நாடே விழாக்கோலம்... நாளெல்லாம் நல்ல விழா! டாக்டர் இரா. மாசிலாமணி - பொருளாளர்
Issues: Economy, Farmers, National, Rural
Region: Tamil Nadu
Category: Articles
நாடே விழாக்கோலம்... நாளெல்லாம் நல்ல விழா!
டாக்டர் இரா. மாசிலாமணி - பொருளாளர்
பழந்தமிழர் பெருமை பேசி இந்நாள் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்பாரும் உண்டு. சென்ற நாள் பண்பை இழந்து வருவதால் தானே உழைக்காமலே வாழவும், இலவசங்களில் மயங்கி சோம்பேறி சமுதாய அமைப்பு ஆளுவோரின் திட்டமிட்ட மோசடி களால் உருவாகி. நம் தமிழர் ஏமாந்தது மட்டுமல்ல, எழுந்திருக்கவே முடியாத மயக்கப் பள்ளத்தாக்கில் உருட்டப் பட்டுக் கிடக்கிறார்கள் இன்று.
மக்களை உழைக்க விடாமல் இலவச மாயப் பொடி தூவி அதிகார வர்க்கம் ஆட்சி, பதவி என்பதற்காக ஒரு நூறு ஊதியமென்று விளைநிலத்திற்கு வழங்க வேண்டிய உழைப்பை மடை மாற்றி ஏழைகளை ஏமாற்றி அன்றாட கூலிகளாக்கியதும், அவர் தம் பெயரால் ஊர் ஆள்வோர் ஊழலில் புரள்வதுமான விஞ்ஞான மோசடிகள் திட்டமிட்டே நடந்தேறுகிறது இன்று.
அந்நாளில் பழந்தமிழர் உழைத்தார், உயர்ந்தார் என்று சொன்னால் ஏளனமாக நம்மைப் பார்க்கத் தானே இந்நாளில் செய்கின்றனர்.
மக்களை ஏய்த்திடும் கூட்டத்தை மாய்த்திட விழிப்புற்றார் எம் தமிழர். உழைப்பே உயர்விற்கு வழி. இரப்பது என்பது பிச்சை, இந்த இயலாமை குணத்தை உருவாக்கிய கயமை குணத்தாரை தாயகத்தார் உணரும் நாள் எந்நாளோ, அந்நாளே இனி தமிழர் திருநாள் என்றால், அது சரி என்று கூறுவோரின் எண்ணிக்கை உயர்ந்திடும் நாளே உழைப்போருக்கு உண்மையான பொங்கல் திருநாள்.
உழுது, உரமிட்டு, களை பறித்து, நீர் பாய்ச்சி வளரும் பயிரை விலங்குகள் வந்து மேயாமல் இருந்து காத்து, விளைச்சலை அறுவடை செய்திடும் உழவர் பெரு மக்களோ இப்போது அழுது வடியும் கண்ணீரோடு, கவலை தரும் முகத்தோடு, என்று வரும் எங்களுக்கு வாழ்வு என்று ஏங்கிடும் அளவிற்கு உழவர் வாழ்வில் தான் எத்தனை தடைகள்? எவ்வளவு இடையூறுகள்?
அவை யாவும் நீக்க வேண்டிய அரசாள்வோரே உழவர்களின் நிலத்தை அபகரிக்கும் மாயாஜால திட்டங்களைப் போடுவதும், எதிர்கால மக்கள் சோற்றுக்கே திண்டாடக் கூடிய அளவிற்கு உழவர் வாழ்வு மட்டுமல்ல, உயிருள்ள ஜீவன் எல்லாம் பலியாகும் பயங்கரங்கள் சூழ்ந்து வரும் அபாயத்தை ஆட்சியாளர்களே அவிழ்த்து விடும் சூழ்ச்சி திட்டங்கள் மறையும் நாள் எந்நாளோ, அந்நாளே உழவர்க்கு எல்லாம் திருநாள் ஆகும்.
அபினுக்கு அடிமையாக்கி மக்கள் உழைப்பைச் சுரண்டி அவர்கள் உரிமையைப் பறித்து அந்நாள் ஆட்சி செய்த சீன நாட்டின் கொடுங்கோல் ஆட்சியினர் போல பொழுது போக்கு அபினுக்குள் நம் தமிழர் வாழ்வை நாசமாக்கி நாடாள்வோரால் தான் நலிந்து போனது நம் தமிழர் வீரமும், மானமும். இதோ, பேரறிஞர் அண்ணா அன்று சொன்னார்.
“அலைகடல் அளக்கும் ஆற்றல், ஆணவம் முறிக்கும் அடுப்போர் திறன், வாணிபம் நடாத்தும் நேர்த்தி, செய்பொருள் ஆற்றும் செம்மை, யாவும் உண்டு இங்கே, முத்து அளிக்கும் கடல், அகில் போல் பல தருக்கள் அளிக்கும் நம் காடு, வாழ்வுக்கு வகையளிக்கும் நம் கழனி, வல்லமைய ளிக்கும் மரபின் இயல்பு, வாய்மையும் தூய்மையும் அளித்துச் சென்றார் நம் ஆன்றோர்.
அத்தனையும் உடனிருக்க இத்தனையும் இங்கிருக்க, இல்லாமை இருக்கலாமா? நாடு வளம் தந்திடினும், நாம் வாழ வழி காணோம். கடல் கடந்து வந்துள்ளோம், அடிமைகளாய் வதைவதற்கே என்று கூறி கசிந்து நிற்கின்றனர் நம் உடன்பிறந்தார் வேற்றுச் சீமைகளில், இவைகளை எண்ணாமல் எம்முடன் இணைந்து இருங்கள், இறுக்கி பிணைந்து விட்டோம், எங்கு இனி சென்றிடுவீர் என்று கேட்டு மிரட்டுகிறது பேரரசு. இது இன்றுள்ள நிலைமை. இந்த நிலைமை மாற்றினால் தான் தம்பி வீடு எல்லாம் விழாக்கோலம், நாடே விழாக்கோலம், நாள் எல்லாம் நல்ல விழா.
14.01.1959இல் பேரறிஞர் அண்ணா பொங்கல் திருநாள் வாழ்த்தில், தன் உள்ளம் பொங்கி வந்த வேதனைகளை இப்படி தம்பிக்கு மடலாய்த் தீட்டித் தந்தார் அன்று.
தாயகமே அடிமை நிலை போகும் அரியாசனம் காண்போம் என்று நாட்டிற்கு எடுத்துரைக்கத் துடிக்கின்றேன். எனினும், இன்று அன்று. இன்று மனை, மகிழ்ச்சி, விழாக் கோலம். இசையுடன் வாழ்ந்த இனத்தில் வந்து உதித்தோம். இனி ஒரு முயற்சி செய்வோம், இழந்ததைப் பெறுவோம், இசைபட வாழ்வோம் வாராய் என்று அழைத்தார் அண்ணா, அன்று எழுதிய அதே பொங்கல் திருநாள் மடலில்.
ஆம். இன்று அழைக்கின்றார் நம் உள்ளம் கவர்ந்த மக்கள் தலைவர். மாப்பகையை வீழ்த்துகின்ற மங்காதக் கொள்கையும் மாசில்லா மனமும், உழைக்கும் வர்க்கத்தின் உள்ளக்கிடக்கையை அறிந்து அவர் தம் உரிமைக்காக அன்றாடம் உழைக்கும் அண்ணன் வைகோ. இனமெல்லாம் கொண்டாடும் இன்ப நாளது. இனிய நாளது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் என பேரறிஞர் அண்ணா 1959இல் முன்மொழிந்ததை 2010இல் வழி மொழிந்து வைகோ வழி நடப்போம்.
பொங்குக தமிழர் நலம். வளர்க தமிழர் வளம்.