பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய முயற்சி மாநில சுயாட்சிக்கு வேட்டு வைக்கிறவேலை! வைகோ கண்டனம்!
Issues: Education, National, Politics
Region: Tamil Nadu
Category: Headlines, Press Releases
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய முயற்சி
மாநில சுயாட்சிக்கு வேட்டு வைக்கிறவேலை!
வைகோ கண்டனம்!
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல், நாடு முழுவதும் பத்தாவது வகுப்பு பொதுத்தேர்வை நீக்கவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இதற்குக் காரணமாக பெற்றோர்கள் - மாணவர்களின் மன அழுத்தங்களைக் குறைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
எந்த மாநில அரசையும் கலந்து ஆலோசிக்காமல்; கல்வியாளர்களின் கருத்தையும் கேட்காமல், தனது சொந்தக் கருத்தை, நாட்டு மக்களின் மீது திணிக்க நினைக்கிறார். இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும்; கல்வியின் தரத்தைக் குறைக்கும்.
இன்றைய இந்தியக் கல்விமுறையில் பயின்ற மாணவர்கள், உலகம் முழுவதும் சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களைத் திறமையானவர்களாகவும், உழைக்கின்ற மனநிலையையும் உருவாக்கித் தந்து கொண்டு இருக்கிறது. அத்தகைய கல்வி முறையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, நீண்டகால ஆய்வுகள் செய்தும், அனைத்துத் தரப்பையும் கலந்து ஆலோசித்துத்தான் முடிவு எடுக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வுகள் இருந்தால்தான், நல்ல முடிவுகள் வரவேண்டும் என்பதற்காக பள்ளிகள் ஈடுபாட்டோடு கற்பிக்கும். நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்பதற்காக உழைக்கின்ற மனநிலையை மாணவர்கள் இடையே வளர்க்கும்; போட்டியைச் சந்திக்கின்ற எண்ணத்தை வளர்க்கும்.
பொதுத் தேர்வுகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற துணிவை மாணவர்களுக்குப் பள்ளிகள் பயிற்றுவிக்க வேண்டுமேதவிர, தேர்வை ஒழித்துவிட வேண்டும் என்பது மிகவும் தவறான கருத்து.
இப்போதைய தேர்வுமுறையில், மனப்பாடம் செய்து மதிப்பெண்கள் வாங்குகின்ற நிலைதான் உள்ளது;
புரிந்து படிக்கின்ற பாடத்திட்டம் இல்லை என்று கருதினால், அதற்காக புதிய பாடத்திட்டங்களைக் கொண்டு வரலாம். ஆனால், அந்தப் பாடத் திட்டத்திலும்கூட, ஒரு மாணவனையும், ஆசிரியரையும் பரிசோதனை செய்து கொள்ள தேர்வுகள் தேவையாகிறது. அந்தத் தேர்வுகளை, பள்ளி அளவுக்கு வைத்துக் கொண்டால், இப்போது இருக்கின்ற ஈடுபாடு இருக்காது.
ப்ளஸ் 2 தேர்வுக்கு முன்னால் நடக்கின்ற ஒரு பரிசோதனைத் தேர்வாக, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் அமைந்து இருக்கின்றன. அதில் அவர்கள் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான், மேல்நிலையில் விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்ய முடிகிறது.
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்ததும், தமிழகத்தில் மட்டும் சுமார் இரண்டு இலட்சம் மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் சேருகிறார்கள். ஐ.டி.ஐ., நர்சிங் ஆகிய பிரிவுகளுக்கும் செல்கிறார்கள்.
இவர்கள் பொதுத் தேர்வு எழுத வேண்டாமா?
பத்தாம் வகுப்புத் தேர்வுகளை விருப்பப்பட்டவர்கள் எழுதலாம் என்று அரசு சொல்வது, பெருங்குழப்பத்தை விளைவிக்கும். விருப்பப்பட்டவர்கள் மட்டும் தேர்வு எழுதலாம் என்று சொல்வதில், முக்கியத்துவமே இருக்காது.
தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் மேல்நிலைப்பள்ளிகளாக மாற்றப்பட்டு விடவில்லை. தற்போது தமிழகத்தில் 4578 உயர்நிலைப்பள்ளிகளும், 4925 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், மேல்நிலைப் பள்ளிகளுக்குப் படிக்கச் செல்ல வேண்டுமானால், எதை அடிப்படையாக வைத்து அவர்களை அந்தப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்வார்கள்? ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு தரத்தில் தேர்வு வைத்தால், குழப்பமே மிஞ்சும்.
ஒரே பள்ளியில் படிக்கும் மாணவன், அதே பள்ளியில் ப்ளஸ் 2 படிக்க விரும்பினால், எளிதாகச் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால், வேறு பள்ளிகளில் இருந்துவரும் மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பும் பிரிவுகள் கிடைக்க பொதுத் தேர்வு மதிப்பெண்களையே அளவுகோலாகக் கொள்ள வேண்டும். ஆகவே, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை இரத்து செய்வதும், விரும்பினால் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்பதும், மாணவர்கள் இடையே குழப்பத்தையும், கல்வித்தரக் குறைபாடுகளையும் உருவாக்கும்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டு உள்ள யஷ்பால் குழுவின் பரிந்துரைகளை, மத்திய அரசு கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டு இருக்கிறது. கல்வியை மேம்படுத்த, 1500 கல்லூரிகளை, பல்கலைக்கழகங்களாக மாற்ற வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு பல்கலைக் கழகங்களாக மாற்றப்படுவதற்கு முன்னால், அந்தப் பல்கலைக் கழங்களில் மாணவர்கள் சேர்க்கையில் 50 விழுக்காடு அரசின் கையில் இருக்க வேண்டும். கல்விக் கட்டணங்களை உறுதிசெய்வதில் அரசின் பங்கு இருக்க வேண்டும். நுழைவுத் தேர்வை நீக்க வேண்டும். சமூகநீதிக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இவற்றை எல்லாம் செயல்படுத்த, சட்டப் பாதுகாப்புகளை ஏற்படுத்திக் கொண்ட பின்னர்தான், கல்லூரிகளை, பல்கலைக் கழகங்களாக மாற்றுத் திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமல், தான்தோன்றித் தனமாகச் செயல்படும் போக்கை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்திய விடுதலையின்போது மாநில அரசுப் பட்டியலில் இருந்த கல்வி உள்ளிட்ட பல அதிகாரங்களை, நெருக்கடி நிலை காலத்தில் சர்வாதிகாரமான முறையில் காங்கிரஸ் அரசு பறித்துக் கொண்டது. அதேபோன்று, இப்போதும் செயல்பட நினைக்கிறது. அதன் முதல் கட்டம்தான், இந்த முயற்சி. இது மாநில சுயாட்சி தத்துவத்துக்கே வேட்டு வைக்கின்ற வேலை; மறுமலர்ச்சி தி.மு.கழகம் இந்த முயற்சியைக் கடுமையாக எதிர்க்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.