தமிழர்களுக்கு எதிராக, இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்கு அளித்தது மன்னிக்க முடியாத மாபெரும் துரோகம்! கள் இறக்க அனுமதி, காவிரி, பவானி ஆறுகளைத் தூய்மைப்படுத்த வேண்டுகோள்!நாடாளுமன்றத்தில் .

Issues: Economy, Human Rights, Politics, Srilanka

Region: Tamil Nadu

Category: Headlines, Speeches

Date: 
Tue, 16/06/2009

தமிழர்களுக்கு எதிராக, இலங்கைக்கு ஆதரவாக
இந்தியா வாக்கு அளித்தது மன்னிக்க முடியாத மாபெரும் துரோகம்!

குடியரசுத் தலைவர் உரையின் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் (08.06.2009)
அ.கணேசமூர்த்தி கண்டனம்!

கள் இறக்க அனுமதி, காவிரி, பவானி ஆறுகளைத் தூய்மைப்படுத்த வேண்டுகோள்!

உலகத் தமிழர்களின் தலைவராகிய திரு வைகோ அவர்களின் தலைமையில் இயங்குகின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள், மே 4 ஆம் நாள் அன்று, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு இந்த வாய்ப்பு அளித்தமைக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உள்நாட்டுப் பாதுகாப்பு, சமய நல்லிணக்கத்தைப் பேணுவதற்குத் தேவையான, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக, மேதகு குடியரசுத் தலைவர் அவர்களின் உரையில் தெரிவிக்கப்பட்டு உள்ள கருத்துகளை நான் வரவேற்கிறேன். பொருளாதார, சமுதாய மேம்பாட்டுக்காகவும், கல்வி, வேலைவாய்ப்பு, உடல்நலம், கிராமப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மனித வள ஆற்றலை மேம்படுத்துதல், உணவு போன்றவற்றுக்கும் உரிய கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிலம் அற்ற கூலித் தொழிலாளிகள், நெசவாளர்கள், மீனவர்கள், கள் இறக்குவோர், தோல் பதனிடுவோர், தோட்டத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், பீடி சுற்றுவோர் ஆகியோருக்கான நலத்திட்டங்கள் விரிவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளதை வரவேற்கிறேன்.

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், தற்போது வழங்கப்பட்டு வருகின்ற 80 ரூபாயை, 100 ஆக உயர்த்தித் தர வேண்டும்.

கள் இறக்க அனுமதி

மேதகு குடியரசுத் தலைவர் அவர்களின் உரையில், பக்கம் 9 இல் ஐந்தாம் பாராவில், கள் இறக்கும் தொழிலுக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்று குறிப்பிட்டு உள்ளார். ஆனால், தமிழ்நாட்டு அரசாங்கம், கள் இறக்கும் விவசாயிகளைக் கைது செய்து, கொடுமைப்படுத்தி வருகிறது. அவர்கள், தங்களுடைய பொருளாதார முன்னேற்றத்துக்கு, கள் இறக்கும் தொழிலையை நம்பி உள்ளனர். எனவே, தமிழகத்தில் கள் இறக்குவதைத் தடை செய்யக்கூடாது.

கிராமப்புறங்களில், வீட்டு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளதை வரவேற்கிறேன்.

காவிரி, பவானி தூய்மை

கங்கை நதியைத் துhய்மைப்படுத்துவதற்கான ஒரு புதிய செயல்திட்டத்தை வகுப்பதற்காக, தேசிய கங்கை நதி ஆணையம் அமைக்கப்பட்டதை நாம் அறிவோம். அதேபோல, எனது ஈரோடு தொகுதியில் பாய்கின்ற காவிரி மற்றும் பவானி ஆகிய இரண்டு ஆறுகளில் கலக்கின்ற மாசுகள், மற்றும் சாயப்பட்டறைகளின் கழிவு நீரைத் தடுப்பதற்கு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவே, கங்கை நதி ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ், காவிரி, பவானி ஆகிய இரண்டு நதிகளையும் இணைத்து, அவற்றைத் துhய்மைப்படுத்துவதற்குத் தேவையான நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

ஏனெனில், எனது தொகுதி மக்கள், குடிநீருக்கும், விவசாயத்துக்கும், இந்த இரண்டு ஆறுகளைத்தான் முழுமையாகச் சார்ந்து உள்ளனர். சாயக் கழிவுகளை முறைப்படி வேறுபகுதிகளுக்குக் கொண்டு சென்று, அந்தத் தொழிலைப் பாதுகாக்கவும், மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளை நிறைவு செய்யவும், உடனடியாக ஒரு செயல்திட்டத்தை நிறைவேற்றுவது மிகவும் இன்றியமையாதது ஆகும்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை

இலங்கையில், தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்படுவதைத் தடுக்க, நிரந்தரமான அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும். முழுமையான அதிகாரங்களைக் கொண்ட, தமிழர்களால் ஆளப்படுகின்ற, தனித் தமிழ் மாநிலம் என்ற அமைப்பை ஏற்படுத்தினால்தான், நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கின்ற, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியும்.

அண்மைக்காலத்தில், இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தோடு கைகோர்த்துக்கொண்டு தமிழர்களைப் படுகொலை செய்து உள்ளது. இலங்கை இராணுவம் நடத்திய தாக்குதலில், 20,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள்,படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். பசியாலும், பட்டினியாலும், மருந்துகள் இல்லாததாலும் பல்லாயிரக்கணக்கானோர் இறந்து விட்டனர். இலட்சக்கணக்கானோர், வீடு, வாசல்களை இழந்து வெட்டவெளியில் நிற்கின்றனர்.

இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்கின்ற தங்களது இராணுவ நடவடிக்கைகளுக்கு, இந்திய அரசு உறுதுணையாக இருக்கின்றது என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்து உள்ள கருத்தை, இந்திய அரசு மறுக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையத்தில், இலங்கை அரசுக்கு எதிராக, மேற்கு நாடுகளால் கொண்டு வரப்பட்ட மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு குறித்த தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்கு அளித்து இருப்பது, மன்னிக்க முடியாத மாபெரும் துரோகம்.

இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட தவறான நடடிவக்கை இது. உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழர்களை இந்தியா ஏமாற்றி விட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இந்திய அரசை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இலங்கையில் உள்ள தமிழர்களைப் பாதுகாப்பதற்கு மாறாக, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு, இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுதங்களையும், இராணுவத் தளவாடங்களையும் அளித்ததுடன், இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சியும் அளித்து இருக்கிறது.

தமிழர்களுக்கு எதிராக வாக்கு அளித்த இந்திய அரசை, உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள்.

மின்னணு வாக்குப்பதிவு கூடாது

தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவுக் கருவிகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், இக்கருவிகளில், தேர்தலுக்கு முன்பாகவும், தேர்தல் முடிந்தபிறகும்கூட தவறுகள் செய்ய முடியும் என்பதை நிபுணர்கள் உறுதி செய்து இருக்கிறார்கள். எனவே, மக்கள் தங்களுடைய வாக்கு முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்று கருதுகிறார்கள்.
ஆகவே, இனி வருகின்ற தேர்தல்களில், மின்னணு வாக்குப்பதிவுக் கருவிகளைப் பயன்படுத்தக்கூடாது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், குடியரசுத் தலைவரின் உரையை வரவேற்கின்ற அதேவேளையில், உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழர்களின் நலன்களை, இந்திய அரசு பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு குடியரசுத் தலைவர் உரையின் மீது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது
அ. கணேசமூர்த்தி அவர்கள் உரையாற்றினார்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

செய்திகள் ஒளிபரப்பாகும் நேரம்:
காலை 8 மணி; பிற்பகல் 1.30 மணி; முன்னிரவு 8 மணி; இரவு 10 மணி

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)