ஜோதிபாசு மறைவு வைகோ இரங்கல்
Issues: National, Politics
Region: Other States
Category: Headlines
ஜோதிபாசு மறைவு
வைகோ இரங்கல்
இந்திய அரசியல் அரங்கில் புகழ்பரப்பிய ஒளிவிளக்கு அணைந்துவிட்டது. நாடுபோற்றும் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்த ஜோதிபாசு மறைந்தார் என்ற செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவர் உடல்நலம்குன்றி சிகிச்சை பெற்ற நாட்களிலும் மரணத்தை எதிர்த்தே ஒரு போராட்டமாகத்தான் அவருடைய இறுதிநாட்கள் அமைந்தன.
இலண்டனில் பார்-அட்-லா படித்த ஜோதிபாசு அவர்கள் காரல் மார்க்ஸின் சித்தாந்தத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதர் ஆவார். நாடு திரும்பிய உடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடைய பொதுவாழ்வில் ஏழு வருடங்கள் சிறை வாசம் ஏற்றார். மேற்குவங்க மக்களின் இதய நாயகர் ஆனார். 23 ஆண்டுகள் தொடர்ந்து முதலமைச்சராக மேற்கு வங்கத்தில் பணியாற்றிய காலத்தில், தலைசிறந்த நிர்வாகி என்று புகழ் குவித்தார்.
இலட்சோப இலட்சம் நிலமற்ற ஏழைக்குடும்பங்களுக்கு நிலம்வழங்கி இரத்தம் சிந்தாத புரட்சியை நடத்தினார். பொதுவுடைமை இயக்கத்தின் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தபோதும் இந்திய நாட்டின் அனைத்து அரசியல் இயக்கங்களாலும் மதிக்கப்பெற்றார். எவரையும் வசீகரிக்கக்கூடிய காந்தசக்தியாக விளங்கினார்.
அனைத்துலக நாடுகளின் கம்யூனிஸ்ட் தலைவர்களின் மதிப்பைப் பெற்றார். இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் பதவி அவரைத் தேடிவந்தது, அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் அப்பதவியை ஏற்றிருந்தால் இந்திய நாட்டின் அரசியல் பயணத்தில் பெருத்த மாற்றங்கள் நேர்ந்து இருக்கும்.
மேற்குவங்கத்தில் அசைக்கமுடியாத செல்வாக்கில் இருந்தபோதே முதலமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்பாமல் தன்னுடைய இயக்கத்தில் இன்னொருவருக்கு அந்த வாய்ப்பைத் தந்தார். காலத்தால் அழியாத புகழைப் பெற்ற நேதாஜியை, கவியரசர் தாகூரை, விவேகானந்தரைத் தந்த மேற்கு வங்கம் பொதுவுடைமை இயக்கத் தலைவர் ஜோதிபாசுவையும் தந்த பெருமையை பெற்றது.
அன்னாரின் மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கு மட்டுமல்லாது இந்திய நாட்டுக்கே - இந்தியாவின் பொதுவாழ்வுக்கே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து துயரத்தால் வாடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தோழர்களுக்கும், ஜோதிபாசு அவர்களின் குடும்பத்தினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.