தமிழ் இனத்தை மீட்க, அண்ணாவின் தம்பிகளாய்க் கடமையாற்றுவோம்! வைகோ கடிதம்
Issues: Economy, Farmers, National, Rural
Region: Tamil Nadu
Category: Letters, Headlines
தமிழ் இனத்தை மீட்க,
அண்ணாவின் தம்பிகளாய்க்
கடமையாற்றுவோம்!
வைகோ கடிதம்
இமைப்பொழுதும் நீங்காது
என் இதயத்துடிப்போடும்
இரத்தச் சுழற்சியோடும் கலந்துவிட்ட
கண்ணின்மணிகளே!
இந்த ஆண்டு தைப்பொங்கல் திருநாள், நிலவு முழுமையாக வானக்கதவுக்குள் மறைந்து கொள்ளும் நாள். அதேநாளில்தான், இருளின் பிடியில் இருந்து விடுபட்டு, மெல்லிய கீற்றாக, பிறை தொடங்குகிறது.
வெளிச்சத்துக்குக் கட்டியம் கூறும் விடியல்போல, இப்பொங்கல் நாள், தனிச்சிறப்பான நாள்.
தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்
இல்ல முகப்பெல்லாம் வாழையும், பாக்கும்
இளங்குருத்து ஓலையும், தெங்கின் குலைகளும்
சொல்லும் மாவிலைத் தொங்கலும் கூடியே
சோலை ஆக்கின தமிழர் தெருக்களை
நாழி அரிசிக்கு, நா நாழி பாலாக
நல்ல விழுக்காட்டுப் புத்துருக்கு நெய் பெற
தாளா நெருப்பின் அடுப்பு தலைசுமக்க
தங்கப் புதுப்பானை செங்கரும்பின் சாற்றோடும்
ஏழு நரம்பு சரிபார்க்கும் வல்லவனின்
யாழ் தெறிப்புப் போலும்
பொங்கி எழுந்து ஒலிக்க
வாழியோய் வாழி என மங்கைமார் வாழ்த்த
மங்காத் தமிழர் பொங்கலோ பொங்கல் என்றார்.
உலகத்தின் ஒவ்வொரு நாட்டிலும் வாழும் மக்கள், தங்கள் இனம், இனத்தவர் நெடுங்காலமாகக் கொண்டாடி வருகின்ற பண்டிகைகளை மகிழ்ந்து போற்றி, ஆண்டு தோறும் கொண்டாடுகின்றனர். இவற்றில் அவர்கள் வழிபடும் சமயம் சார்ந்த விழாக்கள் உண்டு. தமிழர்கள் கொண்டாடும் தைப்பொங்கல், தனிச்சிறப்பு கொண்டது. இயற்கைக்கு நன்றியும், உழைப்புக்கு உயர்வும், உலகோரை வாழ்விக்கும் உழுதொழில் வேளாண்மைக்கு மகுடம் சூட்டும் விழா ஆகும்.
ஆற்றங்கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழமென்ற - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறொர் பணிக்கு
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை
என்றெல்லாம் உச்சிமேல் வைத்து மெச்சப்பட்ட உழவர் வாழ்வு, இன்று, நலிவுமிக்கதாக, அல்லல்கள் நிறைந்ததாக மாறிவிட்டது. இதனை உணர்ந்தே நாம் கடமை ஆற்றுகிறோம். கொங்குச்சீமை பொள்ளாச்சியில், விவசாயிகள் வாழ்வு உரிமை மாநாடு நடத்தினோம். தென்தமிழ்நாட்டுக்கு நேர இருக்கும் பேராபத்தைத் தடுக்கவே, முல்லைப் பெரியாறு உரிமை காக்கப் போராடி வருகிறோம். கரும்பும், சர்க்கரைப் பொங்கலும், தமிழர் திருநாளில் நாவுக்குச் சுவைதரும் எனினும், நம் இதயத்தில், இனிப்பு இல்லை. உப்புக் கரிக்கிறது. நெஞ்சில் வடிந்த கண்ணீரால்!
கடந்த ஆண்டில்தானே, நம் தமிழ் இனம் இலங்கைத் தீவில் கொலைக்களத்தில் வதைபட்டது. சிங்களக் கொடியோர் நடத்திய கோரக்கொலைக்கு, நம் தொப்புள்கொடி உறவுகள் பலியான பெருந்துயர் நேர்ந்தது. அடிமைத்தளை இடப்பட்டவராய், தங்கள் தாயக மண்ணில், முள் வேலி முகாம்களில் மட்டும் இன்றி, தங்கள் உரிமை மண்ணிலும், துன்பத்தில் துடிக்கின்றார். அவர்கள் வேதனை நீங்கி, உரிமை வாழ்வு பூத்து, சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்ந்தால்தான், பொங்கல் திருநாள், தமிழ் இனத்துக்கு மகிழ்ச்சிப் பொங்கலாக முடியும். அந்த நிலை ஏற்பட, உறுதி கொள்வோம்.
தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் வீரஞ்செறிந்த போரும், மகத்தான தியாகமும் ஒருக்காலும் வீண்போகாது. விடுதலை யுத்தத்தை புதிய வடிவத்தில், மாவீரர் திலகம் பிரபாகரன், முன்னெடுத்துச் செல்வார்.
அந்த இலக்கினை அடைய - தமிழ் ஈழம் மலர, ஈழ விடுதலைப்போரில், மாவீரர்கள் சிந்திய குருதியின் மீது ஆணை. அவர்தம் கல்லறை மீது ஆணை, தியாக சிகரமாம் முத்துக்குமார் உள்ளிட்ட, செந்தணல் தழுவிய உத்தமர்களின் தியாகத்தின் மீது ஆணை ஏற்போம். இறையாண்மை உள்ள, சுதந்திர தமிழ் ஈழ தேசம்தான் ஒரே தீர்வு என்ற தந்தை செல்வாவின், 1976 மே 14 வட்டுக்கோட்டைப் பிரகடனமே, நாம் சென்று அடைய வேண்டிய ஒரே இலக்கு ஆகும்.
தமிழர்களின் நெடியவரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப்போன்ற அழிவும், இழிவும், எந்நாளும் விளைந்தது இல்லை. எனவேதான், வெறுமனே வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதைவிட தமிழர் நாகரிகத்தின் அடையாளத் திருநாளில், உண்மைநிலை உணர்ந்து, அழிவில் இருந்து மீளவும், ஏற்பட்ட இழிவைப் போக்கவும், மான உணர்வுடன் நெஞ்சினில் வஞ்சினம் மேற்கொள்ளுவது, நம் தலையாய கடமை என்பதால்தான், வழக்கமாக இவ்விழா நாளில், மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்ளும் போக்கில் இருந்து வேறுபட்டு, இதை எழுதி உள்ளேன்.
தமிழர்கள், பொங்கல் திருநாளை, பண்டை நாளில் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பதற்கு மறைமலை அடிகளார், புறநானூற்றில் இருந்து சான்று தருகிறார். சேர மன்னனின் படைத் தலைவரான, குதிரை மலையை ஆண்ட பிட்டங்கொற்றன் பற்றி, கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடிய பாடலைக் குறிப்பிடுகிறார்.
புறநானூறு, 168 ஆவது பாடல் :
அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்
கறிவளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங் கிழங்கு மிளிரக்கிண்டிக் கிளையொடு
கடுங்கண் கேழல் உழுத பூமி
நன்னாள் வருபதம் நோக்கிக் குறவர்
உழாஅது வித்திய பரூஉக்கரல் சிறுதினை
முந்து வினையாளர் நாள் புதிது உண்மார்
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்
மான்றடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழ் இரும்புடை கழாஅது ஏற்றிச்
சாந்த விறகின் உவித்த புன்கம்
ததளங் கவினிய குளவி முன்றில்
செழுங்கோள்வாழை அகல்இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ....
சேரமான் கோதைக்கு, படைத்துணைவனான பிட்டங்கொற்றன், பேராண்மையும், கைவண்மையும் ஒருங்கே உடையவன். அவனைப் பாட வந்த புலவர், இயற்கை வளத்தையும், விருந்தின் சிறப்பையும் எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார் பாருங்கள்!
அருவிகள் ஒலிக்கின்றன. அங்கே, மூங்கில் மரங்கள் வளர்ந்த அகன்ற மலைச்சாரலில், மிளகுக் கொடி வளர்ந்து உள்ளது. அங்கு, மலர்ந்த காந்தளின் கொழுவிய கிழங்கை, அஞ்சாமை உடைய கேழல் (பன்றி) தன் கூட்டத்தோடு உழுவதுபோலக் கிளறுகிறது. அப்படிக் கிளறித் தோண்டப்பட்ட நிலத்தில், அன்று நல்ல நாள் ஏற்பட்டதால், அங்குக் கூடிய மக்கள், உழாமலேயே விதைத்த, பருத்த தோகையை உடைய தினைக்கதிரின் தினையை, புதிதாக உண்ணவேண்டி, காட்டுப் பசுவின் நுரையோடு கூடிய சுவையான இனிய பாலை, மானின் தசைவேக வைத்த புலால்நாறும் பானையில் உலைநீராக வார்ப்பர். சந்தன விறகால் எரித்து, சோறு சமைப்பர். அந்தச் சோற்றை, மல்லிகை மணம் கமழும் வீட்டு முற்றத்தில், வாழையின் அகன்ற இலையில் பரிமாறி, பலரோடு உண்டு மகிழ்வர். அச்செழிப்பை உடைய குதிரை மலையின் தலைவனே,இந்தப் பாடலில், பொங்கல் பெருநாளைக் கூறுவதற்காக, புது நாள் என்றும், புது வரவு, புத்தரிசி, புதுப்பால் எனச்சொல்லி, வாழை இலையில் கூடி இருந்து உண்ணும் நிலை, பொங்கலுக்கே உரிய தனிச்சிறப்பு என்று, தமிழ் அறிஞர் பலரும் உரைக்கின்றனர்.
இதுகுறித்து ஒரு சுவையான செய்தி.
1937 டிசம்பர் 26ஆம் நாள். மலைக்கோட்டை நகரமாம் திருச்சியில், தந்தை பெரியார் அவர்கள், ‘அனைத்துத் தமிழர் மாநாடு’ நடத்தினார். அந்த மாநாட்டுக்கு, பசுமலை சோமசுந்தர பாரதியார் தலைமை வகித்தார். தமிழ் அறிஞர், கா.சுப்பிரமணிய பிள்ளை, ‘முத்தமிழ்க் காவலர்’ கி.ஆ.பெ.விசுவநாதம், ‘தமிழ்த்தென்றல்’ திரு வி.க. தமிழ் அறிஞர் மறைமலை அடிகள், மதுரை தமிழவேள் பி.டி.இராசன் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் பலரும், அம்மாநாட்டில் பங்கு ஏற்றனர்.
இந்த மாநாட்டில், கட்சி, சாதி, மதபேதங்கள் இன்றி, ஆன்மிகச் சிந்தனைகொண்ட வைதீகர்களும் கலந்துகொண்டனர். தைப்பொங்கல் என்பது, சமயவிழாவா? சமயம் அற்ற விழாவா? என்ற, கடுமையான விவாதம் அந்த மாநாட்டில் நடந்தது. இறுதியில், மறைமலை அடிகள் பேசும்போது, ‘பொங்கல் என்பது, சமயச் சார்பு இல்லாத விழா. எந்தச் சமயத்துக்காரன், எந்தச் சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்து உள்ளான்? எந்த இலக்கணம் இதற்கு இருக்கிறது? இதில், எந்தப் புராணம், எந்த இதிகாசம் இருக்கிறது? எனவே, எந்தப் புராணமும் இல்லாதபோது, தமிழில், பிட்டங்கொற்றனின் வரலாற்றில், கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கிறது. இதை, யார் மறுக்க முடியும்? நண்பர் ஈ.வெ.ரா., இதை ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளா விட்டாலும் சரி’ என்றார்.
உடனே, தந்தை பெரியார் எழுந்து, ‘நான் இதை ஏற்றுக் கொள்கிறேன்’ என்று தெளிவாக மறுமொழி உரைத்தார்.
பொங்கல் என்பது, மதச்சார்பு அற்ற, முதன்மையான, பொன்னான விழா என்பதை, நான் ஏற்றுக் கொள்கிறேன் என்பதை, தந்தை பெரியார் மாநாட்டில் சொன்னபோது, அனைவரும் கையொலி எழுப்பினர். திரு வி.க. அவர்கள் உடனே எழுந்து, ‘அருமை நண்பர் ஈ.வெ.ரா. அவர்கள், ‘பொங்கல் என்பது சமயச் சார்பு அற்ற, ஒரு தனிப்பெரும் தமிழர் விழா’ என்று ஏற்றுக் கொண்டமைக்கு, தமிழ் உலகமே பாராட்டக் காத்து இருக்கிறது’ என்று குறிப்பிட்டார்.
இந்தியை எதிர்ப்பதற்காகக் கூட்டப்பட்ட இந்த மாநாட்டில்தான், பொங்கல் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தை, தமிழவேள் பி.டி.இராசன் முன்மொழிய, திரு வி.க. வழிமொழிந்தார். இதன்பிறகுதான், தமிழகத்தில் அனைவரும் பொங்கல் விழாவை ஏற்கத் தொடங்கினர்.
1967 ஆம் ஆண்டு, விருகம்பாக்கத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு நிறைவு பெற்று ஏழு நாள் கழித்து, ஜனவரி 8 ஆம் தேதி ‘காஞ்சி’ பொங்கல் மலரில், பேரறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதியது, இன்றைய காலகட்டத்திலும், நாம் செல்லவேண்டிய பாதைக்கு வழிகாட்டும் ஒளிச்சுடராய்த் திகழ்வதால், அதனை இங்கே தருகிறேன்.
“எல்லா வளங்களும் தருகிறேன். என் மக்களிடம் பரிவு மிகக்கொண்டு இருப்பதனால். இருந்தும் என் மக்களிடம் ஏழ்மை கப்பிக் கொண்டிருக்கக் காண்கிறேன், ஏக்கம் கொள்கின்றேன்.
எல்லாச் சீரும் தந்து உள்ளேன். எனினும் என் மக்கள், இங்கும் வெளியிலும், கூலிகளாகி உழலக் காண்கின்றோம். தங்கத் தொட்டிலில் தவழ்ந்த குழந்தை, பெரியவனான பிறகு, கரத்தில் தகரக்குவளையுடன் காணப்படின், இரத்தமல்லவா வடியும் கண்களில் இருந்து.
எங்கும் காணப்படாத அளவு இலக்கியச் செல்வத்தைத் தந்து உள்ளேன். எனினும் என் மக்களிலே பெரும்பாலோர் எழுத்தறிவும் அற்றவராயுள்ளார்.
கற்றோரிலும் மிகப் பலர், பகுத்தறிவு அற்றுக் கிடக்கின்றார். என் செய்வேன்? என்று எண்ணி எண்ணித் தமிழ் அன்னை குமுறுகின்றாள் என்று கூறிடின், கற்பனை என்றும், கதைநடை என்றும் கூறிட முற்படுவர்.
ஆனால், தமிழகத்துக் குடில்களில் உலவிடும் ஒவ்வொரு தாயும், இந்நிலையில் இருந்திடக் காண்கின்றோம். அந்தத் தாயே, தமிழன்னை; தத்தளிக்கும் தமிழன்னை.
எனினும், அந்தத் தாயும் ஒருநாள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, மனையில் இருந்தும், மனத்தில் இருந்தும் இருளை விரட்டிவிட்டு, புத்தொளிகூட்டி, புதுக்கோலம் புனைந்து, பொங்கற் புதுநாள் கொண்டாடுவதனை ஒரு ‘மரபு’ ஆக்கிக் கொண்டு இருக்கக் காண்கிறோம்.
கவலைகள் மடிந்திடவில்லை. மறைந்துள்ள ஒருநாள், அறைத்து வைக்கப்பட்டு உள்ளன, விழா நாள் என்பதால்.
விழாக்கள், ஒரு நாட்டு மக்களின் வளர்ச்சியும் வளமும், உளப்பாங்கும் எந்நிலையில் உளது என்பதை எடுத்துக்காட்டுவன.
வீடும், நாடும் விழாக்கோலம் பூண்டு, மக்கள் ஒன்றுகூடி, மனம் மகிழ்ந்து, கலைநடமிட, களிப்பு ஒளிவிட உலவிடும் நாள், விழா நாள், திருநாள்!
நிம்மதியான வாழ்வும், நிலையான அரசும் பெற்று இருந்தாலொழிய, ஒரு நாடு, விழா நடத்திடும் இயல்பினைப் பெற்றிட முடியாது.
பிற நாடுகள் அந்நிலை பெறாமுன்பே, தமிழகம் சீரான நிலை பெற்றிருந்ததனாலேயே, பொங்கற் புதுநாள், தமிழர் திருநாள், அறுவடைப் பெருநாள், பொன்னாள் நன்னாள் என்று பல்வேறு சிறப்புப் பெயர்களைப் பெற்றுள்ள தனித்திருநாளைக் கொண்டாடி வந்துளது.
அந்நாள், உமது இல்லத்தில் இன்பம் வழங்குவதாக அமையட்டும் என்று வாழ்த்துகின்றேன். கவலையும், கலக்கமும் கண்ணீரும், பெருமூச்சும், அந்த ஒரு நாளாகிலும் இல்லங்களில் இருந்திடாத நிலை வேண்டும்; களிப்பும் கனிவும், பரிவும் பாசமும், மலரும் மணமும், பசுமையும் பாங்கும், பாட்டும் கூத்தும், எழிலும் மழலையும், அந்த ஒருநாளாகிலும் இல்லந்தோறும், அரசோச்சட்டும். இன்பம் என்றால் இப்படித்தான் இருக்கும். அன்புவழி என்றால், இதுபோலத்தான் இருக்கும்; வளம் என்றால் இதுதான். வண்ணம் என்றால் இதுதான் என்று உணரச் செய்திடவாகிலும், ஆண்டுக்கு ஒருநாள் இந்த அருமைத் திருநாளைப் பெறுகின்றோம்.
இவ்வாண்டு, பொங்கற் புதுநாள் கொண்டாடுங்காலை, ஏக்கம் துரத்திவிட்டு, ஏற்புடை ஓர் உறுதி கொண்டிட வேண்டுகிறேன்.
அகமும், புறமும் கொண்டோர் நாம்; இன்று அறியாமையின் பிடியில் சிக்கி உள்ளோம்.
கரும்பு விளையும் நாடு இது; மக்கள் கசப்பு உண்டு உழல்வது காண்கின்றோம்.
செந்நெல் விளைந்திடும் வளமிகு பூமி இது; இன்று கட்டாயப் பட்டினி, அரச கட்டளையாகிடக் காண்கிறோம்.
எல்லோரும் ஓர் நிறை என்ற கவிதை பெற்றோம்; இன்றோ, இல்லாதார் தொகை வளர்ந்திடக் காண்கின்றோம்.
இன்று, விழா மட்டும் அல்ல; வீரம் விளைவிக்க உறுதி கொண்டிடும் நாள்.
ஒருமுறை - மற்றோர் முறை - விழாக்கோலம் கொண்டுள்ள மனையினைக் கண்டு களித்திடு;
இல்லத்துள்ளாரின் இன்முகம் கண்டு மகிழ்ந்திடு!
புதியதோர் ‘தெம்பு’ பெறுகின்றாய் அன்றோ! அந்தத் தெம்பு தரும் நடையுடன் புறப்படு. தமிழ் அன்னை அழைக்கின்றாள், எல்லா வளமும் நான் தந்தேன்; தக்கமுறையில் பயன்படுத்தி, என் மக்களை வாழவைக்கும் நிலை அமைத்திட வா மகனே! என்று.
ஆமாம், தம்பி! அன்னை அழைக்கின்றாள், புறப்படு என்று நானும் அழைக்கின்றேன்.”
அறிஞர் அண்ணா அவர்கள், அன்று சுட்டிக்காட்டிய தமிழகத்தின் நிலையைவிட, அந்த அண்ணன் இல்லாத இன்றைய தமிழகம் பாழ்பட்டுக்கிடக்கிறது. எந்த ஜனநாயகத்துக்கு அண்ணா ஒளி ஏற்றினாரோ, அந்த ஜனநாயகம் இன்று இருள் மண்டி உள்ளது. பணபலத்தின் முதுகு எலும்பை முறித்தார் அண்ணா அன்று.
ஆனால், அந்தோ இன்று, ஜனநாயகத்தின் குரல்வளையை முறிக்கும் தூக்குக்கயிறாக, ஊழல் பணநாயகம் மிரட்டுகிறது.
தான், தனது குடும்பம் என்ற சுயநல நச்சு எண்ணம், அறவே அகற்றப்பட வேண்டும் என அண்ணா இயக்கம் நடத்தினார். ஆற்றலாளர் அனைவரையும் ஊக்குவித்தார். அரவணைத்தார். அண்ணன் - தம்பி எனும் வாஞ்சையை, அனைவர் நெஞ்சிலும் ஊட்டினார்.
ஆனால், இன்றோ, அந்த அண்ணன் உருவாக்கிய இயக்கம், ஒரேயொரு குடும்பத்தின் ஆக்டோபஸ் கரங்களின் ஆதிக்கப் பிடியில், அவர்களின் கரங்களில் சிக்கி உள்ள அதிகாரம், நாட்டு மக்களின் நலிவுபோக்க அல்ல. நாட்டின் முதன்மைக் குபேரர்கள் ஆக, அவர்களை ஆக்கிக் கொள்ளவே.
இடித்து உரைக்க வேண்டிய கடமையை, ஏடுகள் பலவும் செய்ய முன்வரவில்லை. ஆட்சியாளர்களின் அதிகார பலத்துக்கும், அள்ளிக் கொட்டப்படும் விளம்பரப் பணத்துக்கும் ஆட்பட்டு, ஜனநாயகத்தின் மனச்சாட்சியாகத் திகழ வேண்டிய கடமைக்குப் பதிலாக, மனச்சாட்சியை கோமாவில் தள்ளிவிட்டன.
மதுவினால் அரசுக்கு வருமானம் தேவை இல்லை; மதுவிலக்கால் இச்சமுதாயம் சீரழிந்து போகும் என அண்ணா உறுதிகாட்டினார். இன்று சமுதாயம், குறிப்பாக இளந்தலைமுறை, ஒழுக்கச் சீர்கேட்டுக்கும், கலாச்சாரச் சீரழிவுக்கும் உள்ளாகக் காரணமான மது எனும் நாசகாரப் பேய், வெறியாட்டம் போட, இன்றைய முதல்வரே ஏற்பாடு செய்தது, தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட பொல்லாத கேடு அல்லவா?
தமிழர்கள் போற்றிவந்த பண்பாடும், நெறிகளும், சின்னாபின்னமாகிவரும் நிலையை எண்ணுகையில், நெஞ்சு பொறுக்குதில்லையே. அனைத்து முனைகளிலும் அச்சுறுத்தும் அவலமும், இன்னமும் சூழ்ந்து உள்ளபோதிலும், இந்த இருளில் இருந்து தமிழகத்தை, தமிழ் இனத்தை மீட்கவும், தரணியில் தமிழருக்கோர் தேசம், தமிழ் ஈழ தேசம் அமைக்கவும், அண்ணாவின் தம்பிகளாய் நாம் கடமை ஆற்றுவோம். அந்த உறுதியை, பொங்கல் நன்னாளில், நம் மனதில் ஏற்றுவோம்.
எழுச்சிச் சங்கொலிக்கும்
உங்கள் பணிகள் வளரட்டும்!

