இனத்தைக் காக்க இளைஞர்களைத் திரட்டுவேன் . 31.5.2009
Issues: Human Rights, Politics, Srilanka
Region: Chennai - South, Tamil Nadu
Category: Headlines, Speeches
வைகோ உரை
தென்சென்னை மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம்
31.5.2009
நான் சற்றும் எதிர்பாராதவகையில் திகைக்க வைக்கின்ற சில காரியங்களைச் செய்வது மாவட்டச் செயலாளர் மணிமாறன் அவர்களுக்குக் கைவந்த கலை. இவ்வளவு சிறப்பாக இந்தக் கூட்டம் அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு 48 மணிநேர இடைவெளியில், செயல்வீரர்கள் கூட்டத்தை உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொன்னேன். அதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல், கூட்டத்தை உடனடியாக ஏற்பாடு செய்தார்கள். இன்றுதான் இந்த மண்டபம் கூட்டத்தை நடத்துவதற்கு வாய்ப்பாகக் கிடைத்தது.
இன்று நண்பகலில், கழகத்தின் விவசாய அணிச்செயலாளர் மதிப்புக்குரிய சூலூர் பொன்னுசாமி இல்ல மணவிழா, கோவையில் வாழ்த்து அரங்கம், பிற்பகல் 3 மணிக்குத்தான் நடந்தேறியது.
விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்தவுடன் தொலைபேசியில் மாவட்டச் செயலாளரை அழைத்து, "விமானநிலையத்தில் இருந்து நேராக ஐந்தே முக்கால் மணிக்கெல்லாம் மண்டபத்துக்கு வந்து விடுகிறேன்" என்றேன். "நீங்கள் எங்காவது ஓய்வு எடுத்துக்கொண்டு, சற்றுத் தாமதாக வாருங்கள்" என்றார். இல்லை விமானநிலையத்தை விட்டு வெளியே சாலையில் வந்து கொண்டு இருக்கிறேன் என்றேன். ஓரிடத்தில் கொஞ்சம் மெதுவாக காரைக்கூட பத்துப்பதினைந்து நிமிடம் நிறுத்திவிட்டேன்.
இதற்கு இடையில் நமது பொருளாளர் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவதற்காக கத்திப்பாரா சந்திப்புக்கு அருகில் காத்து இருந்தார். நான் இங்கு வந்து பார்த்தால் ஆறேகால் மணிக்கெல்லாம் கூட்டம் திரண்டு வந்து இருப்பதைப் பார்த்தபோது, என் மனதில் ஏற்பட்டு இருக்கிற கவலைகள் ஓரளவு நீங்கின. ஒருவேளை நான் வெற்றி பெற்றிருந்தால் அவர் குதிரைப்படையோடு விமான நிலையத்துக்கு வந்து இருப்பேன் என்று சொன்னார். ஆனால், வெற்றி பெறாததால்தான் ஆறு மணிக்கே நீங்கள் வந்து இருக்கிறீர்கள்.
எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. வழக்கத்தைவிட நிறைய இளைஞர்களைப் பார்க்கிறேன். நான் ஒவ்வொரு செயல்வீரர்கள் கூட்டத்துக்கும் வருகிறபோது வந்து இருக்கிற தோழர்களைத்தான் நான் கவனிப்பேன். இதற்குமுன்பு நடைபெற்ற மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டங்களைவிட இதில் ஒரு வித்தியாசம். முன்பு பார்க்காத வாலிபர்களை, இளைஞர்களை அதிக அளவு இன்றைக்குப் பார்க்கிறேன். அது எனக்கு மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது.
அது மட்டும் அல்ல. நானும் பொருளாளரும் படிவங்களை விநியோகிப்பது குறித்து விவாதித்துக் கொண்டு இருக்கிறோம். மணிமாறன் அடிக்கடி இன்ப அதிர்ச்சி தருவார். திடீரென்று தங்க வாளைத் தூக்கிக் கொண்டு வருவார். எதிர்பாராத வகையில் இன்று நிதி தருகிறோம் என்று பெட்டியைத் தூக்கித் தருவார். இன்றைக்குப் படிவங்களைப் பெற்றுச் செல்லுங்கள் என்று, அதற்கு ஒரு கட்டணத்தை அறிவித்து, கழகத்துக்கு இருக்கிற நிதி நெருக்கடியை மனதில் கருதி அதிலும் ஒரு வெற்றியைப்பெற்று ஆர்வத்தோடு படிவங்களை வாங்கி இருப்பதைப் பார்த்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
இரண்டு தினங்களுக்கு முன்னால் இயக்குநர் இமயம் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் புரசைவாக்கம் டாணா தெருவில் பிரமாண்டமான பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. உங்களில் பலர் அந்தக் கூட்டத்துக்கு வந்து இருந்தீர்கள். அந்தக் கூட்டம் இரவு 11.15 வரை நடைபெற்றது. வழக்கமாக ஒலிபெருக்கி யாளர்கள்மீது வழக்குப் போடுவார்கள். பத்து மணிக்கு மேலே கூட்டம் நடைபெற்றால், ஒலிபெருக்கியாளர்கள்மீது வழக்குப் போடுவதும், அவர்கள் அபராதம் கட்டுவதும் வழக்கம்.
பேசியவர்கள் மீது வழக்குப் போட்டால், என் மீதுதான் பதிவு செய்து இருக்க வேண்டும். ஆனால், இடிஅமீனைவிட கேடு கெட்ட ஆட்சி நடத்துகின்ற கருணாநிதி அரசு, அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் மீது வழக்குப் போட்டு இருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் இரவு 11 மணிவரை உணர்ச்சிப் பிழம்பாக தோழர்கள் இருந்தார்கள்.
நம்முடைய பொருளாளர் அவர்கள் சொன்னார்கள், மாவட்டச் செயலாளர்கள் சொன்னார்கள் - நான் தேர்தல் களத்தில் கவனம் செலுத்தவில்லை, ஈழத்துயரத்தில் என் மனம் சஞ்சலப்பட்டு கொண்டு இருந்தேன் என்றனர்.
சஞ்சலம் ஒருபக்கத்தில் இருந்தாலும், என் கடமைகளை நான் செய்துகொண்டுதான் இருந்தேன். நம்முடைய அணி எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை என்று எழுதுகிறார்கள். அப்படி எழுதுகிற ஏடுகளுக்கு, எப்படி அந்த வெற்றியை கருணாநிதிக் கூட்டம் பெற்றது என்று எழுதுகின்ற நியாய உணர்வு ஏன் வரவில்லை? பத்திரிகை தர்மம் எங்கே இருக்கிறது? வேலி எங்கே இருக்கிறது? வேலியே பயிரை மேய்கிறது. ஊழலில் கொள்ளையடித்தப் பணத்தை வீடுவீடாகக் கொடுத்து அவர்கள் பெற்ற வெற்றியை வைத்துக்கொண்டு ஜனநாயகத்தை அழிப்பார்கள் என்று எழுதுவதற்கு உங்களுக்குத் துணிச்சல் கிடையாது.
என்ன பெரிய வெற்றி பெற்று விட்டார்கள்? அண்ணா தி.மு.க. அணியைவிட தி.மு.க.. அணி வாங்கி இருக்கிற ஓட்டு பதினைந்து இலட்சம்தான் அதிகம்.
ஒரு தொகுதிக்கு 30 கோடி நாற்பது கோடி பணத்தைச் செலவழித்து கூடுதலாக பதினைந்து லட்சம் வாக்குகளைத்தான் அவர்கள் பெறமுடிந்தது என்றால், அவர்களை மக்கள் நிராகரிக்கிறார்கள் என்றுதான் பொருள்.
திராவிட முன்னேற்றக்கழக - காங்கிரஸ் அணியை எதிர்த்து அ.தி.மு.க. அணிக்கு ஒரு கோடியே பதிமூன்று இலட்சம் ஓட்டுகள் விழுந்து இருக்கின்றன.
இந்தத் தென்சென்னை தொகுதியில், நமது அருமைச் சகோதரர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று இருக்கிறார். நமது அணியினர் கடுமையாக உழைத்து இருக்கிறார்கள். மத்திய சென்னையில் தலைதப்பியது தம்பிரான் புண்ணியத்தில் என்று கொஞ்சம் ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்று இருக்கிறது.
தென்சென்னை தொகுதியில் நான் பிரச்சாரம் செய்தபோது, "நாங்கள் எல்லாம் விருதுநகர் தொகுதிக்கு ஒரு பட்டாளமே வரப் போகிறோம்" என்றார்கள். அது கூட்டணி தர்மம் அல்ல என்பதால், "நீங்கள் வரக்கூடாது. அங்கே உள்ள அ..தி.மு.க. தோழர்கள் எனக்கு வேலை செய்கிறார்கள்.. நீங்கள் அண்ணா தி.மு.க. வுக்குப் பணியாற்றுங்கள்" என்று சொன்னேன்.
நான் பல தொகுதிகளுக்கும் பிரச்சாரங்களுக்குச் சென்றேன். என் தொகுதிக்குள்ளேயே நான் என்னை முடக்கிக் கொள்ளவில்லை.
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் போஸ் அவர்களும், மாவட்டச் செயலாளர் ஜெயராமன் அவர்களும் மிகக் கடுமையாக உழைத்தார்கள். பத்தாயிரம் ஓட்டுகள் அதிகமாகக் கிடைத்தன. திருமங்கலம் தொகுதியின் இடைத்தேர்தலில் 40,000 ஓட்டுகளை ஆளுங்கட்சி அதிகமாகப் பெற்றது. அதே அளவுக்கு இப்பொழுது பணம் செலவழித்தும் கூட, இப்பொழுது 12500 ஓட்டுகளைத்தான் அவர்கள் அதிகமாகப் பெற்று இருக்கிறார்கள். சிவகாசி, சாத்தூர் தொகுதிகளிலும், நமக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்து இருக்கின்றன. அருப்புக்கோட்டை, விருதுநகரில் அவர்களுக்குக் கூடுதலாக வாக்குகள் கிடைத்து இருக்கின்றன.
ஆகவே, இந்தக் களத்தில் பணி ஆற்றிய உங்களைப் பாராட்டவே இங்கே வந்து இருக்கிறேன். நமது தமிழ்மறவன் அவர்கள், கழகத்தின் அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக நல்ல கருத்துகள் சிலவற்றைச் சொன்னார். நீங்கள் புதிய உறுப்பினர்களைச் சேருங்கள். கட்சி அமைப்பை வலுப்படுத்த வேண்டும். ஆனால், எப்படியாவது அதிக உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டுமே என்று, இல்லாத உறுப்பினர்களை இருப்பதாகச் சேர்த்துவிடாதீர்கள். நீங்கள் செய்யமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். செய்ய முடியாது.
தி.மு.க.வில் எப்படி உறுப்பினர்களைச் சேர்த்து இருக்கிறார்கள் தெரியுமா? ஒரு உதாரணத்துக்காகச் சொல்கிறேன். நமது கழக குமார் வீட்டில், அவரது உறவினர் வீட்டில், எல்லோரது பெயரிலும் தி.மு.க. உறுப்பினர் கார்டு எழுதி அவர்களே கையெழுத்துப்போட்டு அவர்களே பதிவு செய்து இருக்கிறார் கள். அந்த ரிக்கார்டு எல்லாம் என் கைக்கு வந்து விட்டது. இப்படி வாக்காளர் பட்டியலை வைத்தே உறுப்பினர்களைச் சேர்த்து விட்டார்கள். எங்கேயாவது ஓர் இடத்தில் உட்கார்ந்து ஆயிரம் கையெழுத்துகளை ஒருவரே போடலாம்.
நம்முடைய இயக்கத்தில் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக்கூடாது. இந்தத்தடவை மாவட்டச் செயலாளரின் பணிகளைச் சுலபமாக்குவதற்கு, பகுதிச் செயலாளர்களின் பணிகளைச் சுலபமாக்கு வதற்கு, நீங்கள் உறுப்பினர் படிவங்களை நிறைவு செய்து மாவட்டச் செயலாளர் விரும்பினால் இதேபோல நானும் பொருளாளருமே வந்து உங்கள் படிவங்களை என்னிடமே கொடுக்க வேண்டும் என்றாலும் அதற்கும் நான் தயாராகத்தான் இருக்கிறேன். பகுதிச் செயலாளர்கள் எல்லா படிவங்களையும் திரட்டி அவர்கள் கொண்டுவந்து கொடுத்தாலும் ரொம்ப மகிழ்ச்சி.
ஆனால், எல்லாப் படிவங்களும் சரிபார்க்கப்படும். எந்தப் படிவங்களிலாவது போலி உறுப்பினர் சேர்க்கப்பட்டு இருந்தால், நான் ஒன்றும் செய்யமாட்டேன். அவர்கள் அந்த வட்டத்தில் போட்டியிட அனுமதி கிடையாது. பார்த்தவுடன் நான் கண்டுபிடித்து விடுவேன். அந்தப் படிவம் யார் தயாரித்துக் கொடுத்தார்களோ, யார் கொண்டுவந்து கொடுத்தார்களோ, அவர்கள் அந்த வட்டத்தில் எந்தப் பொறுப்புக்கும் போட்டியிட அனுமதி கிடையாது. எங்கள் வட்டத்தில் எனக்குப் போட்டியே இல்லை, நான்தான் செயலாளர் என்றாலும் அவர் செயலாளர் ஆவதற்கும் தலைமைக் கழகம் அனுமதிக்காது.
ஆகையால், உண்மையான உறுப்பினர்களைச் சேருங்கள். போட்டி வந்து நாமும் 400 உறுப்பினர் களைச் சேர்ப்போம் என்று போலியாக நீங்கள் தயாரித்தால், எளிதில் கண்டு பிடித்து விடுவோம். கண்டுபிடித்து விட்டால் அவர் அந்த வட்டத்தில் எந்த பொறுப்புக்கும் வர முடியாது. இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்று சொன்னால், தலைநகர் சென்னையில் கழகத்தை வலுப்படுத்தி விட்டாலேபோதும்; அது தடாகத்தில் எப்படி அலைபரவுகிறதோ அதைப்போல தமிழகம் பூராவிலும் இந்த இயக்கத்தைத் தூக்கி நிறுத்தும். தலைநகர் சரியாக இருந்தால்போதும். அந்த நம்பிக்கை எனக்கு வந்து இருக்கிறது.
தலைநகரத்தில் கழகம் வலுவாகக் கால் ஊன்றி வருகிறது. ஈழத்தமிழர்களின் துயரத்தில் இந்த மாநகரத்து மக்களின் உள்ளம் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இங்கே வீரத்தியாகி முத்துக் குமாரின் சடலத்தை எடுத்துச்சென்றபோது இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள்.
நான் தேர்தலில் தோற்றேன் என்றபோதுகூட என் மனம் அவ்வளவு வருத்தப்படவில்லை. ஆனால், இன்றைக்குக் காலை பத்திரிகைகளைப் படித்துவிட்டு இந்த மண்டபத்துக்கு வருகிறவரை என் மனதில் ஏற்பட்ட வேதனைக்கு அளவே கிடையாது. தாங்கமுடியாத துயரம் இதயத்தையே கசக்கிப் பிழிகிறமாதிரி இருந்தது.
என்ன செய்தி? ஈழத்தில் 20,000 பேர் ஒரேநேரத்தில் கொல்லப்பட்ட அந்தக் காட்சி டைம்ஸ் பத்திரிகையில் புகைப்படமாக வந்து இருக்கிறது. மண்ணில் பிணங்களைச் சரியாகக்கூட புதைக்கவில்லை. 20,000 பேர் புதைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். 1,45,000 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இது கடந்த மூன்று நான்கு மாதங்களில் நடந்த துயரம்.
ஆனால், இதைப்பற்றி உலகமே கவலைப்படவில்லை என்று நாம் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறபோது ஒரு செய்தியைப் போடுகிறார்கள். பிரபாகரன் அவர்களின் தந்தை வேலுப்பிள்ளை அவர்களும், தாயார் பார்வதி அம்மையாரும் இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்கள். அங்கு விசாரணை நடக்கிறது.
மற்றவர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக இங்கேகொண்டு வந்தோம் என்று இராணுவத் துறையில் ஒருவன் சொன்னான் என்று போட்டுவிட்டு அடுத்துச் சொல்கிறார்கள்.
மற்றவர்கள் எல்லாம் இந்தத் தாக்குதலில் மனிதக் கேடயங்களாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட தாகவும் பலருக்கு உணவு இல்லாமல், மருந்து இல்லாமல் எங்களை எல்லாம் இப்படி கஷ்டப்பட வைத்துவிட்டு தன் பெற்றோரை மாத்திரம் பத்திரமான முகாமுக்கு அனுப்பிவிட்டார் என்றும், அவர்கள் எல்லாம் பிரபாகரன்மீதும் அவர் பெற்றோர்மீதும் மிகுந்த கோபத்தில் திட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் ஒரு செய்தியை இன்றைக்கு மூன்று நான்கு பத்திரிகைகள் வெளியிட்டு இருக்கின்றன.
அளவுகடந்த வேதனை ஏன் தெரியுமா? அடப்பாவிகளே, தாய் தகப்பனை அந்தக் காட்டுக்கு உள்ளே முல்லைத் தீவு பகுதிக்குள் வைத்து இருக்கிறார். எது பாதுகாப்பான முகாம்? எது பாதுகாப்பு இல்லாத முகாம்? எல்லா இடங்களிலும்தான் குண்டு போட்டுக் கொன்றான். பாதுகாப்பு வளையங் களுக்குள் சென்றவர்களை எல்லாம் 2500 பேரை ஒரேநாளில் கொன்றானே? பாதுகாப்பு வளையத்துக்கு உள்ளே சென்ற பெண்களை கற்பழித்துக் கொளுத்தினானே, ஏன் இப்படி அவர்களை இழிவுபடுத்துகிறீர்கள்?
பிரபாகரனின் தாயும் தகப்பனும் போர்முனையில் இருந்திருக்கிறார்கள். மதிவதனியும் பார்ப்பதற்கு அழகுச்சிலையாக இருக்கும் அவரது மகள் துவாரகாவும், சார்லஸ் ஆண்டனியும், பாலச்சந்திரனும் அந்தக் களத்திலேயே இருந்து இருக்கிறார்கள். இந்தச் செய்திகளைப் போடுகிறீர்களே அவர்களைப் பாதுகாப்பாக வெளிநாட்டில் கொண்டு போய் வைத்து இருந்தாரா? எத்தனையோ ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று இருக்க முடியாதா? அந்தத் தாய் தகப்பன் இருக்க முடியாதா? எல்லா மக்களோடும் சேர்ந்து அந்தக் காட்டுக்குள் அவர்களும் அவதிப்பட வேண்டுமா? குண்டுவீச்சு நடந்து கொண்டு இருக்கிற இடத்தில் இருக்க வேண்டுமா? இருதயமே உங்களுக்கு இல்லையா?
அதுவும் நடுநிலையோடு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செய்திபோடுவதாக சமீப காலத்துக்கு முன்புவரை நான் நம்பிக்கொண்டு இருந்த ஒரு தினப்பத்திரிகையும் இப்படிப் போட்டு இருக்கிறது. நான் கருணாநிதியின் பாணியில் முரசொலி பாணியில் எழுத பேச விரும்பவில்லை. அவர்கள், உங்கள் குடும்பத்தை வீட்டில் உள்ள பெண்கள் முதற்கொண்டு எழுதுவார்கள். உங்களையும், உங்களது பூர்வோத்திரத்தை எழுதுவார்கள். செருப்பால் அடித்தமாதிரி எழுதிக்கொண்டே இருப்பார்கள். செருப்பால் அடிக்க வேண்டும் என்று எழுதுவார்கள். நீங்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படமாட்டீர்கள். அதுமாதிரி ஆட்கள்தான் உங்களுக்கு லாயக்கு. என்போன்ற ஆட்கள் எல்லாம் லாயக்கு இல்லை.
உங்களுக்கு இருதயமே கிடையாது. பிரபாகரனின் தந்தை நல்ல அரசு அதிகாரியாக இருந்தார். அதுவும் நிலங்களைக் கணக்கிட்டுத் தரக்கூடிய இடத்தில் இருந்தார். காணி நிலத்தை அளந்து கொடுப்பதில்கூட தவறுசெய்யாத உத்தமன் அல்லவா அவர்! அவரும் அவரது துணைவியாரும் முசிறியில் இருந்தார்கள்.
அடப்பாவி, பிரபாகரனின் தந்தை நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறார். பக்கத்தில் அவரது துணைவியார் பார்வதி சாதாரணமாக நின்றுகொண்டு இருக்கிறார் என்று போடுகிறீர்களே, நீ வாயால் சொல்லி இருந்தால் உன் நாக்கு அழுகிப்போய்விடும். எழுதியவர் கை அழுகிப்போய்விடும். நான் சொல்கிறேன். பிரபாகரனின் தாயாருக்கு ஒரு கை ஒரு கால் செயல்படவில்லை. பக்கவாதத்தால் தாக்கப்பட்டு அவர்களால் நடக்க முடியாது. முசிறியில் அவர்கள் இருந்தபோது அவர்களைப் பலமுறை நானும் அடைக்கலமும் சென்று பார்த்து இருக்கிறோம். எவ்வளவோ கஷ்டம் அவர்களுக்கு. ஆனால், யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டார்கள்.
நாங்கள் ஒன்றும் பட்டம், பதவிக்காகக் கட்சி தொடங்கவில்லை. ஏதாவது மந்திரியாகி விடலாம் என்ற கற்பனையில் எல்லாம் நான் இல்லை. ஆனால், அண்ணாவின் கொள்கையைக் காக்கின்ற, லட்சியத்தைக் காக்கின்ற போர்ப் படையாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும்.
அண்ணாவின் கல்லறைக்குச் சென்று மாலை வைத்தால் போதாது. அண்ணாவின் நினைவுகளுக்காக நாங்கள் வாழ்கிறோம். எங்கள் ஊனில், உதிரத்தில் எந்த உணர்ச்சியை அண்ணா ஏற்படுத்தினாரோ அந்த உணர்வுக்காக நாங்கள் வாழ்கிறோம்.
தனது தந்தையும் தாயும் இங்கே பொருளாதாரக் கஷ்டப்படுகிறார்கள் என்று பிரபாகரன் சிறிதளவு உதவிகூட செய்ய மாட்டார். அவரது திருமணத்துக்குத் தாலிவாங்கக்கூட கடன் வாங்கினார். இயக்கத்துப் பணத்தை ஒரு கடுகளவுகூடத் தன் சொந்த உபயோகத்துக்கு எடுத்துக்கொள்ள மாட்டார். அவரைக் கடுமையாக விமர்சித்த டெலோ இயக்கத்துக்காரர்கள் என்னிடம் சொன்னார்கள்.
1980களில் டெலோவுக்கும் அவர்களுக்கும் கடுமையான சண்டை. அப்பொழுது என்னிடம் டெலோ இயக்கத்துக்காரர்கள் சொன்னார்கள். நாணயத்துக்கும் - நேர்மைக்கும் பிரபாகரனைப் போன்ற ஒருவரை இந்த உலகில் பார்க்க முடியாது என்றனர். நீர்வேலி வங்கிச் சம்பவம். எல்லோரும் சேர்ந்து சென்று நடத்திய சம்பவம். அதன்பிறகு அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வந்த போது, பிரபாகரன் இயக்கப் பணம் மொத்தத்தையும் ஒப்படைத்துவிட்டு, கையில் காலணா இல்லாமல் சென்றார் என்று அவரை எதிர்த்து கடுமையாக விமர்சித்துக் கொண்டு இருந்த இயக்கத் தலைவர்கள் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்.
நான் இதற்குமுன்பு ஒரு கூட்டத்தில் சொன்னேன். கரும்புலிகள் அமைப்பில் இருக்கிறவர்கள் சாவது என்று முடிவெடுத்துவிட்டால் அஞ்சமாட்டார்கள்... ஒரு தாக்குதலுக்குச் சென்றால் உயிரோடு திரும்பிவர முடியாது. அதோடு உடல் சிதறிப் போகும். எதிரிகளின் பாசறையைத் தகர்க்கிறபோது உடல் துண்டு துண்டாகப் போகும்.தன் உடம்பில் ஒரு பகுதிகூட இருக்காது என்று தெரிந்துதான் வெடி குண்டுகள் வைக்கப்பட்டு இருந்த லாரியோடு சென்று நெல்லியடி இராணுவ முகாமுக்குள் சென்றான் கரும்புலி மில்லர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தார்கள். மில்லர் தனியாளாக வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றான்.
இராணுவ முகாமுக்குள் வெடிகுண்டுகள் வைக்கப்பட்ட லாரி நேரடியாகச் சென்று மோதியது. அந்த முகாம் வெடித்துத் தூள்தூளாயிற்று. ஒருவர்கூடத் தப்பவில்லை. அதற்குப்பிறகுதான் பிரபாகரன் கொழும்புவரை வந்து அடிப்பார் என்று பயந்துகொண்டு, ஜெயவர்த்தனா இங்கு வந்தான். வஞ்சக வலையில் இந்திய அரசை சிக்க வைத்தான்.
அப்படிக் கரும்புலி அமைப்பில் இருப்பவர்கள் ஒரு தாக்குதலுக்குச் சென்றார்கள். உயிரோடுத் திரும்பப் போவதில்லை இந்தத் தாக்குதலில். உடம்பு தூள்தூளாகப்போகிறது. ஒரு கரும்புலிக்கு நல்ல பசி. உடன் வந்த பையனிடம் தம்பி பக்கத்தில் ஏதாவது கிராமம் இருக்கிறதா உணவு கிடைக்குமா? என்றார். காலையில் இருந்து சாப்பிடவில்லை. இரவாகிவிட்டது. பக்கத்தில் ஒரு கிராமம் இருக்கிறது என்று அவன் அழைத்துக் கொண்டு சென்றான்.
அந்தக் கிராமத்துக்குச் சென்று ஒரு வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள். கதவைத் திறந்து வந்த அந்தத் தாய் மகனைப் பார்த்த உடன், மகனே என்று கட்டித்தழுவி அழுகிறாள். இந்தப் பையன் தன் வீட்டுக்கே அழைத்துக்கொண்டு போகிறான். அவன் வீட்டைவிட்டு வந்து ஆறு ஆண்டுகள் ஆயிற்று. அவன் தாயைப் பார்க்கவில்லை. பிள்ளையைத் திடீரென்று பார்த்த உடன் கட்டித்தழுவி அழுகிறாள்.
அதன்பிறகு, "அம்மா, நாங்கள் பசியோடு வந்து இருக்கிறோம்; ஏதாவது சாப்பாடு இருந்தால் கொடு" என்றவுடன் சாப்பாடு தயார் செய்கிறேன் என்று சொல்லி, அவர்கள் இருவருக்கும் உணவு ஏற்பாடு செய்து தருகிறார்கள். தன்னுடைய தாயைத்தான் பார்க்க அழைத்துக் கொண்டு போகிறேன் என்று முதலில் சொல்லவில்லை. சாப்பிட்டு முடித்துப் புறப்படுகிறபோது குடும்பக் கஷ்டத்தைப் பார்க்கிறான். வீட்டில் பொருளாதாரக் கஷ்டம்.
இலங்கைப் பணம் 100 ரூபாயை எடுத்துத் தன் தாயிடம் கொடுக்கிறான். வீட்டில் மிகவும் கஷ்டம். தங்கைக்கு உடம்பு சரியில்லை. பணம் வேண்டும். இந்த ரூபாயை எடுக்கிறபோது இன்னொரு ரூபாய்த் தாள் அதில் இருக்கிறது. அவனது தாய் மெல்லக் கேட்கிறாள் "என்னப்பா பணம் அதிகமாக வைத்து இருக்கிறாயா? தங்கைக்கு உடம்பு சரியில்லை.
ரொம்பக் கஷ்டம். இன்னொரு நூறு ரூபாய் இருந்தால் கொடு" என்று கேட்கிறாள். அவன் சொல்கிறான்: "அம்மா நான் கொடுத்த பணம் எனக்கு ஊதியமாகப் பெற்று நான் வைத்து இருந்த பணம். இது இயக்கப்பணம். அதை நான் உனக்குக் கொடுக்கக்கூடாது" என்கிறான். அவர்கள் அங்கிருந்து சென்றார்கள். அதோடு அவர்கள் முடிந்து போனார்கள்.
இப்படித் தலைவனில் இருந்து கீழேவரைக்கும் ஒழுக்கத்தை, நேர்மையைக் கடைபிடிக்கிறவர்கள். பிரபாகரன் தன் தாய்தகப்பனை இன்னொரு முகாமுக்கு அனுப்பிவைத்து விட்டார் என்று அங்குள்ள மக்கள் திட்டுகிறார்கள் என்று அபாண்டமாகப் பொய்யை எழுதுகிறார்கள்.
எத்தனை இலட்சம் மக்கள் வேண்டுமானாலும் அவருக்காக உயிரைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். எத்தனையோ இலட்சம் இளைஞர்கள் பிரபாகரன் என்ற பெயரை உச்சரித்தால் போதும், உயிரைக் கொடுக்க இன்றைக்கும் தயாராக இருக்கிறார்கள்.
அவர்களைப் போய் இழிவுபடுத்துகிறாயே? ஒரு கையும் காலும் இயங்க முடியாத பார்வதி அம்மையாரையும் வேலுப்பிள்ளையையும் பத்திரமாக வைத்து இருந்தார் என்று இவன் எழுதுகிறான் பத்திரிகைகளில். எந்த அயோக்கியன் சொன்னான்? எந்த நரி சொன்னான்? யாரிடம் சொன்னான்? அங்கே இருந்து உன் பத்திரிகைக்கு அனுப்புகிறான்.
ராஜபக்சே போடுகிற எலும்புத் துண்டுக்கு எழுதுகிறவர்கள் கொஞ்சப்பேர் கொழும்பில் இருக்கிறார்கள். எங்களுக்கு எல்லாம் தெரியும். நான் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. என்னாலும் அண்ணன் நெடுமாறானாலும்தான் இவ்வளவுபேரும் செத்துப்போய் விட்டார்கள் என்று நேற்று முன்தினம் இந்தியன் எக்ஸ்பிரசில் சுதர்சனம் என்பவர் எழுதியிருக்கிறார். எங்களால் செத்துப்போய் விட்டார்களாம். அவர்கள் சரண் அடையத் தயாராக இருந்தார்களாம்; நாங்கள் தவறான வழியைக் காட்டி இவ்வளவு பேரையும் கொன்று போட்டோமாம்.
நடுப்பத்தியில் எழுதி இருக்கிறார் எக்சிகியூட்டிவ் எடிட்டர். தி.மு.க. வை இப்படி எழுதுவாயா நீ? நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. என்ன வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போ. உண்மை என்று ஒன்று இருக்கிறது.
நான் கேட்கிறேன், பிரபாகரன் அவரது தாயையும் தகப்பனையும் இன்னொரு முகாமுக்கு அனுப்பி விட்டார் என்று அந்த மக்கள் திட்டினார்கள் என்று எழுதினாயே உன் பத்திரிகைகளில்? அண்ணா உருவாக்கிய கட்சி, இலட்சக்கணக்கான மக்கள் இரத்தமும் கண்ணீரும், வியர்வையும் சிந்தி உருவாக்கிய இயக்கத்தை - தன்மான இயக்கத்தை - சுயமரியாதை இயக்கத்தை - திராவிட இயக்கத்தை - திராவிட முன்னேற்றக் கழகத்தை தன் குடும்பச் சொத்தாக ஆக்கி, இலட்சக்கணக் கான தொண்டர்களின் உழைப்பில் இன்றைக்கு மகுடபதியாக உலவிக் கொண்டு இருக்கிற கருணாநிதி, ஒரு மகனுக்கு மத்தியில் மந்திரி பதவி - இன்னொரு மகனுக்குத் துணைமுதல்வர் பதவி, கட்சியையே தன் குடும்பத்தின் காலடியில் நசுக்கிக் கொண்டு இருக்கிறாரே, இதைப்பற்றி ஒருவரி எழுதுவதற்கு யோக்கியதை இருக்கிறதா? ஆனால், அதே பத்திரிகையில் நீ பாராட்டி எழுதி இருக்கிறாய்.
ஒரு பக்கத்தில் பிரபாகரனைப்பற்றிக் கொச்சைப்படுத்தி எழுதிவிட்டு, மூன்றாம் பக்கத்திலும் நான்காம் பக்கத்திலும் துணை முதல்வராக வந்ததற்குப் பல்லாண்டு பாடியிருக்கிறாய். உனக்கு வருகிற விளம்பரக் காசுக்காகச் செய்கிறாயா? என்ன ஜனநாயகம்? எது ஜனநாயகம்? ஜனநாயகத் தைக் காக்கின்ற உணர்வு உண்டா? இரண்டையும் நீங்கள் பார்க்க வேண்டும். இரண்டையும் இளைஞர்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். யுத்தக் களத்தில் அவரது பிள்ளைகள் கொல்லப்பட் டதாக - அவரது துணைவியார் கொல்லப்பட்டதாக செய்தி வந்து இருக்கிறது.
இரக்கப்பட்டு அதைப்பற்றி ஒரு வரி எழுதி இருப்பாயா? ஆனால், அவர்களைக் கொச்சைப்படுத்தி எழுதிவிட்டு, முதல் பக்கத்திலும் மூன்றாம் பக்கத்திலும் கருணாநிதி மகனுக்குப் பல்லாண்டு பாடி வாழ்த்துப் போட்டு இருக்கிறாய். அதுவும் குடும்பம் இதுவும் குடும்பம்தான். தன்னலம் எதுவும் பிரபாகரனுக்குக் கிடையாது. அப்படிப்பட்ட உத்தமர் அவர்.
அந்தக் குடும்பத்தைப்பற்றி எழுதினாயே இந்தக் குடும்பத்தைப்பற்றி எழுதினாயா உன் பத்திரிகைகளில்? இன்றைக்கு கட்சி, ஆட்சி எல்லாவற்றையும் பாழாக்கி விட்டாரே என்று இதை நீ விமர்சனம் செய்கிறாயா?
காலம் இப்படியே இருக்காது. அக்கிரமத்தை அராஜகத்தைத் தகர்த்துத் தரைமட்டமாக்குவோம் நாங்கள் (பலத்தகைதட்டல்). பதவிகளைப்பற்றியோ மற்றவைப்பற்றியோ கவலைப்பட மாட்டோம். நாங்கள் என்ன புதிதாகவா தோற்கப் போகிறோம்? நாங்கள் பார்க்காத தோல்வியா?
எங்களைப் பொறுத்தமட்டில் எல்லாக் கஷ்டத்தையும் பார்த்தாகி விட்டது. எல்லாத் துன்பத்தையும் பார்த்தாகிவிட்டது. இங்கு இருக்கிற தோழர்களுள் யாருக்காவது, கவுன்சிலராக வந்துவிடலாம் - ஒரு மந்திரியிடம் சிபாரிசுக் கடிதம் கொண்டுபோய் விடலாம் - மண்ணெண்ணெய் விற்பனை அனுமதி வாங்கிவிடலாம் என்று யாராவது இருக்கிறார்களா?
இங்கு இருக்கிற இந்தத் தோழர்களும் சரி, தமிழ்நாட்டில் இருக்கிற தொண்டர்களும் சரி, 16 ஆண்டுகளாக கைக்காசைச் செலவழித்துக் கட்சியைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். (பலத்த கைதட்டல்)
நாங்கள் எங்காவது வன்முறையில் ஈடுபட்டு இருக்கிறோமா? எங்காவது கலாட்டா செய்து இருக்கிறோமா?
ஆகவே, இந்த இயக்கத்தில் இருக்கிற தோழர்களைப் பொறுத்தமட்டில் நமக்கு ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. நமது கட்சி எதுவும் தவறு செய்யவில்லை. நாம் ஒன்றும் ஊரை அடித்து உலையில் போடவில்லை. நாம் ஊழல் செய்யவில்லை. எந்த இடத்திலாவது எங்கேயாவது ம.தி.மு.க.காரனைப் பார்த்து தவறானவன் என்று சொல்லமுடியுமா? (பலத்த கைதட்டல்).
அதனால் எங்கள் தோழர்கள் தலைநிமிர்ந்து கம்பீரமாக நடக்க முடியும். பீடுநடையோடு நாங்கள் செல்ல முடியும்.
ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டுத் தீரும். அக்கிரமத்துக்கு ஒரு முடிவு வந்துதான் தீரும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மையான தொண்டர்கள், உழைத்த தொண்டர்கள், பழமையான தொண்டர்கள் உள்ளம் எல்லாம் அப்படியே நொந்து நொறுங்கிக் கிடக்கிறது.
மகனை துணை முதல்வராக்கி இருக்கிறார். ‘அது எப்பவோ ஆக்க வேண்டியது, ரொம்ப நாளைக்கு முன்னால் ஆக்கவேண்டியது’ என்கிறார்.
பெரிய மனுநீதிச் சோழன் பரம்பரை.. ராஜராஜசோழன் பரம்பரை. அப்படியே ராஜராஜனுக்குப் பின்னால் ராஜேந்திரன் - ராஜேந்திரனுக்குப் பின்னால் வீரராஜேந்திரன். மகேந்திர பல்லவனுக்குப் பின்னால் நரசிம்மவர்மன் என நீங்கள் என்ன மன்னர்களா? இளவரசரை எப்பொழுதோ மன்னராக்கி இருக்க வேண்டுமாம். கொஞ்சம் ராஜகுரு சொல்லாததால் நேரம் தப்பிவிட்டதா? என்னய்யா கட்சி?
ஊரை அடித்து உலையில்போட்டு, கொள்ளை அடித்து பதவிகளுக்காக கட்சிக்காரர்களை பைத்தியக்காரனாக்கி... ஐயோபாவம், முதுகெலும்பு இல்லாத பேராசிரியர் அன்பழகன்! அவரா வேண்டாம் என்று சொல்வார்?
நீங்கள்தான் இந்த நாடகத்தை நடத்திக்கொண்டு இருக்கிறீர்கள். அவரும் வெற்றிலையைப் போட்டு ஜம்மென்று மென்று கொண்டுதான் இருக்கிறார். எனக்கு ஒன்றும் முடியாது என்று பேராசிரியர் சொல்வதற்கு முன்பு இவரே சொல்லிவிட்டார்.
உடனே பேராசிரியர், நீடுழி வாழ்க - நீ துணைமுதல்வராக வாழ்க என்கிறார்.
அண்ணா உங்கள் வீட்டுக்கு வந்து ஆலோசனைகள் எல்லாம் கேட்டதாகச் சொல்வார்கள். பேராசிரியரே, அந்தக் காலத்தில் உங்கள்மீது நான் மிகுந்த மரியாதை வைத்து இருந்தேன். எதுவாக இருந்தாலும் துணிச்சலாகச் சொல்லக்கூடியவர் - பைந்தமிழ்த் தேர்ப்பாகன் நமது பேராசிரியர் என்று எவ்வளவு மகிழ்ச்சி அடைந்து இருக்கிறேன். குற்றாலத்துக்கு அழைத்துக்கொண்டு சென்று அருவியில் குளிக்கவைத்து, பணிவிடை செய்து இருக்கிறேன். அவர் அருவியில் குளித்து முடிக்கும் வரை அவரது துணிகளை பக்கத்தில் வைத்துப் பாதுகாத்துப் பணிவிடை செய்வதில் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறேன். அண்ணாவுக்குப் பக்கத்தில் இருந்தவர். பெரிய தலைவர். சுயமரியாதையே கிடையாதா?
இந்த இனத்துக்கு சோனியா காந்தி துரோகம் செய்யவில்லை, சோனியாகாந்தி இத்தாலிக்காரி. தமிழ்நாட்டில் முதல்வராக இருந்துகொண்டு நீங்கள் துரோகம் செய்தீர்கள். அண்ணாவின் இயக்கத்தில் அவருக்குப்பிறகு தலைவராகி நீங்கள் துரோகம் செய்தீர்கள். வரலாறு காறித் துப்பும்.
என்ன பெரிய பதவி? ஐந்துமுறை முதல்வராக உள்ளீர்கள். இப்பொழுது மகன் துணை முதல்வர். இன்னும் பல பதவிகளை அனுபவிக்கலாம். ஆனால் தமிழர்களின் சரித்திரம் எழுதப் படுகிறபோது இதுவரை இனத்துக்குத் துரோகம் செய்ததில் உங்களுடைய குடும்பத்துக்கு மன்னிப்பே கிடையாது. வரலாற்றில் எத்தனையோ துரோகிகளைப்பற்றி படித்து இருக்கிறோம். அவர்களுக்குக்கூட ஒரு கழுவாய் உண்டு. உங்களுக்குக் கிடையாது.
ஒரு கட்டுமானம் உருவாக்கி தமிழருக்கென்று ஒரு தனி நாடு கேட்ட கட்சியா இது? நாம் தனிநாடு கோரிக்கையைக் கை விட்டாலும் காரணங்கள் உயிரோடு இருக்கின்றன என்றுசொன்ன அண்ணா உருவாக்கிய இயக்கம் இது. நாம் தனிநாடு கேட்டோம். அதைவிட ஆயிரம் நியாயமான காரணங்கள் தனி ஈழத்துக்கு இருக்கிறது. அதை ஆதரிக்க வேண்டியதுதானே நம்முடைய கடமை?
தனி ஈழம் அமைப்பதுதானே நம்முடைய கடமை?
நாங்கள் கட்சித் தொடங்கிய உடன் திட்டவட்டமாகச் சொன்னோம், தனித் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று சொன்னோம். இன்றைக்கும் அதுதான் எங்கள் நிலைப்பாடு.
இப்பொழுது இலங்கைக்காரன் என்ன சொல்கிறான்? ஈழம் என்கின்ற வார்த்தையே இருக்கக்கூடாது. தமிழர்கள் பகுதிகளில் எல்லாம் சிங்களவர்களைக் கொண்டுவந்து திணித்துவிட்டான். குடியேற்றம் செய்கிறான். வடக்கிலும் கொண்டுபோய் வைக்கப்போகிறான். கலப்பு இனமாக்கப் போகிறான். இன்னும் அழிக்கப் போகிறான்.
சர்வதேச நாடுகளின் மனசாட்சி எல்லாம் செத்துப் போய்விட்டது. ஐக்கிய நாடுகள் மன்றம், மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைத் தோற்கடிக்க வேண்டும்; இலங்கைக்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று படாதபாடு பட்டதே இந்திய அரசு.
அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுகிற அன்றைக்குத்தான், இலங்கைத் தீர்மானம் வெற்றிபெற்று சர்வதேச சமுதாயத்தின் முயற்சியும் தோற்கடிக்கப்பட்ட அன்றைக்குத்தான், இந்திய அரசு துரோகத்தைச் செய்த அன்றைக்குத்தான், முதலமைச்சரின் பிள்ளைகள் அசோகா ஹாலில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதையும் இளைஞர்கள் கவனிக்க வேண்டும்.
இப்பொழுது இளைஞர்கள் மனதில் ஆத்திரமும் கோபமும் இருக்கிறது. ஆகையினால், நீங்கள் இளைஞர்களிடம் செல்லுங்கள். தம்பி நீங்கள் ம.தி.மு.க.வில் சேருங்கள் என்று அழையுங்கள். அவர்களுக்குத் தெரியும் நாம் என்ன பதவிகளுக்காகக் கூப்பிடுகிறோமா? இல்லையே! தமிழ் இன உணர்வுள்ள இளைஞர்கள், சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களைச் சேருங்கள்.
சில மருத்துவர்கள் வந்து என்னைச் சந்தித்தார்கள். நமது கட்சியில் சேரவேண்டும் என்றார்கள். ஆக நீங்கள் முயற்சி செய்யுங்கள். உங்களால் முடியும் தம்பிகளே, இளைஞர்களே! படிவத்தைத் தூக்கிக் கொண்டு சென்று "நீங்கள் ம.தி.மு.க.வில் சேருங்கள். இது தமிழர்களுக்காகப் போராடுகிற கட்சி. தமிழ்நாட்டுக்காக உண்மையாக சேவை செய்கிற கட்சி. உலகெங்கும் இருக்கிற தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்குப் பாடுபடுகிற கட்சி" என்று சொல்லுங்கள்.
அதைத்தான் இங்கே குறிப்பிட்டார்கள். தேர்தலில் கடைசிப் பிரச்சாரக் கூட்டம் 11 ஆம் தேதி. நான் 10 ஆம் தேதி சாத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறேன். ஏழரை மணி இருக்கும். ஒரு ஊரில் பேசிவிட்டு அடுத்த ஊருக்குள் நுழைகிறேன். மக்கள் ஏராளமாகத் திரண்டு இருக்கிறார்கள். வேன் சென்று கொண்டு இருக்கிறது. எந்தநேரமும் அங்கிருந்து ஏதாவது அழைப்பு வரும் என்பதால் நான் எனது கைத்தொலைபேசியை அணைப்பதே இல்லை.
முல்லை தீவில் இருந்து சூசை பேசினார். அங்குள்ள நிலைமையைச் சொல்லி வேதனையோடு பேசுகிறார். "நீங்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள்" என்றேன் நான். அவருக்குக் கோபம் வந்து விட்டது! "என்ன, என்னைப்போய் கவனமாக இருக்கச் சொல்கிறீர்கள் சனமெல்லாம் சாகிறார்களே" என்றார். அதற்குப்பிறகு தேர்தல் முடிந்த அன்று இரவு நடேசன் பேசினார். இதுகுறித்து நான் சங்கொலியில் எழுதி இருக்கிறேன்.
தேர்தல் பிரச்சாரத்தில் நான் பேசினேன். இன்றைக்கு பிரச்சாரம் முடிகிறது. நாளையில் இருந்து 16 ஆம் தேதிக்குள் ஈழத்தில் இருக்கும் தமிழ் மக்கள் இலட்சக்கணக்கானவர்களை கொன்று அழிக்க, கோரமான படுகொலையை நடத்த சிங்கள அரசு - இராஜபக்சேவின் இராணுவம் திட்டம் போட்டு விட்டது. நாம் கற்பனைசெய்ய முடியாத பேரழிவு நடக்கப்போகிறது. பச்சிளம் குழந்தைகள் எல்லாம் சாகப்போகிறார்கள் என்றுசொல்லி, தினமலர் பத்திரிகையில் வந்த போட்டோவை எடுத்துக் காண்பித்தேன். நம்முடைய கருத்துகளைக் கடுமையாக விமர்சனம் செய்கிற பத்திரிகை.
ஆனால், அன்றைக்கு அதில் வந்த படத்தில், பத்துப் பனிரெண்டு பெண்கள் செத்துக் கிடக்கிறார்கள். சுற்றிலும் இறந்து கிடக்கிறார்கள். நடுவே, ஒரு நான்குவயதுச் சிறுமி பயந்து நடுங்கி படுத்துக் கிடக்கிறாள். இந்தப் புகைப்படத்தை தினமலர் வெளியிட்டு இருந்தது. அந்தப் புகைப்படத்தை எடுத்துக் காண்பித்தேன்.
இதுபோன்ற ஒரு சிறுமி வியட்நாம் வீதியில் பயந்து ஓடுவதை ஒரு படமாகக் காண்பித்தார்கள். மூன்று வயதுச்சிறுமியின் தலைக்கு மேலே விமானத்தில் இருந்து குண்டுகளை வீசுகிறார்கள். அந்த புகைப்படத்தைப் பார்த்து உலகமே கொதித்து எழுந்தது. அமெரிக்காக்காரனே கொதித்து எழுந்து போரைநிறுத்துகிறாயா இல்லையா என்று நிறுத்தினான். அப்படி என்றால், தமிழன் என்றால் உலகத்தில் மனிதச்சமுதாயத்திலே சேர்க்கவில்லையா நீங்கள்?
இது பூர்வீக இனம் - வள்ளுவனைத் தந்த இனம் - கரிகாலனைத் தந்த இனம் - உலகத்தின் நெறிகளை எல்லாம் பாதுகாத்துத் தந்த இனம் - அப்படிப்பட்ட இனத்துக்கு நாதியே கிடையாதா?
"சுற்றிலும் பெண்கள் செத்துக்கிடக்க மூன்றுவயது குழந்தை நடுங்கிப்போய் கிடக்கிறதே இதைப் பார்த்தும் இருதயம் வெடிக்கவில்லையா? மனதுக்கு வேதனை வரவில்லையா?" என்று நான் அந்தக் கூட்டத்தில் பேசினேன். இன்னும் மூன்று நாட்களுக்குள் எல்லாரையும் கொன்று அழிக்கப் போகிறான் என்று.
என்ன நேர்ந்தது தெரியுமா தோழர்களே? ஒரு பத்திரிகையில்கூட இதை ஒருவரி போடவில்லை. எனக்கு ஓட்டுக்கேட்டுப் போனேன். அதைப் போட வேண்டாம். நாளையில் இருந்து 16 ஆம் தேதிக்குள் அவ்வளவு பேரையும் கொன்றுகுவிக்கப் போகிறான் என்று நான் சொன்னேனே, அதைப் போடவில்லை. என்ன காரணம்?
கோபாலபுரத்துக்காரருக்குப் பயந்துகொண்டு ஒருவரும் போடவில்லை. வைகோவைப்பற்றி எந்தச் செய்தியும் போட்டு விடக்கூடாது. யாரைப்பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள். வைகோ என்கின்ற பெயரை மட்டும் ஒருவரிகூட எழுதி விடாதீர்கள் என்ற உத்தரவு எனக்குத் தெரியும்.
என்ன நடக்கப் போகிறது என்று நான் பயந்தேனோ - கவலைப்பட்டேனோ - நடுங்கினேனோ அது நடந்துவிட்டது. இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று விட்டான். பச்சைக் குழந்தைகள் உள்பட கொன்று குவித்தான். பதுங்குக் குழிகளுக்குள் நடுங்கிக் கொண்டு இருந்த சிறுமிகள்மீது குண்டு வீசி அவர்கள் அப்படியே வெடித்து இறந்தார்கள். அதற்குமேலே மணலைப்போட்டு மூடிவிட்டான்.
குற்றுயிரும் கொலையுயிருமாகக் கிடந்தவர்கள்மீது டாங்கிகளைவிட்டு நசுக்கி விட்டான். இப்படிக் கொடுமைகளை ஹிட்லர்கூட செய்யவில்லை. யாரும் செய்யவில்லை. கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து, சிசுக்களை வெட்டிப் போட்டது உலகில் எவனும் செய்யாதது.
சும்மா அந்தக்காலத்து பழைய புறநானூறுகளைப் பேசி, அதைப்பற்றிச் சொல்லி, ஆஹா! அந்தப் பரம்பரை கரிகாலன் வழி வந்தவனா நீ, நெடுஞ்செழியன் வழிவந்தவனா நீ, அப்படி இப்படி என்று பேசி கைதட்டல்களை வாங்கி, ஏகப்பட்ட சொத்துகளைச் சேர்த்து மாடமாளிகைகள் வசதி வாய்ப்புகள் எல்லாம் ஆயிற்று. இவ்வளவும் கூட்டத்தில் பேசி உணர்ச்சிகளைத் தூண்டி அதன் மூலம் ஓட்டுகளை வாங்கி பதவிகளைப் பெற்று இன்றைக்கு பவிசான பதவிகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால், இன்றைக்கு நம் கண்ணுக்கு முன்னால் இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டார்களே, அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லையே?
எங்கேயோ வியன்னாவில் இரண்டு சீக்கியர்கள் சண்டைப் போட்டுக் கொண்டார்கள். மொத்தமாகக் கொளுத்திவிட்டான் அமிர்தசரசில். நாங்கள் அப்படி ஒன்றும் செய்யவில்லையே? நாங்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லையே? எங்கள் மக்களைக் கொல்வதற்கு ஆயுதம் போகிறது என்றால் எங்காவது மறிக்கமாட்டானா? இப்பொழுது கோவை இராமகிருஷ்ணன்மீது தேசப்பாதுகாப்புச் சட்டம் போட்டாய். எங்கள் கட்சிக்காரர்கள் 2 பேர் சிறையில் இருக்கிறார்கள் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களும் எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் சிறையில் இருக்கிறார்கள்.
ஆகவே எங்களைப் பொறுத்தமட்டில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு என்றைக்கும் ஒரே நிலைப்பாடுதான் - அன்றில் இருந்து இன்றுவரை. பிரபாகரனின் தந்தை வேலுப் பிள்ளையையும் தாய் பார்வதி அம்மையாரையும் என் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுவந்தேன். வல்வெட்டித்துறையில் எந்தப் பிள்ளைக்கு பிரபாகரன் என்று அவர்கள் பெயர் வைத்தார்களோ, அந்தத் தாயையும், தகப்பனையும் அழைத்துக்கொண்டுவந்து என் பேரப்பிள்ளைக்கு பெயர் வைக்கச் சொன்னேன். அவர்கள்தான் ‘பிரபாகரன்’ என்று எனது பேரனுக்குப் பெயர் வைத்தார்கள். நம் பிரபாகரன் அவர் உயிரோடு இருக்கிறார் - உரியநேரத்தில் வருவார் (பலத்த கைதட்டல்)
நான் ஈழமண்ணுக்குச் சென்று இருக்கும்போது, 1989 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று இரவு எனக்குப் பிரியாவிடை கூட்டம் நடத்தினார்கள். அந்தக் காட்டுக்குள் அழகான திரைச் சீலைகளை அமைத்து, மெழுகுவர்த்திகளை ஏற்றி, ஜெனரேட்டர்களைவைத்து லைட்போட்டு, ஒரு டேபிள் வைத்து நான்கு சேர்களைப்போட்டு, ஒன்றில் நான், இன்னொன்றில் பிரபாகரன், மற்றொன்றில் கிட்டு எல்லாம் உட்கார்ந்து - அந்தக் கூட்டத்தில் உலகப்புகழ் தளபதிகள் - போர்க் களத்தில் சாதனை படைத்த தளபதிகள் பால்ராஜ், பதுமன் என எல்லோரையும் பேசவைத்து, கிட்டு பேசி முடித்து பிரபாகரன் பேசும்போது சொன்னார்: "வரும்போது பெரியஆபத்தில் வைகோ அண்ணன் அவர்கள் வந்தார்கள், அவர்கள் நல்ல வேளையாக உயிர்பிழைத்து இங்கே வந்தார்கள். இப்பொழுது செல்லும்போது எந்த ஆபத்தும் இல்லாமல் பத்திரமாக தாயகத்துக்குச் சென்று சேர வேண்டும் என்று நான் இயற்கையை வேண்டுகிறேன்" என்று சொல்லிவிட்டு அடுத்துச் சொல்கிறார்.
"மீண்டும் அண்ணன் அவர்களை தமிழ் ஈழத்தில் வரவேற்போம்!" (பலத்த கைதட்டல்) என்றார்.
அதன்பிறகு என்னிடம், "ஓர் இலக்கிய அணி நிகழ்ச்சிக்கு, ஒரு கலை நிகழ்ச்சிக்கு நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு வர வேண்டும்; இப்பொழுது கட்டுப்பாட்டுப் பிரதேசம் வலுவாக இருக்கிறது" என்றார்கள். "தமிழ் ஈழம் அமைந்த பிறகுதான் அந்த மண்ணில் இந்த வைகோ காலெடுத்து வைப்பான்" என்றேன். (பலத்த கை தட்டல்)
முடிந்து போய்விட்டது என்று நினைக்காதே ராஜபக்சே. உலகத்தில் தமிழர்கள் நாங்கள் ஒன்பது கோடிப்பேர் இருக்கிறோம். அனைவரும் கைக்கூலி - ஐந்தாம்படை மாதிரி இருப்பார்கள் என்று நினைக்காதே. புலிகளை ஆதரித்தவர்களை எல்லாம் தமிழர்கள் நிராகரித்து விட்டார்கள் என்கிறான். கருணாக்கள் காலம் நீண்டகாலத்துக்குச் செல்லுபடியாகாது. நீ எங்கள் மக்களைக்கொன்று, எங்கள் பிள்ளைகளைக் கொன்று, எங்கள் இனத்தையே அழிக்க இவ்வளவையும் செய்தாயே, உன்னையும் உன் கூட்டத்தையும் எப்போது குழிதோண்டி வைக்கிறோமோ அன்றைக்குத்தான் நாங்கள் சாப்பிட்ட சாப்பாடு செரிமானமாகும். (பலத்த கைதட்டல்)
என்னாலும் திரட்ட முடியும். நான் ஊர்ஊராகச் செல்வேன், இளைஞர்களைத் திரட்டுவேன். பேசுகிற சக்தியை இயற்கை எனக்குக் கொடுத்து இருக்கிறது. இந்த சக்தி அடங்குகிறவரை இளைஞர்களைத் திரட்டுவேன். தமிழகத்தில் வாலிபர்களைத் திரட்டுவேன். பதவிக்காக ஓட்டுப்போடத் திரட்டமாட்டேன். இனத்தைக் காக்க எழுவதற்குத் திரட்டுவேன்.
எல்லாம் முடிந்தது என்கிறார்கள். ஒன்றும் முடியவில்லை. முடியாது. உலகம் முழுக்க இருக்கிற தமிழர்களிடம், உணர்ச்சி உள்ள தமிழர்களின் உடம்பில் ஓடுகிற இரத்தத்தில் அந்த உணர்வு இருக்கிறது. நீ அழித்துவிட முடியாது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னுடைய அருமைச் சகோதரர் மணிமாறன் அவர்கள் திகைக்க வைக்கின்ற சாதனைகள் பலவற்றை நடத்தி இருக்கிறார். இந்தக் கூட்டத்தையும் மிக வெற்றிகரமாக நடத்திவிட்டார்.
அவர் நிதி கொடுத்ததிலும் சரி - நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் சரி - அருமைச் சகோதரர் அண்ணாநகர் விஜயன் சொன்னதைப்போல, ஒரு நிகழ்ச்சியை சொல்லி விட்டால் அங்கேயே இருப்பார். காலை மாலை இரவு என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தலைமைக் கழகம் சொல்லியாயிற்றா? மாவட்டக்கழகம் ஏற்பாடா? அதைச் செய்து முடித்து விட்டுத் தான் மறுவேலை. இப்பகூடக் கேட்டேன் "என்னய்யா சட்டை கொஞ்சம்கூட பொருத்தம் இல்லாமல் இருக்கிறது?" என்று. "இங்கேயே இருந்து விட்டேன் அண்ணா, ஆடை கொண்டுவரவில்லை; அதனால் தம்பி கொடுத்த சட்டையை வாங்கி போட்டுக் கொண்டேன்" என்றார். கடுமையாக உழைக்கிறார். அனைவரையும் அரவணைக்கிறார்.
நான் நமது மாவட்டத் தோழர்களை எல்லாம் கேட்டுக்கொள்கிறேன். சென்னை மாவட்டம் தமிழகத்தின் தலைநகரம்.
தென்சென்னை - வடசென்னை கலங்கரை தீபங்களைப் போல, நீங்கள் இயக்கத்துக்கு வெளிச்சத்தைக் கொடுங்கள்.
இங்கு வலுவாகி விட்டால், மற்றது எல்லாம் தானாக வலுவாகிவிடும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
ஒவ்வொரு சகோதரனையும் கேட்கிறேன், உறுப்பினர்களைச் சேர்த்துக் கொடுங்கள் தம்பிகளே, நிறைய உறுப்பினர்களைச் சேருங்கள். தன்னலமின்றி, சுயநலமின்றி, இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம். எந்தத் தடையும் நம்மைத் தடுக்கமுடியாது. நமக்கென்று சோதனை கிடையாது. நான் அதை எல்லாம் தாண்டி வருவேன்.
தேர்தலில் தோற்றுப்போன கட்சி மாதிரியா இருக்கிறது உங்களது வரவேற்பைப் பார்த்தால்? நான் இன்றில் இருந்து முப்பது நாட்களுக்கு சுற்றுப்பயணம் செல்கிறேன். ஓய்வு என்பது எனக்குக் கிடையாது. தேர்தலில் தோற்றவுடன் நான் எதற்காக கவலைப்பட்டேன் தெரியுமா? நானும் எனது குடும்பத்தாரும், ‘இயக்கத்தில் அனைவரும் இதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் வருத்தப்படு வார்களே அவர்களது வீட்டில் மகிழ்ச்சி இருக்காதே, நான்தோற்றுவிட்டதற்காக கவலைப்படு வார்களே’ என்பதுபற்றித்தான் கவலைப்பட்டோம்.
நமது தோழர்களுக்கு மனதில் சங்கடம் இருக்கும். நான்குபேர் கேலிசெய்வார்கள். "என்னய்யா உங்கள் தலைவர் வெற்றிபெற்றுவிடுவார் என்று சொன்னாயே?" என்று கேலி செய்வார்களே, அதை நினைத்து வருத்தப்படுவார்களே, என்று நான் வருத்தப்படும்போதுதான், நமது இயக்கத்தோழர் மேலக்கோட்டையூர் அய்யனார் என்னும் தலித் சகோதரன் என் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தீக்குளித்தார் என்று கேள்விப்பட்டேன். கிளைச் செயலாளருக்கு மைத்துனன். ஆரம்பகால தி.மு.க.வில் இருந்து நம்மோடு வந்த குடும்பம். உடனடியாக எல்லா நிகழ்ச்சிகளையும் இரத்து செய்துவிட்டு, மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு தொலைபேசியில் பேசி உடனே ஆம்புலன்சையும் மருத்துவர்கள், நர்ஸ்களை அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டு நேரே வத்திராயிருப்பு மருத்துவமனைக்குச் சென்றேன்.
அங்கு மருத்துவர்கள் சொன்னார்கள். "சார், கொஞ்சம்தான் தீக்காயம். பயப்பட வேண்டியது இல்லை" என்றார்கள். தீக்குளித்தவர்கள் சாகும்போது நான் பக்கத்தில் இருந்து பார்த்து இருக்கிறேன். நான் தீக்குளித்தவரிடம் கேட்டேன் - அவரது மனைவியும் பக்கத்தில் இருந்தார். "ஏனய்யா, தீக்குளித்திருக்கிறாயே! உன் மனைவி மக்கள் என்ன ஆவார்கள், இப்படிச் செய்யலாமா?" என்று.
"ஐயா நீங்களே தோற்றுவிட்டீர்கள் எப்படிய்யா தாங்க முடியும்?" என்றார். "நான் தோற்றால் இப்ப என்ன கெட்டு விட்டது?" என்றேன். இப்படிப் பேசிக் கொண்டே இருந்தார். பாண்டிச்சேரியில் இதேமாதிரி ஒரு தம்பியோடு பேசிக் கொண்டு இருக்கும்போதே பேச்சு நின்று, மறுநாள் உயிர் பிரிந்தது. எனக்கு பயம் வந்தது. தேர்தல் முடிவு வந்த இரண்டுமணி நேரத்தில். மருத்துவமனை வாசலிலேயே காத்துக்கிடந்து ஆம்புலன்ஸ் வந்தவுடன் ஏற்றி மதுரைக்கு அனுப்பி விட்டு, மறுநாள் கேட்கிறேன். "சார், 24 மணிநேரம் சென்றால்தான் பிழைப்பதைப்பற்றிச் சொல்ல முடியும்" என்றார்கள்.
நம்ம சக்திக்குப் பணம் பார்ப்பது இல்லை. கட்சியில் ஒரு தொண்டனுக்கு ஒரு கஷ்டம் என்றால் நமது சக்தியைமீறி நல்ல வைத்தியம் செய்வோம் என்றுதான் நினைப்போம். இன்றைக்கு அவருக்கு எவ்வளவோ செலவாகியிருக்கிறது அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.
அன்று மாலை கேட்டேன். "சார், பிழைத்துக்கொள்வார். இன்னும் நான்கு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம்" என்றார்கள்.
நான் அந்தக் குடும்பத்தைத்தான் நினைக்கிறேன். அவரது மனைவிமக்களை நினைக்கிறேன். அப்படித்தான் இந்த இயக்கத்தில் பாச உணர்வோடு இருக்கிறோம். மனிதநேயம் என்பது நமது இயக்கத்தின் அடிப்படைக் கட்டுமானம்.
ஆகவே, அன்புள்ள தோழர்களே, நீங்கள் உறுப்பினர் படிவங்களை எடுத்துக்கொண்டு எவ்வளவு உறுப்பினர்களைச் சேர்க்க முடியுமோ அவ்வளவுபேரை, ஒவ்வொரு வட்டத்திலும் சேருங்கள். பகுதிக் கழகங்கள் நன்றாக இயங்குகின்றன.
நீங்கள் நிறைய நிதி கொடுத்து இருக்கிறீர்கள், நன்றாகப் பணி ஆற்றுகிறீர்கள், மனதார பாராட்டுகிறேன். தென்சென்னை மாவட்டக் கழகத்தைக் கட்டிக்காத்து நடத்திவருகின்ற மாவீரர் மணிமாறனின் முயற்சிகளுக்கு எல்லாம்,அவருடைய பணிகளுக்கு எல்லாம் தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை கழகத் தோழர்களும், அதிக உறுப்பினர்களைச் சேர்த்து, தலைநகர் சென்னை தமிழகத்தில் மற்ற அமைப்புகளுக்கு எடுத்துக்காட்டான அமைப்பு என்ற நிலைமையை ஏற்படுத்தித் தாருங்கள்.