கல்பாக்கம் அணு உலை: மக்கள் இயக்கம் நடத்தும் அறப்போரில், ம.தி.மு.க. பங்கு ஏற்கும்! வைகோ அறிக்கை!

Issues: Energy, Environment, Healthcare, Human Rights, Law & Order, Politics

Region: Tamil Nadu

Category: Articles, Headlines, Announcements

Date: 
Sun, 29/01/2012

 

 

 

 

29 ஜனவரி 2012

கல்பாக்கம் அணு உலை:
மக்கள் இயக்கம் நடத்தும் அறப்போரில், ம.தி.மு.க. பங்கு ஏற்கும்!
வைகோ அறிக்கை!

எதிர்கால உலக அழிவுக்குக் காரணமாக இருக்கப்போகின்ற, அணுக்கதிர்வீச்சின் பாதிப்பைக் கண்டு மனிதகுலம் அஞ்சி நடுங்கிக்கொண்டு இருக்கும் வேளையில், நம் கண் முன்னால் 11.3.2011 அன்று ஜப்பான் `புகுஷிமாவின் அணுஉலை விபத்தின் கோர தாண்டவத்தைப் பார்த்து, பொருhளதாரத்தில் முன்னேறி உள்ள நவீன விஞ்ஞான உலகம், மாற்று வழிக்கான பாதுகாப்பைத் தேர்வு செய்து கொண்டு இருக்கின்ற வேளையில், இந்திய அரசு, பன்னாட்டு அணுக்கதிர் மரண வியாபாரத்திற்கான பரிசோதனைக் கூடமாகத் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் மாற்றி வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஏனெனில், அணு உலைகளைப் பாதுகாப்புடன் இயக்கவும், உத்தேசிக்கப்பட்டுள்ள அதிவேக ஈணுலைத் திட்டத்தையும், பிற அணுஉலைகளில் இருந்து அணுக்கதிர் கழிவுகளைக் கொண்டு வந்து கல்பாக்கத்தில் பாhதுகாக்கும் திட்டத்தையும் கைவிடக் கோரி, ஜனநாயக அமைப்புகள் விடுத்த வேண்டுகோளை அலட்சியப்படுத்திவிட்டு, விரைவில் அதிவேக ஈணுலை மின் உற்பத்தி துவங்க இருப்பதாக பத்திரிக்கைகளுக்கு செய்தி தந்து உள்ளனர்.

மக்களின் பொறுமையையும் போராட்ட வடிவத்தையும் பரிசோதனை செய்வதாகவே இந்த அறிவிப்பு அமைந்து உள்ளது.

அணுக்கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை செய்து, அணுக்கதிர்வீச்சின் ஆபத்தை மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்லி விளக்கி வருகின்ற மக்கள் மருத்துவர் புகழேந்தி அவர்களை, அணுஉலை நிர்வாகத்தின் தூண்டுதலின்பேரில் பொய்ப் புகார் பெற்று, 01.12.2011 அன்று கல்பாக்கம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து உள்ளனர்.

அவரிடம், கதிர்வீச்சின் பாதிப்பைக் கேட்டுத் தெரிந்துகொள்வதற்குப் பதிலாக, உனக்கு தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்றால் என்னவென்று தெரியுமா? என்கவுண்டர் என்றால் தெரியுமா? என்று, ஆய்வாளர் அச்சுறுத்தி உள்ளார்.

எனவே, போராட்டத்தை முன்னெடுத்துச் செல்பவர்களை அச்சுறுத்துவதை எதிர்த்து, அணுக்கதிர் வீச்சு பாதுகாப்புக்கான மக்கள் இயக்கம், கடந்த 12.12.2011 அன்று அகிம்சை வழியில் உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்த அனுமதி கோரியது. அணுஉலை நிர்வாகத்தின் தலையீட்டால் அனுமதி மறுத்தனர்.

எனவே, சதுங்கப்பட்டினம் ஊராட்சி மன்ற உறுப்பினர் குருசாமி, உண்ணாநிலை அறப்போருக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து, மனித உரிமை ஆர்வலர்களான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் திரு. ராதாகிருஷ்ணன் மற்றும் புகழேந்தி மூலமாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு எண்.29469/2011 முறையீடு தொடுத்தார்.

5.1.2012 அன்று உண்ணாவிரதம் நடத்திக்கொள்ள அனுமதி வழங்க மாமல்லபுரம் காவல் சரக துணை கண்காணிப்பாளருக்கும், கல்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளருக்கும் அறிவுறுத்துமாறு, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இவ்வாறு, நீதிமன்ற வழிகாட்டுதல் மூலமாகத்தான் காந்திய அகிம்சை வழிப்போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

தமிழக அரசையும், தமிழக மக்களையும் மின்வெட்டைக் காட்டி மனமாற்றம் செய்து பணியவைக்கவே, மத்தியத் தொகுப்பில் இருந்து போதுமான மின்சாரம் வழங்காமல் திட்டமிட்டு செயற்கையான மின்வெட்டை மத்திய காங்கிரஸ் அரசு ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.

வாழ்வதற்கு மின்சாரம் அவசியம். ஆனால், அது கல்லறைக்கு வெளிச்சம் பாய்ச்ச அல்ல என்பதை, விழிப்பு உணர்வுப் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டியது சமூகக் கடமை.

அமெரிக்காவின் மூன்று மைல் தீவு, ரஷ்யாவின் செர்னோபில், ஜப்பானின் ஃபுகுஷிமாவில் அணு உலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் இருந்து நாம் இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

கல்பாக்கம் அணுஉலையைச் சுற்றிலும், 10 கி.மீ. சுற்றளவில் வாழ்கின்ற மக்களுக்கு புற்றுநோய், தைராய்டு, தோல் நோய் கட்டிகள், மலட்டுத்தன்மை, குடல் புண், கண் புரை, சர்க்கரை வியாதி, பக்கவாதம் போன்ற நோய்களின் தாக்கம், மற்ற பகுதியைக் காட்டிலும் கூடுதலாக உள்ளதாக, நிர்வாகத்தின் மூலம் அமைக்கப்பட்ட, சென்னை அஸ்பேயர் நிறுவன மருத்துவர் மஞ்சுளா தத்தா கொடுத்து உள்ள அறிக்கைக்கு, அரசின் பதில் என்ன?

மத்திய காங்கிரஸ் அரசின் சார்பில் எடுக்கப்பட்டு தொலைக்காட்சியில் காட்டப்படும் விளம்பரப்படம் கூட மக்களின் அச்சத்தை, ஐயத்தைப் போக்கும் விதத்தில் இல்லை. அதில் மீனவ இளைஞராக நடித்துள்ளவர், ‘எங்கள் மீனவ கிராமத்தில் கடந்த காலத்தில் 50 பேர் மீன்பிடித்துக் கொண்டு இருந்தோம்; இப்போது, 200 பேர் மீன்பிடித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதில் இருந்து, அணுஉலை வேலை வாய்பில் முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்கி உள்ளோம் என்பது பொய்யாகிறது. இதுவரை கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள அணுஉலை அமைய இடம் தந்த மண்ணின் மைந்தர்கள் எத்தனை பேர் நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர்?

அதே போன்று அணுஉலையில் கடல்வளம் பாதிக்கப்படுவதாகக் கூறுவது உண்மை அல்ல; மீன் வளம் பெருகி உள்ளது என்று தொலைக்காட்சி விளம்பரப் படத்தில் காட்டப்படும் மீன், கடல் மீனே அல்ல.

கடல் மீன்களான வஞ்சிரம், வவ்வால், கொடுவா, ஷீலா போன்ற மீன்கள் இக்கடல் பரப்பில் இருந்து அணுஉலையால் இடம் மாறி உள்ளதால், ஆற்றின் முகத்துவார மடவை மீனைப் பிடித்து கடல் மீனாகக் காட்டுவது, கரடியைப் பிடித்து காட்டுமான் என்று சொல்கின்ற புரட்டு வேலை.

இதுபோன்று, அணுஉலை நிர்வாகத்தின் கவனக்குறைவால், அணுஉலை தொழில்நுட்பத்தில் கவனக்குறைவு ஏற்பட்டுவிட்டால் என்ன ஆகும்?

50 ஆண்டுகள் விபத்து இல்லாமல் நல்ல முறையில் இயங்கி மின்சாரம் தயாரித்த அணு உலையையும், அதன் கழிவுகளையும் 50 ஆயிரம் ஆண்டுகள் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். நமது கண்காணிப்பில் பிழை ஏற்பட்டால் விபரீதத்தைத் தடுக்க முடியாது.

ஐரோப்பியக் கூட்டு அமைப்பில் உள்ள 27 நாடுகள், கடந்த ஆண்டு நவம்பரில் பன்னாட்டு விமான நிலையங்களில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய அணுக்கதிரைப் பயன்படுத்தி பயணிகளைப் பரிசோதனை செய்யும் ஸ்கேனிங் முறைக்குத் தடை விதித்து, மாற்று வழியில் பாதிப்பு இல்லாத பரிசோதனை செய்யப் பணித்து உள்ளது.

ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகளில், கதிர் வீச்சினால் காரணமாகப் பாதிக்கப்படும் பணியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு இழப்பு ஈட்டுத் தொகை அளிப்பதற்கான சட்டம் அமலில் இருப்பது போன்று, மத்திய, மாநில அரசுகள் விரைந்து சட்டம் இயற்றி, பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை வழங்கிட வேண்டும்.

மத்திய காங்கிரஸ் அரசு நிர்வாகமும் அமைச்சர்களும், கதிர்வீச்சின் ஆபத்தை உணராமல், மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் பேசுவது, சமூக அக்கறையுடன் போராடி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டுத் தொடர்பு இருக்கிறது என்று தொடர்ந்து அவதூறு பரப்பி வருவது, எதிர்காலத்தில் விபத்து ஏற்பட்டால் இது எதிரி நாட்டின் சதி என்று சொல்லி தப்பிப்பதற்கான முன்னோட்டமாகவே இருக்கிறது.

எந்த விளைவுகள் ஏற்பட்டாலும் அதற்கு மத்திய காங்கிரஸ் அரசே பொறுப்பு ஏற்க வேண்டும்.

31.1.2012 செவ்வாய்க்கிழமை, கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில், நீதிமன்ற உத்தரவின் பேரில் நடைபெற உள்ள அணுக்கதிர் வீச்சு பாதுகாப்பிற்கான மக்கள் இயக்கம் நடத்தும் அடையாள உண்ணாவிரதம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் சோமு ஆகியோர் பங்கு ஏற்பார்கள்.

‘தாயகம்’                                           வைகோ
சென்னை - 8                                      பொதுச் செயலாளர்,
29.01.2012                                           மறுமலர்ச்சி தி.மு.க

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)