தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை! கோவை கண்டன ஆர்ப்பாட்டத்தில் வைகோ. - ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்

Issues: Human Rights, Politics, Srilanka

Region: Coimbatore - Urban, Tamil Nadu

Category: Favorites, Speeches

தமிழ்நாட்டில்
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை!

கோவை கண்டன ஆர்ப்பாட்டத்தில் வைகோ

கழகக் கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து 20.3.2009 அன்று கோவையில் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரை...

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை கருணாநிதி அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு, ஒவ்வொருநாளும் மக்கள் ஆட்சியைக் குழிதோண்டிப் புதைக்கின்ற அக்கிரமங்களைக் காவல்துறையின் மூலமாக முதல் அமைச்சர் நிறைவேற்றி வருகிறார். காவல்துறையினர் எங்களுக்கு எதிரிகள் அல்ல. மனிதநேயமும், மனசாட்சியும், ஈழத்தமிழர்களிடம் உண்மையான இரக்கமும் கொண்டு இருக்கின்ற ஏராளமானவர்கள் அங்கும் இருக்கிறார்கள்.
அவர்களும் தமிழர்கள்தானே, அவர்களுக்கு அந்த உணர்வு இல்லாமலா போகும்?

ஆனால், காவல்துறையின் நம்பகத்தன்மை தரை மட்டமாகி வருகிறது என்று நான் எச்சரிக்கின்றேன். இது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். தமிழ்நாட்டு வரலாற்றிலேயே நடைபெறாத ஒரு நிகழ்ச்சி நேற்றைக்கு நடைபெற்றது. பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் இருந்து, வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் இருந்து நேற்று வரையிலும் சென்னைப் பட்டணத்தில் இத்தனை ஆயிரம் வழக்கறிஞர்கள் ஒரு போராட்டக் களத்துக்கு வந்தது கிடையாது. எந்தக் காலத்திலும் கிடையாது. எந்த ஆட்சியிலும் கிடையாது.

அரசியல் இயக்கங்கள் இலட்சக்கணக்கில் தோழர்களைத் திரட்டிப் போராட்டங்களை நடத்தி இருக்கின்றன. தொழிலாளத் தோழர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு களங்களை அமைத்து இருக்கின்றார்கள்.

மாணவர்கள் இலட்சக்கணக்கில் திரண்டு 1965 போர்க்களத்தில் இந்தியை எதிர்த்துப் போராடி இருக்கின்றார்கள். ஆனால், அநீதியை எதிர்த்து, அக்கிரமத்தை எதிர்த்து, வழக்கறிஞர்கள் ஐம்பதாயிரம் பேர் திரண்டார்கள் என்பது தமிழக வரலாற்றிலேயே கிடையாது.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான வழக்கறிஞர்கள், தலைநகர் சென்னையில் ஒரு இராணுவக் கட்டுப்பாடான பேரணியை நேற்று நடத்திக் காட்டி இருக்கிறார்கள். காவல்துறையினரை அவர்கள் பாதுகாப்புக்கு அழைக்கவும் இல்லை. அவர்கள் செல்லவும் இல்லை. அந்தப் போராட்டம் எதற்காக?

நீதிமன்ற வளாகத்துக்கு உள்ளே, பிப்ரவரி 19 ஆம் நாள் அன்று - தோழர்களே, இலட்சக் கணக்கில் நீங்கள் திரண்டீர்களே, கோவையில் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கப் பொதுக் கூட்டத்துக்கு அதேநாளில், நான் கோவையில் உங்களைச் சந்தித்த அதே தினத்தில், பகல்நேரத்தில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்கு உள்ளே ஏதோ எதிரிநாட்டுப் படைகள் இன்னொரு நாட்டுக்கு உள்ளே படையெடுத்துச் செல்வதைப்போல, காவல்துறையினர் நூற்றுக்கணக்கில் நீதிமன்ற வளாகத்துக்கு உள்ளே நுழைந்து, கண்ணில் தென்பட்ட வழக்கறிஞர்கள் எல்லோரையும் மிருகத்தனமாகத் தாக்கினார்கள். காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினார் கள். பலரின் கபாலங்கள் உடைக்கப்பட்டன. பலரின் கைகால் உடைக்கப்பட்டன. இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.

நீதிமன்ற கட்டடத்துக்கு உள்ளே நுழைந்து, நூலகத்துக்கு உள்ளே இருந்த வழக்கறிஞர்களைக் கண் மண் தெரியாமல் அடித்தார்கள். நீதிபதிகளைத் தாக்கினார்கள். தாக்கப்பட்ட நீதிபதிகள் பலர் வெட்கப்பட்டு வெளியில் சொல்லவில்லை. இதுதான் உண்மை. ஒரு பெண் நீதிபதி, காவல்துறையினர் அனைவரையும் தாக்குகிற போது - இவர் நீதிபதி என்று வழக்கறிஞர்கள் கூக்குரல் எழுப்பினார்கள். அதற்கு அந்தக் காவல்துறை அதிகாரி, அந்தச் சகோதரியைப் பார்த்து மிக மிக இழிவான வார்த்தையைச் சொல்லி, பிரம்பால் அடித்து விரட்டினார். மானத்துக்கு அஞ்சி அந்த நீதிபதி வெளியில் சொல்ல முடியவில்லை.

நீதிமன்ற வளாகத்துக்கு உள்ளே நின்றுகொண்டு இருந்த இரு சக்கர வாகனங்கள், கார்கள் அனைத்தையும் உடைத்து நொறுக்கினார்கள். வழக்கறிஞர்கள் இருக்கும் சேம்பர்களின் கண்ணாடி, கதவுகளை எல்லாம் உடைத்து நொறுக்கினார்கள். நெடுஞ்சாலையைத் தாண்டி தம்பு செட்டித் தெருவில் உள்ள வழக்கறிஞர்கள் அலுவலகங்களுக்கும் சென்று, உடைத்து நொறுக்கினார்கள். இந்தத் தாக்குதல்களில், 72 வழக்கறிஞர்கள் இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்கள். சில வழக்கறிஞர்கள் மூர்ச்சையாகி நினைவு இழந்து தூக்கிச் செல்லப்பட்டார்கள்.

இத்தனைக்குப்பிறகு என்ன தொடக்க நிகழ்ச்சி செய்தார்கள்? பொய்வழக்குப் போடுவது என்பது காவல்துறையினருக்கு பிரிட்டிஷார் காலத்தில் இருந்து கைவந்த கலை. எங்களைப் போன்ற அரசியல்வாதிகளைக் கைது செய்ய வேண்டும் என்றால், ஒரு பாலத்தைக் குண்டு வைத்துத் தகர்ப்பதற்கு, ஆர்.டி.மாரியப்பன், ஆர்.ஆர்.மோகன்குமார், திருப்பூர் துரைசாமி ஆகியோர், வைகோவோடு உட்கார்ந்து சதி செய்து கொண்டு இருந்தபோது, நாங்கள் குபீரென்று பாய்ந்து லபக்கென்று பிடித்தோம். இதுதான் வழக்கமாகப் போடுகின்ற எப்.ஐ.ஆர். இது பிரிட்டிஷார் காலத்தில் இருந்து சொல்லிக் கொடுத்தது.

இவர்கள் மற்றவர்களைத் தாக்கிவிட்டு, பிளேடால் தங்கள் கையைக் கிழித்துக்கொண்டு, அதில் ஒருசொட்டு இரத்தத்தையும் விட்டு, சிவப்பு மையையும் கொட்டி, அதற்குமேல் பெரிய பேண்டேஜைப் போட்டுப் படுத்துக் கொள்வார்கள். உடனே டி.ஜி.பி. வந்து பார்ப்பார், கமிஷனர் வந்து பார்ப்பார். காயப்பட்ட காவல்துறை அதிகாரிகளைப் பாருங்கள் என்று தொலைக்காட்சியில் படம் காட்டுவார்கள். புகைப்படம் எடுத்துப் போடுவார்கள். எதற்கென்றால், இவர்கள் செய்த இந்த அடக்குமுறையை நியாயப்படுத்துவதற்கு. அதுதான் அன்றைக்கும் நடந்தது.

சாக்குமூட்டைகளில் கற்களை காவல்துறையினர்தான் குண்டர்களின் துணையோடு அந்த வளாகத்துக்கு உள்ளே கொண்டு வந்தார்கள். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கற்கள் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் குண்டர்களை வைத்து சென்னை மாநகராட்சித் தேர்தலில் இரத்த வெறியாட்டத்தை நடத்தினார்களோ, அதே குண்டர்களை அழைத்துக் கொண்டுவந்து, அதே யூனிபார்மில் வழக்கறிஞர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் தெரியக்கூடாது என்பதற்காக, கருப்பு பேண்ட் வெள்ளை சட்டையை அணிந்து கொண்டுவந்து கற்களை வீசினார்கள்.

கற்கள் காவல்துறையினர்மீதும் விழுந்தது. வழக்கறிஞர்கள் மீதும் விழுந்தது. இப்படித்தான் தாக்குதலைத் தொடங்கினார்கள். தடிகளால் அடித்தார்கள். கல்லால் அடிபட்டு, மண்டை உடைந்த வழக்கறிஞர்கள் சுற்றிலும் இருந்து தாக்கப்படுகிறபோது தற்காப்புக்குக் கீழே கிடக்கின்ற கற்களைத் தூக்கி எறிய மாட்டார்களா?

இந்திய குற்றவியல் சட்டத்திலேயே, நம் உயிருக்கு ஆபத்து என்றால் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள பதிலுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருக்கிறது. எனவே, தாங்கள் தாக்கப்பட்ட நேரத்தில் தங்களைத் தற்காத்துக்கொள்ள வழக்கறிஞர்கள் சிலர் கற்களை எடுத்தார்கள். இதைப் படம் எடுத்து ஒருசில செய்தித்தாள்கள் முதல் பக்கத்தில் போட்டு, வழக்கறிஞர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக, காவல்துறையினரின் ஜோடனைக்கு இவர்கள் பத்திரிகைகளில் சாட்சியம் அளித்தார்கள்.

நிலைமை விபரீதம் ஆனது. வழக்கறிஞர்கள் சிலருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்றவுடன், அதே குண்டர்களைப் பயன்படுத்தி காவல் நிலையத்துக்கு காவல்துறையினர் தீ வைத்தார்கள். நான் சொல்கிறேன். அந்தக் காவல் நிலையத்துக்கு தீ வைத்தது காவல் துறையினர்தான். வழக்கறிஞர்கள் அல்ல. தாக்கப்பட்ட வழக்கறிஞர்கள் அனைவரையும் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தேன்.

சகோதரர்கள் சிலர் சொன்னார்கள். எங்கள் உடம்பு முழுக்க காயம். தலைமுதல் கால்வரை அடித்தார்கள். மாட்டைக்கூட நமது விவசாயிகள் அடிக்க மாட்டார்கள். தார்க்கம்பை ஓங்குவானேதவிர, அடிக்க மாட்டான். ஆனால், அதைவிட மிருகத்தனமாகத் தாக்கி இருக்கிறார்கள். இடுப்புப் பக்கத்தில் முதுகு பக்கத்தில் எங்கே சிறுநீரகம் இருக்கிறதோ அதைக் குறிவைத்து குண்டாந் தடியால் அடித்துவிட்டு, இவனுக்கு கிட்னி உடைய வேண்டும், அப்பத்தான் இவன் சாவான் என்று சொல்லித் தான் அடித்தார்கள்.

இலங்கைத் தமிழனுக்காக நீங்கள் என்ன புடுங்கப் போகிறீர்களா? இது காவல்துறை அதிகாரி சொன்ன வார்த்தை.
ஆக, இந்தப் போராட்டம் என்பது, சுப்பிரமணியன் சுவாமி பிரச்சனைக்காக நடத்தப்பட்ட அடக்குமுறை அல்ல.
ஈழத்தமிழர்களுக்காக மாதக்கணக்கில் வழக்கறிஞர்கள் தமிழ் நாட்டில் போராடுகிறார்களே, ஒருநாள் அல்ல, வாரக்கணக்கில் - மாதக்கணக்கில் - நீதிமன்றத்துக்குச் செல்லாமல் - வருமானம் பாதிக்கப்படுவதைப்பற்றிக் கவலைப்படாமல் - எதிர்காலம் பாழாவதைப்பற்றிக் கவலைப்படாமல் - இப்படி ஒட்டு மொத்தமாக சீனியர் வழக்கறிஞர்கள், பிரசித்திப்பெற்ற வழக்கறிஞர்கள் ஒரு நாளைக்கு நீதிமன்றத்தில் ஆஜரானால் இலட்சக் கணக்காக வருமானம் வருகின்ற வழக்கறிஞர்கள்கூட ஒட்டு மொத்தமாக உண்ணாவிரதம் இருக்கிறார்களே. போராட்டம் நடத்துகிறார்களே!

இது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலைமையைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தி விடும், இது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவுப் பிரச்சாரமாகி விடும், இந்திய அரசுக்கும் நமக்கும் எதிராக மக்கள் சக்தியைத் திரட்டிவிடும். அது தேர்தலில் நம்மைப் பாதிக்கும் என்று கணக்குப் போட்ட கருணாநிதி, இந்தப் போராட்டத்தை நிறுத்துவதற்காக, ஈழத்தமிழர்கள் போராட்டத்தை வழக்கறிஞர்கள் தொடர்ந்து நடத்த விடாமல் செய்வதற்காக, வன்முறையை ஏவிவிட்டால் பிரச்சனை திசைதிரும்பி விடும், ஈழத் தமிழர் பிரச்சனை மறக்கடிக்கப்பட்டு விடும் என்பதற்காக முதலமைச்சர் கருணாநிதியின் ஏவுதலின் பேரில் நடத்தப்பட்ட அடக்குமுறை.

ஓய்வுபெற்ற நீதிபதி கிருஷ்ணா என்பவர் ஒரு அக்கிரமமான அறிக்கையைக் கொடுத்தார். நான் இப்பொழுது கேட்கிறேன். நீதிமன்ற வளாகத்துக்கு உள்ளே தடியடி பிரயோகத்தை நடத்துவதற்கு உத்தரவிட்டது யார்? இன்றுவரை சரியான பதில் கிடையாது. இரண்டு அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கிறது. இன்னும் பிரதான கேள்விக்குப் பதில் வரவில்லை. இந்தத் தடியடிப் பிரயோகத்துக்கு உத்தரவு இட்டது யார்? கமிஷனரா? டி.ஜி.பி.யா? அதற்கு மேல் அந்தப் பொறுப்பில் இருக்கிற முதல் அமைச்சரா? முதல் அமைச்சர்தான் உத்தரவிட்டவர். இதுதான் உண்மை. இதைக் காவல்துறையில் இருக்கின்ற அதிகாரிகள் பலர் சொல்கிறார்கள். நாங்கள் இதை வெளியில் சொல்ல முடியவில்லை. முதல் அமைச்சரின் உத்தரவின்பேரில்தான் இந்த அடக்கு முறை ஏவப்பட்டது என்கிறார்கள்.

முதல் அமைச்சருக்கு என்ன நோக்கம்? ஈழத்தமிழர்க்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராடுகிறார்கள். அங்கே, ராஜபக்சே இந்தியாவிடம் ஆயுதம் வாங்கி, தமிழர்களைக் கொலை செய்கிறான். தமிழைச்சொல்லி, தமிழ் இனத்தைச் சொல்லி, தமிழ்நாட்டு மக்களிடம் ஓட்டு வாங்கி முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள்மீது அடக்குமுறையை காவல்துறையை ஏவினார்.

அதனுடைய தொடர்விளைவுதான் நாஞ்சில் சம்பத் கைது - கொளத்தூர் மணி கைது - இயக்குநர் சீமான் கைது. எதற்காக? மிரட்டுவதற்காக - அச்சுறுத்து வதற்காக. ஆண்டுக்கணக்கில் சிறையில் நீங்கள் அடைபட்டுக் கிடக்க வேண்டியது வரும்; ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக புலிகளுக்கு ஆதரவாக எந்தக் குரல் எழுந்தாலும் நான் ஆண்டுக்கணக்கில் சிறையில் போடத் தயங்க மாட்டேன் என்று மிரட்டுவதற்காக, முதல் அமைச்சர் முடிவெடுத்து இவர்களைக் கைது செய்து இருக்கிறார்.

பிரணாப் முகர்ஜிக்குக் கருப்புக் கொடி காண்பித்தோம், என் தலைமையில் தூத்துக்குடியில். எங்களோடு சேர்ந்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி - பெரியார் திராவிடர் கழகம் - மார்க்சிஸ்ட் லெனின் அமைப்பு - விடுதலைச் சிறுத்தைகள், மீனவர் அமைப்புகள் என பல அமைப்புகளும் எங்களுடன் சேர்ந்து நாங்கள் கருப்புக் கொடி காண்பித்தோம். ஆத்திரப்பட்ட இளைஞர்கள் சிலர், பிரணாப் முகர்ஜி படத்துக்குத் தீ வைத்துவிட்டனர். கருணாநிதி எழுதுகிறார்: பிரணாப் முகர்ஜி படத்துக்கு தீவைத்தது தேசத்துக்கு துரோகம் என்று சொல்லி, அதில் என்னை எவ்வளவு இழிவுபடுத்தி எழுதமுடியுமோ எழுதிவிட்டு, தேசப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று அவர் அதில் குறிப்பிடுகிறார்.

பிப்ரவரி 18 ஆம் தேதி பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் கொடுத்த அறிக்கை, தமிழ்நாட்டில் வீதி வீதியாகத் தீ வைத்துக் கொளுத்தப்பட வேண்டிய அறிக்கை. பச்சைத் துரோகம் செய்தார் பிரணாப் முகர்ஜி. அதற்குப்பிறகு தூத்துக்குடிக்கு வந்து போர்நிறுத்தத்துக்கு இந்திய அரசு குரல் கொடுப்பதாக ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைச் சொன்னார்.

உடனே, முதலமைச்சர் கருணாநிதி, எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி போரை நிறுத்தச் சொல்லிபேசி விட்டார் பிரணாப் முகர்ஜி என்றார்.

மறுநாள் கொழும்பில் இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் பலிதகோகனாவிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள். நேற்றைக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, போரை நிறுத்துவதற்காக குரல் கொடுத்ததாக செய்தி வந்து இருக்கிறதே?

ஏன் என்றால் கலைஞரின் ஏற்பாட்டில் எல்லா பத்திரிகைகளிலும் எட்டுக்காலம் போட்டுவிட்டார்கள். அவர் சொன்னால் போட்டுத்தானே ஆகவேண்டும் பத்திரிகைகள். அவர் குடும்பத்திலேயே தொலைக் காட்சிகள் இருக்கிறது. பெரிதாக செய்தி வெளியிட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் செய்தி. இது இரண்டாவது பித்தலாட்டம்.

முதலில் 48 மணி நேர போர்நிறுத்தம் என்று அயோக்கியத் தனமான பொய்யைச் சொன்னது, இந்திய அரசு. இலங்கை அரசு சொல்லிவிட்டது, நாங்கள் போரை நிறுத்தச் சொல்லவில்லை. கெடு விதித்து இருக்கிறோம். தமிழனைக் கொல்லப்போகிறோம், முடிந்தவன் வெளியே போ 48 மணி நேரத்துக்கு உள்ளே’ என்றான்.

இரண்டாவது முறை நிருபர்கள் கேட்டார்கள். நேற்றைக்கு பிரணாப் முகர்ஜி இப்படிச் சொன்னாரா? என்று. அவன் தெரிவித்தான். அதுமாதிரி இந்திய அரசு எங்களிடம் எந்தக் கோரிக்கையையும் வைக்கவில்லை. போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இந்திய அரசு அப்படிக் கேட்கவில்லை என்றான். அப்படியானால், முதலமைச்சர் அவர்களே, தமிழக மக்களையும், இந்திய மக்களையும் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தானே இந்த மோசடியான கருத்தைத் தெரிவித்தீர்கள். ஆக, அந்த அளவுக்கு இந்திய அரசு செய்கிற துரோகத்துக்கு, நீங்கள் உடந்தையாக இருப்பதை நாஞ்சில் சம்பத் பேச மாட்டாரா?

அங்கே, தமிழ்மக்களை கொன்று குவிக்கிறபோது ஐரோப்பிய யூனியன் போரைநிறுத்தச் சொல்லியும், இலங்கை அரசு முடியாது என்று சொல்லிவிட்டது. அமெரிக்க, இங்கிலாந்து அரசுகள் போரை நிறுத்தச் சொன்ன கருத்தை ஏற்க மறுத்துவிட்டது. எந்த அரசுசொன்னாலும் போரை நிறுத்த மாட்டோம் என்று சொல்கிறானே, என்ன காரணம்?

நேற்று முன்தினம் இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்கள வெறியர்களின் கட்சியான ஜே.வி.பி. கட்சியின் தலைவர் திசநாயக என்பவன், கேள்வி நேரத்தில் கேள்வி கேட்டான். இந்தியாவில் இருந்து இராணுவ மருத்துவக் குழு வந்து இருக்கிறதாமே புறுமோட்டை என்கின்ற இடத்தில் கிழக்கு மாகாணத்தில் வைத்து இருக்கிறீர்களே? அவர்களை எப்படி நம் ஊருக்குள் அனுமதிக்கலாம்? என்று கேட்டான்.

உடனே இலங்கை சுகாதார அமைச்சர் டிசில்வா எழுந்து, பதில்சொன்னான். நாம் இந்த யுத்தத்தில் விடுதலைப் புலிகளை இந்த அளவுக்கு வெற்றிகொண்டதற்கும், இந்த அளவுக்கு நாம் அழித்ததற்கும் முழுக்க முழுக்கக் காரணம் இந்திய அரசு நமக்குச் செய்த இராணுவ உதவிகள்தான் என்று யார் சொல்வது? இலங்கை மந்திரி சொல்கிறான். ஆகவே, கட்சி வித்தியாசம் இன்றி சிங்களக் கட்சிகள் எல்லோரும் இலங்கையில் இருக்கின்ற அனைவரும் இந்திய அரசுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றான்.

எங்கள் குழந்தைகளை, எங்கள் சகோதரிகளை, எங்கள் கொப்பூழ்கொடி உறவுகளை நீ கொன்று குவிப்பதற்கு இங்கிருந்து ஆயுதம் கொடுப்பாய்? இந்த அக்கிரமத்தை, துரோகத்தைச் சொன்னதற்காக நாஞ்சில் சம்பத் மீது தேசப் பாதுகாப்புச் சட்டமா? இந்தக் குற்றச்சாட்டைத் தானே அவர் சொன்னார். நீங்கள் செய்கிற துரோகத்தை மேடையில் பேசக்கூடாதா? பேசினால் வாய்ப்பூட்டுச் சட்டமா? சிறையா? பிரிட்டிஷ்காரன் ஆட்சியில்கூட சிதம்பரம்பிள்ளைக்கு இங்கே நேர்காணல் அனுமதித்தார்கள். சிதம்பரம்பிள்ளையின் வீட்டில் செய்து கொண்டு வரப்பட்ட திண்பண்டங்களைக்கூட என்னிடம் தந்தார்கள் என்று சுயசரிதையில் எழுதி இருக்கிறார்.

அதே எங்கள் வீரசிதம்பரம் அடைக்கப்பட்ட கொட்டடியில், என் வீரச்சகோதரன் நாஞ்சில் சம்பத்தை இன்றைக்கு நீங்கள் அடைத்து வைத்து இருக்கிறீர்கள். சம்பத்தின் துணைவியார், பிள்ளைகள் நேற்றைக்கு அவரைச் சந்திக்க வந்தபோது, இண்டர்வியூ இல்லையாம். மிசா காலத்திலும் இந்தக் கொடுமை கிடையாதே? பொடாவிலும் இண்டர்வியூ இருந்ததே? வாரத்திற்கு மூன்று நாட்கள் அனுமதிக்கப்பட்டார்களே, சம்பத்தின் குடும்பத்தை நீங்கள் பதிவுசெய்து, இன்றைக்கு இண்டர்வியூ என்று செய்யலாமே? மனசாட்சி அற்றவர்கள்.

நாஞ்சில் சம்பத் இந்தத் தேசத்தின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கின்ற வகையில் எந்தக் கருத்தைச் சொன்னார்? நீங்கள் ஒரு வழக்கைப் பதிவு செய்தீர்கள். திருப்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அந்த வழக்கு வந்தது. திருப்பூர் போலீஸ் அவர்மீது எப்.ஐ.ஆர். போட்டார்கள். அது என்ன வழக்கு? இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிவிட்டார் என்று குற்றம் சாட்டுகிறீர்கள். அவர் என்ன சொன்னார்? ஈழத்தில் இருக்கின்ற தமிழர்களைக் கொன்றுகுவித்தால் - அங்கே ஈழத்தில் தனி நாடு அமையும். தனி ஈழம் மலரும். இதைத்தான் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் தனித்தமிழ்நாடு என்று ஒருகாலும் அவர் பேசவில்லை.

அதற்குப்பிறகு அவர் சொன்னார். இந்திய அரசு இப்படித் துரோகம் செய்யுமானால் நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகிவிடும். அதற்குப்பிறகு தமிழ்நாட்டின் தூதராலயத்தை தில்லியில் திறக்க வேண்டிய அபாயம் ஏற்படும் என்று சம்பத் பேசி இருந்தாலும் தவறு கிடையாது. ஆனால், தமிழ் ஈழத்தின் தூதராலயம் தில்லியில் திறக்கப்படும் என்ற கருத்தில்தான் அவர் பேசியிருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்.

நான் இன்றைக்குப் பேசுகிறேன்.

இந்தத் துரோகம் தொடருமானால் - தமிழர்களைக் கொன்று குவிக்கின்ற துரோகத்தை இந்திய அரசு தொடருமானால் - ஆயுதம் கொடுப்பது தொடருமானால் - இனி எதிர் காலத்திலும் இதேநிலை தொடருமானால் - தில்லியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இது தொடருமானால் - இதுவே நீடிக்குமானால், ஒருமைப்பாடு துண்டு துண்டாக உடைந்து சிதறும். அப்படிப்பட்ட நிலைமை வரும்போது, தமிழ்நாடு இல்லமாக இருக்காது. தமிழ்நாட்டின் தூதராலயமாக மாறும் என்று எச்சரித்தால் தவறா? இப்பொழுது நான் எச்சரித்து இருக்கிறேன்.

நாஞ்சில் சம்பத் பேசாததை பேசியதாகச் சொன்னாய். இப்பொழுது நான் பேசுகிறேன். என்ன பேசுகிறேன்? நீ இந்தத் துரோகத்தைத் தொடர்ந்து, எங்கள் கொப்பூழ்கொடி உறவுகளைக் கொன்று குவிக்க இந்தத் துரோகத்தைத் தொடர இந்திய அரசு உதவுமானால், நாளைய இளைஞர்கள் ஒருமைப்பாட்டை உடைப்பார்கள். நாங்கள் ஒருமைப்பாட்டை ஏற்றுக் கொண்டு இருக்கிறோம்.

இப்படி அண்ணா எச்சரிக்கவில்லையா முதலமைச்சரான பிறகு?

தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டுவிட்டோம், ஆனால், திராவிட நாடு கேட்டதற்கான காரணங்கள் இன்னமும் உயிரோடு இருக்கின்றன என்று ஆபட்ஸ்பரி மாளிகையில் நடைபெற்ற மாணவர் மாநாட்டில் பேரறிஞர் அண்ணா தமிழகத்துக்கு முதலமைச்சராக பொறுப்பு ஏற்றதற்குப் பிறகு பேசினார்.

நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பது நோக்கம் இந்திய இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள். இறையாண்மைக்கு ஊறு நேர்ந்துவிடக்கூடாது என்று எச்சரிக்க வேண்டியது எங்களுடைய கடமை. அதில் என்ன தவறு இருக்கிறது?

நாஞ்சில் சம்பத் கூறியதாக இன்றைக்கு எப்.ஐ.ஆரில் பதிவுசெய்து இருக்கிறீர்களே, இதே கருத்தை 1970 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி ஒரு முதல் அமைச்சர் பேசினார். அவர் என்ன சொன்னார்? போகிறபோக்கில் மாநிலசுயாட்சி கோரிக்கை வலுத்துவருகிறது. இது மறுக்கப்படுமானால், பிறகு தில்லியில் உள்ள மாநிலங்களின் பவன்கள் தூதராலயங்களாக மாறுகின்ற நிலைமை ஏற்படும் என்று எச்சரிக்கிறேன் என்றார். இதைச் சொன்னவர் காங்கிரஸ் முதல் அமைச்சர். கர்நாடக முதலமைச்சர் வீரேந்திர பட்டீல். இதற்கு என்ன ஆதாரம்?

இதற்கு ஆதாரம். மாநில சுயாட்சி புத்தகத்தில் முதலமைச்சர் அவர்களே, உங்களின் மனசாட்சி உங்களுக்கு மனசாட்சி கிடையாது என்பது வேறு விஷயம், உங்களின் மனசாட்சி என்று சொல்வீர்கள் அல்லவா? மேலுலகத்துக்குச் சென்று சந்திக்கின்ற வாய்ப்பு ஏற்பட்டால் யாரைச் சந்திப்பீர்கள் என்று ஒரு கேள்வி. அனைவரும் இவர் அண்ணாவைச் சந்திக்க விரும்புவார், பெரியாரைச் சந்திக்க விரும்புவார் என்று நினைத்தார்கள். அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்குமானால் என் அருமை மருமகன் முரசொலி மாறனைச் சந்திப்பேன் என்று சொன்னார்.

நான் மாறனைக் குறை சொல்லவில்லை. மாறன் அவர்கள் எழுதிய புத்தகத்தில்தான் இந்தக் கருத்தை எழுதி இருக்கிறார். டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களே, பக்கம் தெரியவேண்டுமா? நீங்கள் புள்ளி விபரத்தோடு சொல்வீர்களே, உங்கள் மருமகன் எழுதிய புத்தகத்தில் 516 ஆவது பக்கத்தில் இது எழுதி இருக்கிறது. வீரேந்திர பட்டீல் சொன்னதை, அவர்தான் தலைப்பாக போட்டு, மாநில சுயாட்சி பிறப்புரிமை என்று போட்டு இருக்கிறார்.

இப்பொழுது மாறனைக் கைதுசெய்ய முடியுமா? முடியாது அவர் இந்த உலகத்தில் இல்லை. அந்தப் புத்தகத்தை வெளியிட்டவரைக் கைதுசெய்ய வேண்டும் என்றால் கருணாநிதியைத்தான் முதலில் கைது செய்ய வேண்டும்.
அவர்தான் இந்தப் புத்தகத்தை வெளியிட்டவர். இதைப் பற்றிச் சிலாகித்துப் பேசியவர். இதுவரை எத்தனை ஆயிரம் மேடைகளில் முதலமைச்சர் அவர்களே, நீங்கள் முழங்கினீர்கள்? இந்த நாட்டின் ஒருமைப்பாடு உடைந்துபோகும் என்று எத்தனை ஆயிரம் கூட்டங்களில் பேசினீர்கள்? இந்தி திணிக்கப்படுமானால், எங்கள் தமிழர்களின் உரிமை பறிக்கப்படுமானால், இந்த நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும் என்று எத்தனை மேடைகளில் பேசினீர்கள்.
அப்படி எச்சரிப்பதில் என்ன தவறு?

இந்த நாட்டின் இறையாண்மைக்கு யாரால் ஆபத்து? மன்மோகன் சிங் அரசால் ஆபத்து.

நம்முடைய கடல் எல்லையில் இலங்கைக் கடற்படைக்காரன் கண்ணிவெடிகளைப் போட இந்த அரசு அனுமதித்தது. உலகத்தில் எந்த ஒரு நாடும் அனுமதிக்காது. நமது கடல் எல்லையில், அடுத்த நாட்டுக்காரன் கண்ணி வெடியைப் போடுவதற்கு அனுமதித்தது இந்திய இறையாண்மைக்குச் செய்யப் பட்ட துரோகம். அப்படி என்றால் கைது செய்யப்பட வேண்டியவர் இந்தியாவின் பிரதமர் என்று நான் குற்றம் சாட்டுவதற்கு எவ்வளவு நேரமாகும்?
வெளிவிவகாரத் துறை அமைச்சர் என்று நான் குற்றம் சாட்டுவதற்கு எவ்வளவு நேரமாகும்?

இந்திய நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல. இது பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் நாங்கள் பேசினோம். இல்லையில்லை, சோனியா காந்தியை முசோலினியின் வடிவமாக வந்தவர் என்று சொல்லிவிட்டார் என்கிறார்.

அப்படியா? அதில் என்ன தவறு? சோனியாகாந்தி என்ன ஆப்பிரிக்கக் கண்டத்தில் பிறந்து இருந்தால், உகாண்டாவின் இடி அமீனுடைய வடிவமாக எனது சகோதரர் நாஞ்சில் சம்பத் சொல்லி இருப்பார். அவர் இத்தாலியில் பிறந்தார். எனவே, இத்தாலியில் பிறந்த முசோலினியைச் சொல்லாமல், ஆபிரகாம் லிங்கனையா சொல்லமுடியும்?

முசோலினி முதலில் சர்வாதிகாரி அல்ல. பிறகு சர்வாதிகாரி ஆனார். முதலமைச்சர் அவர்களே, 1975 ஆம் ஆண்டு எமர்ஜென்சி வந்தவுடன் நீங்கள் முரசொலியில் என்ன கருத்துப்படம் போட்டீர்கள்? இந்திரா காந்தி அம்மையாரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டுவந்து உதட்டுக்குமேல் ஹிட்லர் மீசையும் போட்டு, ‘இந்திரா காந்தி ஹிட்லர் ஆனார்’ என்று கருத்துப் படம் போட்டீர்கள். அன்றைக்கு நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்ததற்கு இந்திரா காந்தி அம்மையாரை நவீன ஹிட்லர் என்றீர்கள். நீங்கள் இன்று ஹிட்லர் பாணியிலேயே ஆட்சி நடத்துகிறீர்கள். வாய்ப்பூட்டுச் சட்டம் போடுகிறீர்கள்.

கொளத்தூர் மணியைக் கைது செய்து அடைக்கிறீர்கள். தமிழ் உணர்வுக்காகப் போராடுகிறவர் கொளத்தூர் மணி. தன்னுடைய வாழ்வுக்காக என்ன ஆபத்து வந்தாலும் கவலையில்லை என்று புலிகளை ஆதரிக்கக்கூடியவர். இயக்குநர் சீமானை புதுவை மாநில அரசு சாதாரண வழக்கில் கைது செய்து அடைத்தது. காங்கிரஸ்காரர்கள் கூச்சல் போட்டார்கள், சீமானை ஏன் இன்னும் கைது செய்து அடைக்கவில்லை? என்று. உடனே பாதுகாப்புச் சட்டத்தை ஏவிவிட்டீர்கள்.

திருப்பூர் நீதிபதி நாஞ்சில் சம்பத்தை பிணையில் விடுதலைசெய்து தீர்ப்பு வழங்கினார் அல்லவா? தேசத் துரோகம் செய்து இருந்ததாக கருதி இருந்தால், அவர் ஜாமீன் கொடுப்பாரா? ஜாமீன் கொடுத்துவிட்டார். இதை முதலமைச்சரால் தாங்க முடியவில்லை. அந்த நியாயமான கலெக்டரை நான் மதிக்கிறேன். அவர் எடுத்த எடுப்பில், நாஞ்சில் சம்பத் மீது தேசப் பாதுகாப்புச் சட்டத்தைப் பிரயோகிப்பதற்கான பூர்வாங்க முகாந்திரங்கள் இல்லை என்று சொல்லி, காவல்துறை அனுப்பிய கோரிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏற்கவில்லை. இதுதான் உண்மை. அதில் அவர் கையெழுத்துப் போட மறுத்துவிட்டார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் மறுத்ததற்கான ஆதாரத்தை - தடயங்களை நீங்கள் அழித்து விட்டீர்கள். ஒரிஜினல் பைலில் முக்கியமான கோப்பில் சில திருத்தங்கள் செய்து தாள்களைக் கிழித்து இருக்கிறீர்கள். நீங்கள் எந்த அக்கிரமும் செய்வீர்கள். இதன்பிறகு, திருப்பூர் நீதிமன்றத்தில் நாஞ்சில் சம்பத்துக்குப் பிணையில் விடுதலை கிடைத்து விட்டது என்று தெரிந்தபிறகு, அவசர அவசரமாக அந்த இரவில், அந்த மாவட்ட ஆட்சித் தலைவரை நிர்பந்தித்து, எப்படியாவது தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் நாஞ்சில் சம்பத்தை நீங்கள் சிறையில் அடைக்க வேண்டும் என்று முதலமைச்சர் தலையீட்டின்பேரில் கைது செய்யப்பட்டு உள்ளே அடைக்கப்பட்டு இருக்கிறார்.

காவல் துறையை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறார்? ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் 11 பேர் தீக்குளித்து இறந்து இருக்கிறார்கள். முத்துக்குமார் தொடங்கி அரியலூர் ராஜசேகர் வரை 11 பேர் தமிழ்நாட்டில் தீக்குளித்து இறந்து இருக்கிறார்கள். நான் தீக்குளிப்பை ஊக்குவிக்கவில்லை. ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பற்றது. அந்தக் குடும்பங்கள் இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கின்றன. சென்னையில், தீக்குளித்த அமரேசனுக்கு மனநிலை சரியில்லை என்று ஜோடித்தார்கள்.

இந்த அக்கிரமத்தைக் கண்டித்து நாங்கள் போராடி, இந்தப் பித்தலாட்டத்தை நாங்கள் உடைத்து எறிந்தோம். நல்லவேளையாக அமரேசன் தான் தீக்குளிப்பதற்கு முன்பு எல்லா கடிதத்தையும் தபாலில் போட்டுவிட்டு பிறகு தீக்குளித்து இருக்கிறார். மூன்றாம் நாள் தபால்கள் போய்ச் சேர்ந்துவிட்டன.

பக்தவத்சலம் ஆட்சியில் எட்டுப்பேர் தீக்குளித்தபோது இந்த அக்கிரமத்தை அவர் செய்யவில்லை. காங்கிரஸ் அரசு நடந்தபோது பக்தவத்சலம்கூட இந்தக் கொடுமையை செய்யவில்லை. இப்படிப்பட்ட அக்கிரமங்களை பள்ளபட்டி ரவி தீக்குளித்தபோதும் இதைச் செய்தார். ஆக, காவல்துறையைப் பயன்படுத்தி ஹிட்லர் எப்படி காவல் துறையை - இராணுவத்தைப் பயன்படுத்தினானோ அதைப்போல கருணாநிதி பயன் படுத்த ஆரம்பித்து இருக்கிறார்.

அதனுடைய விளைவுதான், நாஞ்சில் சம்பத் கைது. நாடு சுற்றி வருவாரே மறுமலர்ச்சி தி.மு.க. வின் பிரச்சார ஏவுகணையாயிற்றே, இலட்சக்கணக்கான மக்களைச் சந்திப்பாரே, அந்தப் பேச்சுக்கு நம்மால் பதில் சொல்லமுடியாதே! எதிர்கொள்ள முடியாதே என்ற எண்ணம்தான் சம்பத் கைது. நீ ஆயிரம் பேச்சாளனைக் கொண்டு வந்தாலும் எங்கள் ஒரு சம்பத்துக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா? ஆகவே எங்களைச் சிறையில் அடைக்கிறாய்.

ராஜபக்சே உலகநாடுகள் முழுவதும் ஆயுதம் வாங்கி புலிகளை அழிப்பதற்கு நமது வரிப் பணத்தில் ஆயுதம் வாங்கிக் கொண்டு - நமது இந்திய அரசிடம் ஆயுதம் வாங்கிக் கொண்டு - பாகிஸ்தானிடமும் ஆயுதம் வாங்கிக் கொண்டு - எல்லாரிடமும் ஆயுதம் வாங்கிக் கொண்டு, எந்த நாடும் ஆயுத உதவி செய்யாத புலிகளை பத்துலிட்டர் டீசல் அனுப்புவதுகூட பஞ்சமா பாதகம் என்று தடுக்கப்படுகிற நேரத்தில், எவருடைய உதவியும் இல்லாமல் அங்கே போராடிக் கொண்டு இருக்கிற விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இவ்வளவு ஆயுதங்களையும் கொண்டு ஏவுவதைப் போலத் தான் நீங்களும் எங்களை சிறையில் அடைத்துவிட்டு எங்களை நிராயுதபாணியாக்கிவிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்று நினைத்தால் எல்லோரும் நாஞ்சில் சம்பத்துகளாக மாறுவார்கள். (பலத்த கைதட்டல்)

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினால் தேசப் பாதுகாப்புச் சட்டமா? நாங்கள் ஆதரிப்போம் என்றேன், இவர்கள் அனைவரும் பதிலுக்கு ஆதரிப்போம் என்று சொன்னார்கள். அப்படி என்றால் அனைவரையும் தேசப்பாதுகாப்புச் சட்டத்தில் போடு. தமிழ்நாடு முழுவதும் இலட்சக்கணக் கானவர்கள் சொல்வோம். உன் சிறையில் இடம் இருக்காது. தமிழகத்தையே சிறைச் சாலை ஆக்கி விடுவீர்களா? ஒவ்வொரு வீட்டிலேயும் புலிகளை ஆதரிப்போம் என்று சொல்வோம். ஒவ்வொரு குடிசையிலும் அந்தக் குரல் கேட்கும். (பலத்த கைதட்டல்) மொத்தத் தமிழகத்தையே சிறைச்சாலையாக்கி விடுவீர்களா?

இன்றைக்கு உலகம் முழுவதும் கேட்கிறது. ஐரோப்பியக் கண்டத்தில் கேட்கிறது - தென்னாப்பிரிக்காவில் கேட்கிறது - கனடாவில் நேற்றைக்கு முன்தினம் மூன்று இலட்சம் பேர் ஊர்வலம் செல்கிறார்கள் - இலண்டனில் மூன்று இலட்சம் பேர் ஊர்வலம் செல்கிறார்கள். இன்றைக்குத் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் இதயமும் கொந்தளிக்கின்றது. இந்த அரசு பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தியது அதுதான் ராஜதுரோகம். தேசப் பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாக பயன்படுத்துகிறார். ஜனநாயகத்தின் மென்னியை முறிக்கிறார் கருணாநிதி.

இலங்கைக் கடற்படை நமது மீனவர்கள் ஐநூறு பேரை கொன்றுவிட்டுப் போனானே அதனைத் தடுத்ததா இந்திய அரசு? கண்டித்ததா? இந்தத் துரோகங்களை மக்கள் மன்றங்களில் சொன்னதற்காக நாஞ்சில் சம்பத்தை தேசப் பாதுகாப்புச் சட்டத்திலே நீங்கள் கைது செய்திருக்கிறீர்கள். மக்கள் மன்றத்தில் இந்தப் பிரச்சாரத்தை எடுத்துச் செல்வோம். இந்தப் பாசிச அரசாங்கத்தின் அடக்குமுறை ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்கின்ற அரசின் அடக்குமுறை என்பதை வீதி வீதியாக எடுத்துச் செல்வோம். மக்களிடம் எடுத்துச் செல்வோம்.

ஒரு நாஞ்சில் சம்பத் சிறையில் அடைக்கப்பட்டால், அத்தனைபேரும் நாஞ்சில் சம்பத்துகளாக மாறி மக்களிடத்தில் எடுத்துச் செல்வோம். இயக்குநர் சீமானை, கொளத்தூர் மணியைக் கைது செய்து அடைத்து இருக்கிறதைக் கண்டிக்கிறோம். இதைத் தொடர்ந்து இன்னும் பலரைக் கைது செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்தில் தான், அடிஷனல் டி.ஜி.பி.ராஜேந்திரன் இதுவரை நான்குதடவை அறிக்கைவிட்டு இருக்கிறார். தேசப் பாதுகாப்பு சட்டம் பாயும் என்று மிரட்டுகிறார். கருணாநிதி திருவாளர் தேசியம் பிள்ளை ஆகிவிட்டார். காங்கிரஸ் கட்சி என்ன உத்தரவு போடுகிறதோ அதைச் செயல்படுத்தத் துடிக்கிறார்.

என்ன காரணம்? திருமங்கலம் மாதிரி எப்படியாவது பணத்தை விதைத்து எந்தவிதத்திலாவது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாமா என்று பார்க்கிறார். திரும்பவும் அங்குசென்று திரும்பவும் துரோகம் செய்யவா? ஒரேயொரு கருத்து தில்லியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி, மத்தியில் காங்கிரஸ் வரக்கூடாது. தமிழனுக்குத் துரோகம் செய்கின்ற காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடாது. அது ஒன்றுதான் நாம் எடுத்து வைக்க வேண்டிய பிரச்சாரமாக இருக்க வேண்டும்.

சகோதரர்களே, இலங்கையில் தமிழர்கள் செத்து மடிகிறார்கள். இங்கே நமது மண்ணில் 11 பேர் தீக்குளித்து மடிந்தார்கள். உங்களிடம் நான் என்ன கேட்கிறேன். கையெழுத்து வாங்குங்கள். என் அருமைச் சகோதரர்களே, உங்களைக் கேட்கிறேன். உங்கள் மூலமாக செய்தியாளர்களே, முழுமையாக என் பேச்சை உங்களால் வெளியிட முடியாது. நீங்கள் அச்சுக்கு அனுப்பினாலும் அவர்கள் அதை அச்சிட மாட்டார்கள்.

ஆனால், இந்தக் கோரிக்கையை தயவுசெய்து எழுதுங்கள். வைகோ கேட்டான். தாய்த் தமிழகத்து மக்களைத் தாள் பணிந்து கேட்டான். ஐ.நா. பொதுச்செயலாளருக்கும் - அமெரிக்க ஜனாதிபதிக்கும் - ரஷ்ய ஜனாதிபதிக்கும்-கொடுக்கவிருக்கும் படிவங்களில் கையெழுத்துப் பெற்றுத் தாருங்கள். ஏன் தெரியுமா? ஐ.நா. பந்தோபஸ்து சபை நினைத்தால்தான் இலங்கையில் போரை நிறுத்த முடியும். கிழக்குத் தைமூரில் அவர்கள்தான் போரை நிறுத்தினார்கள்.
அவர்கள் கேட்டும் சண்டையை நிறுத்தாவிட்டால், அவர்களே அங்கே படையை அனுப்பி சண்டையை நிறுத்த முடியும்.
அதற்குக் குறுக்கே நிற்பது இந்திய அரசு. ரஷ்யா அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்குக் காரணம் இந்திய அரசு. நாம் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை ரஷ்ய அதிபருக்கு - அமெரிக்க அதிபருக்குத் தெரிவிப்போம். பிரிட்டனும் பிரான்சும் அதை மறுக்கப் போவது இல்லை.

ஐ.நா. மன்றம் போரை நிறுத்தச் சொன்னதற்கு முடியாது என்று சொல்லிவிட்டான் ராஜபக்சே. ஐரோப்பிய யூனியன் போரை நிறுத்தச் சொன்னது. முடியாது என்று சொல்லி விட்டான் ராஜபக்சே. புலிகளை முற்றாக அழித்துவிட்டுத்தான் மறுவேலை என்கிறான் அதெல்லாம் நீ அழிக்கமுடியாது. 34 சதுர கிலோ மீட்டரில் அடக்கிவிட்டோம் என்கிறாய். இந்த ஒருவாரத்தில் சிங்களச் சிப்பாய் 1300 பேர் இறந்து இருக்கிறார்கள். எனக்குத் தெரியும் புலிகளை அழிக்க முடியாது. பிரபாகரனை நெருங்கமுடியாது (பலத்தகை தட்டல்)

அதைமீறி, அவர்கள் மீது ஒரு துரும்பு விழுந்தால் நடப்பது வேறு என்று இந்திய அரசுக்கு எச்சரிக்கிறேன். இந்திய அரசுக்கு, அதைத் தலைமை தாங்கி நடத்துகிறவர்களுக்கு வினையை விதைக்காதீர்கள் என்று திரும்பவும் எச்சரிக்கிறேன். நான் சொல்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தத்தை யோசித்துத் தான் பேசுகிறேன். எனக்கு ஒன்றும் பயம் கிடையாது. நான் உண்மையைப் பேசுகின்றேன். யாமார்க்கும் குடியல்லோம் யமனை அஞ்சோம் என்று சொன்னார் நாவுக்கரசர் அப்பரடிகள். அவர் உலவிய தமிழக பூமி.

இந்திய அரசு செய்கின்ற துரோகத்தை முறியடிக்க நீங்கள் கையெழுத்து வாங்கிக் கொடுங்கள். கையெழுத்துக் கேட்டால் அனைவரும் போடுவார்கள். நீங்கள் கையெழுத்துக் கேளுங்கள். கட்சிவித்தியாசம் இன்றி போடுவார்கள். அந்தக் கையெழுத்துகளை உடனடியாக நாம் அமெரிக்காவுக்கோ ரஷ்யாவுக்கோ அனுப்ப வேண்டியதில்லை.

தில்லியில் சென்று ஒப்படைத்தால் போதும். அடுத்த இரண்டாவது நிமிடம் அவர்களுக்குத் தெரிவித்து விடுவார்கள். இத்தனைக் கோடி மக்கள் தமிழ்நாட்டில் போரை நிறுத்தச் சொல்லிக் கேட்கிறார்கள். எங்கள் சொந்த சகோதர சகோதரிகளை காப்பாற்றச் சொல்லி மன்றாடுகிறார்கள். சர்வதேச சமுதாயத்தை மன்றாடுகிறார்கள் என்ற உணர்வு ஏற்படுமானால், பந்தோபஸ்து கவுன்சிலில் ஒரு தீர்மானம் வந்தால் போதும் அதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்.

இந்தப் போரை நடத்துவதே இந்திய அரசுதான். புலிகளை ஒழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அதில் எத்தனை இலட்சம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை என்று இந்தப் போரை நடத்துகிறான் ராஜபக்சே. இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவிக்க போரை நடத்துகிறான். மருத்துவமனைகளுக்கு மருந்தா அனுப்பி இருக்கிறீர் கள்? குரல் வளையை அறுத்துவிட்டு கைக்கு கட்டுப் போட மருந்து அனுப்புகிறீர்களா? யாரை ஏமாற்றுகிறீர்கள்?

மருத்துவமனையின் மீது குண்டுவீசி பெண்களும், குழந்தைகளும் செத்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் கிழக்கு மாகாணத்தில் புல்மேட்டையில் கொண்டு போய் இங்கிருந்து மருத்துவர் குழுவை அனுப்பி பாதி வைத்தியம் சிங்கள இராணுவத் தினருக்கு நடக்கிறது. இங்கே காங்கிரஸ்காரர்கள் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கிறார்களாம். அங்கே ஆயுதத்தை அனுப்பிவைத்துவிட்டு, தமிழ்நாட்டில் நிவாரணப் பொருட்களைத் திரட்டுகிறீர்களா? தெருத்தெருவாக வீதிவீதியாக வந்து உங்கள் முகத்திரையைக் கிழித்து உங்களை அம்பலப்படுத்தாமல் விடமாட்டோம்.

இந்த வெயிலில் இவ்வளவு கூட்டம் வந்து இருக்கிறதே, எவனோ ஒரு பைத்தியக்காரன் சொல்கிறான். மறுமலர்ச்சி தி.மு.க. கோவை மாவட்டத்தில் பலகீனமாகி விட்டது என்று. பார் (பலத்த கைதட்டல்) பொங்கும் கடல் அலையாகப் புறப்பட்டுவரும் இந்தக் கூட்டம். வாருங்கள் என்று சொன்னால் இங்கிருந்து கடலைத் தாண்டி முல்லைத்தீவுக்குப் போவதற்கும் தயாராக இருக்கிறது.

நிருபர்கள் கேட்டார்கள், தலைவர்கள் சிலர் விலகி விட்டதால் உங்கள் கட்சி ரொம்ப பலகீனமாகி விட்டதாமே? என்று.
அப்படி உங்களைக் கேட்கச் சொன்னாரா கருணாநிதி?

அவர் இன்றைக்கு எனக்கு சகுனி என்று ஒரு பட்டம் சூட்டி இருக்கிறார். இந்த உலகத்தில் உள்ள இதி காசங்களில் உள்ள எல்லா வில்லன் கதாபாத்திரங் களையும் சேர்த்து ஒரு ஆள் ஆக்க வேண்டும் என்றால் அது கருணாநிதி என்றுசொல்வேன்.

கட்சிகளை உடைப்பது உங்களுக்குத் தொழில். என்ன சொன்னீர்கள்? மறுமலர்ச்சி தி.மு.க. எங்கே இருக்கிறது என்றீர்கள். இரண்டு பேரை பிடித்துவைத்து படம் எடுத்து தீர்மானம் போட்டீர்கள். உங்கள் கட்சியின் உயர் நிலைக்குழுவில் எதற்குதீர்மானம்? நேரடியாக வந்தாலும் வையம்பட்டி வழியாக வந்தாலும் ஆலம்பாளையம் வழியாக வந்தாலும் உங்களுக்கு நிறைய பதவிகள் கொடுப்போம் என்று. பிள்ளை பிடிப்பதைப் போன்று ஆள்பிடிப்பதற்கு அலைகிறார்.

பரிதாபப்படுகிறேன். சென்றவர்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். என்னோடு இருந்த காலத்தை மட்டும் எண்ணிப்பார்க்கிறேன். என்னோடு பயணித்த சகோதரர்கள், சகாக்களுக்குப் பதவி கொடுப்போம் என்று நானும் சொன்னது இல்லை. இந்தத் தோழர்கள் தங்கள் வாழ்க்கையில் பதினைந்து வருடத்தில் பட்ட கஷ்டங்கள் எத்தனை? செய்த செலவுகள் எவ்வளவு? இவர்கள் யாரும் கவுன்சிலர் பதவிக்காவது ஆசைப்பட்டது உண்டா?

ஆனால், இந்த இயக்கத்தில் அத்தனை பதவி, வாய்ப்பு வசதிகள், பவிசு என எல்லாம் யாருக்குக் கொடுக்கப் பட்டதோ, அவர்கள்தான் அங்கே சென்று இருக்கிறார்கள். கருணாநிதி முதல்நாள் என்னை பொன்முடி பெயரில் இழிவுபடுத்தி அறிக்கை தருகிறார். மிக மிக இழிவுபடுத்தி. என்ன அறிக்கை? இலங்கைக்குக் கள்ளத்தோணியில் சென்றான். இந்திய அரசுக்கு எதிராக கிரிமினல் குற்றம் செய்தான். அவனுக்கு நான் உயிர்ப் பிச்சை கொடுத்தேன். இவர் உயிர்ப்பிச்சை கொடுத்தாராம். பொய்யைச் சொன்னாலும் அதற்கு ஒரு எல்லை வேண்டாமா?

என் உயிரைக் காப்பாற்றியவர்கள் விடுதலைப்புலிகள். சுற்றிலும் ஆயிரம்பேர் இயந்திரத் துப்பாக்கிகளோடு எங்களைச் சூழ்ந்து கொண்டு தாக்கியபோது என் உயிரைக் காப்பாற்றியவர்கள் விடுதலைப்புலிகள். அதில் இறந்துபோனவன் சரத் (எ) பீட்டர் கென்னடி. நாஞ்சில் சம்பத் தன் பிள்ளைக்கு சரத் என்றுதான் பெயர்வைத்து இருக்கிறார். என்னைக் காப்பாற்றியவன் சரத் என்ற பீட்டர் கென்னடி.

முதல்வர் கருணாநிதி மந்திரி பொன்முடி பெயரில் இழிவுபடுத்தி அறிக்கை வெளியிடுகிறார். அதற்குப் பதிலடி கொடுக்க வேண்டிய கட்சிக்கு அவைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர் அவரிடம் சென்று குசலம் விசாரிக்கிறார். அதற்கு நான்கு நாட்கள் கழித்து சரி மறுமலர்ச்சி தி.மு.க. அவைத்தலைவர் பொறுப்பில் இருப்பவர் வந்து பார்த்தாரே, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரை இழிவுபடுத்தி நாம் எழுத வேண்டாம், பேச வேண்டாம் என்று கருணாநிதி நினைத்தாரா?
முதுகுவலி என்று சொல்லிக்கொண்டே ஒருநாளைக்கு 30 பக்கம் எதிர்க்கட்சித் தலைவர்களை வசைபாடி எழுதிக் கொண்டு இருந்தார். அப்பொழுது எழுதுகிறார் புலிகள் பிரச்சனையை மாசாக்கி - மண்ணாக்கி - காசாக்கி - நாணயத்தை நாசமாக்கி இருந்த பதவிகளுக்கு அருகதையற்றவர்கள் எனச்சொல்லி இழிவுபடுத்தி எழுதினார். இதற்குமுன்பு 1993 இல் கொலைப்பழி சுமத்தியதைக்கூட தாங்கிக்கொண்டேன். இதை என்னால் தாங்க முடியாது.

ஏற்கனவே திட்டம்போட்டு இந்த இயக்கத்தில் இருந்து செல்லவேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்துச் செல்கிறபோது இதோ இருக்கின்ற சகோதரர்களைப் பார்க்கிறேன். அவருக்கு இரத்தமும் சதையுமாக இருந்த பல ஆண்டுகள் அவரோடு இருந்த இந்தச் சகோதரர்களைப் பார்க்கிறேன். அவர்கள் நீதியும் நியாயமும் மறுமலர்ச்சி தி.மு.க.வில் இருக்கிறது என்ற உணர்வோடு இங்கே என்னையல்ல இந்த இயக்கத்தைப் பாதுகாக்க இருக்கிறார்கள்.

இது தியாகத் தணலில் பிறந்த இயக்கம். நெருப்பில் உதித்த இயக்கம். அண்ணாவின் இலட்சியத்தைக் காக்கப் பிறந்த இயக்கம். குடும்ப அரசியல் ஆதிக்கத்தை எதிர்த்து உதித்த இயக்கம். இந்த இயக்கத்தைக் காக்கின்ற காவல்தெய்வங்களாக உங்களை என் சகாக்களை தமிழகம் எங்கும் இருக்கின்ற இலட்சக் கணக்கான கழகத்தின் கண்மணிகளை பார்க்கிறேன். சென்றவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க. எனக்கு யார் மீதும் கோபமோ வருத்தமோ இல்லை.

எனக்கு வந்த வாய்ப்புகளையும் நான் வாரி வழங்கத் துடித்தேனேதவிர, நான் மந்திரியானேனா? மந்திரியாக நினைத்தேனா? ஏன் எம்.பி.யாகக்கூட போட்டியிட நினைக்கவில்லையே? எம்.எல்.ஏ.வாகக்கூட போட்டியிட நினைக்கவில்லையே? என்னுடைய சகாக்களை உயர்ந்த இடத்தில்வைத்து அலங்கரித்துப் பார்க்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன்.

ஆகவே, போகிறவர்கள் புழுதிவாரித் தூற்றுவதைப்பற்றி எனக்குக் கவலையில்லை.

ஆனால், மறுமலர்ச்சி தி.மு.க. என்கின்ற அண்ணாவின் இயக்கத்தைக் காக்கும் காவல் தெய்வங்களாக கழகத்தின் கண்மணிகள் இருப்பதனால் முன்னிலும் பன்மடங்கு வேகத்தோடு இந்த இயக்கத்தை நடத்திச் செல்வோம். அண்ணாவின் வழியில் நடத்திச் செல்வோம். எந்த இலட்சியத்துக்காக இந்த இயக்கம் உருவானதோ, அந்த இலட்சியங்களை வென்றெடுப்போம். இந்தக் கொடி நிழலில் உறுதிகொள்வோம்.

வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

நிகழ்ச்சி விவரம்

கோவையில் 20.3.2009 காலை 10 மணியளவில் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் எதிரில் ஹோட்டல் தமிழ்நாடு முன்பு நாஞ்சில் சம்பத், கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான் ஆகியோர் கைதை கண்டித்து கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மறுமலர்ச்சித் தொழிலாளர் முன்னணி பொதுச் செயலாளர் திருப்பூர் சு.துரைசாமி, கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சி.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்

டாக்டர் வரதராஜ், ஆடிட்டர் அர்ஜூன்ராஜ், டி.டி.அரங்கசாமி

கோவை மாநகர் மாவட்டம்

என்.கே.இராமகிருஷ்ணன், கணபதி செல்வராஜ், சூரி.நந்தகோபால், கு.விஜயகுமார், கெளரிசங்கர் ந.சுந்தரம், அ.சேதுபதி, மேகலா முத்துகிருஷ்ணன், டெக்ஸ் ராஜேந்திரன், நி.கோ.பா.சாரதி, பழையூர் கார்த்தி, மு.கிருஷ்ணசாமி, அர.சர்குணன், சி.ஜே.பிலிப்சன், கே.வி.சாமி, எஸ்.இராமகிருஷ்ணன், மு.பலராமன், சா.கோவிந்தராசன், எஸ்.கே.அப்துல் பாரி, பிட்டா தேவராஜ், க.தங்கவேல், வ.வெங்கடாசலம், சாகுல் அமீது, ஏ.செந்தில்குமார், கே.பழனிச்சாமி, மு.இராமநாதன், வெ.கி.ராஜேந்திரன் எம்.சி., பயனீர் தியாகு, மதிவாணன், ந.ஆனந்தகுமார், புதூர் சந்திரசேகர், சி.பா.அரிஹரன், இரா.திலக்பாபு, சி.பி.பாலு, கேப்டன் சிவா, பழையூர் கணபதி, பாபு (எ) விஸ்வநாதன், கே.என்.பொன்னுசாமி, சி.என்.கிரி, எஸ்.பாலசுப்ரமணியன், அ.தமிழ்முடி, அ.இராதா கிருஷ்ணன், ஜெயா நந்தன், ஆர்.கார்த்திகேயன், பொதுப்பணி பொன்னுசாமி, அ.லாரன்ஸ், ந.முருகவேல், திருமதி காந்தாமணி, திருமதி. துர்கா காளிமுத்து.

கோவை புறநகர் மாவட்டம்

மா.மாதையன், மு.ஈஸ்வரன், வெ.க.இராமசாமி, அ.தமிழ்வாணன், கு.பாக்கியலட்சுமி, மல்லிகா தயாளன், ராஜேஸ்வரி, காஞ்சனா, குகன் மில் செந்தில், மு.தியாகராசன், வே.ஈஸ்வரன், தெ.மா.பழனிசாமி, தொண்டர் அணி அன்பழகன், சுப்ரமணியம், தளி தி.மாரிமுத்து, பி.என்.ராஜேந்திரன், ஊ.கி.நா.ரா. செல்வராஜ், நல்லாம்பள்ளி நாச்சிமுத்து, பி.எம்.சுப்ரமணியம், அப்புகுட்டி (எ) பாலசுப்ரமணியம், முத்துகுமாரசாமி, கீ.சு.ஆறுக் குட்டி, எஸ்.முருகவேல், ஜி.மகாலிங்கம், பி.ஆர்.சுந்தரசாமி, சு.சிவபாலன், ஏ.செந்தில் குமார், நா.லோகநாதன், நா.ஜெயக்குமார், ஆர்.நாகராஜ், எஸ்.சண்முகசுந்தரம், மா.பாலசுப்ரமணியம், பாரத் சி.மயில்சாமி, இரா.கிருஷ்ணமூர்த்தி, கா.மதியழகன், ப.சின்னையன், எம்.ஜி.ராமலிங்கம், குனிசை முருகன், எம்.கே.துரைசாமி, தம்பு (எ) கோவிந்தராஜ், கே.செந்தில்கண்ணன், ஏ.முத்துசாமி, கா.முத்துராசு, சுபம் சுப்பிரமணியம், பி.வி.மகாலிங்கம், மு.சுப்ரமணியம், சூலுர் சி.பொன்னுசாமி, சூ.பெ.கருணாநிதி, எஸ்.விவேகானந்தன்,
மா.பாக்கியம், கோ.சி.சுந்தரசாமி, ஈ.கா.சி.பொன்னுசாமி, ஆர்.ஆர்.வேலாயுதசாமி, டபிள்யூ.என்.கே. ஈஸ்வரன், வி.ராஜசேகரன், ஆனந்தகுமார், சி.கோவிந்தராஜ், ஏ.திருமலைசாமி, காமராஜ், எல்.என்.தனபால், தடாகம் ஆனந்தன், இ.கே. சந்திரசேகர், கே.தங்கவேல், கே.பி.சண்முகம், கே.செல்வகுமார், ப.சீனிவாசன், ஏ.ரங்கசாமி, எம்.ரங்கசாமி, பாலசுப்ரமணியம், பா.முத்துசாமி, ஆர்.நடராசன், அ.குமரேசன், ஏ.ஆர்.சண்முகம், க.முத்துரத்தினம், கே.கதிரவன், பி.ஆர்.சுந்தரசாமி, தி.க.நடராசு, பி.ஏ.எஸ். சுந்தரம், சு.குமார், உடுமலை சின்னசாமி, அமிர்தலிங்கம், மா.தங்கவேல், ஆண்டமுத்து, பொள்ளாச்சி முரளி, பனிக்கம்பட்டி சரவணன், கருப்புசாமி, சற்குணம், சிவகுமார், ரவி (எ) சந்திரசேகர், எல்.என்.கே.ஈஸ்வரன், எம்.நாச்சிமுத்து, மு.பாலசுப்பிர மணியம், சு.குமார், சண்முகசுந்தரம், பி.எஸ்.சுந்தரம், வி.கோ.வெங்கடாசலம், முரளிதரன், பாக்கியமணி, சரவதி (வடுகபாளையம்), மா.ஆறுமுகம், வெ.சு.காளிச்சாமி, முத்துச்சாமி, பன்னீர்செல்வம், பி.இளங்கோவன், து.செல்வராசு, ச.குமார், பொ.விஜயராகவன், மோகன்குமார், ஆர்.எஸ்.கோவிந்தராசு, ப.மோகன்ராசு, வடுகை என்.சக்திவேல், கணேசமூர்த்தி, இ.கே.சந்திரசேகர், கே.தங்கவேல், வீராகுமார், கே.பி.சுந்தரராஜூ, பெரியராசு, மா.ராதாகிருஷ்ணன், டாக்டர் கே.சுந்தரசாமி, எம்.ஈசுவரமூர்த்தி, டி.என்.கோபால், பி.கனகராசு, ஆர்.குமாரவேல், செல்லமுத்து மற்றும் மயில்சாமி, தர்மராசு, மனோகரன், உடுமலை ஆர்.சின்னசாமி, விஜயகிருஷ்ணன் உட்பட
அனைத்து ஒன்றியக் கழக, நகரக் கழக நிர்வாகிகள், மாவட்டப் பிரதிநிதிகள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள், தாய்மார்கள், கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் சுமார் 150க்கும் மேற்பட்ட வேன், கார்களில் கோவை புறநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உணர்ச்சி முழக்கம் எழுப்பி நாங்கள் என்றும் புரட்சி புயல் பக்கம் என்றும் நிரூபித்து மாவட்டக் கழகத்துக்கு பெருமை சேர்த்தார்கள்
ஆர்ப்பாட்டத்தை யொட்டி கோவை மாநகர் முழுவதும் விளம்பர பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. சத்தி ரோடு, டாக்டர் நஞ்சப்பா சாலை, ஜெயில் ரோடு ஆகிய பகுதிகளில் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது.

Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)