பொதுக்குழு தீர்மானங்கள்

Issues: Economy, Education, Energy, Environment, Farmers, Healthcare, Human Rights, Labour, Law & Order, National, Politics, Poverty, Rural, Science and Technology, Srilanka

Region: Chennai - North, Chennai - South, Coimbatore - Urban, Coimbatore - Rural, Cuddalore, Dharmapuri, Dindigul, Erode, Kancheepuram, Kanyakumari, Karaikal, Karur, Krishnagiri, Madurai - Urban, Madurai - Rural, Nagapattinam, Nammakal, Nilgris, Perambalur, Pudhukottai, Puducherry, Ramanathapuram, Salem, Sivagangai, Tanjore, Theni, Thiruvallore, Thiruvannamalai, Thiruvarur, Tirunelveli - Urban, Tirunelveli - Rural, Tiruppur, Trichy - Urban, Trichy - Rural, Tuticorin, Vellore - East, Vellore - West, Viluppuram, Viruthunagar, Tamil Nadu, Other States

Category: Articles, Headlines, Press Releases, Announcements, Speeches

Date: 
Fri, 10/02/2012

 

 

 

 

 

 

20 ஆவது பொதுக்குழு

சென்னை - 10.2.2011

தீர்மானங்கள்

தீர்மானம் எண் 1


முல்லைப்பெரியாறு: தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு!

தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை, 1895ம் ஆண்டு கட்டப்பட்டு, சென்னை மாகாண அரசுக்கும் திருவிதாங்கூர் கொச்சி அரசுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி, 999 ஆண்டுகள் தமிழ்நாட்டுக்குச் சட்டப்படி உரிமை உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது.

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகிவிட்டது என்று பொய்யான காரணம் காட்டி, கேரள அரசு நீர்மட்டத்தை 152 அடியில் இருந்து 136 அடியாகக் குறைத்துவிட்டது. இதனால் தென் மாவட்டங்களில் 2 இலட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயிரிட முடியாமல் பேரிழப்புக்கு உள்ளாகி இருக்கின்றது.

மத்திய தொழில்நுட்ப வல்லுனர் குழு, முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து, அணை வலுவாக இருப்பதாகச் சான்று அளித்தது. அதன் அடிப்படையில், 2006ம் ஆண்டு பிப்ரவரி 27ல் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக உச்சநீதிமன்ற உத்தரவைக் கேரள அரசு நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளைப் பராமரிக்கவும், உடைக்கவும்கூட கேரள அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும், இதில் எந்த நீதிமன்றமும் இதில் தலையிட முடியாது என்றும், கேரளச் சட்டமன்றத்தில் 2006 மார்ச் 17ல் அக்கிரமமான சட்டத்தை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நிறைவேற்றியது. அத்துடன், முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டுப் புதிய அணை கட்டுவோம் என்று கூறி வருகிறது.

உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிர° அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன், அந்த முயற்சிகளைத் தீவிரமாக்கி உள்ளது.

பென்னி குயிக் கட்டிய, தமிழகத்துக்கு வாழ்வாதரமான முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முயற்சிப்பது, இந்திய ஒருமைப்பாட்டுக்கே உலை வைக்கும் செயல் ஆகும்.

கேரள அரசு அக்கிரமமாக நிறைவேற்றிய சட்டத்தை ரத்துச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் கடமையில் தவறியதோடு மட்டும் அல்லாமல், மேலும் அநீதி இழைக்கின்றவிதத்தில், கேரளத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், அணை பாதுகாப்பு மசோதாவை, நாடாளுமன்றத்தில் சட்டமாக ஆக்கிடவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

தமிழக அரசு கடுமையாக எதிர்த்ததன் விளைவாக, தற்காலிகமாக அந்த முயற்சியை நிறுத்தி வைத்து இருந்தாலும், இந்திய ஒருமைப்பாட்டுக்கே வேட்டு வைக்கும் இந்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றக் கூடும் என்ற ஆபத்து நீங்காமலேயே உள்ளது.

தற்போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ள அதிகாரக் குழு, ஏற்கனவே ஆய்வை நடத்தி முடித்து விட்டது. இக்குழு, வெகு விரைவில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையில், கால ரீதியாக நீர் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவியை (Real Time Monitoring for Water ) நிறுவ கேரள அரசு முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

இது, அணையின் பாதுகாப்பு சந்தேகத்துக்கு இடமானது; அது எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும் என்ற அச்சத்தையும், பீதியையும் பரப்புகின்ற மற்றொரு நடவடிக்கையே. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, கேரளம் மேற்கொண்டு உள்ள இத்தகைய நடவடிக்கை, நீதியியல் நெறிமுறைக்குப் புறம்பானதாகும்.

இந்தப் பிரச்சினையில், மத்திய அரசு தமிழகத்துக்கு விரோதமாகவே தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது.

முல்லைப்பெரியாறு அணை மற்றும் அது சார்ந்த அனைத்துக் கட்டுமானங்களும், தமிழக அரசுக்கே முழு உடைமை ஆகும். தமிழக அரசே அணையைப் பராமரித்து வருகிறது. அதில், காலரீதியாக நீர் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவியை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன், முல்லைப்பெரியாறு அணiயில் நிறுவ கேரள அரசு முற்பட்டுள்ளது, ஒருதலைப்பட்சமானது. இதுகுறித்து, தமிழக அரசுடன், கேரள அரசு எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. தமிழக அரசின் அனுமதியையும் பெறவில்லை.

கேரள அரசின் இத்தகைய நடவடிக்கை, கூட்டு ஆட்சித் தத்துவத்துக்கு ஊறு விளைவிக்கக் கூடியதாகும். எனவே, இந்தக் கருவியை நிறுவ, கேரள அரசுடன் ஏதேனும் ஒப்பந்தம் செய்து கொண்டு இருந்தால், அதில் இருந்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை விலக வேண்டும். ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவில்லை எனில், இனிமேல் இவ்வாறு ஒப்பந்தம் ஏதும் செய்து கொள்ளக்கூடாது.

காலரீதியாக நீர் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவியை நிறுவக்கூடாது என்று கேரள அரசுக்கும், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கும் மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணைக்கு இம்மியும் சேதாரம் ஏற்படாமல் பாதுகாப்பதும், 152 அடி வரையிலும் நீர்மட்டத்தை உயர்த்தி, தண்ணீரைத் தமிழகம் பாசனத்துக்குப் பெறுவதும்தான் ஒரே தீர்வு ஆகும் என்பதால், கேரளத்தின் புதிய அணை கட்டுகிற முயற்சியைத் தடுப்பதற்கும், 2006 மார்ச் மாதத்தில் கேரளச் சட்டமன்றம் நிறைவேற்றிய நதிநீர் குறித்த சட்டத்தை ரத்துச் செய்வதற்கும், இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

அணைப் பாதுகாப்பு மசோதாவைச் சட்டமாக்கும் முயற்சியை, மத்திய அரசு முற்றிலும் கைவிட வேண்டும்; அதற்கு மாறாக நிறைவேற்றப்பட்டால், இந்தியாவின் ஒருமைப்பாடு உடைவது தவிர்க்க முடியாததாகி விடும் என இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

 

 

தீர்மானம் எண் 2

நதிநீர் நாட்டு உடைமை!

மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிநீரை நாட்டு உடைமை ஆக்கி, தேசிய நதிகளாக அறிவிப்பதற்கு இந்திய அரசு சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தீபகற்ப நதிகளான தென்னக நதிகளை இணைக்கின்ற திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்திய நாடாளுமன்ற மக்கள் அவையில் தனிநபர் மசோதா தாக்கல் செய்தார்.

அந்த மசோதா, 2000 மே 5 இல் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ஆகஸ்ட் 11 அன்றும் விவாதம் தொடர்ந்தது.

இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அந்த விவாதத்தில் பங்கு ஏற்று, வைகோவின் மசோதாவை வரவேற்றனர்.

மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சர், ‘எதிர்காலத்தில், இந்தக் கருத்துகளை உள்ளடக்கி சட்டத் திருத்தம் கொண்டு வருவோம்’ என உறுதி அளித்தார்.

2004 ஆம் ஆண்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தபோது, அதன் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் தென்னக நதிகளை இணைக்க வேண்டும் என்பதை ஒரு திட்டமாக இடம் பெறச் செய்ததும், நதிகளின் இணைப்பை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டதும், பல்லடம், வேடசந்தூரில் விவசாய மாநாடுகளை நடத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றியதும், கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி அவர்களைச் சந்தித்து முல்லைப்பெரியாறு உள்ளிட்ட நதிநீர்ப் பிரச்சினைகளை விவாதித்ததும், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் தொலைநோக்குச் செயல்பாடுகள் ஆகும்.

தற்போது முல்லைப்பெரியாறு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் உரிமைகளை, நலன்களைக் காக்கவும், இந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும், மத்திய அரசு, சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்திய அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில், மத்திய அரசின் அதிகாரப்பட்டியல் தரப்பட்டு உள்ளது.

அதில், 56 ஆவது பதிவாக அறிவிக்கப்பட்டு உள்ள அதிகாரம்,

மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளையும், நதிநீர்ப் பள்ளத்தாக்குகளையும் முறைப்படுத்தவும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதற்கு, நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் சட்டத்தின்படி, எந்த அளவுக்கு மக்கள் நலனுக்கு உகந்ததாக இருக்குமோ, அந்த அளவுக்கு முறைப்படுத்தவும், வளர்ச்சி ஏற்படுத்தவும், மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது.

மாநில அரசுப் பட்டியலில் 17 ஆவது பதிவின்படி, தண்ணீர், நீர் வழங்குதல், பாசனம், கால்வாய்கள், வடிகால்கள், அணைக்கரைகள், நீர்த்தேக்கங்கள், நீர்விசை குறித்த அனைத்தும், மத்திய அரசுப் பட்டியலின் 56 ஆவது பதிவின் வரைமுறைக்குக் கட்டுப்பட்டதாகும் என்று, அரசியல் சட்டம் வரையறுக்கிறது.

அரசியல் சட்டத்தின் 246 ஆவது பிரிவின்படி, மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்ற நதிகள் குறித்துச் சட்டம் இயற்றுவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும், மத்திய அரசுக்குத் திட்டவட்டமான அதிகாரம் இருக்கின்றது.

மத்திய அரசின் அதிகாரக் குவியல் பரவலாக்கப்பட வேண்டும் என்றும்,

மத்திய அரசுப் பட்டியல், மாநில அரசுப் பட்டியல் தவிர்த்த எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும், மாநிலங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும்,

மாநில சுயாட்சிக் கொள்கையில் உறுதியான நிலைப்பாடு கொண்டு உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்,

மாநிலங்களுக்கு இடையில் ஓடும் நதிகள் குறித்த பிரச்சினையில், மாநில உரிமை காக்கவும், இந்திய ஒருமைப்பாட்டைக் காக்கவும் கருதியே, மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்ற நதிகளை நாட்டு உடைமை ஆக்கும் சட்டத்தை, அரசியல் சட்டத்தின் 246 ஆவது பிரிவின்கீழ் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று இப்பொதுக்குழுவின் வாயிலாக மீண்டும் வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் எண் 3

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மறுவாழ்வு!

2011 டிசம்பர் மாதம் 30 ஆம் நாள், வங்கக் கடலில் உருவான ‘தானே’ புயல், கடலூர் மாவட்டத்தை முற்றிலும் புரட்டிப்போட்டு விட்டது. விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுவை மாநிலப் பகுதிகளும் பலத்த சேதத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் அறுவடைக்கு ஆயத்தமாக இருந்த சுமார் 2.38 இலட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் அழிந்துவிட்டன. 75 ஆயிரம் ஏக்கர் கரும்பு, வாழை, 85 ஆயிரம் ஏக்கர் முந்திரி, 25 ஆயிரம் ஏக்கர் பலா, 5 ஆயிரம் ஏக்கர் தென்னை, 10 ஆயிரம் ஏக்கர் மரவள்ளி, 750 ஏக்கர் கொய்யா மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. தோட்டப்பயிர்களும் அழிந்து விட்டன. இரண்டரை இலட்சம் வீடுகளும் குடிசைகளும் நொறுங்கி மண்மேடுகளாகி விட்டன. மீனவர்களின் மீன்பிடிப் படகுகள், வலைகள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டன.

பேரிடி தாக்கி உள்ள விவசாயிகளும், மீனவர்களும் இந்தப் பாதிப்புகளில் இருந்து உடனடியாக மீள இயலாத நிலையில் உள்ளனர்.

கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், புயலால் பாதிக்கப்பட்டு உள்ள பகுதிகளை நேரில் பார்த்து, கண்ணீரில் பரிதவிக்கும் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அத்துடன், கழகத்தின் சார்பில், ரூபாய் பத்து இலட்சத்தை, தமிழக அரசின் புயல் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளோம்.

முந்திரிக் கன்றை நட்டு, பிள்ளையைப் போல் வளர்த்து, விழி காக்கும் இமையெனக் காத்து விளைந்த முந்திரிகளின் அறுவடையால், வாழ்ந்து வரும் பெருமக்களே, இப்பகுதி வாழ் மக்கள். இன்று அவர்கள் உலகமே இருண்டு விட்டது. முறிந்து நொறுங்கிச் சிதறிக் கிடக்கும் மரங்களின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு, தூரும், வேரும் கொண்ட அடிமரத்தைத் தோண்டி எடுத்து அகற்றுவது, இமாலய வேலை.

ஒரு ஏக்கரில் நாசமான பகுதியைச் சீர்படுத்தவே, இன்றைய நிலைமையில் 25,000 ரூபாய் செலவு ஆகும். எனவே, விவசாயிகளால் இதைச் செய்ய இயலாது. எனவே, அரசாங்கமே, ஒடிந்து கிடக்கும் முந்திரி, பலா மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் இந்தப் பணிகளை மேற்கொள்ளலாம்.

அடுத்து இங்கே வேறு பயிர் செய்ய முடியாது என்பதால், மீண்டும் முந்திரி, பலா மரக் கன்றுகளை நடுவதற்கும், வளர்ப்பதற்கும், ஏக்கருக்கு 25,000 ரூபாய், விவசாயிக்கு அரசு வழங்க வேண்டும். தென்னை விவசாயிக்கு, மரம் ஒன்றுக்கு 1000 ரூபாய்; நெற்பயிர் விவசாயிகளுக்கும், நிலக்கடலை உள்ளிட்ட தோட்டப்பயிர்களுக்கும், ஏக்கர் ஒன்றுக்கு 15,000 ரூபாய் தர வேண்டும்.

கண்ணீர்க் கடலில் தத்தளிக்கும், விவசாயிகளுக்கும் மீனவர்களுக்குமான மறுவாழ்வுப் பணிகள், பாரபட்சம் எதுவும் இன்றி விரைவாகக் கிடைத்திடவும், பயிர்க் காப்பீட்டுத் தொகை சரியாகக் கிடைத்திடவும் அரசு ஆவன செய்ய வேண்டும். விவசாயிகள் புதிய மரக்கன்றுகள் நடவும், பம்பு செட்டுகள் வாங்கவும் உதவிட வேண்டும். மீனவர்களுக்கு புதிய வலைகள், மீன்பிடி சாதனங்களை வழங்கிட வேண்டும்.

பெரும் நாசத்துககு ஆளாகித் துன்பத்தில் தவிக்கின்ற கடலூர் மாவட்டம் உள்ளிட்ட தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கவும், மறுவாழ்வு அளிக்கவும் தேவையான நிதியை, மத்திய அரசு வழங்காமல், கண்துடைப்பு நடவடிக்கையாக சொற்பத் தொகையை வழங்கியதற்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, தமிழக அரசு கோரியுள்ள புயல் நிவாரண நிதியை வழங்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் எண் 4

மின் வெட்டுக்குக் கண்டனம்;


மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது!

 

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்காக, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகின்றது.
உண்மையில், தமிழ்நாடு மின்சார வாரியம், பலத்த நிர்வாகச் சீர்கேட்டுக்கு உள்ளாகி இருக்கின்றது.
தமிழகத்தில் மின் பகிர்மானத்தின்போது ஏற்படுகின்ற மின் இழப்பு 18 விழுக்காடு என்ற அளவில் உள்ளது.
மின் திருட்டு வெகுவாக நடைபெறுகிறது;
மின்வாரியத்துக்கான பொருள்களை வாங்குவதில் பெருமளவில் ஊழல் தாண்டவமாடுகிறது;
தரமற்ற கருவிகளை வாங்கிக் குவிக்கின்றனர்;
மின்வாரியத்துக்காக அயல்நாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதிலும், பெருமளவில் ஊழல் நடைபெற்று உள்ளது;
அதிகாரிகள் பணி இடமாற்றத்துக்கு, இலட்சக்கணக்கில் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மின்வாரியத்தின் உயர் அதிகாரிகளே லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டு கைது செய்யப்பட்டு உள்ளார்.

காற்றாடி ஆலைகளில் பெறப்படும் மின்சாரத்தை முழுமையாக வாங்குவதற்கான ஏற்பாடுகள் இல்லை.

வேறு மாநிலங்களில் கூடுதல் விலைக்கு வாங்கிய மின்சாரத்தை, தமிழகத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்குக் குறைந்த விலையில், 24 மணி நேரமும் தடையின்றிக் கொடுத்து வருகின்றார்கள். ஆனால், நாட்டுக்கே உணவு விளைவித்துத் தருகின்ற விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தை ரத்து செய்யப் போவதாகச் செய்திகள் வருகின்றன.

மின்வாரியக் குறைபாடுகளை எல்லாம் களைந்தாலே, மின்சார வாரியத்தை லாபகரமாக நடத்திட முடியும்.
அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மின்துறையில் உள்ள குறைகளைச் சரி செய்து, முழுமையாக மின்சாரம் வழங்குவோம் என்று அறிவித்தார்கள். ஆனால், இன்று நிலைமையோ, முன்பு இருந்ததைவிடவும் சீர்கெட்டு உள்ளது.

8 மணி நேரம் மின்வெட்டு என்று அறிவித்து இருக்கின்றார்கள். கிராமப்புறங்களில், 8 முதல் 10 மணி நேரம் மின்சாரம் கிடையாது. மின்சாரம் எப்போது வரும்? எப்போது போகும்? என்பதே யாருக்கும் தெரியாது. இதனால், விவசாயமும், சிறு, குறு தொழில்களும், மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தை இருளில் தள்ளி இருக்கின்ற மின்வெட்டுக்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், ஏற்கனவே கடுமையான விலைவாசி உயர்வாலும், பால் விலை மற்றும் பேருந்துக் கட்டண உயர்வாலும், தாங்க முடியாத அவலத்துக்கு ஆளாகி உள்ள அடித்தட்டு மக்களையும், நடுத்தர மக்களையும் மேலும் பாதிக்கக்கூடிய வகையில், எக்காரணத்தை முன்னிட்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

 

 

தீர்மானம் எண் 5

அமராவதி, பவானி ஆற்று நீரைத் தடுக்கும் விதத்தில்
கேரளம் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துக!
 

அமராவதி ஆற்றின் உபநதியான பாம்பாற்றின் குறுக்கே ஒரு அணை கட்டுவதற்கும், பவானி ஆற்று நீரைத் தடுக்கும் விதத்தில், முக்காலியில் ஒரு புதிய அணை கட்டவும், கேரள அரசு திட்டமிட்டு உள்ளது.

பாம்பாற்றின் குறுக்கே, 170 மீட்டர் நீளம்; 30 மீட்டர் உயரம் கொண்ட அணை கட்டுவதற்கு, 230 கோடியில் திட்டம் தயாரித்து உள்ளதாகவும், அதற்காக 110 ஏக்கர் நிலத்தைக் கையப்படுத்தி விட்டதாகவும், 40 மெகாவாட் மின் உற்பத்தி செய்யத் திட்டமிட்டு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்காக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பரிந்துரையும், நீர்வளம் மற்றும் மின்சாரத் துறைகளின் அனுமதியும் கேட்டு, கேரள அரசு கோப்புகளை டெல்லிக்கு அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது.

05.02.2007 ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையம் அளித்த தீர்ப்பில், அமராவதி நதியின் உபநதியான பாம்பாற்றில் இருந்து 3 டி.எம்.சி. தண்ணீர் கேரளாவுக்குக் கொடுக்கப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காவிரிப் பிரச்சினையில், அமராவதி ஆறு தமிழக அரசால் கைவிடப்பட்ட அநாதையாக உள்ளது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செய்து உள்ள மேல்முறையீட்டு மனுவில், பாம்பாறு பிரச்சினை தொடர்பாக எவ்வித எதிர்ப்புக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

2010 ஏப்ரல் 19 ஆம் நாள், தமிழகச் சட்டமன்றத்தில் உரை ஆற்றிய, அன்றைய முதல் அமைச்சர் கருணாநிதி, மின்சாரம் தயாரிக்கவே கேரளம் அணை கட்டுகிறது; அதற்குப் பின்னர், அந்தத் தண்ணீர் மீண்டும் பாம்பாற்றின் வழியாகவே அமராவதி அணைக்கு வருகின்ற வகையில்தான் தள அமைப்பு உள்ளது என்று கூறி, அமராவதி பாசன விவசாயிகளுக்குப் பெருந்துரோகம் இழைத்து உள்ளார்.

பாம்பாற்றின் குறுக்கே கேரளம் அணை கட்டுமானால், அதனால் பாசன வசதி பெற்றுக்கொண்டு இருக்கின்ற பழைய, புதிய ஆயக்கட்டுகள், 60 ஏக்கர் பாலைவெளியாக மாறும் சூழ்நிலை ஏற்படும்; 50 க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் பாதிக்கப்படும்; அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையும் மூடப்படும் நிலை ஏற்படும்.

எனவே, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு மனுவில், கூடுதலாக ஒரு மனுவைத் தாக்கல் செய்து, பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது எனவும், அதுபோலவே, பவானி ஆற்றுக்கு வரும் தண்ணீரைத் தடுக்க முக்காலியில் அணை கட்டுவதற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
 

 

தீர்மானம் எண் 6
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3000

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ 2500

 

கடந்த ஆட்சியின்போது, ஒரு டன் கரும்புக்கு விலை ரூ 2000 வழங்கப்பட்டது. அது கட்டுப்படியாகாது; ரூ 3000 கொடுக்க வேண்டும் என்று கோரி, இன்றைய ஆளும் கட்சியின் சார்பில், சர்க்கரை ஆலைகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர், அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.2500 வழங்குவோம் அறிவித்தார்கள். ஆனால், இப்போது, ரூ 2100 மட்டுமே அறிவித்து இருக்கின்றார்கள்.

அதேபோன்று, நெல் கொள்முதல் விலையையும், குவிண்டாலுக்கு ரூ 100 மட்டுமே உயர்த்தி உள்ளனர்.

சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு உர விலை இரண்டு மடங்காக உயர்ந்து விட்டது. விவசாயக்கூலி, டிராக்டர் வாடகையும் உயர்ந்து விட்டது.

கரும்பு வெட்டுக்கூலி, லாரி வாடகை, ஒரு டன்னுக்கு ரூ.700 முதல், ரூ.1000 வரையிலும் ஆகிறது. நெல்லுக்கும் இதே விகிதத்தில் செலவுகள் கூடி உள்ளன.

எனவே, விவசாயிகள், கரும்பு, நெல் உற்பத்தியை விட்டு விலகி, வேறு பணப்பயிர்கள் சாகுபடிக்கு மாறும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே, கரும்பு மற்றும் நெல் பயிரிடும் விவசாயிகளைப் பாதுகாக்கின்ற வகையில்,

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3000/-

நெல் 1 குவிண்டாலுக்கு ரூ.2500/-

மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ 10,000/-

மரவள்ளிக் கிழங்கு குவிண்டாலுக்கு ரூ 5,000/-

தேங்காய் கொப்பரைக்கு, கிலோவுக்கு ரூ.70/-

விலை நிர்ணயம் செய்து, அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
 

 

தீர்மானம் எண் 7
 

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!
கச்சத்தீவு மீட்பே தீர்வு…

 

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி வந்து நடத்துகின்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில், தமிழக மீனவர்கள் பலியாவதும், காயம் அடைந்து உயிருக்குப் போராடுவதும், கொடிய சித்திரவதைக்கு ஆளாவதும், உயிர் உடைமைகளை இழப்பதும் வாடிக்கையாகி விட்டன.

இந்தத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த, இந்திய அரசும், கடலோரக் காவல்படையும் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இலங்கை அரசிடம் இருந்து இழப்பு ஈட்டுத் தொகையும்
பெற்றுத் தரவும் இல்லை; உரிய முறையில் எச்சரிக்கவும் இல்லை.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வகையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எ°.எம். கிருஷ்ணா அவர்கள், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிப் போவதால், இலங்கைக் கடற்படை நடவடிக்கை எடுக்கிறது என்றும்; கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களுக்கு உரிமை இல்லை என்றும் கூறினார்.

தமிழ்நாட்டு மீனவர்களின் உயிரையும், உடைமைகளையும் காப்பாற்ற, இலங்கைக்குத் தாரை வார்த்த கச்சத்தீவைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
 

 

தீர்மானம் எண் 8

நெசவுத் தொழில் நசிவு!

மெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பெரும்புகழ் பெற்று, இந்திய நாட்டுக்கு அயல்நாட்டுச் செலாவணியாக, ஆண்டு ஒன்றுக்குப் பன்னூறு கோடிகளை ஈட் டித் தருகின்ற பின்னலாடைத் தொழில், பெரும் நெருக்கடியில் சிக்கி உள்ளது.

தமிழகத்தில் இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகின்ற நெசவுத் தொழில் வெகுவாக நசிந்து வருகிறது.

திருப்பூரில் சாயக்கழிவுப் பிரச்சினைக்கு இன்னமும் சரியான தீர்வு எட்டப்படவில்லை. முன் அறிவிப்பு எதுவும் இன்றி, நாள்தோறும் நான்கு ஐந்து முறை ஏற்படுகின்ற மின்தடையால், விசைத்தறிக் கூடங்களில் பணிகள் முடங்கி விட்டன. இதனால், வேலை வாய்ப்புகளை இழந்த தொழிலாளர் குடும்பங்களில் வறுமை ஏற்பட்டு உள்ளது.

நெசவாளர்களின் துயர் களைந்திடத் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் எண் 9
 

ஆசிரியர் பணியிடங்களைப்
பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புக!

தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 25,000 பி.எட்., பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து ஆசிரியர் பணிக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் கிராமப்புறத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தங்களின் பட்டப் படிப்புக்காக மூதாதையர்களின் நிலங்களையும், உடமைகளையும் விற்றும், கடன் வாங்கியும் பல சிரமங்களுக்கு மத்தியில், ஆசிரியர் பயிற்சியை முடித்து உள்ளனர்.

இவர்களுக்குத் தங்கள் பெற்றோரையும், குடும்பத்தினரையும் காக்க வேண்டிய பொறுப்பும், நாட்டின் எதிர்காலங்களான மாணவர்களை உருவாக்க வேண்டிய சமூகக் கடமையும் உள்ளது.

கடந்த ஆட்சியில் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்தனர் என்பதற்காக அதை ரத்து செய்வது முறையல்ல.

தமிழக அரசு நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ள தகுதித் தேர்வு மற்றும் போட்டித் தேர்வை ரத்து செய்தோ அல்லது பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் அனைவருக்கும் பணியாணை வழங்கிய பிறகு, பின்தேதியிட்டு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக்குப் பின்னரோ நடைமுறைப்படுத்தலாம்.

எனவே, 15,000 ஆசிரியர் பணியிடங்களையும், 3,600 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் நியமனம் செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளதில், இவர்களுக்குப் பணி நியமனம் வழங்கிட வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

 

 

தீர்மானம் எண் 10
 

மணல் கொள்ளை

தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் மணல் கொள்ளைக் காட்சி மாறவில்லை. கடந்த சில ஆண்டுகளாக தமிழக நதிநீர்ப் படுகைகளில், இயற்கையின் கொடையான மணலை, தாறுமாறாக அள்ளிச் சுரண்டியதால், நிலத்தடி நீர்வளம் நீர் ஆயிரம் அடிகளுக்கும் கீழே போய்விட்டது. மணல் இல்லாததால், மழை நீர் ஆற்றுப் படுகைகளில் சேமிக்க முடியாமல் கடலில் கலந்து வீணாகிறது.

தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, மணல் எடுப்பதற்கான சில வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றுமாறு அரசுக்கு உத்திரவிட்டது.

ஆனால், தாமிரபரணி மட்டும் அன்றி, தமிழ்நாட்டின் அனைத்து ஆறுகளிலும், மணல்கொள்ளை தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.

தமிழக அரசு சார்பில் மணல் அள்ளுவதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஆற்றில் மணல் எடுக்கும்போது இரண்டு யூனிட் மணல் ரூபாய் 636 என்று அரசு அறிவித்தது. ஆனால், அரசு அறிவித்துள்ள குவாரிகளுக்கு அருகிலேயே, சட்டவிரோதமாக, தனிநபர்கள் மூலமாக, இரண்டு யூனிட் 2400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பின்னர், அதே இரண்டு யூனிட் மணல், பொதுமக்களுக்கு 6000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

தமிழக ஆறுகளில் சுரண்டப்படும் மணல் கேரள மாநிலத்திற்குத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கடத்தப்படுகிறது. இது அடியோடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இதன்மூலம் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் குறையவும், தனியார் கோடி கோடியாகக் கொள்ளை அடிக்கவும் வழி செய்யப்பட்டு உள்ளது. அந்தத் தொகை, ஆளுங்கட்சியினருக்குப் போய்ச்
சேருகிறது. ஆட்சியாளர்களின் இத்தகைய அடாவடித்தனமான, அக்கிரம மணல் கொள்ளைக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், தமிழக ஆற்றுப் படுகைகளில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மணல் எடுப்பதற்கான வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும், ஆற்று நீர்ப் படுகைகளைப் பாதுகாத்து நீராதாரம் குன்றாமல் இருப்பதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் எண் 11

பரமக்குடி துப்பாக்கிச் சூடு
நடவடிக்கை தேவை

2011 செப்டம்பர் 11 ஆம் நாளன்று, தமிழகக் காவல்துறையினர், பரமக்குடியிலும், மதுரை சிந்தாமணியிலும் அக்கிரமமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்ததுடன், இச்சம்பவம் குறித்து, தமிழக அரசு அறிவித்து உள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதி விசாரணைக் கமிசனின் விசாரணையை, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை ஊட்டுகின்ற விதத்தில் நடத்துவதற்காக, துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகளைப் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அறிக்கை விடுத்து இருந்தார்கள்.

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து படுகாயமுற்றோர் மீதும், காவல்துறையினரின் தாக்குதலில் காயமுற்றோர் மீதும் வழக்குகள் போடப்பட்டு உள்ளதால், அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றும், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அறிவித்து உள்ள நிவாரணத் தொகையை ரூபாய் ஐந்து இலட்சத்துக்குக் குறையாமல் உயர்த்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.

ஆயினும், துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான அதிகாரிகள், இன்றுவரையிலும் பணி இடை நீக்கம் செய்யப்படவில்லை.

அதுபோலவே, விழுப்புரம் மாவட்டத்தில் இருளர் இனப் பெண்கள் நால்வரைக் கற்பழித்த காவல்துறையினர் கைது செய்யப்படவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேட்டு, தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

எனவே, இந்த இரண்டு சம்பவங்களிலும் குற்றம் சாட்டப்பட்டு உள்ள காவல்துறையினரைக் கைது செய்து, நியாயமான விசாரணை நடத்திட வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

 

 

தீர்மானம் எண் 12

தமிழக அரசு ஒப்பந்தப் பணிகளில்
‘மின் ஆளுமை’ முறையைப் பின்பற்றுக!

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் இதர துறைகளின் அரசுப் பணிகளுக்கு ஒப்பந்தப் பணிகள் வழங்கும்போது, ஆளும் கட்சியினர் ஆதரவு பெற்றுள்ள ஒப்பந்ததாரர்களுக்கே வழங்கப்பட்டு வருகின்றன.

விழுப்புரம், மதுரை மாவட்டங்களில் ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கிய ஒப்பந்ததாரர்களின் விண்ணப்பங்கள் பதிவுத் தபாலில் அனுப்பப்பட்டபோது அத்தபால்களை எடுத்துச் சென்ற தபால்துறை ஊழியர்களை ஆளும் கட்சியினர் அரசு அதிகாரிகள் முன்னிலையிலேயே தாக்கியதால், ஆளும் கட்சியினர் ஆதரவு இல்லாத ஒப்பந்ததாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன. ஆளும் கட்சியினரின் அடாவடித்தனத்தை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

அரசுப் பணிகளில் வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகத்தை நடத்துவதற்கு, ஒப்பந்தப் பணிகளில் ‘மின் ஆளுமை’ முறையைப் பின்பற்றவும், இணைய தளத்தில் அரசின் ஒப்பந்த விண்ணப்பங்களைப் பதிவு இறக்கம் செய்து போட்டியில் பங்கு ஏற்கவும், ‘இ-டெண்டர்’ முறையைத் தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

 

 

தீர்மானம் எண் 13

மது ஒழிப்பு!

அறிஞர் அண்ணா ஆட்சிக்காலம் வரையிலும், மது அரக்கனுக்குத் தமிழகத்தில் அனுமதி இல்லை. ஆனால் இன்றைக்கு, மாணவப் பருவத்திலேயே குடிப்பழக்கத்துக்கு ஆளாகின்ற பெருங்கேடு தமிழகத்தைச் சூழ்ந்து உள்ளது. ஒரு தலைமுறையே பாழாகிக் கொண்டு இருக்கின்றது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, மேல்நாட்டு மது வகைகளையும் குடியுங்கள் என்று, மது அருந்தும் தீய பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், எலைட் பார்கள் - சூப்பர் டாஸ்மாக் திறப்போம் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது.

காலம் காலமாகத் தமிழக மக்கள் போற்றி வந்த, உழைப்பே உயர்வு தரும் என்ற நெறியை அழிக்கும் விதத்தில், இலவசங்களை வழங்கி மக்களைச் சோம்பேறிகள் ஆக்கும் கேடு தமிழகத்தில் வளர்ந்து விட்டது.

அரசு மதுக்கடைகளை மூடினால், கள்ளச்சாராயம் பெருகும்; வருமான இழப்பு நேரும் என்று அமைச்சர் சட்டமன்றத்தில் விளக்கம் அளித்து இருப்பது, ஏற்கத்தக்கது அல்ல.

எனவே, இலவச போதையில் இருந்தும், மதுவின் போதையில் இருந்தும் தமிழகத்தை விடுவித்தால்தான் ஒளிமயமான எதிர்காலத்துக்கு வழிபிறக்கும் என்பதால், இனி தமிழகத்தில் புதிதாக மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்றும், படிப்படியாகக் குறைத்து, முழுமையான மதுவிலக்கை நிறைவேற்ற வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

 

 

தீர்மானம் எண் 14
 

சமச்சீர் கல்வி

அண்ணா தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன், தமிழகத்தின் ஒரு கோடியே 22 இலட்சம் மாணவர்களின் கல்வி உரிமையையும், எதிர்கால நலனையும் கெடுக்கின்ற வகையில், சமச்சீர் கல்வியை நிறைவேற்ற மாட்டோம் என அறிவித்தது. ஏற்கனவே பல நூறு கோடிகள் செலவில் அச்சிடப்பட்டு இருந்த பாட நூல்களை மாணவர்களுக்க வழங்காமல் மூலையில் போட்டு விட்டு, புதிய பாட நூல்களை அச்சிடுவதற்காக ஆணை பிறப்பித்தது. அதனால், பள்ளிக்கூடங்களை 15 நாள்கள் திறக்காமல் மூடி வைத்தது.

தமிழக அரசின் இந்த முடிவைத் தவறு எனக் கண்டித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்களின் அமர்வு, திட்டவட்டமான ஒரு தீர்ப்பைத் தந்தது.

அதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு.

சமச்சீர் கல்வியைச் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்த குழு அமைக்கும்படி உச்சநீதிமன்றம் சொன்னது.

கல்வியில் கொள்ளை லாபம் காணும் தனியார் பள்ளிகளுக்குச் சாதகமாக முடிவு எடுப்பதற்காகவே ஒரு குழுவை அமைத்த தமிழக அரசு, அந்தக் குழுவின் அறிக்கையைச் செயல்படுத்த முனைந்தது.

அந்தக் குழு அளித்த அறிக்கையைப் பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம், உடனடியாகச் சமச்சீர் கல்வியைச் செயல்படுத்தச் சொல்லித் தீர்ப்பு வழங்கியது.

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு இருக்கும்போதே, சமச்சீர் கல்விக்கு எதிரான பாடப்புத்தகங்களை, மக்கள் வரிப்பணத்தில் தமிழக அரசு அச்சிட்டதை, சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்தது.

அதற்குப்பின்னரும்கூட, தான் எடுத்த முடிவை மாற்ற மாட்டேன் என்ற பிடிவாதத்தோடு, தமிழக அரசு, மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை உடனடியாக வழங்கும்படி சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் காலக்கெடு நிர்ணயித்து, பலமுறை அறிவுறுத்தியபின்னரும், தமிழக அரசு பாடப்புத்தகங்களை வழங்கவில்லை.

கடைசியாக, சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அனைத்து வகுப்புகளிலும் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைச் செயல்படுத்துவதைத் தவிர, தமிழக அரசுக்கு வேறு வழி இல்லை என்ற நிலைமை ஏற்பட்டது.

தமிழக அரசின் இத்தகைய போக்கு, தமிழகத்தின் மாணவர்கள், பெற்றோர்களை வேதனைக்கும், பதற்றத்துக்கும் சொல்லொணாத் துயரத்துக்கும் ஆளாக்கியது. ஒன்றேகால் கோடி மாணவர்களின் நலன், அவர்களுடைய படிப்பு இரண்டு மாதங்களாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டதற்கு, தமிழக அரசின் பிடிவாதப் போக்குதான் காரணம் ஆகும்.

தேர்தலில் ஆட்சிகள் மாறினாலும், புதிதாக வரும் அரசு, மாணவர்களின் நலனைப் பாதிக்கும் விதத்தில் முடிவு எடுக்கக் கூடாது என்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியது.

நடப்பு கல்வி ஆண்டில், இன்னமும் தனியார் பள்ளிகளில், சமச்சீர் கல்வி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுவதுடன், பொதுமக்கள் நலனுக்கு, மாணவர்களின் உரிமைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழக அரசின் போக்குக்கு, இப்பொதுக்குழு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

 

தீர்மானம் எண்: 15

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றக் கூடாது!

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்து உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அகற்றி விட்டு, அங்கே குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்கப் போவதாகவும், நூலகத்தை நுங்கம்பாக்கத்துக்கும், எழும்பூருக்கும் இடையில் உள்ள அறிவுசார் பூங்கா என்ற இடத்துக்குக் கொண்டு செல்ல, தமிழக அமைச்சரவை முடிவு எடுத்து உள்ள முடிவு, மிகவும் கண்டனத்துக்கு உரியது.

பேரறிஞர் அண்ணா அவர்களுடைய புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், எட்டு ஏக்கர் நிலப்பரப்பில், ஒன்பது மாடிக் கட்டடமாக, ஏறத்தாழ 600 கோடி ரூபாய் செலவில் இந்த நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது.

12 இலட்சம் புத்தகங்களை அடுக்கி வைப்பதற்கான அமைப்புள்ள இந்நூலகத்தில், தற்போது, ஐந்து இலட்சத்து ஐம்பது ஆயிரம் புத்தகங்கள் சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன. தமிழகம் முழுவதும் ஆர்வத்தோடு, மக்கள் புத்தகங்களை நன்கொடையாக வழங்கி இருக்கின்றார்கள். பார்வை அற்றோர் படிக்கக்கூடிய பிரெய்லி எழுத்து முறையிலான புத்தகங்கள், மருத்துவ நூல்களும், பொறியியல் துறை சார்ந்த நூல்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் என, பல்வேறு தரப்பினருக்கும் பயன் அளிக்கின்றது. பெரிய அரங்கங்கள், ஆவணப்படங்களைத் திரையிட்டுப் பார்ப்பதற்கான வசதிகள் உள்ளன.

தற்போது, ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பேர் அங்கே வந்து பயன் பெற்றுக் கொண்டு இருக்கின்றார்கள். ஆசியக் கண்டத்திலேயே சிறந்த நூலகமாக அமைந்து இருக்கின்றது. அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹில்லரி கிளிண்டன், அந்த நூலகத்துக்கு வந்து பார்வையிட்டு, அங்கே உரை ஆற்றுகின்றபோது, இந்த நூலகத்தைப் பாராட்டிப் பேசி இருக்கின்றார்.

இப்படி, நூலகத்துக்காகத் திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தை இடித்து, மருத்துவமனையாக ஆக்கப் போகின்றோம் என்று சொல்வது, அதிகாரம் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவு ஆகும். அரசியல் காழ்ப்பு உணர்ச்சியோடு அரசின் முடிவுகள் அமையக்கூடாது. தமிழக அரசின் முடிவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உள்ளது.

மருத்துவமனை என்பது, ஆபரேசன் தியேட்டர்கள், ஸ்ட்ரெச்சர்களைக் கொண்டு செல்ல சாய்தளப் படிக்கட்டுகள் என நோயாகளின் வசதிக்கு ஏற்பத் திட்டமிட்டுக் கட்டப்பட வேண்டும். எனவே, நூலகத்துக்காகத் திட்டமிட்டுக் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தை இடித்து மருத்துவமனையாக மாற்றுவதைக் கைவிட்டு, சென்னை நகரின் மையமான எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையைத் தரம் உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன், புதிய சட்டமன்றக் கட்டடம் கட்டப்பட்டபோது, புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை இயங்கி வந்த இடத்தில், பாவேந்தர் பெயரில், செம்மொழி நூலகம் ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது, அதே இடத்தில் சட்டமன்றம் செயல்படுவதற்காக, பாவேந்தர் நூலகத்தையும் மூடிய அ.தி.மு.க. அரசு, அங்கே இருந்து அரிய பல நூல்களை மூலையில் போட்டு விட்டது.

தமிழக அரசின் இத்தகைய பிடிவாதமான நடவடிக்கைகள், தமிழர்களின் அறிவுக் கருவூலங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலே ஆகும்.

பாவேந்தர் நூலகத்தை அகற்றிய, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அகற்ற முயற்சிக்கின்ற தமிழக அரசுக்கு இப்பொதுக்குழு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. அண்ணா நூற்றாண்டு நூலகம், தொடர்ந்து கோட்டூர்புரத்திலேயே இயங்கிட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
 

தீர்மானம் எண்: 16

தமிழகத்தில் ஊழல் விசாரணை மன்றம் (லோக் ஆயுக்தா)!

அண்மைக் காலங்களில் இந்தியாவில் நடைபெற்ற ஊழல்களால், ஜனநாயகத்தின் மீதே மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

பொது வாழ்வில் ஈடுபடுவோரும், ஆளுங்கட்சியினரும், ஊழல் ஒரு பொருட்டே அல்ல என்று கருதுகின்றனர். அரசுத் துறைகளில் ஊழல் புரையோடி விட்டது.

எனவே, அரசுத்துறைகளில் ஊழலை ஒழிக்க, மாநிலங்களில் ‘லோக் அயுக்தா’ (ஊழல் விசாரணை மன்றம்) அமைக்கச் சட்டம் இயற்ற வேண்டும், அதற்காக, ஊழல் விசாரணை மன்றம் (லோக் ஆயுக்தா) அமைக்க வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் வலுத்து வருகிறது.

ஊழலுக்கு எதிராக மக்கள் அணி திரண்டு வரும் இந்த நேரத்தில், தமிழகத்தில் உடனடியாக ஊழல் விசாரணை மன்றம் (லோக் ஆயுக்தா) அமைத்திட வேண்டும்; அந்த அமைப்பு சுயாட்சித் தன்மை கொண்டதாகவும், தகுதியான உறுப்பினர்களைக் கொண்டதாகவும் அமைய வேண்டும்; மக்களின் நம்பகத்தன்மைக்குப் பாத்திரமான நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, எவ்விதத் தலையீடும் இன்றி இயங்கிடவும் வழிவகை காண வேண்டும் எனத் தமிழக அரசை, இப்பொதுக்குழு வலியறுத்துகிறது.
 

 

தீர்மானம் எண்: 17


ஒலிம்பிக்கில் டோ கெமிகல்ஸ்

இந்தியா புறக்கணிக்க வேண்டும்!

 

1984 ஆம் ஆண்டு, பல்லாயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்த விஷவாயு விபத்துக்குக் காரணமான, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் உரிமையாளர்களான டோ கெமிகல் நிறுவனத்தாருக்கு, லண்டனில் நடைபெற இருக்கின்ற ஒலிம்பிக் பந்தயங்களுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

இந்திய நீதிமன்றங்களின் ஆணையை, யூனியன் கார்பைடு நிறுவனம் மதிக்கவும் இல்லை; நீதிமன்ற விசாரணைகளில் பங்கு ஏற்கவும் இல்லை. டோ கெமிகல் நிறுவனம்தான், இப்போது யூனியன் கார்பைடு நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆவர்.

லண்டன் ஒலிம்பிக் பந்தயத் திடல்களில், தரைக் கம்பள விரிப்புகளைத் தயாரித்து வழங்குவதற்கான, 7 மில்லியன் பவுண்டு மதிப்பு உள்ள ஒப்பந்தம், இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. அது மட்டும் அல்ல; 100 மில்லியன் பவுண்டு மதிப்பு உள்ள, மேலும் 10 ஆண்டுகளுக்கான ஒப்பந்தங்களையும் வழங்கி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அம்னெஸ்டி அமைப்பும், தங்கள் எதிர்ப்பைக் கடுமையாகப் பதிவு செய்து உள்ளனர்.

போபால் விஷவாயுச் சாவுகளுக்கு, டோ கெமிகல் நிறுவனமே பொறுப்பு ஆகும். எனவேதான், அந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தங்கiளை வழங்கியதைக் கண்டித்து, ஒலிம்பிக் பந்தயங்களின் அறநெறிக் குழுவின் உறுப்பினரான மேடம் மெரெடித் அலெக்சாண்டர், அந்தக் குழுவில் இருந்து விலகி உள்ளார்.

போபால் விபத்தில் உயிர் இழந்தோரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பு ஈடு இன்னமும் வழங்கப்படவில்லை. அந்த விபத்தில் உடல் உறுப்புகளை இழந்த பல்லாயிரக்கணக்கானோர், இன்றுவரையிலும் வேதனையில் வாடுகின்றனர். இப்போது பிறக்கின்ற குழந்தைகள் வரையிலும் குறைபாடுகள் தொடர்கின்றன.

ஒலிம்பிக் பந்தயங்களை, பல்வேறு நாடுகள் புறக்கணித்து உள்ளன. 1976 ஆம் ஆண்டு, கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயங்களை, ஆப்பிரிக்க நாடுகள் புறக்கணித்தன; 1980 ஆம் ஆண்டு, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற பந்தயங்களில், அமெரிக்க ஆதரவு நாடுகள் பங்கு ஏற்கவில்லை; எனவே, 1984 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜெலஸ் நகரில் நடைபெற்ற பந்தயங்களை, ரஷ்ய ஆதரவு பொது உடைமை நாடுகள் புறக்கணித்தன.

இன்றைக்கு, உலகம் முழுமையும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், மனித உரிமைப் போராளிகளும், இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை உற்றுநோக்கிக் கொண்டு இருக்கின்றனர்.

இந்தியா ஒரு மக்கள் குடியரசு என்பதை உலகுக்கு உணர்த்துகின்ற வகையிலும், போபால் விபத்தில் பாதிக்கப்பட்டோரின் உணர்வுகளை மதிக்கின்ற வகையிலும், பன்னாட்டு ஒலிம்பிக் பந்தய அமைப்புக் குழுவுக்கும், லண்டன் ஒலிம்பிக் பந்தய அமைப்பாளர்களுக்கும், தன்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்; டோ கெமிகல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ள ஒப்பந்தங்களை ரத்துச் செய்ய வேண்டும் என எச்சரிக்க வேண்டும்.

அந்தக் கோரிக்கையை அவர்கள் ஏற்கவில்லையெனில், இந்தியா ஒலிம்பிக் பந்தயங்களைப் புறக்கணிக்க வேண்டுமென, இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

 

 

தீர்மானம் எண் : 18
 

கூடங்குளம் அணு உலையை மூடுக!

 

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசு அமைத்து உள்ள அணுமின் நிலையம், ஆழிப்பேரலை தாக்கினாலோ, அணு உலையில் தானாகவே விபத்து நேர்ந்தாலோ, நாம் கற்பனை செய்ய முடியாத பேரழிவைத் தென் தமிழ் நாட்டின் கடலோரப் பகுதியில் ஏற்படுத்தும் என்பதால், இந்த அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து, மீனவ மக்களும் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் இடிந்தகரையில் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதில் பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பது, மிகுந்த கவலை அளிக்கிறது.

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்க அன்றைய சோவியத் இரஷ்யாவுடன்; இந்திய அரசு ஒப்பந்தம் செய்ய முனைந்தபோதே, எதிர்காலத்தில் இது பேராபத்தாக முடியும் என்றும், அமெரிக்காவில் 1979 இல் மூன்றுகல் தீவு அணுமின் நிலையம் விபத்தில் மூடப்பட்டதையும், 1986ல் இரஷ்யாவில் செர்னோபில் அணுமின் நிலையம் மூடப்பட்டதையும் சுட்டிக்காட்டி, 1988ல் நாடாளுமன்றத்தில் வைகோ எதிர்ப்புத் தெரிவித்தார்.

2011 மார்ச் 11 ஆம் தேதியில் ஜப்பானில் ஆழிப்பேரலையில் புகுஷிமா அணுமின் நிலையம் அழிந்தது. அணுக் கதிர் வீச்சால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தார்கள், மூன்றரை இலட்சம் மக்கள் வீடு இழந்தார்கள் என்பது உலகின் உள்ள அனைத்து நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்திவிட்டது.

எனவே, ஜப்பானில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களையும் மூடப்போவதாக ஜப்பான் பிரதமர் அறிவித்துவிட்டார்.

ஜெர்மனி அதிபர் ஆங்கெலா மெர்கெல், தங்கள் நாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள் அனைத்தும் படிப்படியாக மூடப்போவதாகவும், 2030ல் ஜெர்மனியில் அணுமின் நிலையம் ஒன்றுகூட இருக்காது என்றும் அறிவித்து விட்டார்.

இத்தாலியில் அணுமின் நிலையம் வேண்டுமா? வேண்டாமா? என்று நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், 90 விழுக்காட்டினர் கூடாது என்று கூறிவிட்டதால், அணுமின் நிலையங்களை மூட இத்தாலி அரசு முடிவு எடுத்துவிட்டது.

ரஷ்ய நாட்டின் அணுஉலைகள் காயலாங்கடைச் சரக்குகள் என அந்தநாட்டு அணு விஞ்ஞானிகளே அறிவித்து இருக்கின்ற நிலையில், பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத கூடங்குளம் அணுமின் நிலையம், தென் தமிழ்நாட்டில் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் சூழலில், இந்திய அரசு, தமிழர்கள் எப்படி அழிந்தால் என்ன? என்ற மனப்போக்கில், கூடங்குளத்தில் எட்டு ரியாக்டர்களும், கல்பாக்கத்தில் எட்டு ரியாக்டர்களும் அமைக்கப் போவதாகவும், இந்த இரண்டு இடங்களும் அணுசக்திப் பூங்காக்கள் என்றும் அறிவித்து இருப்பது அதிர்ச்சியைத் தருகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் தொடங்கக் கூடாது;

தமிழக மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது;

நிரந்தரமாக அணுமின் உலையை மூட வேண்டும்;

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதிய ரியாக்டர்கள் அமைக்கக்கூடாது என வலியுறுத்துவதுடன், கூடங்குளம் அணுமின் நிலையத்தை அகற்றக்கோரும் அறப்போராட்டத்துக்கு இம்மாநாடு முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன், கூடங்குளம் அணுமின் நிலையத்தை அகற்ற தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

 

 

தீர்மானம் எண் 19

மூன்று தமிழர்கள் உயிர் காக்க...

தாய்த் தமிழகத்திலும் தரணியெங்கும் வாழுகின்ற தமிழர்களின் நெஞ்சமெல்லாம் கடந்த ஆக°டு 25 ஆம் தேதியன்று வெளியான செய்தியால், வேதனை நெருப்பில் உலைக்களம் ஆனது.

1991 மே 21 திருப்பெரும்புதூர் கொலைச்சம்பவத்தில் எந்தத் தொடர்பும் இல்லாத, குற்றம் அற்ற நிரபராதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களை நிராகரித்து, தூக்குத் தண்டனையை உறுதி செய்த மத்திய அரசின் முடிவினையொட்டி, செப்டம்பர் 9 ஆம் நாள்; தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பு வெளியானதால் அதிர்ச்சியுற்ற தமிழகத்தில், அதனைத் தடுக்கப் பல முனைகளிலும் அறப்போர் மூண்டது. குறிப்பாக கட்சி எல்லைகளைக் கடந்து இளம் தலை முறையினரின் ஆவேசக் கனல் எழுந்தது.

மூன்று தமிழர்களின் உயிர்காக்கும் இயக்கம் அமைந்தது. மரணதண்டனை எதிர்ப்பு இயக்கமும், தமிழ் உணர்வு உரிமை இயக்கங்களும் களம் கண்டன. ஆக°ட் 2 ம் தேதி பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்து, இவர்களின் தூக்குத்தண்டனையை ரத்துச் செய்யக் கோரிக்கை வைத்திட்ட கழகப் பொதுச் செயலாளர் வைகோ, ஆக°டு 16, 19, 26 ஆகிய தேதிகளில் வேலூர் மத்திய சிறைச்சாலையில், மூவரையும் மூன்று முறை சந்தித்தார்கள்.

இம்மூன்று தமிழர்களின் உயிரைக் காக்க கருணை உள்ளத்தோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு வைகோ அவர்கள் வேண்டுகோள் விடுத்ததோடு, சட்டப்படியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர் இராம் ஜெத்மலானி அவர்களைச் சந்தித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வாதாட இசைவினைப் பெற்றார்.

ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று இராம் ஜெத்மலானி அவர்களும், டெல்லி வழக்கறிஞர் காலின் கொன்சால்வ° அவர்களும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மூவரின் மரண தண்டனையைத் தடுத்து நிறுத்திட, வாதங்களை எடுத்து வைத்தனர். மும்பை வழக்கறிஞர் மொகித் செளத்ரியும் உடன் இருந்தார். உயாநீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தாக்கல் செய்த வழக்கறிஞர்களுள் வைகோ அவர்களும் ஒருவர் ஆவார்.

மாண்புமிகு நீதியரசர்கள் நாகப்பன், சத்தியநாராயணா இருவரின் அமர்வு, வாதங்களைக் கேட்டது. எட்டு வாரங்களுக்குத் தூக்குத் தண்டனைக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தபோது, சென்னை உயர்நீதி மன்றம், அதன் வரலாறு காணாத வகையில் தமிழர்களின் உணர்ச்சிப் பிரவாகத்தைக் கண்டது.

மூவரின் உயிர்காக்க நடைபெறும் இந்தப் பிரச்சனையில், கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் பங்களிப்பை வழக்கறிஞர் இராம்ஜெத்மலானி அவர்களும், காலின் கொன்சால்வ° அவர்களும் பாராட்டினர்.

தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, மூவரின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டுமென குடியரசுத் தலைவரை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு, தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசின் அமைச்சரவையின் முடிவுகளைத்தான், தனது அறிவிப்புகளாகக் குடியரசுத் தலைவர் வெளியிடுகிறார். கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து இருந்தாலும், மீண்டும் அதனை மறுபரிசீலனை செய்து, மரண தண்டனையை குடியரசு தலைவர் இரத்துச் செய்ய, அரசியல் அமைப்புச் சட்டத்தில் தடை ஏதும் இல்லை.

அத்துடன், உலகின் 137 நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதுபோல, இந்தியாவிலும் மரண தண்டனையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

மூன்று தமிழர்களுக்கு விதிக்கப்பட்டு உள்ள துhக்குத்தண்டனையை ரத்துச் செய்திட மத்திய அரசு முன்வராவிடில், மரண தண்டனையைக் குறைக்கும் மாநில அரசுகளின் அதிகார ஆளுமையில் குறுக்கிட்டுக் கட்டுப்படுத்த, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 1991 மார்ச் 5ம் தேதி அனுப்பிய சுற்றறிக்கை, மாநில அரசுக்கு இந்திய அரசியல் சட்டத்தில் 72(3)வது பிரிவும், 161 வது பிரிவும் வழங்கி
உள்ள அதிகாரத்தைக் கட்டுப்படுத்தாது என்பதால்,

அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளன், சாந்தன், முருகன் இம்மூவரும் மீண்டும் தமிழக ஆளுநருக்கு அனுப்பி உள்ள கருணை மனுக்களை ஏற்று, தூக்குத் தண்டனையைக் குறைத்து, மாநில அரசின் அதிகார உரிமையைக் காத்து, மற்ற மாநில அரசுகளுக்கும் வழிகாட்டிட வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

 

 

தீர்மானம் எண் : 20

அனைத்துலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவ,
சிங்கள அரசின் மோசடி நடவடிக்கை!
உடந்தையாகச் செயல்படும் இந்திய அரசு!

மனிதகுலத்தின் மனசாட்சியை நடுங்கச் செய்யும், கோரமான தமிழ் இனப்படுகொலையை இலங்கையின் சிங்கள இனவாத இராஜபக்சே அரசு செய்தது. இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2008 ஆம் ஆண்டிலும், 2009 மே 18 வரையிலும், ஈழத்தமிழ் மக்கள், வயது முதிர்ந்தோர், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே, சிங்கள விமானப்படை குண்டுவீச்சாலும், பீரங்கி ஷெல் தாக்குதலாலும் கொல்லப்பட்டனர்.

சிங்கள அரசு செய்த கொலை பாதகக் குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்றும், மனித உரிமைகள் அழிக்கப்பட்டதற்கு ஐ.நா. மன்றமும், மனித உரிமைக் கவுன்சிலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் ஜெனீவாவின் மனித உரிமைக் கவுன்சிலில் எடுத்த முயற்சியை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தோற்கடித்து, சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றத்தை மூடி மறைக்க உதவியாகச் செயல்பட்டன. இலங்கையில் போரின்போது சிங்கள இராணுவம் நடத்திய குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் அறிந்து ஆய்வு செய்து அறிக்கை தர, மார்சுகி தாரிஸ்மன், யாஸ்மின் சுகா, ஸ்டீவன் ராட்னர் ஆகிய மூவர் குழுவை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் அறிவித்தார்.

அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த இராஜபக்சே அரசு, உண்மைகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக, எல் எல் ஆர் சி (Lessons Learned and Reconciliation Council - LLRC) என்ற ஒரு பித்தலாட்டக் கமிசனை தானே அறிவித்துக் கொண்டது. முழுக்க முழுக்க, அப்பட்டமான பொய்களைக் கொண்ட 388 பக்கங்கள் கொண்ட அந்தக் கமிசன் அறிக்கையை, கடந்த டிசம்பர் 16 இல் வெளியிட்டது. குறிப்பாக, ஐ.நா. மன்றத்தின் மூவர் குழு அறிக்கை, ஆதாரங்களோடு வெளியிட்ட, சிங்கள இராணுவத்தின் இனக்கொலைக் குற்றங்களை, சிங்கள அரசின் கமிசன் மூடி மறைத்து விட்டது.

சிங்கள இராணுவம் மருத்துவமனைகள் மீது குண்டுவீசித் தாக்கியதற்கு ஆதாரங்கள் இருப்பதால், அதை மறுக்க வழி இன்றி, விடுதலைப் புலிகள் மீது பழியைச் சுமத்தி உள்ளது. ஈழத்தமிழ் இளைஞர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில், அம்மணமாக இழுத்துச் செல்லப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டதையும், இசைப்பிரியா எனும் தமிழ் நங்கை, இராணுவத்தினரால் கொடூரமாகக் கற்பழித்துக் கொல்லப்பட்டதையும், இத்தகைய பல்வேறு சம்பவங்களைப் பற்றி, ஒரு வரி கூட அந்த அறிக்கையில் இல்லை.

எந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட மக்களிடத்தில், சுதந்திரமாக சாட்சியம் அளிக்க வாய்ப்பு அளிக்கவில்லை. இராணுவ சிப்பாய்கள் உடன் இருந்து மிரட்டிய நிலையிலேயே சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. கண்ணீரும், கம்பலையுமாக அழுது கதறிக்கொண்டு, தாய்மார்களும், வயது முதிர்ந்தோரும் கூறிய எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

திட்டமிட்டே இனப்படுகொலை செய்த சிங்கள அரசு, உலகின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காகத்தான், தானே மோசடியாக கமிசனை நியமித்து, விசாரணை நாடகத்தை நடத்தி, அறிக்கையும் தந்து விட்டது. உலகின் பல்வேறு நாடுகள், மனித உரிமை அமைப்புகள், இந்த அறிக்கையைக் கண்டித்து உள்ளன.

எனவே, சிங்கள அரசு நடத்திய இனக்கொலைக் குற்றத்தை, முழுமையாக உலக அரங்குக்குத் தெரியப்படுத்தவும், அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் இராஜபக்சே அரசை நிறுத்தித் தண்டிக்கவும், ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும், நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு உரிய சுதந்திரமான விசாரணை, தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடத்தப்பட வேண்டும் என்று, ஐ.நா. மூவர் குழு, ஏற்கனவே தெரிவித்து உள்ளது.

விடுதலைப்புலிகளுடன் யுத்தம் என்று சொல்லிக்கொண்டே, தமிழ் இனத்தையே கரு அறுக்க, சிங்கள அரசு நடத்திய இனக்கொலைக்கு, இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, முழுக்க முழுக்க ஆயுத உதவியும், பொருள் உதவியும் செய்தது. இலங்கையின் விமானப்படைக்கு, ரடார்களும், சாதனங்களும் வழங்கியதுடன், செயற்கைக் கோள் தகவல்களின் உதவியோடு வான்வெளித் தாக்குதலுக்கும் இந்திய அரசு ஏற்பாடு செய்து கொடுத்தது. இலங்கைக் கடற்படைக்கு இந்தியக் கடற்படை முழு அளவில் உதவி செய்தது.

இந்திய அரசுதான் போரை நடத்த உதவியது என்றும், இயக்கியது என்றும், அதனால்தான் புலிகளைத் தோற்கடித்தோம் என்றும், சிங்கள அதிபர் இராஜபச்சேவும், அமைச்சர்களும் அதனால்தான், இலங்கை நாடாளுமன்றத்திலேயே கூறினர். ஈழத்தமிழ் இனக்கொலையின் கூட்டுக்குற்றவாளிதான் இந்திய அரசு ஆகும்.

2009 மே மாதத்துக்குப் பின்னரும், தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளிலேயே சிங்கள அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழர் தாயகத்தில், சிங்கள இராணுவமும், போலீசும் குவிக்கப்பட்டு உள்ளன. தமிழ்ப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது, கற்பழிப்பது போன்ற அக்கிரமங்களில் சிங்கள இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களிலும் சிங்கள இராணுவம் அதிகாரம் செலுத்துகிறது. தமிழர்களின் பூர்வீக அடையாளங்களை எல்லாம் அழித்து வருகிறது. பெளத்த விகாரைகளைத் தமிழர் பகுதிகளில் அமைக்கிறது.

உண்மைகளை வெளியே சொல்ல, ஈழத்தமிழர்கள் அஞ்சுகின்ற அபாயத்தில் உள்ளனர். உலக நாடுகள், சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றத்தை அறிந்து வருவதாலும், எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடும் என்பதாலும், இந்திய அரசு திட்டமிட்டு, சிங்கள அரசுக்கு உதவுகின்ற வேலையில் தற்போது ஈடுபட்டு உள்ளது.

2006 ஆம் ஆண்டு செஞ்சோலையில் 61 தமிழ்ச் சிறுமிகள், சிங்கள விமானக் குண்டுவீச்சால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்காத இந்திய அரசு, சுனாமி நிவாரணப் பணியில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்களை சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றதைக் கண்டிக்காத இந்திய அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்களான நான்கு தமிழர்கள் நடு வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டிக்காத இந்திய அரசு, இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாகச் செயல்பட்ட இந்திய அரசு, இப்போது வீடுகள், பள்ளிக்கூடங்கள் கட்டித் தருகிறோம் என்று மாய்மால வேலை செய்கிறது.

தமிழர் தாயகம் என்பதே கிடையாது என்றும், சிங்கள மொழிதான் ஆட்சி மொழி என்றும், சிங்களவர்களுக்கு அடங்கித்தான் தமிழர்கள் வாழ வேண்டும் என்றும், திமிரோடு சொல்லிவிட்ட இராஜபக்சேயிடம், இந்திய வெளி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம். கிரூஷ்ணா இப்போது பேசி விட்டதாகவும், 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை வலியுறுத்தியதாகவும் கூறி இருப்பது, தமிழக மக்களையும், உலகத்தையும் ஏமாற்றுவதற்காக, இந்திய அரசு செய்கின்ற பித்தலாட்ட வேலை ஆகும்.

தமிழக மீனவர்கள் மீது இனி சிங்களக் கடற்படை தாக்குதல் நடத்தாது, என்று தன்னிடம் சிங்கள அரசு உறுதி அளித்ததாக கூறிய இந்திய அமைச்சர் கிருஷ்ணா முகத்தில் சிங்கள அரசு மூன்று நாட்களுக்குள் கரியைப் பூசிவிட்டது. நேற்றும், இராமேஸ்வரம் அருகில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியுள்ளது.

சிங்கள அரசும், இந்திய அரசும் செய்கின்ற மாய்மால வேலைகளை முறியடித்து, இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தி, தண்டனை கிடைக்கச் செய்வதற்கு, தமிழர்கள் அனைவரும் ஓரணியில் நின்று குரல் கொடுக்க வேண்டும் எனவும், ஐ.நா. மன்றத்தையும், உலக நாடுகளையும் வற்புறுத்த வேண்டும் என்றும்,

ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு என்பதால், இலங்கையில் தமிழ் ஈழம் உருவாக்கும் இலக்கை அடைவதற்கு, பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிர°[ல்ஸில் 2011 ஜ&ன் 1 ஆம் நாள் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கு ஏற்று, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முன்மொழிந்த பொது வாக்கெடுப்பை, பன்னாட்டுப் பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என்றும்,

அதில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும், அந்தந்த நாடுகளிலேயே வாக்கெடுப்பில் பங்கு ஏற்க ஆவன செய்ய வேண்டும் என்றும்,

கிழக்குத் தைமூர், கொசாவோ, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் பொது வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்த ஐ.நா. மன்றம்,

இலங்கையிலும் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும் என்பதை, உலகத்தமிழர்களும், மனித உரிமையை மதிக்கும் நாடுகளும் வற்புறுத்த வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.

ஆகும் என்பதை நிலைநாட்டவும், ஈழத்தமிழர்கள் மத்தியில் அதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தவும், உலகெங்கும் உள்ள ஈழத்தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் உறுதி பூண வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

 

 

தீர்மானம் எண். 21

மாற்று சக்தி!

 

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக, அறிஞர் அண்ணா அவர்களின் கொள்கை வழியில் இயங்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை மக்கள் மன்றத்தில் முன்னெடுத்துச் செல்வது என்றும், சங்கரன்கோவில் சட்டமன்றத் இடைத்தேர்தலில் மறுமலர்ச்சி தி.மு.கழகம் போட்டியிடுவது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

‘தாயகம்’                                    தலைமைக் கழகம்
சென்னை - 8                               மறுமலர்ச்சி தி.மு.க.
10.02.2012

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)