கதிராமங்கலம் மக்கள் மீது தடியடி! மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்! மத்திய - மாநில அரசுகளுக்கு வைகோ எச்சரிக்கை

Issues: Environment, Farmers, Human Rights, Law & Order, National

Region: Tamil Nadu

Category: Articles, Headlines

Date: 
Sat, 01/07/2017

 

 

 


கதிராமங்கலம் மக்கள் மீது தடியடி!

மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்!

மத்திய - மாநில அரசுகளுக்கு வைகோ எச்சரிக்கை

காவிரிப் படுகை மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு 2011 ஜனவரி 4 இல், கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்ப்ரேசன் நிறுவனத்துடன் அன்றைய திமுக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. மீத்தேன் எரிவாயு திட்டத்தின் ஆபத்துக்களை உணர்ந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள்  விழிப்புணர்வு ஊட்டியதால் விவசாயிகள், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

2011 மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மீத்தேன் திட்டத்தை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைத்தார். இக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், மீத்தேன் திட்டத்திற்கான அனுமதியை இரத்து செய்வதாக 2015 அக்டோபரில்  இல் தமிழக அரசு அறிவித்தது.

அதன் பின்னர் பாறை படிம எரிவாயு எனும் ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முனைந்தபோது, அதனை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நான் வழக்குத் தொடர்ந்தேன். விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அவர்களும் வழக்குத் தொடுத்தார். தமிழக அரசு மீத்தேன் திட்டத்திற்கு அளித்த அனுமதியை ரத்து செய்துள்ளதைச் சுட்டிக் காட்டி நான் பசுமைத் தீர்ப்பாயத்தில் வாதாடும்போது, “ஷேல் எரி வாயு எடுக்கும் திட்டத்தை அனுமதிக்கக் கூடாதுஎன்று தெரிவித்தேன். சுற்றுச் சூழல் நிபுணர் குழு அறிக்கை கிடைத்த பின்னரே ஷேல் திட்டம் பற்றி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு அப்போது உறுதி அளித்தது.

தமிழ்நாட்டின் வேளாண்மைத் தொழிலையே அழித்து பாலைவனமாக்கும் உள்நோக்கத்தோடு மத்திய அரசு நயவஞ்சமான முறையில் செயல்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது.

ஏனெனில் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. நெடுவாசலில் கடந்த75 நாட்களாக அப்பகுதி பொதுமக்களும், தாய்மார்களும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி தொடர் அறப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வகையில் மத்திய அரசு ஜெம் லெபரட்டரீஸ்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது,

இந்நிலையில் தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் கிராமத்தில் இயற்கை மற்றும் எரிவாயுக் கழகம், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஆய்வு மேற்கொள்ள குழாய்கள் பதிக்கும் பணியைச் செய்துள்ளது. கதிராமங்கலத்தில் ஏற்கனவே எரிவாயு எடுக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது ஹைட்ரோ கார்பன் ஆய்வை மேற்கொள்ளும் ஓ.என்.ஜி.சி. பணிகளை நிறுத்த வேண்டும் என்று கடந்த மே மாதம் மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் அப்போது கூறினர்.

ஆனால் கடந்த ஜூன் 2 ஆம் தேதி காவல்துறையினர் புடைசூழ ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மீண்டும் ஆய்வுப் பணிகளைத் தொடங்கியபோது பொதுமக்களும், தாய்மார்களும் அறப்போராட்டங்களில் இறங்கினர். அப்போது காவல்துறை தடியடி நடத்தி பொதுமக்கள் ஐநூறு பேரை கைது செய்தது. போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது.

தற்போது கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பதித்த குழாய் உடைந்து, எண்ணெய் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். எரிவாயு என்ற பெயரால் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பசுமை வளம் கொழிக்கும் தங்கள் பகுதி விவசாயம் அழிந்து நாசமாகும் என்று பொதுமக்களும், தாய்மார்களும் ஓ.என்.ஜி.சி. பணிகளை நிறுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். மண்ணைப் பாதுகாக்கப் போராடும் கதிராமங்கலம் மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தடியடி நடத்தி உள்ளது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

ஏழரை கோடி மக்களின் நியாயமான உணர்வுகளை அலட்சியப்படுத்தி, மக்கள் போராட்டத்தை கிள்ளுக் கீரையாகக் கருதி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எப்படியாவது செயல்படுத்த மத்திய அரசு துடிக்கிறது.

கடந்த 2017 மார்ச் 26 ஆம் நாள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு பல்வேறு நிறுவனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டபோதே தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். தமிழக அரசின் மெத்தனப் போக்குதான் மத்திய அரசு தமிழ்நாட்டைத் துச்சமாக நினைப்பதற்கு அடிப்படைக் காரணம் ஆகும். எக்காரணம் கொண்டும் நேரடியாகவோ அல்லது ஓ.என்.ஜி.சி. மூலம் மறைமுகமாகவோ மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் ஷேல் எரிவாயு திட்டங்களைச் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.

நெடுவாசல், கதிராமங்கலத்தில் மக்கள் கொந்தளித்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசு தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க வேண்டும். அதை விடுத்து காவல்துறையை ஏவி அடக்குமுறை தர்பார் நடத்த முற்படுவதும், மக்களை மிரட்டுவதும் ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. மக்கள் எழுச்சியை சர்வாதிகார போக்குடன் ஒடுக்கிவிடலாம் என்று கருதுவதும் சரியான அணுகுமுறை அல்ல என்பதை தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும். இல்லையேல் மக்கள் கிளர்ச்சி விசுவரூபம் எடுக்கும் என எச்சரிக்கிறேன்.


தாயகம்                                                                  வைகோ
சென்னை - 8                                                 பொதுச்செயலாளர்
01.07.2017                                                          மறுமலர்ச்சி தி.மு.க.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)