தமிழக முதல்வருக்கு வைகோ கடிதம்

Issues: Human Rights

Region: Tamil Nadu

Category: Articles, Letters

Date: 
Sun, 08/01/2017

 

 

 

 


தமிழக முதல்வருக்கு வைகோ கடிதம்

 

மாண்புமிகு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள்: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரையும், பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறைகளில் இருக்கும் சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்க!

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும், தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வறட்சியின் பிடியில் தமிழகம் தவித்துக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில், சென்னை மாநகரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகள் குடிதண்ணீருக்கே வழியின்றி துன்பப்படும் சூழல் வளைத்து வரும் இத்தருணத்தில் தமிழக மக்கள் நலன் காக்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெற வேண்டும் என விரும்புகிறேன்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்தக் கடிதத்தை அனுப்புகிறேன்.

உலகத்தில் பல்வேறு நாடுகளில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, சிறைச்சாலைகளில் அடைக்கப்படுக்கின்ற கைதிகளை துன்புறுத்தும் நோக்கமின்றி சீர்திருத்தும் குறிக்கோளோடு அவர்களை அன்பாக நடத்துவதும், தண்டனை காலம் முடிவதற்கு முன்பாகவே மனிதாபிமானத்தோடு விடுதலை செய்வதும் நடைபெற்று வருகிறது.

உலகில் 137 நாடுகளில் மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் 1947 ஆகஸ்டு 15 இல் சுதந்திரம் கிடைத்ததை முன்னிட்டு, சிறைச்சாலையில் இருந்த கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அந்த அடிப்படையில்தான் இலட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களும், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

1957 இல் கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், அன்றைய முதலமைச்சர் தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் அவர்கள், அன்றைய சட்ட அமைச்சர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களின் ஆலோசனையைப் பெற்று, தண்டனை பெற்று சிறைகளில் இருந்த கைதிகள் அனைவரையும் விடுதலை செய்தார்.

1967 இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சரான பின், 1968 இல் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டை முன்னிட்டு, சிறைவாசிகளின் தண்டனை காலத்தை தமிழக அரசு குறைத்தது.

1977 இல் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சர் தோழர் ஜோதிபாசு அவர்கள் தண்டனை கைதிகளை சிறையிலிருந்து விடுதலை செய்தார்.

1977 இல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முதலமைச்சரான பின், ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்வர் எம்.ஜி.ஆர். விரும்பியபோதும், அன்றைய சட்ட அமைச்சர் நாராயணசாமி முதலியார்அவர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தபோதிலும், 14 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆயுள் கைதிகளை முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலை செய்தார்கள்.

1969 இல் உலக உத்தமர் காந்தியடிகள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் மரண தண்டனை கைதிகளின் தண்டனை ரத்து செய்யப்பட்டு, ஆயுள் கைதிகள் ஆயினர்.

இந்தப் பின்னணியில் மனிதநேயத்தின் சிகரமாக தமிழகத்திலே வாழ்ந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது பிறந்த நாளான ஜனவரி 17 ஆம் நாள் அன்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிரபராதிகளான ஏழு பேர் 25 ஆண்டுகள், ஒரு கால் நூற்றாண்டு காலம் துன்பத்தின் பிடியில் தங்கள் வாழ்வையே இழந்துவிட்ட அவலத்தை கருத்தில் கொண்டு, மனிதாபிமானத்தோடு இந்திய அரசியல் சட்டம், மாநில அரசுக்கு வழங்கியுள்ள 161 ஆவது பிரிவின் படி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டுகிறேன்.

மிக முக்கியமாக தமிழக அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய சிறைவாசிகளின் பிரச்சினையை இங்கே குறிப்பிடுகிறேன்.

ஆனால், ஆயுள் தண்டனை பெற்றோர், பத்து ஆண்டுகள் தண்டிக்கப்பட்டோர், சில குற்றப் பிரிவுகளில் தண்டனை பெற்ற காரணத்தால் விடுவிக்கப்படாமலேயே சிறைச்சாலைகளில் வாடுகின்றனர். அவர்களுள் பலர் இருபது ஆண்டுகள் கடந்தும் சிறையில் அல்லல்படுகின்றனர். அவர்களது குடும்பங்கள் சின்னாபின்னம் ஆகின்றன. அதனால், மரணத்தை விடக் கொடுமையான மனத்துன்பங்களுக்குச் சிறைவாசிகள் ஆளாகி உள்ளனர்.

இந்தியக் குற்ற இயல் நடைமுறைச் சட்டத்தில் 14 ஆண்டுகளுக்கு மேல் கைதிகளின் சிறைவாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற சட்டத்திருத்தம், 1978 ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் ஆட்சியில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தபோது, இரு அவைகளிலும் எவரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில், நான் ஒருவன் மட்டுமே அதனைக் கடுமையாக எதிர்த்துப் பேசி என் கருத்துகளைப் பதிவு செய்து இருக்கின்றேன்.

சிறைவாசிகளைப் பரோல் விடுப்பில் அனுப்புவது ஒரு மனிதாபிமான நடவடிக்கை ஆகும். குடும்பத்தினருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது குடும்பத்தில் ஏற்படும் நற்காரியங்களில் பங்கு ஏற்கவோ, குடும்பத்தில் ஏற்படும் துயரச் சம்பவங்களில் அல்லது அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய அவசியம் கருதியோ பரோல் விடுப்பு தரப்படுகின்றது.

அப்படி விடுப்பில் செல்லும் சிறைவாசி, தவிர்க்க இயலாத காரணங்களால் குறிப்பிட்ட நாளில் சிறைக்குத் திரும்பி வர இயலாமல் ஓரிரு நாட்கள் தாமதம் ஏற்பட்டு விட்டால் கூட, இந்தியத் தண்டனைச் சட்டம் 224 பிரிவுகளின் கீழ் மேலும் தண்டிக்கப்படுகின்றனர். இதனால் பொது மன்னிப்பில் அவர்கள் விடுவிக்கப்படுவது கிடையாது.

வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு சிறைவாசி, நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தால் பரோல் விடுப்பு கிடையாது என்பதும், எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத மனிதாபிமானம் அற்ற நடவடிக்கை ஆகும். மேல் முறையீடு ஆண்டுக்கணக்கில் நீடித்துக் கொண்டே போகும். 

சிறைச்சாலை என்பது தண்டிக்கும் இடம் அல்ல. சீர்திருத்தும் இடம் என்ற கோட்பாட்டை உலகில் பல நாடுகள் ஏற்றுக் கொண்டு உள்ளன.

எனவே, சிறைவாசத்தில் திருந்திய மனிதர்களுக்கு மறுவாழ்வு அளிக்கின்ற வகையில், பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போரையும், பரோல் விடுப்பில் ஒரு சில நாள்கள் தவறியவர்களையும் முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசைக்  கேட்டுக் கொள்கின்றேன்.

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் பல்லாண்டு வாழ்கஎனும் திரைப்படத்தில் சிறைச்சாலையில் இருந்த கொடிய மனம் படைத்த தண்டனைக் கைதிகளையும் மனம் திருந்தியவர்களாக ஆக்கியதையும் கருத்தில் கொண்டு, அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறைவாசிகளுக்கு நான் மேலே குறிப்பிட்ட இன்னல்களைக் களைய தமிழக அரசு முன்வரவேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

மிக்க நன்றி.

தங்கள் அன்புள்ள

(வைகோ)

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)