முல்லைப் பெரியாறு வைகோ அறிக்கை

Issues: Environment, Human Rights

Region: Tamil Nadu, Other States

Category: Articles, Feedback, Headlines

Date: 
Sat, 04/06/2011

 

 

 

முல்லைப் பெரியாறு
வைகோ அறிக்கை

முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டியே தீருவோம் என்று கேரளத்தின் புதிய முதல் அமைச்சர் உம்மண் சாண்டி, கடந்த நான்கு நாள்களுக்குள் இரண்டாவது முறையாகக் கூறி உள்ளார். கடந்த ஐந்து ஆண்டுக்காலம் கேரளத்தில் ஆட்சி நடத்திய மார்க்சி°ட் கட்சி முதல் அமைச்சர் அச்சுதானந்தன் அவர்கள், மூர்க்கத்தனமான போக்கில் புதிய அணை கட்டுவோம் என்று
கூறி வந்ததோடு, அவரது அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை பொறுப்பு வகித்த பிரேமச்சந்திரன், பென்னி குக் கட்டிய அணையை உடைப்போம் என்றும் புதிய அணை கட்டுவோம் என்றும் தொடர்ந்து சொல்லி வந்தார்.

இந்த விபரீதச்செயலில் கேரள அரசு ஈடுபட்டால், அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்வதைப் போலப் பெரும் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று பலமுறை நாம் எச்சரித்தோம். பென்னி குக் கட்டிய முல்லைப்பெரியாறு அடையில், 999 ஆண்டுகளுக்கான பாசன உரிமையைத் தமிழகம் பெற்று இருக்கிறது. கேரள அரசு கட்டத் திட்டமிடுகின்ற புதிய அணை, பள்ளத்தில் இடத்தில் அமைவதால், கேரள அரசு நினைத்தாலும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர முடியாது.

பென்னி குக் கட்டிய அணையில், 152 அடி உயரத்துக்குத் தண்ணீரைத் தேக்கிக் கொள்வதற்குத் தமிழகம் உரிமை பெற்று இருந்தது. இடுக்கியில் கேரளம் கட்ட முனைந்த புதிய அணைக்குத் தண்ணீரைக் கொண்டு போவதற்காகவே, பென்னி குக் கட்டிய அணை பலவீனமாக இருக்கின்றது என்று 1979 இல் ஒரு நச்சுப் பிரச்சாரத்தை, கேரளத்தின் பிரபல பத்திரிகை மூலம் திட்டமிட்டுச் செய்து, அதனைப் பிரச்சினை ஆக்கி, தண்ணீர் மட்டத்தை 136 அடியாகக் குறைப்பது என்றும், அணையை வலுப்படுத்தும் சில பணிகளைச் செய்த பின்பு, நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், மத்திய அரசின் நீர்வள ஆணையத் தலைவர் முன்னிலையில் இரு அரசுகளும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டன.

அதன்படி, அணையும் வலுப்படுத்தப்பட்டு விட்டது. தற்போது, அணை பலமாக இருக்கிறது என்று, மிட்டல் தலைமையிலான நிபுணர் குழுவும், பிரார் தலைமையிலான நிபுணர் குழுவும், அறிக்கைகள் தந்து விட்டன. பிரச்சினை உச்சநீதிமன்றத்துக்குப் போனது. இருதரப்பு வாதங்களையும் கேட்டு, நிபுணர்கள் அறிக்கையையும் ஆய்வு செய்து, முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி உயரத்துக்குத் தண்ணீரைத் தேக்கிக்கொள்ளலாம் என்றும், பின்னர் 145 அடி உயரத்துக்கும்,அதன்பின்னர் 152 உயரம் வரையிலும் படிப்படியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், கேரள அரசு இதற்கு எந்தவிதத்திலும் முட்டுக்கட்டை போடுகின்ற வேலையில் ஈடுபடக்கூடாது என்றும், 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்புத் தந்தது.

அதை எதிர்த்து, அச்சுதானந்தன் போன்றவர்களின் வற்புறுத்தலால், கேரள அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, சட்டமன்றத்தில், ஒரு சட்டத்தை நிறைவேற்றி, 136 அடிக்கு மேல் தண்ணீரை உயர்த்த முடியாது என்றும், முல்லைப்பெரியாறு அணையை உடைப்பதற்கும் எங்களுக்கு உரிமை உண்டு என்றும் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.

அப்போதைய அண்ணா தி.மு.க. அரசு, அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

2006 மே மாதத்தில், தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த தி.மு.க. முல்லைப்பெரியாறு உரிமை காக்கும் கடமையில் தவறியது.

மூன்று ஆண்டுகளுக்கு மேல் வழக்கை இழுத்தடித்து, தமிழ்நாட்டுக்கு நியாயமான தீர்ப்பு வர இருந்த நிலையில், சூழ்ச்சியாக வழக்கை ஐந்து நீதிபதிகளின் அமர்வுக்கு அனுப்ப வேண்டுமெனக் கேரளம் கோரியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் தமிழ்நாடு அரசும் உடன்பட்டதன் விளைவாக, உச்சநீதிமன்றம் ஏற்கனவே கொடுத்த தீர்ப்பைத் தானே பறித்துக் கொண்டதைப் போல, அநீதியாக ஒரு உத்தரவை வெளியிட்டது. பென்னி குக் கட்டிய அணையின் வலுவை ஆய்வு செய்வதற்கும், புதிய அணை கட்டுவது குறித்தும் ஆய்வு செய்ய, ஒரு குழுவை நியமித்தது.

இந்தநிலையில், புதிய அணையைக் கட்டுவோம் என்று கேரள அரசு இப்போது அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால், தென்பாண்டிச் சீமையில் ஐந்து மாவட்டங்கள் அடியோடு பாசன வசதியையும், குடிநீர் வசதியையும் இழக்கும் அபாயம் தலைக்குமேல் இப்போது கத்தியாகத் தொங்குகிறது.

தமிழ்நாட்டில் இருந்து அரிசி, பருப்பு, காய்கறிகள், பால், கால்நடைகள் மற்றும் கட்டுமானத்துக்குத் தேவையான மணல் எல்லாம் கேரளத்துக்குச் செல்லுகிறது, தமிழ்நாடு இதைத் தராவிடில், கேரளம் தாங்க முடியாத அவலத்துக்கு ஆளாகும். இதை உணர்ந்து கொள்ளாமல், தமிழ்நாட்டின் தலையில் கல்லைப் போடக் கேரளம் நினைத்தால், இரு மாநிலங்களுக்கும் இதனால் கேடுதான் விளையப் போகிறது.

இதனால்தான், கேரள மக்களுக்கு நிலைமையை உணர்த்தி, அம்மாநில அரசின் தவறான போக்கால், அவர்களுக்கு ஏற்படப்போகும் துன்பத்தை எச்சரிப்பதற்காகவே, பல போராட்டங்ளைத் தமிழ்நாட்டில் நடத்தி இருக்கின்றோம், இரண்டு முறை அனைத்துச் சாலைகளிலும் முற்றுகைப் போராட்டத்தையும் நடத்தி இருக்கின்றோம்.

கேரள மாநில அரசின் அக்கிரமமான போக்கைத் தடுக்க வேண்டிய கடமையை காங்கிர° தலைமையிலான மத்திய அரசு செய்யவே இல்லை.

கேரள அரசு, பென்னி குக் அணையில் கை வைக்கவோ, புதிய அணை கட்டவோ முனைந்தால், நிரந்தரப் பொருளாதார முற்றுகையைத் தமிழகம் ஏற்படுத்தும் என எச்சரிக்க விரும்புகிறேன்.
தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள், நம் மாநிலத்தின் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சினையான இந்தப் பிரச்சினையில், கேரள அரசின் தவறான போக்கைத் தடுத்து நிறுத்தவும், மத்திய அரசுக்கு நிலைமையின் விபரீதத்தை உணர்த்தவும், உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

தென்தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தைக் காக்க, மறுமலர்ச்சி தி.மு.க. நேரடியாகக் கிளர்ச்சியில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கிறேன்.

தாயகம்,                                   வைகோ
சென்னை - 8                            பொதுச் செயலாளர்,
04.06.2011                                  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)