மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

Issues: Human Rights, Politics

Region: Tamil Nadu

Category: Articles, Headlines

Date: 
Sun, 07/01/2018

 

 

 

 

 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

 

றுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம், 07.01.2018 ஞாயிற்றுக்கிழமை, தாயகத்தில், கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம்: 1

 

டாக்டர் நடேசனார், வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர், தரவாட் மாதவன் நாயர்  ஆகிய முப்பெரும் தலைவர்கள் கால்கோள் அமைத்து, அறிவாசான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரால் கட்டி எழுப்பப்பட்டு, இலட்சக்கணக்கான தொண்டர்களின் உன்னதமான உழைப்பாலும் அளப்பரிய தியாகத்தாலும் பாதுகாக்கப்பட்டு, டாக்டர் கலைஞர் அவர்களின் சாதனைகளால், தமிழ்நாட்டின் காவல் அரணாகத் திகழும் திராவிட இயக்கத்திற்கு எதிராகப் பல்வேறு சக்திகள் களம் இறங்கி வருகின்றன. 

தமிழகத்தின் வாழ்வாதாரங்களை அழித்து, மாநில உரிமைகளைக் கபளீகரம் செய்து, பேரறிஞர் அண்ணா அவர்கள் தொலைநோக்கோடு அறிவித்த மாநில சுயாட்சிக்கு வேட்டு வைக்கும் வேலையில், மத்திய அரசு மிகத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

எனவே, திராவிட இயக்கத்தைக் காக்கவும், மாநில சுயாட்சிக் கொள்கைக்கு வலுவூட்டவும், தமிழக வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து செயல்படுவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.

தீர்மானம்: 2

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிக்கம்பங்களுக்குப் புதிய வண்ணம் தீட்டி, கழகக் கொடிகளை ஏற்றுகின்ற வகையில், ஜனவரி 14 ஆம் நாள் முதல் 31 ஆம் தேதி வரை, மாவட்டச் செயலாளர்கள் அதற்குரிய திட்டங்களை வகுத்து, மாநகரங்கள், நகரங்கள், ஒன்றியங்கள், பகுதிக் கழகங்கள், பேரூர்க் கழகங்கள் தோறும் கொடி ஏற்று விழாக்களை சிறப்பாக நடத்திடுவது என இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.  

தீர்மானம்: 3

சென்னை இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் நடைபெறும் என்று தேர்தல்ஆணையம் அறிவித்தது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் வருமான வரித்துறை சோதனைகளில் கிடைத்தது; எனவே தேர்தல் நியாயமாக நடைபெறும் சூழல் இல்லை என்று கூறி, தேர்தலை இரத்து செய்வதாக ஏப்ரல் 10 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பணம் கொடுத்த வேட்பாளர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், நிறுத்தி வைக்கப்பட்ட தேர்தலை, டிசம்பர் 21 ஆம் தேதி தேர்தல் ஆணையம் நடத்தி முடித்தது.

இந்த முறையும் வாக்காளர்களுக்குக் கோடிக்கணக்கில் பணம் அள்ளி வீசப்பட்டதை நாடே பார்த்தது. ஆனால், தேர்தல் ஆணையத்தால் அதைத் தடுக்கவே முடியவில்லை.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு தகுதிநீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தால்தான் ஜனநாயகம் தழைக்கும். அதற்கான நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 4

கடந்த நவம்பர் 29, 30, 2017 இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் வீசிய வரலாறு காணாத ஒக்கி புயலால் அம்மாவட்டமே முற்றிலும் உருக்குலைந்துபோனது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன.

புயல் குறித்த முன்னெச்சரிக்கை விடுக்காமல் மத்திய - மாநில அரசுகள் அலட்சியம் காட்டியதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் புயலில் சிக்கிக் காணாமல் போனார்கள். பலர் சூறாவளிக்குப் பலியானார்கள்.

காணாமல் போன மீனவர்களைத் தேடுவதிலும் மத்திய - மாநில அரசுகள் போதிய அக்கறை காட்டவில்லை. இன்னமும் 623 மீனவர்கள் கரை திரும்பவில்லை என்று குமரி மாவட்ட ஆட்சியர் கூறி இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. காணாமல் போன மீனவர்கள் பற்றிய முறையான கணக்கெடுப்பு நடத்தி, மீனவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், மீனவர்களைப் பாதுகாக்க இந்திய அரசின் கப்பல் படை நிரந்தரமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

ஒக்கி புயலால் குமரி மாவட்டத்தில் 2569 ஹெக்டேர் ரப்பர் மரங்கள், 2445 ஹெக்டேர் வாழை, 182 ஹெக்டேர் மரவள்ளிக் கிழங்கு, 415 ஹெக்டேர் நெல் பயிர், 119 ஹெக்டேர் தென்னை மரங்கள் உள்ளிட்ட அனைத்துத் தோட்டப் பயிர்களும் முழுமையாக அழிந்து, மக்கள் வாழ்வாதாரங்களை பறிகொடுத்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் சாலைகள் பெருமளவில் சேதமுற்றுள்ளன. புயல் தாக்கி 5 வாரங்கள் கழித்துத்தான் மத்திய அரசு குழு ஒன்றை அனுப்பி, டிசம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் சேதங்களை மதிப்பீடு செய்துள்ளது.

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் உடனடியாகக் களத்தில் இறங்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களையும், மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார். அரபிக் கடலில் இந்த நூற்றாண்டில் இல்லாத கொடிய புயல்என்று  கூறினார்.

ஆனால் தமிழக முதல்வரோ துளிகூட அக்கறையின்றி மெத்தனமாக இருந்தார். 12 நாள்கள் கழித்தே பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றார்.

புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை தேசியப் பேரிடர் மாவட்டமாக அறிவித்து, மத்திய - மாநில அரசுகள் முழு அளவில் மீனவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்; தமிழக அரசு பிரதமரிடம் கோரியுள்ள 13520 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 5

மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1590 எனவும், பொது ரகம் குவிண்டாலுக்கு ரூ.1550 எனவும் அறிவித்தது.

தமிழக அரசு நடப்பு 2017-18 ஆம் ஆண்டு பருவத்திற்கு மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலையோடு சன்ன ரகத்திற்கு ரூ.70ம், பொதுரகத்திற்கு ரூ.50ம் உயர்த்தி, குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகம் ரூ.1660 என்றும், பொது ரகம் ரூ.1600 என்றும் நெல் கொள்முதல் விலையைத் தீர்மானித்துள்ளது. இந்த விலை கட்டுபடியாகக் கூடியது அல்ல என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடுமையான கடன் சுமை, இயற்கை இடர்பாடுகள் போன்றவற்றை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு எஸ்.ஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை ஏற்று, விவசாய விளைபொருள்கள் உற்பத்திச் செலவுடன், மேலும் 50 விழுக்காடு சேர்த்து கொள்முதல் விலை வழங்கினால்தான் கட்டுபடியாகும். எனவே, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 என்று நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கின்றது.

தீர்மானம்: 6

தமிழகத்தில் கரும்பு பயிரிட்ட விவசாயிகள், அறுவடை செய்து சர்க்கரை ஆலைகளுக்கு அரவைக்கு அனுப்பி வரும் நிலையில், நடப்புப் பருவத்திற்கு தமிழக அரசு இன்னமும் கரும்பு கொள்முதல் விலையை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருவது கண்டனத்திற்குரியது ஆகும். நடப்பு கரும்புப் பருவத்திற்கு மத்திய அரசு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.2550 என்று அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4000மாக தீர்மானிக்க வேண்டும் என்றும்; கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2000 கோடியை இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு முன்பாகப் பெற்றுத்தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 7

வேளாண்மைப் பணிகளுக்குப் பயன்பட்டு வரும் டிராக்டர்களுக்கு இதுவரையில் வரி விதிப்பு இல்லை. பதிவுக் கட்டணமாக ரூ.50 மட்டுமே செலுத்தி வருகின்றனர். மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்து, விவசாயத்திற்குப்  பயன்படுத்தப்படும் டிராக்டரை வணிக பிரிவு வாகனமாக மாற்றி இருக்கின்றது. இதனால், வணிக வாகனங்களுக்கு இணையாக டிராக்டருக்கும் சாலை வரியாக ஆண்டுக்கு ரூ.650 விதிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் சுமார் இரண்டு இலட்சம் டிராக்டர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளைப் பாதிக்கும் இந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 8

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, முத்தலாக் கூறி திருமண விலக்கு பெறுவதைத் தடை செய்யும் சட்ட முன்வடிவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக மத்திய அரசு கூறி இருக்கின்றது.

காவிரிப் பிரச்சினை உட்பட உச்சநீதிமன்றத்தின் எத்தனையோ தீர்ப்புகளைச் செயல்படுத்தாமல் உதாசீனம் செய்தவர்கள், முத்தலாக் தடைச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று துடிப்பதின் நோக்கத்தை நாடு நன்கு அறியும்.

முத்தலாக் குறித்து கடந்த ஆகஸ்டு 22, 2017 இல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிஜே.எஸ்.கேஹர் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, மத்திய அரசு கொண்டு வரும் சட்டம் ஷரியத் சட்டத்தையும், ஸ்லாமிய அமைப்புகளின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும் அமைய வேண்டும் என்று தனது தீர்ப்பில் தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளது.

ஆனால், பா.ஜ.க. அரசு, ஸ்லாமிய இயக்கங்களின் கருத்தினை அறிய முற்படாமல், மூன்று ஆண்டுகள் தண்டனை என்ற விபரீதம் விளைவிக்கின்ற பிரிவுகளையும் சேர்த்து, முத்தலாக் தடைச் சட்டத்தைத் திணிக்க முயற்சிப்பதற்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 9

உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்  என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் அதிமுக அரசு, தொகுதி வரையறை எனும் பெயரால் உள்ளாட்சி அமைப்புகளை சிதைக்கும் வேலையில் இறங்கி உள்ளது.

தமிழ்நாடு தொகுதி வரையறைச் சட்டம் 2017 இன் படி, உள்ளாட்சித் தொகுதிகளை வரையறை செய்யும் பணியை மாநில தேர்தல் ஆணையமே நேரடியாக மேற்கொள்ள வேண்டும். ஆனால், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தொகுதி வரையறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 2ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் அதனை சரிபார்த்துக் கருத்துக் கூறலாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் டிசம்பர் 28 ஆம் தேதி அறிவித்தனர்.

மூன்று நாட்கள் கால அவகாசம் என்பது போதுமானது அல்ல. தற்போது உள்ளாட்சி வார்டுகள் வரையறை செய்யும் அதிகாரிகள் ஆளும் கட்சியினரின் விருப்பத்திற்கு ஏற்ப வார்டுகளைப் பிரித்தும், சேர்த்தும் வகைப்படுத்தி உள்ளனர். இத்தகைய முறைகேடுகளை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதுடன், உள்ளாட்சி வார்டுகள் வரையறையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்; அரசியல் கட்சிகள், பொதுமக்கள் கருத்துக்களைப் பெற ஜனவரி 31 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 10

சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் நேரடியாக சுமார் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டோரும், பட்டாசு துணைத் தொழில்களான அச்சு, போக்குவரத்து உள்ளிட்ட தொழில்களில் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்டோரும் வேலைவாய்ப்புப் பெற்று வருகின்றனர்.

பண்டிகைகளின்போது பட்டாசு வெடிப்பதால் காற்று மற்றும் ஒலி மாசு புகார் தொடர்பாக நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகளால் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகின்றது. இதனால் இத்தொழில் பெரும் சரிவைச் சந்தித்து வருகின்றது.

உச்சநீதிமன்றமும் இது தொடர்பான வழக்கை விசாரணைக்கு ஏற்று, அனைத்து மாநில அரசுகளுக்கும் விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பி உள்ளது. இவ்வாறு தொடர் அச்சுறுத்தல் ஏற்படுவதால், பட்டாசுத் தொழில் முடங்கும் நிலையும், பட்டாசு சார்ந்த 106 துணைத் தொழில்களும் நெருக்கடியைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வார காலமாக பட்டாசுத் தொழிலாளர்களும், உற்பத்தி நிறுவனங்களும் பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்கக் கோரி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இலட்சக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் சுற்றுச் சூழல் விதிமுறைகளில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 11

தேனி மாவட்டத்தில், அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்த நாள் முதல் அப்படி அமையும் ஆய்வுக் கூடம் தேனி மாவட்டத்துக்குப் பெரும் அழிவையும், குறிப்பாக பென்னிக் குயிக் கட்டிய முல்லை பெரியாறு அணையும், கேரளத்தில் உள்ள இடுக்கி அணையும் இடிந்துவிழும் அபாயமும் ஏற்படும். மேலும், தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு பாசன நீரையும், குடிதண்ணீரையும் இழக்க வேண்டிய பெரும் விபரீதம் உருவாகும் என்பதால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இத்திட்டத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தியது.

சுற்றுச் சூழல் பாதுகாவலர் மேதாபட்கர் அம்மையாரை அழைத்து வந்து, மக்களிடைய விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தியது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வழக்குத் தொடர்ந்து இத்திட்டத்திற்கு இடைக்கால தடை ஆணையும் பெற்றார். இந்தப் பின்னணியில் தற்போது மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு தென்மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் பூவுலக நண்பர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பையும் உதாசீனம் செய்து, திட்டத்தை நிறைவேற்ற தீவிர முயற்சி எடுத்து வருவது மிகவும் கவலை அளிக்கின்றது. நியூட்ரினோ திட்டத்திற்கு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை. எனவே, தமிழக அரசு நியூட்ரினோ திட்டத்திற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி கொடுக்கக் கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தாயகம்                                               தலைமைக் கழகம்
சென்னை - 8                                        மறுமலர்ச்சி தி.மு.க.,
07.01.2018

 

Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)