தென்னாட்டு மக்களின் கோபத்துக்கு ஆளாகாதீர்கள்! இடையூறு செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள்! வைகோ.

Issues: Economy, Farmers, Rural

Region: Theni, Tamil Nadu

Category: Favorites, Headlines, Speeches

Date: 
Fri, 01/01/2010

தென்னாட்டு மக்களின் கோபத்துக்கு ஆளாகாதீர்கள்! இடையூறு செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள்! வைகோ.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைக் காப்பதற்காக, மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கம்பத்தில் 29.12.2009 அன்று மாபெரும் மறியல் அறப்போராட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பொது மக்களும், விவசாயப் பெருங்குடி மக்களும், கழகத் தோழர்களும், திரண்டெழுந்து மறியல் அறப்போரில் பங்கேற்ற காட்சி இந்திய நாட்டின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்தது. எழுச்சிமிகு இப்போராட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று ஆற்றிய உணர்ச்சிகரமான உரையில் இருந்து...

எனது அன்புக்கு உரியவர்களே, கழகத்தின் கண்மணிகளே, உழவர் பெருங்குடி மக்களே, உயிரனைய தொண்டர்படைத் தம்பிமார்களே, கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தோழர்களே, நண்பர்களே, விவசாயப் பெருமக்களின் வாழ்வு உரிமையைக் காப்பதற்காக நடைபெறுகின்ற இந்தப் போராட்டத்தில், பல்லாயிரக்கணக்கில் திரண்டு, ஒரு புதிய சரித்திரத்தைத் தீட்டி இருக்கிறீர்கள்.

இந்தப் போராட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்த கழகத்தின் முன்னோடிகளுக்கும், ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதிப்புக்கு உரிய காவல்துறையினருக்கு, நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்பது நமது நோக்கம் அல்ல. உங்கள் கடமையைச் செய்ய நீங்கள் முற்படுவதில் தவறு இல்லை. நாங்கள் கைது செய்யப்படுவது உறுதி என்ற நிலையில்தான், நாங்கள் இந்தக் களத்துக்கு வந்து இருக்கிறோம்.

என்ன நோக்கத்துக்காக இந்தப் போராட்டம்? அடுத்து வருகின்ற ஆபத்தைத் தடுக்க என்னவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்? என்பதை, கேரள மக்களுக்கும், கேரள அரசுக்கும் தெரிவிப்பதற்காகச் சில கருத்துகளைச் சொல்ல விரும்புகிறோம். தமிழ்நாட்டு மக்களின் நலன்களைக் காப்பதற்காகவே நாங்கள் இங்கே திரண்டு இருக்கிறோம். ஆளும் அரசாங்கத்தைக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அதற்கு ஆயிரக் கணக்கான காரணங்கள் உள்ளன. அது இப்போது நமக்குத் தேவை இல்லை.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில், தென் தமிழ்நாடு கனன்று கொண்டு இருக்கிறது; அது, எரிமலையாகக் கொந்தளித்துச் சீறவும் கூடும். அதற்கு உரிய தடுப்பு நடவடிக்கைகளை இதுவரையிலும் நீங்கள் எடுக்கத் தவறினாலும், இனிமேலாவது அப்படிப் பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வாருங்கள் என்று வலியுறுத்தவே இந்தப் போராட்டம்.

நான் கடந்த செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டேன். முல்லைப்பெரியாறு அணையை உடைப்பதற்கு, புதிய அணை கட்டுவதற்கு மணலையும், கருங்கல்லையும் தமிழகத்தில் இருந்து கொண்டுபோய்க் குவித்து வைத்து இருக்கிறார்கள்; முதலில் அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று சொன்னேன். அரசும், அதிகாரிகளுமே இதைச் செய்து இருக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய விருப்பம்.

கேரளச் செய்தியாளர்களுக்குச் சொல்லுகிறேன். நான் ஆங்கிலத்திலே வாசகங்கள் எழுதப்பட்ட அட்டையைத் தூக்கி வந்தேன். ஏன் தெரியுமா? கேரள மக்களுக்கு என்னுடைய உணர்வுகளைத் தெரிவிப்பதற்காக. நாங்கள் உங்களை எதிரிகளாகக் கருதவில்லை. உங்களைப் பட்டினி போட வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், எங்கள் மக்களை நிரந்தரமாகப் பட்டினிக்குத் தள்ளி விடாதீர்கள்; அந்தத் துன்பத்தை எங்களுக்குத் தந்து விடாதீர்கள் என்பதுதான் எங்களின் வேண்டுகோள்.

Let us bridge brotherhood ; Let us not break Mullai Periyar ;

நாம் சகோதரத்துவத்தைப் பாலமாக அமைத்துக் கொள்வோம். நட்பை வலுப்படுத்துவோம்; அதற்கான அணையைக் கட்டுவோம்; ஆனால், இருக்கின்ற அணையை உடைக்கின்ற வேலையில் ஈடுபட்டு விடாதீர்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறோம்.

இதே சாலையில், மலையாளத்துச் சகோதரர்கள் பலர் கடைகள் வைத்து இருக்கிறார்கள். பல்லாயிரக் கணக்கானவர்கள் இங்கே திரண்டு இருக்கிறார்கள். துடிப்புள்ள இளைஞர்கள், விவசாயிகள் திரண்டு இருக்கிறார்கள். எங்காவது, 'மலையாளிகள் ஒழிக' என்ற முழக்கத்தைக் கேட்டீர்களா? ஏதோ ஒரு கேரளத்து நண்பரின் கடையிலாவது, சிறு தொல்லை விளைவித்து இருக்கிறோமா? இல்லை. இதுதான், தமிழ்நாட்டின் பண்பாடு.

கேரளத்துச் சகோதரர்கள் தமிழகம் முழுவதும் ஏராளமாக இருக்கிறீர்கள். ஏராளமான சொத்துகளை வாங்கி அனுபவித்துக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எந்தவிதத்திலும் நாங்கள் துன்பம் கொடுக்க மாட்டோம். ஆனால், 999 ஆண்டுகளுக்கு எங்களுக்குச் சட்டப்படி உரிமை உள்ள, முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று அச்சுதானந்தன் தலைமையிலான கேரள அரசும், அதற்குத் துணைபோகின்ற கேடான சக்திகளும் ஈடுபட்டு இருப்பதைத் தடுக்க வேண்டும்.

எங்களுக்குக் கிடைத்து இருக்கின்ற தகவல்களின்படி, புதிய அணையைக் கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளுகிறோம் என்ற பெயரில், ஏறத்தாழ 650 அடி நீளத்துக்கு, 60 அடி அகலத்துக்கு, அங்கே ஓங்கி வளர்ந்து இருந்த மரங்களை வெட்டி வீழ்த்தி இருக்கிறார்கள்.

மத்திய அரசைக் கேட்கிறேன். உங்கள் கட்டுப்பாட்டில்தானே வனத்துறை இயங்குகிறது? அங்கே, ஆய்வுக்கு அனுமதி கொடுத்ததே அக்கிரமம்தானே? எப்படி அனுமதி கொடுத்தீர்கள்? உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பைத் தந்ததற்குப்பிறகு, முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 142 அடியாகத் தமிழகம் உயர்த்திக் கொள்ளலாம் என்று சொன்னதற்குப்பிறகு, பேபி அணையை வலுப்படுத்துகின்ற பணிகளையும் செய்யலாம்; அதற்குப்பிறகு, அவர்களுக்குச் சட்டப்படி 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்ததோடு நிற்காமல், இதற்குக் கேரள அரசு எந்தவித முட்டுக்கட்டையும் போடக்கூடாது என்று எச்சரித்து இருக்கிறதே?

ஏனென்றால், கேரளத்துக்காரர்கள் இதுவரை மேற்கொண்ட அடாவடி நடவடிக்கைகளை அவர்கள் நன்கு உணர்ந்ததன்வாயிலாக, 79 ஆம் ஆண்டில் இருந்து ஏற்படுத்திய இடையூறுகளை எண்ணி, இனியும் முட்டுக்கட்டை போடுவார்கள் என்று உணர்ந்துதான், அதைத் தடுப்பதற்காகத்தான் உச்சநீதிமன்றம் இப்படிச் சொல்லி இருக்கிறது.

அப்படித் தீர்ப்புக் கொடுத்ததற்குப்பிறகு, கேரளச் சட்டமன்றத்தைக் கூட்டி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, அதற்கு நேர் எதிராக ஒரு சட்டத்தை நிறைவேற்றினார்கள். கேரளத்து நீர்த்தேக்கங்களின் பட்டியலில் அதுவரையிலும் இடம்பெறாத முல்லைப்பெரியாறை முதலாவதாகச் சேர்த்து, அதில் நீர்மட்டம் 136 அடிதான் என்று குறிப்பிட்டதோடு மட்டும் அல்ல, கேரளாவில் உள்ள நீர்வளங்களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் மட்டும் அல்ல, அந்த அணைகளைச் செயல் இழக்கச் செய்யவும் கேரளச் சட்டமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்றவகையிலே, ஒரு சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

'to decommission the reservoir ' இதற்கு என்ன அர்த்தம்?அணையை உடைப்பதற்கும் அவர்களுக்கு உரிமை இருக்கிறதாம். இதில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது, குறுக்கிட முடியாது என்கிறது அந்தச் சட்டம். இந்தியா விடுதலை பெற்றதற்குப் பிறகு, இந்திய அரசியல் சட்டத்துக்கே நாங்கள் வேட்டு வைக்கிறோம் என்கிற வகையிலே, எந்த ஒரு மாநில அரசாவது இப்படி ஒரு அயோக்கியத்தனமான சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறதா?

இது மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட அறைகூவல். டாக்டர் மன்மோகன் சிங் அவர்களே, எங்கள் தமிழ் மக்களை அழிப்பதற்கு எவ்வளவோ துரோகங்களைச் செய்தீர்கள். அதெல்லாம்கூட இருக்கட்டும். இப்போது மத்திய அரசின் கன்னத்தில் அறைவதுபோல ஒரு சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்களே, அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

356 ஆவது பிரிவை எந்த மாநிலத்திலும் பயன்படுத்துவதை எங்கள் கட்சி ஏற்கவில்லை. நாங்கள் மாநில அரசைக் கலைக்கச் சொல்லவில்லை. எங்களுக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது. ஆனால், அரசியல் சட்டத்துக்கு, இந்திய ஒருமைப்பாட்டுக்கே வேட்டு வைத்து விட்டார்களே?

அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காத நீங்கள், அச்சுதானந்தன் முதல் அமைச்சரானதற்குப்பிறகு, உங்களைச் சந்தித்து, முல்லைப்பெரியாறு அணை எந்த நேரத்திலும் உடையும்; எங்கள் மக்களைக் காக்க வேண்டும்; எனவே, அணையை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொய்களைச் சொன்னபோது, நீங்கள் விசாரித்தீர்களா? அவர்களது கோரிக்கையை ஆராய்ந்து பார்த்தீர்களா? திறமையும், மதிநுட்பமும் கொண்ட நீங்கள், கேரளம் இப்படி ஒரு கோரிக்கை விடுக்கிறதே, இதன் பின்னணி என்ன? உச்சநீதிமன்றத் தீர்ப்பை இவர்கள் மதிக்கவில்லையே? அவர்கள் நிறைவேற்றிய அக்கிரமமான சட்டத்தைப் படித்தீர்களா? எந்த அடிப்படையில், சட்ட அமைச்சகத்துக்கும், நீர்ப்பாசன அமைச்சகத்துக்கும் அவர்களது கோரிக்கையை ஆய்வு செய்ய அனுப்பினீர்கள்?

இதற்குப் பிறகுதான், அவர்கள் 'புதிய அணை' என்ற முழக்கத்தை முன்வைத்து இருக்கிறார்கள். 'புதிய ஒப்பந்தம்' என்பதை விட்டுவிட்டார்கள். இதைப்பற்றி, 2006 ஆம் ஆண்டில், இதே வீதிகளில் நடந்து சென்றபோதே நான் எச்சரித்தேன். அவர்கள், நமக்கு உரிமை உள்ள அணையை உடைப்பதற்காகத்தான், இந்தத் திட்டத்தை முன்வைக்கிறார்கள் என்று சொன்னேன்.

புதிய அணை கட்டியதற்குப்பிறகு, நீங்கள் கேட்கிற தண்ணீரைத் தருவோம் என்று கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் கூறியதாக, இங்கே லோயர் கேம்பிலே ஒருவர் பேசி இருக்கிறார். நான் கேட்கிறேன். பிரேமச்சந்திரன், தொடக்கத்தில் இருந்தே மிகத் தவறான தகவல்களைத்தான் சொல்லி வருகிறார். முதலில் அணையை உடைப்போம் என்று சொன்னார். அதற்குப்பிறகு ஒரு காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும் சொன்னார்.

நான் பல பொறியாளர்களிடம் பேசினேன். அவர்கள் துடிக்கிறார்கள். நமது காவல்துறை அதிகாரிகள்கூட, அந்த அணையின் பக்கம் போக முடியாது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேதனையோடு சொல்லுகிறார்கள். புதிய அணை கட்டினால், அந்த அணை நிற்காது. அங்கே வலுவான பாறைகள் இல்லை என்கிறார்கள். அப்படியே அணை கட்டினாலும், ஆட்சியே விரும்பினாலும், நமக்குத் தண்ணீர் கொடுக்க முடியாது. ஏனெனில், இப்போது இருக்கின்ற முல்லைப்பெரியாறை விடப் பள்ளமான பகுதியில் அணை கட்டத் திட்டமிடுகிறார்கள். அங்கேயிருந்து எப்படி நமக்குக் கொடுப்பார்கள்? இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

பென்னி குயிக், மிகத் திட்டமிட்டுத்தான், இந்த இடத்தில் அணையைக் கட்டி இருக்கிறார். முல்லைப்பெரியாறில் தண்ணீர் நிரம்பும்போது, 8000 ஏக்கரில் தண்ணீர் தேங்கி நிற்கும். அதில் இருந்து திறந்தவெளிக் கால்வாய் அமைத்தார் பென்னி குயிக். முல்லைப்பெரியாறு உற்பத்தி ஆவதே, தமிழகத்தின் சிவகிரி மலைகளில்தான். அதில் கட்டிய அணையில்தான் நமக்கு உரிமை. 7000 அடி நீள சுரங்கத்தின் வழியாகத் தண்ணீர் வருகிறது. என்ன அற்புதமாகக் கட்டி இருக்கிறார்?

1886 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதிதான் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. டிசம்பர் 29 ஆம் தேதி நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம். அன்றைக்கே, இந்தப் பகுதி சென்னை ராஜதானிக்கு உட்பட்ட பகுதிதான். திருவாங்கூர் மகாராஜாவிடம் தவறான தகவல்களைக் கொடுத்து நாம் ஏமாந்து போனோம். அதற்குப்பிறகு, 80 விழுக்காடு தமிழர்கள் வசிக்கின்ற தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை, 56 இல் பறிகொடுத்தோம். இதெல்லாம் நம்மிடம் இருந்திருந்தால், இன்றைக்கு இந்த ஆபத்து வந்து இருக்காது. 1887 டிசம்பர் இதே 29 ஆம் தேதி அன்றுதான் பென்னிகுயிக் அணைகட்டுவதற்கான தளவாடங்கள் வாங்க லண்டனுக்குப் போனார்.

தன்னுடைய சொத்துகளை, மனைவியின் கட்டில் முதல்கொண்டு விற்றுச் சேர்த்த பணத்தைக் கொண்டு வந்து அல்லவா இந்த அணையைக் கட்டி இருக்கிறார். பென்னி குயிக் அவர்களே, நீங்கள் உடலால் மறைந்தாலும், தமிழர்களின் உள்ளங்களில் வாழ்கிறீர்கள். உங்களை வணங்குகிறார்கள். இப்போது இந்த அணையைப் பாதுகாப்பதற்கு எங்களுக்குப் பலத்தைக் கொடுங்கள். இந்த அணையைக் கட்டுவதற்காக உயிர்நீத்த தியாகிகளே, எங்களுக்கு வலுவைக் கொடுங்கள்.

கேரளத்துச் சகோதரர்களே, 152 அடி உயர்த்தினாலும் எங்களுக்கு பத்தரை டி.எம்.சி. தண்ணீர்தான் கிடைக்கும்.அதில் 5, 6 டி.எம்.சியை அபகரிக்க நினைக்கிறீர்கள். இது உங்களுக்கு எதற்கு? உங்கள் மாநிலத்தில், 2000 டி.எம்.சி. தண்ணீர் அரபிக் கடலில் வீணாகக் கலக்கிறதே? எதற்காக இந்த முயற்சியில் ஈடுபடுகிறீர்கள்? இந்தத் தண்ணீரை வைத்துத்தான், இடுக்கியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமா? தொலைநோக்குப் பார்வையோடு சிந்தியுங்கள்.

உங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, ஆடு,மாடு, காய்கறிகள் எல்லாம் கொடுக்கிறோம். மின்சாரத்தையும் கொடுக்கிறோம். பேசிப் பெற்றுக் கொள்ளுங்கள். எங்கள் வயிற்றில் ஏன் அடிக்கிறீர்கள்? முல்லைப்பெரியாறை இழந்தால், எங்களுக்குக் குடிக்கத் தண்ணீரும் கிடைக்காதே? நிலத்தடி நீரும் நிற்காதே?

விவசாயிகள் மட்டும் அல்ல, வணிகர்கள், தொழிலாளர்கள் எல்லோருடைய வாழ்வும் பறிபோய் விடும். இலட்சக்கணக்கான ஏக்கர் பாசனத்தை இழந்து விடுவோம். தற்போது, தமிழகத்தின் அனைத்து நீர்ப்பிரச்சினைகளையும்விட, ஐந்து தலைநாகமாகச் சீறி நிற்பது, முல்லைப் பெரியாறு பிரச்சினைதான்.

அந்த ஆபத்தைத் தடுப்பதற்காகவே நாம் இங்கே கூடி இருக்கிறோம். இது ஒரு தொடக்கம் மட்டுமே. இடையூறு செய்வதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். எங்கள் தென்னாட்டு மக்களின் கோபத்தை எதிர்கொள்ளாதீர்கள்.

இருப்பதைத் தக்க வைத்துக் கொள்வதா? அல்லது எல்லாவற்றையும் இழப்பதா? என்ற கட்டத்துக்கு நாங்கள் வந்து இருக்கிறோம்.

பொறியாளர்கள் சொன்ன தகவல், 250 லிட்டர் தண்ணீர் வரையிலும் அணையில் கசிவு இருக்கலாம் என்பது உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட நியதி. ஆனால், முல்லைப்பெரியாறு அணையை வலுப்படுத்தியதற்குப் பிறகு, 50 லிட்டர் தண்ணீர்தான் கசிவு இருக்கிறது. எனவே, எந்த ஆபத்தும் கிடையாது. அடிமட்ட அகலம் மட்டுமே 200 அடிகள். அதற்கு மேலும் அணையை வலுப்படுத்தி இருக்கிறோம். எனவே, 152 அடிக்குத் தண்ணீரை உயர்த்த வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதால்தான், அவர்கள் இப்படித் தகராறு செய்கிறார்கள்.

கேரளத்தைச் சேர்ந்த சிலர், முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் 3000 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமித்து, விருந்தினர் விடுதிகள், வீடுகளைக் கட்டி விட்டார்கள். தண்ணீர் மட்டத்தை உயர்த்தினால், அவையெல்லாம் மூழ்கி விடும். அதுதான் அவர்களது அச்சமே தவிர, கேரள மக்களுக்காக அல்ல. அணையே உடைந்தாலும், உங்களுக்கு எந்த ஆபத்தும் கிடையாது. இந்த உண்மையைக் கேரள மக்களுக்கு நாம் உணர்த்த வேண்டும். அதற்காகத்தான் இந்த அறப்போராட்டம்.

பத்து நாள்களுக்கு முன்னர், முல்லைப்பெரியாறு அணையை உடைப்போம் என்று பேனர் கட்டிக்கொண்டு கொடி பிடித்து வந்தவர்கள், சம்மட்டியையும், கடப்பாரையையும் தூக்கிக் கொண்டு அணை வரையிலும் செல்வதற்கு, கேரள போலீஸ் எப்படி அனுமதித்தது? நீங்கள் என்ன கொடி பிடித்து வந்தீர்கள்? அணையை உடைக்க வேண்டும் என்று. நாங்கள் என்ன கொண்டு வந்தோம். 'நட்பையும், சகோதரத்துவத்தையும் பலப்படுத்துவோம் என்கிறோம்'. நாங்களா வம்புக்கு வருகிறோம்?

அணையை நீங்கள் உடைத்தால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். எல்லாச் சாலைகளும் மூடப்படும். மக்களுக்கு அதில் சிரமம்தான். இன்றைக்குக்கூட கொஞ்சம் சிரமம் ஏற்பட்டு இருக்கும். காலையில் வேலைக்குச் செல்பவர்கள் போகட்டும் என்றுகூட நான் சொன்னேன்.

இந்தப் போராட்டத்தால், நமக்குச் சில சிரமங்கள் ஏற்படத்தான் செய்யும். நாட்டு விடுதலைக்காக எத்தனை உயிர்கள் பலியாயிற்று? ஒரு புனிதமான இலட்சியத் துக்காகப் போராடுகிறபோது, சில சிரமங்கள் வரத்தான் செய்யும். இருப்பினும், மிகுந்த முன் எச்சரிக்கையோடு தான் நாம் செயல்படுகிறோம்.

எங்கள் தென்னாடு, பிரிட்டிஷ்காரனின் பீரங்கியை எதிர்த்து நின்ற நாடு. நெருப்போடு விளையாடாதீர்கள். கம்பம் மட்டும் அல்ல, பாரசாலை, பாலக்காடு உள்ளிட்ட தமிழ்நாட்டில் இருந்து கேரளம் செல்லுகின்ற 13 சாலைகளையும் மூடுவோம். கஷ்டம் வரத்தான் செய்யும். அதைத் தாங்கிக் கொள்வோம், வருங்காலத் தலைமுறையின் நலன்களை, உரிமைகளைக் காப்பதற்கு ஆயத்தமாவோம். அடுத்த கட்டப் போராட்டம், நமக்குத் துரோகம் செய்கின்ற மத்திய அரசை எதிர்த்துத்தான். இன்றைக்கு மக்களை ஆயத்தப்படுத்தி இருக்கிறோம். சுற்றுப்பட்டி கிராமங்களில் இருந்தெல்லாம் விவசாயிகளும், குடியானவர்களும், திரண்டு வந்து இருக்கிறார்கள். காசு கொடுத்து அழைத்துக் கொண்டு வரப்பட்ட கூட்டம் அல்ல. உங்கள் கால்களில் என் தலையை வைத்து நன்றி தெரிவிக்கிறேன்.

இது உங்கள் போராட்டம். தாய்மார்கள் எல்லாம் என்னிடம், நாங்களும் போராட்டத்துக்கு வருவோம் என்று சொன்னார்கள். தங்கள் பிள்ளைகளுக்குத் திலகமிட்டு வழி அனுப்பி வைத்து இருக்கிறார்கள். வைகோ நியாயத்துக்குப் போராடுகிறான். அவனுக்குத் துணையாக இருங்கள் என்று அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கில் திரண்டு இருக்கின்ற மக்கள் சக்தியை, மத்திய அரசும், கேரள அரசும் உணர வேண்டும். மத்திய காங்கிரசும், கேரள கம்யூனிஸ்டு அரசும் கூட்டுச் சதிகாரர்கள். அவர்களை எதிர்த்து இலட்சக்கணக்கானவர்களைத் திரட்டுவேன். இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

தமிழகம் முழுவதும் இருந்து இங்கே வந்து இருக்கின்ற மறுமலர்ச்சி தி.மு.கழகக் கண்மணிகளுக்கு, இந்த முல்லைப் பெரியாறு பாசனப்பகுதியில், ஒரு துண்டு நிலம் கூடக் கிடையாது. ஆயினும், அவர்கள் உங்களுக்காக இங்கே வந்து இருக்கிறார்கள். இதுவரை நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டார்கள். ஏன்? தமிழகத்தின் எந்த ஒரு மூலையில் தமிழனுக்குத் துன்பம் வந்தாலும், அதைத் தடுக்கின்ற கடமை, அண்ணாவின் தம்பிமார்களுக்கு உண்டு என்ற வகையில்தான் நாங்கள் இங்கே வந்து போராடுகிறோம்.

முல்லைப்பெரியாறு அணைக்கு அருகில் புதிய அணை கட்டப் போகிறோம் எனக்கூறி பாறைகளை உடைக்கும் போது நமது உயிர் ஆதாரமான முல்லைப் பெரியாறு உடையும். நம் தலையில் இடிவிழும். அதைத் தடுத்தே ஆக வேண்டும். அழிவு நேர்ந்தபின் அழுதுபுலம்பி முட்டி மோதிப் பயன் இல்லை - வரப்போகும் ஆபத்தை முன்னரே தடுப்பதுதான் அறிவுடைமை திருவள்ளுவர் அதற்காகத்தான் சொன்னார்.

"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தாறு போலக் கெடும்"

நமது முல்லைப் பெரியாறுக்கு வேட்டுவைக்க புதிய அணை எனும் கேரளத்தின் வஞ்சகத் திட்டத்திற்கு ஆய்வு செய்யஅனுமதி மத்திய அரசு கொடுத்ததைக் கண்டித்தும், புதிய அணை கட்டும் முயற்சியைத் தடுக்க வேண்டிய கடமையில் தவறுவதைக் கண்டித்தும், தமிழகத்துக்கு இழைக்கப்படும் துரோகத்தைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பை உணர்த்தும் வகையில், ஜனவரி 28 ஆம் நாள் தேனி மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், சிவகங்கை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டங்களில் அம்மாவட்டத் தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெறும்.

மதுரை புறநகர் மாவட்டம், மாநகர் மாவட்டத்தின் சார்பில் பிப்ரவரி 9 ஆம் தேதி மதுரை மாநகரில் மத்திய அரசு அலுவலகத்தின் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாக்க, அந்த அணைக்காக உயிர் நீத்த உத்தமர்கள் நமக்குச் சக்தியை அளிக்கட்டும். அணி அணியாக மறியல் அறப்போர்க் களத்துக்குச் செல்வோம்.

பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)