மனித குலத்தின் இன்றைய தேவை மனிதநேயம்

Issues: Human Rights, National

Region: Tamil Nadu

Category: Speeches

Date: 
Mon, 06/04/2009

திண்டுக்கல் லயன்ஸ் கிளப்

மனித குலத்தின் இன்றைய தேவை மனிதநேயம் என்ற பொருள் பொதிந்த தலைப்பினை தந்து எங்கள் மாநாட்டுக்கு வருக வசந்தத்தின் வாயிலுக்கு வருக உங்கள் நெஞ்சிலே பூக்கின்ற கருத்துக்களை தருக என்ற உன்னதமான சந்தர்ப்பத்தை வழங்கி இருக்கக் கூடிய அரிமா சங்கத்தினருக்கு, இந்த எழிலும் எழுச்சியும் நிறைந்த நிகழ்ச்சியை பாங்குடன் நடத்திக் கொண்டிருக்கின்ற பெருமக்களுக்கு, எனக்கு தரப்பட்ட சந்தப்பத்திற்காக உள்ளம் நிறைந்த நன்றியை கடமை உணர்வோடு தெரிவித்துக்கொள்கின்றேன். எதையும் முறையாகத் திட்டமிட்டு நேர்த்தியாகச் செயல்படுத்தும் அமைப்புதான் அரிமா சங்கம் என்பதும், அதை அகிலம் அறியும் என்பதும் இதற்கு உதாரணங்கள் வேறொன்னையும் தேடிச் செல்ல வேண்டியது இல்லை. 12 மணிக்கு நீங்கள் உரையாற்ற வேண்டும் என்று எனக்கு அழைப்பிதழிலே தெரிவித்தற்கு இணங்க, கடிகாரத்தின் பெரிய முள்ளும் சிறிய முள்ளும் ஒன்றையொன்று அரவணைத்துக் கொள்ளுகின்ற வேளையிலே ஒலி பெருக்கிக்கு முன்னாலே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள் (கைத்தட்டல்). இந்த அரிமாச் சங்கங்களினுடைய கடந்த காலப் பணிகளைத் திருப்பிப் பார்த்து எதிர்காலத்திலே நீங்கள் இன்று மனதிலே கொண்டிருக்கின்ற கனவுகளை நனவாக்குவதற்காக மேற்கொள்ளுகின்ற முயற்சிகள் அனைத்திலும் நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்று நான் வாழ்த்துகிறேன்.

1913 ஆம் வருடம் மார்ச் 13 ஆம் தேதி ஹரிசோனா மாநிலத்தில் பிறந்த மெல்பின் ஜோன்ஸ் அங்கே இருக்கக்கூடிய ஒரு வர்த்தகச் சங்கத்திலே கமர்சியல் கிளப் அதிலே உறுப்பினராகச் சேர்ந்து இப்படிப்பட்ட அமைப்புகளிலே இருப்பவர்கள் எல்லாம் கூடி கலந்து பேசி அளவளாவி கருத்துக்கள் பரிமாறி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் சவால்களை சந்திக்கவும் ஏற்படும் துன்பங்களைப் போக்கவும் பிறருக்கு மகிழ்ச்சியை வழங்கவும் வெற்றிகளை பெறவும் நல்லிணக்கம் காணவும் வழிமுறைகளைக் கண்டறிவதற்காக கூடிக்கூடிப் பேசிப் பேசி கலந்து கலந்து ஆய்ந்து ஆராய்ந்து, அதற்குப் பிறகு 1917 ஆம் வருடத்தில் இதே அக்டோபர் மாதத்தில் அந்த ஆய்வினுடைய விளைவாகவே அக்டோபர் 9 என்று சொன்னால் 1917 ஆம் ஆண்டு அக்டோபர் 8,9,10 தேதிகளிலே நம்முடைய அமைப்புக்கு என்ன பெயரினைச் சூட்டுவது என்ற விவாதத்தினை அவர்கள் மேற்கொண்டார்கள்.

‘சகோதர சகோதிரிகளே’ என்ற குரலும், இங்கே திருவருட் கழகம் என்கின்ற ஒரு அமைப்பினை உருவாக்கி மத நல்லிணக்கம் மேம்படுவதற்கும் சமயத்தின் எல்லைகளைக் கடந்து சமரசம் தழைப்பதற்கும், திண்டுக்கல்லிலே ஒரு அரிய அமைப்பினை நடத்திக் கொண்டிருக்கிறீர்களே இதே உணர்வோடுதான் வங்கத்திலே பிறந்த அந்தத் துறவி இந்த இராமநாதபுரம் சீமையை ஆண்டு கொண்டிருந்த மன்னர்களின் பெருந்துணையோடு இங்கிருந்து புறப்பட்டுச் சென்று உலகத்தின் பல்வேறு நாடுகளிலே இருக்கக்கூடிய சமயங்களின் பிரதிநிதிகள் வந்து கலந்து கொள்ளக்கூடிய மாநாட்டில் சீமான்களே சீமாட்டிகளே என்ற குரல் ஒலித்துக் கொண்டிருந்த மண்டபத்தில் (Sisters and Brothers ) சகோதரிகளே சகோதரர்களே என்ற குரல் எழுப்பியதன் மூலமாக பரிகாசத்திற்குரிய தோற்றத்தோடு வந்தவர் இந்த துறவி என்கின்ற மனோபாவம் கொண்டவர்களுடைய எண்ணம் சிதைந்து அனைவரும் புருவங்களை உயர்த்தி ஒலிகளை உற்று கவனித்து அவர்கள் இதயங்களிலே, அங்கே சொல்லப்பட்ட அங்கே தெறித்து விழுந்த வார்த்தைகளை எல்லாம் கல்வெட்டாகப் பதித்துக் கொண்டார்களே அந்த சிகாகோவிலே நடைபெற்ற ஆய்வரங்கத்திலேதான் ,1917 ஆம் ஆண்டு என்று குறிப்பிடுகிறேன்.

முதல் உலக யுத்தம் முனைப்பாக நடைபெற்று நாடுகள் பலவற்றிலே குண்டு வீச்சினால் இலட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இன்னொரு பகுதியில் மாஸ்கோ வீதியில் சோவியத் மண்டலத்தில் ஆகா ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி கொடுங்கோலன் ஜார் மன்னன் அலறி விழுந்தான் என்று மகா கவிஞன் பாரதி வருணித்தானே அந்த யுகப் பிரட்சி அக்டோபர் புரட்சி உருவாகிக்கொண்டிருந்த காலத்தில் அக்டோபர் மாதமே உன்னுடைய பெயர்தான் லெனின் ( O October thy name is Lenin ) என்று கவிஞர்கள் பாராட்டிய அந்த அக்டோபர்த் திங்களில் 8,9,10 தேதிகளில் என்ன பெயர் சூட்டலாம் என்கின்ற கருத்துக்கள் பரிமாறப்பட்டபோது அரிமா என்ற பெயரைச் சூட்டுவதே பொருத்தமாக இருக்கும். எனவே அந்தப் பெயரை நான் பயன்படுத்திவிட்டேன் என்று மெல்வின் ஜோன்ஸ் எடுத்த வைத்த கருத்து, ஜனநாய முறைப்படியாக அனைவரும் எண்ணப்படி பெயர் சூட்டப்பட வேண்டும் என்று இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது வழங்கப்பட்ட பெயர்தான் “அரிமா” என்கின்ற இந்தப் பெயர் என்பதை இன்றைக்கு எண்ணிப் பார்க்கின்றேன். ஒரு அரிமா இருந்தாலே கானகத்திற்கு கம்பீரம் வரும். இத்தனை அரிமாக்கள் இருக்கின்ற இடத்திலே, எவ்வளவு கம்பீரமான இடத்திலே இருக்கிறேன் என்பதையும் ஒரு அரிமாவை கண்டாலே உள்ளத்திலே உணர்ச்சி ஏற்படும் இத்தனை அரிமாக்களுக்கு மத்தியிலே இருக்கின்ற போது என்னுடைய உள்ளத்திலும் புதிய எழுச்சியும், உணர்ச்சியும் ஏற்பட்டு இருக்கின்றது என்பதை நான் மீண்டும் ஒரு முறை நன்றியோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.

கொடிதனைத் தூக்கி வந்து அதனை ஊன்றி வைத்து அந்த கொடிக்கு வணக்கம் செலுத்துகின்ற காட்சியை இங்கே நீங்கள் அமைத்தீர்கள். We Salute our Flag we pledge our soul our same.

நாங்கள் இந்த கொடியை வணங்குகிறோம். இதற்கு எங்களை நாங்கள் அர்ப்பணிக்கிறோம். இதனுடைய வரலாறு என்பது பொன் எழுத்துக்களிலே பொறிக்கப்பட்ட வரலாறு என்பதைத் தான் அந்த சகோதரி அவர்கள் இங்கே கொடி வணக்கத்திற்கான வாசகங்களை சொல்லுகிற போது தெரிவித்தார்கள். கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் என்று பாடினானே பாரதி. அப்படிப்பட்ட வீரர்கள் தங்கள் நல்லுயிர் ஈந்து கொடியினை காப்பான் என்ற உணர்வு. அந்த கொடி நாட்டினுடைய கொடி. எங்கள் தேசத்தின் கொடி. கொடிக்கு நாங்கள் வணக்கம் செய்கிநோம் என்று அரிமா சங்கத்தினர், அந்தக் கொடிக்கு வணக்கம் செலுத்துகிற காட்சியை கண்டேன்.

194 நாடுகளிலே இன்றைக்கு அரிமா அமைப்பு இருப்பதாக நம்முடைய தலைவர்கள் இங்கே குறிப்பிட்டார்கள். அருமை நண்பர் திபுசியஸ் அவர்கள் குறிப்பிட்டார்கள். அரிமா அமைப்பு தொடங்கப்பட்டு 67 நாடுகளிலே உறுப்பினர்களாகி இருக்கின்ற வரையிலே இந்திய நாடு அதிலே உறுப்பினராக அங்கம் வகிக்கவில்லை. 67 நாடுகள் உறுப்பினர்கள் ஆனதற்குப் பிறகு 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 3 ஆம் நாள் ராபர்ட் வில்லியம் அமெரிக்காவிலிருந்து இந்திய நாட்டிற்கு பறந்தோடி வந்தார். அரிமா சங்கத்தை தொடங்குவதற்காக வந்த நேரத்தில், அடிக்கடி டில்லியேலே மேக மூட்டத்தின் காரணமாக பனி மூட்டத்தின் காரணமாக காலை வேளையில் மாலை வேளையில் அந்த விமான தளத்திலே விமானங்கள் இறங்க முடியாமல் விமான பயணம் இரத்து செய்யப்படுவதை இன்றைக்கு நீங்கள்பத்திரிக்கையிலே பார்ப்பது போலவே, 56 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதியன்றும் பனி மூட்டத்தின் காரணமாக அந்த விமானங்களில் ஓடுதளத்தினுடைய அமைப்பே கண்ணுக்கு புலப்படாத காரணத்தினால் விமான ஓட்டி அந்த விமானத்தினை டில்லியிலே தரை இறக்க முடியாமல் மும்பை நகரத்திற்கு அன்றைய பம்பாய் நகரத்திற்கு கொண்டு போய் செலுத்தியபோது டில்லியிலே தொடங்கப்பட வேண்டிய அரிமா சங்கம் குறித்த நாளிலே இந்த நாட்டினிலே தொடங்கப்பட வேண்டும் என்பதற்காக அன்றைய பம்பாய் நகரத்திலே அரிமா சங்கம் தொடங்கப்பட்டது.

தொடங்கப்பட்டதற்கு பிறகு அவர் மீண்டும் டில்லிக்கு வந்து 8ஆம் தேதியன்று டில்லியிலே அரிமா சங்கம் தொடங்கப்பட்டது. என்னதான் பம்பாயிலே முதலாவதாகத் தொடங்கப்பட்டு இருந்தாலும், நாட்டின் தலைநகரம் டில்லிப் பட்டணம் என்ற காரணத்தினாலே முதல் பட்டயத்தை அவர்கள் டெல்லிக்கும், இரண்டாவது பட்டயத்தை அவர்கள் மும்பை நகரத்துக்கும் வழங்கினார்கள். அதற்கடுத்த ஆண்டு 57 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாளன்றுதான், தமிழகத்தின் தலைநகரத்திலே சென்னைப் பட்டணத்திலே அரிமா அமைப்பு பூத்தது என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது, அன்றைய 56 ஆம் ஆண்டு. நடப்பது 2005. ஆகவே ஐம்பது ஆண்டுகளை நினைவூட்டிய நீங்கள் பொன் விழாவாக வசந்தம் 2005 என்ற முறையிலே இங்கே கொண்டாடிக் கொண்டு இருப்பதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

நான் என்னுடைய அரிமா சங்கத்திற்கு போனேன். அரிமா உறுப்பினர் சொல்கிறான். ( When I attend my Lions Club and break bread with my friends ) நான் என் நண்பர்களோடு விருந்தைப் பகிர்ந்து கொள்கிற போது ( I give millions of thanks to god ) நான் ஆண்டவனுக்குக் கோடிக் கணக்கிலே நன்றிகளை தெரிவிக்கிறேன். எதற்காக? மனத்திற்குக் களிப்பூட்டவும் மகிழ்ச்சியுடன் அளவளாவும், கவலை மறக்கவும், இசை பாடவும், அவர்களோடு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும், அரிய சிந்தனைகளோடு பேச்சாளர்கள் வந்து பேசுகின்ற பேச்சுக்களைக் கேட்கவுமான வாய்ப்பை வழங்கிய ஆண்டவனுக்கு நன்றியை தெரிவிக்கிறேன் என்றுதானே நீங்கள் தொடங்குகின்றீர்கள். அப்படித் தொடங்குகின்ற நேரத்தில் ( I realise I have a part in caring for the Blind and under privileged ) எனக்கு கடமை இருக்கிறது, பார்வை அற்றோருக்காக - விழி இழந்தோருக்காக - கண்புலன் இல்லாதவருக்காக - வாய்ப்பை இழந்தவருக்காக - இல்லாதவருக்காக - துன்பப்படுகின்றவர்களுக்காக கடமை ஆற்ற வேண்டும். அந்த கடமை எனக்கு இருக்கின்றது என்பதை நினைவூட்டுகின்ற வகையிலேதானே நீங்கள் அரிமா சங்கத்தில் சொல்லுகின்றீர்கள்? சொல்லிவிட்டு ( Liberty Intelligence Our Nation's Safety )

இந்த நாட்டுக்கு எது பாதுகாப்பு? விவேகத்தை தருக்கின்ற அறிவு பாதுகாப்பு; விடுதலை உணர்வு சுதந்திர உணர்வு பாதுகாப்பு. ஆக அறிவு பாதுகாப்பு அருமையான வார்த்தை. அறிவை விட உயர்ந்த ஒன்று இல்லை அறிவு அச்சம் காக்கும் கருவி. மனித குலத்தின் தேவை என்று நீங்கள் தலைப்பு கொடுத்திருக்கிறீர்கள். மனித குலம் எண்ணற்ற நூற்றாண்டுகளை கடந்து வந்திருக்கிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளை கடந்து வந்திருக்கிறது. காடுகளில் குகைகளில் விலங்குகளோடு விலங்குகளாக உலவிய காலம் மறைந்து கையத கொண்டு மெய்யது போர்த்திக் காலது கொண்டு மேலது தழுவி அவன் காய் கனிகளைப் புசித்து அதற்குப் பறிகு அவன் பசி போக்குவதற்கு வேட்டையாட தொடங்கி, வேட்டையாடுகிற நேரத்திலே வேட்டையாடிய மிருகங்களை அவன் பச்சையாக உண்ணுகின்ற காலம் இருண்ட வேளையில் கொதிக்கும் வெயிலில் பாறையில் அந்த செத்துப் போன மிருகத்தினுடைய தசை கிடக்குமானால் அந்த சூட்டின் காரணமாக அது மிருதுவாகி விடுமானால் அது மிருதுவாகின்ற தன்மையைப் பார்த்து இப்படியும் ஆக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம் ஏற்படுகிற பொழுது கல்லும் கல்லும் உரசுகிற பொழுது நெருப்புப் பொறி எப்படி பறக்கிறதோ அதைப் பார்த்து அவன் அறிவியலை படைக்க தொடங்கினான் என்று உலகம் சொல்லுகிறது.

மூங்கில் காடுகளைப் பார்க்கின்றான் அந்த மூங்கிலுக்குள்ளே இசை எப்படி பிறந்து வருகிறது வண்டு வந்து துளையிடுகிறது. துளையிட்ட மூங்கிலிலே மோதுகிற காற்று இசையாக வருகிறது. இப்படி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து அறிவியலை வளர்த்துக் கொண்டவன்.

இன்றைக்கு விண்ணிலே பறக்கிறான். எங்கோ கண்ணுக்குத் தெரியாத எங்கோ தொலைதூரத்திலே இருக்கக் கூடிய நட்சத்திரங்களை ஆராய்கின்றான். சந்திரனில் கால்தடத்தினைப் பதிக்கிறான். நிலாவிலே நடந்து வருகிறான். கண்ணுக்குத் தெரியாத அணுவைப் பிளக்கிறான். அதன் அனந்தகோடி ஆற்றலை அறிமுகப்படுத்துகிறான். கையகத்துக் கருவிகள் உலகத்தின் அத்தனைப் பகுதிகளோடும் பேசுகிறான்; காண்கிறான். ஆக அறிவியல் வளர்ந்து விட்டது.

ஆக, மனித குலத்தினுடைய பாதையும் இன்றைக்கு இயற்கையோடு போராடி இயற்கை அறைகூவல் விட்டு அழைக்கக் கூடிய அளவுக்கு அறிவு வளர்ந்திருக்கின்றது. ஆனால், இந்த அறிவியலின் வளர்ச்சி மனித மனங்களுக்கு மகிழ்ச்சியை முழுமையாக தந்துவிட்டதா? இல்லை. கண்ணீர் உள்ள முகங்களே உலகில் ஏராளம். ஆகவேதான் அந்த கண்ணீரைப் போக்குவதற்காக குறிக்கோளோடு இயங்குகின்ற அமைப்பாக என்ன அருமையான வார்த்தை இந்த ஆர்ப்பரிப்பு சொற்கள் நமக்குள்ளே ஐக்கியம் இருக்கட்டும் என்பதற்காக அது சாதி மதங்களை கடந்ததாக குறுகிய எல்லைகளை கடந்ததாக இருக்கட்டும்; நம் ஐக்கியம் மலரட்டும். நம் சிந்தனைகளிலே ஐக்கியம் உருவாகட்டும் என்ற ஐக்கிய உணர்ச்சியை முன்னெடுத்துக் கொண்டு போகிறபோதே அருமையான வார்த்தைகள் I pledge of my hands,extended and open - எதற்காக to help those in need நான் என் கரங்களை விரிய உயர்த்துகிறேன்; விரிய திறக்கிறேன்; என் கரங்களை நீட்டுகிறேன். எதற்கு? பிறர் துன்பத்தைப் போக்குவதற்காக இந்த கரங்கள் பயன்படட்டும்; கருணையோடு பயன்படட்டும். இந்த உடலின் அவயங்கள் கரங்கள் அந்தக் கடமையைச் செய்யட்டும். இதுதானே அரிமா சங்கம் சொல்லுகின்றது. I pledge of my heart,reach for it and it will be touched . நான் என் இதயத்தை அர்ப்பணிக்கிறேன்; என் கரங்களை அர்ப்பணிக்கிறேன். I pledge of my ears எதற்காக? .to hear another's outcry . பிறரது துன்பக் குரலை - ஓலக் குரலை - அபயக் குரலை - துயரக் குரலைக் கேட்பதற்காக என்னுடைய செவிகளை அர்ப்பணிக்கிறேன்.

அருமையான இசை தவழ்ந்து வந்தது. ஒளிமயமான எதிர்காலம் எங்கள் கண்ணுக்குத் தெரிகிறது என்ற குரலோடு அதை இசையாக தந்தார்களே அந்த இசை தவழ்ந்து வந்தது. அந்த இதயத்திற்கு மிக மகிழ்ச்சியை தருகின்றது. செவிகள் வழியாக இசை பாய்கின்றது. அன்பு மொழி கேட்கின்றது. குழந்தையின் நாதம் யாழின் நாதத்தைவிட உயர்வாகவே இருக்கிறது தாய்க்கும் தகப்பனுக்கும்.

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்

அந்த மழலையின் நாதம் செவிக்கு இன்பமாகவே இருக்கின்றது. அதே வேளையில் இந்த செவிகள் பிறரது துன்பக் குரலைக் கேட்பதற்காக அர்ப்பணிக்கப்படட்டும். எனக்கு கண்கள் இருக்கின்றன. கண்கள்தான் இந்த மனிதனுக்கு மிகவும் அழகு தருகின்ற அவயம் கண்கள் - விழிகள். அந்த விழிகள் உலகின் சவுந்தர்யத்தையெல்லாம் பார்க்கிறது. தாவி குதித்து ஓடுகின்ற நீரோடைகளை எல்லாம் பார்க்கிறது. அந்த நீரோடைகளுக்கு அருகிலே கானகத்திலே கலாபம் விரிக்கின்ற மயிலினுடைய அழகை கண்டு ரசிக்கின்றது. பச்சைப் பசேல் என்று மரகத கம்பளம் போலப் போர்த்தப்பட்டு இருக்கின்ற இயற்கையின் அழகை எல்லாம் கண்கள் அள்ளி பருகின்றன. இந்த கண்கள் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு மனித இனம் அறிவியல் வளர்ந்த காரணத்தினால் அவன் கல்லில் எழுதி சுவடில் எழுதி இன்றைக்கு கணிப்பொறி மூலமாகத் தருகின்ற அளவுக்கு கருத்துக்களை படித்துக் கொள்வதற்கு இந்த கண்கள் பயன்படுகின்றன. எல்லாவற்றுக்குமே கண்கள்தானே. காதலுக்கும் கண்கள் தானே. காதலுக்கு கண்ணில்லை என்று சொன்னான். ஆனால், “கண்ணோடு கண்ணினை நோக்கின் வாய்ச்சொல்லின் என்ன பயன்” சொன்ன வள்ளுவன் தான், “ அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்” என்று கம்பர் வருணித்தானே, அதே கண்கள், கண்களைப் பற்றிச் சொல்லுகின்றபோது இத்தனைக்கும் பயன்படுகின்றதே கண்கள், இது எதற்காக?

கண்ணுக்கு அணிகலன் கண்ணோட்டம் அது இன்றேன்
அது புண் என்று உணரப்படும்

கண்ணோட்டம் என்னும் களிப் பெரும் காரிகை இதுவே உலகத்திற்கு அச்சாணியான கருத்து. என்ன அற்புதமான கருத்தை சொன்னார் வள்ளுவர் பெருந்தகை. அந்தக் கண்களை நான் அர்ப்பணிக்கிறேன் அரிமா சொல்கிறார். To see the plight of others . பிறரின் துன்பத்தைப் பார்ப்பதற்கு என் கண்களை அர்ப்பணிக்கிறேன். அரிமா சங்கத்தினுடைய கருவான கொள்கையே விழி இழந்தோருக்குப் பார்வை வழங்குவதே இந்தப் பார்வை பிறரின் துன்பத்தைப் போக்குவதற்குப் பயன்படட்டும். இந்தக் கண்கள் பிறது கண்ணீரைக் கண்டு கலங்குவதற்கு வழி பார்க்கட்டும். இந்த கண்கள் இரக்கத்தை அருளட்டும். இந்தக் கண்கள் கனிவைத் தரட்டும் ( I pledge myself for the betterment of my community ,my state and my country ) நான் வாழும் சமுதாயத்திற்காக, நான் வாழும் எங்கள் மாநிலத்திற்காக, எங்கள் நாட்டுக்காக, என் கரங்களை அர்ப்பணிக்கிறேன். ஏன் என்னையே அர்ப்பணிக்கிறேன். மனித நேயத்திற்கு இதை விட எந்த கருத்தை சொல்ல முடியும். அரிமா சங்கத்தினுடைய இந்த மூலக்கருத்துதான் மனித நேயம். இதிலிருந்து புறப்படுவதுதான் மனித நேயம். மனித குலத்திற்கு தேவை என்ன என்று கேட்டீர்கள்.

மனித குலத்தின் தேவைகளை அறிந்து இப்படி வாழ வேண்டும் என்ற கருத்துக்களை வகுத்தவன் தமிழன். இது சுயநலத்தின்பாலோ, நான் பிறந்த பொன் நாட்டை காதலிப்பதாலோ என் தமிழ்மொழி, என் தமிழகம் என்ற எண்ணத்தினாலோ பேசுகிற கருத்து அல்ல. உலத்தின் பல்வேறு சிந்தனையாளர்களுடைய எண்ணங்களை எல்லாம் தொகுத்துப் பார்க்கிற போது நம்முடைய மூதாதையருக்கு நிகராக மனித நேயத்தை சொன்னவர்கள் உலகில் எவருமே கிடையாது. எந்த நாகரிகத்திலும் கிடையாது. நாகரிகங்கள் வளர்ந்திருக்கின்ற கிரேக்கத்திலே, ரோமா புரியிலே, எகிப்திலே பழமையான சீனத்திலே எபிரேத்திலே டைகிரிஸ் யூப்ரடிஸ் நதிகளுக்கு இடையில் வளர்ந்திருக்கின்ற சுமேரிய நாகரிகத்திலே, மெசபடோமியாவிலே எங்கும் சொல்லப்படாத கருத்து. இது யார் கூறுவது. மனித நேயத்திற்காகவே வாழ்ந்த ஒரு மனிதனை சொல்லுகிறேன்.

ஒரு நாள் காலை வேளையில், தேனீர் அருந்திக் கொண்டிருக்கிறார் ஒருவர். அவர் முன்னாலே பத்திரிக்கைகள், செய்தித்தாள்கள் கிடக்கின்றன. அந்தச் செய்தித் தாள்களைப் புரட்டுகிறார். ஒரு செய்தியைப் படித்து திடுக்கிடுகிறார்; பதறுகிறார். தன் துணைவியாரை அழைக்கிறார். இப்படியும் நடக்கிறதே இந்தக் கொடுமை உண்டா என்று கேட்கிறார். அவரது துணைவியார் ஒரு தாதி பெண் ( A Nurse ). அவர் மருத்துவத் துறையிலே பணியாற்றுகின்றவர்.
இவருடைய கவலையைப் போக்க முடியவில்லை. ஆப்பிரிக்காவின் இருண்ட கண்டங்களின் நோய்வாய்ப் பட்டு தொழுநோயாலே மடிந்து கொண்டிருக்கக் கூடிய எண்ணற்றவர்களுடைய துயரத்தைப் படித்து விட்டு அவர்கள் அடிப்படை வசதிகளின்றி விலங்குகளை விட கேவலமாக நடத்தப்படுகிற சூழலில் அவர்கள் வாடி வதங்கி மடிகிறார்கள் நாளும் செத்துக் கொண்டிருக்கிறார்கள் . அந்தப் புகைப்படங்களைப் பார்க்க முடியாத அந்த மனிதர் நான் உடனே அங்கு சென்று சேவை செய்ய வேண்டும் என்கிறார். நீங்கள் டாக்டர் அல்லவே, மருத்துவர் அல்லவே, நீங்கள் சேவை செய்ய முடியாது என்று மனைவி சொல்கிறார். அப்படியானால் நான் டாக்டருக்கு இனிமேல் படிக்கிறேன். நான் ஒரு மருத்துவராகிறேன் என்று அற்குப் பிறகு மருத்துவக் கல்லூரியிலே சேர்ந்து மருத்துவர் பட்டம் பெற்று, அந்த பட்டம் பெற்றதற்குப் பிறகு கப்பலிலே புறப்பட்டு இருண்டு கிடந்த காணகங்களுக்கு மத்தியிலே மரணத்தோடு ஒவ்வொரு நாளும் பேராடிக் கொண்டு இருக்கக்கூடிய நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அந்த கருப்பு இன மக்களுக்காக அந்த ஆப்பிரிக்க கண்டத்து கறுப்பு இன மக்களுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தாரே மாமனிதர் ஆல்பர்ட் ஸ்வீட்சர். மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழக் கூடியவர். அவர் சொல்லுகிறார்.

அவர் வெறும் மருத்துவர் மட்டுமல்ல. நோபல் பரிசு பெற்றவர். மருத்தவர் மட்டுமல்ல. அவர் உலக நட்டினினுடைய சிந்தனை களஞ்சியங்களை எல்லாம் ஆராய்ந்து விட்டு ( The Philosophy of the East ) “கிழக்கின் தத்துவம்” என்ற புத்தகத்திலே குறிப்பிடுகிறபோது தமிழ்நாட்டிலே பிறந்த சிந்தனையைப் போல சிந்தனை உலகில் எங்கும் தோன்றவில்லை. திருக்குறளில் சொல்லப்பட்ட கருத்துக்களைப் போல உலகில் இந்த மணிமொழி தொகுதியில் இருக்கக்கூடிய கருத்துக்களைப் போல எந்த நூலிலும் நான் பார்க்கவில்லை. இது நோபல் பரிசு பெற்ற ஆல்பட் ஸ்வீட்சர் - நோயாடு போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு மனித நேய சேவை செய்த அரிமா அமைப்பினுடைய குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு யாரெல்லாம் வரலாற்றிலே பாடுபட்டார்கள் என்றால் முதல் வரிசையிலே வைத்துப் போற்றத்தக்க பெருமக்களின் ஒருவரான ஆல்பர்ட் ஸ்வீட்சர் அவர்கள் இந்தக் கருத்தைச் சொன்னார்கள். நான் இதைக்குறிப்படக் காரணம் இந்த உணர்வு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாலே இங்கே விதைக்கப்பட்ட உணர்வு. பிறருடைய பசியைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாமல், பிறருடைய துன்பத்தைப் போக்க வேண்டும் என்ற இந்த நோக்கத்தைத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே இங்கே வடிக்கப்பட்ட இரண்டு பெருங்காப்பியங்களிலே ஒன்றான மணிமேகலை காப்பியத்திலே சீத்தலைச் சாத்தனார்

“மண்டினி ஞாலத்து வாழ்வோருக்கெல்லாம்...
உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோர்”

பசியைப் போக்குகின்றவர்கள், உணவைத் தருகின்றவர்கள் என்று குறிப்பிட்டாரே அந்த சீத்தலைச் சாத்தனார் வருணித்த மணிமேகலைக் காப்பியத்தில், மணிமேகலையின் கையில் அட்சய பாத்திரம் இருந்தது. அமுத சுரபி இருந்தது என்றால் இது ஒரு சிந்தனை. பசியைப் போக்குவதற்கான அமுத சுரபியை இந்தக் காப்பியத்தை வடித்த ஒரு தமிழன் உருவாக்கினான் ,இப்படிப்பட்ட சிந்தனை எங்கும் ஏற்பட்டிருக்காது. அதை யாரிடம் தருகின்றான் இது பசியை போக்குவதற்குறியது. இது ஆபுத்திரன் கையிலே கிடைக்கிறது. அவன் பசியைபோக்க அலைகிறான். எங்கும் பசி இல்லை. அதாவது வன்மை இல்லை ஓர் வறுமை இன்னைமயால் என்று கம்பன் சொன்னது போல பசியே இல்லை அந்த நாட்டிலே. பட்டினி இல்லை. எங்கும் செழிப்பு. எனவே இவனால் பசியைப் போக்க முடியவில்லை. எவர் பசியையும் போக்க முடியாமல் இந்த அமுதசுரபி எதற்கு என்று நினைக்கிற போது, சாவக நாட்டிலே பசியும் பட்டினியும் எனறு கேள்விப்பட்டு, அங்கு போய் பசி பினி போக்கலாம் என்று கருதி இவன் கப்பலிலே போகிறான். மணிப்பல்லவத் தீவிலே கப்பல் நிற்கிறது. இவன் கப்பலை விட்டு கீழே இறங்கி அந்த தீவுக்குச் செல்லுகிறான். கவனக்குறைவாக அவன் திரும்பி வருவதற்குள்ளளாக கப்பல் கடலில் போய்விடுகிறது. தன்னந்தனியாக மணிப்பல்லவத் தீவிலே விட்டுவிடப்படுகிறான்.

அவன் கையில் இருக்கக்கூடிய அமுத சுரபினாலே யாருடைய பசியையும் போக்க முடியவில்லை. என் பசியைப் போக்கிக் கொள்வதற்கு மட்டுமா இந்த அமுதசுரபி என்று கருதி “கோமுகி” என்கின்ற பொய்கையின் கரையிலே வீசி எறிந்துவிட்டு, பசியோடு இருந்து, உண்ணா நோன்பு இருந்து, உணவு உட்கொள்ளாமல் இருந்து, சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து, சாப்பிடாமலே செத்துப் போனான் ஆபுத்திரன். இதுதான் மணிமேகலை காப்பியம்.

ஆக, பிறருக்குப் பயன்பட வேண்டுமென்ற கருத்தைத்தான் மணிமேகலைக் காப்பியத்திலே சொல்கிறார்களே, இதே கருத்து அக்டோபர் 2ஆம்நாள் திங்கள் அவதரித்தாரே அண்ணல் காந்தி - அவருடைய உள்ளத்தில் இருந்த காரணத்திலேதான், ஏனெனில் இங்கே குறிப்பிட்டார்கள் மாட்சிமைக்குரிய முருகேச மூர்த்தி அவர்கள் குறிப்பிட்டார்கள் தங்கள் பேச்சில், அக்டோபர் திங்கள் 2ஆம் நாள் தொடங்கினேன், இந்த நாட்டின் இளையதலைமுறைக்கு நாட்டுப்பற்று வரவேண்டும் என்பதற்காக ஒரு திட்டத்தை வகுத்தேன் என்று இங்கே குறிப்பிட்டார். அந்த அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தாரே அண்ணல் காந்தியார் - அவரைப் பாராட்டிப் போற்றிய கவிக்குயில் சரோஜினி நாயுடு ஒரு அழகான கவிதையைப் பாடினார்.

காற்று அழைக்கிற திசையெல்லாம்
என் கால்கள் போகிற போக்கெல்லாம்
எதிர்படும் வனத்தினூடே எதிர்படும் தெருவின் நடுவே
மனித குலம் எமது சுற்றம். மண்ணுலகம் எமது இல்லம்

என இசை பாடிக் கொண்டே சொல்கிறோம். கைகளிலே இக்குழலையை ஏந்தியவாரே என்று சொன்னாரே. ஆக மனித குலம் என்பது எமது சுற்றம். இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே நமது மூதாதையார் சொன்னது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று சொன்னது. எல்லோரும் ஓர் குலம். எல்லோரும் ஓர் நிறை என்றாலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி

உண்டாலம்ம இவ்வுலகம்
இந்திரன் அமிழ்தம் ஈவதாயினும் இனிதென
தனியர் உண்டலும் இலரே -

அது தேவலோகத்துடைய அமிர்தம் என்று சொன்னால் கூட எங்கள் மக்கள் தனியாக சாப்பிட மாட்டார்கள். அது தித்திப்பானது, உவப்பானது என்று தனியாக சாப்பிட மாட்டார்கள்.

இந்திரன் அமிழ்தம் ஈவதாயினும் இனிதென
தனியர் உண்டலும் இலரே - என்று
தனக்கென வாழதான் நோற்றாள்
பிறர்க்கென வாழுநர் உண்மையானே

என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே பிறருக்கென வாழ்கிற உண்மையைக் கொண்ட இந்தத் தமிழகம்.

கவிக்குயில் சரோஜினி நாயுடுவினுடைய கவிதை அதைத்தான் குறிப்பிடுகின்றது அந்த அண்ணல் காந்தியாரினுடைய உடல் சந்தனக் கட்டைகளில் வைத்து தகனம் செய்யப்பட்டு அவர் கரைந்து போனாரே யமுனைக் கரையிலே, அந்த யமுனைக் கரையில் அவர் தகனம் செய்யப்பட்ட இடத்தில் ராஜ் காட்டில் சென்று பாருங்கள். மகாத்மாவினுடைய உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் அவருடைய நினைவாலயத்திற்கு சென்று பாருங்கள் ராஜ் காட்டிற்கு.

உலக நாட்டுத் தலைவர்கள் எல்லாம் வருகிறபொழுது அவர்கள் செல்லுகிற இடம் ராஜ் காட். மகாத்மா உயிர் நீத்ததற்குப்பிறகு அவருடைய உடல் தகனம் செய்யப்பட்ட இடம் அங்கே ஒரு கல்வெட்டு எழுதி வைத்திருக்கிறார்கள் எல்லா மொழிகளிலும் எழுதி வைத்திருக்கிறார்கள். தமிழிலும் எழுதி வைத்திருக்கிறார்கள். அனைத்து மொழிகளிலும் எழுதி வைத்திருக்கிறார்கள். மகாத்மா காந்தி சொன்ன முக்கியமான ஒன்றை எழுதி வைத்திருக்கிறார்கள். இந்த மனித குலம் தவிர்க்கவேண்டிய பாவங்கள் ஏழு. Seven Sins of Man ஏழு பாவங்கள். இவை தவிர்க்கப்பட வேண்டும் என்று மகாத்மா எழுதி வைத்திருக்கிறார். ரொம்ப அருமையாக எழுதி வைத்திருக்கிறார். நான் இன்றைய நிலையை எண்ணிச் சொல்லவில்லை.

நான் எந்த மன்றத்திற்கு சென்றாலும் அந்த மன்றத்திற்கு உகந்ததும் தேவையானதும், பொருத்தமானதும், தவிர வேறு கருத்துக்களைச் சொல்லி பழக்கம் கிடையாது எனக்கு. ஆக நான் இன்றைய அரசியல் எதையாவது கருதிப் பேசுவதாக யாரும் எண்ணிவிடக்கூடாது. இது மகாத்மா காந்தி சொன்னது. அதைத்தான் இங்கே நான் குறிப்பிடுகிறேனே தவிர வேறல்ல, முதல் பாவம் கொள்கையில்லாத அரசியல், உழைப்பில்லாத சொத்து, மனித நேயம் இல்லாத அறிவியல், தியாகம் இல்லாத வழிபாடு,மனச்சாட்சி இல்லாத சந்தோசங்கள் ,ஒழுக்கம் இல்லாத அறிவு ,மனிதத் தன்மை இல்லா வியாபாரம் (Politics without Principle,Wealth without work,Science without Humanity,Worship without Sacrifice,Pleasure without Conscience,Knowledge without Character,Commerce without Morality) - இந்த ஏழு பாவங்களும் தவிர்க்கப்பட வேண்டும் என்கிறார்.

இதிலே நீங்கள் எனக்கு கொடுத்திருக்கிற கருத்து அந்த ஏழு பாவங்கள் என்று சொல்கிற பொழுது அதிலே ஆறாவது மனித நேயம் இல்லாத அறிவியல் எவ்வளவு பொருத்தமாக மகாத்மா சொல்லியிருக்கிறார். ஆக அறிவியல் வளர்ந்திருக்கிறது. அது மனித நேயத்தை குழி தோண்டி புதைப்பதாக அமையுமானால் அந்த அறிவியல் அழிவியல் ஆகிறது. மனிதனை அழிக்கிறது. மகிழ்ச்சியை அழிக்கிறது, வீழ்த்துகிறது. ஆகவேதான் மகாத்மா அதைச் சொன்னார். இந்த உணர்வுகளை நான் எண்ணிப்பார்க்கிற போது, இங்கே சமய நம்பிக்கை உடைய பெருமக்கள்
வந்திருக்கிறார்கள். சமயங்களின் நோக்கம் என்ன? சமயங்களின் குறிக்கோள் என்ன? நான் திருக்குறளைச் சொன்னேன்.

இந்தத் திருக்குறளைப் பற்றி ஜி.யு. போப் அவர்கள் குறிப்பிடுகிற போது போப் அடிகள் குறிப்பிடுகின்ற நேரத்தில் அவர் சொல்கிறார். உலகத்தில் பெரிய சிந்தனைகள் எல்லாம் கிரேக்கத்தில் வளர்ந்தது என்று சொன்னார்கள், அவர் தெளிவாகச் சொல்கிறார். ( Humility,Charity and Forgiveness of Injuries were not described by Aristotle ) ஆக பிறருடைய துன்பங்களைத் தாங்கிக் கொள்ளக் கூடிய அந்தப் பொறையுடைமை, அறங்காக்கும் பண்பு. இது அரிஸ்டாட்டிலால் சொல்லப்படவில்லை. ( but these were forcibly inculcated by the Tamil moralist Thiruvalluvar ) ஆனால் இவற்றையெல்லாம் வற்புறுத்தி சொன்னவர் திருவள்ளுவர் என்று குறிப்பிட்டார். ஒரு கன்னத்தில அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு, ஒரு வஸ்திரத்தை பறித்துக் கொண்டால் இன்னொரு அங்கியைகொடுத்துவிடு என்ற கருத்துக்களை மலைப்பிரசங்கத்திற்குச் சென்ற இயேசு பெருமான் சொன்னதாக நான் படித்திருக்கின்றேன். துன்பம் செய்கின்றவனுக்கும் பதிலுக்கு நீ அவனுக்கு இன்னா செய்யக் கூடாது.

இன்னா செய்தாருக்கு இனியவை செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு

ஆக மனிதாபிமானம் இல்லாத அறிவியல். மனித நேயம் இல்லாத அறிவியல் பாவம். இதைத் தான் வள்ளுவன்

அறிவினால் ஆகுவதுண்டோ இரண்டையும் கவனிக்க வேண்டும். அறிவு அற்றம் காக்கும் கருவி என்றான். அறிவுடையார் எல்லாம் உடையார் என்றான் வள்ளுவன், அறிவிலார் என்னுடையரேனும் இலர் என்றான் வள்ளுவன். ரொம்பத் தெளிவாகச் சொல்கிறான் - அறிவு தான் மிக உயர்ந்த செல்வம் என்று சொல்லுகிறான். சொல்லிவிட்டு திட்டமிட்டு கருத்துச் சொல்கிறான்.

அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
தன்நோய் போற்றாக் கடை

இந்த அறிவு எதற்கு

அறம் போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்
மக்கள் பண்பில்லா தவர்

என்று சொன்னார்

ஆக

அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
தன்நோய் போற்றாக் கடை

பிறரின் நோய் தன்நோய் போற்றக் கடை என்ற சொன்னால் கூட உயர்வதால் அது கூட இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னாலே பிறர் அவ்வளவாக சொன்னதில்லை. பிறதின் நோய் அந்த உணர்வு இருக்கப்போய்தானே வாடிக்கொண்டிருந்த முல்லைக் கொடியைக் கண்டு பரம்புமலைப் பாரி மணித்தேரை தந்துவிட்டு போனதாக இந்த நாட்டினினுடையச் சரித்திரம் சொல்லுகிறது. குளிரிலே வாடிக் கொண்டிருந்த மயிலுக்கு போர்வை தந்தான் பேகன் என வள்ளல் பெருமக்களில் ஒருவன் என்று வரலாறு பாராட்டுகிறது. மடியிலே வந்து விழுந்தது புறா. அதனுடைய துன்பத்தைப் போக்குவதற்காக துரத்திக்கொண்டு வந்த பருந்துக்கு தன் சதையை அறுத்துக் கொடுத்தான் சிபி சக்கரவர்த்தி என்று பத்தினி தெய்வம் கண்ணகி வாதாடுகின்ற வேளையிலே கூட

எள்ளறு சிறப்பின் இமயவர் வியப்ப
புள்ளறு புண்கண் தீர்த்தோன் அன்றியும்

என்று சொன்னாள் ஆக, இவையெல்லாம் பிறருடைய துன்பத்தை மட்டுமல்ல பறவையின் துன்பத்தை, முல்லைக் கொடியின் துன்பத்தை, புறாவின், மயிலின் துன்பத்தைப் போக்குவதற்குக் கூட மனித நேய உணர்வோடு அவர்கள் இருந்தார்கள் என்பதற்காகவே இந்த கருத்துக்களை சொன்னார்கள் என்றால், பிறர் துன்பம் இழைக்கும் போது தாங்கிக்கொள்ளக்கூடிய மனோபாவம் எளிதிலே வந்துவிடாது.

சேதி நாடு - தலைநகர் திருக்கோவலூர். நாட்டின் மன்னன் மெய்ப்பொருள் நாயனார் அவரோடு படையெடுத்து வருகிறான் புத்தநாதன். தொடர்ந்து பல போர்க்களங்களிலே தோற்றுப் போகிறான். மெய்ப்பொருள் நாயனாரை அவனால் வெற்றி பெற முடியவில்லை. அவர் சிவனடியார். நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க என்று நீங்கள் பாடினீர்களே அவற்றை நெஞ்சிலே பதியவைத்துக் கொண்டவன். ஆக மெய்ப்பொருள் நாயனாரை கொல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கிறான். படை கொண்டு மோதி ஜெயிக்க முடியாது என்று, போர்க்களத்திலே வெல்ல முடியாது என்பதனால் சூழ்ச்சியினால், தந்திரத்தினால், வஞ்சத்தினால் சதி செய்து வீழ்த்தி விட முடிவு செய்து அவன் சிவனடியார் வேடத்தில் வருகிறான்.

மெய்யெல்லாம் நீறுபூசி மேனிகள் முடித்துக்கட்டி
கையினில் படைகரந்த புத்தகக் கவளி ஏந்தி
மைபொதி விளக்கன்ன மனதில் கருப்புவைத்து
பொய்த்தவ வேடம்கொண்டு புகுந்தனன் புத்தநாதன்

உடம்பெல்லாம் அவன் நீறு பூசி மேனிகள் முடித்துக் கட்டி கையினில் படைகரந்த புத்தகம் ஏந்தி - ஒரு புத்தகத்தை ஏந்தி வருவதாக - சுவடி ஒன்றை ஏந்தி வருவதாக வருகிறான். அந்த சுவடிக்குள் கட்டாரி இருக்கிறது. கூர்மையான கத்தி ஒன்று இருக்கிறது. இந்தப் புத்தகத்திற்குள்ளே ஒரு கத்தி இருக்கிறது. படையை, படைகரந்த புத்தக கவளி ஏந்தி என்ன அழகாக சொல்லுகிறார் தமிழ் புலவன் சேக்கிழர் சுவாமிகள் தொகுத்து இருக்கின்ற பெரியபுராணத்தில்

“கைம்பொதி விளக்கே அன்ன மனதினுள் கருப்பு வைத்து”

விளக்கைப் பாருங்கள். அந்த விளக்கின் சுடருக்குள்ளே ஒரு சிறிய கருப்பு இருக்கிறதல்லவா அது தான் மைபொதி விளக்கே! அன்ன மனதினுள் கருப்பு வைத்து உள்ளே வருகிறார்.

சிவனடியார்களுக்கு அந்த அரசனுடைய வீட்டுக் கதவுகள், அரண்மனைக் கதவுகள் திறந்தே இருக்கின்றன. ஒவ்வொரு கட்டமாக கடந்து வருகிறான். வாயில் படியை கடந்து வருகிறான். வீரர்கள் யாரும் தடுத்து நிறுத்தவில்லை. ஒவ்வொரு வாயிலையும் கடந்து வந்து பள்ளியறைக்கே வந்து விடகிறான். பள்ளியறை வாயிலையும் கடந்து உள்ளே போகிறான். சிவனடியார் எப்பொழுது வந்தாலும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று மெய்ப்பொருள் நாயனார் கட்டளையிட்டிருக்கிறான். மஞ்சத்திலே தூங்கிக் கொண்டிருக்கிறான். அருகிலே அரசமாதேவி இருக்கிறார்கள்.

அடியார் உள்ளே வந்ததை கண்டமாத்திரத்திலே அரசனை எழுப்பி விடுகிறார் அரசமாதேவி. அரசன் எழுந்தவுடன் இந்த அடியார் வேடத்திலே இருக்கக்கூடிய புத்தநாதன் உங்களுக்கு ஒரு சிவாஹாமம் என்கின்ற ஒரு முக்கியமான ஆஹம நூலைக் கொண்டு வந்திருக்கிறேன். சிவாஹம நூலை உங்களுக்கு சொல்லப்போகிறேன் என்கின்றான். அரசன் அரசமாதேவியிடம் அந்நதப்புரத்துக்குச் செல் நான் அடியாரிடம் ஆஹம சொல்லைக் கேட்கப் போகிறோன் என்று மெய்ப்பொருள் நாயனார் கூறி அரசமாதேவி அந்தப்புரத்துக்குச் செல்ல, அறையை விட்டுச் செல்ல வாசலிலே அரசனின் மெய்க்காவலன் தத்தன் தயாராக இருந்தாலும் இவர் தலைகவிழ்ந்து அடியாரை வணக்குகிறார்.

மெய்ப்பொருள் நாயனார் வணங்குகிறார். அப்பொழுது இந்த ஆஹம நூலை வாசிக்க போகிறேன் என்று சொன்னானே அதற்குள்ளே ஒளித்து வைத்திருக்கக்கூடிய கட்டாரியை எடுத்து ஓங்கி குத்துகிறான். கட்டாரி மார்பிலே பாய்கிறது. கட்டாரி பாய்ந்து இரத்தம் பீறிடுகிறது. கீழே விழுகிறார் மன்னர். பாய்ந்த கட்டாரியோடு இரத்த வெள்ளத்திலே கீழே விழுகிறார் மன்னர் மெய்ப்பொருள் நாயனார். கண் மூடிக் கண் திறப்பதற்குள்ளாக அது நடந்து விட்டதைக் கண்டு இடி மேல் இடி விழுந்ததைப் போல அதிர்ச்சியுற்ற மெய்காவலன் தத்தன் உருவிய வாளோடு ஓடி வருகிறான், ஓடி வந்து வாளால் வெட்டி அவனை சிதைக்க வேண்டுமென்று கோவித்து வாளை ஓங்குகிற பொழுது இரத்த வெள்ளத்திலே கிடந்து துடித்துக்கொண்டிருக்கக்கூடிய மெய்ப்பொருள் நாயனார்,

“தத்தா, நமர் நம்மவர் ஒன்றும் செய்யாது ஒன்றும் அவருக்கு துன்பம் விளைவிக்காதே” என்று தடுக்கிறார்.

அதைவிட முக்கியமானது

“தத்தா நடந்துவிட்டது நம்மவர் இவரைக் கொன்று விடுவார்கள் - தாக்கி விடுவார்கள். ஆத்திரத்தினாலே இவருக்கு நிச்சயமாக பெருந்துன்பம் நேர்ந்துவிடும் இவரை எப்படியாகிலும் பாதுகாத்து நாட்டின் எல்லையைக் கடந்து பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுபோய் விட்டு விடு” என்கிறார். தத்தன், “அரசே தங்கள் .... கட்டளை என்ன?” என்று கேட்கிறார். “நீ கொண்டுபோய் விட்டுவிட்டு வரவேண்டும்.”

அதைப்போல அவன் வெளியில் வருகிறான் மக்கள் தள்ளுகிறார்கள் ஆத்திரத்தோடு தாக்க அங்கே இருக்கக்கூடிய படைவீரர்கள் வருகிறார்கள். அரசனின் கட்டளை இதுவென்று சொன்னவுடன் அவர்கள் கட்டப்படுகிறார்கள். அரண்மையைக் கடந்து, நாட்டை கடந்து எல்லையைக் கடந்து ஒரு கானகத்திற்குள்ளே பத்திரமாக அனுப்பி விட்டு திரும்பி வருகிறான் தத்தன்.

திரும்பி வருகின்ற வரை உயர் இருக்கின்றது மெய்ப்பொருள் நாயனாருக்கு.

“உங்கள் கட்டளைப்படியே அவரை பாதுகாப்பாக அனுப்பி விட்டேன்”

என்று சொல்லவும் இத்தகைய அருஞ்செயலை வேறு யார் செய்ய முடியுமப்பா என்று கருணை மொழியை மழையாக தந்து அவர் உயிரும் பிரிந்தது. அதை நான் குறிப்பிடக் காரணம் மனிதநேய உணர்வு என்பதற்கு ஒரு இலக்கணமாக எடுத்துக்காட்டாக இந்த மெய்ப்பொருள் நாயனாருடைய வரலாற்றிலே இந்தக் காட்சியைக் காண்கிறோமே.

இதைப் போலவே தான் பிறருடைய துன்பத்தைப் போக்க வேண்டுமென்ற உணர்வு இருந்த காரணத்தினாலேதான் மாளிகையிலே பிறந்து செல்வ செழிப்போடு வளர்ந்து அரசகுமரனாக இருந்து அரசன் ஆனதற்குப் பிறகு அது வரை வாழ்க்கைத் துன்பங்களே பார்த்திராத சித்தார்த்தன் முதன்முதலாக நோய்வாய்ப்பட்டு பிணியினாலே வாடிக்கொண்டிருக்கிற ஒருவனைப் பார்க்கிறான். முதுமை அடைந்த வயதான வயோதிகர் ஒருவனைப் பார்க்கிறான். இறந்து போனவருடைய பிரேதம் எடுத்துச் செல்லப்படுவதைப் பார்க்கிறான். ஆக பிணி, முதுமை, மரணம் இந்த மூன்றையும் கண்டு அவன் மனம் சுக்கல்சுக்கலாக உடைகிறது. கேள்விகள் கேட்கிறான். ஆக மனித வாழ்க்கை என்பது துன்பம் நிறைந்ததா? பிணியால் தாக்கப்படுகிதா? வயது முதிர்ச்சியால் வாடுகின்றதா? மரணம் அவனைத் தூக்கிக் கொண்டு போய் விடுகிறதா?

அப்படியானால் மனித வாழ்க்கை துன்ப வாழ்க்கைதானே! இந்த அரண்மனை வாழ்க்கையில் இந்த மகிழ்ச்சிகரமான சூழல் எனக்கு எதற்காக? என்று இரவு நேரத்தில் தன்னுடைய அன்பு மனைவி யசோதை அருகிலே தூங்கிக்கொண்டிருக்க, அருமை மகன் இராகவன் சின்னபிள்ளை தூங்கிக்கொண்டிருக்க அவர்களை விட்டுவிட்டு அந்த இராத்திரி வேளையிலே 12 மணிக்கு மேலே நள்ளிரவு நேரத்தில் சண்டகன் என்கின்ற தன்னுடைய சாரதியை அழைத்து ‘கண்டகா’ என்கின்ற குதிரையைக் கொண்டுவந்து நிறுத்தச் சொல்லி நடந்து சென்று அரண்மனைக் கதவுகளை திறந்து அந்தக் ‘கண்டகா’ என்கின்ற குதிரையின் மீது ஏறி நெடுந்தொலைவு பயணித்து அதற்குப் பிறகு கால்நடையாகவே சென்று பல காத தூரம் அலைந்து அலைந்து திரிந்து மெலிந்து, நலிந்து கடைசியிலே போதிமரத்துக்கு அடியிலே அவனுக்கு தெரிந்த உண்மை, அன்பு காட்டுவது ஒன்றுதான் துன்பத்தைப் போக்குவதற்கு வழி என்று கண்டவர் தானே கெளதம புத்தர்.

அந்தக் கருத்து தான் இந்த அரிமா சங்கத்தினுடைய கருத்து. மனித குலத்திற்குத் தேவை மனித நேயம் என்கின்ற கருத்து. இதைத் தான் இப்பொழுது இரமலான் நோன்பு இஸ்லாமிய பெருமக்கள் கடைபிடிக்கின்ற அற்புதமான காலம். ஐந்து பெரும் கடமைகளிலே ஒன்றை அவர்கள் கடைபிடிக்கின்ற வேளை அவர்கள் போற்றுகின்ற இறைதூதர் ஸல்லலாஹு அலைஹு அ ஸல்லம் அண்ணல் முகமது நபிகள் வாழ்க்கையில், ஒரு பாரசீக நாட்டிலே இருந்து வந்து மதீனாவிற்குத் தெற்கே உள்ள ஒரு எபிரேய எஜமானிடத்திலே யூத எஜமானிடத்திலே அடிமையாய் இருக்கிற ஒருவனை விடுவிப்பதற்கு முன்னூறு தென்னங்கன்றுகளை -பேரீச்சம்பாக் கன்றுகளை நடவேண்டும். நாற்பது அவுன்ஸ் தங்கம் தர வேண்டும் என்கிற போது அண்ணல் முகம்மது அவர்களே அந்தக் குழிகளைத் தோண்டச் சொல்லி தானே போய் நடுகிறேன். அவனுக்காக என அந்தக் கன்றுகளைத் தானே நட்டு அந்த நிதியையும் தானே கொடுத்து அவனை விடுவித்ததாக ஒரு செய்தியை நான் படித்து இருக்கிறேன்.

ஆக பிறருடைய துன்பத்தைப் போக்க வேண்டுமென்ற உணர்வோடு தன்னையே இலக்கணமாக்கிக் கொள்கின்ற அந்த வாழ்கை முறை. ஒவ்வொரு சமயத்திலும் இப்படிப்பட்ட கருத்துக்கள் தான் வருகிறது. அயலானை நேசி Love Thy Neighbor என்றுசொல்கிறோம். உன் அருகிலே இருக்கிறவனை நேசி, உன் சகமனிதனை நேசி. மனித நேயம் என்பதே பிற மனிதனை - சக மனிதனை நேசிக்க வேண்டும் என்பது. யார் அந்த சக மனிதன்? ஒருவன் கேட்கிறான். பைபிளிலே புதிய ஏற்பாட்டில் லூக்காவில் பத்தாம் அதிகாரத்தில் இந்த வசனம் 27 ஆம் வசனம் முதல் 36 வசனம் வரையிலே இந்தச் செய்தி இருக்கின்றது. அதிலே ஒருவன் கேட்கிறான் இயேசுவிடத்திலே கேட்கிறான். எனக்கு அயலான் யார் Who is my neighbour? பிறர் என்றால் யார் கேட்கிறான் எனக்கு விளக்கம் தேவை என்கிறான். இயேசு பெருமான் சொல்லுகிறார். மதங்களை கடந்த எல்லைகளை கடந்த மனித நேயத்தைப் பற்றி பேசுகிறேன்.

நான் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் சொன்னேன். புரட்சியாளர்களிலே மாபெரும் புரட்சியாளனாக இன்றைக்கும் நான் மதிக்கின்ற பிடல் காஸ்ட்ரோ உங்கள் மனதைக் கவர்ந்த மணிவாசகம் எது என்று ஒரு நிருபர் கேட்டபோது “அது கர்த்தரின் மலைப்பிரசங்கம் இயேசுவின் மலைப்பிரசங்கம் தான் எனக்கு மனங்கவர்ந்த மணிவாசகம்” என்று சொன்னார். அவர் புரட்சியாளர், பொதுவுடைமை சிந்தனையாளர். மகாத்மாவும் அதே கருத்தைச் சொன்னார். 27 ஆண்டுகள் சிறையிலே துன்பங்களை அனுபவித்த நெல்சன் மண்டேலாவும் அதே கருத்தைச் சொன்னார். என் மனங்கவர்ந்தவர்கள் இரு நாயகர்கள். ஒருவர் மோகன்தாஸ் கரம்சந்த காந்தி, இன்னொருவர் இயேசு பெருமான் என்று சொன்னவர் மார்ட்டின் லூதர்.

எங்களுக்கென்று கனவு இருக்கிறது என்று கறுப்பு இன மக்களை அழைத்துக் கொண்ட மார்ட்டின் லூதர் கிங் சொன்னான்.
அப்படிப்பட்ட அந்த வகையில் உன்னுடைய Neighbor யார்? பக்கத்தில் இருப்பவன் யார் என்று கேட்கிற பொழுது இயேசு பெருமான சொன்னார் ஜெருசேலத்திலிருந்து எருக்கையாவுக்கு ஒருவன் போய்க் கொண்டிருந்த போது கள்வர்கள் கையில் அகப்பட்டுவிட்டான். கள்வர்கள் அவனுடைய வஸ்திரங்களையெல்லாம் உருவிக் கொண்டு அவனைத் தாக்கி மரணக் காயப்படுத்தி குத்துயிரும் குலையுயிருமாக அவனைப் போட்டுவிட்டு போய்விட்டனர். இந்த மரணக் காயப்பட்டவன் கிடக்கிறான், துடிக்கிறான். உடப்பெல்லாம் இரத்தம். அந்த வழியாக ஆசாரியன் ஒருவன் வருகிறான். ஆசாரியர்களும், மூப்பர்களும், வேதபாதகர்களும் சேர்ந்துதான் பிலாத்துச் சபையிலே கொண்டு போய் நிறுத்தி இயேசுக்கு சிலுவையிலே அறையக் கூடிய நிலைமையை உருவாக்கியவர்கள் என்பது வரலாறு. இங்கே ஆசாரியன் வருகிறான்.

அங்கே நாங்களெல்லாம் உயர்ந்தவர்கள் மேல்தட்டு மக்கள் மற்றவர்கள் எல்லாம் கீழனவர்கள் என்ற மனோபாவம் இருந்த காலம். இவன் வந்து விட்டு துடிக்கிறவனைப் பார்த்துவிட்டு அய்யோ ஒருவன் கீழே கிடக்கிறானே அவன் உடம்பு நம்மீது பட்டுவிடக்கூடாது என்று விலகிப் போய் விடுகிறான். அடுத்து லேவியன் வருகிறான். அவர்களும் மேல்தட்டு மக்களகாக கருதிக் கொண்டவர்கள். இதை எப்படிப் பார்ப்பது ஒதுங்கி போய் விடுகிறான்.

தீண்டத்தகாதவர்களைப் போன்று நடத்தப்பட்ட சமாரியன் ஒருவன் வருகிறான். அவன் இந்த மரணக் காயமுற்றவனைத் தூக்கி மடியிலே போட்டு அவனுக்கு எண்ணெய்யைத் தடவி மருந்தைத் தடவி அங்கிருந்து தூக்கிக்கொண்டு சத்திரத்துக்கு கொண்டு சென்று அவனைப் பாதுகாத்து இரவெல்லாம் பக்கத்திலே இருந்து மறுநாள் அந்தச் சத்திரத்து சொந்தக்காரனை அழைத்து, “இவனை கவனித்துக் கொள், பராமரித்துக் கொள் இவ்வளவு பணம் தருகிறேன் என்று பணத்தையும் கொடுத்துவிட்டு இதற்கு மேலும் உனக்கு இவனுடைய வைத்தியத்திற்கு செலவாகுமானால் நான் திரும்பி வரும்பொழுது அந்தச் செலவுப் பணத்தைத் தந்து விடுகிறேன்,” என்று சொல்லிவிட்டு போனான்.

இந்த மூன்று பேரையும் பற்றி சொல்லிவிட்டு இயேசு பெருமான் தன்னிடத்திலே எனக்குப் பிறகு யார் Who is my Neighbor? என்று அவனிடத்தில் இந்தக் கேள்வியை திரும்பக் கேட்கிறான். “இப்பொழுது நீ சொல். நான் மூன்று பேரைப் பற்றிச் சொன்னேன் அல்லவா. விலகிப்போன ஆசாரியன், விலகிப்போன லேவியன், உதவிசெய்த சமாரியன் யார் உனக்கு பிறன்?” என்று கேட்கிறார்.அவன் சொல்கிறான் “துன்பப்பட்டவனுக்கு உதவினானே அந்த சமாரியன் தான் எனக்கு பிறன்” என்கிறான்.

அதைப்போலவே நீ பிறரிடத்தில் நடந்து கொள் சக மனிதரிடத்தில் நடந்து கொள் இந்த மனோபாவம் அன்னை தெரசா இடத்திலே இருந்த காரணத்தினாலே தான் ஒரு நாள் அவர்கள் ட்ராம் வண்டியிலே ஏறுவதற்காக போகிறார்கள் கேம்பல் என்கிறன்ற அந்த மருத்துவமனைக்கு எதிரிலே ட்ராம் வண்டியில் ஏறுகிறபோது அந்தக் காட்சியைக் காணுகிறார்கள். ஒரு மனிதன் அந்த மருத்துவமனைக்கு வெளியிலே கட்டாந்தரையிலே கிடந்து துடித்துக் கொண்டிருக்கிறான். அவர்கள் என்ன என்று? கேட்பதற்குள் ட்ராம் வண்டி புறப்பட்டு விட்டது. ட்ராம் வண்ணியில் போய் திரும்பி வருகிறார்கள். அந்த மனிதன் பலமணி நேரத்திற்குப் பிறகும் அந்த இடத்திலே துடித்துக் கொண்டு கிடக்கிறான். துடித்துக் கொண்டு கிடக்கிறவனைப் பார்த்து அந்த மரண வாசலிலே இருக்கிறவர்களுக்கும் உதவி செய்வதுதானே மனித நேயம் என்று அதற்காக உருவாக்கப்பட்டதுதான் நிர்மல் மருத்துவமனை , நிர்மல் இருதயா அதற்காக உருவாக்கியது தான். அதற்குப் பிறகு அவனைக் கொண்டு போய் சிகிச்சைக் கொடுத்து உதவி செய்த பக்கத்தில் இருந்து சாகும் வரை அவனைப் பராமரிக்கிறார். இன்னொரு இடத்தில் ஒரு பெண் துடித்துக் கொண்டிருக்கிறாள். உடம்பெல்லாம் அழுகிக் கொண்டிருக்கிறது எலிகள் கடித்துக் கொண்டிருக்கின்றன. அந்த எலிகளை விரட்டிக் கொண்டே அந்த உயிரைப் பராமரிக்கும் பணிகளிலே ஈடுபடுகிறார். நான் இதைத் தான் குறிப்பிட்டேன். அன்னை தெரசாவின் உள்ளம் மனித நேய உள்ளம்.

இப்படிப்பட்ட மனித நேய உணர்வுகள் உள்ள காரணத்திலேதான் அறிவியல் மனித குலம் வளர்ந்திருக்கின்றது. இந்த அறிவியல் மனித குலத்தை முழுமையாக வாழ வைத்து விடாது. அறிவியலிலே போற்றத்தக்க விஞ்ஞானிகளில் ஒருவன் ஆர்பர்ட் ஐன்ஸ்டின். அந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அணுவைப் பிளக்கலாம் என்று கண்டறிந்த காரணத்தினால்தான் பின்னாளில் அணு ஆயுதங்கள் உற்பத்தியாகி ஹிரோசிமாவிலே - நாகசாகியிலே வீசப்பட்டது. காலத்தின் அருமை கருதி நான் அதற்குள்ளே செல்ல விரும்பவில்லை.

ஆனால், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அவர்கள் ஒரு நாள் தன்னுடைய சோதனைக் கூடத்திலே ஏராளமான ஆய்வுக் குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறார். ஆய்வுக் குறிப்புகளை எழுதி வைத்துவிட்டு மெழுகுவர்த்தியும் எரிந்து கொண்டிருக்கிறது. அந்த வெளிச்சத்தில படித்து கொண்டிருந்தவர் அப்படியே அந்த பெழுகுவர்த்தியை அணைக்காமலே போய்விட்டார். திரும்ப அவர் வந்து பார்ப்பதற்குள்ளாக தீப்பிடித்து அவருடைய ஆய்வுக்குறிப்புகள், புத்தகங்கள் எல்லாம் எரிந்து கருகி சாம்பலாகி போய்விட்டன. அங்கு இருந்தவர்கள் மூலமாக அறிந்து கொண்டார் எப்படி தீ பிடித்தது என்று அறிந்து கொண்டபோது, தன் ஆராய்ச்சிக்குறிப்புகள் எல்லாம் அழிந்து போய்விட்டதே என்று வேதனைப்படுகிற நேரத்தில் ஒரு பூனைக் குட்டி ஒன்று அவர் மடியிலே துள்ளி குதித்து வந்து விழுகிறது. அந்தப் பூனைக் குட்டிதான் அந்த மெழுகுவர்த்தியைத் தட்டி விட்டு அங்கு நெருப்பு பற்றக் காரணம். நாம் கொஞ்சம் ஆத்திரவயப்பட்டிருந்தால் பூனைக்குட்டியையும் நெருப்போடு மோட்சத்துக்கு அனுப்பி இருப்போம்.

ஆனால், அவர் பூனைக் குட்டியை எடுத்து அதை வருடியவாறே சொல்கிறார். “நான் என்ன விஞ்ஞானி? நான் என்ன படைப்பின் ரகசியத்தைத் தெரிந்து வைத்திருக்கிறேன்? புவியின் ஈர்ப்பு விசையைக் கூட தெரிந்து வைத்திருக்கிறேன். பூமியை சூரியன் ஈர்க்கிறது. இந்தப் புவியிலுள்ள பொருட்களை எல்லாம் பூமி ஈர்க்கிறது. விளக்கு விட்டிலை ஈர்க்கிறது. விட்டில் பூனைக்குட்டியை ஈர்க்கிறது. இதைத் தெரிந்து கொள்ளாமல் இந்த விளக்கின் வெளிச்சத்திலே விட்டிலும் விட்டிலை நாடி பூனைக்குட்டியும் வரும் என்று யோசித்து இருக்க வேண்டாமா? நான் இந்த மெழுகுவர்த்தியை அணைக்காமல் போனது என்னுடைய தவறு அல்லவா?” என்று கூறி அந்தப் பூனைக்குட்யைத் தடவி கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த மனிதன் யார்? ஐன்ஸ்டீன். அணுவைப் பிளக்கின்ற அதிசயத்தைக் கண்டறிந்து சொன்ன விஞ்ஞானி ஐன்ஸ்டீன். அந்த மனித நேயம் உணர்வு இருந்த காரணத்திலேதான் தமிழ் கலம் தலை நிமிர்ந்து நிற்கிறது.

“சாகாத வானம் நாம் - வாழ்வை
பாடும் சங்கீதப் பறவை நாம்”

- என்று கவிஞர்கள் கவிதை பாடுவதற்கு.

ஆகாயத்தைப் போன்ற பரந்த தாய் உள்ளம் கொண்ட தலைவனாக பேரறிஞர் அண்ணா இருந்த காரணத்தினாலேதான் இந்த நாட்டின் முதலமைச்சர் பொறுப்பேற்று, நம்முடைய திபுஸியஸ் அவர்களுடைய அன்புச் சகோதரர் வாட்டிகனுடைய போப் ஆண்டவருக்கு பக்கத்திலே இருந்து ஆலோசனை சொல்லக்கூடிய ஒரு நல்ல பதவியிலே இருக்கிறார் என்று சொல்லக் கேள்விப்பட்டு ஒரு தமிழன் அங்கே இருக்கிறான் என்றால் தரணியிலே மகிழ்கிறவன் வைகோதானே. தமிழர்கள் எங்கு சென்றாலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று உலகத்துக்கே வழிகாட்டியவர்கள் நாம். அறிவு சொன்னவர்கள் - நாகரீகத்தைக் கற்றுக்ததந்தவர்கள் - உலகத்துக்கு மறை தந்தவர்கள். ஆகவே அப்படிப்பட்ட வாட்டிகன் நகரத்துப் போப் ஆண்டவரை அறிஞர் அண்ணா பார்க்கப்போனார் 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி. இந்த நாட்டிலே இருந்து பல தலைவர்கள் சென்றிருக்கிறார்கள். அவர் 68-லே செல்கிறார். அண்ணா அவரிடத்திலே வைத்த கோரிக்கை - கோவா விடுதலைக்காக போரிட்டு போர்ச்சுகலின் பிடியிலிருந்த ரானடே விடுபடுவதற்காக,சலசார் ஒரு காலத்திலே இருந்து கொண்டு சர்வாதிகாரம் செய்து கொண்டு இருந்தானே அந்தப் போர்ச்சுகல் நாட்டு சிறைச்சாலையில் இருக்கிறார். “போப் ஆண்டவப் பெருமகனே - அந்த வீரமகனை - சுதந்திரத்துக்காகப் போராடிச் சிறைச்சாலையிலே அடைபட்டுக் கிடக்கின்ற ரானடேவை விடுதலை செய்வதற்க நீங்கள் மனம் வைக்க வேண்டும். போர்ச்சுக்கள் அரசுக்குச் சொல்ல வேண்டும்”

என்று கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை நிறைவேற்றுகின்ற நடவடிக்கைகளை வாட்டிகள் நகரத்துப் போப் ஆண்டவர் மேற்கொண்டார். விடுதலை பெற்று வந்தான் ரானடே.

என்ன அறிவியல் வளர்ந்து என்ன பயன்? புற்று நோய்க்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. புற்றுநோய் கொத்திக் கொண்டு போனது தமிழ்த்தாயின் தலைமகனை. ரானடே வருகிற போது அண்ணா உயிரோடு இல்லை. கல்லறைக்கு முன்னாலே கண்ணீர் விட்டுவிட்டுப் போனான்.

மனித நேயம் மனித குலத்துக்குத் தேவை.

அறிவியல் வளர்ந்திருக்கிறது. பிறரது கண்ணிரைத் துடைப்பதற்கு, துன்பத்தைப் போக்குவதற்கு இந்தக் கண்களின் கடமை பிறரின் துன்பத்தைக் போக்குவதற்கு அப்படிப்பட்ட கடமை உணர்ச்சிக்கு தான் இந்த கண்கள். இந்தக் கண்கள் கொடூரமான காட்சிகளை கண்டுவிடக் கூடாது. நான் பேரழிவு அருங்காட்சியத்தைப் பார்த்தேன் வாஷிங்டனிலே ( Holocaust Museum ). ஆனால், அதைச் சுருக்கமாகச் சொல்கிறேன். அதைப் பார்த்துவிட்டுத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடைகள் அவிழ்க்கப்பட்ட கோலத்தில் எலும்பும் தோலுமாக ஆயிரமாயிரம் ஆண்களும், பெண்களும் விறகுக் கட்டைகளைத் தூக்கிப் போடுவதைப் போல உயிரோடு அவர்களைத் தூக்கி விஷவாயு அறைகளுக்குள்ளே வீசுவதும், சாவதும், செத்துப்போனவர்களை மொத்தமாக அப்படியே போட்டு விட கழுகுகள் கொத்தித் திண்பதும், அந்தக் காட்சிகள் அப்படியே நிழல் படமாக எடுக்கப்பட்டு இன்றைக்கு ஒலிப் போழையிலே காட்டப்படுகின்றன. நேரமில்லாததால் விவரிக்க முடியவில்லை. துயரமான காட்சி Concentration camps,death camps ஒரு நாள் முழுக்க இருந்திருக்கிறேன். அந்தக் கொடூரமான காட்சி வருணிக்கவே முடியாது. பெற்றோர்கள் கண்ணீர் விட்டுக் கொண்டு செல்வார்கள். அந்தக் குழந்தைகள் சிரித்துக் கொண்டுச் செல்லும் குழந்தைகளுக்குத் தெரியாது. இன்னும் சில மணிநேரங்களுக்குள் விஷவாயு அறைக்குள்ளே அடைக்கப்பட்டு விஷவாயு திறந்து விடப்படும். நாமெல்லாம் செத்துப்போவோம் என்று தாய்க்கும் தகப்பனுக்கும் தான் தெரியும். அழுதுகொண்டு போகிறார்கள். அதைப் படமாக வைத்திருக்கிறார்கள். ஆக அறிவியல் எதற்குப் பயன்பட்டது அழிப்பதற்கு பயன்பட்டது. இலட்சக்கணக்கானவர்களைக் கொன்று குவிப்பதற்குப் பயன்பட்டது. அதைக் கண்டுவிட்டு வெளியே வருகிற போது அங்கே ஒரு பெரிய அரங்கம் இருக்கிறது. மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கிற பொழுது ஒரு பெரிய கல்வெட்டு இருக்கிறது, பளிங்குக் கல்லிலே ,இங்குப் பார்த்தவைகளை உங்கள் கண்ணால் கண்டவைகளை தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லாதீர்கள். அவர்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள் எனறு. ஆக, கண்கள் இருப்பது பிறர் துன்பத்தைப்போக்க அதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குவது அரிமா சங்கம். மனித நேயம் வாழ்க! வணக்கம்.

ஒரு மணி நேரம் பேசச் சொன்னார்கள் சரியாக ஒரு மணிக்கு முடித்துவிட்டேன்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)