தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றான பட்டு நெசவுத் தொழில், பட்டுப் போகாமல் பாதுகாப்பீர்! வைகோ வேண்டுகோள்!

Issues: Economy, National, Rural

Region: Kancheepuram, Tamil Nadu

Category: Headlines, Press Releases

Date: 
Fri, 22/01/2010

தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றான பட்டு நெசவுத் தொழில், பட்டுப் போகாமல் பாதுகாப்பீர்!

வைகோ வேண்டுகோள்!

உலக அளவில் பட்டின் தாயகமாக சீனா கருதப்படுகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு, ஏறக்குறைய 3000 மூன்றாயிரம் ஆண்டுகளாக சீனர்கள் பட்டு ஆடைகளை நெய்து, உடுத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு இணையாக, தொல்பழங்காலத்திலேயே தமிழர்கள் பட்டுத்துணிகளை நெய்வதுடன், ரோமாபுரி உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கு பட்டு ஏற்றுமதியும் செய்து வந்தனர் என்பதற்குச் சான்று ஆவணங்கள் உள்ளன. இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள், பட்டு நெசவில் முன்னிலை பெற்று உள்ளன.


இந்தியாவின் பழமையான நாகரீகமான சிந்துவெளி அரப்பா, மொகஞ்சதரோ தொல்லியியல் ஆய்வுகளிலும், பட்டின் பயன்பாட்டை அறிய முடிகிறது. அந்நாள்களில் பட்டு கிடைத்தற்கு அரிய, பொருளாக மிகவும் விலை உயர்ந்த பொருளாக இருந்தது. எனவே, தெய்வ வழிபாட்டுக்கும், மன்னர்களின் குடும்பத்தினருமே பட்டை பயன்படுத்தி வந்தனர். இன்றைக்கும், வளமான வாழ்க்கைக்கு அடையாளமாக பட்டு ஆடைகள் திகழ்கின்றன. மங்கல நிகழ்ச்சிகளிலும், திருவிழாக்களிலும் பட்டு முதன்மை பெறுகிறது.


அண்மைக்காலமாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டை மேலை நாட்டின் விரும்பி வாங்குகின்றனர். அந்த அளவுக்கு இந்தியத் தொழில்நுட்பம் வளர்ந்து உள்ளது. இந்தியாவில் மட்டும்தான் மல்பரி, முகா, டாசர், ஏரி ஆகிய நான்கு வகையான பட்டுகள் தயாரிக்கப்படுகிறது. இதில் மல்பரி பட்டு 87ரூ விழுக்காடு தயாரிக்கப்படுகிறது.


ஆனால், இத்தகைய பெருமைக்கு உரிய பட்டு நெசவுத் தொழில் கச்சாப் பொருட்களின் விலை ஏற்றத்தாலும், மூலப் பொருட்களின் தட்டுப்பாட்டாலும், இணையதள வணிகச் சூதாட்டங்களாலும், கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி, மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கிறது. பங்குச்சந்தை வணிகர்கள், பட்டு மூலப்பொருள்களைப் பதுக்கி, கொள்ளை இலாபத்துக்கு விற்கிற நிலைமை ஏற்பட்டு உள்ளது.


மத்திய, மாநில அரசுகள் இயற்றுகின்ற எந்தச் சட்டமும் பட்டு நெசவாளர்களைப் பாதுகாப்பதாக இல்லை. எனவே, மானத்தைக் காக்க கலைநயத்துடன் ஆடைகள் நெய்கின்ற நெசவாளர்கள் இன்று வீதிக்கு வந்து நிர்வாணப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.


மத்திய காங்கிரஸ் தி.மு.க.கூட்டணி அரசு பொறுப்பு ஏற்றதற்குப்பின், கச்சாப் பட்டு என்னும்(கோரா) விலை கடுமையாக உயர்ந்து விட்டது. ஒரு கிலோ கோரா கச்சாப்பட்டு 1200 லிருந்து 2300 விலை உயர்ந்ததால், பட்டு நெசவுத் தொழில் முடங்கிவிட்டது. எனவே, மத்திய ஜவுளித்துறையின் (NHDC) தேசிய கைத்தறி வளர்ச்சி கழகத்தின் மூலம், கச்சா பட்டை இறக்குமதி செய்து, பட்டு நெசவாளர்களுக்குச் சலுகை விலையில் வழங்க வேண்டும்.


பட்டு நெசவாளர்கள் நலவாரியம் அமைத்து, இத்தொழிலில் தேர்ந்த அனுபவமும் தொலைநோக்குத் திட்டங்களும் கொண்டவர்களை உறுப்பினர்களாக நியமித்து, பட்டுத் தொழிலைப் பாதுகாத்து, இந்தியாவின் பாரம்பரியப் பட்டு நெசவுக்குக் காப்பு உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.


தங்கம், வெள்ளி விலை உயர்வால் போலி சரிகை பயன்படுத்தப்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, பட்டு, தங்கம், வெள்ளி சரிகையின் தரத்தை ISI மூலம் தீர்மானித்து, விலை ஏற்றத்தையும், போலிகளையும் கட்டுப்படுத்த வேண்டும். கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்து உள்ள 11 விதமான ரகங்களை, விசைத்தறியில் நெய்வதைத் தடை செய்ய வேண்டும்.


1000 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தமிழகத்துக்கு வருமானம் ஈட்டித் தருகின்ற, தமிழகத்தின் பெருமைகளின் ஒன்றான பட்டு நெசவுத் தொழில் பட்டுப் போகாமல் பாதுகாத்திட, மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். நெசவாளர்களுக்கும் அரசுக்கும் இடையே பாலமாக, சுதேசிய சிந்தனையுடன் ஜனநாயக இயக்கமாகப் பணியாற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பாடுகளை ஊக்குவித்து, இத்தொழிலைப் பாதுகாக்க வேண்டும்’ என வலியுறுத்துகிறேன்.

 

வைகோ

பொதுச்செயலாளர் 

மதிமுக
 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

செய்திகள் ஒளிபரப்பாகும் நேரம்:
காலை 8 மணி; பிற்பகல் 1.30 மணி; முன்னிரவு 8 மணி; இரவு 10 மணி

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)