரிமை இயல் நீதிமன்றங்களும் (District Munsif Courts), குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களும் (Judicial Magistrate) இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களை அந்தந்த ஊர்களிலேயே செயல்பட அனுமதித்தும், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தைப் பெருநகர நடுவர் (Metropolitan Magistrate) நீதிமன்றங்களாகவும் முதலேற்பு உரிமை இயல் நீதிமன்றங்களை (District Munsif Courts) நகர உரிமையியல் நீதிமன்றங்களாகவும் (City Civil Courts) மாற்றி அறிவிக்க வேண்டும். சென்னையில் எழும்பூர், ஜார்ஜ் டவுன், சைதாப்பேட்டை பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் இருப்பது போல குற்றவியல் வழக்குகளை திருவொற்றியூர், ஆலந்தூர், அம்பத்தூரில் அமையவுள்ள பெருநகர நடுவர் நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்யவும், விசாரிக்கப்படவும் வேண்டும். அதுபோலவே அதே இடங்களில் அமையவுள்ள நகர உரிமையியல் நீதிமன்றங்களிலேயே அந்தந்த உரிமையியல் நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்குள் வரும் உரிமையியல் முதலேற்பு வழக்குகளைத் தாக்கல் செய்யவும், விசாரணை செய்யவும் அனுமதிக்க வேண்டும்.

தீர்மானம் எண். 3

நடைபெற இருக்கின்ற சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் வெற்றிக்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் அணி, சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதித் தேர்தல் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வது என்று தீர்மானிக்கிறது.

‘தாயகம்’                                  தலைமைக் கழகம்
சென்னை-8                               மறுமலர்ச்சி தி.மு.க.
17.02.2012

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)