பாளை - சித்த மருத்துக்கல்லூரி மாணவர் போராட்டம்! தமிழக அரசு தீர்வு காண வேண்டும் வைகோ வலியுறுத்தல்

Issues: Education, Human Rights

Region: Tirunelveli - Urban, Tirunelveli - Rural

Category: Articles, Headlines

Date: 
Sat, 18/02/2012

 

 

 

 

 

பாளை - சித்த மருத்துக்கல்லூரி மாணவர் போராட்டம்!
தமிழக அரசு தீர்வு காண வேண்டும்
வைகோ வலியுறுத்தல்

திருநெல்வேலி-பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரி கடந்த நாற்பத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட பழமை வாய்ந்த கல்லூரி ஆகும். இங்கே, பட்டப்படிப்பில் (B.S.M.S) 100 மாணவர்களும், முதுநிலை (M.D) படிப்பில் 60 மாணவர்களும் சேர்ந்து படித்திட விண்ணப்பித்து அரசின் கலந்தாய்விலும் கலந்துகொண்டு தேர்வாகி உள்ளனர். கடந்த 21.10.2011 முதல் 23.10.2011 வரை மூன்று நாட்கள் கலந்தாய்வு நடைபெற்றது.

28.10.2011 அன்று கல்லூரி கல்விக் கட்டணம் ரூ.5,500, விடுதிக் கட்டணம் ரூ.3,300 செலுத்தி, கல்வி கற்க ஆயத்தமான நிலையில் இருந்தனர். கடந்த ஆண்டே இக்கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை என்று இந்திய மருத்துவத்திற்கான மத்திய குழு (Central Counsil of Indian Medicine) தமது ஆண்டுஅறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தது.

இக்குறைகள் 31.10.2011க்குள் சீரமைக்கப்படும் என மாநில அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கைக்கான கட்டணமும், விடுதிக் கட்டணமும் வசூலிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், மாணவர் சேர்க்கை அனுமதியை மத்திய அரசின் சித்த மருத்துவப் பிரிவான ஆயுஷ் (Ayush) வழங்கவில்லை என்றும், முதலாமாண்டு வகுப்புகளை தொடங்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரியில் 160 மாணவ மாணவியரும், குமரி மாவட்டம்-கோட்டாறு ஆயுர்வேத கல்லூரியைச் சேர்ந்த 50 மாணவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். நல்ல மதிப்பெண்கள் பெற்று, சித்த மருத்துவராகப் படிக்க விரும்பிய இம்மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. இவர்களின் பெற்றோரும் வேதனையில் தவிக்கின்றர்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் B.I.M என்று இருந்த பட்டப்படிப்பை B.M.S என்று மாற்றி, இக்கல்லூரி சிறப்பாக இயங்கிட உதவினார். 1500 வெளி நோயாளிகள் நாள்தோறும் வந்து செல்லும் வகையிலும், 350 உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையிலும் சிறப்பாக இயங்கிய இக்கல்லூரி மருத்துவமனைக்கு, தற்போது 500 க்கும் குறைவான நோயாளிகளே வந்து செல்கின்றனர். மூலிகைப் பண்ணையும் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை.

மாணவர்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 2011 டிசம்பர் 15 முதல் இடைவிடாது போராடி வருகின்றனர். தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சரை மாணவர் பிரதிநிதிகள் சந்தித்தபோது, உச்சநீதிமன்றத்தையோ, மத்திய அரசையோ அணுகுமாறு அமைச்சர் கூறி இருப்பது, தமிழக அரசின் கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்துகிறது. அரசின் பொறுப்பற்ற செயலாகவே கருதப்படுகிறது.

ஒரு இடைத்தேர்தலுக்கு 80 கோடி ரூபாய்க்கு மேல் அசுர வேகத்தில் செலவு செய்திடும் தமிழக அரசு, மாணவர் சேர்க்கைக் கட்டணம் செலுத்திய பின்னரும், இரண்டுமாத காலமாக தொடர் போராட்டம் நடத்திவந்தபோதிலும் கட்டமைப்பு வசதிகளைச் செய்து, உரிய தீர்வினை எட்ட முயற்சிக்காதது கண்டனத்துக்கு உரியதாகும்.

இந்திய மருத்துவத்துக்கான மத்தியக் குழு குறிப்பிட்டுள்ள கட்டமைப்பு வசதிகளை உடனடியாகச் செய்து முடித்து, இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி, நடப்பு ஆண்டிலேயே வகுப்புகள் தொடங்கிட ஆவன செய்திட வேண்டுமெனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

 

‘தாயகம்’                              வைகோ
சென்னை-8                          பொதுச் செயலாளர்
18.02.2012                             மறுமலர்ச்சி தி.மு.க.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)