மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 13-ஆவது நிதி ஆணையத்திடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு
Issues: Economy
Region: Tamil Nadu
Category: Announcements
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 13-ஆவது நிதி ஆணையத்திடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு
மத்திய - மாநில அரசுகளின் நிதிப் பரிமாற்றங்கள் நிதி ஆணையம், திட்டக்குழு மற்றும் பல்வேறு மத்திய அமைச்சரவை இலாகா மூலம் நடைபெறுவதன் நோக்கம் மாநிலங்களுக்கிடையேயான வேறுபாடுகளை களைவதாகும். ஆனால், நடைமுறையில் 40 சதவீத நிதிப் பரிமாற்றங்கள் திரும்பச் செலுத்த வேண்டிய கடன் சேவையாகவே இருக்கின்றன. நிதி பரிமாற்றங்கள் சிறப்புச் செயலாக்கக் குழுவின் பரிந்துரையின்படி நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த நிதி ஆணையம் மூலம் இசைவு அளிக்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் பைரோன் சிங் ஷெகாவத் தலைமையிலான சிறப்புச் செயலாக்கக் குழு அளித்த பரிந்துரைகளின்படி மத்திய அரசின் வருவாய் இனங்களில் மாநில அரசுகளுக்கு அளிக்கும் பங்கு 29 சதவீதத்திற்கும் மேலாக அமைய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநில முதலமைச்சர்கள் இதனை 33 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று 11-ஆவது நிதி ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர். இந்த நியாயமான கோரிக்கைகயை இதுவரை பரிசீலிக்கவில்லை.
மேலும் ஷெகாவத் குழு, மத்திய அரசின் கடன் மற்றும் மானியம் விகிதம் 70 : 30 -லிருந்து 50 : 50 -ஆக மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதனை நடைமுறைப்படுத்துவதின் மூலம் மாநில அரசுகள் திரும்ப செலுத்த வேண்டிய கடன் சுமைகளைக் குறைக்க முடியும்.
தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக நலத் திட்டங்கள் நிதித் தட்டுப்பாடு காரணமாக தடைபடாமல் செயல்படுத்துவதற்கு 13-ஆவது நிதி ஆணையம் மாநிலத்தில் நடைமுறையில் உள்ள மானிய இனங்கள் தொடருவதற்கு வழிவகை காண வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், உணவு பாதுகாப்பை உறுதி செய்வதுடன் பொதுப் பங்கீட்டு முறையைச் செவ்வனே செயல்படுத்துவதற்கும் காரணமாக அமைகிறது என்பதையும் நிதி ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும்.
கடன் சுமையிலிருந்து விடுபட மாநில அரசின் கோரிக்கைகளை 13-ஆவது நிதி ஆணையம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஷெகாவத் குழு அறிவிப்பின்படி தாமாகவே முன்வந்து வருவாய் இனங்களை வெளியிடும் (VDIS) திட்டத்தின்கீழ் செலுத்தப்படும் தொகையை மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்கும் வரி வருவாய் பங்களிப்பில் இணைத்தல் கூடாது.
ஷெகாவத் சிறப்புக் குழு பரிந்துரைத்தவாறு, மாநிலத்தில் சுரங்கம் மூலம் கிடைக்கும் தாதுப் பொருள்களுக்கு, மத்திய அரசு வழங்கும் ஈட்டுத் தொகையை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும் என்று கடந்த நிதி ஆணையம் தெரிவித்திருந்தது. நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் இதனை முறையாக நடைமுறைப்படுத்த நிதி ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வரிச் சீரமைப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட இராஜா செல்லையா குழு மாநில அரசுகளுக்கு நிதி தன்னாட்சி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
13-ஆவது நிதி ஆணையம் இதனைக் கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கீட்டுக் கொள்கையை வகுத்திட வேண்டும்.
தமிழ்நாட்டை இயற்கைப் பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவித்து, நிதி ஆணையம் பெருமளவில் பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஏனெனில், அண்மைக்காலமாக தமிழ்நாடு இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றது. மனித சமூகத்தின் கற்பனைக்கும் எட்டாத சுனாமிப் பேரலை தமிழகத்தை தாக்கியபோது கடலோர மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது. மலைப் பகுதியில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலச்சரிவால் நீலகிரி, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, நிதி ஆணையம் தமிழ்நாட்டின் பேரிடர் மேலாண்மைக்கென திட்டங்களை உருவாக்கி, நிதி ஆதாரங்களை வழங்கிட ஆவன செய்ய வேண்டும்.
புவி வெப்பம் அடைந்து பருவ நிலை மாற்றங்களால் இயற்கைச் சமச்சீர் சீர்குலைந்து வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் ஆற்றுப்படுகைகளில் மணல் தோண்டி எடுக்கப்படுவதை முறைப்படுத்திட திட்டங்கள் வகுக்கவும், காடு வளர்ப்பு உள்ளிட்ட இயற்கைச் சமச்சீர் பராமரிப்புத் திட்டங்களுக்கும் உரிய நிதி ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் நீர்ப்பாசனத் திட்டங்களை மேம்படுத்தவும் மழைக்காலங்களில் நீரைத் தேக்கிப் பயன்படும் வகையில் சிறு சிறு தடுப்பணைகள் அமைக்கவும் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கி மக்களின் பொதுச் சுகாதாரத்தைப் பராமரிக்கத் தேவையான திட்டங்களுக்கும், உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் சுத்திகரிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தவும், நிதி ஒதுக்கீடு செய்வது இன்றியமையாத தேவையாகும்.
நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத் துறைக்கென 5 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
புகையிலை மற்றும் மதுபான வகைகளுக்கு வரிகள் உயர்த்தப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வருவாய் ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டமைப்பு வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் வகையில் மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் திரட்டப்படும் கல்வித் தீர்வை இதர திட்டங்களுக்கு மாற்றப்படும் நிலையைத் தவிர்த்து முழுவதுமாக தொடக்கக் கல்விச்சாலைகள் மற்றும் கிராமப்புற பள்ளிகளின் கட்டமைப்பு வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாடு குறித்து அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், காஞ்சிபுரம், வேலூர், சேலம், நாமக்கல், விருதுநகர், கரூர், தேனி, இராமநாதபுரம் ஆகிய பதினைந்து மாவட்டங்கள் சராசரி தனிநபர் வருவாய், கல்வி, உயிர் வாழும் ஆண்டுகள், உடல்நலம் போன்ற அளவுகோல்களின்படி மனிதவள வளர்ச்சியில் பின்தங்கி இருக்கின்றன. தமிழ்நாட்டின் மொத்த வளர்ச்சியுடன் இந்தப் பின்தங்கிய மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
ஒரு கால வரையறைக்குள் இந்த இலக்கை அடைவதற்கான திட்டங்கள் முன் வைக்கப்பட்டு நிறைவேற்றிட சிறப்பு நிதி ஒதுக்கீடு அவசியமாகும்.
இந்தியாவில் இதுவரை பத்து ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டு நிதி ஒதுக்கீடு வழங்கி நடைமுறைப்படுத்தப்பட்டன. அவற்றை நடைமுறைப்படுத்திய பின்பு எந்த அளவுக்கு மக்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன என்று ஆராய வேண்டும். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் சராசரியாக 3 கோடி ரூபாய் ஒவ்வொரு பஞ்சாயத்து மேம்பாட்டுக்காக செலவழிக்கப்பட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோன்று ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் ஊரக வளர்ச்சி முகமை மூலம் மாவட்டந்தோறும் வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன.
இருந்தபோதிலும், மக்களின் தேவைகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை. அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும், வறுமையைப் போக்குவதற்கும் திட்டங்கள் உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து தயாரிக்கப்பட்டு அவற்றிற்கான நிதி ஆதாரங்களை உருவாக்குவதற்கு நிதி ஆணையம் வழிவகை கான வேண்டும்.
இதுவரை நிதி ஆணையம் வெறும் நிதிப் பகிர்வு நிறுவனம் போன்றே இயங்கி வந்துள்ளது. நாட்டின் மிக முக்கியமான பிரச்சினைகளான வேலையில்லாத் திண்டாட்டம், மக்கள் குடியிருப்பு வசதி, மக்கள் தொகை கட்டுபாடு, குடிநீர், வறுமை ஒழிப்பு போன்றவற்றிற்கான செயல்திட்டங்களைத் தயாரிக்கவும், அதற்கேற்ப நிதி ஆதாரங்களைத் திரட்டவும் நிதி ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தென்னக நதிகள் இணைப்புத் திட்டங்களுக்கும், கேரளாவிலிருந்து மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளின் உபரி நீர் கடலில் கலந்து வீணாவதைத் தடுத்து தமிழ்நாடு பயன்பெறும் வகையில் திட்டங்களை உருவாக்கவும், தமிழ்நாட்டின் சென்னை, தூத்துக்குடி, குளச்சல், கடலூர், நாகப்பட்டினம், வாலிநோக்கம் மற்றும் தொண்டி, எண்ணுhர் துறைமுகங்கள் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தவும், நிதி ஆணையம் சிறப்புத் தொகுப்பாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இரயில்பாதைகளை முற்றிலும் அகலப் பாதையாக மாற்றவும், மின்சார இரயில் திட்டங்களை விரைவுபடுத்தவும் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். சென்னை மெட்ரோ இரயில் திட்டம், பறக்கும் இரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
தென்னக எரிவாயு தொகுப்புத் திட்டத்தைச் செயல்படுத்த நிதி ஆணையம் ஆவன செய்ய வேண்டும்.
புதுச்சேரி, சென்னை வழியாக பக்கிங்காம் கால்வாய் முதல் ஆந்திர மாநிலத்தின் தென் பகுதி வரையிலும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துத் திட்டத்தை ஆய்வு செய்து நிறைவேற்ற நிதி ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டின் சிறந்த பொதுத்துறை நிறுவனங்களான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், சேலம் இரும்பு ஆலை, ஊட்டி கலர் ஃபிலிம் தொழிற்சாலை போன்றவற்றின் வளர்ச்சிக்காகவும், விரிவாக்கப் பணிகளுக்காகவும் நிதி ஒதுக்கீட்டைத் தாராளமாக வழங்கிட நிதி ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும்.
(மு. செந்திலதிபன்)
உறுப்பினர்,
அரசியல் ஆய்வு மையம்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

