விடுதலைப் புலிகள் மீதான தடை தகர்ந்தது ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத் தீர்ப்பு தமிழ் ஈழ விடியலின் நுழைவாயில் வைகோ அறிக்கை

Issues: International, Srilanka

Region: Tamil Nadu, Other States

Category: Articles, Headlines

Date: 
Thu, 27/07/2017

 

 

 


விடுதலைப் புலிகள் மீதான தடை தகர்ந்தது
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத் தீர்ப்பு தமிழ் ஈழ விடியலின் நுழைவாயில்

வைகோ அறிக்கை

2017 ஜூலை 26 ஆம் நாள் உலகெங்கும் வாழுகிற தமிழீழ உணர்வாளர்களுக்கும், தன்மானத் தமிழர்களுக்கும் உன்னதமான திருநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தகர்ந்து நொறுங்கிய நாள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சநீதிமன்றம் ஜூலை 26ஆம் தேதி தந்திருக்கின்ற தீர்ப்பு இரத்தத்தால், கண்ணீரால் எழுதப்பட்ட தமிழ் ஈழ வரலாற்றில் உன்னதமான திருப்பத்தைத் தந்து இருக்கிற தீர்ப்பாகும். 2014 அக்டோபர் 16 ஆம் தேதி பொது நீதிமன்றம் என்று அழைக்கப்படுகிற குசைளவ ஐளேவநவே ஊடிரசவ என்ற ஐரோப்பிய ஒன்றியத்துக்கான நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி, விடுதலைப்புலிகள் அமைப்பு ஆங்காங்கே வங்கிகள், நிதி நிறுவனங்களில் இருக்கக்கூடிய நிதியை அப்படியே பயன்படுத்தக்கூடாது என்ற தடையை நீக்கலாம் என்று தீர்ப்பு கொடுத்தார்கள். அதனை எதிர்த்து இங்கிலாந்து நாடும், நெதர்லாந்து நாடும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில், லக்சம்பர்க்கில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. விடுதலைப் புலிகள் தரப்பில் தக்க வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. அதே  நெதர்லாந்தைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்டர் கோப்பே தக்க வாதங்களை முன்வைத்தார். இறுதியில் தமிழர்களுக்கான நீதி வென்றுவிட்டது.

2001 ஆம் ஆண்டு டிசம்பர் 27 இல் ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காக  ஒரு திட்டத்தை வகுத்து, பாலஸ்தீனத்தின காசா பகுதியில் இன்றைக்கு ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கிற ஹமாஸ் நிறுவனத்தைத் தடை செய்தது.

2006 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமை தாங்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து நாட்டுக்கு மிகப்பெரிய ராஜீய அழுத்தத்தைக் கொடுத்ததன் காரணமாக அந்நாடு தடை செய்தது. அதன் விளைவாக  தெற்கு ஆசிய கூட்டமைப்பில் இதைப் பற்றி விசாரணை வந்தபோது, அதற்குத் தலைவராக ஒரு சிங்களவன் இருந்தான். அவன் அதைப் பரிந்துரை செய்து, ஐரோப்பிய ஒன்றியம் 2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பிரதிநிதி இருக்கிறார். ஒரு அமர்வில் மூன்று நீதிபதிகள், ஐந்து நீதிபதிகள், 15 நீதிபதிகள் என்று மொத்தம் 28 நாடுகளின் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், அமெரிக்கா விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்துவிட்டது; கனடா தடைசெய்துவிட்டது. இதற்கு மூல காரணம் இந்தியா.

1991 க்குப் பிறகு அன்றைய அண்ணா தி.மு.க. அரசு, விடுதலைப் புலிகள் மீதான தடையை வலியுறுத்தியதால், மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் விடுதலைப்புலிகளை தடை செய்தது. பிறகு 2006 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொடுத்த அழுத்தத்தினால் இங்கிலாந்து நாடு புலிகள் அமைப்பை தடை செய்தது.

2014 அக்டோபர் 16 இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதன்மை நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியபோது. அதற்காக வாதாடியவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த வழக்கறிஞர் விக்டர் கோபே.

அந்த நீதிமன்றம் தனது தீர்ப்பில், “கனடா, இந்தியா நாட்டில் இருக்கக்கூடிய செய்திகளை வைத்தும், இணைதள செய்திகளை வைத்தும், அந்த நாட்டு நடவடிக்கைகளை வைத்தும் தடையை நாம் அங்கீகரிக்க முடியாது. இந்திய நாட்டின் எந்த நீதிமன்றமும் விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கு தக்கக் காரணங்களைக் கூறி தடை செய்யவில்லை. இந்திய அரசாங்கத்தைக் குறிப்பிட்டு புலிகளை தடைசெய்வதற்கான காரணங்கள் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. 2002, 2004, 2006 என்று வரிசையாக இந்தியாவில் உள்ள தீர்ப்பாயம் புலிகளை தடை செய்ததையும், அதில் கூறும் காரணங்களையும் ஏற்க முடியாது. பொடா சட்டம் 2004 இல் நீக்கப்பட்டதை இங்கே குறிப்பிட்டார்கள். நீக்கப்பட்டாலும், அந்தச் சட்டத்தால் எப்படி மனித உரிமைகள் நசுக்கப்பட்டன என்பதை கருத்தில் கொள்ளவேண்டியது இருக்கிறது. எனவே, புலிகளுக்கான தடையை நீட்டிப்பதற்கு ஆதாரங்களாக ஏற்க முடியாது.

2009 இல் விடுதலைப்புலிகள் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள். 2009க்குப் பிறகு இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்பதற்கு எந்தச் சரியான ஆதாரங்களையும் இலங்கை அரசால் இதுவரை முன்வைக்க முடியவில்லை என்ற காரணங்களை எல்லாம் சுட்டிக்காட்டி முதன்மை நீதிமன்றம் புலிகள் மீதான தடையை நீக்கி இருப்பதால், அந்தத் தீர்ப்பு சரியானது என்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

மனதுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி என்னவென்றால், உச்சநீதிமன்றத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அட்வகேட் ஜெனரல் இலியனார் சார்ப்ஸ்டன் அம்மையார், “விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்ததற்கு சரியான ஆதாரங்கள் இல்லைஎன்று கூறியதோடு நிற்காமல், “விடுதலைப் புலிகள் நீதிமன்றத்தில் வாதாடுவதற்கான செலவுகளில் மூன்றில் இரண்டு பங்கை நெதர்லாந்தும், இங்கிலாந்தும் ஏற்றுக்கொள்ள வேண்டும்என்று கூறி இருக்கிறார். இந்த வழக்கில் விடுதலைப்புலிகள் தரப்பிற்கு ஏற்பட்ட செலவினை ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் வழக்குத் தொடுத்த இங்கிலாந்துக்கும், நெதர்லாந்தும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் கூறிவிட்டது. 2014  தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.

ஆகவே விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடை நீக்கப்பட்டுவிட்டது. காசா பகுதியில் ஆட்சி நடத்துகிற ஹமாஸ் அமைப்புக்கு உலகில் இருக்கின்ற அனைத்து அரபு நாடுகளின் ஆதரவும் இருக்கிறது. தீர்ப்பில் ஹமாஸ் மீதான தடையை நீக்கி உத்தரவு போடவில்லை. மீண்டும் பொது நீதிமன்றம் (முதல் நீதிமன்றம்) விசாரிக்கட்டும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் விடுதலைப் புலிகளுக்கான தடையை நீக்கிவிட்டார்கள். விடுதலைப் புலிகளுக்கு நாதி இல்லை என்று எவரும் கருத வேண்டாம். நீதி கிடைத்திருக்கிறது.

2006 இல் இருந்து புலிகளுக்கு ஏற்பட்ட தடையினால் உலக அரங்கத்தில் மனித உரிமைக் கவுன்சிலில், ஐ.நா. மன்றத்தில் நமக்குக் கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்பட்டு, நமக்கு நீதி புதைக்கப்பட்டுவிட்டது. எனவே எங்களுக்கு நீதி வேண்டும் என்று இனி மனித உரிமைக் கவுன்சிலிலும், ஐ.நா.வின் பொதுச் சபையிலும் வாதத்தைக் கொண்டுவருவதற்கு நமக்கு வாசல் திறக்கப்பட்டுவிட்டது.

புலிகள் மீதான தடையை நீக்குவதற்குத் தொடர்ந்து தீர்ப்பாயத்திற்குச் சென்று கடுமையாக வாதாடி போராடியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என் வாதங்களைக் கேட்டார்களே தவிர, அதை நிராகரித்து தடையை நீட்டித்தார்கள்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக இந்தியாவின் ஒரு பகுதியை தமிழீழத்தோடு அவர்கள் அமைக்கப்போகிறார்கள் என்ற அடிப்படையில், இந்திய அரசு தடை செய்திருக்கிறது. இன்றைக்கு  தடை நொறுக்கியது போன்று இந்தியா விதித்த தடையும் நொறுங்கும். உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து இரண்டரை மணி நேரம் தடையை எதிர்த்து நான் வாதாடினேன்.

இலட்சக் கணக்கான ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை நிரந்தரமாக மூடி மறைத்துவிடலாம் என்று கொக்கரித்துக் கொண்டு இருக்கிற சிங்கள அரசும், இனப்படுகொலைக்கு ஆயுதம், பணம், முப்படைகளையும் கொடுத்து இனப்படுகொலையின் கூட்டுக் குற்றவாளியான இந்திய அரசும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.

1991 இல் நடைபெற்ற திருப்பெரும்புதூர் சம்பவம் இந்த விவாதங்களில் வருகிறது. அதையும் அடிப்படை ஆதாரமாக ஏற்க முடியாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது. திருப்பெரும்புதூர் துன்பியல் நிகழ்வு ஒரு தேசத்திற்கு எதிராக நடத்தப்பட்ட சம்பவம் அல்ல. தனிப்பட்ட நபர் மீது நடைபெற்ற படுகொலைச் சம்பவம் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இருக்கிறது. எனவே இந்தியா கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் இங்கிலாந்து  தடை கொண்டு வந்தது. தடையை நீடிக்கும்போது, இந்தியா போன்ற நாடுகளில் தடை செய்திருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

தடை நீடிப்பதற்கான சரியான ஆதாரங்களை கவுன்சில் முன்வைக்கவில்லை என்று  லக்சம்பர்கில் இருக்கக்கூடிய உச்சநீதிமன்றம் (ஊடிரசவ டிக துரளவiஉந) தீர்ப்பு வழங்கி இருக்கின்றது.

இந்த நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டபோது, 2011 ஜூன் 1 ஆம் நாள் பிரஸ்ஸல்சில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த மாநாட்டில் நான் ஆற்றிய ஆங்கில உரை பிரமாண வாக்குமூலமாக தாக்கல் செய்யப்பட்டது என்று வழக்காடிய வழக்கறிஞர் கூறியபோது, என் வாழ்க்கையில் எனது பங்களிப்பும் முக்கியமான இடத்தில் அங்கீகரிக்கப்பட்டதை எண்ணி மனநிறைவு அடைகிறேன். பிரஸ்ஸல்ஸ் எனது உரையில் ஐ.நா.பொதுச்செயலாளர் அமைத்த மூவர் குழு அறிக்கையின் முக்கியமான பகுதிகளை மேற்கோள் காட்டி, பொதுவாக்கெடுப்புதான் தீர்வு என்று கூறியிருந்தேன்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க இன்னும் ஊக்கத்தோடு போராடுவதற்கு இந்தத் தீர்ப்பின் மூலம் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

மூடி மறைத்துவிடலாம்; முடிந்துவிட்டது ஈழப்போர் என்றார்கள். தற்போது புதிய பரிமாணம் எடுத்திருக்கிறது. என்றைக்காவது ஒரு நாளைக்கு அறம் வெல்லும் என்பதற்கு அடையாளமாக ஐரோப்பபிய ஒன்றியத்தின் அட்வகேட் ஜெனரலே புலிகள் மீது தடை கூடாது என்று கூறியிருக்கிறார். எனவே இந்திய அரசு தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

ஈழத்தமிழர் இனப்படுகொலை செய்த கொடூரக் குற்றவாளிகளையும் கூண்டில் நிறுத்தி தண்டிக்கலாம்; சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கு பொதுவாக்கெடுப்பையும் நடத்தலாம் என்ற நம்பிக்கையை லக்சம்பர்க் நீதிமன்றத்தின் தீர்ப்பு தந்து இருக்கின்றது.


தாயகம்                                                                         வைகோ
சென்னை - 8                                                      பொதுச்செயலாளர்
27.07.2017                                                             மறுமலர்ச்சி தி.மு.க.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)