சீமான் மீது பாதுகாப்புச் சட்டம் . வைகோ கண்டனம்
Issues: Human Rights, International, Law & Order, Srilanka
Region: Tamil Nadu
Category: Headlines, Press Releases
சீமான் மீது பாதுகாப்புச் சட்டம்
வைகோ கண்டனம்
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை தமிழ்நாட்டில் அடக்குமுறை தி.மு.க அரசால் ஏற்பட்டு உள்ளது. இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றுகுவித்த கொடியவன் இராஜபக்சேயின் சிங்கள இனவெறி அரசுக்குக் கண்டனமும் எச்சரிக்கையும் செய்ய வேண்டிய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி அதற்குமாறாக, தமிழர் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு இலங்கை அரசு தந்துவிட்டது என்று சிங்கள அரசுக்கு வக்காளத்து வாங்கினார்.
நெஞ்சை நடுங்கவைக்கும் வகையில் ஈழத்தமிழர்கள் படுகொலைகள் செய்யப்பட்டதால் நியாயமாக தமிழர்கள் மனதில் எழுகின்ற ஆவேச உணர்ச்சி, முத்துக்குமார் உள்ளிட்ட 17 வீரத்தமிழர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்யக் காரணமாயிற்று. அதே உணர்ச்சி வேகத்தில் தான் சிங்கள அரசுக்கு எச்சரிக்கை செய்யும் நோக்கத்தில், ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் தலைவர், இயக்குநர் சீமான் உரை நிகழ்த்தினார். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் குரல் எழுவதையேத் தடுக்கவும் தமிழ் ஈழ ஆதரவாளர்களை மிரட்டி ஒடுக்கவும் திட்டமிட்டு இயக்குநர் சீமான் மீது தேசப் பாதுகாப்புச் சட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி ஏவி உள்ளார்.
ஈழத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்ய ஆயுதங்களைத்தந்த இந்திய அரசு தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி ஆகும். அங்கே தமிழர்களைக் கொன்றால் சிங்களவர்க்கு எதிராக தமிழர்களின் கோபம் திரும்பும் என்று சீமான் பேசியது குற்றமாகாது.
சென்னையிலே ஒரு தலித் இளைஞனைச் சுட்டுக்கொன்ற கொலைகாரன் டக்ளஸ் தேவானந்தா பிரதமரோடு கரம்குலுக்கி மத்திய அரசின் விருந்தாளியாக உலா வரமுடிகிறது. ஆனால், ஈழத்தமிழர்களுக்காக பேசினால் கருணாநிதி பாதுகாப்புச் சட்டத்தை வீசுகிறார். கடந்த ஆண்டு ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் வீரத்தியாகிகள் தீக்குளித்தபோது, அதனைக் கொச்சைப் படுத்தி குடும்பச் சண்டையால் தீக்குளித்தனர் என்று காவல்துறையை அறிக்கைவிடச் செய்தவர்தான் தமிழக முதல்வர் ஆவார்.
ஈழத்தமிழர் படுகொலையைத் தடுக்க முனையாமல் அதற்குக் காரணமான இந்திய அரசுக்கு உடந்தையாக செயல்பட்ட துரோகி என்ற குற்றச்சாட்டில் இருந்து தமிழக முதல்வர் விடுபடவே முடியாது. அவர் தற்போது எடுத்துவருகிற இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் அந்தக் குற்றச்சாட்டை மேலும் கூர்மைப்படுத்தவே செய்கின்றன.
சர்வாதிகாரப் போக்கில் பாசிச ஆட்சி நடத்தும் தி.மு.க. அரசு சீமான் மீது பாதுகாப்புச் சட்டத்தை ஏவியதற்கு பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், இத்தகைய அடக்குமுறையின் மூலம் எங்கள் ஈழ ஆதரவுக் குரலை ஒருபோதும் அடக்க முடியாது அது மேலும் மேலும் வீறுகொண்டு எழும் என எச்சரிக்கிறேன்.

